சிறுகதை - திரும்பி வந்த செல்வம்

 



தினமலர் - வாரமலர் - சிறுகதைப்போட்டி.


திரும்பி வந்த செல்வம்


     இலட்சுமியம்மாவைப் பார்த்ததும் கட்டுத்தறியில் படுத்திருந்த மாடுகள் தலை தூக்கி "அம்மா" எனக்கத்தின.

   "இதோ! வந்துட்டேன்... கொஞ்சம் பொறுங்கடா" எனச்சொல்லியபடியே தன் கையில் இருந்த வயர் கூடையை வீட்டிற்குள் வைத்துவிட்டு மாடுகளைப் பார்த்து வந்தாள்.

   பக்கத்தில் வந்ததும் செவல மாடு தன் நாவினால் கையை நக்கியது.

"பசிக்குதா? இதோ உங்க எல்லாரையும் அவுத்துவிடுறேன். கீகாட்ல மேச்சல நல்லா முடிச்சிட்டு வரலாம்" எனச்சொல்லியபடியே கழுத்துக் கயிறினை ஒவ்வொரு மாட்டிற்கும் அவிழ்த்துவிட, துள்ளலில் எக்காளம் போட்டுக் கிளம்பின மாடுகள்.

  மாடுகள் வைத்திருக்கும் சம்சாரிகள் நிம்மதியாய் எடுத்த வேல ஏண்ட வேல பாக்க முடியாது. அசலூர்ல நல்லது கெட்டது போய் நாலு சாதிசனத்தோட இருந்து நிம்மதியாப் பேசி வர முடியாது.

               "என்னடியாத்தா! கால்ல வெந்நித்தண்ணிய ஊத்திக்கிட்டு வந்தவ மாதிரி, வந்தசோடுல போகணும்ங்கிறவ. நாளப்பின்ன ஓன் வூட்டு விசேசத்துக்கும் நாலு பேரு வந்து போகணும்னு நெனக்கிறியா இல்லயா?" அவ்வப்போது ஊரார்களின்  கேள்வி நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் குத்தினாலும். மாடு கன்னுகளப் போட்டுட்டு நிம்மதியாய் இங்க எப்படி இருக்கறது என ஒரே ஓட்டமாய்ப் போன வேகத்தில் வந்துவிடுவாள் இலட்சுமி அம்மாள். 

    இதோ பக்கத்து ஊரில் நடந்த ஒரு விசேசத்திற்குப் போய் போனசோட்ல வந்தாச்சு. மாடுகளயும் இரைக்குக் கொண்டு போக அவுத்துவிட்டாச்சு. எத்தன கிலோமீட்டர் மேச்சலுக்குச் சுத்தி வந்தாலும், எங்க விட்டாலும் மாடுக அத்தனையும்  இருட்டும் முன் வீடு வந்து சேர்ந்துவிடும்.

  வீட்டில் வளரும் தான் பெத்த பிள்ளைகளை எப்படிக் கவனிப்பார்களோ,  அதுபோல்தான் தன் பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வந்தனர் இலட்சுமியும் கணவர் முருகனும்.

  காலையில் பால் பீச்சும்போது தினமும் ஒன்றிரண்டு பேர் சொம்புடன் வந்து நிற்பார்கள்.

   "மாமா... தம்பிக்குப் பால் வேணும். அம்மா வாங்கியாரச் சொல்லுச்சு. காசு கொடுத்துவிட்டுச்சு. பால் ஊத்துவிங்களா?"

    மாட்டின் மடிக்கடியில் இரண்டு கால்களாலும் தரையில் ஊன்றி, இரண்டு தொடைகளுக்கிடையே சில்வர் வாளி ஒன்றில் 'சொர்க்... சொர்க்'... என்ற சத்தம் விழ 'கொஞ்சம் பொறுமா' என்றார் முருகன்.

    பால்சட்டியில் பால் முக்கால் பங்கு பீய்ச்சியதும் நுரைகள் முழுமையும் நிறைந்ததுபோல உயர்த்திக் கொண்டு வந்தன. இது போதும். மீதிய கன்று குடிக்கட்டும் எனச்சொல்லி, பசுவின் முன் கட்டியிருந்த கன்றினை அவுத்துவிட, கன்றுக்குட்டி குதியாளம் போட்டுக்கொண்டு பசுவின் மடியில் ஓங்கி முட்டி முட்டிக் குடித்தது.

    கறந்த பால் வீட்டிற்குள் செல்லவில்லை. 

"பிள்ளைக்குப் பால் கேட்டாளாக்கும் உங்க அம்மா?

 "ஆமா மாமா, இந்தாங்க காசு"

"சொம்பக் கொடு, பாலைக் கொண்டு போ. காசு வேணாம். நீ ஏதாவது வாங்கிச் சாப்டுக்கோ"

 "காசு கொடுக்காமப் பால் வாங்குனா அம்மா என்னய வையும்"

    "பரவால்ல.  ஓந்தம்பிக்கு பிஸ்கட் வாங்கிட்டுப்போ"

"சரி மாமா"

பாலில் ஒரு சொட்டுத் தண்ணி கூடக் கலக்காமல் அப்படியே வந்து கேட்பவர்களுக்குக் கொடுத்துவிடுவார் முருகன். 

     " ஏங்க! பாலுக்குக் காசு வாங்கினிங்களா?'

   "இல்லமா, வேணாம்னு சொல்லிட்டேன்"

"அதான பாத்தேன். வாங்க வேணாம். நாளப்பின்ன நம்ம பிஞ்சையில கள எடுப்புக்கோ, கருதறுப்புக்கோ கூப்டுகிறுவோம்" 

  "அது சரி. வேலக்கி வர்றவகளுக்கு வேர்வ காயுறதுக்குள்ள கூலியக் கொடுத்திரணும்" 

"சரிங்க"

முருகன் வீட்டில் நடக்கும் வேலையாகட்டும்; காடு மேடு என வெள்ளாமயாகட்டும். வேலக்கி என ஆள் கூப்புட்டா, நான் நீ என போட்டி போட்டிக்கொண்டு வருவார்கள்.

   காரணம், சம்பளம் உடனுக்குடன் கிடைத்துவிடும். பதினோரு மணிக்குச் சுடச்சுட பால்காபியும் சேவும் கிடைக்கும். பெரும்பாலானவர்கள் கடுங்காபி போட்டுத்தருவார்கள். முருகன் வீட்டில்தான் கட்டிப்பாலுடன் காபி கிடைக்கும்.

       வீட்டில் பத்திற்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், நாய், கோழி, பூனை என வாயில்லா ஜீவன்களின் அணிவகுப்புதான்.

    மாடுகள், ஆடுகள், நாய், பூனை என அனைத்திற்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பெயர் சொன்னவுடன் துள்ளிக்கொண்டு வருவார்கள்.

    வீட்டுப்பக்கம் புது ஆள் யாரும் வந்துவிட முடியாது. அதுபோல காட்டில் மேய்ச்சலில் இருக்கும் போது புதிய ஆள் வந்து பேச்சுக்கொடுத்தால் கருப்புக்காளைக்குப் பிடிக்காது. ஒரு தடவை நம்பியாரத்தில் இருந்து வந்த ஒருவர் எதேச்சையாய்க் கொஞ்சநேரம் பேச,  ஓடிவந்த கருப்புக்காளை அவரின்  கால்களுக்குள்ளாகத் தலையை விட்டு ஒரே தூக்காககத் தூக்கிச் சுத்த, வந்தவர் வெலவெலத்துப் போனார். அப்புறம் இறக்கச்சொல்ல கருப்புக்காளை இறக்கிவிட்டது. வந்தவர் மேமூச்சு கீமூச்சு வாங்கத் திகைப்பில் ஆழ்ந்து போனார்.

  ஊர்த்திருவிழா தொடங்கப்போகிறது. இந்த வாரச்செவ்வாய்க் கிழமை பொங்கச் சாட்னா அடுத்துவரும் செவ்வாய் கிழமை திருவிழாக் கொண்டாட்டம்தான். வெளியூரில் வாழும் அனைவரும் ஊர் வந்து சேர்ந்துவிடுவார்கள்.

    ஒவ்வொரு வீட்டுக்கும் எனத் தலக்கட்டு வரி போட்டார்கள். சொந்த பந்தம் வந்துபோனால் தடபுடலாகச் செலவு செய்யவேண்டும். என்ன செய்வது என நினைத்தார் முருகன்.

     வழக்கம்போல் அவசர ஆத்திரத்திற்கு எட்டயபுரம் சந்தையில் போய் ரெண்டு ஆட்டை வித்தால் போதுமானது. கைச்சலவுக்குக் கவலையில்லை. 

    ஆனால் இம்முறை ஊர்த்திருவிழா என்பதால் ஒரு மாட்டை வித்துவிடலாம் என நினைத்தார் முருகன்.

    மாடு விற்பனைக்கு இருக்கு என எங்கேயோ கேள்விப்பட்ட சம்சாரி ஒருவர் தன் பிள்ளைக்குப் பொறந்த வீட்டுச் சீதனமாக மாடு ஒன்றைக் கொடுக்க விரும்பி, முருகன் வீட்டிற்கு வந்தார். 

   "மாடு... வளப்புக்கா? விக்கவா? கறிக்கா?" எனக்கேட்டார் முருகன்.

"வளர்ப்புக்குத்தாங்க" மகளுக்கு ஒன்னு வாங்கிக் கொடுக்கலாம்னு வந்தேன். வெல கொஞ்சம் பாத்துப்போடுங்க."

  "சம்சாரிக்குச் சம்சாரி ஒத்தாசையா இல்லனா, வேற என்ன சொல்றது. தாராளமாய் வாங்கிக்கோங்க"

   விலை பேசப்பட்டது. முருகனும் சரியெனச் சொல்ல, மாட்டைக் கட்டுத்தறியிருந்து அவுத்துக் கொடுத்தனர் முருகனின் பிள்ளைகள்.

   தாயாப்பிள்ளையா வளர்த்த மாடு வீட்டை விட்டுப் பிரிவதில் கண்கள் ஈரமாகின.

   இரவுப் பொழுது. 

இந்நேரம் மாடு படுத்திருக்குமா ? சாயந்திரம் புல், வைக்கோல் போட்டுருப்பாங்களா? தவிடு, புண்ணாக்கு போட்டுத் தண்ணி காட்டுவாங்களா? இல்ல கம்மாத்தண்ணி, அடிகுழாய்த் தண்ணியா? முருகன் வீட்டில் விவாதம் இப்படியாக ஓடிக்கொண்டிருந்தது.

ஊர் அடங்கிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் நாய்களின் குரைப்புச்சத்தம்.

    மணி பன்னிரெண்டு இருக்கும். வீட்டை யாரோ தட்டுவது போல் சத்தம். 

   இந்த அர்த்த ராத்திரியில யாரு வந்து கதவத் தட்றது? முருகன் தூக்கக் கலக்கத்தில் கையில் டார்ச் லைட்டுடன் வெளியே வந்தார். நாய்கள் குரைக்கின்றன. வீட்டு முற்றத்து விளக்கைப் போட, கண்ணீருடன் வந்து நிற்கிறது மதியம் விலைக்குக் கொடுத்த கிடேரி  மாடு.

    சற்று நேரத்தில் வீட்டாரின் தூக்கம் வீட்டைவிட்டுப் போனது.  இலட்சுமி அம்மாளைப் பாத்த மாடு 'அம்மா' என அழைத்து கண்ணீர் வடிக்கிறது. இலட்சுமிக்குப் பேச்சு வரவில்லை. மாட்டின் கழுத்தைக் கட்டிப்பிடித்து கொஞ்சுகிறாள். 

அரைநாள் பொழுதின் பிரிவைத் தாங்காத மாடும், மனிதர்களும் ஒருவருக்கொருவர் முகம்பாத்து தேத்திக் கொண்டார்கள். கட்டுத்தறிக்குப் போகாத கிடேரி,  வீட்டின் தல வாசலில் தலைவைத்துப் படுத்தது. தொழுவத்தில் சாய்ந்து கிடந்த கயித்துக் கட்டிலை மாட்டின் அருகில் போட்டு படுத்துக் கொண்டார் முருகன்.

    எப்படியோ தூங்கிப் போனார்கள்.

 பளாரென விடிய, மாட்டை விலைக்கு வாங்கிய சம்சாரி ஓவெனப் புலம்பிக் கொண்டு " அண்ணாச்சி, நேத்து வாங்குன உங்க மாட்டக் காங்கல. எல்லா இடமும் வலைவீசித் தேடிப் பாத்தாச்சு. இங்க ஏதும் மாடு வந்ததா?"

   "பயப்படாதீரும். மாடு எங்கயும் போகல. நடுச்சாமத்துலயே நம்ம வூட்டுக்கு வந்திருச்சு"

"ரொம்ப நல்லதாப் போச்சு. அவுத்துட்டு வாங்க. வெயில் ஏறுவதுக்குள்ள ஊருக்குக் கொண்டு போயிடுறோம்"

  "அதுக்கு அவசியமில்ல அண்ணாச்சி"

"ஏன் அண்ணாச்சி, என்னாச்சு?"

"தப்பா எடுத்துக்கிறப்பிடாது. வீட்ல, ஊர்ல நடக்குற நல்லது கெட்டதுகளுக்காகத்தான் கைச்செலவுக்குனு ஆடு, மாடுகள விக்கிறது. மாட்ட வித்ததுமே சின்னப்பய முகம் சிறுத்துப்போச்சு. ஆளு அரவமில்லாம இருக்கான். இராத்திரியில மாட்டப் பாத்ததும் அவன் கட்டிப்புடிச்சு அழுதது என் கண்ணுக்குள்ள நிழலாடுது. வீட்லெ ஒருத்தர விட்டுப்பிரியிற மாதிரி இருக்குது. அதனால மறுக்காம நீங்க கொடுத்த தொகைய வாங்கிக்கோங்க. அதவிடக் கூட நூறுரூவா வச்சுத்தாரேன். கட்டியா மோர் இருக்கு. வயிறார குடிச்சிட்டுப் போயிட்டு வாங்க. என்ன நான் சொல்றது?"

சரிதான் அண்ணாச்சி. எங்களுக்குக் கொடுப்பின இல்ல. அவ்ளோதான் எனச்சொல்லிக் கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டு, வயிறார மோர் குடித்துச் சென்றார்கள். 

அவர்கள் செல்லும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தது வீடு திரும்பிய செல்வமான மாடு.


மு.மகேந்திர பாபு, 

49, விக்னேஷ் அவென்யு,

இரண்டாவது தெரு, 

கருப்பாயூரணி,

மதுரை - 20,

செல் - 97861 41410












Post a Comment

0 Comments