பால்யம் என்றொரு பருவம் - நூல் விமர்சனம். பொன்.குமார்.

 

பால்யம் என்றொரு பருவம் - கவிதைகள் - மு. மகேந்திர பாபு - ஒரு பார்வை - பொன். குமார்


" அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும், எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார். வகுப்பறைக்குள்ளே  கரும்பலகையில் சொற்களை விதைக்கிற ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல்

தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர பாபு அசை போடுகிறார் இந்தத் தொகுப்பில் " என்று கவிஞர் கல்யாணி. சி எழுதிய வாழ்த்துரையுடன் வந்திருக்கும் தொகுப்பு பால்யம் என்றொரு பருவம். கவிஞர் மு. மகேந்திர பாபுவின் நான்காம் தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான கவிதைகளின் தொகுப்பு இது. 


உலகம் இயந்திரமயமாகிவிட்டது. எல்லோருக்கும் அவசரம். எப்போதும் அவசரம். உண்பதில் அவசரம்.  உழைப்பதில் அவசரம். ஆனாலும் ஒரு மையம் உள்ளது. அதை வைத்தே சுற்றுகிறது. சுழல்கிறது. அன்புச் சக்கரம் என்னும் கவிதையில்


அவசர உலகம்தான் என்றாலும்

அன்புச் சக்கரத்தால்

சுழல்கிறது ஒவ்வொரு நாளின்

காலைப்பொழுது


என்கிறார். வண்டி சக்கரத்திற்கு அச்சாணி போல் வாழ்க்கை சக்கரத்திற்கு அச்சாணியாக அன்பு இருக்கிறது என்கிறார். அன்பு காட்டுவதில் அவசரம் கூடாது. அன்பு வெளிப்படும் தருணங்களை எல்லாம் ஆங்காங்கே சில கவிதைகளில் காணமுடிகின்றது. 


அடையாளம் என்றொரு கவிதை. நாட்டிலும் ஊரிலும் இருந்த பல அடையாளங்களை இழந்து நிற்கிறோம். அடையாளங்களை இழந்தாலும் அந்த இடத்துக்கு பழைய பெயர் அப்படியே தொடரும். அடையாளம் கவிதையில் இழந்த அடையாளங்களை நினைவுக்கூர்ந்துள்ளார். எங்களுரிலும் ஐந்து புளிய மரம் என்று ஓர் இடம் இருந்து. ஐந்து புளிய மரங்கள் அங்கு இருந்ததே காரணம். சாலை விரிவாக்கத்தால் மரங்கள் வெட்டப்பட்டன. ஆனாலும் அப்பெயர் நீடிக்கிறது.


' சாமியைக் காட்டிலும்' கவிதையில் சாமியைக் காட்டிலும் அப்பா உயர்ந்தவர் என்கிறார். 


ஊர்த்திருவிழாவில் சாமி பார்க்க

அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து

இரு தோள்களின கீழ்

கால்கள் தொங்கவிட்டு

தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து

அசைந்து நடக்கும்

அப்பாவின் நடையில்

ஆனந்தப் பாட்டு.

'சாமி தெரியுதா?' என்று

தன் கால் உயர்த்தி

எக்கி நின்று காட்டுகையில்

சாமியைக் காட்டிலும்

உயர்ந்து நின்றார் அப்பா


அனுபவ வெளியீடான இக்கவிதை அப்பாக்களை உயர்த்திக் காட்டியது. அப்பாக்கள்  என்பவர்களும் பிள்ளைகளை உயர்த்திக் காட்டுவதில் பிரியம் உடையவர்களாகவும் பெருமை அடைபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளார். திருவிழாக்களில் தாத்தாக்களும் அப்பாக்களும் தூக்கிக் காட்டுவதை தூக்கிக் காட்டியுள்ளார் கவிஞர்.  


வாசம் என்று தலைப்பில் எழுதப்பட்டிருந்தாலும் அம்மாவின் சமையல் பற்றியே கவிதைப் பாடப்பட்டுள்ளது. அம்மாவின் சமையல் வாசனைக்குக்  காரணம் அம்மியே என்கிறார். 


அம்மாவின் துணை என்னவோ

அம்மி மட்டும்தான்


என்று தெரிவித்துள்ளார். 


செருப்பு  என்னும் தலைப்பில் செருப்பு குறித்து ஒரு சிறப்பான கவிதை எழுதியுள்ளார். 


நாளொரு மேனியும் 

பொழுதொரு வண்ணமுமாகத்தான்

தேய்ந்து கொண்டிருக்கிறது

செருப்புகளோடு கிராமத்து பல

அம்மாக்களின் வாழ்க்கையும்


என்று முடியும் கவிதை செருப்பை மட்டுமின்றி அம்மாவைப் பற்றியும் பேசியுள்ளார். செருப்புக்கும் அம்மாவுக்குமான உறவைக் கவிதையில் காட்டியுள்ளார். செருப்புடன் அம்மாவும் சேர்ந்தே தேய்கிறார் என அம்மாவின் உழைப்பைப் பெருமைப்படுத்தியுள்ளார். 


தாத்தாவைப் பற்றிய கவிதை தொரட்டிக் குச்சி. தாத்தாவிற்கும் தொரட்டிக் குச்சிக்குமான தொடர்பைக் குறித்து பேசியுள்ளார். 


எப்போதும் ஓய்வின்றி உழைத்த

தொரட்டிக் குச்சி

கேட்பாரற்று மூலையில் கிடக்கிறது

தாத்தாவின் மரணத்திற்குப் பின்பு


தாத்தா இறப்பிற்குப் பின் தனித்து மூலையில் கிடக்கிறது தொரட்டிக் குச்சி என தாத்தாவின் பிரிவைப் பேசியுள்ளார். 


மழை மனிதருக்கு தேவை எனினும் மண்ணுக்கு அவசியம் எனினும் மழை வரும் போது மக்கள் ஓடி ஒளியவே முயல்கின்றனர். சிறுமிகள் மட்டும் மழையில் விளையாட முயல்கின்றனர். 


மழை கண்டு

அனைவரும் அஞ்சி ஓட

இரு கை விரித்து

மழையோடு கொஞ்சி விளையாடுகிறார். 

பள்ளிச் சிறுமியொருத்தி

என்று சிறுமி   விரும்பியதைக் காட்டியுள்ளார். மற்றவர்கள் மழையை ஏற்காவிட்டாலும் சிறுமி விரும்பி விளையாடியதாக தெரிவித்துள்ளார். மழையும் சிறுமியுடன் விளையாடவே மண்ணுக்கு இறங்கி வருகிறது.


மரம் ஒரு தாவரம் மட்டுமல்ல ஒரு வரமுமாகும்.  வள்ளுவர் முதல் வைரமுத்து தொடர்ந்து மரம் குறித்து பலரும் எழுதியுள்ளனர். மரம் பற்றிய கவிதைகள் அடங்கிய தொகுப்பும் வெளியாகியுள்ளது. மரத்தைப் பற்றி பலர் பேசி இருக்கையில் ஒரு மரமே பேசுவதான கவிதை இப்படிக்கு மரம். 


மனிதர்களை மட்டுமல்ல

மரங்களை அழிப்பதும்

இனப்படுகொலைதான்


என்பது மனிதர்கள் மீதான குற்றச்சாட்டு.  உண்மையில் மண்ணில் மைந்தன் தாங்கள்தான் என மரம் கூறுவதானது குறிப்பிடத்தக்கது. மரத்தை பாதுகாத்தல் மனிதர்க்கு நல்லது என்கிறார். வெக்கை கவிதையிலும் மனிதர்களின் செயல் குறித்து மரங்கள் பேசுவதாக எழுதியுள்ளார். 


இரவுக் கதை என்றொரு கவிதை. குழந்தைகளுக்கு இரவில் கதை சொல்வது பற்றியது. 


கதை கேட்ட பின்பே

தூங்கும் மகள்

விளையாடிய அசதியில்

விரைவில் தூங்கிப்போனாள்

இன்றைய நாளிற்காக

ஒதுக்கப்பட்ட கதை

தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறது

மகளின் விழித்தலுக்காக


என்பது ஒரு சிறுகதை போலுள்ளது. மகள் உறங்கி விட்டாலும் அன்றைய இரவுக்கான கதை உறங்காமல் உள்ளது என்கிறார். நல்ல கதை. தற்போது கதை சொல்லும் தாத்தா, பாட்டிகளும் இல்லை. கதை கேட்கும் பேரன், பேத்திகளும் இல்லை.  அலைபேசியிலேயே குழந்தைகள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பது வருத்தத்திற்குரியது.   


மனிதர்கள் ஒரு வேண்டுதலுடன் நேர்த்திக் கடன் செய்வர். சொந்த பந்தம் எல்லாம் ஒன்றாக சேர வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடன். ஆனால் அழைப்பிதழில் பெயருக்கு முன்னுரிமைத் தரப்படவில்லை என சொந்தம் பந்தம் பிரிந்து செல்கிறது. இதை விவரிக்கும் கவிதை


சொந்த பந்தங்களை எல்லாம்

ஒன்று சேர்க்க வேண்டும்

என்றுதான்

கோவிலுக்கு நேர்த்திக்கடன்

செலுத்தி வேண்டினான்.

பிரிந்திருந்த சொந்தங்கள்

ஒவ்வொன்றாக வந்து

மீண்டும் சண்டையிட்டுப்

பிரிந்து சென்றனர்

அழைப்பிதழில் தங்கள்

பெயருக்கு முன்னுரிமை

கொடுக்கவில்லை என்று


சொந்த பந்தங்களைப் பற்றிய சரியான கவிதை. சொந்த பந்தங்களை ஒன்று சேர்க்கவே முடியாது. ஏதாவதொரு காரணத்திற்காக அல்லது ஏதாவதொரு காரணத்தைக் கண்டு பிடித்தாவது பிரிந்து சென்று விடுவர். கவிஞரின் அனுபவம் மட்டுமல்ல. 


விடியலில் சேவல் கூவும் என்பர். சேவல் கூவி விடிவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் விடியலுக்கும் சேவலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. விடியலில் தற்போது விதவிதமான வித்தியாசமான ஓசைகள் கேட்கின்றன. 

   

பால்காரரின் மணியோசை

கோலப்பொடி விற்பவரின் குரலோசை, 

கீர வாங்கலயோ கீ...ர

பெண்ணின் இசையோசை

ஒலி பெருக்கியில்

பல தெருக்களையும்

தன் பக்கம் இழுக்கும்

பருத்திப்பால் என்ற

ஒற்றைச் சொல்லின்

தொடரோசை என

இவை எல்லாம்

விடியலை விழிக்கச் செய்கின்றன

சேவல் இல்லா மாநகரத் தெருக்களை


சேவல் இல்லா மாநகர வீதிகளில் என்ன என்ன ஓசைகள் கேட்கின்றன என ஒலிக்கச் செய்துள்ளார். வீதிகள் வியாபாரமயமாகி விட்டன. நுகர்வோர்களைத் தேடியே செல்ல வேண்டிய நிலைமை. இந்த ஓசைகளே மாநகர மனிதர்களை எழுப்பி விடுகின்றன. 


பெருமழை பெய்தால் பெருநகரமெல்லாம் வெள்ளம் தேங்கி நிற்கும். இதற்குக் காரணம் நீர்நிலைகளை ஆக்கிரமித்த மக்களின் சுயநலமே காரணம் என பெருமழை கவிதையில் குற்றம்சாட்டியுள்ளார். மழை கவிதையில் மழையினால் நன்மையும் உண்டு என்கிறார். மழை இரவு ஒன்றையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார். 


பால்ய காலம் வாழ்வில் முக்கியமான காலம். பசுமையான காலம். நினைவில் நிற்கும் காலம். பால்யம் என்றொரு பருவம் என்றொரு கவிதை வாசிக்க வாசிக்க அவரவர் பருவத்தை நினைவூட்டுகிறது. கவிஞரும் அசை போட்டுள்ளார். பால்ய காலத்தை ஒரு குறும்படம் போல் காட்டியுள்ளார். வாசிப்பவரை அவரவர் பால்யத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். 


வீட்டுச் சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில்

தொங்கிக் கொண்டிருக்கிறது

இன்றும் ஒரு சில துணிப்பைகள்

பால்யத்தைச் சுமந்தபடி


என்கிறது பைக்கூடு கவிதை. 


கரிசல் சீமையின் சிறகுகளாய்

எதைச் சொல்ல? 

எதைத் தள்ள? 


எனத் தொடங்கும் கரிசல் கவிதை கரிசல் சீமையைக் கண்முன் காட்டியது. 


குழந்தைகளின் சந்தோசத்தில்

குதூகலமாகிவிடுகிறான்

கைக்கடிகாரமும்

கைச்செயினும் சங்கிலியும்

கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து

குழந்தைகளுக்கு அணிவித்து

அழகு பார்க்கையில்

நிறைகிறது ஜவ்வு மிட்டாய்க்காரனின் மனமும் பணப்பையும்


என்னும் நிறைவுக் கவிதை நெஞ்சை நிறைவுச் செய்கிறது. ஜவ்வு மிட்டாய் விற்கும் அரிதான மனிதர்களையும் பதிவுச் செய்துள்ளார். 


கவிஞர் மு. மகேந்திர பாபுவின் பால்யம் என்றொரு பருவம் கவிதைத் தொகுப்பில் ஐம்பத்தேழு கவிதைகள் உள்ளன. கவிதைகளை மிகக் கவனமாக எழுதி கவனத்தை பார்த்துள்ளார். கவிஞரைப் பாதித்த, கவிஞர் சந்தித்த சம்பவங்களை எல்லாம் மிகவும் சாதுர்யமாக கவிதைகளாக்கியுள்ளார். ஒரு கவிதையை எழுதுவதை விட இக்கவிதையை எங்கு நிறுத்த வேண்டும், எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதிலேயே கவிதையின் வெற்றி இருக்கிறது. இவ்விடயத்தில் வெற்றிப்பெற்றவராக கவிஞர் உள்ளார். மனிதர்களுக்கு அன்பும் மனிதநேயமும் எவ்வளவு அவசியம் என்பதைக் கவிதைகள் மூலம் உணர்த்தியுள்ளார். பாடுபொருள்கள் பேசுப்பொருள்களாக இருந்தாலும் சில மீண்டும் வாசிக்கக் கிடைப்பதைத் தவிர்த்து இருக்கலாம். குறிப்பாக மழை. அல்லது தேர்ந்து தொகுத்து வழங்கி இருக்கலாம். ஒவ்வொரு கவிதையும் எந்த இதழில், எந்த ஊடகத்தில் வெளியானது என்னும் விவரங்கள் கவிஞர் மு. மகேந்திர பாபுவிற்கு ஒரு வாசகப் பரப்பு இருப்பதைக் காட்டுகிறது. பால்யம் என்றொரு பருவம் என்னும் இத்தொகுப்பும் கவிஞரின் கவிதைகளுக்கான வாசக பரப்பை விரிவுச் செய்யும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 


வெளியீடு 

யாப்பு சென்னை 9080514506


கவிஞர் மு. மகேந்திர பாபு 9786141410


பொன். குமார் 9003344742

Post a Comment

0 Comments