மிதி வண்டி
கெஞ்சிக் கேட்டும்
கிட்ட வில்லை எனக்கு .
எவ்வளவு நேரம்தான்
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க
பின்னாடியே ஓடிவருவது ?
கூடப் படிக்கும் நண்பன்தான் .
ஆனாலும் இன்றுதான்
அவனே ஓட்டிப் பழகுகிறான் ?
கிராமங்களில் நூறு வீடுகளில்
ஒன்றிரண்டில்தான்
மிதி வண்டிகள் இருக்கின்றன .
பணக்கார வீட்டுப் பையன்களின்
தோழமை என்பதே கடினம் .
மிதி வண்டி வாங்கிப்
பழக முடியுமா என்ன ?
வீட்டிற்குப் போகையில் தருவானாம் .
ஓட்டிப் பார்த்தே
பல கிலோமீட்டர் வந்து விட்டோம் .
ஏதேனும்
ஒரு நடுகல்லில் கால் வைத்து ஏறி
இறங்குவதற்கு மணல் தரையோ ,
அல்லது பின் சென்று
வண்டியை பிடிக்க வேண்டும் .
கிட்டிப் பெடல்தான்
பெரும்பாலும் .
வண்டி எடுத்து வருகயில்
பல நிபந்தனைகள் .
நீ விழுந்தாலும்
வண்டி விழக்கூடாது .
உனக்கு அடிபட்டாலும்
வண்டிக்கு சேதம் கூடாது .
எல்லாவற்றிற்கும்
சரியென்று சொல்லி .......
இதோ நகர்ந்து கொண்டிருக்கிறது
கிரீச் கிரீச் ....என்ற சத்தத்தோடு ..
என்னைப் போல
மிதி வண்டியும் மூச்சு வாங்குகிறதோ ...?
மு.மகேந்திர பாபு.
0 Comments