வகுப்பு - 12 - தமிழ்
இயல் 2 - இனிக்கும் இலக்கணம்
நால்வகைப் பொருத்தங்கள் - பகுதி - 3
பால்பாகுபாடு
************* ************* *************
வணக்கம் நண்பர்களே ! நால்வகைப் பொருத்தங்கள் பகுதியில் நேற்றைய வகுப்பில் திணைப்பாகுபாடு பற்றிய செய்திகளைக் காட்சிப் பதிவில் கண்டோம்.
இன்று , பால்பாகுபாடு பற்றிய செய்திகளை் காண்போம். பால் என்பதற்கு பிரிவு என்று பொருள். பால்பற்றிய விரிவான விளக்கம் அறிய நம்முடைய பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப்பதிவைக் காண்போமா ?
பால்பாகுபாடு
தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்கை இடத்தில் வரும். பயனிலை விகுதிகளான ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியவை பால்பகுப்பைக் காட்டுகின்றன.
பழந்தமிழில் ஐம்பால்களுள் பலர்பால்சொல் பன்மையிலும் உயர்வு கருதிச் சிலவேளைகளில் ஒருமையிலும் வந்துள்ளன.
மாணவர் வந்தனர் (பன்மை) - ஆசிரியர்
வந்தார் (ஒருமை)
இக்காலத் தமிழில் பலர்பாலை உணர்த்தும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தாமல் ஒருமைப் பொருளை மட்டுமே உணர்த்துகிறது. பன்மைப் பொருள் உணர்த்துவதற்குக் கள் என்னும் விகுதி உதவுகிறது.
அவர் வந்தார் ( ஒருமை )
அவர்கள் வந்தார்கள் ( பன்மை )
தமிழில் உயர்திணையில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உரிய பொதுப்பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் தொடர்களில் அமையும்போது வினைமுற்றைப் பொறுத்தே பால் அறியப்படுகிறது.
தங்கமணி பாடினான் -
தங்கமணி பாடினாள்
பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துகின்றன.
ஆண் - பெண்;
தம்பி-தங்கை;
அப்பா-அம்மா;
தந்தை-தாய்
அஃறிணை எழுவாயில் ஆண் பெண் பகுப்புமுறை மரபில் இருந்தாலும் வினைமுற்றில் அவற்றை வேறுபடுத்தும் பால்காட்டும் விகுதிகள் இல்லை. எனவே ஒருமை, பன்மை அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.
காளை உழுதது.
பசு பால் தந்தது.
ஆகிய தொடர்களில் காளை ஆண்பாலாகவும் பசு பெண்பாலாகவும் உள்ளன. ஆனால் வினை முற்று, பால் பாகுபாட்டிற்குரிய விகுதிகளைப் பெறாமல் ஒன்றன்பால் விகுதி பெற்று முடிந்துள்ளது.
தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளது. மாட்டினத்தில் பெண்பாலைக் குறிக்க பசு மாடு எனவும் ஆண்பாலைக் குறிக்க காளைமாடு (எருது) எனவும் சொற்கள் வழங்கப்படுகின்றன. பிற விலங்குகளைக் குறிக்கையில் ஆண்குரங்கு, பெண் குரங்கு எனவும் எழுவாய்ப் பொதுப்பெயருடன் ஆண் பெண் என்னும் பால்பாகுபாட்டுப் பெயர்கள் முன் சேர்த்து வழங்கப்படுகின்றன.
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ***********
0 Comments