வெஞ்சனம்

வெஞ்சனம் வைக்கலயாம்மா ?

வெஞ்சனம் வைக்க நேரமில்லெ.
அஞ்சறைப் பெட்டியில காசு இருக்கு . உனக்கு தொட்டுக்கிற வேணும்னா வாங்கிக்கோ எனச்சொல்லிவிட்டு , தூக்குச்சட்டியில் கம்மங்கஞ்சிய அடைச்சு வச்சு கிளம்பிவிட்டாள்.
 அம்மா.

ஹையா ... எங்கே அஞ்சறப் பெட்டி எனத்தேடி அதுக்குள்ள இருந்து அஞ்சு பைசா , பத்துப்பைசா , இருபது பைசா கூட்டணிக்குள் ஒரு பத்துப் பைசாவ எடுத்திட்டு , அன்னாக் கயிறிலிருந்து விடுபட எத்தனிக்கும் டவுசர கையில் தாங்கிக் கொண்டு கடைக்கு மேமூச்சு கீமூச்சு வாங்க நின்னு ,

இந்தாங்க , இந்த காசு பூராத்துக்கும் அச்சு வெல்லம் கொடுங்க...

எத்தன காசு வச்சிருக்க ? ஏன்டா இருக்கறதே ஒரு பத்து பைசா.இதுல பூராத்துக்கும் உனக்கு வேணுமாக்கும் ? இந்தா ஒரு அச்சு வெல்லக் கட்டி.

வாங்கினேன் என்பதை விட புடுங்கிக்கிட்டு ஓடி வந்தேன் எனுபதுதான் சரியாக இருக்கும்.

இடுப்பளவு ஒசரமுள்ள அந்த மண்பானையில் கம்மங்கஞ்சி கம்மென்று கெடந்தது. அகப்பையில் ஒரு அள்ளு. ஒரு கவளம் போல வந்த அந்தக் கட்டியை தட்டில் போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி மெல்லக் கரைக்க நாக்குல எச்சி ஊறும். 
தட்டுக்கும் வாயிக்கும் ஒரு இணைப்புப் பாலமாக கஞ்சி கரைந்து கொண்டிருந்தது. ஒரு வா கஞ்சிக்கு ஒரு கடி வெல்லம். ஆகா என்ன சொவ.என்ன சொவ. தின்னு முடிச்சப் பிறகு வயிறு சின்ன முட்டிமாதிரி முட்டிக்கிட்டு நின்னது.மண் பானயில உள்ள தண்ணிய எடுத்து மொடக் மொடக்னு குடிக்க , வாயிலிருந்து ஒழுகிய தண்ணி , நெஞ்சுக்கூட்டின் நடுவே வகிடெடுத்தது போல ஓடி , தொப்புளை நனைத்து , கீழேயும் நனைத்தது.

கம்மஞ்கஞ்சி தான் அப்பலாம் தெனமும். அரிசி சோறு எப்பவாச்சும் தான். நல்லது கெட்டதுனா அரிசிச் சோறு. அதிலயும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு கெடா வெட்டுனா கண்டிப்பா அரிசிச் சோறுதாம்.

வெளாத்தி கொளம் போயி அரிசி மூட எடுக்கனும். எல்லார் வூட்லயும் நெல்லு இருந்தாலும் , அதப் பக்குவம் பண்ணி அவிச்சு காயப் போட்டு , எட்டயாரம் கொண்டுபோய் அரைச்சு ... பேசாம ஒரு மூட அரிசியவே வாங்கிரலாம்.

ஆனாலும் ஊர்க்குள்ள எல்லாருமே கொறயா சொன்ன ஒன்னு , இந்த ஆட்டுக்காரி இருக்காளே ! அவ கெடா வெட்டு வச்சா , சூட்டடி நெல்ல அவிச்சு அந்த அரிசில சோத்தப் போட்டு அசிங்கப் படுத்திட்டாப்பா அப்படிங்கிறதுததான்.

மூடை அரிசி எடுக்க மாச்சப்பட்டு , சூட்டடி நெல்லுல சோறப்போட்டா காறித் துப்பமாட்டாகளா என்ன ? ஊருக்குள்ள ஒரு வாரம் இந்தப் பேச்சுதான்.

கம்மஞ்சோற தாத்தா சாப்பிடுற அழகே தனிதான். கும்பாவுள கரச்சு , லோட்டாவுல ஊத்தி வாயில ஊத்தும் போது , கம்மா விரிவுக்குள்ள மழத்தண்ணி போனா எப்படி லொடலொடனு சத்தம் வருமா அப்படி வரும்.இப்ப இருக்கிற எளசுகளுக்கு கும்பான்னா என்ன தெரியப் போகுது ? ரம்பான்னா தெரியும்.

இப்பலாம் காட்ல கம்பு வெள்ளாம ரொம்ப கொறஞ்சு போச்சு.சத்தில்லாத அரிசி சோத்தத் தின்னுட்டு எல்லாம் புல்தடுக்கி பயில்வாங்களா இருக்குதுக.சத்தான கம்மங் கஞ்சி தெருவிலயும் , சோறு ஏசி ஓட்டல்லயும் கெடைக்குது.என்னத்தச் சொல்ல ?

மு.மகேந்திர பாபு.

Post a Comment

10 Comments

  1. Replies
    1. மிக்க நன்றி நண்பா.

      Delete
  2. அக்காலத்திற்கும் இக்காலத்திற்கும் ஒப்பீடு மிகவும் அருமை!!!! கும்பா& ரம்பா ஒப்பீடும் மிகவும் அருமை!!! அக்கால வளமை, செழுமை , இயல்பான வாழ்க்கை மீண்டும் வராதா???? என்ற பெருமூச்சு தான் இக்கேள்விக்கு விடையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. பழமையான உணவில் பலமும் நலமும் இருந்தது. இன்று கும்பாவும் இல்லை . ரம்பாவும் நடிப்பில் இல்லை.

      Delete
  3. கம்மகஞ்சிக்கு.....அச்சு வெல்லம்..ஆஹா.......இனி வரும் பதிவுகளும்...அச்சு வெல்லமாய் இனிக்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அச்சுவெல்லமாய் அடுத்தடுத்த பதிவுகளும் வரும். மிக்க நன்றி.

      Delete
  4. நமது காலத்து கிராமத்து வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள்.இந்தப் பதிவுகள் இக்காலத்தில் அவசியம் தேவை

    ReplyDelete
  5. வணக்கம். மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete