பால்யம் என்றொரு பருவம் - முன்னுரை

 


பால்யம் என்றொரு பருவம்


      என்னுரை


   அம்மாவின் மடியில் தவழும் சிறு குழந்தையைப் போல் மனம் மாறிவிடுகிறது ஊருக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும். ஒவ்வொரு பருவ காலமும் நிலத்தில் சிறு மாற்றங்களை நிகழ்த்திச் செல்கின்றன. மழைக்காலங்களில் மறுகால் பாய்ந்த கண்மாயில் நண்பர்களுடன் கண்கள் சிவக்கச் சிவக்க தண்ணீருக்குள் முங்கி விளையாடியதும், தண்ணீர் வற்றியபின் மீன்பிடித்து விளையாடியதும், மட்டைப்பந்து விளையாடியதும் என மலரும் நினைவுகளாய் வளர்ந்து கொண்டே இருக்கின்றன பால்யப் பருவத்து நினைவுகள்.


    விடுமுறை நாள்களில் களையெடுப்புக்குச் சென்று 13 ரூபாய் சம்பளம் பெற்றது; அதில் துட்டுமிட்டாய் வாங்கித் தின்றது; கீரைகளைக் கொண்டுவந்து நண்பர்களோடு சமைத்துத் தின்றது; கம்மங்கருதினை வாட்டி கமகமக்கும் மணத்துடன் அசைபோட்டது; அதிகாலையில் எழுந்து பனம்பழம் பொறுக்கியது; மஞ்சணத்தி மரத்தில் ஏறி பழம் பறித்துத் தின்றது; இலந்தப் பழம் பறித்து நண்பர்களுக்குக் கொடுத்தது; பம்பரம், கோலி, கபடி என விளையாடி மகிழ்ந்தது; மனங்கவரும் மருத நிலத்தில் வரப்புச்சீவியும், பாத்தியமைத்தும், கதிர் அறுத்தும், பருத்தியெடுத்தும் என அனைத்தும் என் மன வயலில் இன்றும் கவிதைகளாய் அறுவடையாகிக் கொண்டே இருக்கின்றன.


     பள்ளிப்பருவத்தில் எழுதத் தொடங்கிய கவிதைப் பயணம் இன்று 'பால்யம் என்றொரு பருவம்' என நான்காவது நூலாய் உருவம் பெற்றிருக்கிறது. இதில் உள்ள அனைத்துக் கவிதைகளும் இதழ்களில் வந்து சிறப்பித்த கவிதைகளாகும்.


     கிராமத்தைச் சுற்றிலும் இன்னும் வண்டிவண்டியாய் நினைவுகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவு தூரத்திற்கும் சிறகு விரித்துப் பறந்தாலும் மாலையில் கூடடையும் பறவை போல, பருவங்கள் பலவற்றைத் தொட்டாலும் மனப்பறவை நிறைவில் பால்யத்தில்தான் வந்து இளைப்பாறுகிறது.


   மனிதம் வளர்க்கும் மகத்தான கவிஞர் ஐயா கல்யாணி.சி.( வண்ணதாசன் ) அவர்களின் அணிந்துரை எனக்குக் கிடைத்த பெரும்பேறு. ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.


    கவிதைகளை வெளியிட்டுச் சிறப்பித்த ஆனந்த விகடன், கல்கி, செம்மலர், மகாகவி, இனிய நந்தவனம், இனிய உதயம், தமிழ்நாடு இபேப்பர்.காம், புதிய ஆசிரியன், கொலுசு, உங்கள் நண்பன், ஒளிரும் வளர்மதி என அனைத்து இதழ்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி. ஒவ்வொரு கவிதைக்கும் ஊக்கம் தரும் நண்பர்களுக்கு நன்றி.


    சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட யாப்பு பதிப்பகத்தின் உரிமையாளர் தோழர் செந்தில் வரதவேல் அவர்களுக்கும், நூலாக்கத்திற்கு உதவிய பண்பாட்டு ஆய்வாளரும், தமிழாசிரியருமான மகாராசன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள். 'பால்யம் என்றொரு பருவத்தை' வாசியுங்கள். வாழ்த்துங்கள். தங்களின் ஊக்கம் இன்னுமொரு நூலிற்கான ஆக்கம்.


பேரன்புடன், 

மு.மகேந்திர பாபு, 

பேச - 97861 41410.

மின்னஞ்சல்- tamilkavibabu@gmail.com


அவரவர் உலகம்தான் என்றாலும் அன்புச் சக்கரத்தில் ஒவ்வொரு நாளும் சுழன்றாலும் எங்காவது யாராவது ஒருவர் கவிதை எழுதிக்கொண்டே இருக்கிறார்.  வகுப்பறைக்குள்ளே, கரும்பலகையில் சொற்களை விதைக்கிற’ ஆசிரியராக இருந்தபடியே கரிசல்காட்டு முத்துலாபுரம் சேவு ருசி போல்  தன்னுடைய பால்யம் என்றொரு பருவத்தை நினைவுகளை மகேந்திர பாபு அசை போடுகிறார் இந்தத் தொகுப்பில். 


‘பால்யம் என்றொரு பருவம்’ கவிதை இந்தத்  தொகுப்பின் தலைப்புக் கவிதை. கி.ரா என்றாலும் சமயவேல் என்றாலும் மகேந்திர பாபு என்றாலும் ஒரு கரிசல் காட்டுப் பால்யப் பருவத்தின் பட்டியலான இதை மீறி  எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் எனில் அந்தக் கவிதைக்கு மீசை முளைத்து விட்டது என்று அர்த்தம்.


வெயில் காலமும் மகிழ்ச்சிக் காலமும் காதலிப்பவர்க்கு மட்டும் என்கிறார் மகேந்திர பாபு. பால்ய காலம் எல்லோர்க்குமானது. வைக்கம் முகம்மது பஷீருக்கு மட்டும் அல்ல எல்லோர்க்கும் ஒரு ‘ பால்ய கால சகி’ உண்டு.


பிஞ்சு நினைவுகளுடன் கரிசல் சிறகு விரித்துப் பறக்கிற அந்த நீண்ட, நல்ல, கரிசல் கவிதையில் பால்ய காலத்தின் முழு ஆல்பமும் இருக்கிறது. யார் புரட்டினாலும் அவர் முகம் தெரியும் கருப்பு வெள்ளைப் படங்கள்.


கவிஞர்களும் ஒருவகையில் ஜவ்வு மிட்டாய்க் காரன் தான். அவனிடம் பால்ய காலம் நீட்டும் குழந்தைக் கைகளில் கண் இமைக்கும் நேரத்தில் கைக் கடிகாரமும் காப்பும் சங்கிலியும் கட்டி விடுகிறான். காணாததற்கு உதட்டில் ஒரு துணுக்குத் தேய்ப்பு வேறு.


மகேந்திர பாபுவுக்கு ஒத்தைப் பனை பஸ் நிறுத்தம் நினைவிருக்கிறது. சாமியைக் காட்டிலும் உயரமான அப்பா, கால் உயர்த்தி எக்கி நின்று, சாமி தெரியுதா? என்று காட்டுகிறார். திருவிழாத் தோசையும் தாத்தாவை விட மூன்று பங்கு உயரமான தொரட்டிக் குச்சியும் மறக்கவில்லை.  எதையும் மறக்க முடியாத சந்தோஷமும் எதையும் மறக்க முடியாத வாதையும் உடையவனே கவிதை எழுதுகிறான்.  செருப்பில் தைத்த கருவ முட்களை உருவி எடுத்துக் கழுவிய பின் கவிதையின் சுவரில் சாய்த்துக் காய வைக்கிறான்.


கவிஞன் சங்குப் பூச் செடியின் உச்சியில் கூடு கட்டுகிற புள்ளிச் சில்லைப் பறவையைப் பதிவு செய்கிறான்.


‘விடுவித்தல்’ கவிதையில் வருகிற அப்பா தான் கவிஞன்.  சேற்றின் அடியில் புதையுண்டு ஆயுளை நீட்டிக்கொண்டிருக்கும் விலாங்கு மீனைப் பிடித்துக் கொல்லாது,, பொரியும் புழுவும் போட்டு வளர்த்து, மறுமழைக் கண்மாயில் சேர்க்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு.


கவிஞனின் ஊர்க்கு யார் வந்தாலும்  ‘இப்ப தான் வந்தியா? நல்லா இருக்கியா?’ என்று நலம் விசாரித்துவிட்டுக் கடந்து செல்கிறான். கவிதை நலம் விசாரிக்கும். கவிதை கடந்து சென்றுவிடும்.


கவிஞன் கிராமத்து மழையிரவில் வேலித் தூரில் அண்டும் ஆடுகளை, ஆடுகளின் காலிடுக்குக்குள் அடையும் கோழிகளை, அம்மாவின் பழஞ்சேலையைப் போர்வையாக்கும் அக்காக்க்களை நினைவு வைத்திருக்கிறான்.


‘மழையோடு விளையாடி’ என்ற அந்தக் கவிதை நல்ல பதிவு.   பால்ய பருவம் மழையோடும் வெயிலோடும் விளையாடி மல்லுக் கட்டுவதுதான்.


சில மாதங்களாய் வாழ்வு தந்த கூட்டிற்கும் சோளக் காட்டிற்கும் நன்றி சொல்லி, சிறகு முளைத்த குஞ்சுகளோடு,அறுவடைக்கு முதல் நாள் பறந்து செல்லும் பறவைகள் பற்றிய கவிதை, நமது சங்கப் பாடல்களின் செவ்வியல் தனமையும் ஒரு ஜப்பானிய, சீனக் கவிதையின் உருப் பளிங்கும் உடையது.


‘பால்யத்தில் என் பைக்கூடு/பரிணாமம் பல எடுக்கும்’ என்று துவங்கும் ‘பைக்கூடு’ கவிதை இந்தத் தொகுப்பின்  நல்ல கவிதைகளில் ஒன்று.


’கிராமத்து அடிகுழாயின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றன பெண்களின் ஆயிரமாயிரம் கனவுகளும் கவலைகளும், சில சந்தோஷங்களும்’  உண்மை.


கோடை விடுமுறையும் குடும்ப விவாதமும் நடக்கிற , அவரவர் வீடுகள் இன்னும் ஒரு நல்ல சித்திரம்.


இப்படியான கரிசல் நினைவுகள் ததும்பும் பதிவுகள் உடையது இந்தத் தொகுப்பு.


ஒரு தொகுப்பு என்பதும்  ஒரு வகையில் வாடகை வீடுதான். அதைக் காலி செய்யும் போது , மகளின் பிறந்த நாளுக்கு நட்டுவைத்த தென்னை போன்ற, பூச்செடிகள் போன்ற கவிதைகளை விட்டுவிட்டுத்தான் அடுத்த தொகுப்புக்குச் செல்ல வேண்டியது இருக்கும். 


தினமும் இரவில் கதை கேட்ட பின்பே தூங்கும் மகள், விளையாடிய அசதியில், விரைவில் தூங்கிப் போவாள். இன்றைய நாளுக்கு ஒதுக்கப்பட்ட கதை தூங்காமல் விழித்துக்கொண்டு இருக்கிறது – என்று ஒரு கவிதை இந்தத் தொகுப்பில் இருக்கிறது.


இன்றைய நாளுக்காக, இந்தத் தொகுப்புக்காக ஒதுக்கப்பட்ட, ஆனால் எழுதப் படாத,  சில கவிதைகள் உங்களிடம் இருக்கலாம்.  அதனால் என்ன? அதை நாளைக்கு, அல்லது உங்களின் அடுத்த தொகுப்பில் எழுதுங்கள்.


அவை பால்ய காலத்தை மட்டும் அல்ல, எல்லாக் காலத்தையும் அகாலத்தையும்  பருவத்தையும் பேசி நிலைபெறட்டும்


வாழ்த்துகள்.

கல்யாணி.சி.

13.06.2024

Post a Comment

0 Comments