வெற்றிக் கதவின் திறவுகோல்
என்னுரை
வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் சில நல்ல நண்பர்கள் நமக்கான பயணத்தைச் சிறக்கவும், புதிதாய்ப் பிறக்கவும் செய்துவிடுகிறார்கள். அந்த வகையில் எனக்குள் மாபெரும் ஊக்கத்தைத் தூண்டியவர் பண்பாட்டு ஆய்வாளரும், கவிஞரும், தமிழாசிரியருமான முனைவர் மகாராசன் அவர்கள். இந்த நூல் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் இவரே. முனைவர் மகாராசன் அவர்களுக்கும், சிறப்பாகப் பதிப்பித்த யாப்பு பதிப்பகத்தின் உரிமையாளர் தோழர் செந்தில் வரதவேல் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பள்ளிப்பருவத்தில் கவிதைகள் என்று ஏதோ எழுத அதை ஊக்குவித்து, புத்தகமாகவும் ஆக்கித் தந்தவர் எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் அவர்கள். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் போது, அன்றைய காலகட்டத்தில் வெளியான 'தேசிய கீதம்' திரைப்படத்தில் 'என் கனவினைக் கேள் நண்பா' என்ற கவிஞர் வாசனின் பாடலுக்கான எனது விமர்சனம் ஒன்று சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் (15-03-1999 ) வெளியானது. அதன்பின் கதிரவன் நாளிதழின் சூரியகாந்தி இணைப்பில் 'நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்' என்ற எனது கட்டுரை (23-06-2002 ) ல் வெளியானது. கட்டுரை எழுதுவதற்கான அடித்தளமாக அமைந்தது இக்கட்டுரை. அதன்பின் 'வகுப்பறை' மாத இதழில் நண்பர் இளம்பரிதி அவர்கள் 'முதல் நாள் முதல் வகுப்பறை' என்ற தலைப்பில் ஆசிரியப் பணியின் முதல் நாள் அனுபவங்களை எழுதுவதற்கு வாய்ப்புத்தந்தார். 'ஸ்மார்ட் மதுரை' மாத இதழில் ஆசிரியர்களின் சாதனைகள் குறித்து எழுதுவதற்கு அதன் ஆசிரியர் செந்தில் வாய்ப்பளித்தார்.
முழுமையானதொரு கட்டுரையாளனாக மாற்றிய பெருமை மதுரைப் பதிப்பு தினமலர் நாளிதழுக்கும், அதன் செய்தி ஆசிரியரும், இதழாளருமான ஜீ.வி.ஆர் என்றழைக்கப் படக்கூடிய ஜி.வி.இரமேஷ்குமார் அவர்களையே சாரும். அற்புதமான வாழ்த்துரை வழங்கிய ஐயா ஜி.வி.ஆர். அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. எனது 11 கட்டுரைகளை வெளியிட்டு வாசகர்களின் பாராட்டு மழையில் நனையச் செய்தது தினமலர் நாளிதழ். தினமலர் நாளிதழின் நடுப்பக்கத்தில் 'என் பார்வை' என்ற தலைப்பில் அறிஞர் பெருமக்களின் சிறப்பான கட்டுரைகள் பல ஆண்டுகளாக வெளிவந்தன. தமிழ்த்தேனீ.பேரா.இரா.மோகன், நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம் போன்றோர்களின் கட்டுரைகளைப் படித்து வாழ்த்துக்கூறும் போது, உங்களின் கட்டுரைகளும் இடம்பெற வேண்டும். நீங்களும் எழுதுங்கள் என்று ஊக்கமளித்த அந்த நல்ல உள்ளங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
இந்து தமிழ்திசை நாளிதழின் மாணவர்-ஆசிரியர் பதிப்பாக வெளிவந்த 'வெற்றிக்கொடி' நாளிதழில் நான்கு கட்டுரைகள் வெளியாகின. தொடர்ந்து ஊக்கம் தரும் இந்து தமிழ்திசை நாளிதழுக்கும், இதழாளர் சுசித்ரா மேடம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
அவ்வப்போது எனது கவிதைகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்குவித்துவரும் இதழாளர் திரு.ப.திருமலை ஐயா அவர்களுக்கும், நமது மண்வாசம் இதழுக்கும் மனம் நிறைந்த நன்றி. தமிழ்நாடு இபேப்பர்.காம் ஆசிரியர் செல்வி இரா.காயத்ரி அவர்களுக்கும் நன்றி.
பல்வேறு பணிகளுக்கிடையிலும் சிறப்பானதொரு அணிந்துரை வழங்கிய பேராசிரியப் பெருமனார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு.ம.திருமலை ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
எப்போதும் என்னை எழுதத் தூண்டும் பேராசிரியர், தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணிநிறைவு செய்த ஐயா.திரு.இ.பேச்சிமுத்து அவர்களின் விரிவான வாழ்த்துரைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. உடன் இருந்து ஊக்குவிக்கும் ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
ஆசிரியப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்களுக்குக் கடந்த இரண்டாண்டுகளாக "ஆற்றல் ஆசிரியர்" விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். அந்த வகையில் இவ்வாண்டிற்கான "ஆற்றல் ஆசிரியர்" விருதுடன் "வெற்றிக் கதவின் திறவுகோல்" என்ற இக்கட்டுரை நூலும், "பால்யம் என்றொரு பருவம்" என்ற கவிதை நூலையும் பண்பாட்டு ஆய்வாளரும் ஆசிரியருமான மகாராசன் அவர்களின் வழிகாட்டலில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
உடனிருந்து ஊக்கம் தரும் அன்பு இணையர் மு.சங்கீதா அவர்களுக்கும், அன்புச் செல்வங்கள் ம.சஹானா, ம.சஞ்சனா அவர்களுக்கும் பேரன்பும் நன்றியும்.
மு.மகேந்திர பாபு,
பேச - 9786141410
மின்னஞ்சல் - tamilkavibabu@gmail.com
வாழ்த்துரை
வெற்றிக் கதவின் திறவுகோல் -
வாழ்த்துரை
.....
மகேந்திரபாபு தரும் மகத்தான திறவுகோல்!
......................................
தன்னம்பிக்கைப் பேச்சாளர், சுற்றுச்சூழலியலாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர், ஆசிரியர் திரு.மகேந்திர பாபு. அவரது அற்புதமான கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
தன்னம்பிக்கை தொடர்பாக நிறைய நூல்கள் நாள்தோறும் வெளியாகின்றன. சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியம் தொடர்பாகவும் கட்டுரை, ஆய்வு நூல்கள் வெளியாகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு, இந்த நூலில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் உண்டு, சூழலியல் கட்டுரைகளும் உண்டு என்பது தனிச்சிறப்பு.
தினமலர் உட்பட பத்திரிகைகளில் எழுதிய பல தேர்ந்த கட்டுரைகளை நூலில் சேர்த்திருக்கிறார். ஆசிரியர் மகேந்திரபாபு, தினமலர் நாளிதழுக்குக் கட்டுரை எழுதி அனுப்பும் போது கவனித்திருக்கிறேன். இனிமை மொழியில், எளிமைத் தமிழில், அழகான வாக்கிய அமைப்புகளில் எப்போதும் எழுதுவார். அந்த வகையில் தான் இந்த நுாலில் உள்ள அனைத்து கட்டுரைகளும் உள்ளன.
'மரம்...மனிதனின் மூன்றாவது கரம்' என்கிறார். அற்புதமான கற்பனை வளம். 'மரங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சி இருக்கும் இடம்' என்கிறார். உண்மையே! இது போன்ற கட்டுரைகள் பல இந்நூலை அலங்கரிக்கின்றன.
'பள்ளியில் செய்வோம் பசுமைப் புரட்சி’ என்ற கட்டுரை காலத்தின் கட்டாயம். சுற்றுச்சூழலை காப்பதன் அவசியம், மரங்கள் வளர்வதன் தேவை குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய தருணம் இது. இதனை இந்த நூலில் இடம்பெற்றுள்ள அழகான கட்டுரைகள் மூலம் மாணவர் சமுதாயத்திற்குக் கடத்தும் கடமையைச் செய்திருக்கிறார் ‛லட்சிய ஆசிரியர்’ மகேந்திர பாபு அவர்கள். எனவே மாணவர்கள் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும். இதில் அவர்களுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை தரும் கட்டுரைகள் மட்டுமல்ல, போட்டி தேர்வுகள் எழுதும் போது பயன்படும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
நுாலின் தலைப்பு...‛வெற்றிக் கதவின் திறவுகோல்’.
வெற்றியை நோக்கிச் செல்லும் பாதை எளிதானது அல்ல. கதவுகள், தடுப்புகள், சுவர்கள், வேலிகள் என...பலவும் வெற்றியின் பாதையில் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றைக் கடந்து தான் வெற்றியை வசமாக்க முடியும். இங்கு வெற்றி என்ற வீட்டிற்கான கதவை திறக்கும் ‛திறவுகோலை’ தனது திறம்பட்ட எழுத்துத் திறனால் நமக்குத் தருகிறார் நுாலாசிரியர். அதனைப் பயன்படுத்திக் கொள்வது நூலைப் படிக்கும் நமது பொறுப்பு.
இந்த அற்புதமான நூலை தமிழ் வாசிப்புலகமும், மாணவர் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நுாலாசிரியர், பள்ளி ஆசிரியர் திரு.மகேந்திரபாபு அவர்கள் இன்னும் பல மகத்தான நூல்களை எழுத வேண்டும்; எழுதுவார்! வாழ்த்துகள்.
-ஜி.வி.ரமேஷ் குமார்,
செய்தி ஆசிரியர்,
தினமலர்,
மதுரை.
அணிந்துரை
முனைவர்.ம.திருமலை,
முன்னாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
ஆளுமை மேம்பாடு, தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், உயர் விழுமியங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பல பொருண்மைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பாக "வெற்றிக் கதவின் திறவுகோல்" என்ற இந்நூலினை எழுதியுள்ளார் திரு.மகேந்திர பாபு. மாந்தர் தம் மனக்கோட்டம் தீர்க்கும் நூலொ போல் செயல்படும் உன்னதமான ஆசிரியப் பணி புரிபவர். மதுரை நகரில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரிய நண்பர்கள் எனக்கு அறிமுகமானவர்கள்; கற்பித்தல் பணியைக் கடமையாகக் கருதி 'கடனே' என்று பணிபுரிபவர்களல்லர் இவர்கள்.
கற்பித்தல், மாணவர் நலன், சமூக நலன் ஆகியவற்றை உயிர்மூச்சாகக் கொண்டு செயல்படும் உயர்ந்த மனிதர்கள் இவர்கள். மகேந்திர பாபு, சிவா, சரவணன் போன்ற பள்ளியாசிரியர்ககள் கற்பித்தலை உயிர் மூச்சாகக் கொண்டவர்கள். சிறந்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் கடமையுள்ளவர்கள். இவர்கள் அனைவரையும் அவர்களது முகநூல் பதிவ்களின் வழியே யான் அறிந்துள்ளேன். இவர்களுள் ஒருவர் திரு.மகேந்திர பாபு. மாணவர் நலனுக்காக உழைத்துவரும் மகேந்திர பாபுக்கு ஓர் அணிந்துரை வழங்கி அவர் மனத்தில் ஊக்கம் ஊற்றெடுக்க உதவுவது என் கடமை என்று நான் கருதுவதால் இவ்வணிந்துரையை எழுத முனைந்தேன்.
பல்வேறு நாளிதழ்கள், வார, மாத இதழ்களில் எழுதப்பட்ட இருபத்தாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வாசிப்பதற்குச் சிரமம் இல்லா எளிய கட்டுரைகள் இவை. சிறுவர் முதல் பெரியவர் எவரும் இக்கட்டுரைகளை வாசித்துணரலாம்.
சிறந்த கட்டுரையின் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துவர் திறனாய்வாளர்.
1. ஒருமைப்பாடு ( Unity of theme )
2.பொருட்பொலிவு
3.ஒழுங்குமுறை (Order)
4. பத்தியமைப்பு
5.சுவைமிகு நடையமைதி
6.சமூகத்தின் தேவையை நிறைவு செய்தல்.
திரு.மகேந்திர பாபு அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பில் மேற்குறிப்பிடப்பட்ட கூறுகள் பொருந்தியிருக்கின்றன என்ற உண்மையைக் கட்டுரைகளை வாசிப்பவர் சிரமமின்றி உணர்வர் என்பது என் எண்ணம்.
இன்றைய சமூகம் எவ்வளவுதான் அறிவுத்துறையில் முன்னேறியிருப்பினும் மனிதப் பண்பின் சீர்மையினை உணரவில்லை. இதற்குக் காரணம் மிகுதியான பணம் ஈட்டுதல் என்ற குறிக்கோள் மக்கள் மனத்தில் பேரிடம் பெற்று வளர்ந்தமைதான். மக்கள் திரளின் இப்பண்பு வேண்டுமானால் நூல்களை வாசிப்பதுதான் தீர்வு! எனவே இல்லந்தோறும் நூலகங்களை அமைக்க வேண்டுவது உடனடித்தேவை என்பதை ஒரு கட்டுரையில் திரு.மகேந்திர பாபு குறிப்பிடுகிறார்.
ஒரு சிறந்த கட்டுரை வாசகனுக்கு ஆர்வமூட்டும் வகையில் பொலிவுடன் அமைதல் வேண்டும். நூலகம் பற்றிய கட்டுரையில் "அக்கறை உள்ள பெற்றோரும் அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி" என்றும் "மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள்" என்றும் வரும் இடங்களில் உரைநடையின் ஓசை நயம் மிளிர்கிறது.
இன்றைய வாழ்வின் தேவைகளைக் குறிக்கும் கட்டுரைகள் என்ற வகையில் "மனித வாழ்வில் மரங்கள்" என்ற தலைப்பிலான கட்டுரை சிறப்பானது. மரங்கள் நிழல் தருபவை மட்டுமல்ல; மண்ணின் மாண்பைக் காக்கும் கடமையையும் கொண்டிருந்தது என்பதை ஒரு கட்டுரையில் சுட்டுகிறார். இன்றைய மழைநீர் சேகரிப்பு முறைக்கு அசோகரே முன்னோடி என்று கட்டுரையாசிரியர் குறிப்பிடுவது புதிய செய்தி.
மகேந்திர பாபு அவர்களின் கட்டுரைகளில் பொருள் தொடர்பு காணப்படுகிறது. கட்டுரையின் முதன்மை நோக்கிலிருந்து நூலிழை கூடப் பிறழாமல் செய்திகளை விளக்கும் ஒருமைப்பாடு (unity of theme) காணப்படுவது பாராட்டத்தக்கது. சான்றாகப் புதுமைப் பித்தன் பற்றிய கட்டுரையைக் குறிப்பிடலாம். கட்டுரையில் முதற்கண் புதுமைப் பித்தனின் இலக்கிய உலக வருகையின் போது நிலவிய தமிழ் இலக்கியச் சூழலைக் குறிப்பிடுகிறார். தொடர்ந்து புதுமைப்பித்தன் பற்றிய தனிப்பட்ட தரவுகளைக் கூறுகிறார். மூன்றாவதாக புதுமைப்பித்தனின் நூல்கள் வெளிவந்த சூழல்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். நான்காவதாய் புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' , 'ஒரு நாள் கழிந்தது' போன்ற சிறுகதைகளை விமர்சனம் செய்கிறார். இறுதியில் புதுமைப்பித்தனின் மறைவு பற்றிய தரவுகள் கூறப்படுகின்றன. இவ்வகையில் கட்டுரையின் முதன்மை இழை அறுந்துவிடாமல் பொருட்தொடர்பும் ஒருமையும் கொண்டு கட்டுரையை அமைத்திருக்கின்றார் மகேந்திரபாபு. கட்டுரை எழுதும் கலை இவருக்கு மிக இயல்பாகக் கைவரப்பெற்றிருக்கிறது என்பதற்கு இக்கட்டுரை தக்க சான்று.
மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தினைத் தூண்டுவது குறித்த கட்டுரை பொருட்பொலிவு உடையதாகும். மாணவர்களின் வீட்டுப்பாடக் குறிப்பேடுகளில் ஆசிரியர் "நன்று" என்றும் பாராட்டும் வகையில் நட்சத்திரக் குறிகளும் இடுவது மாணவர்களின் ஆர்வத்தினைத் தூண்டும் என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்து மாணவர்களிடம் கொடுக்கும்போது பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினால் அந்த மாணவர் மகிழ்வர். குறைந்த மதிப்பெண் பெற முனைப்புப் பெறுவார்.
மாணவர்களுக்குச் சிறிய அன்பளிப்புப் பொருள்கள் தருவது மேலும் சிறப்பு; கொடுக்கப்படும் பொருள் சிறிதெனினும் அது மதிப்பு மிக்கதாகக் கருதப்படும். நான் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இவ்வாறு ஊக்குவித்தல் முயற்சிகள் செய்ததுண்டு. மகேந்திர பாபுவின் இக்கட்டுரை வெறும் அறிவுரை மட்டுமல்லாமல் அனுபவ உரையாகவும் திகழ்கிறது. இதனால் கட்டுரை 'பொருட்செறிவு' உடையதாகத் தோன்றுகிறது.
ஒரு கட்டுரையின் மையச்செறிவை எடுத்துக்காட்டப் பல்வேறு துணைக்கருத்துகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுவது தேவை. "மரம்-மனிதனின் மூன்றாவது கரம்" என்ற கட்டுரையின் தலைப்பே காட்சிப்படுத்தும் பண்புடையது. இதில் கருத்துகள் ஓர் ஒழுங்குமுறைப்படிக் கூறப்பட்டுள்ளன. முதற்கண் மரத்தின் இன்றியமையாமையைப் பழமொழிகள் வாயிலாக உணர்த்துகிறார். மரங்கள் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இனிமை தருகின்றன என்பது கூறப்படுகிறது. மரங்கள் மனித உள்ளங்களின் ஆழ்மனத்தில் புதையுண்டு கிடக்கின்றன என்ற செய்தியும், மனிதனுக்கும் மரத்திற்குமிடையேயான ஒப்புமைகளும் உறவுகளும் கூறப்படுகின்றன. நிறைவாக மரங்கள்தாம் மனிதனைக் கடக்கும் தெய்வம் என்பது கூறப்படுகிறது. மரங்களின் பயன்குறித்த அறிவியற் செய்திகளுடன் கட்டுரை முடிகிறது. மரங்களின் பயனை அறிவியல் முறைப்படிக் கூறுவதுதான் கட்டுரையின் முதன்மை நோக்கம்! அதை முதலில் கூறிவிடாமல் படிப்படியாகக் கூறிப் புரிய வைப்பது ஒழுங்குமுறை எனப்படும். மகேந்திர பாபு அவர்களின் பல கட்டுரைகளும் இத்தகைய ஒழுங்குமுறை கைவரப்பெற்றவை என்பதை ஒரு சிறந்த பண்பாகக் கூற விரும்புகிறேன்.
கட்டுரை உரைநடை வடிவத்தில் அமைந்தது என்றாலும் அதில் ஓசைநயம் இன்றியமையாததாகும். அறிஞர் அண்ணா, திரு.வி.க, வலம்புரிஜான் போன்ற அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளில் ஓசைநயமும் கருத்தும் இணைந்திருக்கும். "வெற்றிக் கதவின் திறவுகோல்" என்பது உருவகத்தன்மை பெற்ற தலைப்பு. "சூழல் காத்துச் சுகம் பெறுவோம்", "கற்கத் தூண்டும் கைதட்டல்", "பயன் தரும் பனைமரம்", "மண் வளமே மனித வளம்" போன்ற எண்ணற்ற தொடர்களை இந்நூலிலிருந்து சான்று காட்டலாம். இத்தொடர்கள் ஓசைநயம் நிறைந்தவை என்பது விரித்துரையாமலே விளங்கும்.
ஆசிரியர் திரு.மகேந்திர பாபு கடமையைக் கண்போலக் காப்பவர். மாணவர் நலனில் அக்கறை கொண்டவர். இனிய பண்புகள் உடையவர். வயதில் மூத்தோரை மதிப்பவர். "தொட்டனைத்தூறும் மணற்கேணி போல" அறிவைப் பெருக்கி வருபவர். அவரது "வெற்றிக் கதவின் திறவுகோல்" என்ற இந்நூல் பயன்படக் கூடியது; படிக்கப் படிக்கத் திகட்டாத சுவையுடையது. எனவே திரு.மகேந்திர பாபுவைப் பாராட்டி மகிழ்கிறேன். இத்தகைய இளைஞர்கள் ஊக்குவிக்கப் படவேண்டியவர்கள்.
தமிழ்கூறு நல்லுலகம் இவரது நூலை ஏற்று ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். திரு.மகேந்திர பாபு அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
அன்புடன்,
ம.திருமலை.
மதுரை-16,
30-06-2024
ஆய்வுரை
பேரா.இ.பேச்சிமுத்து,
மேனாள் தமிழ்த்தறைத் தலைவர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை.
தம்பி மு.மகேந்திர பாபுவைப் பெரும்பாலும் அவரின் செயல்வழி அறிந்தவையே அதிகம். ஓர் ஆசிரியராக இருந்து அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் காட்டிய அன்பும் அவர்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையும் தொடக்கத்தில் நான் அறிந்தவை. அதன் தொடர்ச்சியில்தான் ஒரு நல்லாசிரியருக்கான தகுதிப்பாட்டோடு அவரது எழுத்துலகத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
முகநூலில் அவரது நிழற்படப் பதிவுகளின் பகிர்வுகள் அவரின் இயற்கை நேயத்தையும், பறவைகளின் மேல் அவர் வைத்திருக்கும் தீராத விருப்பத்தையும் அறியக் கிடைத்த ஆவணங்கள் ஆகின. இடையிடையே அவரின் கவிதைகளையும் - எளிய குழந்தைகளுக்கான, மானிட மீட்சிக்கான கவிதைகளையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பேச்சாளுமையும் கைவரப்பெற்ற இளைஞராகவும் கேள்வியுற்றிருக்கிறேன். மொத்தத்தில் தம்பி மகேந்திர பாபு பல்திறன் கொண்ட படைப்பாளி என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
இப்பொழுது "வெற்றிக் கதவின் திறவுகோல்" என்னும் தலைப்பிலான 'தன்னம்பிக்கை மற்றும் சூழலியல்' தொடர்பான கட்டுரைகள் அடங்கிய நூலாக்கப் பிரதியை அனுப்பி வைத்திருந்தார். படித்துப் பார்த்த வகையில், தம்பியின் மனக்கிடக்கை குறித்த ஆழ, அகலங்கள் புலப்பட்டன. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் தேவைப்படுகின்ற- காலத்திற்கேற்ற கருத்தாக்கங்களைக் கட்டுரையாக வடித்துத் தந்திருப்பது பாராட்டிற்குரியது.
மொத்தம் உள்ள 25 கட்டுரைகளில் ஏறத்தாழ பத்துக் கட்டுரைகளுக்கு மேல் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுக்கு ஆனவை. மண்ணையும், மரத்தையும், பறவைகளையும் நேசிக்க வைப்பவைகளாக - ' மண்வளமே மனித வளம்', 'மண்ணில் மலரட்டும் மரமும் மனிதமும்', 'பள்ளியில் செய்வோம் பசுமைப்புரட்சி', 'பயன் தரும் பனைமரம்', 'மரம் மனிதனின் மூன்றாவது கரம்', ' பறவைநேயம் அற்புதமானது', 'பாடித்திரியும் பறவைகள் - சிட்டுக்குருவி', 'சூழல் காத்துச் சுகம் பெறுவோம்', 'மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்', 'மனித வாழ்வில் மரங்கள்' ஆகிய கட்டுரைகள் அமைகின்றன.
'இன்பம் தரும் இனிய கிராமங்கள்' என்றும் 'எங்கள் ஊரின் சிறப்பு' என்றும் எளிய மக்கள் வாழும் இனிய சிற்றூரின் நேயத்தை நினைவு கூர்கிறார். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கம் தரும் வகையில் 'உள்ளம் மகிழ இல்லந்தோறும் நூலகம்', 'ஏற்றம் தரும் இளைஞர்கள்', 'வெற்றிக்கு வித்திடும் ஊக்கமும் பாராட்டும்', 'வெற்றிக் கதவின் திறவுகோல்', 'கற்கத் தூண்டும் கைதட்டல்' போன்ற தலைப்புகளில் கருத்துரைக்கும் பாங்குப் பாராட்டத்தக்கது.
புலனடக்கத்தின் மேன்மைக்கு வள்ளுவன் இந்திரனை எடுத்துக்காட்டிய மரபில் 'ஐம்புலன் ஆட்சிகொள்' என்று தம்பி எடுத்துரைக்கிறார். 'பெண் எனும் பெரும்சக்தி'யைப் போற்றுகிறார்.
தம்பி மகேந்திர பாபு அவர்களின் கட்டுரை நடையில் பெரும்பாலும் கவிதையே ஆளுமை செய்கிறது. அடிப்படையில் கவியுள்ளம் வாய்க்கப்பெற்ற காரணத்தால் கட்டுரையும் ஆங்காங்கே கவிதையாய்க் கனிகிறது. இதோ, 'கல்வி தந்த வள்ளல் பெருந்தகை' என்று கர்மவீரர் காமராசர் குறித்த தொடக்கத்தைப் பாருங்கள்.
"கதராடைக்குள் மறைந்திருந்த கருப்பு நிற மேனிக்குள், கரிசல் காட்டின் பருத்திப் பூவாய்ப் பூத்திருந்தது அவரது உள்ளம். பட்டிதொட்டி எங்கும் அவரது பாதம்பட, கரைபுரண்டு ஓடியது கல்வி வெள்ளம். காட்டுமல்லி வாசமென மணத்தது அவரது பாசம். விரிசல் விழுந்த கரிசல் நிலத்தை இணைக்கும் தண்ணீர்போல வாழ்ந்தவர்".
'நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்' குறித்த கவலையைப் பதிவு செய்வதோடு, அதற்கு ஒரு முன்மாதிரியாகத் தானே, 'வில்லுப்பாட்டில் நெகிழிப் பயன்பாடு' என்ற தலைப்பில் வில்லிசைக் கலையை அரங்கேற்றியிருப்பது பாராட்டிற்குரியது. நெகிழியின் ஆதிக்கத்தையும் அச்சுறுத்தலையும் முன்பே சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளில் குறிப்பிட்டதோடு, கலை வடிவத்தில் அதனை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
'எழுத்தில் புதுமைகள் புகுத்திய புதுமைப்பித்தன்' குறித்த பதிவு மனதைத் தொடும்படியாக இருந்தது. அவரது வாழ்வையும், வறுமையையும் படைப்பாக்கத்தோடு இணைத்துச் சொன்ன விதமும் இறுதியில் ஏக்கமாகவே முடிந்த அப்படைப்பாளனின் கனவு நோயாலும் மரணத்தாலும் முற்றுப்பெற்றதை உரைத்த விதமும் சிறப்பானது.
இயற்கையின் ஏற்றமாகத் திகழும் மரங்கள் குறித்த தேடலும் நேயமும் தம்பிக்கு மிக அதிகம். குறிப்பாகப் 'பயன்தரும் பனைமரம்' என்று எழுதிய கட்டுரை முழுவதும் அனுபவித்து எழுதியதாக இருக்கிறது. வள்ளுவன் முதற்கொண்டு சத்திமுத்தப் புலவரின் தூது வரை பனை குறித்த பதிவைத் தொட்டுக்காட்டி, பனையின் எல்லையில்லாப் பயன்பாட்டை எடுத்துரைத்து, நிறைவாக 'பனைத் தொழிலாளர் வாழ்வு மேம்பட' வேண்டிய வேட்கையே தம்பியின் மனிதத்தை எடுத்துரைக்கிறது.
மதுரையின் சிறப்புகளைப் பலப்படச் சொல்லிவிட்டு, இறுதியில் 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்றது எப்படி? பழைமை மாறாமல் பல்லாயிரம் ஆண்டுகளின் எச்சங்களை அடைகாத்து வைத்திருக்கும் ஒரு சில உலக நகரங்களின் வரிசையில் மதுரை முதன்மையானது. வேளாண் சமூகத்து மக்கள் குடியிருக்கும் கிராமங்களின் தொகுப்பே மதுரை. இடையில் வந்து பெரிய அளவில் இடம்பிடித்தது நெசவு. இன்னும் பல்வேறு தொழில்சார் மக்கள் இடையிடையே இருந்த, இருக்கும் இருப்பு. வைகை வரவில்தான் வேளாண் வளம் பெருகி, கோயில்களும் கலைகளும் துணைத்தொழில்களும் பெருகி அன்றிலிருந்து இன்றுவரை 'பழைமைக்குப் பழைமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய்த் திகழ்கிறது மதுரை'. கல்வி செழித்த மதுரையில் இன்று அரசியலும் புதுப்புது அவதாரம் எடுக்கிறது.
மகேந்திர பாபு அவர்கள் எழுத்தில் எடுத்துச் சொல்வதோடு இருந்துவிடாமல் செயலிலும் செய்து காட்டுவது சிறப்பு. அதற்கொரு சான்றாக 'பள்ளியில் செய்வோம் பசுமைப்புரட்சி' எனும் கட்டுரை அமைகிறது. இல்லந்தோறும் நூலகம் வைப்பதும், திறந்த வெளிகள் எல்லாம் மரங்கள் வைப்பதும், பறவைகள் மீது பாசம் காட்டுவதும் என 'எல்லா உயிரும் இன்புற்று வாழ' எண்ணும், எழுதும், இயங்கும் தம்பியின் சிந்தையும் செயலும் போற்றுதலுக்கு உரியது. 'படைப்பாக்க முயற்சியில் இன்னும் பற்பல படைப்புகளைத் தந்து சிறக்க வேண்டும்' என்று உளமார வாழ்த்துகிறேன்.
0 Comments