பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - எழுத்து - உயிரளபெடை - எழுத்து & காட்சிப் பதிவு விளக்கம். பாடமே படமாக ! பார்த்தாலே போதும்..

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1  -  மொழி   - கற்கண்டு

எழுத்து , சொல் 

எழுத்து - உயிரளபெடை

எழுத்து & காட்சிப்பதிவு விளக்கம்.


***********************  *******************


வணக்கம் மாணவ நண்பர்களே !  நாம் நேற்று எழுத்திலக்கக்கணம் பற்றி முன் வகுப்பில் கற்றதை நினைவு கூர்ந்தோம் . நீங்கள் சிறப்பாக நினைவு படுத்திச் சொன்னீர்கள். அடிப்படையான , நாம் தெரிந்திருக்க வேண்டிய செய்திகள் அவை. இன்று நமக்குப் பாடப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம். 

     சார்பெழுத்துகள் பத்துவகை என நாம் கண்டோம். அவற்றுள் உயிரளபெடை , ஒற்றளபெடை ஆகிய இரண்டு அளபெடைகள் நம் பாடப்பகுதியில் உள்ளன. 


அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல்

         பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

1 . உயிரளபெடை

           செய்யுளில் ஓசை குறையும் போது , அதனை நிறைவு செய்ய , மொழிக்கு அதாவது சொல்லின் முதலிலும் , இடையிலும் , இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும் . இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.


உயிரளபெடை மூன்று வகைப்படும்.

1 ) செய்யுளிசை அளபெடை 

2 ) இன்னிசை அளபெடை

3 ) சொல்லிசை அளபெடை


முதலில் நாம் செய்யுளிசை அளபெடை பற்றிக்காண்போம்.

1 ) செய்யுளிசை அளபெடை

                  செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய , நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை அதாவது நீண்டு ஒலித்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டு :

ஓஒதல் வேண்டும் -  மொழி முதல் 

உறாஅர்க்கு  உறுநோய் - மொழியிடை

நல்ல படாஅ பறை - மொழியிறுதி


நண்பர்களே !  மேற்கண்ட செய்யுளிசை அளபெடையை நமது பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் இனிய விளக்கத்தில் காட்சிப் பதிவாகக் கண்டு மகிழ்வோமா ?




காட்சிப் பதிவைக் கண்டு மகிழ்ந்தீர்களா ? மிக எளிமையாக , இனிமையாக உங்களுக்குப் புரிந்ததல்லவா ?  

அடுத்து , உயிரளபெடையில் இரண்டாவதாக இருக்கக் கூடிய இன்னிசை அளபெடை பற்றிக் காண்போம்.

2 ) இன்னிசை அளபெடை

          செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் , இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

எ.கா.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்                                                                        மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


3 ) சொல்லிசை அளபெடை : 

                    செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

எ.கா:

உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்

வரனசைஇ இன்னும் உளேன்.

நசை - விருப்பம் ; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல் வினையடையாக மாறியது.

    மேலே உள்ள இன்னிசை அளபெடை மற்றும் சொல்லிசை அளபெடைகளுக்கு  இனிய , எளிய விளக்கத்தை நம் பெரும்புலவர் ஐயா திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் விளக்கியுள்ளார்கள். அதைக் காண்போம்.




காட்சிப் பதிவில் மிக எளிமையாகப் புரிந்ததல்லவா ? அடுத்து நாம் ஒற்றளபெடை பற்றிக் காண்போம்.

************************   *****************

2 ) ஒற்றளபெடை 

           செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் , வ் , ய் , ல் , ள் , ஆகிய பத்தும் , ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்

வெஃஃ குவார்க்கில்லை வீடு.

      மாணவர்களே ! இதற்கும் மிக அற்புதமான விளக்கத்தை நம் பெரும்புலவர் ஐயா தந்திருக்கிறார். வாருங்கள் காட்சிப் பதிவில் காண்போம்.




மாணவர்களே ! இன்று நாம் இயல் 1 ல் கற்கண்டு இலக்கணத்தில் எழுத்தில் அமைந்துள்ள இருவகையான அளபெடைகளைக் கண்டோம். காட்சிப் பதிவு உங்களுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். அடுத்த வகுப்பில் சொல் பகுதியில் உள்ள செய்திகளைக் காண்போம். மீண்டும் ஒரு முறை செய்தியினயும் , காட்சிப் பதிவையும் பாருங்கள். ஏதும் ஐயமெனின் கூறுங்கள் . நன்றி.

நன்றி ஐயா.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410

**********************   ********************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்ற நாட்களில் தினமும் கம்பராமாயணம் உரைத்தொடர்.


GREENTAMIL.IN - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.

*************************     ***************

Post a Comment

0 Comments