மௌனமும் பழகிடு - நூல் - வாழ்த்துரை - பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு

 


மௌனமும் பழகிடு - வாழ்த்துரை.


'மௌனம் விதைத்த கவிதைகள்' 


'பசுமைக் கவிஞர்'.'நல்லாசிரியர்'.மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர், மதுரை.

பேச - 97861 41410


  "எதுவும் தாமதமாகி விடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விடமுடியும்" என்பார் கவிஞர்.வண்ணதாசன் ஐயா அவர்கள்.  ஆம் நண்பர்களே! நமது கவிஞர்.சாந்தி சின்னதம்பி அவர்களுக்கு இவ்வரிகள் மிகச்சரியாகப் பொருந்துகிறது.


    இருபது வயதில் முதல் புத்தகம் எழுதி வெளியிட்டவர்கள் இருக்கிறார்கள். அதன்பின் அவர்கள் சோம்பலின் காரணமாக இருந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறார்கள். அறுபது வயதில் தன் முதல் கவிதை நூலான 'விழி மூடி யோசித்தால்' தந்து, இப்போது இரண்டாவது நூலாக 'மௌனமும் பழகிடு' என்ற தலைப்பில் சிறந்த நூலினை நமக்குத் தர உள்ளார். 


   "எடுத்த காரியம் யாவினும் வெற்றி" என்ற பாரிதியின் வார்த்தைகளுக்கேற்ப தான் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றிக் கனியைப் பறிப்பவர் கவிஞர்.சாந்தி அவர்கள். எழுத்துகள் அகரத்தில் தொடங்குகின்றன. உயிர்கள் அன்னையிடமிருந்து உருவாகின்றன. தனது முதல் கவிதையை 'அன்னையைப் போற்று' என போற்றித் தொடங்குகிறார். அன்னையின் பன்முக ஆற்றலை மிக எளிமையாய், இனிமையாய் விளக்குகிறார்.வாசித்து முடித்தவுடன் பட்டினத்தடிகளின் பாடல்வரிகள் மனதில் வந்து செல்கின்றன.


"அன்பென்னும் சொல்லுக்குப்

பொருள் தந்த ஆதியே நீதானே!

ஐயிரண்டு திங்கள் எனை

அடிவயிற்றில் சுமந்தவளும் நீதானே! - என்ற வரிகளில் அன்னையின் தியாகம் நமக்குத் தெரிகிறது.


      கவிதைகளின் தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆத்திசூடியைப் போல் மிளிர்கின்றன.

அன்னையைப் போற்று

ஆன்றோர் வழி நடந்திடு

இலவயம் ஏலேல்

ஈதலில் உயர்வு கொள்

உண்ணும் முன் உழவனைப் போற்று

ஊழ்வினை எதிர்த்து வெல்

எளிமை கண்டு இகழேல்

ஏணியாய் வாழ்ந்திடு

ஐம்பூதம் போற்றிடு

ஒழுக்கப் பண்பு கொள்

ஓயுதல் அகற்று

ஔடதம் நீக்கி வாழ்

எஃகென எண்ணம் கொள்

   - என அகர வரிசையில் தலைப்பிட்டு, தலைப்பிற்கேற்பக் கவிதைகளைத் தந்துள்ளார். 


    உயிர் எழுத்துகள் வரிசையில் மட்டுமல்லாது, நூல் முழுமையும் ஆத்திசூடி போன்ற தலைப்புகளே இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தலைப்பும் வியப்பில் ஆழ்த்துகிறது. நாம் மறந்து போன பல வார்த்தைகளைக் கையாண்டிருப்பது பாராட்டிற்குரியது. எல்லாக் கவிதைகளும் சிறப்பிற்குரிய கவிதைகள்தான். இந்நூலுள் எனக்குப் பிடித்த தலைப்புகள் பல இருந்தாலும் நெஞ்சிற்கு மிக நெருக்கமானதாக நான் கருதும் தலைப்பு 'தாவரம் போற்றி வாழ்'. மரங்களோடு மனிதனின் கரம் கோர்க்கும் போது மண்ணும் நலமாகும். நமது மனதும் நலமாகும்.


"மண்ணின் தரம் உயர்த்தும் மாண்பாளன்

நிலச்சரிவோ மண்ணரிப்போ தடுத்தாளும் தயாளன்

காலநிலை மாற்றும் கண்ணாடி

வண்ணச் சாயங்கள் வழங்கும் வானவில்

புத்துணர்ச்சி பானம் தரும் பொக்கிசம்" - என மரத்தின் பயன்களைப் பெரிதாகப் பட்டியல் இடுகின்றார். கவிதைத் தலைப்புகளுக்கேற்ப படங்கள் கொடுத்திருப்பது கவிதைக்கு வலு கூட்டுவதாக உள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது நூலைத் தரும் கவிஞர் சாந்தி சின்னத்தம்பி இன்னும் பல நூல்களைத் தரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

Post a Comment

0 Comments