பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - பண்பாடு - கவிதைப்பேழை - காசிக்காண்டம் - பாடமே படமாக ! 10 TAMIL - EYAL 3 - PANPAADU - KAASIKKAANDAM

 

          வகுப்பு - 10 , தமிழ்

இயல் 3 - பண்பாடு - கவிதைப்பேழை

காசிக்காண்டம் - அதிவீரராம பாண்டியர்




************    ************    *************

         வணக்கம் நண்பர்களே ! நாம் நேற்றைய வகுப்பில் உரைநடைப் பாடமாக அமைந்த ' விருந்து போற்றுதும் ' கண்டோம். இன்று நம் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை எவ்வாறு நாம் வரவேற்க வேண்டும் என்பது பற்றி காசிக்காண்டம் பாடல்வழி காண இருக்கின்றோம். முதலில் நூல் வெளி பகுதியில் உள்ள செய்தியைக் காண்போம்.

நூல்வெளி 

                  காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம். இந்நூல் துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது. 'இல்லொழுக்கங் கூறிய' பத்தியிலுள்ள பதினேழாவது பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.

          முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர். தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிக்காண்டம். இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது. சீலைமாறன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. நைடதம், லிங்கபுராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள்.

நுழையும்முன்

           விருந்தோம்பல் முறைகள் வேறுவேறாக இருந்தாலும் எல்லாச் சமூகங்களிலும் இப்பண்பாடு போற்றப்படுகிறது. விருந்தினரை உளமார வரவேற்று விருந்தளிக்கும் முறைபற்றி இலக்கியங்கள் பேசுகின்றன விருந்தினர் மனம் மகிழக் கூடிய முறைகளில் விருந்தோம்ப வேண்டுமல்லவா? அத்தகைய பாடல் ஒன்று விருந்தோம்பும் நெறியை வரிசைப்படுத்திக் காட்டுகிறது.

நண்பர்களே ! பாடலுக்குச் செல்லும்முன்பாக இப்பாடல் பற்றிய நம்முடைய பெரும்புரவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவைக் காண்போமா ?



இதோ அற்புதமான அந்தப் பாடல்வரிகள்.


விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்ததல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கம் வருக என உரைத்தல்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ் வொன்பான்

ஒழுக்கமும் வழபடும் பண்பே

இல்லொழுக்கம்,  ( பா என்ன : 17 ) 


சொல்லும் பொருளும்

அருகுற - அருகில்

முகமன் - ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்


பாடலின் பொருள்

         விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை வியந்து உரைத்தல், நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், 'வீட்டிற்குள் வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நிற்றல், அவர்முன் மனம் மகிழும்படி பேசுதல், அவர் அருகிலேயே அமர்ந்துகொள்ளுதல், அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல், அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாகும்.

இலக்கணக்குறிப்பு

நன்மொழி  -  பண்புத்தொகை

வியத்தல், நோக்கல்,

எழுதுதல், உரைத்தல்,

செப்பல், இருத்தல்,

வழங்கல்

மேலே உள்ள ஏழும் தொழிற்பெயர்கள்


பகுபத உறுப்பிலக்கணம்

உரைத்த - உரை + த் + த் + அ

உரை - பகுதி
த் -  சந்தி
த் - இறந்த கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

வருக - வா ( வரு ) + க

வா - பகுதி 

        வரு எனக் குறுகியது விகாரம்

க   - வியங்கோள் வினைமுற்று விகுதி.

**************     ***********   ************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments