பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - மொழி - அன்னை மொழியே - வினா & விடைகள் / 10th TAMIL - EYAL 1 - KAVITHAIPPEZHAI - ANNAI MOZHIYE - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1   - மொழி

கவிதைப் பேழை

அன்னை மொழியே

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

( வினாக்கள் மற்றும் விடைப்பதிவு ) 




பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

அ) எந் + தமிழ் + நா

ஆ) எந்த + தமிழ் + நா

இ) எம் + தமிழ் + நா

ஈ) எந்தம் + தமிழ் + நா

[விடை: இ] -   எம் + தமிழ் + நா


குறுவினா


1. “மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

1 ) சீவக சிந்தாமணி, 

2 ) வளையாபதி, 

3 )குண்டலகேசி.


சிறுவினா

1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே"

• தமிழே! தாய்மொழியே! அழகான செழுந்தமிழே

• பழமைக்குப் பழமையாய்த் தோற்றம் கொண்ட நறுங்கனியே!

* குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!

* பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!

• பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியஅனைத்துமானவளே!

• பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து உன்னை வாழ்த்துகின்றோம்.

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"

   என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகச் சுட்டுகிறார்.

***********************      ******************

அன்னை மொழியே - கவிதைப்பேழை - பாடல் இனிய எளிய விளக்கம் - பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்.




நெடுவினா

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் , பெருஞ்சித்திரனாரின் தமிழ்
வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

அனைவருக்கும் வணக்கம்! நம் உயிரினும் மேலானது நம் தமிழ் மொழி , செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது என்று பாரதியும் , தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாரதிதாசனும் கூறுகிறார்கள். அத்தகைய சிறப்பு மிக்க தமிழகத்தில் நம் தமிழ் மொழியின் சிறப்புகளை பேராசிரியரின் பாடலையும் , பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடலையும் ஒப்பிட்டு  இங்கே மேடைப் பேச்சாய் நிகழ்த்த வந்துள்ளேன்.

தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப் பாட இனிமை பிறக்கும். தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது. மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயைவாழ்த்தியமையைப் பார்ப்போம்.

பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும்
அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வதுபோல் தமிழ்த்தாயும் எல்லாத் திசைகளிலும்
புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்.


பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து
நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார். அதனையே
பெருஞ்சித்திரனார் திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் பதினெண் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு,
ஐம்பெருங்காப்பியங்களாய் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்கிறார்.


உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார். பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்.

சுந்தரனார் தமிழ்மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப் பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது
என்கிறார். மேலும் “வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்.


சுந்தரனார் தமிழே, தமிழாகியபெண்ணே, தாயே உன்னைவாழ்த்துகிறேன் என்கிறார். பெருஞ்சித்திரனார், எம் தனித்தமிழே! உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் என்று
பாடியுள்ளார்.


இவ்வாறு மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனர்.


******************    ***********************

கூடுதல் வினாக்கள்.

பலவுள் தெரிக

1. கீழ்க்காணும் நூல்களில் குழுவில் பொருந்தாத நூல் எது?

அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி

[விடை: அ]யசோதர காவியம்

2. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?

அ) தேன்சிட்டு
ஆ) வண்டு
இ) தேனீ
ஈ) வண்ணத்துப்பூச்சி

[விடை: ஆ] வண்டு

3. "அன்னை மொழியே” என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் குறிப்பிடப்படாத நூல்

அ) திருக்குறள்
ஆ) பத்துப்பாட்டு
இ) எட்டுத்தொகை
ஈ) தொல்காப்பியம்

[விடை: ஈ] தொல்காப்பியம்

4. “அன்னை மொழியே” என்ற கவிதையில் இடம்பெறும் மன்னன்

அ) சேரன்                   ஆ) சோழன்
 இ) பாண்டியன்       ஈ) பல்லவன்

 [விடை! இ] ) பாண்டியன்

5. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பாவியக் கொத்து

[விடை: இ தென்தமிழ்
 
6. பொருந்தாதவற்றைக் கண்டறிக.

அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு

[விடை! அ] தமிழ்ச்சிட்டு

7. பொருத்துக.

1. மாண்புகழ்     - அ) சிலப்பதிகாரம் 
2. மன்னும்           -  ஆ) திருக்குறள் 
3. வடிவு                  -  இ) பத்துப்பாட்டு 
4. பாப்பத்தே            -   ஈ) மணிமேகலை 

அ) 1-ஆ2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ
இ) 1-ஆ 2-இ 3-ஈ 4-அ
ஈ) 1-ஆ 2-அ 3-இ 4-ஈ

[விடை: அ]  1-ஆ2-அ 3-ஈ 4-இ

8. 'அன்னை மொழியே' கவிதை இடம் பெறும் நூல்

அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை
ஈ) பாவியக்கொத்து

விடை -ஆ ) கனிச்சாறு

9, “முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே" - என்று பாடியவர்

அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ணதாசன்


[விடை: அ]  பெருஞ்சித்திரனார்



10. “முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே” - என்று பாடியவர்

அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்

விடை - ஆ துரை. மாணிக்கம்

11, “நற்கணக்கே" என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?

அ) 18
ஆ) 10
இ) 8
ஈ) 5

[விடை: அ] 18

12. “மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!'' எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை?

அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு

[விடை: ஆ] மூன்று

13. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

அ) 
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்

[விடை: அ)  பெருஞ்சித்திரனார்

14. பெருஞ்சித்திரனார் பாடலில் ‘பழமைக்குப் பழமை' என்னும் பொருள் தரும் சொல்.

அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்

[விடை: ஆ] முன்னைக்கும் முன்னை

15. 'பாப்பத்தே எண் தொகையே' - சரியான பொருளைக் கண்டறி.
அ) பாடல் பத்து, எண் தொகை
ஆ) பா பத்து, எட்டுத் தொகை
இ) பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
ஈ) பத்தும் எட்டும்

[விடை: இ )  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

16, பெருஞ்சித்திரனாரின் ‘முந்துற்றோம் யாண்டும்', 'தமிழ்த்தாய் வாழ்த்து' என்னும் இருதலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?

அ) எண் சுவை எண்பது
ஆ) உலகியல் நூறு
இ) நூறாசிரியம்
ஈ) கனிச்சாறு

[விடை: ஈ] கனிச்சாறு

17. செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அது போல - பயின்று வரும் அணி

அ) உவமையணி
ஆ) உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) தற்குறிப்பேற்றணி

[விடை: அ)  உவமையணி

18. செந்தமிழ் - பிரித்து எழுதுக.

அ) செந் + தமிழ்
ஆ) செம் + தமிழ்
இ) செ + தமிழ்
ஈ) செம்மை + தமிழ்

[விடை: ஈ] செம்மை + தமிழ்


19. செந்தமிழ், செந்தாமரை இலக்கணக் குறிப்புத் தருக.

அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) அன்மொழித்தொகை

விடை  - அ   பண்புத்தொகை

20. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள - இவ்வடியில் காணும் நயம்

அ) மோனை
ஆ) எதுகை
இ) முரண்
ஈ) இயைபு

[விடை: அ]  மோனை


21. தென்னவன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே
மன்னும் சிலம்போ மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
இப்பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.

அ) தென்னவன்
ஆ) மன்னும்
இ) இன்னறும் 
ஈ) மூன்றும்

[விடை: ஈ]  மூன்றும்

22. 'அன்னை மொழியே' என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர்

அ) சுந்தரனார் ஆ) பாரதிதாசன்

 இ) பெருஞ்சித்திரனார் ஈ) பாவாணர் 

[விடை: இ] பெருஞ்சித்திரனார்

23. “சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்" என்று பாடியவர் யார்?

அ) பாரதிதாசன்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ ) சச்சிதானந்தன்
ஈ) ஆறுமுகநாவலர்

[விடை: இ]  சச்சிதானந்தன்

24, பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது எது?

அ) பாவியக்கொத்து
ஆ) கனிச்சாறு
இ) திருக்குறள் மெய்ப்பொருளுரை
 ஈ) உலகியல் நூல்

[விடை: இ] திருக்குறள் மெய்ப்பொருளுரை

25. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் யார்?

அ) கண்ணதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) திரு.வி.க

[விடை: இ] பெருஞ்சித்திரனார்

*********************      ******************

குறுவினா

1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்ப காரணமாய் இருந்த இதழ்கள்
யாவை?

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.

2. பாவலரேறு பொருஞ்சித்திரனாரின் படைப்புகள் யாவை?

* கனிச்சாறு
- பாவியக்கொத்து
- மகபுகுவஞ்சி
• நூறாசிரியம்
• பாவியக்கொத்து
எண்சுவை எண்பது

3, வண்டு - தேன் தமிழர் - தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டு பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?

வண்டு - தேன்:

உள்ளத்தில் கனல் மூள வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுதல்,
தமிழர் - தமிழ்ச்சுவை:
தமிழர் செந்தமிழைச் சுவைத்து தமிழின் பெருமையை எங்கும் முழங்குகின்றனர்.


********************    ********************

குறுவினா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக.

பெயர் -  பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
இயற்பெயர் - துரை.மாணிக்கம்
ஊர் -  சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
பெற்றோர் - துரைசாமி , குஞ்சம்மாள்
இயற்றிய நூல்கள் - கனிச்சாறு , ஐயை , கொய்யாக்கனி , பாவியக்கொத்து , பள்ளிப்பறவைகள் , நூறாசிரியம் , எண்சுவை என்பது , மகபுகுவஞ்சி.
சிறப்பு - இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்குக் கருவூலமாக அமைந்துள்ளது.
காலம் - 10  - 03 - 1933 முதல் 11 - 06 - 1995


********************    *********************

கற்பவை கற்றபின்


"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை"

இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.

(i) நற்றிணை : நல் + திணை/நன்மை திணை. 'நல்' என்னும் அடைமொழியும் அகப்பொருள்
ஒழுக்கத்தைச் சுட்டும் 'திணை' என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை' என்னும் பெயர் பெற்றது.

(ii) குறுந்தொகை - குறுமை + தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாகஇருப்பதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.

(iii) ஐங்குறுநூறு : ஐந்து குறுமை + நூறு = ஐங்குறுநூறு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்டதால் “ஐங்குறுநூறு
எனப் பெயர் பெற்றது.

(iv) பதிற்றுப்பத்து : சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய தொகுப்பு நூலாகும்.ஒரு மன்னருக்கு பத்து பாடல்கள் என்னும் முறையில் நூறு பாடல்களைக் கொண்டுள்ளதால்
பதிற்றுப்பத்து' எனப் பெயர் பெற்றது.

v ) பரிபாடல் : வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பல வகைஅடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் ஓசையையுடைய பரி பாட்டுகளின் தொகுப்பாகவிளங்குவதால் இது ‘பரிபாடல்' என்று அழைக்கப்படுகிறது.

(vi) கலித்தொகை : ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பானஅமைப்புகளையும், கொண்ட கலிப்பாக்களால் அமைந்த நூலாதலால் கலித்தொகை எனப் பெயர்
பெற்றுள்ளது.

(vii) அகநானூறு : அகம் + நான்கு + நூறு - அகநானூறு. அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக்கொண்ட நூல் என்பதால் 'அகநானூறு' எனப் பெயர் பெற்றது.

(viii) புறநானூறு : புறம் + நான்கு + நூறு - புறநானூறு. இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக்கொண்ட நூல் என்பதால் ‘புறநானூறு' எனப் பெயர் பெற்றது.

********************    ***********************

“எந்தமிழ் நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில்ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.

உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும்எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறதுநம் தமிழ் மொழி.
தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை,பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார்
ஞா.தேவநேயப் பாவாணர் . 

முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி அவர்கள்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் என்றார்.
அந்தளவிற்கு தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவேபேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.

தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜி.யூ.போப்., தமிழை நன்கு கற்று அதன்சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்”
என்று பொறிக்கச் செய்தார்.

உலகின் மூத்த மொழி தமிழ்மொழி மூத்தக்குடி வளர்த்த மொழியாம் தமிழ்மொழி மற்ற மொழிகளைக்காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம்
முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும்
இல்லையென பெருமையாக எடுத்துரைப்பேன்.

எந்தன் தமிழின் பெருமையை உலக அரங்கு முழுக்க எடுத்துரைப்பேன் அதுவே நான் செய்த பாக்கியம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி.


**********************      *******************

வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

தொடர்புக்கு - 97861 41410
********************    ***********************



Post a Comment

2 Comments