ரோசக்காரன் - சிறுகதை - மு.மகேந்திர பாபு.

 

ரோசக்காரன் - சிறுகதை - மு.மகேந்திர பாபு.

சிறுகதை


ரோசக்காரன்


    "என்னலே! அங்க ஒரே கூட்டமா இருக்குது ?"


          "முனியாண்டி மருந்தக் குடிச்சிட்டானாம்".


 "என்னல சொல்லுத? அவனுக்கென்ன புள்ளயா ? குட்டியா ? அவன் எதுக்குலே மருந்தக் குடிச்சான் ?" 


"தெரியல மாமா. இப்பதான் வயல்ல தண்ணி பாச்சிட்டு வந்தேன். வந்தா ஒரே கூப்பாடு. கும்மரிச்சம். என்ன ஏதுனா கேட்டா, முனியாண்டி ஏதோ மருந்தக் குடிச்சிட்டானு ஊருக்குள்ள பேசிக்கிட்டு இருக்காக"


  "பேசிக்கிட்டே இருந்தா கதையாகுமா? டக்குனு ஏதாவது ஒரு மோட்ரு பைக்கப் பிடிச்சு பேர்லாம் பட்டிக்கோ, எட்டயாரத்துக்கோ கூட்டிட்டுப் போனாத்தானபா? என்ன ஏதுனு பாக்க வேணாமா? உயிர்ல வெளயாடலமா? லூசுப்பய. இப்படிப் பண்ணிருக்கானே! முருகன்,  பக்கத்திலிருந்த பாண்டியிடம் சொல்லிக்கொண்டே முனியாண்டி வீட்டருகே வந்தார்.


    " யே! வழிய வுடுங்கபா. அவனக் காத்தோட்டமா ஒக்கார வைங்க. அவனோட ஆத்தா இருக்காளா? அவளுக்குத் தாக்கல் சொல்லிட்டிங்களா? மனுசி ஒத்தயில காடு கரையில மல்லுக்கட்டி வேகாத வெயிலுல வெந்து அஞ்சும் பத்தும் சம்பாரிக்குறா. இவன் என்னடான்னா கொழுப்பெடுத்துப் போயி மருந்தக் குடிச்சிருக்கான். என்ன கழுதயக் குடிச்சான்?"


                   "ரோக்கரக் குடிச்சிருக்கான் தம்பி. பருத்திக்கு அடிக்கிறதுக்காக வாங்கி வச்சிருந்தேன். நேத்துதான் மருந்தடிச்சுட்டு மீதிய வச்சிருந்தேன். பாவிப்பய குடிச்சிட்டாம்போல. அடுப்படியில கொஞ்சம் சிந்தியிருக்கு. அவன் மேலயும் நாறுது. குடிச்சயாடான்னா திருதிருனு முழிக்கான். கண்ணச் சொருகுறான். பயமா இருக்கு தம்பி. ஏதாச்சும் வண்டி இருந்தா வெரசா கொண்டாங்க!" என்ற குரலில் கண்ணீரும் கவலையும் தோய்ந்த குரலில் முருகனிடம் சொன்னாள் முனியாண்டியின் அம்மா முத்துப்பேச்சி.


    முத்துப்பேச்சி, புருசனை இழந்து ஒத்தமரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தைரியக்காரி. கிடைக்கும் வேலை எதுவென்றாலும் மறுக்காமல் சிரிப்பை மூலதனமாக்கிச் செய்பவள். கொஞ்ச நஞ்சமிருக்கும் வயலும், புஞ்சயும் அவளின் வாழ்வாதாரத்தை வளமாக்கிக் கொண்டிருந்தன. 


ஒரே மகன் முனியாண்டி. உள்ளூரில் ஐந்து வரை படித்தான். பக்கத்து ஊரில் ஆறாம் வகுப்புச் சேர்த்துவிட ஒன்றிரண்டு நாள் பள்ளிக் கூடம் போனவன், அதன்பின் தொடர்ந்து போகவில்லை. ரோட்டுப் பாலத்தின் அடியில் படுத்துக்கிடப்பான். பள்ளிக் கூடம் விட்டு எல்லாரும் வரும் நேரத்தில் இவனும் வீடு வந்து சேர்வான். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல, ஆடு மேய்க்கச் சென்ற ராமு தற்செயலாப் பாலத்தின் அடியில் படுத்திருந்த முனியாண்டியைப் பார்த்துவிட்டான்.


  "அண்ணே! எங்கம்மாட்ட என்னயச் சொல்லிராதிங்க. நல்லாருப்பீக" எனக் கெஞ்சினான்.


   "தம்பி, எங்க பொழப்புதான் காட்டிலும் மேட்டிலும் வெயில், மழனு போகுதுனா உனக்கென்னடா ? படிக்கிற வயசுல பள்ளிக் கூடம் போகாம இப்படிப் பாலத்தில படுத்துக் கிடக்கலாமா? இப்படி ஒத்தயில வந்து இருக்கியே! ஏதாவது பூச்சி பட்ட கடிச்சிருச்சின்னா என்ன பண்ணுவ?" அக்கறையுடன் கேட்டு ராமு, முத்துப் பேச்சியின் வீட்டில் கொண்டுவந்து விட்டான். மறுபடியும் அவன் பள்ளிக்குப் போகல. அவனது அம்மா முத்துப்பேச்சி எவ்வளவோ கெஞ்சிப்பாத்தும் பைக்கூட்டத் தொடுவதாக இல்லை. வருசங்களும் ஓடிவிட்டன. இப்போது ஆளும் எளவட்டமாகி விட்டான். 


  பள்ளிக்கூடத்துக்கு அவன் டிமிக்கி கொடுத்தாலும் அவனச் சுத்திப் பள்ளிப்பசங்க கூட்டம் சாயந்திரம் எப்போதும் இருக்கும். களிமண்ணில், பனையோலையில் பொருள்கள் செய்வதில் அவன் படு கில்லாடி.


   "அண்ணே! உங்களுக்கு ரெண்டு நொங்கு கொண்டுவந்திருக்கேன்".


   "எனக்கெதுக்குபா நொங்கு. உனக்குச் சீவித்தாரேன்.நீ சாப்புடு. அதில நொங்கு வண்டி செஞ்சு தாரேன்" எனச் சொல்லி நுங்கின் பக்கவாட்டில் இரண்டு பக்கத்தையும் ஒன்றுபோல சீவி, அதில் அரிவாளால் டிராக்டர் டயர்போல் வெட்டி, இரண்டையும் நுங்கையும் வேலிக்குச்சியால் இணைத்து நுங்கு வண்டி செய்து கொடுப்பான். இரண்டு நுங்கிலும் காய்ஞ்சு போன பனையோலயக் கட்டுவான். நுங்கினைத் தள்ளிச்செல்லும் குச்சியிலும் ஒரு நுங்கினை வைத்து கார் ஸ்டியரிங் போல செய்து கொடுப்பான். பசங்க சந்தோசத்துடன் ஓட்டிச் செல்வார்கள்.


     இதேபோல களிமண்ணில் காளைமாடு, அடுப்பு எனப் பல உருவங்கள் செய்து கொடுப்பான். சோளத்தட்டையை வரிசையாக வைத்து மாட்டுவண்டி செய்வான். பனையோலையிலும் பலவகைப் பொருள்கள் செய்வான். அவன் கைகளுக்குள் பல கலைப்பொருள்கள் மறைந்து இருக்கும்.


     முருகன் செருமிக் கொண்டே கேட்டார். "ஏக்கா. நீ இவன ஏதும் சொன்னியா?"


"ஒழுங்கா வயலுக்கு வேலக்கிப் போடா. அப்பதான் ஒனக்கு கஞ்சின்னென். போக முடியாதுன்னான். எனக்கு வந்த கோவம் இன்ன விதந்தானுல்ல. ஒத்தயில நான் என்னதான் பண்றுது? வயலுக்குப் போகலன்னா கூரையில சொருகி இருக்கிற மருந்தக் குடிச்சி சான்னேன். பய செஞ்சுட்டானப்பா. நா என்னத்தச் சொல்ல ?"


நீ ஒன்னுஞ் சொல்ல வேணாம். "டேய் செல்வம்!  இங்க வாடா. ஒரு வாளியில சாணியக் கரைச்சுக் கொண்டாடா."


"சாணி எதுக்கு ?" 


"அவன் வாயில ஊத்துறதுக்கு! கொண்டாடான்னா ,கொண்டாடா. கேள்வி கேட்குற நேரமாடா இது?"


    "சரி சின்னையா. இதோ கொண்டாரேன்" என பக்கத்திலிருந்த ஒரு ஈய வாளியை எடுத்துக் கொண்டு ஓடினான்.


      அதுவரை வெறுமனே உறுமிக் கொண்டிருந்த முனியாண்டி மெல்லமா தலயத் தூக்குனான்.


" ஏலே இராமு , அவன் வாய அகலிச்சுப் பிடிச்சுக்கோடா. "


  "வாயத் தொறக்க மாட்டிக்கானப்பா".


  "அகப்பைய வச்சு லேசா குத்துடா அவன் வாயில.  தன்னால திறப்பான்.சாணிய ஊத்துனா , மருந்தெல்லாம் மளமளனு கக்கிருவான்"


" யோவ் மாமா ! நா மருந்தக் குடிக்கலயா.சும்மா வெறும் காலி ரோக்கர் பாட்டில்ல தண்ணியக் கலந்து அடுப்பு மேலயும்  , ஏன் மேலயும் தெளிச்சுக்கிட்டேன் ஆத்தாவ பயங்காட்றதுக்கு".


  "ஏன்யா மாப்ள, பெத்த தாய்தகப்பன் ஏதோ கோவத்துல சொன்னா, உடனே உங்களுக்கு ரோசம் வந்திருது. அந்த ரோசத்தப் படிப்புல காட்டுங்க. இல்ல... வேலல காட்டுங்க. அத விட்டுப்புட்டு இப்படி வேண்டாத வேலயச் செஞ்சா என்னத்தச் சொல்றது? நாளப்பின்ன ஒங்களுக்குக் கல்யாணம், பொண்டாட்டி புள்ளனு வந்தாத்தான்யா அப்பன் ஆத்தாவோட அரும தெரியும்" என்றார் முருகன். 


  "அதிருக்கட்டும். மாப்ள நீ மருந்தக் குடிச்சிருக்க . கொஞ்ச நேரத்தில மண்டயப் போட்ருவ. உங்க ஆத்தா பாவம். ஒன்னய விட்டா அவளுக்குத் தொணனு யாருமில்ல. உன்னைய எப்படியாச்சும் காப்பாத்திப் புடுவோம்" என்று சொல்லிக் கொண்டே அமுக்குயா அவன.  வாயில ஊத்துங்கடா" என்றார். 


" அடப் போங்கயா ! எனத் திமிறிக் கொண்டே கம்மாய்க்கு ஓடினான் குளிக்க. ஊருசனம் சிரித்தது. 


 "அக்கா, பயப்படாத! அவன் குடிக்கல. உன்னப் பயங்காட்ட இப்படிப் பண்ணியிருக்கான். அது எனக்கும் தெரியும். அதான் சும்மா சாணியக் கரைச்சு கொண்டாங்கடான் சொன்னேன். நீ தைரியமா இரு" என்றார் முருகன். தன் வயிற்றைத் தடவிக் கொண்டே பெருமூச்சு விட்டாள் வானத்தைப் பார்த்து முத்துப்பேச்சி.


மு.மகேந்திர பாபு, மதுரை.

பேச - 97861 41410

மின்னஞ்சல் - tamilkavibabu@gmail.com


Post a Comment

0 Comments