12 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , மொழி
நம்மை அளப்போம் - பகுதி - 2
சிறுவினா - வினா & விடை
*********** *********** **************
சிறுவினா
1. சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க பண்பாகும். - விளக்குக.
சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம்
சில பாடல் அடிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒலிக்கோலத்தின் வலிமையை அறிந்து கொள்ளலாம். சிறுசிறு வாக்கியங்கள், பேசுவோரின் அறுதியிட்டுப் பேசும் தன்மையைக் காட்டுகின்றன.
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக
(புறம். 145)
புணரின் புணராது பொருளே பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே
(நற். 16)
நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
(புறம். 290)
இப்படிப் பல. உயிர் ஒலிகள் - குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன.
இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.
2.செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாய் வானமெல்லாம் - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
காட்சி நயம் : மாலைநேரம், அந்திப்பொழுது மாலை நேரத்தைப் பின் தொடர்கிறது. மலைமுகடுகளில் கதிரவன் செந்நிறக் கதிர் வீச்சைக் காட்டி மெல்ல மறைகிறான். இதைக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் செம்பரிதி மறைகின்றான் எனக் கூறாமல் “செம்பரிதி தலையைச் சாய்ப்பான்” என நம் கண்முன் அவ்வழகுக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
பூக்காடு: கதிரவனின் ஒளி செந்தீப்போல் அடி வானத்தில் தோன்றும், அதைப் பூக்காடாகக் கவிஞர் வர்ணிக்கிறார். "வானமெல்லாம் செந்நிறப் பூக்காடாகத் திகழும் நிகழ்வை நம் காட்சிக்குக் கொண்டு வந்து காட்டுகிறார்.
************* ************ ************
3 ) ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்: தமிழைக் கதிரவனோடு ஒப்பிட்டு அவற்றின் செயல்பாட்டைத் தண்டியலங்கார ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
பொருள்: கதிரவன் உலகின் புற இருளை அகற்றி ஒளிகொடுக்கிறான். உலகில் உள்ள உயிருள்ள பொருள்களுக்கும், உயிரில்லாப் பொருள்களுக்கும் உணர்வையும் தருகிறான். தமிழ் மக்கள் இனத்திற்கு நல்லறிவைக் கொடுத்து உணர்ச்சியைத் தட்டி எழுப்புகிறது.
விளக்கம் : கதிரவன் உலகின் புற இருளைப் போக்குகிறான். தமிழோ மாந்த இனத்தின் அக இருளைப் போக்கி மனத்தைப் பண்படுத்துகிறது.
இக்கருத்துக் கதிரவனையும், கன்னித்தமிழையும் வேறுபடுத்துவதால் வேற்றுமை அணியாய்ப் பாடல் வரி மிளிர்கிறது.
********* ********* ********** **********
4. பின்வரும் இருபாக்களின் கருத்துக்களிலுள்ள வேற்றுமையை எடுத்துக் காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே
- நன்னூல்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா வா!
-- சிற்பி பாலசுப்பிரமணியம்
நன்னூலார்
* இலக்கணச் சிந்தனையோடு வெளிப்படும் இலக்கிய நயம் அமைந்த தொடராகும்.
* பழைய இலக்கண வழக்குகள் கால மாறுபாட்டிற்கு ஏற்பத் தேவையில்லை என்றால் அவற்றை நீக்கிவிடலாம், காலத்தின் தேவைக்கேற்ப புதிய கருத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இதை இயல்பாகச் செய்யலாம் என்கிறார் நன்னூலார்.
* நன்னூல் கருத்து இலக்கண, இலக்கியச் சிந்தனை நிறைந்தது.
* மொழி, நூறாண்டுதோறும் மாறக் கூடியது என்ற மொழி வல்லுநர் கருத்து இங்கு நோக்கத்தக்கது.
சிற்பி பாலசுப்பிரமணியம்
* இளந்தமிழே! பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்துத் தமிழ் மொழியைப் பாதுகாத்தனர்.
* பிறமொழித்தாக்கமும், பிற இனப் பண்பாட்டுத்தாக்கமும் நிறைந்துள்ள இக்காலத்தில் தமிழ்ப்பாதுகாப்பும் தமிழ் இனப் பண்பாட்டுப் பாதுகாப்பும் தேவை என்ற நோக்கில் சொல்லிய கருத்து.
************** ************** ************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
0 Comments