ஆறு ஆறும் , ரெண்டு பேரும் ...
இதுதான் பெரியகுட்டிமடுவா ? என்று நானும் , நண்பன் கருப்பசாமியும் பயணியர் நிழற்குடையில் அமர்ந்திருந்த பெண்மணியிடம் கேட்டோம்.
கண்ணு , இது கண்கட்டிஆலா விலக்கு. அந்த ஊரு கண்கட்டி ஆலா. இப்ப நீங்க வந்த பஸ் போறது அருநூத்துமல.
கண்கட்டிஆலா வா ? எங்களுக்குக் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது.
அக்கா , பெரியகுட்டிமடுவு எந்த ஊரு ?
அந்தா தெரியுதே ஒரு மல ... அது சின்னக்குட்டிமடுவு . அதுக்கு அந்தாண்ட உள்ள மலதான் பெரியகுட்டிமடுவு.
எத்தன கிலோமீட்டர்கா ?
பக்கந்தான் கண்ணு.அஞ்சு கிலோமீட்டர் .
என்னது ? பக்கந்தான் அஞ்சு கிலோமீட்டரா ?
ஆமா கண்ணு.
வேற பஸ் இல்லயா ? ஆட்டோ , மினிபஸ் வராதா ?
எதுவுமே இல்ல கண்ணு. ஆமா நீங்க யாரு ? யாரப் பாக்க வந்தீங்க பெரியகுட்டிமடுவுக்கு ?
நாங்க ரெண்டுபேரும் வாத்தியார் வேலக்கி பெரியகுட்டிமடுவுக்கு வரப்போறோம்.
ரொம்ப சந்தோசம். ஒரே ஒரு பெரிய டீச்சருதான் அங்க வேலபாக்க வராக. நீங்க சின்ன வாத்தியாருங்களா ?
ஆமாக்கா.
கொஞ்ச நேரம் இருங்க. பெரிய டீச்சரு இந்தப் பஸ்லதான் சேலத்துக்குப் போவாங்க. பஸ் திரும்பி வரட்டும். இப்டி உக்காருங்க கண்ணுகளா என்றார்.
என் நண்பன் கருப்பசாமி சொன்னான். ஏம்பா இந்தப் பள்ளிக்கூடத்தில வேலக்கிச் சேரணுமா ? தினமும் பத்து கிலோமீட்டர் நடந்து போயிட்டு வரமுடியுமா ? சுத்திச் சுத்தி மலைகளா இருக்கு.
பேசாம நம்மூர்க்கே ( எட்டயபுரம் ) போய்ட்டா என்ன ? அடுத்த கவுன்சிலிங்கல பாப்போமே என்றான்.
நம்ம அப்பா , அம்மா என்ன வேலடா செய்றாக ?
ஏம்பா ... விவசாயம்.
விவசாயம் செய்ய கீகாடு , மேகாடுனு ஒரு நாளக்கி எவ்ளோ தூரம் போவ ?
நாள் முழுக்க நடக்கத்தான செய்றோம். சாப்பிடற நேரம் தவிர ?
அப்றம் என்ன பத்து கிலோமீட்டர் நடக்கப் பயப்படுற ?
அப்டியில்ல . மல ஊரா இருக்கு. நம்மூரு காஞ்சபய ஊரு. இங்க ஜில்லுனு இருக்கு.
நமக்கென்ன புள்ளயா குட்டியா இப்ப ? நம்ம அம்மா , அப்பா செஞ்ச புண்ணியத்தில நமக்கு இந்த வேல கெடச்சிருக்கு. இத ஏன்டா வேண்டாம்னு சொல்லணும் ? நான் வேலயில சேருதேன். இஷ்டம்னா இரு. இல்ல நான் ஒத்தயில வேலக்கிப் போறேன்.
சரி சரி.
இங்க பார்ரா. நாம கல்யாணம் முடிக்கிற வரக்கி எங்க வேலக்கிப் போட்டாலும் போகலாம். எல்லாம் நமக்கு சாதனைக்காலம். அதுக்குப் பிறகு சோதனைக்காலமும் , வேதனைக் காலமும்.
சரி. என்னதான் நடக்குதுனு பாப்போம் என்று பேசிக்கொண்டிருந்த போது ஒரு அம்மையார் வந்தார்.
அவர்தான் அப்பள்ளியின் பெரியடீச்சர் ( தலைமை ஆசிரியை ) என்று அந்த கிராமத்துப் பெண்மணி சொல்ல ,நாங்க ஒரு வணக்கம் வைத்தோம்.
எங்களப் பாத்ததும் அந்த அம்மாவிற்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.
சொல்லிக்கிட்டே இருந்தாங்கபா. ரெண்டு சின்ன வாத்தியாருங்க வராங்கனு. நல்லதாப் போச்சு நீங்க வந்தது. இப்பதான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்கு என்றார்.
ஏன் டீச்சர் நீங்க தினமும் நடந்தா போய்ட்டு வாறீங்க ?
ஆமா தம்பி.
ஆட்டோ பிடிச்சுக்கலாமா ?
ஆட்டோலாம் போகாது.
ஏன் ?
பெரியகுட்டி மடுவுக்குப் போற வழியில ஆறு ஆறு இருக்குது என்றார். ஆறும் சின்ன ஆறுகதான் என்றார்.
என் நண்பன் முகத்தில் ஒரு பீதி மையம் கொண்டிருந்தது.
- தொடரும்...
மு.மகேந்திர பாபு.
1 Comments
ஐயா.. அருமையான...ஆபத்தான....பயணத்தை.. அழகான நடையில்....வாழ வாழ்த்து ஐயா
ReplyDelete