முள்வாங்கி

முள்வாங்கி

மூக்கையா பெரியாவின்
அசையும் சொத்துகளில்
அனைவருக்கும் தெரிந்த
ஒரே சொத்து அவரின்
அன்னாக்கயிறில்
தொங்கும் முள்வாங்கிதான்.

செருப்பில்லாத அவரது காலில்
வாச்சாத்தி முள்
வசமாய் நொடுக்கென்று குத்தினாலும் ,
சிறு சத்தமுமின்றி வெடுக்கென்று
புடுங்கிப் போட்டு 
போய்க்கொண்டே இருப்பார்.

பனை மட்டை போன்ற
தட்டையான அவரது காலின் அடியில்
முட்கள் குத்திய தடம்
பொத்தலாய் நிறைந்திருக்கும்.

முனை முறிந்த முட்களை
எடுக்க ஊரார் தேடிவரும்
ஒரே ஆள் மூக்கையா பெரியாதான்.

குத்தவச்சு உக்காந்து ,
வந்தவரின் காலைத்தூக்கி 
தன் முட்டியில் வைத்து ,
ஊர்க்கதை , உலகக்கதை என 
ஏதோவொன்றைப் பேசி 
வெடுக்கென நெம்பிவிடுவார்
முள்ளை தன் முள்வாங்கியால்.

ஊக்குகளால் 
எடுக்க முடியாத முட்கள்
மூக்கையாப் பெரியாவிடம் 
மூச் காட்டாமல் சரணாகதி ஆகிவிடும்.

மொளச்சு மூனு இலை விடாத
சின்னஞ்சிறுசுகளும்
கைலி கட்டிச் செல்கையில்
ஊதா நிற டவுசர்ஒன்றையே 
தன் உடுப்பாக்கி ஊருக்குள்
உலா வருவார்.

தலப்பாகட்டுக்குள் 
இடது காதோரம் 
சொக்கலால் பீடியும் ,
வலது காதோரம் தீப்பெட்டியும்
வசந்த மாளிகையில்
வீற்றிருப்பதைப் போல உட்கார்ந்திருக்கும்.

வெள்ளை ஆட்டு வாலென
இருக்கும் அவரது மீசயின் நடுவில்
பீடிக்கங்கின் வெம்மைபட்டுச்
சற்றே தீய்ந்திருக்கும்.

மேச்சட்டை இல்லாத
அவரது உடம்பு 
எல்லா காலநிலைகளையும் 
ஏற்றுக் கொண்டது.

கிராமத்து நினைவுகளில்
எப்போதாவது
ஆழ்ந்திருக்கும் போது
மூக்கையாப் பெரியாவும் ,
அவரது முள்வாங்கியும் 
நிழலாடிச் செல்கிறது
அவரது மறைவுக்குப் பின்பும் !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

9 Comments

 1. எங்களையும் கிராமத்தை நோக்கி அழைத்து சென்றது. 👌

  ReplyDelete
 2. முள் வாங்கி மூக்கையா பெரியாவின் கதையை சுருக்கமாக முடித்து விட்டீர்களே ஐயா!!!!... கிராமத்து வாழ்வியலில் மேலும் பல அற்புதமான மனிதர்களின் வாழ்க்கையை படைப்புகளாக வழங்க வேண்டுகிறேன்...

  ReplyDelete
 3. முள்வாங்கி கவிதை மனதில் வாச்சாத்தி முள்ளாய் பதிந்தது.....குறிப்பாக பீடிக்கங்கில் தீய்ந்த மீசை........Supriuu

  ReplyDelete
 4. அண்ணா அடு‌த்த மேலாண்மைபொன்னுசாமி நீங்கதான் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   Delete