தப்புக்கிழங்கு

சேக்காளிகள் வந்துட்டாங்க. உத்தி பிரிச்சாச்சு இன்னார்க்கு இன்னாருனு. ஒருவனிடம் சாக்கு , மற்றவனிடம் மம்பட்டி. வேடபட்டி ஊருக்கு தப்புக் கிழங்குகளை வெட்டி எடுக்க. சனி , ஞாயிறுகளைச் சந்தோசப் படுத்திய பால்ய செயல்களில் இதுவும் ஒன்னு.

சீனிக்கிழங்குகளை வெட்டி  எடுத்த பின்பு , அதில் தப்பிய கிழங்குகள் சிறிதாய் முளைக்கூறிக் கொண்டு வானத்தை எட்டிப் பாக்கும். அப்படி வெளிவரும் கிழங்குகளை யார் வேணும்னாலும் வெட்டி அதாவது தோண்டி எடுத்துக் கொள்ளலாம். 

குறுக்குப்பாதையான ஒத்தையடிப் பாதையில் நடந்தோம். பத்துப் பேராவது சேந்துவிடுவார்கள். ஏதேனும் கத பேசிக்கொண்டே நடப்போம். ஆத்தக் கடந்தா தோட்டம்தான். ஆத்தில பெரும்பாலும் தண்ணி போய்க்கொண்டிருந்த காலமது. முழங்கால் அளவு தண்ணியில நீந்திக் கொண்டும் , உருண்டும் , புரண்டும் போவோம். 

எந்த ஊர்ப் பையகபா நீங்க ?

பொன்னையாபுரம்.

என்னவா வந்திருக்கிங்க ?

கெழங்கு வெட்ட ?

எங்க ஊரு வண்டிகதான் உங்க ஊருக்கு வருமே விக்க ?

ஆமா !

அப்றம் என்ன ? 

நீங்க ஊருக்கு வந்து ஓசியாவா கொடுப்பீக ? நெல்லு , பருத்தி இத வாங்கிட்டுத்தான கொடுப்பீக ? 

ஆமா. 

இங்க ஓசியில்ல ...

சொல்லிக்கொண்டே முளை தெரிந்த கிழங்குகளை மம்பட்டி வைத்துள்ளவன் மண்ணக்கிளற , சாக்கு வச்சிருக்கவன் எடுத்து உள்ளே போட ... சில மணி நேரத்தில் சாக்கின் கழுத்தளவு கிழங்குகளை வெட்டி  நிரப்பி விடுவோம்.

சாக்கின் கழுத்தை ஒருவன் பிடித்துத் தூக்கி , தோளில் போட்டுக் கொள்ள , மற்றவன் சாக்கின் கீழுள்ள இரு முனைகளையும் அண்டக் கொடுத்தவாறே ஊர் வரை தூக்கி வருவோம்.

இடையில் பசி , தண்ணி என்றால் ஏதாவது ஒரு வெடலைப்பனையில் ஏறி , கருக்கு மட்டையால் குலையை அறுத்து , நுங்கு வெட்டித் தின்போம். யார் பனையாக இருந்தாலும்தான். யாரும் சொல்ல மாட்டார்கள். பசிக்குத்தான திங்கட்டும் . எம்புட்டுப் பன இருக்கு. நாலு கொலய வெட்றதினால என்ன நட்டம்  வரப்போகுது ? இதான் பனைக்காரர்களின் பேச்சாக இருக்கும். பன உள்ளவன் பணக்காரனா இருக்க மாட்டான்க. ஆனா நல்ல மனக்காரனா இருப்பாக.

லீவுல ஊருக்கும் போது அப்பப்ப பனைகளைப் பாப்பேன். அன்றிருந்த கும்பப் பனகள காணொம். வெடலப் பனைகள காணோம். கள்ளேந்தி தலக்கனமாய் நின்ற கத்தாளப் பனகள காணோம். மொத்தத்தில ஊரு இப்ப ஊராவே இல்ல. பனை இல்லாததால !

மு.மகேந்திர பாபு.

Post a Comment

7 Comments

  1. காலம் கடந்து மலரும் நினைவுகளாய்... அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. பால்ய காலத்து நினைவுகள் பச்மையாய் நெஞ்சில் இன்னும் நிலைத்து நிற்கின்றன ஐயா.மிக்க நன்றி.

      Delete
  2. தப்பிய சீனிக்கிழங்கு தப்புக்கிழங்கானது......அதை உண்டதாலோ என்னவோ.....இன்று நீ........சீனித்தமிழுக்கு சொந்தக்காரன் ஆனாய்.......நினைவுகள் என்றும் இனிமை

    ReplyDelete
    Replies
    1. ஆகா ! அருமையான வாழ்த்து. மிக்க நன்றி.

      Delete