சிலேடைச் சிந்தனைகள்

 


சிலேடைச் சிந்தனைகள்


( நாள்ஒரு சிந்தனை - பேரா.இரா.மோகன்

(மணிவாசகர் பதிப்பகம்)

******************   *************************

ஒரு நூறும் பல நூறும்


ஒரு நாள் பாவலரவர்களின் நண்பர் ஒருவரின் புதல்வர் வந்தார். தந்தை நூறு ரூபாய் வேண்டினதாக வேண்டினார். நண்பரின் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பிய பாவலர், அதற்கென்ன நூறு ரூபாய் தருகிறேன்' என்றார். நண்பரின் மகனார் தமிழ்ப் புலமையைக் கிளறித் தமிழ் அமுது உண்ண விழைந்தார் ஆகவே பாவலர் ரூபாய் எடுக்க விழைந்ததும், அதிகச் செலவுளது; ஆதலின் இருநூறு ரூபாய் தந்தால் பேருதவியாக இருக்கும்' என்றார். பாவலரும் உடனே. 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்' எனப் பிரித்துக் கூறினார். பாவலரின் சிலேடையைப் புரிந்து கொண்டு, வந்தவர், 'முந்நூறு ரூபாய் தந்தால் நல்லது என்றார். பாவலரும் சாவதானமாக, 'முன்,நூறு ரூபாய் தருகிறேன்' என்றார். 'முன் கூறிய நூறு ரூபாயைத் தருகிறேன் என்னும் குறிப்பை அறிந்து, வந்தவர், 'நானூறு ரூபாய் தந்தால் நலமாகும்' என்றார். பாவலரும் பரிவோடு. நான் நூறு ரூபாய் தருகிறேன்' என்றார். பொருளைப் புரிந்து கொண்டு வந்தவர், 'ஐந்நூறு ரூபாய் தாருங்கள்' என்றார். பாவலரும் வியப்புக் குறிப்பை முகத்தில் வருவித்துக் கொண்டு. 'ஐ! நூறு ரூபாய் தருகிறேன்' என்றார். மனமகிழ்ந்து வந்தவர். அறுநூறு கொடுங்கள்' என்றார். பாவலரும் சிறிது சினக் குறிப்பை முகத்தில் வருவித்துக் கொண்டு. நீட்டாது பேச்சை அறு என்னும் பொருளில், 'அறு! நூறு தருகிறேன்' என்றார். பெருமகிழ்வெய்திய வந்தவர். எழுநூறு வேண்டும் என்றார். பாவலரும் கையசைத்து, 'நூறு பெற்று எழுந்து செல்' என்னும் பொருள் பட, 'எழு. நூறு ரூபாய் தருகிறேன்' என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார். வந்த புலவரும் தொடர்ந்து,'எண்ணூறு ரூபாய் வேண்டும்' என்றார். பணப்பையோடு வந்த பாவலர், 'எண், நூறு ரூபாய்' என்று ரூபாயைக் கொடுத்தார். வந்தவர் ரூபாயை எண்ணி யெடுத்துக் கொண்டு பாவலரின் மதி நுட்பத்தையும் உரைத் திட்பத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்து சென்றார்.


-சி. குமரேச பிள்ளை, அவதானக் கலைஞர் (சதாவதானி கா.ப. செய்குத் தம்பிப் பாவலர்), பக். 76-77.

******************  ***********************

'ஆத்மா குளிர்ந்து விட்டதே!’


ஒரு நாள் புதுமைப்பித்தனும் சில நண்பர்களும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.

''என்னப்பா. சூடாக என்ன இருக்கிறது?" என்று சர்வரைக் கேட்டார் புதுமைப்பித்தன்.

"இட்லி"

"சரி, கொண்டு வா."

செர்வர் இட்லியைக் கொண்டு வந்து வைத்தான்; ஆவி வந்து கொண்டிருக்கும் சூடான சாம்பார் தட்டு நிறைய நிரம்பியிருந்தது. புதுமைப்பித்தன் இட்லியைப் பிட்டார். அது ஆறிப் போன இட்லி. கொதிக்கிற சாம்பாரை அதன் மீது ஊற்றி அதற்குச் சூடேற்றும் வியாபார தந்திரத்தைக் கண்டு விட்டார் புதுமைப்பித்தன்.

உடனே செர்வரைக் கூப்பிட்டார்.

"என்னப்பா. ஆத்மா குளிர்ந்து விட்டதே!" என்றார்.

செர்வர் விழித்தான் "இல்லை. சாம்பார் தான் சுடுகிறது. இட்லி செத்துப் போச்சே! என்று அதற்கு விளக்கம் கூறினார். புதுமைப்பித்தன்.


-ரகுநாதன், புதுமைப்பித்தன் வரலாறு, பக். 154-155.

*******************    ***********************

'நான் போனால் போவேன்!'


கன்னடக் கவிஞர் கனகதாசர் எல்லாவற்றையும் துறந்து வாழ்ந்தவர்; இறைவன் புகழ் பாடுவது ஒன்று மட்டுமே தமது பணியாகக் கருதி வாழ்ந்தவர், தமது குருநாதரான வியாசராயரிடம் பெருமதிப்பு உடையவர். ஒரு முறை குருநாதர். எல்லோரும் கூடியிருக்கிற நேரத்தில், கனகதாசரைப் பார்த்து, "கனகா, இங்கிருப்பவர்களில் யார். யார் வைகுந்தம் போவார்கள் என்று உன் கடவுளிடம் கேட்டுச் சொல்" என்றார். கனகதாசர் அடுத்த நாள் பதில் தருவதாகக் கூறினார். மறுநாள் வியாசராயர் ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி, "இவர் வைகுந்தம் போவாரா?" என்று கேட்டுக் கொண்டே வந்தார். "இல்லை" என்றே சொல்லிக் கொண்டு வந்தார் கனகதாசர். "நான் போவேனா?" என்றார் குருநாதர். "இல்லை" என்று பதில் வந்தது. குருநாதருக்கே திகைப்பு ."நீ போவாயா?" என்று வினவினார். "நான் போனால் போவேன்' என்றார் கனகதாசர். இது ஆணவத்தின் உச்சம் என்று அனைவரும் நினைத்தார்கள். கனகதாசர் விளக்கினார்: "நான் மட்டும் வைகுந்தம் போவதாக நான் சொல்லவில்லை. 'நான்' என்பது போனால், அதாவது ஆணவம் அழிந்தால் எல்லோருமே வைகுந்தம் போகலாம்."இவ்வாறு எளிமை நிறைந்த மனத்தினராய் வாழ்ந்தவர் கனகதாசர்.


-தி.ப சித்தலிங்கையா, மெய்யுணர்வு மலர்கள், ப.4.

****************    *********************

ஒரு நாமச் சண்டை


வட கலையா? தென்கலையா?

வாதியும் பிரதிவாதியும் வாய்தா மேலே வாய்தா வாங்க வழக்கு வருஷக் கணக்காக...

நெடுநாட்களாய் நெற்றியில் நாமமே இல்லாமல் நின்று கொண்டிருந்த கோயில் யானை...

ஒருநாள் சங்கிலியை அறுத்துக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடியே போயிற்று!

ஊர் பேசியது: மதம் பிடித்ததால் ஓடியது என்று.

உண்மையில் மதம் பிடிக்காததால் தான் -ஓடியது யானை!


வாலி, நிஜ கோவிந்தம், ப.74.


******************* ******************


மேலான தொழில்


தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களில் புகழ் பெற்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா என்பவர். இவர் இசையரசி கே.பி. சுந்தராம்பாளின் கணவர். ஒரு வழக்கில் சாட்சியாக உயர்நீதி மன்றக் கூண்டில் கிட்டப்பா ஏறினார். கிட்டப்பா இரண்டாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்தவர். அவரை விசாரணை செய்த வழக்கறிஞர் நார்ட்டன் துரை மிகப் புகழ் பெற்ற வழக்கறிஞர். கூண்டிலிருந்த கிட்டப்பாவை நார்ட்டன் கேட்டார்.


"உங்கள் பெயர் என்ன?"

"கிட்டப்பா."நடிகர் பதில் சொன்னார்.

"உங்கள் தொழில்?".

"நான் ஒரு நடிகன்."

"நடிகன் என்றால் கூத்தாடி தானே?"

"ஆமாம்."

"அது ஒரு மட்டமான தொழில் தானே?'

"ஆமாம். ஆனால் என் அப்பாவின் தொழிலைவிட இது மேலானது.

"உங்கள் அப்பாவின் தொழில் என்ன?"

"அவர் உங்களைப் போல ஒரு வக்கீல்."

வழக்கு மன்றமே கலகலத்துச் சிரித்தது. மெத்தப் படித்த நார்ட்டன் துரை கிட்டப்பாவை அவமானப்படுத்த முயன்று தோற்றுப் போனார். கிட்டப்பா வெற்றி பெறக் காரணம் என்ன? துணிவு, தன்னம்பிக்கை, நாள்தோறும் ஆயிரக்கணக் கானவர்களைப் பார்த்து அவர்களைச் சமாளித்த அனுபவம் ஆகியவையே கிட்டப்பா நிமிர்ந்து நிற்கத் துணை ஆயின.


-கு.வெ.பாலசுப்பிரமணியன், இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு, பக். 75-76.

********************  **********************


'மூன்று முறை கருவுற்றார்...'


ஆங்கிலப் பேரறிஞர் அடிசன் ஆங்கில நாட்டில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய எழுத்தாளர். அவர் ஒரு முறை பேச எழுந்து, "நான் நினைக்கிறேன். நினைக்கிறேன், நினைக்கிறேன்" என்று மூன்று முறை சொல்லிவிட்டு மேலும் பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாராம். அவர் ஆங்கிலத்தில் "I conceive, conceive, conceive" என்றாராம். 'கன்சீவ்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நினைக்கிறேன்' என்பது ஒரு பொருள்; கருவுற்றிருக்கிறேன்' என்பது மற்றொரு பொருள். அருகில் இருந்தவர். அறிஞர் அடிசன் அமர்ந்து விட்டதும் எழுந்து நின்று."திருவாளர் அடிசன் மூன்று முறை கருவுற்றார். குழந்தை தான் பெறவில்லை" என்று நகைச்சுவை தோன்றக் கூறினாராம்.


-அ.கி. பரந்தாமனார், பேச்சாளராக, ப.39.

*****************     **********************


முத்திரைப் பேச்சுக்கள்


ஆபிரகாம் லிங்கன் மிகவும் கடினமான வாழ்க்கை யினை நடத்திக் கொண்டிருந்த நேரம். ஓர் ஊரிலிருந்து இன்னோர் ஊருக்குச் செல்ல வேண்டும். கையில் காசில்லை. போக்குவரத்துள்ள சாலை ஒன்றின் ஓரத்தில் வந்து நின்றார். மேலே அணிந்திருந்த பெரிய கோட்டைக் கழற்றிக் கையில் வைத்திருந்தார். லாரி ஒன்று வந்தது. கையை நீட்டி நிறுத்தினார். "ஐயா! இந்தக் கோட்டை அடுத்த நகரம் வரை கொண்டு செல்ல முடியுமா?" என்று கேட்டார் லிங்கன். வியப்பால் விரிந்த விழிகளோடு லாரி டிரைவர் கேட்டார். "கோட்டைக் கொண்டு செல்லலாம்.. ஆனால் நீங்கள்?"


லிங்கன் பதில் சொன்னார்: "நான் தான் கோட்டுக்கு உள்ளே இருப்பேனே!"


லாரி டிரைவர் விழுந்து விழுந்து சிரித்தார்.


● சர்ச்சிலின் நடவடிக்கைகளைக் கண்டு எரிச்சலுற்ற ஒரு பெண்மணி கூறினாள். "சர்ச்சில் அவர்களே! நான் மட்டும் உங்கள் மனைவியாக இருந்தால் உங்களுக்கு விஷத்தைக் கொடுத்து விடுவேன்! சர்ச்சில் அமைதியாகப் பதிலளித்தார். 'நீ மட்டும் என் மனைவியாக வாய்த்திருந்தால் அந்த விஷத்தைக் குடித்து விடுவேன்!"


- குமரி அனந்தன், நீங்களும் பேச்சாளர் ஆகலாம்,


பக். 181; 138.


ஆபிரகாம் லிங்கன் பிறந்த நாள்


*******************   ;:********************


'நிர்வாண உண்மை'


வெளிப்படையான உண்மை என்பதை ஆங்கிலத்தில் நிர்வாண உண்மை (Naked truth) என்பார்கள். இது ஒரு மரபுத் தொடர் (Phrase). இது எப்படி உண்டாயிற்று என்பதற்கு ஒரு கதை உண்டு


ஒரு நாள் உண்மையும் பொய்யும் குளிக்கச் சென்றன. இரண்டும் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்து விட்டு நீரில் இறங்கிக் குளித்தன.


பொய் குளித்து விட்டு முதலில் கரை ஏறியது. அதற்கு விஷமத்தனமான ஓர் எண்ணம் தோன்றியது.


பொய் உண்மையின் ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு போய் விட்டது.


உண்மை குளித்து விட்டுக் கரைக்கு வந்து பார்த்த போது அதனுடைய ஆடை காணவில்லை. அங்கே பொய்யின் ஆடை தான் இருந்தது.


உண்மைக்குப் பொய்யின் ஆடையை அணிய விருப்பமில்லை. எனவே அது நிர்வாணமாகவே புறப்பட்டுவிட்டது.


கதை அழகானது. அதை விட அதன் அர்த்த அலைகள் அழகானவை. மறைக்க வேண்டியதை மறைக்கத் தான் ஆடை பொய்யிடம் மறைக்க வேண்டியது இருந்தது. எனவே அதற்கு ஆடை வேண்டும்.


உண்மையிடம் மறைக்க வேண்டியது எதுவும் இல்லை. எனவே அதற்கு ஆடை தேவை இல்லை.


-அப்துல் ரகுமான், பூப்படைந்த சப்தம், பக். 65-66.

*********************    *******************


இடுக்கண் வருங்கால் நகுக!


கலைஞர் அவர்கள் ஒரு முறை கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாராம்.


கண்களைக் கூடத் திறக்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையாய்க் காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த கலைஞருக்குப் ㄈの மணி நேரம் உடனிருந்து சிகிச்சையளித்துக் கொண்டிருந்தாராம் நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்கள்.


கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ச்சல் குறைந்து கலைஞர் கண் விழித்த போது டாக்டர் சொன்னாராம்:


"ரொம்ப நேரமா இங்கேயே இருக்கிறேன். இப்ப உங்களுக்குப் பரவாயில்லை. நான் மருத்துவ மனைக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டு வந்துடறேன். அது வரைக்கும் நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க."


அந்தக் காய்ச்சல் நேரத்திலும் கிளம்பிய டாக்டரை கட்டிலைத் தட்டி அழைத்து கலைஞர் சொன்னாராம்:


"எல்லார்க்கும் உடம்பு சரியில்லேன்னா, டாக்டரான உங்க கிட்டக் காட்டுவாங்க, நீங்க யார் கிட்டப் போய் தலையைக் காட்டப் போறீங்க?"


மனம் விட்டுச் சிரித்த டாக்டரோடு சேர்ந்து கலகலப்பாகச் சிரித்தாராம் கலைஞர்


-பெரியார்தாசன், வெற்றி நிச்சயம், பக். 111-112.


***********************    **************


களவுக் காதலர் கையாண்ட விடுகதை


வ.மு இராமலிங்கம் வெளியிட்டுள்ள 'களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் (முதற் பதிப்பு 1962) முற்றிலும் மாறுபட்ட நூல். இந்நூலில் கதை அடிப்படையில் உள்ள புதிர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பதச்சோறு வருமாறு:


'வெட்டினதால் தப்பிவிட்டேன், வெட்டாட்டால் செத்திருப்பேன்! செத்ததனால் தப்பிவிட்டேன், சாகாட்டால் செத்திருப்பேன்! வந்ததனால் வரவில்லை. வராவிட்டால் வந்திருப்பேன்!'


இரவுக் குறியிடை காதலிக்காகக் காத்திருந்து அவள் வராமற் போகவே வீடு திரும்பி விட்ட காதலன், அவள் வராமைக்கு என்ன காரணம் என அறிந்து வர மறுநாள் அவள் வீடு சென்றான். அப்போது பலரும் உடனிருந்ததால் அவன் காதலி தான் வராமற் போனதற்கான காரணத்தை மறைமுகமாக அவனுக்கு உணர்த்தினாள். அதன் பொருளைப் பின்னர் அவன் முயன்று அறிந்து கொள்கிறான்.


இரவுக் குறியிடை அவனைச் சந்திக்க அவள் வந்தாள். இருட்டில் வழி புலனாகவில்லை. தவறாகக் கிணற்றின் அருகே சென்று விட்டாள். அப்போது மின்னல் வெட்டியது. மின்னலொளியில் கிணற்றில் விழாமல் தப்பித்து விட்டாள். தப்பி வேறு வழியாகச் செல்லும் போது வழியில் கிடந்த ஒரு பாம்பினை மிதித்து விட்டாள். ஆனால் அது ஏற்கனவே செத்திருந்ததால் அவளைக் கடிக்கவில்லை. அதைக் கடந்து மேலும் செல்லும் போது அவளுக்கு பூப்பு (மாத விலக்கு) வந்து விட்டது. எனவே காதலனைச் சந்திக்கும் திட்டத்தைக் கை விட்டு விட்டு அவள் வீடு திரும்பிவிட்டாள்!"


-ஆறு இராமநாதன், தமிழில் புதிர்கள் - ஓர் ஆய்வு,

********************   *********************


சிறுவர் நகைச்சுவை


• ஐந்து வயதுப் பையன் ஒருவன் தன் தகப்பனாரைப் பார்த்து. "நான் பாட்டியைக் கலியாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன்" என்கிறான். "என் அம்மாவை நீ கலியாணம் பண்ணிக் கொள்ள முடியாது" என்று தகப்பன் சொல்ல. "என் அம்மாவை நீ எப்படிக் கலியாணம் பண்ணிக் கொண்டாய்? அது போல நானும் உன் அம்மாவைச் செய்து கொள்வேன்" என்று பதில் சொல்லுகிறான்.


ஊருக்குப் புதியவரான ஒரு சந்நியாசி தபாலாபீசுக்குப் போகும் வழியைப் பற்றி ஒரு பையனிடம் கேட்டார். அவன் வழியைக் காட்டி விட்டு, "தாங்கள் ஊருக்குப் புதிது போலிருக்கிறதே? தாங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான். அவர் "மோட்சத்திற்குப் போகும் வழியை ஜனங்களுக்கு உபதேசிக்கிறேன்" என்று கௌரவமாய்ப் பதில் சொன்னார். "தபாலாபீசுக்குப் போக வழி தெரியாதவர் மோட்சத்திற்கு வழி சொல்லிக் கொடுக்கிறாராம்!" என்று அந்தப் பையன் சிரித்தான்.


- எஸ். வையாபுரிப் பிள்ளை, தமிழர் பண்பாடு -


கம்பன் காவியம், ப. 80.


******************   **********************


இராஜாஜியின் நகைச்சுவை உணர்வு


திராவிட முன்னேற்றக் கழகத்தில் 10.10.1972-இல் ஒரு பிளவு ஏற்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், கலைஞர் கருணாநிதி அவர்களும் கருத்து வேறுபாடு களினால் பிரிந்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17.10.1972 அன்று எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டது. இராஜாஜி அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஆதரித்தார். இராஜாஜியிடம் வாழ்த்துப் பெறுவதற்காக எம்.ஜி.ஆர். சென்ற போது சற்றுக் கால தாமதம் ஆயிற்று. அவர் இராஜாஜியிடம் (திரைப்பட ஷூட்டிங் காரணமாகத் தாமதமாயிற்று என்று விளக்கினார். இராஜாஜி அவர்கள் வேடிக்கையாக "ஷூட்டிங் முடிந்துதான். ரொம்ப நாளாயிற்றே!" என்று கூறினார். அவர் எம்.ஜி.ஆர். 12.2.1967 அன்று சுடப்பட்டதைக் குறிப்பிட்டார். கூடியிருந்தோர் அனைவரும், எம்.ஜி.ஆர். உட்பட, இராஜாஜி அவர்களின் நகைச்சுவை உணர்வை ரசித்தனர்.


**********************    ********************


வாக்காளப் பெருமக்களுக்கு...


வாக்காளப் பெருமக்களே...


நான் உங்கள் வேட்பாளன்! நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் ஜாதிகளை ஒழிப்பேன்! வீதிகளில் உள்ள ஜாதிகளின் பெயர்களை அழிப்பேன்! ஜாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை அகராதியிலிருந்து கிழிப்பேன்! நீ அந்த ஜாதி நான் இந்த ஜாதி என்று பேசுவோரால் தான் தேசம் கெட்டு விட்டது! எனவே -ஜாதியில்லாத சமுதாயத்தை அமைக்க..


எனக்கே ஓட்டுப் போடுங்கள்! நினைவில் இருக்கட்டும் நான் உங்கள் ஜாதிக்காரன்!


-வாலி, பொய்க்கால் குதிரைகள், பக். 69-70.


*******************   :*********************

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன் தமிழ் மருத்துவ அறிவுரைப்பா


மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
 எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்கு சீரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
காமாலைக்குக் கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணெய்
உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
 கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு  நிலவேம்பு  
விக்கலுக்கு மயிலிறகு
 வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீர் 
 வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணெய்
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
 நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
 விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
 உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
 உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!! 

(இப்பாடல்"அருந்தமிழ் மருத்துவம்- 500' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது)


Post a Comment

0 Comments