பூமியில் வாழும் சாமி !
*பூமியில வாழும் சாமி ! - இசைப்பாடல்*

பூமியில வாழுகிற சாமி பாருங்க !
பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க ! - விவசாயி
பூமியில வாழுகிற சாமி பாருங்க !
பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க !

வரப்பச் சீவும் கைகள்தானே கறைபடாத கை
வயல் வெளியில் ஏரை நீயும் கொண்டு வந்து வை
ஆடும் மாடும் எங்களோட சொந்த பந்தம் 
அனுதினமும் வயல் வெளியில் வேர்வ சிந்தும் 

விதை நெல்லக் கொண்டு வந்து வெதச்சுப் போடுறோம் !
வீட்டுலதான் விசேசம்னா ஒன்னாக் கூடுறோம் !
மழத்தண்ணி எங்களத்தான் வாழ வைக்குதே !
மத்த மனுசங்கள நாங்க நாளும் வாழ வைக்கவே !

பருத்திப் பூவு பூத்துக் கெடக்கு செடியில் தானுங்க !
காய்ச்சதுமே காசாக மடியில் தானுங்க !
பொண்ணுங்களும் ஏர்க் கலப்ப ஓட்டும் பாருங்க !
பூவப்போல இருக்குமுங்க எங்க சோறுங்க !

வெண்டச்.செடியும் கத்தரியும் கண்ணப் பறிக்குதே !
காட்டுமல்லி வாசம் கொஞ்சம் நம்ம மறிக்குதே !
சோறு போடும் முதலாளி நாங்க தானுங்க !
வேற வேல பாக்கப் போனா சோறு ஏதுங்க ?

விவசாயி இல்லையினா நாடு ஏதுங்க ?
வயல் வெளியில் வீம்புக்குனு வீடு ஏனுங்க ?
விளை பொருள விலை கொடுத்து வாங்கிப் பாருங்க !
விவசாயி உயர்ந்திடுவான் நீங்க பாருங்க !

*பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.*

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

Post a Comment

0 Comments