சிறுவர் பாடல்கள்

 


சிறுவர் பாடல்


உயிர்களை நேசிப்போம்!


சின்னஞ் சிறிய குழந்தைகளே!

சிரித்து மகிழும் குழந்தைகளே!

உங்களைப் போல உலகினிலே

உயிர்கள் பல கோடியுண்டு!


மனித உயிரே உயர்ந்ததென

மழலை நீங்கள் நினைப்பீரே!

மண்ணில் வாழும் உயிரெல்லாம்

மனித உயிர்க்கு ஒப்பாகும்!


சின்னச் சின்னப் பூச்சிகளை

சின்னச் சின்ன விலங்குகளை

சிதைத்துக் கொன்று மகிழ்ந்திடவே

சிந்தனை செய்வதே தப்பாகும்!


மாரிக் கால வீதியிலே

மனதை மயக்கும் வேளையிலே

சின்னச் சின்னத் தட்டான்கள்

அங்கும் இங்கும் பறந்தோடும்!


பறக்கும் தட்டான் வாலினிலே

நூலைக் கட்டுவது தவறாகும்!

அனைத்தும் நமது உறவென்று

அணைப்பதே மனதின் உயர்வாகும்!



விளையாடு தினமும் விளையாடு


நோயும் நொடியும் இல்லாமல் 

நூறு ஆண்டுகள் வாழ்ந்திடவே

தினமும் நன்றாய் விளையாடி

தேகத்தை நன்கு வளர்த்திடு!


காலை மாலை வேளையென

கனிவாய் நண்பருடன் விளையாடு!

வீட்டுக் குள்ளே இருப்பதனாலே

உடல் வலிமை உயராது!


வியர்வைத் துளிகள் விழுந்திடவே

விரும்பி நீயும் விளையாடு!

உயர்வை நோக்கிச் சென்றிடவே

உடலை வலுப்படுத்த விளையாடு!


ஓடித் திரியும் வயதினிலே

ஓடி நீயும் விளையாடு!

ஒற்றுமை உணர்வு கூடிடவே

ஒன்றாய் நீயும் விளையாடு!


விந்தை செய்து வாழ்ந்திடவே

வீரச் செயல்கள் புரிந்திடவே

நன்றாய் நீயும் விளையாடு!

நன்மைகள் தந்திட விளையாடு!



தைத்திருநாள்


கொட்டுச் சத்தம் கேட்டிட

கூத்தும் பாட்டும் ஒலித்திட

புத்தம் புதிய ஆடையுடன்

கையில் கரும்பும் பவனிவர

கலகலப்பாய் வந்ததே தைத்திருநாள்!


புத்தம் புதிய நெல்லெடுத்து

உரலின் வாயில் போட்டுவிட்டு

உலக்கை கொண்டு உடைத்திடவே

உமிகள் நீங்கிச் சிரித்ததுவே

உள்ளே இருந்த புத்தரிசி.


பானைக் கழுத்தில் நூல்கட்டி

பக்குவமாய் வெற்றிலை மஞ்சள்கட்டி

தீயும் பானையைத் தீண்டிவிட

பொங்கல் நன்கு வெந்ததே!

பொங்கும் மகிழ்வைத் தந்ததே!


தமிழர் வாழ்வில் பெருநாளாம்!

தைத்திங்கள் எனும் திருநாளாம்!

வீடும் நாடும் மகிழ்வதைப்போல்

மாடும் நம்முடன் மகிழ்ந்திடுமாம்!

மனமும் நாளில் நெகிழ்ந்திடுமாம்!


வானூர்தி


பறவையைக் கண்ட மனிதனும்

பறக்க ஆசைப் பட்டானே!

முயற்சிகள் பலவும் செய்து

வெற்றியும் பின்னர் கண்டானே!


நெடுந்தூரம் விரைவாய்ச் சென்றிட

அதில் அமர்ந்து சென்றானே!

மேகக் கூட்டம் நடுவே

பயணம் செய்து மகிழ்ந்தானே!


தரையில் குடுகுடு ஓட்டம்

தலையைத் தூக்கிப் பறந்திடுமே!

சக்கரம் எனும் கால்களை

உடலின் உள்ளே மறைத்திடுமே!


சாலைகள் எதுவும் வேண்டாம்!

வானப் பரப்பே போதும்!

விண்ணில் பறக்கும் அதனை

கண்ணில் காண ஆசைதான்!


சத்தம் கேட்க அனைவருமே

வானைப் பார்த்து மகிழ்வார்கள்!

தமபி அதோ பறக்குது

வான ஊர்தி பாராய்!

Post a Comment

0 Comments