12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழியை ஆள்வோம் - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.

 

வகுப்பு - 12 - தமிழ்

இயல் - 1

மொழியை ஆள்வோம் - பகுதி - 1

பாடப்பகுதி வினா & விடை 

புத்தகம் பக்கம் எண் - 19 & 20

*************     ************     ************

சான்றோர் சித்திரம்

                    வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் தமிழறிஞர் ஒருவர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். தமிழறிஞர், சாட்சியத்தை ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் தமிழில் கூறச் சொல்லிஉத்தரவிட்டார். 

                  அவர் உடனே 'அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப் புக்குழி' என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட அவர் ஆறுமுக நாவலர் மறுத்துத் தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். 

                       'சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது' என்பது அவர் கூறியதற்குப் பொருள். இத்தகைய மொழித்திறன் கைவரப்பெற்றவர்தான் ஆறுமுக நாவலர்.

                      'வசனநடை கைவந்த வல்லாளர்' எனப் புகழப்படும் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் எனும் மும்மொழிப் புலமை பெற்றவர். தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப் பன்முக ஆளுமை பெற்றவர்.

                         திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார். இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன. புராண நூல்களை வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார். தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு 'நாவலர்' பட்டம் வழங்கியது. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கவும் இவர் உதவினார்.

வினாக்கள்

1.ஆறுமுக நாவலர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் எதுவும் புரியாது திகைக்கும் வண்ணம் மொழிந்த தமிழ்த் தொடரை எழுதுக.

                       நாவலர் நீதி மன்றத்தில் “அஞ்ஞான்று எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம்பனைத்தே காலேற்றுக் காலோட்டப்புக்குழி” என மொழிந்த இத்தொடரே நீதிபதியையும் மொழி பெயர்ப்பாளரையும் திகைக்க வைத்தது.

2. அவர் கூறிய தமிழ்த் தொடரின் பொருள் யாது?

             ஆறுமுக நாவலரின் மாணவர் நாவலர் கூறிய கடுந்தமிழ்த் தொடரை எளிய தமிழ்
நடையில் கூறினார். “சூரியன்         தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர்க் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறு நடைக்குப் புறப்பட்டபோது” என்பதே அக்கடுந் தமிழின் எளிய  தமிழ்நடை.


3. ஆறுமுக நாவலர் எத்தகைய பன்முக ஆளுமை பெற்றிருந்தார்?

                  ஆறுமுக நாவலர் தமிழ்நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு எனப்
பன்முக ஆளுமை பெற்றவர்.


4. நாவலர் பதிப்பித்த நூல்கள் யாவை?

                  நாவலர் திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் - சங்கர
நமச்சிவாயர் உரை என்று பல நூல்களைப் பதிப்பித்தார்.

5. ஆறுமுகனார்க்கு எந்த ஆதீனம், என்ன பட்டம் வழங்கியது? இவர் தமிழில் மொழிபெயர்க்க யாருக்கு, எந்த நூலுக்கு உதவினார்?

                               திருவாவடுதுறை ஆதீனம் ஆறுமுகனார்க்கு ‘நாவலர்' பட்டம் வழங்கிப்
பெருமைப்படுத்தியது.பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கப் பெரிதும் உதவினார்.

************     **************  *************

தமிழாக்கம் தருக

1. Learning is a treasure that will follow it's owner everywhere.

   கல்வி என்பது எல்லா இடங்களிலும் அதன் உரிமையாளரைப் பின்பற்றும் ஒரு
கருவூலமாகும்.

2. A new language is a new life.

              ஒரு புதியமொழி ஒரு புதிய வாழ்வு அளிக்கும்.

3. If you want people to understand you, speak their language.

                  மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்கள் மொழியிலேயே பேசவேண்டும்.

4. Knowledge of languages is the doorway to wisdom.

                 பன்மொழி அறிவும் ஞானத்தின் கதவுகளைத் திறக்க உதவும்.

5. The limits of my language are the limits of my world.

             என் அறிவின் அளவே நான் செல்லும் உலகின் எல்லையாகும்.

***************      *************    **********

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********


Post a Comment

0 Comments