கரு - சிறுகதை - மு.மகேந்திர பாபு

 

கரு - சிறுகதை - மு.மகேந்திர பாபு












  "எத்தனையோ பேரு கோயில்,  குளம்னு தவம் கெடக்குறாக. அவச்சொல்லுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாகி... ஊர்ச்சனம் வாயில விழுந்து... அம்மானு சொல்ல ஒரு புள்ள பொறக்காதா? அது ஆணா இருந்தா என்ன? பொண்ணா இருந்தா என்ன? புள்ளனு சொல்லிக்க ஒன்னு போதும்னு நெனச்சித் தவிக்குறாக.  வேணாம்னு நெனச்சி இருக்கும்போது அது உண்டாயிருது. என்னத்தச் சொல்றது?" சுப்புத்தாயின் வார்த்தையில் சோகமும் விரக்தியும் அப்பிக்கிடந்தது. திண்ணையில் எதிரில் உக்காந்து பருத்திக் கூட்டிலிருந்து பருத்தியை எடுத்துக் கொண்டிருந்த சீதா பருத்திக் கூடுகளுக்குள் கிடந்த வண்டினை எடுத்து வெளியே விட்டாள். 


"ஏத்தா! குதிகால்ல ஒரு நசுக்கு நசுக்க வேண்டியதான? காதுக்குள்ள ஏறுச்சுன்னா என்ன பண்ணுவியாம்?"


   "ஊர்ச்சனம் வார்த்தைகளக் கேட்டுக் கேட்டு காது ரெண்டும் மரத்துப் போச்சு. இந்த வண்டு போய்த்தான காதுக்குள்ள தொந்தரவாகப்போகுது" வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள் சீதை. கல்யாணமாகி பத்துப் பதினஞ்சு வருசம் ஓடோடி விட்டது. மார்பிலும் தோளிலும் போட்டுக் கொஞ்சுவதற்கும் அம்மா என்று சொல்ல ஒரு புள்ளப்பூச்சி வயித்துல உருவாகலயே என்ற எண்ணம் அவள் மனசுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.


   இதோ... சுப்புத்தாய் சொன்ன வார்த்தைகள் தார்க்குச்சியால் நெஞ்சில் குத்துவதைப் போல் இருந்தது. எத்தனையோ பேர் தவம் கிடக்கையில் என்று ஏதோ சொல்கிறாள். அவள் நம்மைத்தான் சொல்கிறாளோ என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்து மறைந்து போனது. வயதில் மூத்தவள். ஏதோ சொல்கிறாள். விசனப்படுகிறாள். மேற்கொண்டு என்ன ஏதென்று கேக்காமலே கண்களின் ஓரத்தில் கோர்த்த நீரைத் துடைத்துக்கொண்டாள்.


          சீதைக்குக் கல்யாணமாகி மூன்று மாதங்கள் ஆன உடனேயே பெண்கள் அவ்வப்போது நலம் விசாரித்துக் கொண்டார்கள். 


  "என்னம்மா! ஏதும் விசேசம் உண்டா?" 


   "விசேசம் ஒன்னும் இல்லங்க. தீபாவளி வருதுல்ல. துணிமணி எடுக்கனும். அதுதான் விசேசம். வேற என்ன?" என... கேள்வி கேட்டவர்களிடம் பதில் கேள்வி கேட்பாள். 


   "அதில்லமா! கல்யாணமாகி மூனு மாசம் ஆச்சுல்ல. வாந்தி ஏதும் எடுத்தியா? புள்ளப்பூச்சி ஏதும் உண்டா?" என பார்ப்பவர்கள் கேட்கத்தொடங்கினார்கள். ஆரம்பத்தில் அது பெரிதாகச் சலனத்தையோ, சங்கடத்தையோ தரவில்லை. நாளாக நாளாக ஊர்க்காரர்களின் பேச்சு சீதையின் உள்மனசைக் கவ்வியது. 


இரண்டு மூனு வருசம் கடந்ததும் "நல்ல டாக்டரப்போய்ப் பாருங்க. டவுனுக்குப் போங்க" என ஆளாளுக்கு ஆலோசனை சொன்னார்கள்.


"சரியத்தா. போக வேண்டியதுதான் ஒரு நா" என உள்ளம் வெதும்பிச் சொல்வாள்.


      சொந்த பந்தங்கள் எல்லாம் புதிதாய் ஒரு வாரிசு வரும் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீதையின் அப்பா  கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். அம்மா கூடப் பிறந்தவர்கள் எட்டுபேர். முதல் பிள்ளையின் பிள்ளைக்கும் கடைசியாய்ப் பிறந்த பிள்ளைக்கும் ஒன்றிரண்டு வயசுகதான் வித்தியாசம். 


     கிராமங்களில் முன்பெல்லாம் இப்படியும் நடந்தது உண்டு எனச்சொல்லிக் கேட்கும் போதே சிரிப்பாகவும் வியப்பாகவும் இருக்கும். மூத்த பெண்ணக் கட்டிக்கொடுத்து பேறுகாலத்துக்கு வீட்டுக்கு வரும்போது இங்கே அம்மாவும் குழந்தை பெத்து கைப்புள்ளயோட இருப்பா.அது ஒரு காலம். இப்பல்லாம் அந்தக் காலம் இல்ல. ரெண்டு பிள்ளைகளுக்கு மேல பெத்துக்க இப்ப உள்ள பெண்கள் யோசிக்கிறார்கள்.


     சுப்புத்தாய் எங்கே நம்மைத்தான் குத்திக்காட்டுகிறாளோ என எண்ணம் சீதையின் மனதில் நிழலாடியது. "எத்தனையோ பேர் சொல்லிச்சொல்லிக் கேட்டு அலுத்துப்போச்சு. இவள் சொல்வதிலா நம் மனசுக்குக் கஷ்டமாகுது" என மனசுக்குள்ளே சிரித்துக் கொண்டாள். 


     சுப்புத்தாய் மகா கெட்டிக்காரி. உழைப்பில் அவளை மிஞ்சுவதற்குச் சுத்துப்பட்டியில் ஒரு சனமும் இல்லை. விடிஞ்சது முதல் அடஞ்சது வரை வேலை வேலை எனப் பம்பரமாய்ச் சுத்திக்கொண்டே இருப்பாள். புருசன் கருப்பசாமியும் கடின உழைப்பாளி. கருப்பசாமிக்குப் பரம்பரைக் கிணறு ஒன்று இருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு திருப்தியாக அன்றாடம் ஓடிக்கொண்டிருந்தான். சில வயல்கள் வேலிகளால் நிறைந்து கிடந்தன. அந்த வேலியை குத்தகைக்குப் பிடித்துப் புருசனும் பொஞ்சாதியுமாய் இராப்பகல் பாராமல் விறகை வெட்டி, மூட்டம் போட்டு அதை விற்று அந்த வருமானத்தில் கஞ்சிக்கு கவலையில்லாமல் வாழ்க்கையை ஓட்டி வந்தார்கள். எந்த வம்பு தும்புக்கும் போவதில்லை. கிணற்றில் இருக்கும் தண்ணீரால் கத்தரி, வெண்டை, வெள்ளரி எனப் போட்டு அதிலும் வருமானம் பாத்து வந்தனர். 


வாரந்தோறும் சனிக்கிழமை என்றால் ஒரு மூட்டைக் கத்தரிக்காய் விளாத்திகுளம் கமிசன் கடைக்குப் போகும். குடும்பங்குட்டியோடு காலையில ஆறு மணிக்குள் வயலுக்குள் இறங்கி ஓலைப்பெட்டியில் கத்தரிக்காய்களைப் புடுங்கி சணல் சாக்கினில் கொட்டுவார்கள். ஆளும்பேருமாய் ஒரு மணி நேரத்தில் காயைப்புடுங்கி சாக்கில் போட்டு மூட்டி ரோட்டுக்கு கொண்டு வந்துவிடுவான் கருப்பசாமி. எட்டு மணிக்குக் கோவில்பட்டியில் இருந்து வரும் கோகிலா பஸ்சில் மூட்டை விளாத்திகுளம் சென்றுவிடும்.


    காலை நேரம் என்பதால் ஆட்களே நின்றுகொண்டும்,  படியில் தொங்கிக்கொண்டும்தான் செல்வார்கள். இதில் முழுமூட்டையை எப்படி பஸ்சுக்குள் கொண்டு போகமுடியும்? கருப்பசாமி கைதேர்ந்தவன். கழுத்தில் கெடக்கும் துண்டை தலைப்பாகையாகக் கட்டி,  மூடையைத் தலையில் தூக்கிவைத்து பஸ்சின் பின்பக்க ஏணியில் ஏறி டாப்பில் பத்திரமாய்ப் போட்டுவிடுவான். ரெண்டு கைகளும் ஏணியைப் பிடித்து சரசர என ஏற, தலையில் ஆடாமல் அசையாமல் கத்தரி மூடை இருக்கும். அதைப்பாரக்கும் சனம் சிலிர்க்கும்.


"ஏப்பா! கருப்பசாமி. ஒரு தடவ உன்னோட மூட்டையை நம்ம கடையில் வையபா. ஒரு மணி நேரத்தில வித்துக் காசாக்கித் தாரேன்!" சொல்லாத கமிசன் கடைக்காரர்கள் இல்லை. 


"இருக்கட்டும்ங்க. சம்முகம் அண்ணாச்சி கடையிலதான் ரெகுலராப் போட்டுக்கிட்டு இருக்கேன். போடலனா அவுக சடச்சிக்கிருவாக. நல்லது கெட்டதுக்கு கூட இருந்து ஒத்தாச பண்றவுக. செடிகொடிகளுக்கு மருந்தடிக்கனும்னா அவுகளா நம்ம கருத்தறிஞ்சு காசு கொடுக்குறவுக. கோவிச்சுக்காதிக" எனச்சொல்லிக்கொண்டே போவான் கருப்பசாமி.


       "எப்பா... எடையப்போடு" 

   

"அம்பது கிலோ இருக்கு அண்ணாச்சி"


"இன்னைக்கு மார்க்கெட் ரேட்டப்போட்டு உடனே காசக்கொடுத்து விடு. வந்த பஸ்சிலயே ஊருக்குப் போயிரட்டும். ஆடு மாடு உள்ள சம்சாரிபா அவன். காக்க வைக்க வேணாம்" உடனே காசு எண்ணப்பட்டு கருப்பசாமியின் கைக்குள் சிக்கிக்கொள்ளும் பணம்.


    சண்முகம் அண்ணாச்சியின் கடைக்கு எதிரே உள்ள ஸ்வீட் கடையில் பருத்தி வெடித்துச் சிரித்ததுபோல சுடச்சுட முட்டைக்கோசு போட்டு வைத்திருப்பார்கள். சிறு குன்று போல் பூந்தி குமிக்கப்பட்டு சீனியால் அலங்கார மாலை போட்டதுபோல் இருக்கும். மிக்சரில் கருவேப்பிலை மாலை அழகாக இருக்கும். முட்டைக்கோசை சுடச்சுட வாங்கித்தின்ன சனக்கூட்டம் அலைமோதும். அரிகரண்டியால் அள்ளி அள்ளிப் போட அடுத்த செகண்டில் விற்றுத் தீர்த்துவிடும். 


  "வாப்பா கருப்பசாமி! எத்தன வேணும்?"


"ஆறு கட்டுங்க. நல்லா வெந்ததாக் கட்டுங்க. இல்லனா நடுவுல மாவுமாவா இருக்கும்" 


    "நல்லா மொறுகலா கட்டித்தாரனப்பா" எனச்சொல்லிக்கொண்டே நியூஸ் பேப்பரை நாலா மடிச்சு அதில் ஆறு முட்டைக்கோசுகளை வைத்து தலைக்கு மேல தொங்கிக் கொண்டிருந்த கம்பியில் மாட்டப்பட்டிருந்த உருளை வடிவ சின்னச்சடம்பால் முட்டைக்கோசுகளை நாலாபுறமும் சுத்தி, ஆட்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் ஒரு திருகு திருகி சடம்பை அத்து முடிச்சுப்போட்டுக் கொடுத்தான். 


           சுடச்சுட வாங்கிக்கொண்டு,  வந்த பஸ்சிலேயே ஊருக்குக் கிளம்பினான். அவன் வரவை எதிர்பாத்து கடைக்குட்டிப் பொண்ணு பஸ்ஸ்டாப்பில் காத்திருந்தாள். 


  "ஹயா அப்பா வந்தாச்சு! கொண்டாப்பா முட்டைக்கோச... ஆச ஆசயாய்ப் புடுங்கிக்கொண்டு ஓடினாள் வீட்டிற்கு.


  சுப்புத்தாய் பதினெட்டு வயசில் வாக்கப்பட்டு வந்தாள் பொன்னையாபுரத்துக்கு. இப்போது வயது நாப்பதைத் தொடுகிறது. நாலு பசங்க. ஒரு பொண்ணு. மூத்தவன் பாண்டி பன்னிரெண்டு முடிச்சு காலேசுப் படிப்பிற்குக் கோவில்பட்டிக்குத் தினமும் போய் வருகிறான். அவனுக்கு அடுத்தவன் பேரிலோவன்பட்டியில் பன்னிரெண்டு படிக்கிறான். அடுத்தவன் பத்து, எட்டு. பொண்ணு அஞ்சாவது பொன்னையாபுரத்திலே படிக்கிறாள். 


        குடிசை வீடா இருந்த வீட்டை ஓட்டு வீடாக மாற்றினாள். குடிசைக்குள் இருந்த பம்பு செட்டை ரூம்கட்டி அங்கே தங்குவதற்கும் வசதி செய்தாள். பிள்ளைகள் பள்ளிக்கொடம் போன பின்பு புருசனும் பொஞ்சாதியும் வயல் வேலை பார்த்து பம்புசெட்டிலே இருந்து கொள்வார்கள். 


   சில நாள்களாய் சுப்புத்தாயின் மொகம் சோர்வுடனே இருந்தது. யாரிடமும் முகங்கொடுத்துப் பேசுவதில்லை. அதற்கான காரணம் கருப்பசாமிக்கு மட்டும்தான் தெரியும். இன்னும் இரண்டு மூன்று மாதம்போனால் ஊருக்கே தெரிந்து விடும்.


     சுப்புத்தாய்க்கு மனம் நிலைகொள்ளவில்லை. கருப்பசாமி எவ்வளோ சொல்லியும் அவள் மனம் ஏற்கவில்லை. 


   "வேணாங்க. சாமிமேல பாரத்தைப்போட்டு நிம்மதியா இருப்போம். எனக்கு ஒன்னும் ஆகாது. தைரியமா இருங்க. பையன் காலேசுக்குப் போறான். இந்த வயசுல இத்தன வருசம் கழிச்சு இன்னொரு புள்ளயப் பெத்தா அவங்க மனசு என்ன நினைக்கும்? இன்னும் ரெண்டு மூனு வருசத்தில அவனுக்குக் கல்யாணம் முடிச்சு பேரம்பேத்தி எடுக்கற நெலமயில... இப்ப இது தேவையா? ஊர்ச்சனம் என்ன நெனைக்கும்?"


   கருப்பசாமிக்கு மனம் ஒப்பவில்லை. "எக்குத்தப்பா ஆகிப்போச்சுன்னா என்னம்மா பண்றது? ஊருக்காகவும் உலகத்துக்காகவும் நாம என்ன நினைக்கனும்?"


 "ஒன்னும் ஆகாது. நாளக்கிச் சனிக்கிழமை. கத்தரி மூட்டையப்போட்டுட்டு ஏதாவது ஒரு மெடிக்கல்ல மாத்திரைய வாங்கிட்டு வாங்க". சேல முந்தானையால் கண்களின் ஓரத்தைத் துடைத்துக்கொண்டே சொன்னாள். 


     எப்போதும்போல் கலகலப்புடன் இருக்கும் கருப்பசாமியின் முகம் இறுக்கமாக இருந்தது. மூட்டையைப் போட்டான். பணம் அடுத்த நிமிசம் கைக்கு வந்தது. 


 "கருப்பசாமி! வாப்பா. சூடா முட்டைக்கோசு கட்டுறனப்பா!" 


   "இந்தா வாரேன். சின்ன வேல ஒன்னு இருக்கு."


      நாகலாபுரம் ரோட்டில் கொஞ்ச தூரம் நடந்து போனான். மெடிக்கலில் மாத்திரையை வாங்கினான். இருண்ட முகத்துடன் பஸ்சில் ஏறி ஊரு வந்து சேர்ந்தான். 


     எப்போதும் சட்டை கைலியுடன் திரியும் பாண்டி சைக்கிளில் நம்பிபுரம் கடைக்கு வெற்று உடம்புடன் மூச்சிரைக்க வந்தான்.


"அண்ணாச்சி... குளுக்கோஸ் டப்பா ஒன்னு சீக்கிரமா தாங்க" 


"ஏப்பா. என்ன இவ்வளவு அவசரப்படுறவன்? வெந்நித்தண்ணிய கால்ல ஊத்துனமாதிரி. சரி... சரி... இந்தா பிடி. ஏப்பா மீதிச்சில்லரயா வாங்கிட்டுப்போப்பா" 


  எதுவும் பாண்டியின் காதில் விழவில்லை. வேகமாக சைக்கிளை மிதித்து வந்தான். 


   கூட்டம் கூடி விட்டது. வீடெங்கும் அங்கங்கே இரத்தத் திட்டுகள். கருப்பசாமி தன் தோளில் கிடந்த துண்டை வாயில் வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுகிறான்.


"எம் பொண்டாட்டிய நானே கொன்னுட்டனே! இப்படி அனாதயா விட்டுட்டுப் போயிட்டாளே!"


    சுவத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த சுப்புத்தாயைப் பிள்ளைகள் மிரட்சியுடன் பார்க்கின்றார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை. 


சேலைத்தலைப்பால் வழிந்து வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சீதைக்குப் புரிந்தது எத்தனையோ பேர் கோவில் குளம்னு அலையிறாக. ஆனா நமக்கு வந்து வாய்க்குது வயசு போன காலத்தில என அன்று சுப்புத்தாய் சொன்ன வார்த்தைகள் அவளுக்கானதுதான் என இப்போது புரிந்தது. மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் சொட்டியது. ஊர்ச்சனத்தின் பேச்ச்க்காகத் தன் உயிரை இப்படி விட்டுவிட்டாளே என்ற சோகத்தில் தன் வயிற்றைத் தடவிப்பார்த்துக் கொண்ட சீதை, சுப்புத்தாயின் முகத்தைப்பார்த்து விம்மி விம்மி அழுதாள்.


மு.மகேந்திர பாபு, 

இரவு 12.25 - 08-10-2025 புதன்.

Post a Comment

0 Comments