பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1
கற்பவை கற்றபின்
******************* ***********************
அன்னை மொழியே
1.) “நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை”
இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களைப் பெயர்க்காரணத்துடன் எடுத்துக்காட்டுக.
(i) நற்றிணை : நல் திணை/நன்மை + திணை. 'நல்' என்னும் அடைமொழியும் அகப்பொருள்ஒழுக்கத்தைச் சுட்டும் திணை' என்னும் பெயரும் சேர்ந்து 'நற்றிணை' என்னும் பெயர் பெற்றது.
(ii) குறுந்தொகை : குறுமை + தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாகஇருப்பதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.
(ii) ஐங்குறுநூறு : ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என ஐவகைத் திணை குறித்த குறுகிய நூறு பாடல்களாகத் தொகுக்கப்பட்டதால் 'ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
(iv) பதிற்றுப்பத்து : சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய தொகுப்பு நூலாகும்.
ஒரு மன்னருக்கு பத்து பாடல்கள் என்னும் முறையில் நூறு பாடல்களைக் கொண்டுள்ளதால்'பதிற்றுப்பத்து' எனப் பெயர் பெற்றது.
(v) பரிபாடல் : வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும், பல வகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும் ஓசையையுடைய பரி பாட்டுகளின் தொகுப்பாக விளங்குவதால் இது 'பரிபாடல்' என்று அழைக்கப்படுகிறது.
(vi) கலித்தொகை : ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளையும், கொண்ட கலிப்பாக்களால் அமைந்த நூலாதலால் கலித்தொகை எனப் பெயர் பெற்றுள்ளது.
(vii) அகநானூறு : அகம் + நான்கு + நூறு - அகநானூறு. அகப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் 'அகநானூறு' எனப் பெயர் பெற்றது.
(viii) புறநானூறு : புறம் + நான்கு + நூறு - புறநானூறு. இது புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் 'புறநானூறு' எனப் பெயர் பெற்றது.
********************* *******************
2 ) “எந்தமிழ் நா நின் பெருமை எடுத்தே உரைவிரிக்கும்” என்ற பாடலடியைக் கொண்டு வகுப்பறையில்ஐந்து நிமிட உரை நிகழ்த்துக.
உலகில் உள்ள தொன்மையான மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று என்றால் மிகையாகாது. இன்றும் எழுத்தளவிலும் பேச்சளவிலும் தன் தொன்மையைக் காத்து சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் தமிழ் மொழி.
தமிழ்மொழி தொன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை.பெருமை,திருமை, இயன்மை, வியன்மை என பலவகை பெருமைகளை ஒருங்கேயுடையது என்கிறார் மொழிஞாயிறு. ஞா.தேவநேயப் பாவாணர்.
முண்டாசு கவிஞன் மகாகவி பாரதி அவர்கள் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்.அந்தளவிற்கு தமிழ்மொழியின் பெருமையை உலகறியும். மேலும் தமிழ்மொழி இயற்கையாகவே பேசுவதற்கு எளிமையாக அமைந்திருப்பதால் நாம் தமிழ் எழுத்துகளை எளிதாக உச்சரிக்கலாம்.
தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டு அறிஞர் டாக்டர் ஜி.யூ.போப்., தமிழை நன்கு கற்று அதன்
சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்"என்று பொறிக்கச் செய்தார்.
உலகின் மூத்த மொழி தமிழ்மொழி . தமிழ்மொழி மற்ற மொழிகளைக்
காட்டிலும் இனிமையும், பெருமையும் பல்வேறு இலக்கிய தொன்மைகளையும் இயல், இசை, நாடகம் முத்தமிழ் கொண்ட மொழியாம் நம் தமிழ் மொழி, தமிழ்மொழிக்கு ஈடு இணை இவ்வுலகில் எந்த மொழியும் இல்லையென பெருமையாக எடுத்துரைப்பேன்.
எந்தன் தமிழின் பெருமையை உலக அரங்கு முழுக்க எடுத்துரைப்பேன் அதுவே நான் செய்த பாக்கியம்
என்று பலர் கூறுகின்றனர் என்பதைக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன் நன்றி.
************************ *******************
உரைநடை உலகம் - தமிழ்ச்சொல் வளம்
1 ) பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.
தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.
(i) தரிசு
- சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் நிலம்.
(ii) சிவல் - சிவப்பு நிறமாக இருக்கும் நிலம்.
(iii) கரிசல் - கருப்பு நிறம் கொண்ட மண் உள்ள நிலம்.
(iv) முரம்பு - பருக்கை கல்லுள்ள மேட்டு நிலம்
(v) புறம்போக்கு - அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை புறம்போக்கு என்பர்.
(vi) சுவல் - மேடான பகுதியிலுள்ள நிலம்
(vii) அவல் - பள்ளமான பகுதியிலுள்ள நிலம்
*********************** *****************
2 ) ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக.
எ.கா. : சொல்லுதல் - பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்.
(i) கிளி - தத்தை, சுகம், கிள்ளை.
(ii) குழந்தை - மகவு, குழவி, சேய், பிள்ளை
(iii) சூரியன் - ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
iv ) நெருப்பு - தீ, அனல், கனல், சுடர்
(v) சொல் - பதம், கிளவி, மொழி
(vi) பெண் - நங்கை, மங்கை
(vii) வயல் - கழனி, தரிசு, பழனம், செய், காணி.
************************** *****************
கவிதைப் பேழை - இரட்டுற மொழிதல்
1.அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன்,
அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும்
வந்துவிட்டதே!" என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.
ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒருமுறை ஒரு
பெரிய வித்துவானுடைய இசை நிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று
கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.” என்று குறிப்பிட்டார்!
இ) தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம்
செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்!
இவை போன்ற பல சிலேடைப் பேச்சுக்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச்
சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.
அ) ஒருநாள் மாலை நேரம் ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்றார் கவிஞர் வாலி. அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கவிஞர் வாலி “அடடே! மாலை நேரத்தில் மாலை
போடுகிறார்களே!” என்றார். இதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்தனர்.
ஆ) சினிமா விமர்சகர் கண்ணன் விமர்சனங்களில் மிகவும் நயமான சிலேடைகள் காணப்படும். அவர்
ஒருமுறை ஒரு நடிகருடைய சினிமா படத்தை விமர்சனம் செய்யும்போது அவர் குறிப்பிட்டது. “அவரும்
நடிக்கல, யாரும் நடிக்கல" என்றார்.
2.மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்தவற்றை வகுப்பறையில் படித்துக்
காட்டுக.
செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும் தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்,
தன்மதுரஞ்செய் கிழங்கு - கானில்
நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!
பாரதிதாசன்
********************* *********************
விரிவானம் - உரைநடையின் அணிநலன்கள்
1 ) நீங்கள் படித்தவற்றுள் நினைவில் நீங்கா இடம்பெற்ற இலக்கியத் தொடர்கள், நயங்களை எழுதுக.
இலக்கியத் தொடர் - நயம்
i ) உள்ளங்கை நெல்லிக்கனி போல - உவமை
ii ) கண்ணை இமை காப்பது போல - உவமை
(iii) அத்தி பூத்தாற் போல - உவமை
(iv) குன்றின் மேலிட்ட விளக்குப் போல - உவமை
வாழையடி வாழையாக - சீர்மோனை
(vi) விளையும் பயிர் முளையிலேயே தெரியும். - சீர்எதுகை
********************** ******************
கொடுத்த தலைப்பில் பேசுவோம்.
தலைப்பு - நேரம்
தவிர்க்க வேண்டிய சொல் - கடிகாரம்
குறிப்பு: ஒருநிமிடம் பேச வேண்டும். தமிழ்ச்சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஐந்து விநாடிகளுக்கு
மேல் இடைவெளி இருத்தல் கூடாது. இது போன்று வேறு வேறு தலைப்புகளில் வகுப்பறையில் பேசிப்
பழகுக.
தலைப்பு - நேரம்
வரலாற்று அடிப்படையில், நேரம் என்பதன் பொருள் தொடர்பாக இரண்டு விதமான கருத்துகள் உள்ளன.
நேரம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறு மேலும் நேரம் அதன் ஒரு பரிமாணம் என்பது ஒரு
கருத்து. அதன்படி இதில் நிகழ்வுகள் ஒரு தொடராக நடைபெறுகின்றன. நேரம் என்பது அளக்கக்கூடிய ஒன்றாகும். இது ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயற்பியல் நோக்கு,
இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம் என்பது அறிவுச் சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், பல்வேறு நிகழ்வுகளை தொடராக்கம் செய்து கொள்கிறார்கள்.நிகழ்வுகள் நடைபெறும் காலத்தையும் அவற்றுக்கிடையேயான இடைக்காலத்தையும் அளந்து
கொள்கிறார்கள். பொருள்களின் இயக்கங்களை ஒப்பிடலாம். மேலும் இக்கருத்துப்படி நேரம் பாய்ந்து
செல்லும் ஒன்றோ, அதனூடாக வேறு பொருட்கள் செல்வதற்கான ஊடகமோ அல்லது நிகழ்வுகளைக்
கொள்ளுகின்ற ஒரு தாங்கியோ அல்ல. கோட்பிரைட் லீப்னிஸ், இம்மானுவேல் கண்ட் போன்றவர்கள்
இக்கருத்தைக் கொண்டிருந்தனர்.
பொதுவாக நேரம் என்பது காலத்தை அளக்கப் பயன்படும் ஓர் அளவை ஆகும், காலத்தை அளக்க நிறையவழிகள் உள்ளன. இதனை அளந்தறிவதற்கு கால அளவியல் என்று பெயர். காலம் கண் போன்றது. போனால் திரும்ப வராது. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கவும், எழுதவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை விரயம் செய்தால் உன் வாழ்க்கையை விரயம் செய்வது போன்றதாகும். நேரம் என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் படி வெற்றிகள் எளிதாகும்.
********************* **********************
கற்கண்டு - எழுத்து, சொல்
1.) தேன், நூல், பை, மலர், வா - இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
(i) தேன் சந்தியா தேன் வாங்கக் கடைக்குச் சென்றாள்.
(ii) நூல் - கண்ணன் பல நூல்களை கற்று புகழ்பெற்ற சிறந்த கவிஞராக திகழ்கிறார்.
(iii) பை - தியா இன்று துணிப்பையில் தன் புத்தகங்களை வைத்து பள்ளிக்குக் கொண்டு சென்றாள்.
(iv) மலர் - பல வண்ண மலர்களால் மேடையை அலங்கரித்து கொண்டிருந்தாள்.
(v) வா-மலர் , மங்கை இருவரும் என்னுடன் வாருங்கள்.
2 ) வினை அடியை விகுதிகளுடன் இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
எ.கா. : காட்சி, காணுதல், காணல், காணாமை
(i) காண் - காண்பேன் , காட்சி , காணுதல்
(ii) சிரி - சிரிப்பேன் , சிரித்தாள் , சிரிப்பான்
iii ) படி - படிப்பு , படிப்பேன் , படித்தல் , படிப்பான்
(iv) தடு - தடுத்தல் , தடுத்தான் , தடுத்தேன்
தடுப்பேன்.
3 ) தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
: எங்கே செல்கிறாய் ? (தொடர்மொழி )
: கடைக்கு (தனிமொழி )
- அங்கே என்ன வாங்குகிறாய்? (தொடர்மொழி )
: தேங்காய் வாங்குகிறேன். (தொடர்மொழி
: எதற்கு (தனிமொழி)
: கோயிலுக்குச் செல்ல வேண்டும். ( தொடர்மொழி)
: எந்தக் கோயிலுக்குச் செல்ல வேண்டும்? (தொடர்மொழி
: குன்றத்தூர் (தனிமொழி)
4 ) மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலைமீது ஏறுவேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்;
சுற்றுமுற்றும் பார்ப்பேன். மனம் அமைதி எய்தும்.
இத்தொடர்களில் உள்ள வினைமுற்றுகளைத் தனியே எடுத்தெழுதித் தொழிற்பெயர்களாக மாற்றுக.
வினைமுற்று - தொழிற்பெயர்
அழைக்கும் - அழைத்தல்
ஏறுவேன் - ஏறுதல்
அமர்வேன் - அமர்தல்
பார்ப்பேன் - பார்த்தல்
எய்தும் - எய்துதல்
கட்டு, சொட்டு, வழிபாடு, கேடு, கோறல் - இத்தொழிற்பெயர்களைவகைப்படுத்துக.
(i) கட்டு - முதனிலைத் தொழிற்பெயர்.
(ii) சொட்டு - முதனிலைத் தொழிற்பெயர்
(iii) வழிபாடு - முதனிலைத் தொழிற்பெயர்
(iv) கேடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
(v) கோறல்- விகுதி பெற்ற தொழிற்பெயர்
********************** ********************
வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !
பார்த்தமைக்கும் , பகிர்ந்தமைக்கும் , படித்தமைக்கும் நன்றி.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
********************** **********************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம் .
TNPSC GROUP- II & IV & VAO தேர்வுப் பகுதிகள்
PG - TRB - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
UPSC - IAS - தமிழ் பாடத்திட்டப் பகுதிகள்
என அனைத்துக் காட்சிப் பதிவுகளையும் GREEN TAMIL - You Tube ல் கண்டு மகிழலாம்
GREENTAMIL.IN -. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பயிற்சித்தாள் & வினா , விடைகளைப் படித்து மகிழலாம்.
************************* *************
0 Comments