ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - உரைநடை உலகம் - திராவிட மொழிக்குடும்பம் - பகுதி 1 / 9 TAMIL EYAL 1 - DIRAVIDA MOZHIKKUDUMPAM - PART - 1

 

வகுப்பு - 9 , தமிழ் 

இயல் 1 - உரைநடை உலகம்

திராவிட மொழிக்குடும்பம்



****************     **************  ************

     வணக்கம் நண்பர்களே ! ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 ல் உள்ள திராவிட மொழிக்குடும்பம் பாடத்தின் முதல் பகுதியை இன்றைய வகுப்பில் காண்போம். இப்பாடம் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

முதல் பகுதியில் மொழி , மொழிகளின் காட்சிச்சாலை , மொழி ஆய்வு என்ற தலைப்பில் அமைந்த பாடக் கருத்துகளை விரிவாகக் காட்சிப்பதிவில் முதலில் காண்போம்.




மேலே உள்ள காட்சிப்பதிவில் மிக எளிமையாகப் புரிந்ததா ? இனி பாடச்செய்திகளைக் காண்போம்.

 நுழையும்முன்

                     திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது தமிழ். எத்தகைய கால மாற்றத்திலும் எல்லாப் புதுமைகளுக்கும் ஈடுகொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டறிஞரும் செம்மொழித் தமிழின் சிறப்பைத் தரணியெங்கும் எடுத்துரைத்து மகிழ்கின்றனர். இவ்வுரைப்பகுதி, தமிழின் சிறப்பைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு உணர்த்துகிறது.


             தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவியே மொழியாகும். முதலில் தம் எண்ணங்களை மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் முதலியவற்றின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயன்றனர். இவற்றின் மூலம் பருப்பொருள்களை மட்டுமே ஓரளவு உணர்த்த முடிந்தது. நுண்பொருள்களை உணர்த்த இயலவில்லை. அதனால், ஒலிகளை உண்டாக்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். சைகையோடு சேர்ந்து பொருள் உணர்த்திய ஒலி, காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று மொழியாக வளர்ந்தது.

              மனித இனம் வாழ்ந்த இட அமைப்பும் இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டின. இதனால் பல மொழிகள் உருவாயின. உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மொழிகளின் காட்சிச் சாலை

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். 

அவை,

1. இந்தோ - ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
4. சீன - திபெத்திய மொழிகள்
என அழைக்கப்படுகின்றன. பல கிளை
  மொழிகளும் இங்குப் பேசப்படுவதால் இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச. அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

             உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ - ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.

             திராவிடம் என்னும் சொல்லை முதலில்
குறிப்பிட்டவர் குமரிலபட்டர். தமிழ் என்னும்
சொல்லிலிருந்துதான் திராவிடா என்னும் சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தைத் தமிழ் - தமிழா – தமிலா-  டிரமிலா – ட்ரமிலா - த்ராவிடா – திராவிடா என்று விளக்குகின்றார்.

மொழி ஆய்வு 

திராவிட மொழிக்குடும்பம் என்னும் பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது.
தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள்
சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை
என்ற கருத்து அறிஞர் பலரிடையே
நிலவிவந்தது. இம்மொழிகளில் வடமொழிச்
சொற்கள் மிகுந்து காணப்பட்டதால் 18ஆம்
நூற்றாண்டின் தொடக்கம்வரை இந்திய
மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே
மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள்
தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்கள்
கருதினர். அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது
வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, 1816ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப், ராஸ்க், கிரிம் முதலானோராலும் மொழி சார்ந்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதன் முதலில் பிரான்சிஸ் எல்லிஸ்
என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் போன்ற மொழிகளை
ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற
கருத்தை முன்வைத்தார். இம்மொழிகளை
ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய
மொழிகள் எனவும் பெயரிட்டார்.

இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டன. ஹோக்கன் என்பார்
இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத்
தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய
மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை
என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே
கருத்தைக் கொண்டிருந்தார்.

               1856 இல் திராவிட மொழிகளின்
ஒப்பிலக்கணம் என்னும் கால்டுவெல், திராவிட மொழிகள், ஆரிய
மொழிக் குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச்
செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார்.
இதனை மேலும் உறுதிப்படுத்தப் பல்வேறு
இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி,
திராவிட மொழிகளுக்குள் இருக்கும்
ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.
கால்டுவெல்லுக்குப் பின்னர்
ஸ்டென்கனோ, கே.வி. சுப்பையா, எல்.
வி. இராமசுவாமி, பரோ, எமினோ,
கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.
மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள்
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.


***************    ****************    *********


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments