கிணறு
---------
ஊர் நடுவே ஒய்யாரமாய்
அடிகுழாயோடு ஒரு கிணறும்,
எப்போதும் பெண்கள்
கூட்டத்தாலே திணறும்.
கட்டுடலைத் தருகின்ற விலையில்லா உடற்பயிற்சி கூடம்
சத்தமின்றிச் சொல்லித் தரும்
சமத்துவப் பாடம்.
கிராமத்து மனிதர்களின்
அன்பெனவே நீரூற்றுச் சுரக்கும்.
தொண்டைக்குள் செல்லும்போதே
புத்துணர்வு பிறக்கும்.
முங்கி முங்கி
குளிக்குது கிணற்று வாளி.
இறைக்கும் போது ஆடிவருவதைப்
பார்த்தாலே ஜாலி.
கிணற்றைச் சுற்றி
வட்டமிடுது பெண்களின் பேச்சு.
அதைக் கேட்டுக் கேட்டு
கிணற்றுக்கும் நிம்மதி போச்சு.
தேங்காய்த் தண்ணி சுவைபோல
இனிக்குது தினமும்.
குடிக்கக் குடிக்க
தித்திக்குது மனமும்.
மழைக்காலப் பொழுதிலே
மளமளவென தண்ணீர் உயரும்.
நிறைமாத கர்ப்பிணியென
வளரும் கிணறின் வயிரும்.
நின்றபடி அள்ளி அள்ளி
நிறைக்கலாம் குடத்தை.
அலை மோதும் கூட்டம்
பிடிக்கும் இடத்தை.
காலத்தின் ஓட்டத்தில்
நாட்கள் செல்ல,
ஊருக்குப் போனபோது
எட்டிப்பார்த்தேன் மெல்ல.
நீரூற்றுக் கண்மூட,
நினைக்க மறந்த மக்களாலும் ,
நனைக்க மறந்த மழையாலும்
கிணறை மண்மூட ...
கிராமத்தின் மிச்சமாய்
கிணறு நிற்க ,
புகைப்படத்திற்காக
நானும் நிற்க ...
கட்டுடலும் கரைந்தது
கவலை மட்டும் நிறைந்தது.
0 Comments