பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - இயற்கை - உயிரின் ஓசை - திறன் அறிவோம் ! - பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 2

இயற்கை, சுற்றுச்சூழல்

பாடப்பகுதி வினாக்களும் , விடைகளும்.

*************    ***************   ************

           பாடப்பகுதிகள் 

உரைநடை உலகம் - கேட்கிறதா என்                                                            குரல்!

கவிதைப் பேழை -  காற்றே வா!

(செய்யுள்)                    பாரதியார்

 கவிதைப் பேழை -  முல்லைப்பாட்டு

(செய்யுள்)                     நப்பூதனார்

விரிவானம்         -   புயலிலே ஒரு தோணி

( துணைப்பாடம்)         ப.சிங்காரம்

கற்கண்டு         -    (இலக்கணம்)

                              தொகைநிலைத் தொடர்கள்

**************   **************   *************

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. ‘உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்' -

 பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு

ஈ) உவமை, எதுகை

(விடை: ஆ) மோனை, எதுகை]

****************    ***********  ************

2. செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப்பெருமையே.

செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி

(விடை: ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி]

***************    *************   *************


3. ) “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 
ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ ) கடல் நீர் ஒலித்தல்
ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

(விடை: அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்)

**************     ****************    *********

4 ) ‘பெரிய மீசை' சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ ) உம்மைத்தொகை

(விடை: இ) அன்மொழித்தொகை)

*************    ************   *************

5 ) பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்  -  1. மேற்கு
ஆ) கோடை        -   2. தெற்கு
இ) வாடை           -  3. கிழக்கு
ஈ ) தென்றல்       - 4. வடக்கு

அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4,3, 2, 1
ஈ )  3, 4, 1, 2

(விடை: ஆ) 3, 1, 4, 2]

**************    **************    ************

குறுவினா

1. ) நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு
முழக்கத்தொடர்களை எழுதுக.

i ) மரங்கள் இருக்குமிடம்
    மகிழ்ச்சி நிலைக்குமிடம்.

ii ) மரம் மனிதனின் மூன்றாவது கரம்.

*************    ************   ************

2 ) வசன கவிதை - குறிப்பு வரைக.

(i) உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை
வடிவம் வசன கவிதை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் PS Peery (Free verse) என்றழைக்கப்படும்.இவ்வடிவம் தமிழில் பாரதியரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

(ii) உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார்
இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார். இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம்
உருவாகக் காரணமாயிற்று.

************    ************    **************

3 ) தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

(i) தண்ணீர் குடி : தண்ணீரைக் குடி - இரண்டாம் வேற்றுமை தொகை.

(ii) தயிர்க்குடம்
: தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

தொடரில் அமைக்க :

(i) காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.

(ii) மல்லிகா தயிர்க்குடம் தூக்கிச் சென்றாள்.

***********    **************     ************

4 ) பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல்
சொற்களை எழுதுக.

அழுகின்ற தம்பிக்கு நான் கூறும் ஆறுதல் :
      முதலில் அவனுக்குப் பால் மற்றும் நொறுக்குத் தீனி கொடுத்து சாப்பிடச் செய்வேன். பிறகு அவனிடம்
'அம்மா வருவதற்குத் தாமதமாகும், நீ அழாதே, உனக்குத் தேவையானதை என்னிடம் கூறு, அம்மாவைப்
போல் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். அழாமல் இரு' என்று கூறுவேன்.

*************    **************   *************

5 ) மாஅல் - பொருளும் இலக்கணக் குறிப்பும் தருக.

மாஅல் :

(i) பொருள்   : திருமால்

(ii) இலக்கணக்குறிப்பு : இசைநிறையளபெடை.

*************     *************     ************

5 ) சிறுவினா

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவா
ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்' தன்னை
பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

(i) வான்பொழியும் நீரே உயிர்ப்பு
(ii) உயிராக நான், பல பெயர்களில் நான், பல சுவைகளில் நான்,
(iii) என்னைப் போற்றும் வள்ளுவர், என்னைப் பாடாத புலவரில்லை காட்டைத்திருத்தி என்னைத்
தேக்கினான்.
(iv) இலக்கியங்களில் நான், என்னைத் தேக்கி வைத்த தமிழன்.
(v) பாசனத்திற்கு நான், சேமிப்பும் தேவை சிக்கனமும் தேவை,
(vi) என்னை மாசுபடுத்தாதீர் பிறக்கும் போதும் நான் இறக்கும் போதும் நான்.

**************    *************   *************

2. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் உரையாடல் :

சோலைக்காற்று : என்ன நண்பரே நலமா?

மின் விசிறிக் காற்று : நான் நலம்தான் நலம்தான்
சோலைக்காற்று : என்ன இப்படிச் சலித்துக் கொள்கிறீர்?
மின் விசிறிக் காற்று : நான் என்ன உன்னைப் போலவா? எங்குப் பார்த்தாலும் சுற்றித் திரிவதற்கு
என்னைத்தான் மனிதர்கள் நான்கு சுவருக்குள்ளேயே அடைத்து விட்டார்களே?என்னுடைய இயக்கம் பிறருடைய கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கிறது ?

சோலைக்காற்று
: என்ன இப்படிக் கூறிவிட்டீர்!

மின் விசிறிக் காற்று
: உனக்கென்ன உன் செயல் உன்னிடம்தானே உள்ளது சோலையில் உள்ளமரம், செடி, கொடிகள் எல்லாமே உன்னால்தானே அசைகிறது ?

சோலைக்காற்று : என்ன என்னால் அசைகிறதா? அவை அசையும் போதுதான் நான் உருவாகிறேன். அவ்வாறு உருவாகும்போதுதான் பல மலர்களில் இருந்துநறுமணத்தை எடுத்து வந்து எல்லா இடங்களிலும் பரப்புகிறேன்.

மின் விசிறிக் காற்று
- நீதானே அவற்றை ஆட்டி வைக்கின்றாய்? உன் வேகத்தினால் பல முறைஅவற்றை அழித்தும் இருக்கிறாய்?

சோலைக்காற்று : 
தெரியாமல்தானே பலரும் குழம்புகிறார்கள். கவிஞர் ஒருவர்

“கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா?
என்று பாடினார். ஆனால் அதற்கு விடை கிடைக்கவில்லை.

மின் விசிறிக் காற்று : எது எப்படியோ நீயும் நானும் மனிதர்களுக்கு நன்மையைத்தான் செய்கிறோம்.

சோலைக்காற்று : சரியாகச் சொன்னாய் என்ன உன் வேகம் குறைந்து விட்டதே.!

மின் விசிறிக் காற்று
: மின்சாரத்தைத் துண்டித்து விட்டார்கள். சிலர் தேவைக்கதிகமாக மின்சாரத்தைப்
பயன்படுத்துகிறார்கள். மின்சாரத்தைச் சேமிக்கும் விதமாக இவ்வாறு நான்கு
மணி நேரம் மின்சாரத்தைத் துண்டித்து பலரைத் துன்படுத்துகிறார்கள்.

சோலைக்காற்று : சரி சரி நீயும் கொஞ்சம் ஓய்வெடு, மீண்டும் சந்திப்போம்.

*****************    ***********  ***********

3 ) தோட்டத்தில் மல்லிகைப்பூ பறிக்க பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

(i) மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப்பண்புத்தொகை.

(ii) பூங்கொடி - உவமைத்தொகை

(iii) ஆடுமாடுகளுக்கு -  உம்மைத்தொகை

(iv) தண்ணீர்த்தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை .

(v) குடிநீர்  - வினைத்தொகை

(vi) சுவர்க்கடிகாரம் - வேற்றுமைத்தொகை

(vii) மணி பார்த்தாள் - வேற்றுமைத்தொகை

*****************    **************    **********

4 ) மழைநின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர் - உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் ‘சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

வெளியில் வந்து பார்த்தபோது மனமும் உடலும் சில்லென்று இருந்தது. மரங்களில் உள்ள இலைகள் தங்களின் மகிழ்ச்சியை சொட்டும் நீரில் காட்டியது. சொட்டும் நீருடன் வீசும் காற்று மெய்யினை மெதுவாக வருடியபோது சிலுசிலுவென்று மெய் சிலிர்த்தது. இதமான குளிர் உண்டாயிற்று. மழைநீர் பள்ளமுள்ள இடமெங்கும் தேங்கிக் குட்டைகளாய்க் காட்சியளிக்கிறது. குட்டைகளில் குழந்தைகள் சளப்தளப் என்று குதித்து விளையாடி மகிழ்கின்றனர். அவர்கள் அங்கும் இங்கும் ஓடி மகிழ்ச்சியுடன் விளையாடுவதைக் காணும்போது
அந்தக் காட்சி நம் இளமைப் பருவத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது.

சாலையில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் செய்து விட்டு அது நீரில் மூழ்கக் கூடாதே என்ற துடிதுடிப்புடன் கப்பல் செல்லும் வழியே அவர்களுடன் பின்னாலேயே ஒரு சாதனையாளர்களாய்ச் செல்கின்றனர். ஒருவர் பிடி பிடி என்பதும் ஒருவர் அடடா சாய்கிறதே என்று வருந்துவதும் ஒருவர் அப்பாடா என் கப்பல் நீரில்
மூழ்காமல் செல்கிறது என்று பெருமிதத்துடன் கூறுவதும் காணக் கிடைக்காத காட்சிகள்.

************    ***************    ************


நெடுவினா :

1 ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

           அகன்ற உலகத்தை வளத்தைப் பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்கு பொறித்த வலிமையான   கைகளை உடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்.

       அம்மேகமானது ஒலி முழுங்குகின்ற குளிர்ச்சியான கடல் நீரைப் பருகி, வலப்பகக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு விரைந்து சென்று, பெரிய மழையைப் பொழிகிறது. அம்மாலைப் பொழுதானது பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.

       முதிய பெண்கள் மிகுந்த காவலுடைய ஊர்ப்பக்கம் சென்று யாழிசையைய் போன்று வண்டுகள் ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது, தலைவிக்காக
நற்சொல் கேட்டு நின்றனர்.

               அங்கு, சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள் “புல்லை மேய்ந்து தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது
வந்துவிடுவர். வருந்தாதே” என்றாள்.

           இது நல்ல சொல் எனக் கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று
கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர். நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவது உறுதி. தலைவியே மனத்தடுமாற்றம் கொள்ளாதே என ஆற்றுப்படுத்தினர் முதுபெண்டிர்.

 இவையே முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளாகும்.

*************    ************   *************

2 ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்
குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

முன்னுரை :

     ஆசிரியரின் நேரடி அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி என்னும் புதினம். கடற்பயணத்தில் கண்ட காட்சிகளும் அதன் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகளும்தான் இக்கதைப்பகுதி .

புயலின் தொடக்கம் :

                      வெயில் இமைநேரத்தில் மறைந்துவிட்டது. புழுங்கிற்று. பாண்டியன் எழுந்து போய் அண்ணாந்து
பார்த்தான். மேகம் திரண்டு இருண்டன. அலைகள் மொழுமொழுவென நெளிந்தன. காற்றில்லாமல் ஒரே இறுக்கம். வானையும் கடலையும் மாறிமாறிப் பார்த்தவாறு மாலுமிகள் பாய்மரத்தில் உள்ள கட்டுக்கயிறுகளை இறுக்கினர். எல்லோரும் மிரண்டு விழித்தனர். இடிமுழக்கம், மின்னல் ஒளி, அதேசமயம் விரைவும் பளுவும் கொண்ட மோதல் தொங்கானையும் உலுக்கிற்று.

தள்ளாடிய தொங்கான் :

                   வானம் உடைந்து வெள்ளம் கொட்டியது. சூறாவளி மாரியும் காற்றும் ஒன்று கலந்தது. வானுடன் கடல் கலந்து வளியுடன் இணைந்துவிட்டது. தொங்கான் தத்தளித்தது. எலும்புகள் முறிவது போல் நொறு நொறு நொறுங்கல் ஒலி. மின்னொளி, கப்பித்தான் பொந்து, தாவும் பேயுருவங்கள், சுறாமீன், ரம்பப்பல்,
காற்றோலக்கடல், சீற்றமழை, உடலயர்வுப் புலன் மயக்கம். திடுமென அமைதி நிலவியது. ஓடி வாருங்கள்
என்று கப்பித்தான் கத்துகிறான். பாண்டியன் எழுந்தான் தொங்கான் தள்ளாடுகிறது. மலைத்தொடர் போன்ற
அலைகள் மோதித் தாக்கின.

கிறுகிறுத்துக் கூத்தாடியது :

          வானம் பிளந்து தீ கக்கியது. மழை வெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறி கொண்டு
கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவிக் குதித்து நொறுங்கியது. உடை உடலை இறுக்கி
ரம்பமாய் அறுக்கிறது. தொங்கான் தாவி விழுந்து சுழல்கிறது. மூட்டைகள், சிப்பங்கள் நீந்தியோடி மறைந்தன. தொங்கான் சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.

நின்றுபோன கடிகாரங்கள் :

                     சூரிய வெளிச்சம் வந்தது. தொங்கானில் நீர் நெளிகிறது. பாய்மரம் ஒடிந்து கிடக்கிறது. மாலுமிகள் நீரை
இறைத்து ஊற்றுகின்றனர். ஓட்டையை அடைத்தனர். ஆப்பு அடித்தனர். மரம் வெட்டினர், செதுக்கினர். தொங்கானின் இருபுறமும் தேயிலைப் பெட்டிகளும் புகையிலைச் சிப்பங்களும் மிதந்தன. பாண்டியன் கடலைப் பார்த்து மலைத்து நின்றான். கடற்கூத்து எவ்வளவு நேரம் நீடித்ததென்று என்று கணக்கிட
முடியவில்லை. தொடங்கியபோதோ முடிந்தபோதோ வெகுநேரம் வரையிலோ யாரும் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. பார்த்தபோது எல்லாக் கடிகாரங்களும் நின்றுபோயிருந்தன.

தன் வசமில்லாத் தொங்கான் :

                    தொங்கான் தன்வசமின்றித் தடுமாறிச் சென்றது. கடற்கூத்தின் போது மாலுமிகளால் தூக்கி  எறியப்பட்ட பெட்டிகளும் சிப்பங்களும் மூட்டைகளும் மிதந்தன. புயல் மயக்கத்திலிருந்து யாரும் இன்னும் முழுமையாகத் தெளிச்சி பெறவில்லை. கப்பித்தான் இரவில் மேல் தட்டுக்கு வந்து வானையும் கடலையும்
ஒரு சுற்றுப் பார்த்தார். பாண்டியன் நிலவரத்தைக் கேட்டான். கப்பித்தான் இனிமேல் பயமில்லை. இரண்டு
நாளில் கரையைப் பார்க்கலாம்.

மிதந்து சென்ற தொங்கான் :

                மறுநாள் காலையில் சூரியன் உதித்தான். கடல் அலைகள் தொங்கானை மோதின. பறவை மீன்கள்
இருபுறமும் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து விளையாடின. கடலின்  இழுவைக் கிணங்கி தொங்கான் மிதந்தது.
இருநாள்கள் கழிந்தன. பிறைமதி வெளிச்சம் சிந்திற்று. விண்மீன்கள் கண்சிமிட்டி நின்றன. உப்பங்காற்று
உடலை வருடியது. மீன்கள் கூட்டம் கூட்டமாய் நீந்தின. அலைகள் நெளிந்தோடின.

கரையை நெருங்கிய தொங்கான் :

             கடற்கூத்துக்குப் பின் ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாகக் கடலோடு கடலாய் மரப்பச்சை
தெரிவது போல் இருந்தது. அரை மணி நேரத்திற்குப் பிறகு மீன்பிடி படகு விளக்குகள் தென்பட்டன. அடுத்த நாள் பினாங்குத் துறைமுகத்தை அடைந்தது தொங்கான். தொலைதூர நாவாய்கள் கரையை மொய்த்திருந்தன. எங்கிருந்து வருகிறார்கள் என்ற கேள்வி பல திசைகளிலிருந்தும் எழுந்தன.

முடிவுரை :

புயலிலே ஒரு தோணி கதையில் இடம் பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்
ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணிப்படும்பாட்டை மிகவும் தத்ரூபமாகக் காட்டுகிறது. மேலும்
நாமே அத்தொங்கானில் பயணம் செய்ததைப் போன்ற ஓர் உணர்வை காட்டுகிறது.

***********   ***************   *************

3 ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே.

- கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

(i) இப்பாடலில் தவழும் காற்று - தென்றல்

(ii) தெற்கிலிருந்து வீசுவதால் இது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது.

(i) இக்காற்று மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால்
வேகம் குறைந்த இதமான இயல்புடையதாக இருக்கும்.


கவிதை நயம் :

(i) குழந்தை தூக்கத்திலிருந்து விழிக்கும் போதோ தூங்குவதற்கு முன்போ பாதி கண்களைத் திறந்தும் மூடியும் இருக்கும் நிலைக்கு பூவும் அல்லாமல் மொட்டும் அல்லாமல் இருக்கும் மலரை
உவமையாக்குகின்றார்.

(ii) அடுத்த வரியில் விடிந்தும் விடியாத என்று பாடியுள்ளார். இதில் பொழுது விடிவது என்பது விடிந்த பின் அனைவராலும் அறிய முடியும் இருள் விலகி வெளிச்சம் வரும் அந்த நொடியைக் குழந்தைக்கு
உவமையாக்கியுள்ளார்.

(iii) தென்றல் காற்று ஆறு. மலை, மலை எனப் பலவற்றைக் கடந்து வருவதை நதியில் விளையாடி செடிகொடிகளில் தலைசீவிக் கொள்கின்றது நயத்துடன் பாடியுள்ளார்.

(iv) தமிழ்மொழியின் தொடக்கம் பொதிகை மலைதான் என்பது அனைவரும் அறிந்தது. அங்கு தோன்றிய
தமிழ் மதுரை நகரில் வந்து சிறப்புற்றதாகக் கூறுகின்றார். மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததையே
கவிஞர் 'தமிழ் மன்றம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு கவிஞர் கண்ணதாசன் தம்முடைய பாடல்களில் சிறந்த கவிதை நயத்தைச் சேர்த்துள்ளார்.

*************     **************  ***********

வாழ்த்துகள் நண்பர்களே ! 
பார்த்ததற்கும் , பகிர்ந்ததற்கும் நன்றி !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

உங்கள் வாட்சாப் குழுவில் 97861 41410 என்ற எண்ணை இணைத்து அனைவரும் பயன்பெறச்செய்யலாம் ஆசிரிய நண்பர்களே !

**********************    *********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*********  ************* 

Post a Comment

1 Comments

  1. Oktha iruthalun innum bettera irutha nallaarukkum paravalla it's ok

    ReplyDelete