அடிகுழாய் - கவிதை

 

அடி குழாய் 


கிராமத்து அடி குழாயின்

அடியில் அமிழ்ந்து கிடக்கின்றன 

பெண்களின்  ஆயிரமாயிரம் 

கனவுகளும் ,கவலைகளும்

சில சந்தோசங்களும் .


அவை யாருமற்ற 

நள்ளிரவு நேரத்தில் 

நடமாடத் தொடங்கி ,

தங்களுக்குள் விவாதித்து ,

அதி காலையில் 

மூர்ச்சித்து விழுகின்றன 

பெண்களின் கவலை சொல்லி .


பெண்களின் கண்ணீர்த் துளியாய் 

அடிகுழாயில் 

சொட்டுகிறது  தண்ணீர்த் துளி .


ஒவ்வொரு 

காலிக் குடங்களிலும்

தண்ணீரோடு 

நிரப்பப் படுகின்றன 

பெண்களின் கவலை களும் .


என்றேனும் தீர்வு

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

இயங்கிக் கொண்டிருக்கின்றன

அடிகுழாயும் , ஆழ்மன எண்ணங்களும்.


மு.மகேந்திர பாபு , மதுரை.

நன்றி - தமிழ்நாடு இபேப்பர்.காம் 20-04-2024

Post a Comment

0 Comments