பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - இலக்கணம் - சொல் - மூவகை மொழி - எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம்.

 

பத்தாம் வகுப்பு - தமிழ்

இயல் - 1    மொழி 

கற்கண்டு - சொல்

எழுத்து மற்றும் காட்சிப் பதிவு விளக்கம்.


*********************   **********************


          வணக்கம் மாணவ நண்பர்களே !  நாம் நேற்றைய வகுப்பில் அளபெடை பற்றிக் கண்டோம். நம்முடைய பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் காட்சிப் பதிவினையும் அதில் இணைத்திருந்தோம்.அது பெரிதும் பயன்பட்டிருக்கும்.  இன்று சொல் என்னும் தலைப்பில் அமைந்த செய்திகளைக் காண்போம்.

                              சொல்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார் தொல்காப்பியர்.

ஓர் எழுத்து தனித்தோ , பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும்.

எ.கா.

  பூ , ஆ , தீ , வா , போ , தா

' பூ மலர்ந்தது '

' மாடு புல் தின்றது '

மேலே உள்ள எடுத்துக்காட்டில் தனி எழுத்தும்  , பல எழுத்துகள் சேர்ந்த வந்த சொல்லும் உள்ளன. இவை பொருள் தருகிறதல்லவா ?

இந்தச் சொல்லானது ,

அ ) இரு திணைகளையும் , ஐந்து பால்களையும் குறிக்கும்.

இரு திணை - உயர் திணை , அஃறிணை

ஐம்பால் - ஆண்பால் , பெண்பால் , பலர்பால் ,                       ஒன்றன் பால் , பலவின்பால் .

ஆ ) மூவிடங்களிலும் வரும்.

                தன்மை , முன்னிலை , படர்க்கை.

இ ) உலக வழக்கிலும் ( பேச்சு வழக்கு ) ,                     செய்யுள் வழக்கிலும்  வரும்.

ஈ ) வெளிப்படையாகவும் , குறிப்பாகவும்                  விளங்கும்.

                        மூவகை மொழி

1 ) தனிமொழி

2 ) தொடர்மொழி

3 ) பொதுமொழி


ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி

பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன

                                          ( நன்னூல் - 260 )

1 ) தனிமொழி :

                       ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனிமொழி எனப்படும். 

பிரிக்க முடியாத பகாப்பதம் அல்லது பிரிக்கக் கூடிய பக்பதமாக இது அமையும்.

எ.கா. 

கண் , படி  -  பகாப்பதம்

கண்ணன் , படித்தான் - பகுபதம்


2 ) தொடர்மொழி :

              இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.

எ.கா .

கண்ணன் வந்தான்.

மலர் வீட்டுக்குச் சென்றாள்.


3 ) பொதுமொழி :

        ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் , அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும் , தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.

எ.கா.

எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்

வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக்                                  குறிக்கும்.

   இவையே எள் + து எனவும் , வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண் , வேகின்ற கை எனவும் பொருள் தரும். இவை இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவதால் பொது மொழியாகவும் இருக்கிறது.

மாணவர்களே ! சொல் எனும் பகுதியிலெ அமைந்த மூவகை மொழிகள் பற்றி இன்று கண்டோம். நாளை தொழிற்பெயர் , வினையாலணையும் பெயர் பற்றிக் காணெபோம்.

   மூவகை மொழிகள் பற்றி நம் பெரும்புலவர்.திரு.மு . சன்னாசி ஐயா அவர்கள் வழங்கும் விளக்கத்தைக் காட்சிப் பதிவாகக் காண்போமா ?



************************  *******************

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .


TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்

PG - TRB  - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்

UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள் 

என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்

GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************

Post a Comment

0 Comments