மனம்

மனம்

என் மனசு
குரங்கென
தாவிக் குதிக்கத் தொடங்கியது.
அதன் கையில்
ஒரு புத்தகத்தைக் கொடுத்தேன்.
சற்றே வாசித்துவிட்டு
கொஞ்சம் யோசித்தது.

தொலைக்காட்சி தொடரில்
கொஞ்ச நேரம் ஆழ்ந்திருந்தது.
நாடகத்திலிருந்து செய்திக்கும்,
செய்தியிலிருந்து பாட்டுக்கும் ,
பாட்டிலிருந்து விளையாட்டிற்குமென
விளையாட்டுக்காட்டிக் கொண்டிருக்கையில்
மகள் வந்து 
மோட்லு பட்லு விற்கு மாற்றி
என் மனதை மெல்ல மாற்றினாள்.

டேய் பூசணிக்காய் மண்டயா ...
ஜான் ஆகப் போறான் டான் ...
என்னோட இருவது வருச எக்ஸ்பீரியன்சில ...
டேய் பத்லு வயிறு காலியா இருக்கும் போது 
என் மூள வேல செய்யாதுனு உனக்குத் தெரியாதாடா ...
மோட்டு இந்தாடா சமோசா ...
மோட்டு என் உயிர் நண்பா
உயிருக்கு உயிரான சகோதரா ...

என நீளும் அந்த உரையாடல்களில் 
மனம் சற்றே நிலைத்தும் ,
திளைத்தும் போயிருந்தது.

மகளும் நானும்
தள்ளாடிப் போனோம்,
மனைவியின் கையில்
ரிமோட் அடைக்கலமாகி
கிச்சன் கலாட்டாவில்
ஐக்கியமான போது !

மீண்டும் ரிமோட்டை கைப்பற்றும்
சக்தி மகளுக்கு மட்டுமே உண்டு
நமக்கில்லை என
நன்கு தெரிந்து வைத்திருந்தது என் மனம்.

கைபேசியை எடுத்து ,
இணையத்தைத் தொடங்கி
இதயத்தை அதற்குள் 
முடக்கியது.

முகநூலில் விழுந்திருந்த
லைக்கில் லைட்டாய் வழுக்கி ,
வாட்சாப் செய்தியில்
வாய் பிளந்து ,
ஹைக்கில் கண் சிமிட்டி 
சற்றே பொழுதோடு
புதைந்திருந்தது என் மனம்.

பின் வாகனத்தை எடுத்து ,
வலம் வரத் தொடங்க
வாகனத்தை விட மனம்
வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது.

கட்டுப் பாட்டுக்குள் 
கொண்டு வர வேண்டும்
வாகனத்தை அல்ல...
என் மனதை !

மு.மகேந்திர பாபு , மதுரை.

Post a Comment

0 Comments