சாவு வெள்ளாமை

சாவு வெள்ளாமை

கோவைப் பழமென
மிளகாய்ப் பழம்
கொத்துக் கொத்தாத் தொங்குது.
கருவாயன்  வீட்டில்
நெறஞ்சிருந்த துக்கம் மறஞ்சு
சந்தோசம் தங்குது.

சில வருசமா
அந்த வயல் தரிசு.
இப்ப அடிச்சிருக்கு
தாறுமாறா பம்பர் பரிசு.

நட்டுவச்ச செடியெல்லாம் 
பூக்கும் வரை நிக்காது.
பூக்கும் பூவெல்லாம்
காயாக மாறாது.
காயாக மாறினாலும்
பழமாகத் தேறாது.

இது போன வருச நெல.
இன்னிக்கு 
உச்சத்தில இருக்கு 
மிளகாப் பழ வெல.

சாத்தூரு மார்க்கெட்டுக்குக்
கொண்டு போக 
தனி வண்டிதான் பிடிக்கணும்.
சட்டுப் புட்டுனு
பழம்பறிச்சு களம்பாத்து
வத்தலா முடிக்கணும்.

ஊருசனம் 
ஏதேதோ சொல்லுது.
சிலது வார்த்தையால
வாய்க்குள்ள அவன் பொண்டாட்டிய
கொல்லுது.

ஏற்கனவே இருக்குது ஏழு புள்ள...
இதுல இப்ப ஒன்னு
வயித்துலன்னா
என்னன்னு சொல்ல ?

கமுக்கமா முடிக்கலாம்னுதான்
கருவக் கலைக்க 
மாத்திரயப் போட்டா.
கரு வளந்து போனதால
இரத்தப்போக்குல
அவளும் போயிட்டா.

அழுகுரலும்
ஆவலாதியுமாய்
கடந்து போச்சு ஒரு வருசம்.
ஆசுவாசப்படுத்தி
மூத்த மகளுக்கு
போட்டுவிட்டான் கல்யாணப் பருசம்.

கலப்பையைத் தூக்கிக்கிட்டு
கவலையோட போனவன்தான் ,
இப்ப வெள்ளாமையப் பாத்து
களிப்புலதான் நடக்கிறான்.

வயல் நிறைய
வெடித்திருக்கும் பருத்தியெல்லாம்
பொஞ்சாதி முகமா
இருப்பதா நெனச்சு
மகிழ்ச்சியில கடக்கிறான்.

கண்ணீரோடு
கன்னத்தில ஓடுது வேர்வ.
வீட்டுப் பக்கம
திரும்புது அவன் பார்வ.

மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments