மொகரக்கட்ட

 ' மூஞ்சியவும் , மொகரக்கட்டயும்
 பாரு , தீயத் தாண்டுறாராம்... மண்டயப் பாரு ... சூம்புன பனங்கொட்ட மாதிரி ' என்ற அப்பாவின் வசவுகளோடு செவுளச் சேத்து ஒரு இறுக்கும் கிடைத்தது. அதன்பின்தான்  எனக்கு நினைவு வந்தது.

கார்த்திகைத் தீபம் மூனுநாளாக் கொண்டாடுவோம் எங்கூர்ல. மாப்ளமார்களின் தலயில விரட்டி விரட்டி  ஒட்டுப்புல்லத் தேய்ப்போம்.

சாயந்திரம் முடிஞ்சு இருட்ற நேரத்தில விளக்கு வச்ச உடனே , சோளத்தட்டயில சூந்தக்கட்டி , நுனியில சில்லாடை , ஓலய வச்சிக் கட்டி மந்தையம்மன் கோவில் திடல சேக்காளிப் பசங்களோடு சுத்த ஆரம்பிப்போம். 

தெருவெல்லாம் சுத்தி , கம்மாக்கரையில ஒரு ரவுண்ட் போயிட்டு சூந்து அளவு குறைஞ்சு கைக்குப் பக்கத்தில வரும் போது கோவில் திடல்ல எல்லாரும் குவியலாப் போட்டு அதத்தாண்டுவோம்.

தீபாவளிக்கு வெடிச்ச வெடிகளின் மிச்சம்சொச்சத்த அன்னிக்கு வெடிப்போம். சரவெடிகளில் வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து டவுசர் பைக்குள் பாதுகாப்பது என்னைப் போன்ற சிறுவர்களின் பிரதான வேல. அப்டி நாலஞ்சு வெடிக்காத வெடிகள் என் டவுசர் பைக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

கொளுந்து விட்டெரியும் தீயை வரிசையாகப் பசங்க தாண்டிவர, எனது முறை வந்த போது நானும் தாண்ட ஓடி வந்தேன். பாதி தீயைத் தாண்டும் போது டவுசர் பைக்குள் போட்டிருந்த வெடிக்காத வெடிகள் டப்டுப் பென வெடிக்க , என்ன நடக்குதுனு தெரியாமல் தீயின் நடுவில் விழ , முடியெல்லாம் கருக , வீட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டார்கள். அதிர்ச்சியில் மயங்கிவிட்டேன்.

மயக்கம் தெளிந்து எழுந்த உடன்தான் என் அப்பா பாராட்டிய பாராட்டுதான் முதல் பத்தி.கால் நூற்றாண்டைக் கடந்தாலும் ஏதோ நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.

மு.மகேந்திர பாபு.

Post a Comment

4 Comments

  1. ...கிராமத்து சொல்வழக்கு.....அருமை...

    ReplyDelete
    Replies
    1. இயல்பான நடையில் பேச்சு வழக்கு சொற்கள் அருமை!!!!!!

      Delete
    2. மிக்க நன்றி.

      Delete
    3. சிறு வயது ஞாபகம் வந்த விட்டது. அருமை.

      Delete