அன்றொரு நாள்

அன்றொரு நாள்

அன்றொரு நாள்
எங்கள் வீட்டின் முன்
கோழிகள் விளையாட 
முற்றம் இருந்தது.

தனக்குத்தானே 
சிறை வைத்துக்கொள்ளும்
சுற்றுச் சுவர்கள் இன்றி , 
சுகமான காற்று சுத்தமாய்
வீட்டிற்குள் நுழைந்தது.

முற்றத்தில் நெல்குத்த 
உரலும் , உலக்கையும் 
உளுந்து உடைக்க திருகும் ,
தேங்காய் அரைக்க 
அம்மியும் இருந்தன.

அம்மாவின் நேரத்தை
தொலைக்காட்சித் தொடர்கள்
ஆக்ரமிக்கவில்லை.
காலையில் வானொலியில்
தென்கச்சி கோ.சுவாமிநாதனின்
இன்று ஒரு தகவல் மூலம் 
நேரத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

வீடெங்கும் நேயர் விருப்பம்
உலா வந்தது.
வானொலி நாடகங்கள் 
இரவு உணவினை இன்பமாக்கியது.

அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு
முழுநிலாப் பொழுதினில் 
கைக்குத்தல் அரிசியில்
சத்தான கூட்டாஞ்சோறு
பகிர்ந்துண்ண முடிந்தது.

கிராமங்களில் 
எல்லா சாதியினரும் 
சந்தோசமாகத் திருவிழா 
கொண்டாடினார்கள்.

காவல்துறை நண்பர்களுக்கு
வேலைகள் அதிகம் இருக்கவில்லை.
ஆசிரியர்களிடத்தில் மாணவர்களுக்குப்
பயத்துடன் மரியாதை இருந்தது.

பதனீரும் , கருப்பட்டியும் , கள்ளும்
மக்களை மகிழ்ச்சிப் படுத்தியிருந்தன.
நஞ்சையும் , புஞ்சையும் 
நல்ல விளைச்சலைத் தந்தன. 

அன்றொரு நாள் 
மக்கள் மக்களாகவே இருந்தனர்
வாழ்க்கை முழுவதும் !

மு.மகேந்திர பாபு , 

Post a Comment

0 Comments