எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 3
பயிற்சித்தாள் - 12 - மதிப்பீடு
1.பாடலடிகளில் அடிக்கோடிடப்பட்டுள்ள சொற்களை எடுத்தெழுதி அகரவரிசைப்படுத்துக.
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்
தினமும் பாயில் விழுந்திடுவாய்,
விடை
பட்டிடுவாய், பாயில், மட்டு, முட்டு, வாரி, விழுந்திடுவாய் .
2. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ) நோயற்ற வாழ்வே - குறைவற்ற செல்வம்.
ஆ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
இ ) உணவே -- மருந்து
ஈ ) அரிது அரிது -- மானிடராய்
பிறத்தல் அரிது.
3. சரியா? தவறா? என எழுதுக.
அ) அழகுக்காக மட்டும் உடலெடையைக் குறைப்பதும், மிகவும் மெலிவதும் நல்லவையல்ல.
(சரி)
ஆ) தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.
(சரி ),
4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க .
மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்.
முசுமுசுக்கைக் கொடியின் வேரைப் பசும்பாலில் ஊறவைத்து, உலர்த்திப்
பொடியாக்கிப் பசும்பால், மிளகுப்பொடி, சருக்கரையுடன் உண்டுவந்தால் இருமல்
நீங்கும். அகத்திக் கீரை பல்சார்ந்த நோய்களைக் குணமாக்கும். வல்லாரைக் கீரை நினைவாற்றல் பெருக உதவும். வேப்பங் கொழுந்தைக் காலையில் உண்டு வந்தால், மார்புச்சளி நீங்கும். வேப்பிலையை அரைத்துத் தடவினால் அம்மையால் வந்த
வெப்பு நோய் அகலும்.
வினாக்கள்:
அ) நினைவாற்றல் பெருக உதவும் கீரையின் பெயர் என்ன?
விடை: வல்லாரை.
ஆ) மணித்தக்காளிக் கீரையின் பயன் யாது?
விடை : வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்.
இ) இருமல் நீங்க நாம் செய்ய வேண்டுவன யாவை?
பசும்பாலில் மிளகுப் பொடியுடன் சருக்கரைமிட்டு உண்ண வேண்டும்,
ஈ ) உனக்குத் தெரிந்த இரண்டு கீரை வகைகளைக் கூறி, அவற்றின்
பயன்களை எழுதுக.
1. பசலைக்கீரை - உடலுக்கு குளார்ச்சி தரும்
2. தூதுவளை - சளி, இருமலைப் போக்கும்.
உ) பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
விடை: நலம் காக்கும் மூலிகைகள்
5. பாடலின் பொருளை உன் சொந்த நடையில் எழுதுக.
பாட்டி வைத்தியம்
"வீட்டுக்குள்ளே எல்லாம் இருக்கு
வீதியில் மருந்து கண்டது கிடக்கு
பாட்டியைக் கேட்டால் தருவாள் நமக்கு
பக்குவமாக அம்மியில் அரைத்து
சுக்கு மிளகு சீரகம் இஞ்சி
சுத்தமான திப்பிலி சேர்த்து
கைக்குள் வைத்துக் கசக்கிக் கொடுப்பாள்
கண்போல் நம்மைக் காத்தும் கிடப்பாள்."
விடையைக் குறிப்பேட்டில் எழுதுக
6. கோவிட் -19 வைரஸ் குறித்து நான்கு வரிகளில் எழுதுக.
விடை:
கோவிட் 19 பெருந்தொற்று நோயாகும்.
முதன் முதலில் சீனாவின் ஊகான் மாகாணத்தில் 2019
டிசம்பரில் அடையாளம் காணப்பட்டது. அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் , சமுக இடைவெளி
பின்பற்றல் மூலம் பெருந்தொற்றைத் தவிர்க்கலாம்.
7 . கீழ்க்காணும் அடிச்சொற்களுக்குரிய எச்சங்களை எழுதுக.
அடிச்சொல் - பெயரெச்சம் - வினையெச்சம்
செல் - சென்ற - சென்று
வா - வந்த - வந்து
பற - பறந்த - பறந்து
எடு - எடுத்த - எடுத்து
பார் - பார்த்த - பார்த்து
8. சரியான இணையைத் தெரிவுசெய்து எழுதுக.
அ) எழுதி முடித்தாள் - தெரிநிலை வினையெச்சம்
ஆ) வேகமாகப் படித்தாள் - குறிப்பு வினையெச்சம்
இ) சிறிய புத்தகம் - குறிப்புப் பெயரெச்சம்
ஈ ) படித்த புத்தகம் - தெரிநிலைப் பெயரெச்சம்
9. கீழ்க்காணும் பாடலிலுள்ள எச்சங்களை எடுத்தெழுதுக.
"கல்லும் மழையும் குதித்துவந்தேன்- பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன் - பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்". கவிமணி
விடை:
குதித்து, கடந்து, விரிந்த, தவழ்ந்து, ஏறாத, ஊறாத, பொங்கிட
வாழ்த்துகள் மாணவச் செல்வங்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை . 97861 41410.
0 Comments