மு.மகேந்திர பாபு , இசைப்பாடல்கள்

 

மு.மகேந்திர பாபு , இசைப்பாடல்கள்

மரம் நடுவோம் நண்பர்களே !

மரம் நடுவோம் நண்பர்களே !
மரம் நடுவோம் !
எங்கள் வீட்டில் உங்கள் வீட்டில்
நம்ம தெருவில் மரம் நடுவோம் நண்பர்களே !
மரம் நடுவோம் !

பள்ளி எங்கும் பசுமை காண
மரம் நடுவோம் நண்பர்களே ! மரம் நடுவோம் !
சின்னச் சின்னக் குழுக்களாகச்
சேர்ந்து நாமும் மரம் நடுவோம் நண்பர்களே !
மரம் நடுவோம் !

நாம் வளர மரம் வளரும்
மரம் வளர நாம் வளர்வோம்
ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வந்து பார்க்கும் போது
எல்லையில்லா மகிழ்ச்சி தானே
இதயமெங்கும் நெகிழ்ச்சிதானே !

ஆண்டு தோறும் எத்தனையோ அரசு விழா வருகுது
ஒரு விழாவில் ஒருமரம் நட மகிழ்ச்சிதானே பெருகுது
பிறந்த நாளில் நட்டிலாம்
மண நாளில் கொடுத்திடலாம்
பசுமை குளுமை வளமை சூழ
பறவை மனிதன் இயற்கை வாழ
மரம் நடுவோம் நண்பர்களே மரம் நடுவோம்.!

மு.மகேந்திர பாபு.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மதுர

மதுரன்னா மல்லி.-,எங்க
மனங்கிளம்பும் துள்ளி
நட்புக்களை அள்ளி
ஆடுவோம்டா கில்லி

மல்லிகைப் பூவப் போல நம்ம மதுரக்காரன் மனசு
அழகர் மலையைப்போல பசுமையான வயசு
வைகை ஆத்தைப் போல நீண்டிருக்கு நம்ம பாசம்
வாழ்க்கை எல்லை  வரை வந்திடுமே எங்க நேசம்

தேரோடும் வீதியெல்லாம் நாங்கதானே சுத்தி வந்தோம்.
ஊரோடு வர்ற கூட்டம் சாமியத்தான் வேண்டுதையா
சீரோடு வாழ்ந்திடத்தான் சித்திரையில் கூடுறோமே
சாமி வேசங்கட்டி சந்தோசமா ஆடுறோமே !

பச்சப் பட்டுடுத்தி அழகர் இறங்குனாத்தான்
பசுமை செழித்து எங்கும் வளமை நிறைந்திடுமே
மீனாட்சி  பார்வையெல்லாம் மதுர மண்ணில் பட
தேனாட்சி நடக்குதிங்க  நாளெல்லாம் திருவிழாதான்

மலைகள் வளர்ந்திருக்கு கலைகள் செழித்திருக்கு
மன்னரின் கோட்டை போல மனதில் வலுவிருக்கு
சினிமா ஜெயிப்பதெல்லாம் மதுர மண்ணவச்சு
அரசியல் ஆழம் கூட எங்களின் அன்ப வச்சு

உடம்பு குளிர்ந்திடுமே ஜிகர்தண்டா குடிச்சாத்தான்
உள்ளம் மலர்ந்திடுமே மதுரய நெனச்சாத்தான்
மானமுள்ள தமிழனாகத் தமிழை வளர்த்தோம்
வீரமுள்ள தமிழனாக வெற்றியும் பெற்றோம் !

ஜல்லிக்கட்டு காளை போல துள்ளிக்கிட்டு நாங்க போவோம்
தூங்கா நகரம் தான்டா தொட்டிடுவோம் சிகரம் தான்டா
பளபளக்கும் மகால் தூணுபோல ஜொலிஜொலிக்குது நம்ம வீரம்
ஒயிலாட்டம் கரகாட்டம் நம் மனம் மயக்க கொண்டாட்டம்

மல்லிகைப் பூ இட்டலிய வாயில் போட்டுக்கிட்டா ருசிதான்டா
கொத்துப் பரோட்டாவ கெத்தா தின்னா தீரும் பசிதாண்டா
மன்னனும் நீதி மறந்தா மடிக்கும் நகர்தான்டா
மனிதம் வளர்க்கும் எங்க மதுர நகர்தான்டா

பொன்னு விளையுற பூமி மண்ணுதான் எங்க சாமி
மகாத்மா காந்தியத்தான் மனம் திறக்கச் செய்த பூமி
மனிதம் வளர்க்கும் ஊரு மதத்தை மறந்தது பாரு
வீரம் விளைஞ்ச மண்ணு வெற்றிக்கொடி நிலைநாட்டு கண்ணு

****************************************************

அறிவாயுதம் 


ஆயுதம் வாங்குங்கள் ! - அறி

வாயுதம் வாங்குங்கள் !

அகத்தை வாழ்த்தும் - அறி

யாமையை வீழ்த்தும்

ஆயுதம் வாங்குங்கள் !


புத்தகம் புரட்டுங்கள் ! - தினம்

புத்தகம் புரட்டுங்கள் !

புத்தியில் உள்ள 

பூசலை விரட்டுங்கள் - தினம்

பூசலை விரட்டுங்கள் !


நூலகம் செல்லுங்கள் ! - தினம்

நூலகம் செல்லுங்கள் !

நுண்மான் நுழைபுலம் கொண்டே

மேடையை வெல்லுங்கள் ! - பேச்சில்

மேடையை வெல்லுங்கள் !


தாளெனும் வயலில் - தினம்

விளையும் சொற்கள் ! 

வாசக விவசாயிக்கு

தாகம் தீர்க்கும் 

எழுத்து நெற்கள் !


பக்கம் புரட்ட - தினம்

பக்கம் புரட்ட - நம்

பக்கம் வந்திடுமே !

பக்குவப் படுத்தி

பகுத்தறிவைத் தந்திடுமே !


மானம் காப்பது 

நூலாடை என்றால் 

மனித மனம் காப்பது

காகிதம் சேர்ந்த

புத்தமன்றோ ?


பூங்கொத்தைத் தவிர்த்து

வாழ்த்தும் போதெல்லாம்

புத்தகம் வழங்கலாம் !

புத்தகமே தனிமையின்

துணையென முழங்கலாம் !


புத்தகத்தைக் காதலிபோல

கையில் தூக்குங்கள் !

புன்னகை பூக்க

மேனியைத் தடவி

இணையென ஆக்குங்கள்  !



பசுமைக்கவிஞர்.

மு.மகேந்திர பாபு.

*********************  *******************


*பூமியில வாழும் சாமி ! - இசைப்பாடல்*


பூமியில வாழுகிற சாமி பாருங்க !

பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க ! - விவசாயி

பூமியில வாழுகிற சாமி பாருங்க !

பொன் விளையும் பூமி எங்க கோவில் தானுங்க !


வரப்பச் சீவும் கைகள்தானே கறைபடாத கை

வயல் வெளியில் ஏரை நீயும் கொண்டு வந்து வை

ஆடும் மாடும் எங்களோட சொந்த பந்தம் 

அனுதினமும் வயல் வெளியில் வேர்வ சிந்தும் 


விதை நெல்லக் கொண்டு வந்து வெதச்சுப் போடுறோம் !

வீட்டுலதான் விசேசம்னா ஒன்னாக் கூடுறோம் !

மழத்தண்ணி எங்களத்தான் வாழ வைக்குதே !

மத்த மனுசங்கள நாங்க நாளும் வாழ வைக்கவே !


பருத்திப் பூவு பூத்துக் கெடக்கு செடியில் தானுங்க !

காய்ச்சதுமே காசாக மடியில் தானுங்க !

பொண்ணுங்களும் ஏர்க் கலப்ப ஓட்டும் பாருங்க !

பூவப்போல இருக்குமுங்க எங்க சோறுங்க !


வெண்டச்.செடியும் கத்தரியும் கண்ணப் பறிக்குதே !

காட்டுமல்லி வாசம் கொஞ்சம் நம்ம மறிக்குதே !

சோறு போடும் முதலாளி நாங்க தானுங்க !

வேற வேல பாக்கப் போனா சோறு ஏதுங்க ?


விவசாயி இல்லையினா நாடு ஏதுங்க ?

வயல் வெளியில் வீம்புக்குனு வீடு ஏனுங்க ?

விளை பொருள விலை கொடுத்து வாங்கிப் பாருங்க !

விவசாயி உயர்ந்திடுவான் நீங்க பாருங்க !


*பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.*


🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

******************    *********************

மழையாட்டாம் - பாடல்  ( மு.மகேந்திர பாபு )

சிங்காரச் சென்னை இப்போ மிதக்குது
சீற்றம் கொண்ட மழையினாலே தவிக்குது
சிறுமழைக்கே தாங்காத ஊருங்க - இப்போ
பெருமழைதான் பெய்ததே பாருங்க.

தாகம் கொண்ட  பூமி மேலே
மோகம் கொண்டு மேகம் ஊத்துது
காய்ந்து கிடந்த மண்ணும் மனசும்
பாய்ந்து சாய்ந்து கையை விரிக்குது !

மொதநாளில் சந்தோசம்தான் நின்னுச்சு - மழ
மூனாம் நாளில் சிலபேர கொன்னுச்சு
கடலூரு கடல்போல ஆனது - முன்பே
ஆறும் குளமும் காணாமத்தானே போனது !

ஆறும் குளமும் வீடாச்சு பாருங்க
அதாலே வீடெங்கும் வெள்ளக்காடாச்சு பாருங்க
வானிலையைப் பாக்கப் பாக்கத் தோணுது
நம்ம வாழ்நிலையோ தீவாகிப் போனது !

படகு போன ஆத்த இப்பக் காணோம்
ரோடே ஆறாக படகுதான் போனோம்
இயற்கை மேலே கையைவச்சா இயல்புதானே போகும்
இப்படியே போனா நம்ம நெலம என்னவாகும் ?

மக்கள் தொகை பெருகப் பெருக
நீர் நிலைய நாமதானே அழிச்சோம் ?
மழைத் தண்ணி வந்து வீடுபாய
மலங்க மலங்க மனசொடிஞ்சு முழிச்சோம் ?

மழையச் சபிக்கும் இரக்கமில்லாக் கூட்டமே !
ஆறு குளம் தேட எடு பெரு ஓட்டமே !
நாளைய சந்ததி நலமாக வேண்டுமே !
இருக்கின்ற இயற்கையைக்  காத்திட கைகோர்ப்போமே !

*******************************************************

மருத்துவத்தின் மகத்துவம் !

  இசைப்பாடல்


கும்பிடுறோம் கும்பிடுறோம்

குடும்பமாக கும்பிடுறோம் !

வெள்ளை உடைத் தெய்வங்களை

வீட்டிலிருந்தே கும்பிடுறோம்.!

கொரனாவுக்குப் பாடை !

கொடுக்குது வெள்ளாடை !


கும்பிடுற சாமியெல்லாம்

கோவிலுக்குள் இருக்குதுங்க !

நம்புகிற மக்களெல்லாம்

நடுங்கிப் போயி கெடக்குதுங்க !

நடமாடும் சாமியாக

நம்மளுக்கு தெரியிறாங்க !

மருத்துவரப்  போற்று !

நம்ம செவிலியரப் போற்று !


வீட்டுக்குள்ள நாமிருந்தா

விடியலத்தான் பாத்துக்கலாம் !

வீதிக்கு வந்துபுட்டா

வில்லங்கத்தச் சேத்துக்கலாம் !

கொரனா உறுதியின்னா

குடும்பம் கூட தள்ளி நிக்கும் !

கூட நிற்பதெல்லாம்

மருத்துவரும் செவிலியரும்தானே!


தொண்டு செய்யும் உள்ளமதை

நாளும் நாம கொண்டாடுவோம் !

துச்சமாக நினைத்து விட்டால்

நாமும் தானே திண்டாடனும் !

உயிரைக் காக்கும் பணிதானே

உன்னதப் பணி  !

உற்சாகமாய் வாழ்ந்திடலாம்

மகிழ்வாய் இனி !


பசுமைக்கவிஞர்.

மு.மகேந்திர பாபு , இளமனூர்.

********************     *********************

ஆழ்துளைக்கிணறு - விழிப்புணர்வுப் பாடல்.


பாடல் - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு.


மூடுங்க உடனே மூடுங்க

மூடுங்க அண்ணே மூடுங்க

தோண்டிவச்ச ஆழ்துளை கிணறத்தானே மூடுங்க

தேடுங்க உடனே தேடுங்க

திறந்திருக்கும் குழிகளைத்தான் தேடுங்க ...


குடும்பம் காக்க வந்த குலவிளக்கு ... நம்ம குலவிளக்கு

குழிக்குள்ளே போகலாமா ?

வீணாகச் சாகலாமா ? 

நூறாண்டு வாழுகின்ற பச்சமண்ணு

ஈராண்டில் இறக்கலாமா ? குழிய மூட மறக்கலாமா ?

                                       ( மூடுங்க...)


 அஞ்சு நிமிசம் கூட பிரியாது பெத்த மனம்

உன்னைப் பெத்த மனம் அது பித்து மனம்

வேர்த்தாலே விசிறி வீசும் பெத்த மனம் 

இப்போ பார்த்தாலே பதறித்தான் போகுதைய்யா !


இருட்டான குழிக்குள்ள இருக்கின்றானே !

இதயத்தில் துடிப்பும்தான் இருக்குமாய்யா ?

மீண்டு வந்து மீண்டும் வந்து 

அம்மானு சொல்லுவானா ? அப்பானு சொல்லுவானா ?

                                    (  மூடுங்க ...)


தண்ணீரைத் தருகின்ற குழிகள் எல்லாம் 

கண்ணீரைத் தரலாமா ? கண்ணீரைத் தரலாமா ?

ஒத்த உயிர் போனாலும் இழப்புதானே ?

மத்த உயிர் போகாமல் காக்க வேணும் !


விழிப்பு வேணும் விழிப்பு வேணும் நண்பர்களே !

ஆழ்துளை கிணறையெல்லாம் மூடிடவே !

விழிப்பு வேணும் விழிப்பு வேணும் நண்பர்களே !

கவலையில்லா காலை ஒன்று விடிந்திடவே !

                                 ( மூடுங்க ...)

**********************    ********************


டெங்கு - விழிப்புணர்வுப் பாடல்.


வீட்டைச் சுத்தி சுத்தம் வேணும்

வீடு எங்கும் சுத்தம் வேணும் - நல்ல

தண்ணி எங்கும் தேங்காம

நாள்தோறும் பாத்துக்கணும் 

நாம நாள்தோறும் பாத்துக்கணும்


சுற்றுப்புறம் இருக்க வேணும் சுத்தமா

இதைச் சொல்லவேணும் மக்களுக்குச் சத்தமா

தேங்கும் நீரில் தேங்கிடுமே நோய்கள்தான்

கொசு தங்கிவிட்டால் குடும்பத்திலே சோகம்தான்


வெள்ளைப் புள்ளி ஏடிசிடம் இருந்திடும்

தொல்லை தரும் டெங்குவைத்தான் தந்திடும்

டெங்குவுக்கு மருந்து இன்னும் வரலையே !

டெங்கு வருமுன்னே காப்பதுதான் நல்லதே !


நிலவேம்புச் சாற நாமும் குடிக்கணும்

நீர்ச்சத்து உடம்பிலதான் இருக்கணும்

பப்பாளி இலையச் சாறா ஆக்கணும்

பக்குவமாய்த் தினமும் அதைக் குடிக்கணும்


சிவப்பு புள்ளி உடம்புலதான் வந்துட்டா

டெங்கு வந்ததற்கு அதுதானே அடையாளம்

அரசு மருத்துவமனைக்கு நாமதானே போகணும்

ஆரம்பத்திலே கண்டு நோயைக் குணமாக்கணும்.


நோயில்லா வாழ்வு நாமும் வாழவே

சுற்றுப்புறம் காக்க வேணும்  நண்பனே !

குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல்

குற்றமிலா வாழ்வு வாழ்வோம் நாளுமே !


பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு.ஆசிரியர்.

28 - 10 -17  

பேசி - 97861 41410.


********************    *********************

பெண் எனும் பெருந்தகை

           பாடல் - மு.மகேந்திர பாபு.


மாற்றம் வேண்டி புறப்பட்டு வந்தோம் !

ஏற்றம் பலவும் இன்றே தந்தோம் !

பொறுமை யோடு இருந்தும் வந்தோம் !

புரட்சிப் பெண்ணாய்ப் பெருமையும் தந்தோம் !


அடுப்படியில் இருந்தது அது அந்தக் காலம் !

அகிலம் போற்ற உலவுவது இந்தக் காலம் !

காக்கிச் சட்டையில் காப்பதும் நாங்கதான் !

கலெக்டராகி கனவை நனவாக்குவதும் நாங்கதான் !


மண்ணைக் கீறி பயிரும் செய்தோம் !

விண்ணில் ஏறி வெற்றியும் கொய்தோம் !

வீட்டில் இருந்து விளக்கும் வைத்தோம் !

நாட்டை ஆண்டு நன்மையும் செய்தோம் !


மிரட்சி யோடு இருந்ததெல்லாம் அன்று !

புரட்சி செய்து வாழ்கின்றோம் இன்று !

பூவுலகை அன்பினாலே தினம் வென்று !

மூவுலகை ஆட்சி செய்வோம் நின்று !

*******************   ***********************


கொரானா - விழிப்புணர்வுப் பாடல்.

பாடலாசிரியர் - பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு.

பாடகர் - பலகுரல் மன்னன்.நன்னிலம்.கேசவன்.


பல்லவி


அடங்கு வீட்டுக்குள்ள அடங்கு

நீ வீட்ட விட்டு வெளியில் வந்தா சடங்கு

இறுதிச் சடங்கு                      ( 2 )


சரணம்


நாடு முழுவதுமே நடுங்கிப் போயி கெடக்கு

வீடு மட்டும்தான் பாதுகாப்பா இருக்கு       ( நாடு )

வீட்ட விட்டு வெளியில் நீயும் வராதே !

வீட்டுக்குத்தான் துன்பத்த நீயும் தராதே !                          ( வீட்ட ...)


கூட்டம் கூடுமிடம் பக்கம் நீயும் போகாதே !

கைய குலுக்கித்தான் நண்பரிடம் பேசாதே !                       ( கூட்டம் ...)

தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டைய பொத்திக்கோ !

கொலைகார கொரானாவ விரட்ட நீயும் கத்துக்கோ !       ( தும்மும் ...)


கைய நல்லா சோப்பு போட்டு கழுவுங்க !

கண்ண மூக்க கண்டிப்பா தொடாதிங்க !      ( கைய ... )

காய்ச்சல் வந்தா டாக்டர் கிட்ட போகனும் !

கண்டுக்காம விட்டுப்புட்டா கொரானாவால சாகனும்  ( கண்டுக்காம ... )


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

பேசி - 97861 41410.


***********************   *******************

உலகமே உலகமே மீள்வாயா ?


பாடல் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.


பாடகர் - மாரிமுத்து - கிராம நிர்வாக அலுவலர், விளாத்திகுளம்.


பல்லவி 


உலகமே உலகமே மீள்வாயா ?

உள்ளத்தை அன்பாலே ஆள்வாயா ?


சரணம்


கொத்து கொத்தாய் மனித உயிர்கள்

செத்து செத்து விழுகுதையா !

பாக்கப் பாக்கப் நெஞ்சுக்குள்ளே

இரத்த நாளம் வெடிக்குதையா !


ஒதுங்கி ஒதுங்கி நில்லுங்கள் 

உறவுகளே இதைச் சொல்லுங்கள் !

வீடு ஒன்றே காத்திடும் !

நாடு நம்மைப் பாத்திடும் !


அரசின் சட்டம் வாழ்வதற்கே !

அடிமை செய்யும் நோக்கமல்ல !

நாளைப் பொழுதில் நீயும் நானும்

நடமாட வேணும் நண்பனே !


மு.மகேந்திர பாபு.


********************   ********************


பாட்டிக்கு ஒரு பாட்டு - இசைப்பாடல்


          பல்லவி


பாட்டி இருக்கும் வீடு  - அது

பாசம் நிறைந்த வீடு

பாட்டியில்லா வீடு - அது

பட்டுப்போன காடு 


         சரணங்கள்


கதை கதையாய்ச் சொல்லி - நம்ம

கவலை போக்குவாள் !

கருத்துடனே வளர்த்து  - நம்ம

வீரன் ஆக்குவாள்  !


வெற்றிக் கதை வீரக்கதை 

சொல்லித் தருகுவாள் !

பேரன் பேத்தி பேச்சினிலே

உள்ளம் உருகுவாள் !


பள்ளிக்கூடப் படிப்பு எல்லாம்

ரொம்பக் கம்மிதான் !

அனுபவத்தைச் சொல்லுதுங்க

வீட்டு அம்மிதான் !


தலைவலியா உடல் வலியா 

பாட்டியப் பாரு !

கைவச்சதுமே ஓடுது பார்

நோயெனக் கூறு !


முந்தானையில் முடிஞ்சிருப்பா

முந்நூறு காசு !

முத்தம் கொடுக்கும் பேரனுக்கு

காலணா காசு !


தலையை ஆட்டிப் பேசும்போது

ஆடிடுமே பாம்படம் !

தலையினிலும் இடுப்பினிலும்

தூக்கிடுவாள் நீர்க்குடம் !


மீன் குழம்பு வச்சுப்புட்டா

ஊரே மணக்கும் !

தேன் போன்ற பேச்சினிலே

உள்ளம் மிதக்கும் !


கம்மங்கஞ்சி கேப்பக்கூழு

கரைச்சுக் கொடுப்பா !

பேத்திக்கு துன்பம் வந்தா

உள்ளம் துடிப்பா !


தலைமுறையைக் கண்டவளாம்

தங்கப் பாட்டி !

தன்னலத்தை விட்டவளாம் 

எங்க பாட்டி !


பாட்டிகளைப் பக்கத்தில

வெச்சுக் கோங்க !

பாசத்தில ஈடில்லையென

மெச்சிக் கோங்க !


பசுமைக்கவிஞர்.

மு.மகேந்திர பாபு , இளமனூர்.


***************&&&&   *******************


நவம்பர் 21 - உலக மீனவர் தினம்.


கவிதை - மு.மகேந்திர பாபு.


கடற்கரைக்கு வாரிங்க 

பொழுதைப் போக்க !

கடலுக்குள்ள போறோம்ங்க

பொழப்பப் பாக்க !


காலாற நடக்கவும் ,

காத்து வாங்கவும் வாரீங்க !

கால் வயிற்றுப் பாட்டுக்காக

கடலுக்குள்ள போறோம்ங்க !


கடல் அன்னை உடல் மேல

துடுப்பு போடுறோம் !

கவலைகள் தீரந்திடத்தான்

ஏலோலோ பாடுறோம் !


அலை மேல வலை வீசி 

மீனைத்தான் தேடுறோம் !

விலை வந்து சேர்ந்திடவே

மகிழ்ச்சியில கூடுறோம் !


வானிலை நல்லாருந்தால் 

வாழ்க்கை நிலை நல்லாருக்கும் !

மேகமூட்டம் வந்ததுனா

சோகமூட்டம் முள்ளாருக்கும் !


இன்னல் தீர்க்கப் போகையிலே

மின்னல் வந்து வெட்டுதையா !

இடிஇடிச்சு வானத்தில

ஏகமாய் மழை கொட்டுதையா !


காத்தும் மழையும் கணக்கின்றி

கடலுக்குள்ள சுத்துதையா !

நேத்தும் இன்றும் உணவின்றி

குடல் பசியால கத்துதையா !


கலங்கரை விளக்கால 

படகோட கரை வந்தோம் !

கலங்காத மனம் கொண்டு

கைநிறைய காசு தந்தோம் !


காத்திருந்த பெண்டு பிள்ள

கட்டிப்பிடிச்சு கண்ணீர் விடும் !

கடலோடி எங்களுக்கு 

நெய்தல்தான் நெஞ்சத் தொடும் !


கொண்டு வந்து போட்ட மீனு

கரையிலதான் துள்ளுது !

காத்திருந்த சாதிசனம்

கைநிறைய அள்ளுது !


கைகொடுத்த கடல்தாயை

கரம்குவித்து கும்பிடுவோம் !

நாளைப் பொழுதும் நல்லதென

நாங்களும் நம்பிடுவோம் !


கடற்கரைக்கு வாரிங்க 

பொழுதைப் போக்க !

கடலுக்குள்ள போறோம்ங்க

பொழப்பப் பாக்க !


கவியாக்கம் - பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.


**********************    ******************


திறன்பேசி காதல் - இசைப்பாடல்.  - மு.மகேந்திர பாபு.


ஓடுறான் ஒதுங்குறான் ஒளியிறான்

ஒரு போனு வந்தா ...

ஓடுறான் ஒதுங்குறான் ஒளியிறான்

நாள் முழுதும் பாத்துக்கிட்டே

நட பிணமா அலையிறான்

அதப் பாத்துப் பாத்து கண்ணு ரொண்டும் பூத்துப் போச்சு !

கேட்டுக் கேட்டு காது ரெண்டும்

அவிஞ்சு போச்சு ! - ஆனாலும் 


                      ( ஓடுறான் ... )


உலகம் இப்ப உள்ளங்கையில் மாறிப் போச்சு

சட்டப் பையில் செல்போனு ஏறிக்கிச்சு

சந்தோசமும் வீட்ட விட்டு ஓடிப்போச்சு

சங்கடமும் வந்து வந்து கூடிப் போச்சு


சிறுசு முதல் பெருசு வர அடிமையாச்சு !

வாட்சாப்பும் பேஸ்புக்கும் போதை ஆச்சு !

சிரிச்சு சிரிச்சுப் பேசுறான் செல்லுக்குள்ள !

சிடுமூஞ்சியா இருக்குறான் வீட்டுக்குள்ள  !  ( ஓடுறான் ... )


செல்லுக்குள்ள லட்சலட்சம் செய்தி இருக்கு !

போட்டித் தேர்வில் வென்றிடவே வேலை உனக்கு !

பொது அறிவு புது அறிவு விரிஞ்சு கெடக்கு !

பாடங்களைப் படித்திடவே  இணையம் இருக்கு !


சாமி முதல் சமையல் வரை பாடம் இருக்கு !

பக்குவமா சொல்லித்தர ஆட்கள் இருக்கு !

வீட்டிலிருந்தே காசு பாக்க வழியும் இருக்கு !

தேடுவதைத் தந்திடவே கூகுள் இருக்கு !            ( ஓடுறான் ... )


போன் இல்லாம கொஞ்ச நேரம் இருக்க முடியல !

புத்தி கொஞ்சம் பாத மாறும் தடுக்க முடியல !

நல்ல விசயம் இருக்குதையா பார்ப்பதே இல்ல !

தடம் மாறும் வாழ்க்கைக்கு போனும் ஒரு  தொல்ல  !


தூங்கும் போதும் முழிக்கும் போதும் கையில செல்லு !

என்ன புத்தி இந்தப் புத்தி என்னனு சொல்லு !

செல்ல வச்சு  சொல்லவச்சு நல்லது பண்ணு !

வீடும் நாடும் வாழ்த்திடுமே என் செல்லக் கண்ணு !


மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் .மதுரை - 97861 41410


********************   ********************

செல்போன் விழிப்புணர்வுப் பாடல்


உள்ளங்கையில் உலகம் இந்த செல்லுதானுங்க

நல்ல உள்ளங்களை உருவாக்குவதும்  செல்லுதானுங்க

நாட்டு நடப்பு தெரியனுமா செல்லப் பாருங்க

வீட்டு வேல செய்திடவும் செல்லப்பாருங்க ( உள்ளங் ... )


பள்ளிப் பாடங்களைத் தினமும் நாமும் கற்கலாமே !

பண்புடனே வாழ்வில் நாமும் நிற்கலாமே !

தேவையென்றால் மட்டும் செல்லைப் பாருங்க !

வாழ்க்கையிலே உயர  வழி கூறுங்க   !             ( உள்ளங் ...)


எப்போதும் பாத்தாலே கண்ணும் கெட்டுப் போயிரும்

தப்பான   செயல்களுக்கு   வழிவகுத்துக் கொடுத்திடும்

 அறிவியலில் ஆக்கம் இருக்கு அழிவும் இருக்குதே !

ஆக்கம் மட்டும் எடுத்துக் கொண்டு ஊக்கம் பெறுவமே !

                   ( உள்ளங் ... )


நண்பரோடு ஆடிப்பாடி அனுதினமும் மகிழலாம் !

அன்புடனே பெற்றோரிடம் அளவளாவி மகிழலாம் !

செல்லமாகச் செல்லைக் கொஞ்சம் ஓரங்கட்டுங்க !

சிந்தையெலாம் மகிழ்ச்சிதானே நடையக் கட்டுங்க !          ( உள்ளங் ... )


********************   *********************

போட்டி போடலாம் வாங்க !


போட்டி போடலாம் வாங்க !

நமக்குள்ள போட்டி போடலாம் வாங்க !


அறிவை வளர்க்கனும்

அதோடு அன்பையும் வளர்க்கனும்

நட்பை வளர்க்கனும் 

நாளும் நன்றாய் உயர்ந்திடவே -  போட்டி 

மனப்பான்மையை வளர்க்கனும் !


வகுப்பில் முதல் மதிப்பெண் 

நான்தானு போட்டி போடனும்

ஆசிரியர் சொல்லும் கட்டளையை உடனே  முடிப்பேன்

வீட்டுப் பாடம் என்றாலே 

உடனே படிப்பேன்

பேச்சா எழுத்தா விளையாட்டா 

எல்லாமும் நான்தான் என



போட்டி போடலாம் வாங்க!


போட்டியும் உண்டு பொறாமையும் உண்டு !

வெற்றி பெற்றா வாழ்த்தவும் செய்வோம் !

அவர் வெற்றிக்குத் தலை வணங்கவும் செய்வோம் !

குறையைக் களைந்து நிறைவைத் தந்திட 


போட்டி போடலாம் வாங்க !


வாழ்வில் உயரம் அடைந்திட

வளமை நம்மில் நிறைந்திட

ஆக்கம் நம்மில் தோன்றிட 

தூக்கம் நம்மில் அகன்றிட

போட்டி போடலாம் வாங்க!

நல்லா போட்டி போடலாம் வாங்க !


***********

அறிவொளி இயக்கப் பாடல் -மு.மகேந்திர பாபு -29 - 04 - 1998


அறிவு வேண்டுமடி - நமக்கு

அறிவு வேண்டுமடி

அகிலம் போற்ற அனைத்தும் கற்று அகமகிழ்ந்திட

அறிவு வேண்டுமடி - நமக்கு

அறிவு வேண்டுமடி.


எழுதப் படிக்கத்தெரியணும் 

எழுச்சி கொண்டு வாழணும்

நாட்டு நடப்பு புரியணும்

நன்மை செய்து வாழணும்

உள்ள அறிவு விரியணும்

உண்மை பேசப் பழகணும்

இதய அறையில் அறிவொளி பரவ ...

அறிவு வேண்டுமடி - நமக்கு

அறிவு வேண்டுமடி


பகுத்தறிவு இருக்குதடி 

பக்குவம்தான் நமக்கில்ல

பண்பாடு ஒன்று இருக்குதடி

பாதுகாக்கத் தெரியல

பட்டணந்தான் போனாலும்

பஸ்ஸில் போர்டப் பாக்கத் தெரியல - காரணம்

கல்வி இங்கு இல்லையடி

அதனால் வந்த தொல்லையடி - அதற்கு அறிவு வேண்டுமடி 

நமக்கு அறிவு வேண்டுமடி


பள்ளிக்கும்தான் போனதில்ல

புத்தகத்தப் பார்த்ததில்ல

படிப்பதற்குப் பணமில்ல

படிக்க வைக்க மனமில்ல

அதனால் அறிவு இல்லையடி 


பள்ளிப் பருவம் போனதே - வாழ்க்கை

பாலையாக ஆனதே !

இன்னும் எப்படிக் கற்றிடுவேன்

கல்வி அறிவைப் பெற்றிடுவேன் என

எண்ணத் துடிக்கும் தோழர்களே 

எழுச்சி கொண்டு வாருங்களேன் !   - அறிவு ...


கல்வி அறிவு இல்லாம 

தெய்வ சிந்தனை வந்திடுமா ?

கல்வி ஒன்று இல்லாம 

செல்வத்தைதான் தந்திடுமா ?

கல்வி என்றும் இல்லாட்டி 

தேசப்பற்று தோன்றிடுமா ?

அறிவு வேண்டுமடி அதுக்கு அறிவு வேண்டுமடி 


கவலையெல்லாம் நீங்கட்டுமே

கவனமெல்லாம் ஓங்கட்டுமே 

கல்வி கற்க வந்திடுங்க 

அறிவொளியில சேந்திடுங்க

வயது ஒரு தடையல்ல

விருப்பம் மட்டும் போதுமிங்க 

                      - அறிவு ...


******************


மகிழ்வித்து மகிழ்வோம் !


பிறக்கின்ற புத்தாண்டில்

பிரபஞ்சம் மகிழட்டும் !

சிறக்கின்ற செயல்களில்

சிந்தை நெகிழட்டும் !


உள்ளங்கள் கைகோர்த்து

உதவிகளைச் செய்யட்டும் !

இல்லங்கள் இன்பத்தை

இனிதே கொய்யட்டும் !


சுற்றுகின்ற பூமியெங்கும்

சுற்றுச்சூழல் சிறக்கட்டும் !

மகிழ்வித்து மகிழ்கின்ற

மனங்கள் பிறக்கட்டும் !


பண்பாடு நம்மோடு 

பயணித்து வரட்டும் !

அன்போடு அனைவருக்கும்

ஆன்றபெருமை தரட்டும் !


மு.மகேந்திர பாபு , 

கருப்பாயூரணி , மதுரை - 20.

செல் - 97861 41410


**********



காளைகளும் , காளையர்களும்  ...
- பாடல் . மு.மகேந்திர பாபு , ஆசிரியர் , மதுரை.

நாட்டுக்காகப் போராடுனோம் அப்ப - நாட்டு
மாட்டுக்காகப் போராடுறோம் இப்ப
வீட்டவிட்டு வெளியில் வந்தோம் நாங்க ! - வீறு
கொண்டு வந்துட்டீங்க இளைஞர்களே நீங்க !

மானம் காக்க வந்ததையா மாணவர் கூட்டம்  ! - நம்ம
நாட்டை விட்டு எடுத்திடுமே இனி பீட்டா ஓட்டம் !
ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வாரானே ! - தினம்
சந்தோசத்த மக்களுக்கு அள்ளித் தாரானே !

அடங்க மறுத்து நிக்குதையா அலங்காநல்லூர் - வைகை
ஆத்துமேல ரயில பிடிச்சது நம்ம செல்லூர்
காதலர்களால் நிரம்பும்  அந்த மெரினா பீச்சு - இப்ப
காளையர்களால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாச்சு !

சென்னை திருச்சி கோவைனு இளைஞர் கூட்டம் ! - நம்ம
பாரம்பரியத்துல எல்லாருக்கும் ரொம்ப நாட்டம் !
தமிழ்நாடு தாண்டி விரிஞ்சதையா நம்ம  எல்லை ! - இனி
ஏறு தழுவலுக்கு தடை ஏதும் இல்லை !

உலகம் முழுதும் வெடிச்சிருக்கு ஜல்லிக்கட்டு ! - இப்ப
கலகம் ஒன்னு வெடிச்சிருக்கு துள்ளிக்கிட்டு  !
மாணவர்கள் சக்தி ஒன்றே மேன்மையானது ! - நாட்டுப்
பசுவின் பாலைப் போல துய்மையானது !

வாடிவாசல் திறந்ததையா வானம் வெடிக்க !
தேடிவந்து அரசும் நம்ம வீரம் படிக்க !
கூடிவந்து நின்னதால ஜெயிச்சோம் இன்று !
மாணவர்படை காட்டியது பீட்டாவை வென்று !

மு.மகேந்திர பாபு , மதுரை .
97861 41410.

********************   *************************************





அரசுக்கு நன்றி - பாடல்  - மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

பல்லவி

ஏழைப் பிள்ளை கனவு இன்று நனவானதே !
இல்லமெங்கும் மகிழ்ச்சி பூக்க சுகமானதே !
எதிர்காலம் வளமாக்க நம் அரசு வந்ததே !
ஏற்றம் கண்டு மாற்றம் பெற சலுகை தந்ததே !

சரணம் - 1

வீறு கொண்டு நடை போட சீருடைதானே !
சமத்துவத்தைக் காட்டிடும் ஓருடைதானே !
புத்தகங்கள் தூக்கிச் செல்ல பை கொடுக்குதே !
புதுமை கண்டு வளமை காண கை கொடுக்குதே !

ஏட்டைத் தந்து எழுதச் சொல்லும் அரசினாலே
நாட்டை நாமும் நாளை நன்றாய் ஆளலாமே !
வயிற்றுப் பசியைப் போக்கத் தினமும் உணவைத்தானே
வகை வகையாய்த் தந்து நம்மில் பாலை வார்க்குதே !

சரணம் 2

காலை மாலை சென்று வர இலவச பயணம்
பேருந்தில் பள்ளி செல்ல இலவச பயணம்
பதினொன்றாம் வகுப்பு பயிலும் போது மிதிவண்டிதானே !
விரும்பித் தினமும் பள்ளி செல்ல மிதிவண்டிதானே !

ஊக்கம் தந்து ஆக்கம் பெற உதவுது அரசு
ஊக்கத் தொகை தந்து நமக்கு உதவுது அரசு
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கணினிதானே !
பணக்காரரின் கணினி இன்று நம் கையில்தானே !

சரணம் 3

பெண்கல்வி ஊக்குவிக்க தங்கம் தானே !
தாலிக்குத் தங்கம் தானே !
பெருமையோடு சொல்வோம் நாம் அங்கம் தானே !
அரசின் அங்கம் தானே !

ஞாலம் உள்ள காலம் வரை நினைத்திருப்போமே !
சாதனைகள் படைத்து நாமும் நிலைத்திருப்போமே !
உதவி செய்யும் அரசோடு இணைந்திருப்போமே !
உள்ளமெங்கும் மகிழ்ச்சியாலே நனைந்திருப்போமே !

பாடல்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.



*****************************

மு.மகேந்திர பாபுவின் பாடல்.

எங்க மண்ணும் மனசும் ஒன்னுதான்
கருணை தெரியும் கண்ணுதான்
ஆதித்தமிழன் நாங்கதான் - உலகம்
ஆளும் தமிழன் நாங்கதான்

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரதானடா !
தங்கம் போல ஜொலிஜொலிக்கும் மனசுதானடா !
எங்கும் எதிலும் இருக்குதடா எங்க பேரு !
சிங்கம் போல நடையைத் தினமும் நீயும் பாரு !

முத்தமிழும் இருக்குதடா மொத்தமாக !
முழங்கிடுவோம் பறையிசைத்துச் சத்தமாக !
வைகை ஆத்து வெள்ளம் போல உள்ளம் தானடா !
மகிழ்ச்சியோடு வாழும் எங்க இல்லம் தானடா !

மலை இருக்கும் இடமெல்லாம் கலை இருக்குமே !
சினம் இருக்கும் இடத்திலும் குணம் இருக்குமே !
நட்புக்காகக் கொடுத்திடுவோம் உயிரைக் கூடத்தான் !
கூடச் சேர்ந்து கரம் பிடித்து நீயும் ஆடத்தான் !

மாதங்களால் அழகு பெறும் வீதிதானடா !
மனம் நிறையச் சொல்லுமே சேதிதானடா !
பட்டிமன்றம் பாட்டுமன்றம் நாங்க தானடா !
சிரிக்க வைக்கும் சினிமாவிலும் நாங்க தானடா !

தலைகளாலே நிறைந்திருக்கும் தமுக்கம் பாரு
தரணியிலே மதுர போல இருக்குதா ஊரு ?
மல்லிப் பூவின் வாசம் அது மதுரக்காரன் பாசம்
ஜிகர்தண்டா குடிடா ! பறக்குது மீன் கொடிடா !

பாடல்

மு.மகேந்திர பாபு ,
பேசி - 97861 41410

*********************************************************************


பள்ளிக்கூடம் - பாடல் - மு .மகேந்திர பாபு.

எங்க ஊரு பள்ளிக்கூடம்
கண்கள் ரெண்டும் தினமும் தேடும்
நட்பினாலே நாட்கள் ஓடும்
நினைக்கும் போதே நெஞ்சம் ஆடும்

ஜோல்னாப் பையைத் தோளில் போட்டு
ஜோராகத்தான் நாங்க போவோம் !
பள்ளிப் படிப்ப முடிச்சு  நாங்க
பட்டப் படிப்பு படிச்சு நாங்க  கலெக்டராக  ஆவோம் நாங்க !

காக்கி டவுசர் வெள்ளைச் சட்டை
தூக்கிப் போட்டு நடக்கும் போது
மிடுக்கு கொஞ்சம்      தெரியும்  !
இளம் துடிப்பு அதில் விரியும் !
எங்க ஏக்கங்களும் புரியும் !

மொத மணிதான் அடிச்சதுமே
மூச்சிரைக்க நடப்போம் !
ரெண்டாம் மணி அடிக்கும் போது
வகுப்புக்குள்ளே இருப்போம்
நாங்க வகுப்புக்குள்ளே  இருப்போம் !

வாத்தியாரக் கண்டதுமே
வணக்கம் சொல்லி மகிழ்வோம் !
ஆடல் பாடல் செயல்களாலே
உண்மையிலே நெகிழ்வோம் !
உள்ளத்தாலே புகழ்வோம் !

ஒன்னுக்கா மணி அடிக்கும் போது
உற்சாகம்தான் பிறக்கும் !
நண்பனோடு சேர்ந்து வாங்கும்
கமர்கெட்டு வாசத்தில  மனம்
கவலைதனை மறக்கும் !

மத்தியான மணியடிக்க
மனசு பிடிக்கும் ஓட்டம் !
மணியடிச்சதுமே வந்து நிக்கும்
சத்துணவு கூடத்தில
சின்னதொரு கூட்டம் !

நெட்டசாரு குட்ட சாரு
குண்டு டீச்சர் , குச்சி டீச்சர்
விதவிதமா வச்சிடுவோம் பட்டப்பேரு
மாட்டிக்கிட்டு முழிக்கும் போது
நமக்குத்தானே கெட்ட  பேரு

எங்க வாத்தியாரு சாமியாக
வகுப்பறையே கோவிலாகும்
வாய்ப்பாட்டும்  தமிழ்ப்பாட்டும்
வகுப்பறையில் வேதமாகும்.
வாழ்க்கைக்கான  கீதமாகும்

சட்டப் பட்டனத்தான் மாட்டிவிட்டு
முடிய மெல்ல கோதிவிட்டு
கைகொடுத்து தூக்கிவிடும் வாத்தியாராலே
கண்கள்ரெண்டும் நீரில் முங்கும் பள்ளி நினைவுதானே நெஞ்சில் தங்கும்

வீட்டுச் சண்ட வீதிவர
வீட்டுக்குள்ளே நாம் கெடக்க
சாருங்க வண்டி வந்து நிக்கும்
நம்ம எதிர்காலம் பேசி பெத்தவங்க
மனச மெல்லத் தைக்கும்

வீட்டுமணி அடிச்ச பின்னே
கூட்டுச் சேர்ந்து வருவோம்
சின்னச் சின்னக் கதைகள் பேசி
சிரிப்பை மட்டும் தந்ததே
பள்ளிக் காலப் பருவம்

பாடல்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
பேச- 97861 41410

*********************************************************************

சீமைக்கருவேல மரம் ஒழிப்புப் பாடல்.

புது மாற்றம் ஒன்னு வந்திருக்கு நம்ம நாட்டுல
இனி செல்வம் வந்து குவியுமிங்க
நம்ம வீட்டுல
கருதெல்லாம் வெளஞ்சு தொங்கும் நம்ம காட்டுல
இந்த நெலமயத்தான் எடுத்துச் சொல்றேன் ஏன் பாட்டுல

சீமைக் கருவேல மரம் அழியுது - மண்ண
சீர்படுத்த நிதியும் இப்போ குவியுது
- முன்ன
காடு வீடு அத்தனையும் வேலிதான் - இப்ப
அரசோட திட்டத்தினால் காலிதான் - வேலி காலிதான்.

மூனு போகம் வெளஞ்ச நம்ம வயலுதான் வேலி வந்து நெறஞ்சதால தரிசுதான்
பசுமை போர்த்திக் கெடந்ததையா அன்றுதான்
வயல பாழாக்கிவிட்டதே சீமைக்கருவ இன்றுதான்

நிலத்தடி நீர் மண்ணுக்குள்ள இல்லயே
வானம் இடிஇடிச்சு மழய நமக்குத் தல்லயே
ஆறு குளத்தில் தண்ணீரைத்தான் காணோமே !
கடும் வறட்சியினால் கவலையாகிப் போனேமே !

சீமைக்கரு வேல மரம் காரணம்
மண்ண சீர்திருத்தம் செய்து நாம மாறணும்
நாட்டு மரத்த நட்டு நாம வளக்கனும்
நம்ம பிள்ளைகள மரம் நடத்தான் பழக்கனும்

பாக்கும் இடம் அத்தனையும் பசுமைதான்
மழையாலே நம்ம வாழ்க்கை வளமைதான்
வேலியில்லா தமிழகமா மாறுது நம்ம
வாழ்க்கை நிலை படிப்படியா ஏறுது

சீமைக் கருவேல மரம் இல்லங்க
சீர்படுத்த இளைஞர் கூட்டம் இருக்குங்க
சுற்றுச் சூழல் காக்க நாம வேணும்ங்க
சுத்தம் ஒன்றே சுகம் கொடுக்கும் பாருங்க

மு.மகேந்திர பாபு ,
97861 41410
***************************************************************

உலகம் போற போக்கப் பாருங்க
பூமி நெலம கொஞ்சம் எடுத்துக் கூறுங்க
மண்ணும் மரமும் அழிஞ்சு போகுதே !
மனுசன் மனசு இப்போ கல்லாய் ஆகுதே !

வாங்குறது அஞ்சு ரூபா பொருளுதான்
மறக்காம வாங்குறோமே பாலித்தின் கவருதான்
காலை முதல் மாலை வரை தானுங்க
பாலித்தீன தூக்கிக்கிட்டு அலையுறோமே ஏனுங்க ?

துணிப்பையைத் தூக்குங்க துக்கம் இல்லங்க
நெகிழிப் பையை நெனச்சாலே தூக்கம் இல்லங்க
தினம் டீக்குடிக்கும் கப்பு தானுங்க
தூக்கி வீசிப்புட்டாத் தப்புத் தானுங்க !

அழகுப் பொருளப் போட்டுத்தான அலங்கரிக்கிறோம்
நம்மத் தினமும் அழகு பாக்குறோம்
நச்சுப் பொருளக் கொட்டி ஏனோ நாசம் பண்ணுறோம்
பூமித்தாயின் உடம்ப தினமும் மோசம் பண்துறோம்.

இன்பச் சுற்றுலா போவது நாமதானுங்க
எல்லா இடத்திலும் நச்சப் போட்டாத் தீமதானுங்க
மண்ணும் மரமும் கேட்பதெல்லாம் மழயத் தானுங்க
மனட்சாட்சிய விட்டுப்புட்டுப் பேசுறோமே விலயத் தானுங்க

பூமிப் பந்தில் மனுசன் மட்டும் உயிரு இல்லங்க
புல்லும் பூண்டும் அழிஞ்சு போனா மனுசன் இல்லங்க
வாழும் வரை வளமாத்தான் வாழ வேணுங்க
சுற்றுச் சூழல் சுகமா நம்ம ஆள வேணுங்க !

*********************************************************************

வா நண்பா தோள் கொடு !
பசுமை காண மரம் நடு !
நட்பில் இணைந்து விண் தொடு !
நாளை உலகம் நமதென கைகொடு !

மதுரை மண்ணின் பெருமை சொல்லும் இளைஞர் படை
எங்கள் எழுச்சியின் முன் இருப்பதில்லை வேகத்தடை
ஏற்றம் காண மாற்றம் தருமே எங்கள் நடை
முயற்சி உண்டு பயிற்சி உண்டு வளர்ச்சிக்காகத்தானே !

விதை விதைப்போம் மரம் நடுவோம் எங்கள் கையாலே !
வெற்றி எனும் கனி பறிப்போம் எங்கள் கையாலே !
புதுமைக்குள்ளே புதைவதில்லை எங்கள் எண்ணம்
வளமை கண்டு வாழ்த்துப் பெறுவோம் இதுதான் திண்ணம் .

சாதனைகள் படைத்திடுவோம் ! சரித்திரத்தில் இடம் பிடிப்போம் !
வேதனைகள் துடைத்திடுவோம் ! வெற்றியினைத் தடம் பதிப்போம் !
காலம் எங்கள் கையில்தானே ! கலாமின் பெருமை செயலில்தானே !
காளையர் நாம் எழுந்து விட்டோம் ! கடமையினால் உயர்ந்து விட்டோம் !

மகிழ்ச்சியுடன் கரம் கொடுப்போம் ! கடைசி வரை தோள் கொடுப்போம் !
மதுரை மண்ணின் பெருமை சொல்வோம் ! மனங்களை நாம் தினம் வெல்வோம் !
கதவுகள்தான் திறந்திருக்கு ! கண்களுக்குள் சக்தி பிறந்திருக்கு !
இந்த நாளும் இனி எந்த நாளும் தமிழுக்காக எங்கள் உயிர் வாழும் !

*********************************************************************

மாடித்தோட்டம் போடலாம் வாங்க !  பாடல் - மு.மகேந்திர பாபு.

மனமிருந்தால் மாடித்தோட்டம் போடலாம் - சின்ன
வனம்போல மொட்டை மாடியும் முழுமையாகலாம்
சின்னச் சின்ன செடிகளாலே நிறைந்திடுமே ! - உள்ளம்
பசுமை கண்டு வெறுமை நம்மில் குறைந்திடுமே !

வயலிலதான் வரப்பக் கட்டித் தோட்டம் போட்டோம் - அப்ப
வயலும் வாழ்வும் கருத்துக்களை வானொலியில் கேட்டோம்
வீட்டு முன்னே தோட்டம் போட்டோம் நாமதான் - இப்ப
மாடித் தோட்டம் நமக்கு ரொம்ப தேவைதான்

நகர்வதற்கும் இடமுமில்லே பெரும் நகரத்தில - தினம்
நாலு வார்த்த பேசக்கூட நேரமில் நண்பர்களோட !
கவலைகளை விட்டுவிட்டு மாடிக்குப் போங்க - நல்ல
காத்து வந்து உடல் தழுவும் சுவாசித்து வாங்க

நஞ்சில்லா காய்கனிய இனி நாம உண்ணலாம் - வீட்டு
மொட்டை மாடியில் சின்னதொரு தோட்டம் பண்ணலாம்
கத்தரி வெண்டை தக்காளி செடியும் - இனி
நம் கண்முன்னே பூத்துக் காய்க்க வைக்க முடியும்

சின்னச் சின்ன தொட்டிகளில் செடி முளைக்கும்  - அது
சின்னப் பிள்ளை போல நின்னு பூத்துச் சிரிக்கும்
காய்கனியப் பாக்கும் போது மனசு திளைக்கும்  - கீரை
வகைகளைத்தான் பறிச்சுத் தின்ன உடம்பு நிலைக்கும்

காலை மாலை செடிகள்கிட்ட பேசிப் பாருங்க - ஒரு
தனிமை வந்து ஒட்டிக்குமா நீங்க கூறுங்க
இயற்கை உரம் போட்டு வளர்த்த செடிதானுங்க - நம்ம
இல்லத்தில இனிிமை பொங்கும் இனிதானுங்க.

மு.மகேந்திர பாபு.

*********************************************************************

கிராமத்து வாழ்க்கை - பாடல்   ( மு.மகேந்திர பாபு )

கும்பா நிறைய கம்மங்கூழுதான் - அதக்
குடிச்சுப்புட்டா வாழலாமே ரொம்ப நாளுதான்
நோயின்றி இருப்பவன் கிராமத்து ஆளுதான் - உடம்பு
நோயில மாட்டிக்கிட்டா வாழ்க்கை பாழுதான்

மணிக்கணக்கா வேல செய்யும் உடம்புதான் - மனம்
தளராம இருக்குதையா தினமும்தான்
அடைமழையும் கோடை வெயிலும் ஒன்னுதான் - எதையும்
தாங்கி நிக்கும் மனசு கிராமத்து மண்ணுதான்

காலைமுதல் மாலைவரை உழைப்புதான் - ஆனாலும்
இல்லையே எங்க உடம்பில் இப்ப களைப்புதான்
காடு வயல் அலையுறோமே நாங்கதான் - எங்கள
கண்டுக்காம இருப்பதெல்லாம் நீங்கதான்

கம்மங்கருது விளைஞ்சு நிக்குது வானம் பாத்துதான் - அதை
வாட்டி எடுத்து கசக்கும் போது கமகமக்குது மாலைக் காத்துதான்
கேப்பக்கருது வளைஞ்சு கிடக்குது பூமிபாத்துதான் - வாழ்க்கை
நம்பியிருக்கு சாப்பாட்டுக்கு ரெண்டையும் சேத்துதான்.

ஓட்டுவீடு குடிசைவீடு எங்க வீடுதான்  - கிராமம்
ஒத்துமைக்கு எங்களோட ஈடுபாடுதான்
சுத்தமான காத்து வருது ஊருக்குள்ள - நாளும்
சுகமாதான் வாழுறோம்னு கூறுபுள்ள

சிட்டுக்குருவி கூட்டம் போல சின்னப் புள்ளக  - தினம்
சிறகடிச்சு பறக்குதையா பால்ய விளையாட்டுல
பாரம்பரியம் தாங்கி நிற்பது கிராமம் மட்டுந்தான்  - அதை
பாதுகாத்தா மகிழ்ச்சி நிக்கும் விண்ணைத் தொட்டுத்தான்

பாடலாக்கம்

மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,

********************************************************************

சீமைக் கருவேல மரம்

சீமையிலிருந்து வந்த மரம்
மண்ணைச் சீர் கெடுக்க வந்த மரம்
காடு வயலை அழிச்சு இப்போ
கண்மாயிலும் கால் பதிச்ச மரம்.

வேலியாகத்தான் வந்தது இங்கே
நிலத்தடி நீரும் போனதெங்கே ?
வளமை மிகுந்த மண்ணைத்தானே
வறுமையாகத்தான் மாற்றியதே !

வானமும் பொழிய மறுக்குதே
நம்மை வறுமையும் இப்போ நெறுக்குதே !
வேலியும் நீரைச் சுருக்குதே !
வேதனையைத் தினமும் பெருக்குதே !

மண்ணின் ஆழம் வரைக்கும் செல்லுதையா !
மனுச வாழ்வை இப்போ கொல்லுதையா !
பறவைகளும் கூடு கட்டலையே !
விலங்குகளும் வந்து நிக்கலயே !

வேருடன் புடுங்கி எறிய வேண்டும்
அதன் தீமையும் மக்கட்குத் தெரிய வேண்டும்
காணும் இடமெங்கும் அழிக்க வேண்டும்
நல்ல காற்று மரங்கள் தழைக்க வேண்டும்.

காற்றின் ஈரப்பதத்தையும் உறிஞ்சுதையா !
வெப்பமும் எங்கும் நிறைஞ்சதையா !
நல்ல கால நிலையும் குறைஞ்சதையா !
நல்ல காடு வயலும் மறைஞ்சதையா !

சீமைக் கருவேல மரங்களை ஒழித்திடவே
மக்களும் ஒன்றாய்க் கூடிடணும்
மண்ணும் மக்களும் செழித்திடவே
கும்மிப் பாட்டைத் தினமும் பாடிடணும் !

பாடல்
மு.மகேந்திர பாபு 

*********************************************************************

கிராமத்துக் காதல்

காடெங்கும் நிறைஞ்சிருக்கு கம்மங் கருது  - என்
மனசெங்கும் நிறைஞ்சிருக்கு உந்தன் நினைப்பு
குருவிக்கூட்டம் வந்து வந்து தின்னு போகுது
என் உசுரக் கொஞ்சம் உன் நினைப்பு கொன்னு.போகுது

காளை மாடு கழுத்து மணி சினுசினுங்குது -  உன்
கொலுசுச் சத்தம் என்னைக் கொஞ்சம் கிறுகிறுக்குது
கருவேலமரம் காய்உதிர்க்க ஆடு மொய்க்குது - உன்
பருவம்கண்டு எனது மனம் உன்னை மொய்க்குது

சோளத்தட்டை கடிக்க கடிக்க  நாக்கு இனிக்குது - உன்
உதட்டைக் கொஞ்சம் நினைக்கையிலே உள்ளம் இனிக்குது.
சூரியனைப் பாத்துபாத்து பூவு திரும்புது - உன்
முகத்தைக் கொஞ்சம் பாக்கையில காதல் அரும்புது

அவரைப்பூவு கொடிகொடியாய்ப் பூத்துக் கிடக்குது - அதைப்
பாக்கும்போது உன் சிரிப்பு கண்ணில் நடக்குது.
தட்டைப்பயறு பட்டத்திலே காய்ச்சுத் தொங்குது
தலை சாய்த்துப்போகும் உன்முகமே மனதில் பொங்குது

எள்ளுப்பூவு அடுக்கடுக்கா பூத்துச் சிரிக்குது - அது
என்னவளின் மூக்கைக் கொஞ்சம் நினைவு ஊட்டுது
அருகம்புல்லு பச்சத்தண்ணியாப் பரந்து கிடக்குது - அது
என்னவளின் அன்பைக் கொஞ்சம் எனக்குக் காட்டுது

*******************************************************************

மத்தியான உச்சிவெயில் மண்டயத்தான் பொளக்குதடி
கோடை மழை ஆறுபோல உடம்புல வேர்வை ஓடுதடி
நாக்கு வறண்டுபோக , நாடி நரம்பு தளர்ந்து போக
தாகந்தான் கூடுதடி என் தேகந்தான் வாடுதடி

தாகம் தீர்க்க இளநிதானே இருக்குது - நீங்க
தவிர்த்துப் போக மனசு ரொம்ப வலிக்குது
செவ்விளநி சிரிக்குதையா மரத்தில - ஒன்னு
சீவித்தாரேன் பிடிங்க ஒங்க கரத்தில

நெடுநெடுனு வளர்ந்து நிக்குது பனை மரம் - ஏழை
மக்களுக்கு மக்களுக்கு அப்ப அது பணமரம்
பக்குவமா இறக்கி வச்ச பதனி பாருங்க - உங்க
உடம்புக்குத்தான தெம்பு கிடைக்க குடிச்சுப்பாருங்க

விரலைப்போல நீண்டிருக்குது வெள்ளரிப் பிஞ்சி - சின்னப்
பிள்ளை போல விரும்பியும் நீயும் நித்தமும் கொஞ்சு
வைரம் பாஞ்ச உடம்புக்குத்தான் குடிக்கனும் கூழு- நாளெல்லாம்
நோயும் நொடியும் அண்டாம நீயும் வாழு

இயற்கையாகக் கிடைக்குதையா நம்ம பானம்  - நீயும்
ஏத்தமெடுத்துக் குடிப்பதென்ன வெளிநாட்டு பானம்
பெப்சி கோக்கு குடிச்சாத்தான் கூடுதோ மானம்
இத்துப் போன உடம்புலதான் தெம்பயே காணோம்

நம்ம ஊருத் தண்ணியில கலக்குறானே வேதிமருந்த
கண்திறந்து பாத்தும் சும்மாதானே இருந்த ?
ஒத்தரூவா தண்ணி இப்ப பத்து ரூவாடா
இப்படியே போனா நீயும் நானும் செத்துருவோம்டா

நம்ம இயற்கை பானம் குடித்திடுவோம் இன்பமாகத்தான்
எழுச்சி கொண்டு செயல்படுவோம் துன்பம் நீங்கத்தான்
விவசாயி வளம்பெறணும் நம்ம  காசிலே
நாமளுந்தான் நலம் பெறணும் இயற்கை உணவிலே

*****************************************************************

கண்மாய்    (  தீக்கதிர் - வண்ணக்கதிருக்கு )

கம்மாயெல்லாம் நெறஞ்சு போச்சு கருத்தப்பாண்டியே !
கடலைப்போல  காட்சி தருது கருத்தப்பாண்டியே !
கரையைக் கொஞ்சம் ஒசத்திக்கிட்டா தேவலைதான்டா !
தண்ணி அடங்கிப்போயி உள்ளே கிடக்கும் உண்மைதான்டா !

காலையிலும் மாலையிலும் தினமும் குளிக்கலாமே !
மூட்டை முடிச்சக் கொண்டுவந்து துவைக்கலாமே !
மத்தியான நேரத்தில ஆடுமாடு  குடிக்கலாமே !
மாட்டுப்பொங்கல் தினம்மட்டும் மாடும் குளிக்கலாமே !

நெலாநீச்சல் முங்குநீச்சல் போட்டு போட்டுத்தான்
லீவுநாளில் பொழுது போக விளையாடலாமே !
நீச்சலைத்தான் கத்துக்கிட்டு ஆழம் போகணும்
இல்ல தண்ணிகுடிச்சு முங்கிப்புட்டா சோகமாயிரும்

மரப்பலக ஒன்னு போட்டுக்கிட்டா அதில படுக்கலாம்
கையிரண்டும் துடுப்பாக்கி நீந்திப் போகலாம்
உடம்பு முழுக்கப் பயிற்சி கொடுக்கும் நீச்சல்தானடா
கிராமத்து ஆட்களுக்கே சொந்தம் தானடா !

வெள்ளக் கொக்கும் குருட்டுக் கொக்கும் வந்துபோகுது
வேடந்தாங்கல் பறவை கூட தங்கிப் போகுது
நாரைக்கூட்டம் நடுக்கண்மாயில வந்து நிக்குது
நண்டு மீன கொத்தி நல்லாத் திங்குது

மீன்கள் கூட்டம் குளிக்கும்போது காலைக் கடிக்குது
அரிசிப் பொரியத் தூவிப்போட்டா எட்டிப்பாக்குது
கெண்ட கெழுத்தி விரால் மீனுனு விதவிதமாத்தான்
கம்மாயத்தான் வீடா நெனச்சு வளர்ந்து வருகுது

செடிகொடிகள் அத்தனையும் கம்மாய நம்பித்தான்
மனுச வாழ்க்கை தினந்தோறும் கம்மாய நம்பித்தான்
பயரு பச்ச நல்லா இப்ப விளைஞ்சதாலே
எங்க வாழ்க்கை செழிச்சிருச்சு கம்மாயினாலே !

*********************************************************************

ரோஜாத் தோட்டம

அழகழகாய்ப் பூத்திருக்கு ரோஜாத் தோட்டத்தில்
அனுதினமும் மூழ்கலாமே மகிழ்ச்சி வெள்ளத்தில்
சிவப்பு மஞ்சள் வெள்ளையென எல்லா வண்ணத்தில்
இதழ் விரித்துச் சிரிக்குதே எங்கள் தோட்டத்தில் !

நேருமாமா என்னைத்தானே நெஞ்சில் வச்சாரு
பெண்கள் எல்லாம் தலையிலே சூடிக்கொண்டார்கள்
ஒற்றை மலராய் இருந்தாலும் உயர்ந்தவள் நானே
மாலையாகக் கோர்த்தாலும் மணப்பவள் நானே !

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரையிலும்
எங்கள் வாசம் மணந்திடுமே எல்லார் வீட்டிலும் !
வெற்றிபெற்ற மனிதர் என்னைச் சூடும்போதிலே
முகமெல்லாம் மலர்ந்திருப்பார் என்னைப் போலவே !

பருவப் பெண்ணின் வாழ்க்கை தொடங்கவே
பக்குவமாய்ச் சொல்லிடுவார் என்னைத் தந்துதான்
இறந்துபட்ட மனிதர் வீட்டில் அவரைப் போலவே
இதழ் உதிர்த்து வருந்திடுவேன் இரங்கல்கூறவே !

சின்னக்குழந்தை சிரிக்கும்போது என்னைப் போலவே
இருக்குதுபார் என்றுசொல்லி தினமும் போற்றுவார்
ரோஜாவைத்தான் சூடிக்கொண்டு ராஜா ஆகுங்கள்
எப்பொழுதும் மகிழ்ச்சியிலே பள்ளுப் பாடுங்கள் !

********************************************************************

மழைத் துளி

மண்தொடுதே மழைத்துளி வாசத்தோடு
மனம்தொடுதே மழைத்துளி பாசத்தோடு
தட்டான் கூட்டம் தாழப் பறந்ததே !
ஆட்டுக் கூட்டம் நெருங்கி நடந்ததே  -
மழையைச் சொல்ல
!

கருப்பு வண்ணம் அடித்தது போல் மேகமானதே !
நெருப்பு கங்கு நீண்டது போல் மின்னல் வெட்டுதே !
கடகடவென பாத்திரம் உருள்வதைப் போல் இடிஇடிக்குதே !
மழைக்காத்து வந்து உடல்  தழுவ கிளுகிளுங்குதே !

காத்திருந்த வயல்வெளி தான் உடல் குளிர்ந்ததே !
கண்மாய் ஆறு நிறைந்திடத்தான் மனம் நிறைந்ததே !
காய்ந்து கிடந்த கரிசக்காட்டில் பச்சை  தெரியுதே  !
பாமரனின் உள்ளத்திலே மகிழ்ச்சி விரியுதே !

ஏர் கலப்பை தூக்கி நடக்குதையா எங்க கூட்டம்
ஊர் முழுக்க வாண்டுகளின் ஆட்டம் பாட்டம்
விதை முளைத்து வருகையிலே  முகம் மலருதே !
பச்சப்புள்ள போல நித்தம் செடி வளருதே !

செடிசெடியாய் கொடிகொடியாய் காய்ச்சுத் தொங்குதே !
சிரித்த முகத்தில்  மகிழ்ச்சிதானே   தினமும் பொங்குதே !
மாதந்தோறும் மழையினாலே கம்மாயிலே நீர் தங்குதே !
மழைநீரை  நாமும் சேகரிக்க  வளமை  நிக்குதே !

மழையைபப் போல வள்ளல் இங்கே யாருமில்லையே !
மழையினாலே மகிழாத எந்த ஊருமில்லையே !
வாழ்வோடு கலந்ததையா வானத்து  மழைத்துளி
வாழ்வாங்கு வாழ்ந்திட மழைதானே உயிர்த்துளி !

*****************************************************************

கள்ளிப்பழக் கண்ணால ...

கள்ளிப் பழக் கண்ணால காதலிச்சவளே
என்னைக் காதலிச்சவளே !
ஓன் கண்ணு ரெண்டும் உருளும் போது
உசுரு சுத்துதடி ஏன் உசுரு சுத்துதடி

நீ நடக்கும் போது தரையும் தாளம் போடுது
நீ சிரிக்கும் போது காற்றும் கவிதை பாடுது
உச்சி முதல் பாதம் வரை உன்னழகுல - அந்த
வானவில்லும் மதிமயங்கி மறைந்து போகுது !

பட்டமரம் துளிர்த்ததடி  பார்வை பட்டுத்தான்
உன் பார்வை பட்டுத்தான்
பாத்த உடன் பருவம் கிளரும் பருவச் சிட்டுத்தான்
நீ பருவச் சிட்டுத்தான்

உன் கைவிரல்கள் பட்டதால பூவும் மணக்குது
காகிதப் பூவும் மணக்குது
நம் காதல் சொல்லி கூழாங்கல்லும் வெய்யில் காயுது
தண்ணி பட்டவுடன் தாளம் போட்டு உருண்டு போகுது

நீ வெட்கிச் சிவக்கும் அழகைக் கொஞ்சம்
கடன் வாங்குச்சோ - மருதாணி கடன் வாங்குச்சோ
மதுரை வீரன் சிலையும் இப்போ  புன்னகைக்குது
உன் முகத்தைப் பாக்கும் போதிலே ...

மின்னல் வந்து வெட்கிப் போனது கண்சிமிட்டலிலே
உன் கண் சிமிட்டலிலே
மழை மேகம் வந்து தங்கிப் போனது கூந்தலிலே
உன் கூந்தலிலே ...

**************************************************************

மரம் நடுவோம் நண்பர்களே !

மரம் நடுவோம் நண்பர்களே !
மரம் நடுவோம் !  மகிழ்வாய்
எங்கள் வீட்டில் உங்கள் வீட்டில்
நம்ம தெருவில்   உடனே
மரம் நடுவோம் நண்பர்களே !

பள்ளி எங்கும் பசுமை நிறைந்திட
மரம் நடுவோம் நண்பர்களே !
சின்னச் சின்னக் குழுக்களாகச்
சேர்ந்து நாமும் மரம் நடுவோம்
சிந்தையிலே பசுமைதனை நினைத்திடுவோம் !

நாம் வளர மரம் வளரும்
மரம் வளர நாம் வளர்வோம் !
ஆண்டு பல கடந்தாலும்
மீண்டும் வந்து பார்க்கையிலே
எல்லை இல்லா மகிழ்ச்சிதானே !

மாதந்தோறும் அரசு விழா வருகுது
விழாவிலே மரம்நட மகிழ்ச்சி பெருகுது
பிறந்த நாளில்  மகிழ்ச்சியாக நட்டிடலாம்
மணநாளில் அன்பளிப்பாய் கொடுத்திடலாம்
ஆண்டாண்டாய் கண்டு நாமும் களித்திடலாம் !

பசுமையும் குளுமையும் வளமையும்
என்றும் எங்கும் சூழ்ந்திடுமே !
பறவையும் மனிதனும் இயற்கையும்
மகிழ்ச்சியோடு தினமும் வாழ்ந்திடுமே !
நம் வாழ்க்கை பசுமையாலே சூழ்ந்திடுமே !

**********************************************************

கனவு நாயகனுக்கு கவிதாஞ்சலி

அக்னிச் சிறகொன்றின் வானம்
சுருங்கியதே !
அனைவரின் இதயமும் கண்ணாடியென  நொறுங்கியதே !
வானத்தை அளந்த தலைமகன் தூங்குகிறானோ ?
வாழ்க்கை கனவுகளை தந்தவன்
ஏங்குகிறானோ ?

கடல்காற்று பட்டதாலே கடல்கடந்தும் நின்றாயோ ?
கனவுகளை விதைப்பதற்கு  மாணவர்களிடத்தில் சென்றாயோ ?
விதைத்த விதை விருட்சமாய் வளருதையா !
விதைத்த நீ அறுவடைக்கு வருவாயோ ?

எளிமைக்கும் பெயருண்டு அதுஉம் பெயரே !
நாட்டின் ஏற்றத்தை நோக்கியது உம் உயிரே !
இராமேஸ்வரம் தந்த வரமன்றோ நீங்கள் !
இராஷ்டிரபதி பவனின் மூன்றாம் தமிழ் பூ நீங்கள்.!

குறள் வந்து விழுமய்யா உம் குரலில்
உடல் சோர்ந்து நீயும்தான் விழுந்ததென்ன ?
கடைசிப் பேச்சிலும் கனவுகளைத்  தந்தவனே !
தரணியெங்கும்  தமிழ் மகனாய்  வந்தவனே !

வழிகாட்டி மரமாய் பயணத்திலே வருவீர்கள்  !
எங்கள் வாழ்வெங்கும்  ஏற்றத்தைத் தருவீர்கள் !
கண்ணீரால் கலங்கி நின்றிட  மாட்டோம் !
கனவுகளை நிஜமாக்கி உங்களுக்குத்  தந்திடுவோம்  !

*********************************************************************

தலைக்கவசம் போட்டுப் போங்கண்ணே !  -  பாடல் ( மு.மகேந்திர பாபு )

தலைக்கவசம் போட்டுப் போங்கண்ணே ! - போன
வேல முடிஞ்சு சந்தோசமா திரும்பி வாங்கண்ணே !
வில மதிக்க முடியாதது நம்ம உயிருதானண்ணே !  - ஒரு
நிலயின்றி விபத்திலதான் விடை பெறலாமண்ணே ?

பட்டப் படிப்பு படிக்கப் போற தம்பி - உன்
குடும்பமே இருக்குதையா உன் வரவ நம்பி
சட்டம் போட்டு நம்ம தலய காக்கணுமா ?  - ஒரு
காவல்காரர் நம்ம நிறுத்தி  விபரம் கேக்கணுமா ?

குலுங்கி குலுங்கிப் போக வைக்குது நம்ம ரோடு - அதில
குதூகலமா பயணம் செய்வது பெரும்பாடு
சாலை விதிய நாம மதிப்பதே இல்லை  - தினம்
இப்படியே போனா நமக்குத்தானே பெரும் தொல்லை.

ஓட்ட உடைசல் சாலைகளை மேம்படுத்துங்க
மேம்பாலங்கள் போட்டு நெருக்கடிய குறைக்கப் பாருங்க
காலை மாலை கூட்டம் போகுதையா நத்தையாகத்தான் !
காணும்போது தெரியுது சர்க்கஸ் வித்தையாகத்தான் !

வாகனங்கள் எண்ணிக்கை கூடிப் போச்சண்ணே !
வரம்புமீறி  வண்டி ஓட்ட உடம்ப மண் மூடிப் போச்சண்ணே !
டாட்டா சொல்லி அனுப்பறது மேல போறதுக்கா ?
போட்டோ போட்டு பொட்டு வச்சு தனிமரமா ஆறதுக்கா ?

தலைக்கவசம் போட்டுப் போனா பிழைச்சுக்கலாம்
குடும்பத்தோடு சந்தாசமா நாமும் நிலைச்சுக்கலாம்
தரமான கவசத்தை வாங்கிப் போட்டுப் போங்க
வரமான வாழ்க்கைய நாளும் வாழ்நது வாங்க !

********************************************************************

காடு , வயல் காப்போம்

காடு வயல் இருந்ததெல்லாம் அப்போ - அது
கட்டடமா மாறிப்போச்சு இப்போ
சத்தான காய்கறிகள் கிடைச்சதெல்லாம் அப்போ - நாம
நஞ்சத்தானே சாப்புடுறோம் இப்போ

மக்கள் தொகை பெருகப் பெருக குறைஞ்சதையா வயல்வெளி
செயற்கை உரம் போட்டதாலே இருக்கும் நிலமும் இப்பபலி
வாழவைக்கும் வயல்வெளியை வீழ வைக்கும் மனிதனே !
வாழ்க்கை எல்லாம் இனி நோய்கள் சூழும் என்ன செய்வாய் மனிதனே !

படிச்ச கூட்டம் ஊர விட்டு ஓடுது - அது
பக்குவமா நகரத்தில வேலயத்தான் தேடுது
அப்போ மாசந்தோறும் மூனு மழ பேஞ்சது
இப்போ மழயின்றி காடுகர காஞ்சது

உழவுமாடு கால்தடம்தான் வயலிலே - டிராக்டர்
வந்துவிட மாட்ட இப்ப காணல
ஏரு பூட்டி உழுத சனம் எங்கடா ? - அதன்
ஏக்கத்த இங்க தீர்த்து வைப்பதாரடா ?

பட்டம் போட்ட வயல்களையும் காணல
பட்டம் படிச்சவனையும் கிராமத்தில காணல
நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறுது
இளமையில முதுமையாகி மண்ணுக்குள்ள போய்ச் சேருது

தாலிக்கும் வேலிக்கும் போராடும் மனித கூட்டமே !
வயல்களத்தான் கூறுபோட்டு விற்பதுதான் தெரியலையோ ?
காடழித்து வீடாக்கும் மனித கூட்டமே !
மண்ணைவிட்டு எடுத்திடுவாய் நீ பெரும் ஓட்டமே !

****************************************************************

நிகழ்வுகள் குறும்படத்திற்கு - (
மாற்றம் செய்தது. )

உறவை விட்டுப் போகின்றேன்
உள்ளம் ஏனோ நோகின்றேன்
கண்கள் திறந்து பார்க்கின்றேன்
காணும் தூரம் இருள்தானே !
அன்பைத் தேடி வாழ்க்கையில்
அடிமை யானது உள்ளமே !

சொந்தம்  விட்டுப் போகுதே !
கண்கள் ரெண்டும் வறண்டதே !
வாழும் நாளும் பாலையே !
வந்திடுமோ மீண்டும் சோலையே !
வலிகள் தூக்கி நடக்கின்றேன்
வசந்தம் மறந்து கடக்கின்றேன்.

காதல் சொல்லி வந்தாளே !
கவலை ஏனோ தந்தாளே !
கை பிடித்து நடந்தவளே !
கை விரித்துச் சென்றாளே !
என்னுள் பாதி இருந்தவளே !
என்னைக் கொன்று சென்றாளே !

மாற்றம் வருமென நினைத்தேன்
ஏமாற்றத்தாலே கண்கள் நனைத்தேன்
உள்ளம் மனைவியைத் தேடுதே !
அருகில் இல்லாமல் வாடுதே !
உறவும் என்னைப் புரியல
போகும் பாதை தெரியல ...

************************************************************

மதுரை

ஆதிமனிதன் பாசம் காண அழகர் கோவில் வாடா
அருகில் நின்னு அன்பாக அன்னம் கொஞ்சம் தாடா
ஆண்டு முழுதும் தீர்த்தமாக ஊத்துதடா நூபுர கங்கை
அகிலத்திலே இதைப்போல இருக்குதாடா வேறு எங்க ?

சைவத்தையும் வைணவத்தையும் சேர்க்குதையா சித்
திரை மாதம்
மதுரை வீதி எங்கும் உலா வருதே அழகரின் பாதம்
ரெட்ட மாட்டு வண்டி கட்டி வரும் ஊரு சனம்
ரெக்க கட்டிப் பறந்திடுமே சிறுவர் மனம்

பாதுகாக் இருக்குதையா பதினெட்டாம் படிக் கருப்பு
பயமும் இல்ல பதட்டம் இல்ல மனசக் கொஞ்சம் திருப்ப
ஆறுபடை வீடு கொண்ட முருகனைப் பாரு
பழமுதிர்ச் சோலையிலே மக்களின் பரவசம் பாரு

நேர்த்திக் கடன நிறைவேத்த இருக்கிறாரே பாண்டிமுனி
சொந்த பந்தம் வந்து சேர விலகிப் போகும் கவலை இனி
கிடாச்சோறு கமகமக்கும் மக்கள் கூட்டம் அலை மோதும்
அங்காளி பங்காளி அத்தனை பேரும் அன்பில் நனையுமடா

வானம் தொட்டு நிக்குதடா மீனாட்சி அம்மன் கோபுரம்
நம்ம வாழ்க்கை தொடப் போகுதடா வெற்றி எனும் கோபுரம்
நம்ம வள்ளுவரும் குறள் தந்த கோவில் தானடா
கல்யானையும் கரும்பு தின்ன அதிசயம் இங்கதானடா

கடம்ப மரமும் மருதமரமும் மதுரைக்கே சொந்தமடா
கட்டடக் கலையை உலகுக்கே சொல்லும் எங்க ஊரடா
புத்தகங்கள் புரட்டிப் பார்க்க புதுமண்டபம் போகலாமே
பொக்கிஷமாய்இருக்கின்ற கற்சிலையும் காணலாமே !

பாரம்பரியம் சொல்லுதடா நம்ம விளக்குத் தூணு
பக்கம் பக்கம் நின்று உயர்ந்து பத்துத் தூணு
கருப்பட்டியும் கடுக்காயும் கலந்து கட்டிய மகாலு
அன்னாந்து பார்த்து வியக்குரானே வெளிநாட்டு ஆளு

கலைகளும் மலைகளும் கணக்கின்றி இருக்கு
பரங்குன்றம் பசுமலை யானை மலை  அரிட்டாபட்டி
அனைத்திலும் சமணப்பள்ளி இருக்கு
பாறையில படிச்சவன்டா பண்பாட்டைக் குடிச்சவன்டா

இருகரை தொட்டு ஓடும் வைகை நதி பாரு
இளைஞர் கூட்டம்  துள்ளிக் குதிச்சிடுமே பாரு
தண்ணி ஓடும் காலமெல்லாம் டைவ்தானே அடிப்போம்
வத்திப் போனா கிரிக்கெட்டு மட்டைதானே பிடிப்போம்.

உலக  அதிசயத்தில ஒன்னு தானே எங்க வைகை நதி
வைகை கடலிலில்தான் கலக்கலையே நீயும் மனசில் பதி
பரமனும் மாறினான்டா பிட்டுக்குத் தினக்கூலி
பாடுபடும் விவசாயிதான் எங்க மதுரைக்கே வேலி

கோட்டு சூட்டு போட்டு வந்தார் மகாத்மா
ஆடம்பர ஆடையை அகற்றியது நம்ம ஆத்மா
வேட்டி துண்டு கட்டிக்கிட்டுப் போனாரடா
வெளிநாட்டிலும் வேட்டியோட பவனிதானே வந்தாரடா

கல்வி கற்க நம்ம காமராசர் பல்கலை
கவலை இன்றி உயர்ந்திடுமே உன் நிலை
ஆங்கிலேயன் பேரச் சொல்லும் ஏவி பாலம்
ஆற்றலிலே குறையவில்லை ரொம்ப காலம்

குற்றாலம் போலவொரு குட்லாடம் அருவி
குளுமை காண வருகின்ற மனிதரெல்லாம் குருவி
கத்திச் சண்டை வாள் சண்டை ரொம்ப ரொம்ப பழசு
எங்க ஊருச் சேவல் சண்ட இப்ப ரொம்ப புதுசு

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வீரத்தப் பாரு
மதுரை போல மாடுபுடி வீரன் வேற யாரு
காளை அடக்கும் காளை எங்க மதுரக்காரன் தானடா
காலந்தோறும் வெற்றிக்கொடி நட்டுவோம் நாங்கடா

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தங்கமான பூமி
மண்ணும் மொழியும் எங்களுக்கு ரெண்டு கண்ணு சாமி
முத்தமிழும் முழுசாக இங்கதானே இருக்குது
கேட்கும் போதே மனசுக்குள்ளே மத்தாப்பு பறக்குது

பழமையான நகரம் மதுரை நகரம் தானங்க
இப்ப புதுமையான நகரும் மதுரை நகரம் தானங்க
தூங்கா நகரத்திலே இசைக்குதடா குத்துப் பரோட்டா சத்தம்
மூக்கத் துளைக்குதடா அம்மா மெஸ் அயிரமீனு குழம்புச் சத்தம்

ஜில்ஜில் ஜிகர்தண்டா மதுரையோட சிறப்பு
அதக் குடிச்சிப்புட்டு கொண்டாட்டம் போடுதே இளவட்ட நெருப்பு
வீரத்திலும் பாசத்திலும் வெற்றி கண்ட ஆளு
மதுர மண்ணின் பேரக்கேட்டா விசிலு பறந்திடுமே தூளு.

*********************************************************

பெண் -  உன் கரம் பிடித்து நடக்கின்றேன் நான்
        உன் காதல் மொழி அத்தனையும் தேன்

ஆண் - வானிலவு தேனிலவாய் வெளிச்சம்தனை வீச
       வாழ்க்கையெல்லாம்  உன் பெயரை என் இதயம் பேச
       இன்று இரவும் பகலாகும் பகலும் இரவாகும்
       இதயம் ஒன்றாகும் நாம் இணைவது நன்றாகும்

சரணம்

ஆண் -   உன் பருவம் கண்டு உருகுதடி என் தேகம்
         வாழ்வின் கடைசி வரை என்னுள்ளே நீ சரிபாகம்

பெண் -  காலந்தோறும் கலங்காது பாத்திடுவேன்
         காலையிலே புது மலரெனவே பூத்திடுவேன்
         கண்மொழியின் அர்த்தங்களை கனிவுடனே செய்திடுவேன்
         உன் குடும்பம் இனி நம் குடும்பம் அன்பாலே நெய்திடுவேன்.

************************************************************

மாமதுர மாதுர நல்ல மதுர - இப்ப
மகிழ்ச்சியில திளைக்குது பார் நம்ம மதுர
சித்திரையில் வருகுது பார் தங்கக் குதிர
தண்ணி பீச்சி அடிச்சிடடா சாமி எதிர - இந்த பூமி அதிர

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது  இந்த மண்ணுதான்
நம்ம சாமி அடிபட்டதும் இந்த மண்ணுதான்
மீனாட்சி பார்வையெல்லாம் இந்த மண்ணுதான்
வள்ளுவனார் அரங்கேற்றம் இந்த மண்ணுதான்

நாலுபக்கம் மலையெல்லாம் நிமிர்ந்து நிக்குது
நாலுபக்கம் கல்லூரிகள் வளர்ந்து நிக்குது
வைகையில தண்ணிச் சத்தம் சலசலக்குது
வண்டியூரு கண்மாயில மீனு துள்ளுது

தூணுபோல பலமிருக்குது மதுரைக்காரன் மனசு
மீனாட்சி கோவிலுக்கு ரெண்டாயிரம் வயசு
குன்றம் ஏறிக் காத்திருக்கான் குமரவேலன் 
குறுஞ் சிரிப்பாய்ப் பார்த்திருக்கான் மாமன்காரன்

எங்கம்மா உங்கம்மா எல்லாம் யாரடா
வீரப்பெண் மங்கம்மா வாரிசு தானடா
யானைமலை சமணர்மலை என்ன சொல்லுது
நம்ம மொழியோட வரலாற விளக்கிச் சொல்லுது

குப்பையில்லா மதுரையா நாம மாத்துவோம்
பசுமைய எங்கும் நல்லா நாம போத்துவோம்
எதிர்காலம் புதிர்காலம் இல்ல பாரடா
மதுர என்றும் இனிக்கும் என்று நீயும் கூறடா !

***************************************************************

இயற்கை பானம் - பாடல் , மு.மகேந்திர பாபு.

மத்தியான உச்சி வெயில் மண்டயத்தான் பொளக்குதுங்க
கோடை மழை ஆறு போல உடம்புல வேர்வை ஓடுதுங்க
நாக்கு வறண்டு போக நாடி நரம்பு தளர்ந்து போக
தாகந்தான் கூடுதே நம்ம தேகந்தான் வாடுதே !

தாகம் தீர்க்க இளநிதானே இருக்குது
நீங்க தவிர்த்துப் போக மனசு ரொம்ப வலிக்குது
செவ்விளநி சிரிக்குதையா மரத்தில
ஒன்னு சீவித்தாரேன் பிடிங்க உங்க கரத்தில

நெடுநெடுனு வளர்ந்து நிக்குது பனை மரம்
ஏழை மக்களுக்கு அப்ப அது பண மரம்
பக்குவமா இறக்கி வச்ச பதனி பாருங்க
உங்க உடம்புக்குத்தான் தெம்பு கிடைக்கக் குடிச்சுப் பாருங்க

விரலைப் போல நீண்டிருக்குது வெள்ளரிப் பிஞ்சு
சின்னப் பிள்ளை போல விரும்பி நீயும் நித்தமும் கொஞ்சு
வைரம் பாஞ்ச உடம்புக்குத்தான் குடிக்கனும் கூழு
நோயும் நொடியும் அண்டாம நீயும் வாழு

சூட்டைத் தணிக்க குடிக்கலாமே நீருமோரு
நுங்கைப் போல சத்து வேறெது கூறு
தாகம் தீரக் குடிக்கலாமே தர்ப்பூசணிச் சாறு
பழங்களாலே பலன் பெறலாம் நீயும் பாரு

இயற்கையாகக் கிடைக்குதையா நம்ம பானம்
இத விட்டுப் புட்டுக் குடிப்பதென்ன வேற பானம்
வேற பானம் குடிச்சாத்தான் கூடுதோ மானம்
இத்துப் போன உடம்புலதான் தெம்பையே காணோம் !

நம்ம இயற்கை பானம் குடித்திடுவோம் இன்பமாகத்தான்
எழுச்சி கொண்டு செயல்படுவோம் துன்பம் நீங்கத்தான்
விவசாயி வளம் பெறனும் நம்ம காசிலே
நாமளுந்தான் நலம் பெறணும் இயற்கை உணவிலே !

மு.மகேந்திர பாபு.


*********************************************************************

புதிய உலகம் படைக்கப் பிறந்தோம் நாங்கள்
இனி பூக்கள் போல உதிர்வதில்லை நாங்கள்
பூமிப் பந்தைப் புரட்டிப் போடுவோம் நாங்கள்
புதுமை செய்து புரட்சி செய்வோம் நாங்கள்

கல்விதானே எங்களுக்கு இரு கண்கள்
கவலை அழித்து சாதிப்போம் நாம் புதுமைப் பெண்கள்
அடுப்படியில் இடுப்பொடிய இருந்ததெல்லாம் அன்று
அகிலம் போற்ற உயர்கின்றோம் புதுமைப் பெண்கள் இன்று

அச்சம் மடம் நாணம் எல்லாம் உள்ளுக்குள்ளதான்
அடிமை விலங்கு அடிமையாகும் சொல்லுக்குள்ளதான்
தலை குனிந்து நடக்க மாட்டோம் எங்கள் வாழ்விலே
தலை குனிவைத் தரவும் மாட்டோம் எங்கள் வாழ்விலே

சாதனைகள் எழுதிச் செல்வோம் ஏடு தன்னிலே
வேதனைகள் நீங்கச் செய்வோம் வீடு தன்னிலே
போதனைகள் நித்தம் சொல்வோம் நாடு தன்னிலே
சோதனைகள் தூக்கிக் கொல்வோம் தோள்கள் தன்னிலே !

மனித நேயம் காத்துதானே மாற்றம் செய்குவோம்
மரங்கள் வளர்த்து பசுமை காக்க ஏற்றம் செய்குவோம்
சாதி மதம் தூக்கி எறிவோம் மனதை விட்டுத்தான்
சாதனைகள் தொடர்ந்து செய்வோம் அச்சம்  விட்டு

****************************************************************

கனவு நாயகனுக்கு கவிதாஞ்சலி

அக்னிச் சிறகொன்றின் வானம்
சுருங்கியதே !
அனைவரின் இதயமும் கண்ணாடியென  நொறுங்கியதே !
வானத்தை அளந்த தலைமகன் தூங்குகிறானோ ?
வாழ்க்கை கனவுகளை தந்தவன்
ஏங்குகிறானோ ?

கடல்காற்று பட்டதாலே கடல்கடந்தும் நின்றாயோ ?
கனவுகளை விதைப்பதற்கு  மாணவர்களிடத்தில் சென்றாயோ ?
விதைத்த விதை விருட்சமாய் வளருதையா !
விதைத்த நீ அறுவடைக்கு வருவாயோ ?

எளிமைக்கும் பெயருண்டு அதுஉம் பெயரே !
நாட்டின் ஏற்றத்தை நோக்கியது உம் உயிரே !
இராமேஸ்வரம் தந்த வரமன்றோ நீங்கள் !
இராஷ்டிரபதி பவனின் மூன்றாம் தமிழ் பூ நீங்கள்.!

குறள் வந்து விழுமய்யா உம் குரலில்
உடல் சோர்ந்து நீயும்தான் விழுந்ததென்ன ?
கடைசிப் பேச்சிலும் கனவுகளைத்  தந்தவனே !
தரணியெங்கும்  தமிழ் மகனாய்  வந்தவனே !

வழிகாட்டி மரமாய் பயணத்திலே வருவீர்கள்  !
எங்கள் வாழ்வெங்கும்  ஏற்றத்தைத் தருவீர்கள் !
கண்ணீரால் கலங்கி நின்றிட  மாட்டோம் !
கனவுகளை நிஜமாக்கி உங்களுக்குத்  தந்திடுவோம்  !

த்தான்

விண்கலத்தில் சென்றிடுவோம்  வீர மங்கையாய்
வீரத்திலும் ஜொலித்திடுவோம் வெற்றி வேங்கையாய்
வீடும் நாடும் முன்னேறும் எங்கள் செயல்களால்
ஏடும் பாடும் பெண்களைத்தான் நாள் தோறுமே !

வான் வெளியில் வலமும் வருவோம் நாங்கள்
தேன் மொழியில் குரலும் தருவோம் நாங்கள்
மீன் விழியில் சேதி சொல்வோம் நாங்கள்
நான் என்ற நம்பிக்கை உண்டு பெண்களுக்கே !


******

********************************************************************

*


Post a Comment

0 Comments