நேமிக்கம் - சிறுகதைகள் - மு. மகேந்திர பாபு - ஒரு பார்வை - பொன். குமார்
எழுத்தாளர் மு. மகேந்திர பாபுவின் இலக்கியத் தளம் என்பது கவிதை, கட்டுரை, பாடல்கள் என பரந்தது. தற்போது கதைத் தளத்திலும் தன் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். தமிழ் ஆசிரியராகவும் தன் பணியைத் தொடர்ந்து வருகிறார். ஐந்து தொகுப்புகளை வெளியிட்டவரின் ஆறாம் தொகுப்பு நேமிக்கம் என்னும் சிறுகதைத் தொகுப்பு.
நேமிக்கம் என்பது தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களின் வட்டார வழக்கில் நேர்த்திக்கடன் அல்லது தெய்வ வழிபாட்டிற்காக மேற்கொள்ளப்படும் வேண்டுதல் என்பதைக் குறிக்கும். நேமிக்கம் என்பதே முதல் சிறுகதை. நேமிக்கம் செலுத்துவது என்பது எளிதானதல்ல. நேமிக்கம் செலுத்துவதற்குள் மாடசாமி என்னும் மனிதன் படும்பாட்டை நேமிக்கம் கதையில் அனுபவ ரீதியாக சொல்லியுள்ளது போல் இருக்கிறது. ஊரை அழைக்க வேண்டும், வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும், உறவினர்களுக்கு விருந்தளிக்க வேண்டும். கிடா விருந்து என்றாலே சாராயம் குடித்து விட்டே வருவார்கள். சாராயம் குடித்து விட்டால் கலாட்டா செய்வார்கள். கலாட்டா செய்வதால் நேமிக்கம் வைக்கும் ஆசையே வராது. இருந்தாலும் நேமிக்கம் காலங்காலமாக தொடரவேச் செய்கிறது என்கிறது நேமிக்கம் கதை.
விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளின் நிலை இன்று எப்படியுள்ளது என விவரித்துள்ளது மூட்டம் என்னும் சிறுகதை. பயிர் செய்யாததால் தரிசு நிலத்தில் முள் மரங்கள் முளைத்து கிடக்கின்றன. அந்த முள் மரங்களை வெட்டி வீட்டிற்கு எடுத்து வந்து மூட்டம் வைத்து கரியாக்கி அதை விற்பனை செய்து பிழைப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை உருக்கமாக எழுதியுள்ளார். செல்லையாவின் பாத்திரம் சிறப்பு. இச்சிறுகதை எழுத்தாளர் தனுஷ் கோடி நினைவு சிறுகதைப் போட்டி நூலில் இடம்பெற்றது. இத்தலைப்பிலயே தொகுப்பும் வெளியாகியுள்ளது.
இளங்குட்டிகள் கதை வித்தியாசமானது. கீழ்த் தெரு, மேல் தெரு என எல்லா தெரு சிறுசுகளும் ஒன்றாக இருந்தால், விளையாண்டால் பெருசுகள் சேர விட மாட்டார்கள். பிரித்து வைக்கவே பார்ப்பார்கள். இக்கதையில் பெரியா என்னும் பெருசு எல்லா சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து ஆக்கித் தின்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். வாசிப்பவரையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறார். சொக்கன், மிக்கேல், டொணக்கு, முனுசாமி, கருப்பசாமி என்னும் சிறுசுகள் பல தெருக்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பள்ளியில் ஒன்றாக படிப்பவர்கள். ஒன்றாக இருப்பவர்கள். இவர்களை வைத்தே நன்றாக எழுதப்பட்டுள்ளது கதை.
கண்மாய் ஓர் எதார்த்தமான சிறுகதை. நீர் நிறைந்து காணப்படும் கண்மாய் நீர் வற்றி இருப்பதையும் கூறுகிறது. கண்மாயில் நீர் குறைந்த போது மக்கள் நீரை பங்கிட்டு விவசாயம் செய்வதையும் பேசுகிறது. கண்மாய் விவசாயத்திற்கும் உதவுகிறது. மீன் பிடிக்கவும் பயன்படுகிறது. கண்மாயை மையமாக வைத்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ளார்.
உழவு என்னும் சிறுகதை கூலிக்கு உழவு செய்பவனின் அவஸ்தையையும் கூலிக்கு அமர்த்திய விவசாயியின் நேர்மையையும் காட்டியது. ஒரு நாள் உழவு ஓட்டினால் கிடைக்கும் கூலியில் காள மாடுகளுக்கு பருத்தியும் புண்ணாக்கும் வாங்கவே எண்ணுகிறான் சிவலிங்கம். உழவு ஓட்டிய கூலியைத் தர நகையை அடகு வைத்து தருகிறார் நில உரிமையாளர். இருவரையுமே நேர்மறையாக படைத்துள்ளார்.
பெண்களுக்கு படிப்பு அவசியம், படிப்பு மட்டுமே பெண்களுக்கு நம்பிக்கையைத் தரும், நல்ல வாழ்க்கையைத் தரும் என்று அறிவுறுத்திய கதை படிப்பு. பள்ளி ஆசிரியர் கதாபாத்திரம் நூல் ஆசிரியர் உணர்த்தியுள்ளார். மேலும் பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பி வைத்தால் தவறு நடக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் கதை மூலம் மறுத்துள்ளார்.
மாடு என்னும் சிறுகதை மாட்டுக்கும் மனிதருக்குமான உறவைக் கூறுகிறது. முருகனும் இலட்சுமியும் வீட்டில் ஒரு மாட்டை செல்லமாக வளர்க்கிறார்கள். வீட்டில் ஓர் உறுப்பினர் போலவே வளர்கிறது. மாட்டுப் பாலையும் மற்றவர்க்கு விற்பதில்லை. திருவிழாவின் போது செலவிற்காக மனமில்லாமல் பணமில்லாமல் விற்று விடுகிறார்கள். விற்றாலும் மாட்டு நினைவு விட்டகலாமலே இருக்கிறது. இரவு விற்ற மாடு வீடு வந்து சேர்ந்துவிடுகிறது. மாடு வந்ததும் மகிழ்ச்சி தாளவில்லை. விடிந்து வாங்கிச் சென்றவர் அவரிடம் நிலையைக் கூறி பணத்தைத் தந்து அனுப்பி விடுகின்றனர். வாங்கி சென்றவரும் நல்லவராக படைக்கப்பட்டுள்ளார். மாடு என்றாலும் மனிதன் என்றாலும் அன்பு ஒன்றுதான் என்கிறது கதை.
கரு என்பது ஒரு நல்ல கரு. பிள்ளை வரம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பில்லை. ஒரு சிலருக்கு பத்து பிள்ளைகளும் பிறக்கிறது. ஒரு சிலருக்கு ஒரு பிள்ளையும் பிறப்பதில்லை. கரு என்னும் இச்சிறுகதையில் இரண்டு பெண்களையும் படைத்துள்ளார். ஒரு பெண்ணுக்கு ஒரு கருவும் உண்டாவதில்லை என கவலை. ஒரு பெண்ணுக்கு பத்து பெற்ற பின் வயதான பின் இது தேவையா என்று அவமானத்தால் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். குழந்தை ஒரு வரம். ஆனால் எல்லோருக்கும் வரம் கிடைப்பதில்லை என்பதே கதையின் கரு. வருத்தத்திற்குரியது.
மனிதனுக்கு கோபம் வந்தால் மரத்தையும் வெட்டுவான் என்கிறது மரம் என்னும் கதை. மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் ஆடுகளுக்கு மேய்ச்சலுக்கு வழியில்லை என்று அண்ணன் வீட்டிலுள்ள மரத்தில் ஏறி கிளைகளை வெட்டுகிறான். அண்ணன்காரன் வெட்டாதே என்கிறான். மரம் பொதுதானே நீயும் வெட்டிக்கொள் என்கிறான். அண்ணனுக்கு கோபம் வந்து மரத்தையே வெட்டி விடுகிறான். கோபம் கண்ணை மறைக்கும் என்பார்கள். இங்கு எல்லோரையும் மறக்கச் செய்திருக்கிறது.
ஓர் அணுகுண்டு போல இல்லாமல் ஓர் இலட்சுமி வெடி போல் வெடித்து இருந்தது தீபாவளி. தீபாவளி சிறுவர்களுக்கான பண்டிகை மட்டுமல்ல பெரியவர்களுக்குமானது என்று உணர்த்தியது கதை. தீபாவளி என்றால் சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பாட்டிகளும் கொண்டாடுவர் என்கிறது. பிள்ளை இல்லாத பாட்டிக்கு ஊர்ப் பிள்ளைகளுடன் கொண்டாடுவது ஒரு பேராணந்தம் என்கிறார்.
சந்தை என்றால் பலபொருள்கள் விற்குமிடம் என்பர். இதில் மாட்டுச் சந்தையும் உண்டு. ஆட்டுச் சந்தையும் உண்டு. எழுத்தாளர் மு. மகேந்திர பாபு ஓர் ஆட்டுச் சந்தையைக் காட்டியுள்ளார். ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்காமல் சிரமப்படும் இரண்டு வியாபாரிகள் குறித்து எழுதியுள்ளார். ஒரு வழியாக மூன்றில் ஒரு கிடா விற்கப்படுகிறது. மீதி இரண்டும் ஆடுகள். வீட்டிற்கு திரும்ப அழைத்துப் போவதிலும் சிரமம். இறுதியாக ஒரு வியாபாரி வந்து விலை பேசி கடன் சொல்லிச் செல்கிறார். விற்று வந்த பணத்தில் கடைக்கு கறி சாப்பிடச் செல்கிறார். ஆட்டை விற்று ஆட்டுக் கறியே சாப்பிடுபவர்களாக மனிதர்கள் உள்ளனர் என்கிறார்.
தொகுப்பில் ஒரு சாதாரணக் கதை ரோசக்காரன். வீட்டில் அம்மா திட்டியதற்காக மருந்து குடித்ததாக நாடகமாடும் மகன். அவனுக்கு துணையாக ஒருவர். மருந்து குடிக்கவில்லை என்று தெரிந்தாலும் தாயின் மனம் என்ன பாடுபடும்? இக்கதை ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும்.
விவசாயம் செய்ய மறுத்து அரசு வேலைக்குத் தான் செல்வேன் என ஊதாரித் தனமாக சுற்றித் திரிந்தவன் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு உழைக்க முடியாத நிலை ஏற்பட்ட போது தானே முன்வந்து விவசாயம் செய்வதாக தெரிவிக்கிறேன். ஒருவரிடம் கை கட்டி நின்று கூலியை எதிர்பார்த்து நிற்பதை விட சுயமாக விவசாயம் செய்து வாழ்வது மேல் என உணர்த்துகிறது கதை.
நேமிக்கம் என்னும் இத்தொகுப்பின் இறுதிக் கதை துஷ்டி. ருஷ்டி என்றால் எழவு சொல்லி. எழவு சொல்லிகள் குறித்து பல கதைகள் இருக்கின்றன. இது சற்று வித்தியாசமானது. எழவு சொல்லி என்றால் எல்லோரும் ஏளனமாக பார்ப்பார்கள். இழிவாக பேசுவார்கள். வேலையை மட்டுமே வாங்கத் தெரிந்தவர்களுக்கு துஷ்டியின் துயரம் தெரியாது. பசி புரியாது. இக்கதையில் வரும் சுப்பையாவும் பொறுமையாகவே எல்லா வேலைகளையும் செய்கிறான். ஆனால் பழிவாங்க சமயம் பார்க்கிறான். சபரிமலைக்கு மாலை போட்டு எல்லோரையும் சாமி என்று கூப்பிட்டவன் தன்னையே சாமி என்று கூப்பிட வைக்கிறான். சுப்பையா சாமியிடம் வேலையும் சொல்ல தயங்குகிறார்கள்.
நேமிக்கம் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. பதினான்கு சிறுகதைகளும் பல்வேறு விசயங்களை பேசியிருந்தாலும் எல்லாமே கிராமத்தைச் சுற்றியே நடைபெறுவதாக உள்ளன. கரிசல் பூமியிலிருந்து பல எழுத்தாளர்கள் வந்துள்ளனர். தற்போது வந்துள்ளவர் எழுத்தாளர் மு. மகேந்திர பாபு. இவரின் எழுத்துகளில் கரிசல் மண் வாசம் வீசுகிறது. எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் ஒரு தொடர்ச்சி தெரிகிறது. கரிசல் மண் வாழும் மனிதர்களே கதை மாந்தர்கள். குறிப்பாக விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கை என்பது ஆடு, மாடுகளுடன் அமைந்ததாகும். கதையில் வரும் பாத்திரங்களையே முன்னிலைப்படுத்தி தன்னை அடக்கியே காட்டியுள்ளார் ஆசிரியர். ஒவ்வோர் எழுத்தாளரும் ஒவ்வொரு கிராமத்தை முன்னிறுத்துவர். எழுத்தாளர் மு. மகேந்திர பாபு பொன்னையாபுரத்தை முன்னிறுத்தியுள்ளார். ஒரு கிராமத்து வாசி எப்படியிருப்பாரென பல பாத்திரங்கள் மூலம் காட்டியுள்ளார். வெள்ளந்தித்தனம் பலரிடம் காணமுடிகிறது. கிராமங்கள் காலப்போக்கில் அழிந்து வந்தாலும் எழுத்தாளர் மு. மகேந்திர பாபு இருக்கும் வரை எழுத்தில் கிராமங்களை இருக்கச் செய்வார். கதையின் பலம் என்பது கதை சொல்லிய முறை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு குறும்படம். ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு நல்ல சிறுகதை இருந்தாலே போதும் என்பர். நேமிக்கம் என்னும் இத்தொகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் சிறப்பாகவே உள்ளன. எழுத்தாளர் மு. மகேந்திர பாபு சிறுகதைகள் எழுதுவதைத் தொடர வேண்டும். எழுதுவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள்.
வெளியீடு
யாப்பு வெளியீடு சென்னை
9080514506
எழுத்தாளர் மு. மகேந்திர பாபு
9786141410
பொன். குமார் 9003344742
***
.
0 Comments