லீவு

கட்டுத்தரையில் படுத்திருந்த மாடுகள் என்னைப் பாத்தவுடன் தலயத் தூக்க ஆரம்பித்தன. எப்படா இவன் கழுத்துக் கயிற அவுத்து விடுவான் என்ற ஏக்கம் அவற்றின் பார்வையில் தெரிந்தது.எல்லாம் நாட்டு மாடுகள். 

அதான் அவுத்து விட்டேன்ல.எந்திரிக்காம இன்னும் ஏன் படுத்துக் கெடக்க ... வாலைப் பிடிச்சு முறுக்குனாத்தான் எந்திரிப்பியோ ? சொல்லின் வேகமறிந்து சில மாடுகள் எந்திருக்கும்.

இம்பா... தை ...தை... எந்திரில வெள்ளைப் பயலே ... உன்னயத்தான்  கட்டியே போடலெ.அப்றம் ஏன் எந்திரிக்க மாட்டிக்க ? தலயத் தூக்கிப் பாத்த வெள்ளப் பசு , லேசாக தலய சிம்பியது. அதன் அர்த்தம் ,பக்கத்தில உக்கார வேண்டுமென்பது. உனக்கு வேற வேல இல்ல ? பட்டுனு எந்திரி. நேரமாச்சு.இன்னிக்கு சின்னையாரம் காட்டுக்கு மேயப் போகனும்.

ம்கூம்.எழுந்த பாடில்லை. திரும்பவும் பாத்தது. அய்யய்யே ! சரி சரி எனச் சொல்லி அதன் பக்கத்தில் உக்கார , வாகாக என் மடி மீது தலய வைத்து நீட்டியது.

கழுத்துக்கு கீழுள்ள தாடையை மெல்ல தடவிவிட இன்னும் கொஞ்சம் தலயை மேலே தூக்கியது. நெத்தியில அஞ்சு விரலால சொறிய தன் கண்களை மூடி மூடித் திறந்தது.

என்னடா பண்ற ? எல்லா மாடும் டவ்வில தண்ணிய குடிச்சு கிளம்பிருச்சு. இதுக்கு சொறிஞ்சு விட்டுக்கிட்டு இருக்கனு அம்மா கேக்க , இது எங்க என்னய விடுது எனச்சொல்லி தலயத் தூக்கி எந்திரிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

ஒரு நண்பனைப்போல , ஒரு தாயைப் போல , தந்தையைப் போலதான் எனக்கும் மாட்டிற்குமான பாசம்.

பள்ளிக்கூடம் விட்டதும் , வீட்டிற்கு வந்து பையைப் போட்டுவிட்டு ஒரு செம்புல தண்ணியும் , சுண்டான்ல  உள்ள எண்ணெயும் எடுத்துக்கிட்டு அது மடிக்கு கீழே குண்டிப் பலகையப் போட்டு உக்காந்திருவேன். 

செம்புத் தண்ணிய காம்புல ஊத்தி அலசி , சுண்டால உள்ள எண்ணெய லேசா தடவினதும் , அதன் மடி பெருக்க ஆரம்பித்து விடும். அப்றம் என்ன ? நேரடியாக காம்பின் மீது வாய்வச்சு அப்படியே குடிக்க ஆரம்பித்து விடுவேன். மத்த பசுக்கள் அனுமதிக்காத போது இந்த பசு மட்டும் என்னை அனுமதிக்கும் பால் குடிக்க. அதனால் அது எப்போதும்  எனக்குச் செல்லம்.

கிளம்பியாச்சு. ஜோல்னா பையில் ரெண்டு மூனு தினமலர் சிறுவர்மலர் புத்தகங்கள். ஒரு நோட்டும் பேனாவும். தின்பதற்கு வறுத்த அரிசி கொஞ்சம். கேன்ல தண்ணி. எல்லாம் ரெடி. எங்க போக ? வேறெங்க ...மாடு மேய்க்கத்தான்.

துண்டை தலப்பாவாக கட்டிக்கொள்ள , ஆளுயர கம்போடு , ஜோல்னா பை கழுத்தில் குறுக்கு வசமா கெடக்க , சன்ன அடித்துக்கெண்டே ஜாலியா நடக்கத் தொடங்கினேன்.

ஆடு மேய்ப்பதற்கும் , மாடு மேய்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கு. ஆடு மேய்க்கிறவன் நடந்துகிட்டே இருக்கனும். மாடு அப்படியில்ல . நல்லா புல் இருக்கிற தரிசில விட்டம்னா வயிறு நெறயற வர அங்கேயே நின்னு மேயும். வெட்டிக் கிடக்கும் முள்கவையை தூக்கிவிட்டா , அதுக்குள்ள உள்ள புல்லே ஒரு மாடு வயிறு நெறயப் போதும்.

அப்றமென்ன ? பனமரத்தடி நிழல்ல உக்காந்து சிறுவர்மலர்ல உள்ள படக்கதைகளையும் , கதைகளையும் ஒன்னு விடாம படிச்சிருவேன். பள்ளிக்கூடம் போகும் போதும் , வரும் போதும் சேக்காளிகளுக்கு கத சொல்ல. மனசில என்ன தோணுதோ அத கவிதைனு நெனச்சு எழுதுவேன். இப்படித்தான் பால்யத்தில சனி , ஞாயிறு லீவு சந்தோசமா போச்சு.

மு.மகேந்திர பாபு.
26 - 05 - 17.

Post a Comment

0 Comments