சரித்திரம் படைத்த சாதனைப்பெண் மலாலா - ஜூலை 12 - சர்வதேச மலாலா தினம் - சிறப்புப் பதிவு

 

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணி



ஜுலை- 12-சர்வதேச மலாலா  தினம். 

***************    ************    ************


சாதனை செய்வதற்கு வயது தேவையில்லை. அறிவும் , அதைப் பயன்படுத்த நெஞ்சுரமும் இருந்தால் போதும். உற்றார் மட்டுமல்ல , உலகமே உன்னை உள்ளங்கையிலெ வைத்துப் போற்றும் . மனதில் ஏற்றும் என்று நிருபித்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைதான் இந்தப் பதிவு.

      ஆரம்பக் காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றாலும் இடைக்காலத்தில் ஆணாதிக்கம் ஓங்கிக்  காணப்பட்டது.பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலை காணப்பட்டது.பெண்கள் உயர்நிலையைக் காண, பெண்களுக்கு ஆதரவான குரல் சங்ககாலத்திலிருந்தே  ஒலித்து வருகிறது. 21 ஆம் நூற்றாண்டிலும் பெண்ணியம் பேசப்படுவது தொடர்கிறது. 

          மனித குலம் மேம்பாடு அடைய வகை செய்வது கல்வியே ஆகும்.

உள்ளம் பண்படுவது பெரும்பாலும் கல்வியாதலால்,  பண்பாடென்பது  கல்வி மிகுதியையுங் குறிக்கும்.

'நாகரிகம்' என்பது திருந்திய  வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது.

' பண்பாடு' என்பது திருந்திய ஒழுக்கம்.அது எல்லாப் பொருள்களையும் தமக்கும்  பிறருக்கும் பயன்படுத்துவது என்பார்கள்.

விடுதலை என்பது மக்களின் பிறப்புரிமை; நாட்டுப் பற்று என்பது இதயத் துடிப்பு ; மொழியுணர்வு என்பது நாடி நரம்புகளின் குருதியோட்டம். விடுதலையும்,உரிமையும் பெற விரும்பும் மனித மனம் வீறு கொண்டு எழத்தான் செய்கிறது. அடிமைத்தளையிலிருந்து  இருந்து விடுபட்ட பெண்களின் இன்னல் கொண்ட வரலாறு பல சாதனைகளைத்  தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. 


            பழமையில் வேர் ஊன்றி  புதுமையில் தழைத்து வளர்வதை  மறுமலர்ச்சி என்பர்.  அறிவாற்றல் மிகுந்த  சிந்தனை உடையுடையவர்கள் பழமையின் இழப்பையும்,புதுமையின்  செழிப்பையும் கண்டுணர்ந்து படைப்பதுவும் மறுமலர்ச்சியாம்.

அறியாமையிலும், அடிமைத்தளையிலும் சிக்கித்  தத்தளிக்கும் மக்களைக்  காப்பாற்றி கரைசேர்க்கும் ஓடம் என நெறிப்படுத்த அவ்வப்போது சிலர் கலங்கரை  விளக்காக தோன்றத்தான்  செய்கிறார்கள்.அவ்வாறு தோன்றி ஓங்கி வளர்ந்து ஒப்பற்ற  காவியமாக  விளங்குபவர் மலாலா.


            பாகிஸ்தானிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் , இயற்கை செழிக்கும் வனப்பு மிகு ஸ்வாட் பள்ளத் தாக்கின் இளந்தளிர் மலாலா. இவர் பெண்கல்வி,உரிமை இவற்றிற்காக  அறியப்படுகிறார். தாமும், தம்  மக்களும், தம் இனமும் கல்வியில் மேம்பாடு அடைய  முயன்றதால் கொடிய வல்லூறுகளால் வீழ்த்தப்பட்ட சிறு பறவை.


      பெண்கல்வி , உரிமை மீதான மலாலாவின் நிலைப்பாட்டின் காரணமாக 2012- ஆம் ஆண்டு  தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதிலிருந்து மீண்டு உயிர் பிழைத்த மலாலா பெண் கல்விக்கான சர்வதேச தூதராக உள்ளார்.

     2014 - ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்  பரிசை வென்ற இளம்வயது வெற்றியாளர் இவரே. அப்போது இவருடைய  வயது 17.


சர்வதேச  மலாலா தினம் அனுசரிப்பு:

       

      2013 - ஆம்  ஆண்டு ஜுலை - 12 - இல் மலாலா தமது 16 - ஆவது  பிறந்த தினத்தன்று  ஐ. நா வை  தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டார்.இந்த நிகழ்வை  ஐ.நா 

" மலாலா தினம் " என்று அனுசரிக்கிறது. 


" ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க

முடிகிறது  எனில் , ஏன் ஒரு பெண்ணால்

அதை மாற்ற முடியாது ?

              - மலாலா யூசுப்சாய் 

நன்மையில் முடிந்த தீமை

      மலாலா  என்ற பெயரை உலகமே உச்சரித்து நிலைக்க  தாலிபான் தீவிரவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அன்று  மலாலாவைக்  கொல்ல முயலவில்லை .  அந்த அபரிமிதமான  சக்திகொண்ட  அற்புதப் பெண்ணின் போராட்டம் ஒரு  சிறு  சமூகத்திலேயே  முடிந்திருக்கும்.இவரது போராட்டத் திறனை உலகம் கண்டிராது. உலகமே உறவாக  ஒரு தீமையே காரணமானது.

குடும்பத்தின் பங்கு ;(ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு)

       மலாலாவின் போராட்டதிற்கு அவர் குடும்பமே ஒத்துழைக்க  இவரின் பணிகள் தொய்வின்றி தொடர்ந்தது. ஆசிரியர், கல்வியாளர்,எழுத்தாளர் என்ற பன்முகத்திறன்  கொண்ட தந்தையால் செதுக்கப்பட்டார்.ஆண்குழந்தைகளே  குடும்பத்தின் சொத்து எனக் கருதும் சமுதாயத்தில் பெண்குழந்தையின்  மீது அதீத அன்புகாட்டி  முக்கியம் கொடுத்து பக்குவம் காத்த தந்தை பாராட்டப் பட வேண்டியவர். தந்தையின் பெண்ணியம் பற்றிய  தொலைநோக்குப் பார்வையே மகளை பார் போற்றும் போராளியாக்கியது. மகளின் போராட்டத்திற்கு தாயும், பிறபெண்களைத் திரட்டி ஆதரவு நல்கி, உந்துசக்தி ஆனார் என்பது வரலாறு காணும் உண்மை.

நெஞ்சு பொறுக்குதில்லைலையே!      

" அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே 

இச்சகத்து  ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப  தில்லையே 

துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த  போதினும் 

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப  தில்லையே"

 என்ற பாரதியின் புரட்சி வரிகளுக்கு இரட்சிக்கப் பட்ட மகுடமானார் மலாலா.

    பெண்கல்வி கற்பதைக் குறித்து தாலிபான்கள் பேச்சளவில் எதிர்த்த வேலையில் , ஊடகங்களில் இது குறித்த தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தி வந்தார் மலாலா.

     பெஷாவரில் நடந்த பத்திரிக்கையாளர்  சந்திப்பில் 

" என்னுடைய  அடிப்படை உரிமையான  கல்வியைத் தடுக்க  தாலிபான்களுக்கு என்ன தைரியம்?" என சீறினார்.

"   தாலிபான்கள் தொடர்ந்து ஸ்வாட் மாவட்ட பள்ளிகளை குறிவைக்கிறார்கள்" என்று தனது குறிப்பேட்டில்(diary)ல் பதித்த குறிப்புகளை BBC -நிறுவனத்தின் இணைய தளத்தில் எழுதியவை உலகையே உலுக்கியது. BBC - ல் வெறுமனே  தன்னைப் பற்றியும், தன் கல்விக்கு ஏற்பட்ட இடையூறுகளை மட்டும் எழுதவில்லை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் நடக்கும் தாலிபான் களின் கொடூர அடக்குமுறை ஆட்சி,மற்றும் பெண்கல்வி கற்பதன் அவசியம் என்று அவருடைய எழுத்தில் உயர்ந்த சமூகப்பார்வை தொக்கி  நின்றது.

மீண்ட  சரித்திரம்

    " அச்சம் தவிர்" என்ற பாரதியாரின் வீரச்சொல்லை யே  ஆயுதமாகக்  கொண்டு தாலிபான் தாக்குதலில் இருந்து மீண்டு வந்து அவர் கூறிய கருத்து உலகையே அதிர்ச்சியிலும்,  ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.  அவை

"நான் அவர்களை எதிர் பார்த்தேன்.என்னை எப்படியாவது அவர்கள் சந்திக்க  மாட்டார்களா ?என்று காத்துக் கொண்டிருந்தேன். "

அவர்களிடமே பெண்கல்வி குறித்துப் பேசவேண்டும்.இதை அவர்களுக்குப் புரியவைத்து விட்டால்  இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று தன் கருத்தை ஏடேற்றினார். ஏடேறியவை நாடறிந்தபின் உலகமே திரண்டு ஆதரவுக் கரம் நீட்டியது. உலகின் செல்லப் பிள்ளையான மலாலா தனக்குக் கிடைத்த மேடைகள் அனைத்தையும் பெண்கல்வி குறித்து பேசுவதற்கான வாய்ப்பாகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

முத்தான முடிவு

    தன்னை ஒரு மருத்துவராக இந்த உலகிற்குத் தந்து சேவை செய்ய  விழைந்தார் மலாலா.மருத்துவச் சேவையில் ஒரு சமூகத்தின் ஒரு பகுதியில் மட்டுமே பணியாற்றிட  இயலும்.ஆனால் போராளியாகி விட்டால் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் தான் உதவிட முடியும் என பெருமிதம் கொள்கிறார்.

உலகை மாற்றும் ஆயுதம்

    காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் உலகை நிலைபெறச் செய்கின்றன.அந்த வழியில் மலாலா கூறும் மாற்றம்,

 ஒரு  ஆசிரியர்;

  ஒரு  மாணவன்;

  ஒரு  கரும் பலகை.

இவற்றை உலகை மாற்றும் ஆயுதமாகக் கொண்டு ஏற்றம் காண விரும்புகிறார்.

காரிகையின் கனவு

  

    இன்று தாய் நாட்டிற்குச் செல்ல முடியாத  நிலை. ஆனாலும் என்றேனும் ஒர் நாள் என் நாட்டின் பிரதமராக  வேண்டும் என்பதே என்  விருப்பம் என்று முழங்குகிறார்.

இந்த வார்த்தை எத்தனை வலிமை மிகுந்தது.

Dr. A.P.J.அப்துல்கலாமின் 

" கனவு காணுங்கள்" என்னும் தாரக மந்திரத்தை தனதாக்கி அவற்றின் வடிவம் காண புறப்பட்டார் இவ்வீர மங்கை.

தோட்டாவைத் தோற்கடித்த தோகை

         தோட்டாக்களால் தான் துளைக்கப் பட்டப்போதும்  துவண்டு விடாமல் உலகெங்கிலும் உள்ள பெண்குழந்தைகளின்  மறுக்கப்பட்ட கல்விக்காக போராடிய வலிமை , அந்தத் தோட்டாக்களையே தோல்வியுற வைத்தது.

" பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்

பயங்கொள்ள  லாகாது  பாப்பா!

மோதி மிதித்துவிட்டு பாப்பா - அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு  பாப்பா!

துன்பம் நெருங்கி வந்த போதும்  - நாம்

சோர்ந்துவிட  லாகாது  பாப்பா ! 

என்ற பாரதியாரின் வைர வரிகளை வைராக்கியமாக்கி பெண்கல்விக்காக இவர் எழுப்பிய  குரல் வையத்தை வசீகரித்துக் கொண்டிருக்கிறது.

    தந்தை பெரியார் எழுப்பிய  குரல் உலகெங்கும் வலிமையுடன் ஒலிப்பது  போல வீரமங்கை மலாலாவின் குரலும் அவனியெங்கும் பவனி வரும் நாளை எதிர் நோக்கி வாழ்த்துவோம் !

**************    ************    *************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

2 Comments

  1. அருமையான பதிவு சார்👏👏

    ReplyDelete
  2. பெண்ணியம் பேசுகிறது👌👌💐

    ReplyDelete