கலைமாமணி.கவி.கா.மு.ஷெரீப் - நினைவு நாள் ( 07 - 07 - 2021 ) சிறப்புப் பதிவு.

 

கலைமாமணி .கவி.கா.மு.ஷெரீப் 

நினைவு நாள் ( 07 - 07 - 2021 )

சிறப்புப் பதிவு.



************     *************   *************

                    மனிதன் பிறக்கிறான். இருக்கிறான் . இறக்கிறான். கவிஞன் பிறக்கிறான். இருக்கிறான். சிறக்கிறான். காலமாகிவிடுறான். ஆம். நிகழ்காலமாக , எதிர்காலமாக , இறந்தகாலமாக முக்காலமுமாக ஆகிவிடுகிறான். கவிஞனுக்கு இறப்பில்லை. கவிஞன் மட்டுமல்ல . படைப்பாளிக்கு எப்போதும் இறப்பில்லை. அந்த வகையில் தன் கவிதை வரிகளால் , பாடல் வரிகளால் இன்றும் காற்றில் மிதந்து வந்து நம்முடன் உரையாடும் , உறவாடும் உன்னதமான கவிஞர். அவர்தான்.கவி.கா.மு.ஷெரீப் அவர்கள்.

              திரைப்படப்பாடல்களால் விடுதலை வேள்வியையும்  சமூக சீர்திருத்தத்தையும் கவிஞர்கள் கொண்டு வந்தார்கள். பொழுது போக்க சில பாடல்கள். நம் நெஞ்சைப் பழுது பார்க்கச் சில பாடல்கள். ஆம் . கவி.கா.மு.ஷெரீப்பின் பாடல்கள் பொழுதையும் நல்லதாக ஆக்கும். நம் நெஞ்சில் உள்ள பழுதினையும் போக்கும்.ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இங்கே கவியின் சில பாடல்களைக் காண்போம்.

  இந்தப் பூமிப்பந்தின் கடவுளாக , நம் கண்முன் காட்சி தருபவள் நம் அம்மா. அம்மாவைப் பற்றி எத்தனையோ பாடல்கள் வந்தாலும் , இன்றும் வந்து கொண்டிருந்தாலும் அத்தனை பாடல்களுக்கும் முன்னோடியாக உள்ள ஒரு பாடல் இது.



அன்னையைப் போலொரு தெய்வமில்லை

(தொகையறா)

பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்

பகலிரவாய் விழித்திருந்து வளர்த்தாள்

வித்தகனாய் கல்விபெற வைத்தாள்

மேதினியில் நாம் வாழச் செய்தாள்

அன்னையைப் போலொரு தெய்வமில்லை - அவள்

அடிதொழ மறப்பவர் மனிதரில்லை - மண்ணில்

மனிதரில்லை

துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே -

நம்மை

சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்

நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு

நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்

மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே

மேன்மையாய் நாம் வாழச் செய்திடுவாள்

( பாடியவர் : டி.எம்.சௌந்தர்ராஜன் ) 

         நாம் நல்லா இருந்தால் , அவனுக்கென்ன ? சொத்து சுகம் நிறைய என இச்சமூகம் மதிக்கும் . தாழ்ந்தால் காலடியில் போட்டு மிதிக்கும். இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல. எவ்வளவு அற்புதமான பாடல் வரிகளை நமக்குத் தந்திருக்கிறார் பாருங்கள்.


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இதுதானடா .....

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள்

வெறுக்கும்

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச்

சிரிக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்

(வாழ்ந்தாலும் ஏசும்..)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்

பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும்

குணத்தோடு வாழும் குடும்பத்தை

அழிக்கும்

குணம் மாறி நடந்தே கொடுமையை

விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..)

படம் : நான் பெற்ற செல்வம்

இசை : ஜி. ராமனாதன்

பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்

வருடம்: 1956


              நம்முடைய ஓட்டமெல்லாம் பணத்தைத் தேடியே இருக்கிறது. பாசமும் , பண்பும் தொலைந்து , பணத்தைத் தேடி அலைந்து ஒவ்வொரு நாளையும் கடத்துகிறது மனித மனம். பாடல் எழுதி 60 ஆண்டுகள் கடந்தாலும் இன்றைய காலச்சூழலுக்கும் மிகச்சரியாகப் பொருந்துகிறது பாருங்கள். அதுதான் ஒரு படைப்பாளியின் மாபெரும் வெற்றி.


பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே ! பிழைக்கும் மனிதனில்லே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே -  பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும்

பணமிருந்தாலே - அவனை

உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும்

தப்பாதே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும்

பணமிருந்தாலே ' அவனை

உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும்

தப்பாதே

என்ன அறிவு இருந்திட்டாலும்

பணமில்லாத ஆளை

என்ன அறிவு இருந்திட்டாலும்

பணமில்லாத ஆளை - உலகம்

எந்த நாளும் மனிதனாக மதிக்க

மாட்டாதே

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம்

பணத்துக்காகத் தான் - பணம்

அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும்

உண்மை தான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும்

இல்லை

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும்

இல்லை - இதை

எண்ணிப் பார்த்து நடக்காதவன்

அடைவான் தொல்லை

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன்

மனிதனில்லே !பிழைக்கும் மனிதனில்லே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர்

நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்

உனது நிலை தாழ்ந்த பின்பு

ஒதுங்குவார்கள் கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும்

துணிவுமே கொண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும்

துணிவுமே கொண்டு - நாளும்

முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும்

உண்டு

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -

இதைப்

பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே.

படம் : பணம் பந்தியிலே 

பாடகர் : சீர்காழி கோவிந்தராசன்

இசை : கே.வி.மகாதேவன்.

      காசா லேசா ? என்பார்கள். இந்த வார்த்தையைக் கொஞ்சம் சேர்த்தால் காசாலே சா என வரும். காலம் பணத்தை நோக்கி மனிதனை ஓட வைத்திருக்கிறது.

      11 : 08 :1914 ல் பிறந்து , 07 : 07 : 1994 ல் காற்றோடு கலந்தாலும் , இம்மண்ணில் காற்று உள்ளவரை , அவர் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ' உலவும் தென்றல் காற்றினிலே ' அவர் எப்போதும் நம்முடன் தம் பாடல் வரிகளால் உலவுவார். உரையாடுவார். உறவாடுவார்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

*************    *************   ************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* *********

Post a Comment

0 Comments