வகுப்பு - 12 , தமிழ்
இயல் - 2 , இனிக்கும் இலக்கணம்
நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி - 2
திணைப்பாகுபாடு
***************** *************** ********
வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த வகுப்பில் திணை , பால் , எண் , இடம் பற்றிய அறிமுகச் செய்திகளைக் கண்டோம். இப்போது திணைப்பாகுபாடு என்ற தலைப்பில் உள்ள செய்திகளைக் காண்போம்.
பாடப்பகுதிக்குள் செல்லும் முன்பாக நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயாஅவர்களின் விளக்கத்தைக் காண்போம்.
இப்போது பாடப்பகுதிச் செய்திகளைக் காண்போம்.
திணைப்பாகுபாடு
உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச் சொற்களே மிகுதி என்பர். பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர். இவ்வாறு பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு அமைந்துள்ளதை இலக்கண நூல்களால் அறியலாம்.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே"
(தொல். சொல் 1 )
எனவரும் தொல்காப்பிய நூற்பா, மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை அவரல்லாத பிற அஃறிணை என்று கூறுகிறது. இவ்வகைப் பாகுபாடு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் இல்லை.
இன்றைய தமிழில் யார்? எது? போன்ற வினாச் சொற்களைப் பயனிலையாக அமைத்துத் திணைவேறுபாடு அறியப்படுகிறது.
அங்கே நடப்பது யார்?
அங்கே நடப்பது எது?
என்னும் தொடர்கள் பொருட்குறிப்பின்- அடிப்படையில் யார் என்ற பயனிலை உயர்திணையையும் எது என்ற பயனிலை அஃறிணையையும் உணர்த்துகின்றன.
குழந்தை, கதிரவன் போன்றவை இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள். இப்பெயர்கள் எழுவாயாக அமையும்போது அவற்றின் வினைமுடிபு இருதிணை பெற்றும் வருகின்றது.
குழந்தை சிரித்தான் - குழந்தை சிரித்தது
கதிரவன் உதித்தான் - கதிரவன் உதித்தது
பேச்சு வழக்கில் அஃறிணை முடிபைப் பெற்று வருவதே பெருவழக்காக உள்ளது.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments