தீக்குச்சி

 தீக்குச்சி 


@      ஓ.....

         ஒளிதரும்  தீக்குச்சியே  !

         மனிதனிலிருந்து   நீ 

         முரண் படுகிறாய் .


@      தலைக்கனம்  இழந்த பிறகுதான்

         மதிக்கப் படுகிறான் மனிதன் .

         நீயோ ....

         உன் தலையின்  கனம்

         இழந்த  பிறகு  எரிக்கப் படுகிறாய் . 


@     தீப்பெட்டி  காதலனோடு 

        பக்கவாட்டில்  உரசும்போது 

        நீ மட்டும்  ஏன்  மரித்துப்  போகிறாய் 

        காதலனை  விட்டுவிட்டு  ?


@     நீ  இல்லா விட்டால் 

        எங்களின் அடுப்புகள்                                                                                

        சோம்பலாகி  இருக்கும் .

        நீ  இருக்கப் போய்தான் 

        விறகுகுகள்  சாம்பலாகின்றன .


@     மனிதனின்  கைகள் 

        விழா  மேடைகளில் 

        உன்னைக்  கொண்டு 

        குத்து  விளக்கேற்றும் போது

        புதிய  சமத்துவம்  உருவாக்குகிறாய் .


@    ஆனால் ....

        ஆளில்லா  இரவு  நேரங்களில் 

        குடிசை  வீடுகளோடும்,

        வைக்கோல்   படப்புகளோடும்

        நீ உறவாடும்போது  

        பல  உறவுகள்  அறுந்து  விழுகின்றன .


@     உணர்ச்சி  வேகத்தில் 

        நீயும் , பெட்ரோலும் 

        உடனே  சங்கமமாகி  விடுகிறீர்களே  ?


@     நீ  சாதி  ,மதம்  பார்க்காமல் 

        அனைவரின்  சிதைகளையும்

        சிதைக்கிறாய் .

        மனிதன் தான் 

        சாதி,மதம்  பார்த்து 

        தனக்குள்  சிதைந்து  கொள்கிறான் .


@     நீ வெளிச்சம்  தந்து  நிறைகின்றாய் .

        பின் மறைகின்றாய் .

        இருள் நிறை  எண்ணத்தோடு 

        இருக்கின்றானே  மனிதன் என்றும் .!

Post a Comment

1 Comments