சிறுவர் பாடல் - பாவாணர் நூலகம்
எங்கள் அரசுப் பள்ளியில்
இனிதே நூலகம் மலர்ந்தது!
மொழிக்காய்த் தன்னைத் தந்திட்ட
பாவாணரின் பெயரில் வளர்ந்தது!
பண்பை வளர்க்கக் கதையுண்டு!
அன்பை வளர்க்கப் பாடலுண்டு!
போட்டித் தேர்வில் வென்றிடவே
புத்தகங்கள் பல உண்டு!
தேசத் தலைவரைப் பார்க்கலாம்!
தினமும் கேள்வி கேட்கலாம்!
அறிவியல் அறிஞரைக் கண்டுதான்
ஐயம் நீங்கப் பேசலாம்!
மாணவர் திறனை வளர்த்திடவே
மதிப்பினை நாளும் கூட்டிடவே
ஒலி வாங்கி பிடித்துத்தான்
ஓங்கிப் பேசப் பயிற்சியுண்டு!
அமைதிக் கிங்கே இடமில்லை!
ஆரவாரத்திற்குத் தடை இல்லை!
கல்வி இணைச் செயல்பாட்டில்
கலகலப் பாக்கும் நூலகமே!
மு.மகேந்திர பாபு, தமிழாசிரியர், இளமனூர், மதுரை - 97861 41410.
0 Comments