12 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - இனிக்கும் இலக்கணம் - தமிழாய் எழுதுவோம் - இனிய , எளிய காட்சிப் பதிவு விளக்கத்துடன் பாடமே படமாக !

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1 - மொழி - இனிக்கும் இலக்கணம்

தமிழாய் எழுதுவோம் - பாடமே படமாக !************   **************   **************

         வணக்கம் மாணவ நண்பர்களே ! இன்று முதல் இயலில் மொழி என்ற தலைப்பில் இனிக்கும் இலக்கணம் பகுதியாக அமைந்துள்ள தமிழாய் எழுதுவோம் பகுதியை இன்று காண்போம்.

               பாடப்பகுதிக்குள் செல்லும் முன்பாக , நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் இப்பாடம் குறித்து விளக்கியுள்ள காட்சிப் பதிவினை முதலில் காண்போம். காட்சிப் பதிவைப் பார்த்தபின் பாடப்பகுதி உங்களுக்கு மிகவும் எளிமையாகப் புரிந்து விடும். 
  நண்பர்களே ! காட்சிப் பதிவினைக் கண்டீர்களா ? மிகவும் எளிமையாகப் புரிந்ததல்லவா ? இதை நாம் வரிவடிவமாக , பாடப்பகுதியாக அமைந்துள்ள செய்திகளைக் காண்போம்.


            மொழியை மிகச் சிறந்த கருவி என்பர். அதைத் திறம்படக் கையாண்டால் கலையாக மிளிரும். பிழை மலிய எழுதினால் வெறும் களையாகவே கொள்ளப்படும். 

                                நம்மில் பலர் பிழைபடப் பேசுவதால்தான் எழுதும்போது பிழைகள் பெருகுகின்றன. தமிழைத் தமில் என்று ஒலிப்பதைவிடக் கொடிய செயல் வேறு எதுவும் இருக்கமுடியாது. மழையை மலை என்று உச்சரிப்பது பிழைதானே? இன்னும் சிலர் வாழைப்பழத்தை வாலப்பலம் என்றும் வாளப்பலம் என்றும் தமிழை வாழவிடாமல் செய்வர். வாயைப்பயம் என்று கூடத் தமிழையும் சேர்த்து நசுக்குவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாற்பத்தி மூன்று என்றோ முப்பத்திநான்கு என்றோ 'பத்தி பத்தி'யாய் எழுதித் தள்ளுவர்.

                              இப்படித் தவறாய் உச்சரித்து மொழியைச் சிதைப்போரிடையே, எழுத்துகளின் வேறுபாடுகள் தெரியாமல் பிழை செய்வோர் பலருண்டு. பசியோடு வந்த விருந்தினருக்குச் சேறு கொடுத்து மகிழ்வித்தான் என்று எழுதினால் மகிழவா முடியும்? அவன் சோற்றைத் தின்றான் என்பதற்கு, அவன் சேற்றைத் தின்றான் என்று எழுதினால் நகைக்கத்தானே செய்வர்? சொத்துத் தகராறு செய்தார் என்பதை, செத்துத் தகராறு செய்தார் என்று வியப்பு ஏற்படுத்துவோரும் உண்டு. ஜயசந்திரனை 'ஐய'சந்திரன் என்று ஜ - ஐ வேறுபாடு தெரியாமல் ஐயப்படுவோரும் இருக்கத்தானே செய்கின்றனர்.

          அன்புள்ள ஐயா என்பது அன்புள்ள ஜயா ஆவதும், ஜப்பான் - ஐப்பான் ஆவதும் தமிழ் தெரியாமல் எழுதுவோரின் 'சிரி'த்திரவதை எனலாம். பாண்டியப் பேரரசன் மீன் பொரித்தான் என்றுஅவரைச் சமையற் கலைஞராய் ஆக்குவோரும் உள்ளனர். 

                      போய்ப் பார்த்துத் திரும்பினான் என்பதற்குப் பேய் பார்த்துத் திரும்பினான் என்று எழுதி அச்சம் ஊட்டுபவர்களும் இருக்கின்றனர். கலையரசன் காலையரசன் ஆகும்போது மாலையில் அரசன் யார் என்று கேள்வி கேட்டால்தான் திருத்திக்கொள்வர் போலும்! கலையில் சிறந்தவனைக் காலையில் சிறந்தவன் என்றெழுதிப் படிப்போரிடையே ஐயக்குண்டு வீசுவோரும் உண்டு. 

                  அவன் மலைக்காற்று வாங்கினான் என்பதற்கும் மாலைக் காற்றுக்கும் வேறுபாடு உண்டல்லவா? கோடீஸ்வரனைக் கேடீஸ்வரன் என்றெழுதினால் அவர் கோபம் கொள்வாரா மாட்டாரா? விடை பெற்றார் என்பதை வடை பெற்றார் என்றெழுதினால் தமிழ் மணக்குமா? அவர் நல்ல மணம் படைத்தவரா? நல்ல மனம் படைத்தவரா? புலி(ளி)க்கறி சாப்பிட்டேன் என்றால் சட்டம் பாயும்தானே?

                          தமிழில் பிழை இல்லாம எழுத முடியுமா என்று ஐயம் கொள்ளத் தேவையில்லை. மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும் கவனத்துடன் எழுதினால் பிழைகளைத் தவிர்க்க முடியும். சிறிதளவு முயற்சியும் பயிற்சியும் தவறில்லாமல் எழுதத் துணைபுரியும்.

                               சிலர் ந, ண, ன / ற, ர / ல, ள, ஆகிய எழுத்துகள் பற்றித் தெளிவில்லாமல் இருக்கின்றனர். உயிர்மெய் எழுத்துகளில் வரும் மேல்விலங்கு, கீழ்விலங்கு, கொம்புகள், துணைக்கால் போன்றவற்றைப் பயன்படுத்தும் முறையிலும் கவனம் தேவை. சொல்லில் எழுத்துப் பிழை இல்லாதிருக்கலாம். ஆனால், பொருட்பிழை ஏற்பட வாய்ப்புண்டு. முடிந்தால் தரலாம் / முடித்தால் தரலாம்; கறி தின்றான் / கரி தின்றான் - இங்கே எழுத்துப்பிழையில்லை. ஆனால், பொருள் வேறுபாடு உண்டு இடமறிந்து எழுதவேண்டும்.


                     எழுதும்போது ஏற்படும் பிழைகளைக் கீழ்க்காணும் வகைப்பாட்டில் பிரிக்கலாம்.

1. எழுத்துப் பிழை

2. சொற்பொருட்பிழை

3. சொற்றொடர்ப்பிழை

4. பொதுவான பிழைகள் சில

         இப்பகுதியில் எழுத்துப்பிழைகள் பற்றிய செய்திகளைப் பார்ப்போம். பிழைகளைக் களைவதற்கான வழிமுறைகளை அறிந்தால் நல்ல தமிழில் எழுத முடியும், எழுத்துகள் குறித்த அடிப்படையான செய்திகள் சிலவற்றை மீண்டும் நினைவுகூர்தல் இங்கு உதவும்.

அடிப்படைச் செய்திகள்

(அ) உயிரெழுத்துகள் 12. குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும்.

(ஆ) மெய்யெழுத்துகள் 18. மூன்று வகைப்படும்.

வல்லின மெய்கள் - க், ச், ட், த், ப், ற்

மெல்லின மெய்கள் - ங், ஞ், ண், ந், ம், ன்

இடையின மெய்கள் - ய், ர், ல், வ், ழ், ள்

(இ) உயிர்மெய் எழுத்துகள் 216. (உயிர்மெய்க்

குறில் 90, உயிர்மெய் நெடில் 126)

(ஈ) ஆய்தம் 1

எழுத்துப்பிழை தவிர்க்க

                      எல்லா இடங்களிலும் பேச்சுத் தமிழை எழுதமுடியாது. பேசுவதைப் போலவே எழுத எண்ணுவதே எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம் எனலாம். குறில், நெடில் வேறுபாடு அறியாதிருப்பதும் எழுத்துகள் வரும் முறையில் தெளிவற்றிருப்பதும் பிழைகள் மலியக் காரணமாய் அமைகின்றன.

                எழுத்துகளின்ஒலிப்பு முறை, அவற்றுக்கான வரிவடிவ வேறுபாடு, அவை சொல்லில் வரும் இடங்களையும்  (முதல், இடை, கடை) தெள்ளத் தெளிவாய் மனத்துள் பதித்துக்கொள்வதைக் கடமையாகக் கொள்ளவேண்டும். ந, ண, ன | ற, ர / ல, ள, ழ இவற்றின் வேறுபாடு அறிந்து வாய் விட்டு ஒலித்துப் பழகுவது சாலச் சிறந்தது. இவ்வெழுத்துகளுக்கான சில அடிப்படை இலக்கணத்தையும் கசடறக் கற்றல் இன்றியமையாத கற்றல் பணியாகும்.

           மேலுள்ள எட்டு எழுத்துகளில் நகரம் மட்டுமே சொல்லின் தொடக்கமாக வரும்.றகர மெய் சொல்லின் இறுதியில் வராது. மற்றவை சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும்.

ந, ண, ன, ற, ர, ல, ள,ழ

முதல்           

நண்டு, நாடகம்

இடை 

பந்து .கண்டு, கன்று, கற்று,  பார்த்து, கால்கள் , கொள்வது, புகழ்வது

கடை

கண் , அவன் , பார் , கால் கொள், புகழ்


* தமிழில் சொல்லின் தொடக்கமாக     மெய்யெழுத்துகள் வருவதில்லை. வரின் தமிழில்லை. க்ரீடம், ப்ரியா - வடமொழி; க்ளிஷே - ஆங்கிலம்

* வல்லின மெய்யோடு சொல் முடியாது. அப்படி முடிந்தால் தமிழ்ச் சொல்லன்று என்றுணர்க. பார்க் (Park), பன்ச் (Punch), பட் (But), போத் (Both), டப் (Tub) போன்றவை தமிழில்லை.

* வல்லின மெய்கள் ஈரொற்றாய் வாரா. ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை. காட்ச்சி, முயற்ச்சி   என்றெழுதுவது பிழை.

* க், ச், த், ப் ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும். பிற மெய்கள் வாரா. காக்கை, பச்சை, பத்து, உப்பு.

* ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க, ச, ப என்னும் வரிசைகளுமே வரும். பாட்டு, வெட்கம், காட்சி, திட்பம், காற்று, கற்க கற்சிலை, கற்பவை.

* ட ,  ற என்னும் எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா. டமாரம், றப்பர் - தமிழ் இல்லை.

* ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனிச்சொல்லாயின் மூவெழுத்தாகவும், தனிக்குறிலை அடுத்தும் வரும் (அஃது, எஃகு, கஃசு).

* மெல்லின எழுத்துகளில் ண, ன சொல்லின் தொடக்கமாக வாரா.

* தனிச் சொல்லின் இடையில்    வல்லினத்துக்கு முன் அவ்வல்லின    மெய்யோ அவற்றின் இன   மெல்லின மெய்யோ வரும். பிற    மெய்கள் வருவதில்லை (தக்கை, தங்கை, பச்சை, இஞ்சி, பண்டு, பட்டம், பத்து, பந்து, தப்பு, பாம்பு, கற்று, கன்று).

* ய்,ர்,ல்,ழ்,ள் என்னும்  எழுத்துகளுக்குப்பின் வியங்கோள் வினைமுற்று / கள் விகுதி | வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும் (தேய்க, நாய்கள், தாய்சேய், ஊர்க, ஊர்கள், ஊர்சூழ்,செல்க, கால்கள், செல்கணம், வாழ்க,வாழ்தல், தோள்கள்).

* ணகர ஒற்றினை அடுத்து றகரமும் னகர ஒற்றினை அடுத்து டகரமும் வருவதில்லை. (கண்டு என்று வரும், கன்டு என்று வருவதில்லை. மன்றம் என்று வரும் மண்றம் என்று வருவதில்லை.)

* ஞ், ந், வ் என்னும்       எழுத்துகளில் முடியக்கூடிய சொற்கள் அரிதாக உள்ளன (உரிஞ், வெரிந், பொருந், தெவ்).

* ய, ர, ழ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும். மற்றவை அளபெடுத்தால் மட்டுமே வரும் (பாய்ச்சு, பார்க்கும், வாழ்க்கை).

* தனிக்குறிலை அடுத்து ரகர, ழகர ஒற்றுகள்வாரா. தனிக்குறிலையடுத்து ரகர ஒற்று வரின் அதனைத் தமிழ் இயல்புக்கேற்பத் திருத்தி   எழுதவேண்டும். (நிர்வாகம் - நிருவாகம்; கர்மம் - கருமம், கன்மம்)

* ரகரத்தை அடுத்து ரகர வரிசை எழுத்துகளும், ழகரத்தை அடுத்து ழகரவரிசை எழுத்துகளும் வாரா.

* உயிர் வரின் ஒரு, இரு முறையே ஓர், ஈர் என்று மாறும். உயிர் வரின் அது, இது, எது முறையே அஃது, இஃது, எஃது என்பதாக மாறும்.

லகர ளகர விதிகள் சில


* வேற்றுமைப்புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் றகரமாய்த் திரிவதுண்டு. கல் + சிலை = கற்சிலை, கடல் + கரை = கடற்கரை

* லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் னகரமாய்த் திரிவதுண்டு. பல் + முகம் = பன்முகம்,

* ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் டகரமாய்த் திரிவதுண்டு. மக்கள் + பேறு = மக்கட்பேறு

* ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ணகரமாய்த் திரிவதுண்டு. நாள் + மீன் = நாண்மீன்

* வருமொழி தகரமாயின் லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும். சொல் + துணை = சொற்றுணை

* வருமொழி நகரமாயின் லகரம் னகரமாக மாறுவதோடு நகரமும் னகரமாக மாறும். பல் + நூல் = பன்னூல்

* அல்வழியில், தனிக்குறிலடுத்த லகரம் தகரம் வரும்போது ஆய்தமாக மாறும். தகரமும் றகரமாகும். அல் + திணை அஃறிணை; பல் + துளி = பஃறுளி.

           இயக்குநர் என்பதே சரி. இயக்குனர் என்று எழுதுவது தவறு. இயக்கு, அனுப்பு, பெறு முதலான வினை பெயரிடைநிலையான ந் என்பதைப் பெற்று (ந்+அர்=நர்), ஓட்டுநர், அனுப்புநர், பெறுநர் என்று பெயர்ச்சொற்களாகின்றன.உறுப்பினர்,குழுவினர், ஊரினர் முதலானவை (உறுப்பு, குழு, ஊர்) பெயர்ச்சொற்கள். அதனால், அவை இன் என்னும் சாரியையைப் பெற்று முடிந்துள்ளன.

                 சொல் உருவாகும் முறையை அறிந்தும், பொருள் வேறுபாட்டினை உணர்ந்தும் எ ழுதுகிற போது பிழைகளைத் தவிர்க்கமுடியும்.

அறம்-அரம்; குறை-குரை; வளம்-வலம்; களம்-கலம்; கிளி-கிலி; என்றாள் என்றால்; போனாள் போனால்; ஆணை-ஆனை; மழை-மலை முதலிய சொற்களின் பொருள் வேறுபாட்டினைக் கற்றுணர்தல் மாணவர்களின் இன்றியமையாத பணியாகும்.

பிழை தவிர்க்கச் சில குறிப்புகள்

* எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும். ந, ண, ன / ல, ள / ழ,ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.

* தமிழில் இவ்வெழுத்துகள் வரும் முறையையும், அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும்.

* தொடக்கத்தில் சிலகாலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்தபடியோ எழுதப்பழகுவது நல்லது.

* வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்.

* கெ, கே, கொ, கோ போன்று கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுதவேண்டும்.

**************    ************   **************

        வாழ்த்துகள் மாணவ நண்பர்களே ! ஆசிரியத் தோழமைகளே ! பாடமே படமாக உங்கள் கண் முன் கொண்டு வந்துள்ளேன். பாருங்கள். கருத்துகளைக் கூறுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

அன்புடன் , 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை , 97861 41410 .

***************    ***********    *************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களுடன் பைந்தமிழ் மு.மகேந்திர பாபு.Post a Comment

0 Comments