வெற்றிக் கதவின் திறவுகோல்
கட்டுரைகள்
மு.மகேந்திர பாபு
தன்னம்பிக்கை மற்றும் சூழலியல் கட்டுரைகள்.
******************* *********************
உள்ளம் மகிழ இல்லந்தோறும் நூலகம்
' புத்தகங்கள் பொக்கிஷங்கள் , புத்தகம் வாங்கிப் புத்தகம் ( வீடு ) பெறுவோம் , ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் , நூலறிவே ஆகுமாம் நுண்ணறிவு , நூல் பல கல் , கற்றது கையளவு கல்லாதது உலகளவு ' போன்ற தொடர்கள் புத்தகங்களின் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.
நமது வீட்டில் பூஜையறை , சமையலறை , உணவறை , படுக்கையறை , உடற்பயிற்சியறை இருப்பதைப் போன்று புத்தகங்களுக்கென தனியறை ஒதுக்கி , வீட்டிலேயே அறிவுத் திருக்கோயிலாம் நூலகத்தை ஏற்படுத்த வேண்டும்.
' கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்ற எண்ணம் இன்று உருவாகி வருகிறது. ' ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் ' என்பதைப் போல ' நூலகம் இல்லா வீட்டின் அழகு ' பாழாகிக் கிடக்கிறது.
புத்தகங்கள் எனப்படுபவை , ஒரு கணிசமான உலகம். ' உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ அப்படித்தான் மனதிற்குப் பயிற்சி புத்தகங்களை வாசிப்பது ' என்றார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் வீடுகளில் இருபது முதல் முப்பது நூல்களைக் கொண்ட சிறிய நூல்கங்களை ஏற்படுத்தி , தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்தால் , தானாகவே குழந்தைகளுக்கும் வாசிக்கும் பழக்கம் உருவாகும்.
புத்தகங்கள்தான் ஒருவரை முழு மனிதனாக மாற்றும் என்கிறார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். ' புத்தகங்கள் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத இருட்டறை போன்றது ' என்ற கூற்று மிகவும் சரியே.
அறிவுத்தேடல்
ஒவ்வொருவரும் தனக்கான ஊதியத்தில் ஒரு சிறு தொகையை நூல்கள் வாங்க முதலீடு செய்ய வேண்டும். நூல்கள் வாங்கச் செலவு செய்வது , செலவு அல்ல ; அது நம் அறிவுத் தேடலுக்கான வரவு. ஒரு மாதத்திற்கான மளிகை , பால் , மின் கட்டணம் , குடிநீர் கட்டணம் , எரிவாயுக் கட்டணம் , செய்முறைச் செலவுகள் போன்று நூல்கள் வாங்க ஒரு சிறு தொகை ஒதுக்கீடு செய்து , நம் வீட்டிலேயே சிறு நூலகம் ஒன்றை உருவாக்கலாம். அதன் மூலம் நமது குடும்பமே வாசித்து , அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். புத்தகங்கள் நிறைந்த சூழலில் வளரும் குழந்தைகள் அறிவு உள்ளவர்களாகவும் , தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் , இனிய பண்புள்ளவர்களாகவும் , வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களாகவும் , ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள்.
நல்ல புத்தகங்களைப் படித்துக் கெட்டுப்போனதாக இந்த உலகில் நாம் யாரையும் கூறிவிட முடியாது. புத்தகம் படிப்பதைக் கடமையாகக் கொண்டவர்களாகவும், வாசிப்பதை உயிர் என மதித்தவர்களும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
நல்ல நண்பன்:
ஒவ்வொரு நண்பனும் ஒரு புத்தகத்திற்குச் சமமானவன் என்பதைப் போல , ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்குச் சமமானது. புத்தகம் பெற்றோரைப் போல அறிவுரை வழங்கும். உற்ற நண்பனைப் போல ஆலோசனைகள் வழங்கும். அதனால்தான் அறிஞர் ரஸ்கின் , ' புத்தகங்களைப் போன்ற சிறந்த கருவூலம் வேறு எதுவும் மனிதனுக்கு இருக்க முடியாது ' என்றார். ' ஒரு நூலகம் திறக்கப் படும்போது , ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது ' என்றார் பேரறிஞர் விக்டர் ஹியுகோ.
புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களால் செய்ய முடியாத எத்தனையோ நல்ல காரியங்களை அந்தப் புத்தகங்கள் செய்துவிடும்.
குழந்தைகளுக்கான நூல்கள் :
ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும் போது தமிழில் கற்கப்படும் முதல் நூல். ஆத்திசூடி , கொன்றை வேந்தன் ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த , சிறிய வாக்கியங்களைக் காணலாம். பஞ்ச தந்திரக் கதைகள் , மாயாஜாலக் கதைகள் , நீதிக்கதைகள் , மரியாதை ராமன் கதைகள் , பரமார்த்த குரு கதைகள் , தெனாலிராமன் கதைகள் , விக்கிரமாதித்யன் கதைகள் , அக்பர் - பீர்பால் கதைகள் , ராயர் - அப்பாஜி கதைகள் , முல்லாவின் வேடிக்கைக் கதைகள் , பாரதியார் , பாரதிதாசன் பாடல்கள் , திருக்குறள் , கவிமணி பாடல்கள் , குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்கள் , புதிர்கள் , படக்கதைகள் , தினமலர் - சிறுவர் மலர் , அம்புலி மாமா , பூந்தளிர் , அரும்பு போன்ற சிறுவர் இதழ்களையும் , புத்தகங்களையும் நம் வீட்டு நூலகத்தில் வாங்கி வைக்கலாம்.
நூல்களால் உயர்ந்தோர் :
நூலகங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்வில் உயர்ந்த அறிஞர் பெருமக்களைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அண்ணல் அம்பேத்கர் , நூலகம் திறக்கும் போது முதல் ஆளாகச் சென்று , கடைசி ஆளாகத் திரும்புவாராம். ஆசியாக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியார் நூலகத்தை அமைத்த பெருமை அவரைச்சேரும்.
' அடிமைகளின் சூரியன் ' எனப்போற்றப்பட்ட ஆபிரகாம் லிங்கன் , புத்தகங்களைப் படித்தே அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தவர். லண்டன் நூலகத்தில் அரிய நூல்களைப் படித்து ஆய்வு செய்த காரல்மார்க்ஸ் , உலகின் பொதுவுடைமைத் தந்தையாக உயர்ந்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து , முதுகலைப் பட்டதாரியான ஓர் இளைஞன் , சென்னை நோக்கிச் சென்றான்.முடிவில் தமிழகத்தின் முதல்வராகத் திரும்பினான் என்று பேரறிஞர் அண்ணாவைப் புகழ்வார்கள். அவர் சென்னை கன்னிமாரா நூலகத்திலுள்ள அனைத்து நூல்களையும் படித்தவர். இவர்கள் ஒரு சிறு உதாரணப் புருஷர்கள் மட்டும்தான்.
நூலகச்சுற்றுலா :
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்து வைப்பதைப் போல , நூல்களையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். பூங்காக்களில் பூக்களைப் பார்த்து மகிழ்வதைப்போல , நூலகங்களில் புத்தகங்களைப் பார்த்து குழந்தைகள் மகிழ்வார்கள். சிறுவர் இதழ்கள் , படக்கதைகள் , நன்னெறிக் கதைகள் போன்றவற்றைப் பார்க்கும் போது , தனக்கான உலகத்தினுள் உலவுவதாக நினைப்பார்கள் .
வீட்டுச் சிறைக்குள் அடைபடாமல் , ஒரு சிட்டுக் குருவியைப்போல , சுதந்திர வானில் சுற்றித்திரிய வீட்டுக்கருகே உள்ள நூலகத்திற்கு அழைத்துச்சென்று , நூல்களோடு ஒரு நட்புறவை உருவாக்கப் பெற்றோர் முயல வேண்டும்.
கோவில் திருவிழாக்களுக்கு அழைத்துச் சென்று , நமது பாரம்பரியத்தைச் சொல்லிக் கொடுப்பதைப் போன்று , ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். புத்தகங்களின் மணம் , குழந்தைகளின் மனதிற்குள் ஊடுருவி, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
எந்தக் குழந்தை அதிர்ஷ்டசாலி :
அக்கறை உள்ள பெற்றோரும் , அலமாரி நிறையப் புத்தகங்களும் வாயக்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி. ' 'மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் ' என்கிறது சீனப்பழமொழி. 'எந்த வீட்டில் நூலகம் உள்ளதோ அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது' என்றார் பிளாட்டோ. வாழ்க்கையில் படிப்படியாய் உயர , சிறு பருவத்திலிருந்தே நூல்களைப் படிக்கும் எண்ணத்தை விதைப்போம்.
மேதைகள் பலரை மேன்மையடையச் செய்த புத்தகம், நம் பிள்ளைகளையும் உயர்த்த ' இல்லந்தோறும் நூலகம் அமைத்து உள்ளம் மகிழ்வோம் ' .
மு.மகேந்திர பாபு.
*****
வெற்றிக் கதவின் திறவுகோல் தன்னம்பிக்கை.
' எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி ' என்றார் பைந்தமிழ்ப்புலவர் பாரதி.
' வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும் '
என்றார் தன்னம்பிக்கை கவிஞர் தாராபாரதி.
' நம்பிக்கை நார் மட்டும்
நம் கையிலிருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும் ' என்றார் கவிஞர் மு.மேத்தா.
' முயற்சி திருவினையாக்கும் ' என்றார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது வான்புகழ் கொண்ட வள்ளுவப் பேராசான். முயற்சியும் பயிற்சியும் கொண்டு தன்னம்பிக்கை என்னும் திறவுகோலால் வெற்றியெனும் கதவினைத் திறக்கலாம். வானம்பாடியென வானில் பறக்கலாம்.
தன்னம்பிக்கையெனும் தாரக மந்திரம்.
தன்னம்பிக்கை என்பது ஒருநாளில் உதிர்ந்துவிடும் பூவாக இருந்து விடக்கூடாது.மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் என்றார் அரிஸ்டாட்டில்.
மண்ணில் விதைத்த விதைகள் முதல் விண்ணில் பறக்கும் பறவைகள் முதல் அனைத்து உயிரினங்களின் உடலோடும் ஒட்டிய ஒன்று தன்னம்பிக்கை. உயர்திணை , அஃறிணை என்றில்லாது , உயர வேண்டிய ஒவ்வோர் உயிரினத்திற்கும் வேண்டியது தன்னம்பிக்கை. போட்டிகள் நிறைந்த இன்றைய பூவுலகில் தன்னம்பிக்கையோடு ஒவ்வொரு நாளின் விடியலையும் யார் எதிர்கொள்கிறார்களோ , அவர்களுக்கே உண்மையான விடியல் கிடைக்கிறது.
தன்னம்பிக்கையின் நிறைவு ' என்னால் முடியும் என்றும் விடியும் ' என்பது. இன்றைய மாணவர்களிடமும் , இளைஞர்களிடமும் அவர்களது மனவயலில் விதைக்க வேண்டியது தன்னம்பிக்கை விதைகளே ! சின்னச் சின்னத் தோல்விகளை , ஏமாற்றங்களைத் , துரோகங்களை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய மனநிலையில் இன்றைய மாணவர்களும் , இளைஞர்களும் இல்லை என்பது வருத்தத்குரிய உண்மைச் செய்தியாகும். ' புதைக்கப் படவில்லை விதைக்கப் படுகிறோம் என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. ஒதுக்கப் படவில்லை செதுக்கப் படுகிறோம் என்றுணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது. தன்னம்பிக்கையோடு போராடி தோல்வியைத் தழுவினாலும் , ஒருவன் தோளில் அமரும் தோல்வி வெற்றிக்கருகில் வீறுநடையிட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். உயர்த்தி விட ஒருவரின் கரம் உதவிக்கு நமக்குத் தேவையில்லை. தன்னம்பிக்கை ஒன்று உள்ளத்தில் காட்டாற்று வெள்ளமென பாய்ந்து வந்தால் தனியொருவனாகத் தரணியை ஆளலாம். நான்கு பேருக்கு நன்மை செய்து வாழலாம்.
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது அது எந்த நேரத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமர்வதில்லை. ஏனென்றால் அப்பறவை நம்புவது மரத்தின் கிளையை அல்ல அதன் சிறகை. தோல்வியின் அடையாளம் தயக்கம் .வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை , தயங்கியவர் வென்றதில்லை என்பது காலங்காலமாக நாம் கண்டுணரும் செய்தி.விழுவதெல்லாம் எழுவதற்காகத்தான தவிர அழுவதற்காக அல்ல என்பதை நம் மனம் உணர வேண்டும். 'எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும் போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை .எனவே , தோல்வியைத் தழுவுகின்றனர் என்றார் மக்களின் விஞ்ஞானி எடிசன். அதைத்தான் அன்றே சொன்னார் ஈரடிகளால் உலக உள்ளங்களை அளந்த வள்ளுவப் பெருந்தகை .
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் ' என்று.
தன்னம்பிக்கையாளர்களின் வெற்றி வரிகள்.
ஒரே ஓர் எண்ணத்தைக் கையில் எடுங்கள்.அந்த எண்ணத்தையே உங்கள் வாழ்க்கை ஆக்குங்கள்.அந்த எண்ணத்தையே சிந்தியுங்கள்.கனவு காணுங்கள்.உடலின் ஒவ்வொரு செல்லும் , நரம்பும் அந்த எண்ணத்திலேயே ஊறட்டும் . இதுவே வெற்றியின் ரகசியம் என்றார் சுவாமி விவேகானந்தர் அவர்கள்.
வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு எப்பொழுதுத் தயாராக இருக்க வேண்டும். பிரச்சனை நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்சனைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும்.பிரச்சனைகளை தோல்வியுறச் செய்து , வெற்றி காண வேண்டும் என்றார் மக்கள் மனங்களில் நிறைந்த ஐயா அப்துல் கலாம் அவர்கள்.
துவண்டு போவதே ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான நிச்சய வழி , தோல்வி அடைந்த பின்னும் இன்னும் ஒரு முறை முயற்சி செய்வது என்றார் மக்களுக்கான பல அரிய கண்டுபிடிப்புகளைத் தந்த தாமஸ் ஆல்வா எடிசன்.
நான் ஆரம்பத்தில் பத்துக் காரியங்களைச் செய்தால் , ஒன்பது தோல்வியாகவே முடியும். தோல்வி என்னைக் கேலி செய்தது. ஒன்பது முறை வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமென யோசித்தேன்.தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பதில் வெற்றி கிடைக்குமல்லவா ? அன்று முதல் , முயற்சியின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியம் என்கிறார் அறிஞர் பெர்னாட்ஷா.
சிகரம் தொட்டவர்களும் , மக்களின் சிந்தனையில் இடம் பெற்றவர்களும் ஒரே நாளில் புகழின் உச்சிக்குச் சென்றவர்கள் அல்ல. வலிகளைச் சுமந்து , தன்னம்பிக்கையால் தனக்கென தனி வழிகளை உருவாக்கியவர்கள் என்பதை நாம் அறியலாம்.
தன்னம்பிக்கை மாணவர்கள் :
வறுமையின் பிடியில் வசமாய்ச் சிக்குண்டபோதிலும் , பல பள்ளி மாணவர்களும் , கல்லூரி மாணவர்களும் தங்களின் தன்னம்பிக்கையால் படிப்பிலும் , வாழ்க்கையிலும் பல சாதனை படைத்து வருகிறார்கள். காலையில் கல்லூரிக்கும் , மாலையில் ஏதேனும் ஒரு கடையிலோ , நிறுவனங்களிலோ வேலை செய்து தங்கள் படிப்புச் செலவுகளை தானே நிர்வகித்துக் கொள்கிறார்கள். சில மாணவர்களோ பெற்றோர்களின் மென்மையான கண்டிப்புகளைக்கூட தாங்கும் சக்தியின்றி வன்முறையைக் கையாளத் தொடங்கிவிடுகின்றனர். பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுவதே எனது மதிப்பை உயர்த்தும் என்ற எண்ணம் அனைத்து மாணவர் மனங்களிலும் மண்டிக்கிடக்கிறது. இந்நிலை மாறும்போது தன்னம்பிக்கை இழந்து , தவறான பாதைகளுக்குச் செல்லத் தொடங்குகிறார்கள். மதிப்பெண்களைத் தாண்டியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்த்த வேண்டும். படிப்பில் தோல்வியுற்ற பல மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்த்த வேண்டும். புத்தகப் பையோடு , தன்னம்பிக்கையையும் தோளில் சுமக்கக் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் வெற்றி எனும் பூந்தோட்டத்திற்குள் சென்று மகிழ்ச்சியெனும் தேன் குடிக்க முடியும். மாணவர் வாழ்வு வளமாய் , நலமாய் விடியும்.
தன்னம்பிக்கையே வாழ்க்கை :
படிப்பதற்கும் , சாதனை படைப்பதற்கும் வயது தேவையில்லை என்பதை நிருபித்திருக்கிறார் அறுபத்தேழு வயது நிரம்பிய செல்லத்தாய் என்ற நம் தமிழகத்து தன்னம்பிக்கைப் பெண்மணி. ' இளமையில் கல் ' என்பது முதுமொழி என்றாலும் , கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் கூட படிப்பிலே அலட்சியம் காட்டுகின்ற இக்காலத்தில் , பாட்டியாக இருக்கக்கூடிய ஒருவர் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்திலே எம்.ஏ பட்டம் பெற்று கவர்னரிடம் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த வயதில் ஏன் படிக்க வேண்டும் ? என நினைக்காமல் , எம்.ஏ பட்டம் பெற்று , பெண்கள் மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார் செல்லத்தாய் என்ற தன்னம்பிக்கைப் பெண்மணி.
உள்ளத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு , உடலில் உறுப்புகள் இல்லை என்ற கவலை இல்லை. இரண்டு கைகளும் , இரண்டு கால்களும் இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியுமா ? வாழ்ந்தாலும் சாதிக்க முடியுமா ? அப்படியே சாதித்தாலும் உலகளவில் உன்னத மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா ? கோடிக்கணக்கனக்கான மக்களுக்கு உற்சாகத்தையும் , தன்னம்பிக்கையையும் ஊட்ட முடியுமா ? தனது திறமையை வெளிக்காட்ட முடியுமா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் ' ஆம் ' எனும் பதில்தான் ' நிக்வாய்சஸின் ' வாழ்க்கை. பிறக்கும் போதே இரண்டு கால்களும் , கைகளும் இல்லை.பல்வேறு பிரச்சனைகளை , சவால்களை எதிர்கொண்டு தான் உயரவேண்டும் என தன்னம்பிக்கையைக் கையிலெடுத்தார். இன்று உலகில் எல்லா நாடுகளிலும் பயணித்து தன்னம்பிக்கை தளர்ந்த மனிதர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த உன்னத மனிதர்.இன்றைய காலகட்டத்தில் இவர் நமக்கெல்லாம் முன்னோடி எனச்சொல்வது சாலப் பொருத்தமானதாகும்.
காலை எழுந்ததும் :
காலை எழுந்து , கண்ணாடி முன் நின்று நமக்குள் ஒரு சுயபிரகடனம் செய்து கொள்ள வேண்டும் தினமும். நான் மிகச் சிறந்த வெற்றியாளன் , நான் தன்னம்பிக்கை நிறைந்தவன். என்னால் எதையும் சாதிக்க முடியும் . மலர்ந்துவிட்ட இந்த நாளில் முகமலர்ச்சியோடு , என்னால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்வேன். இன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியிடுவேன் . எனக்குள் எந்த குறைகளும் இல்லை. மன நிறைவோடு இந்த நாளை எதிர்கொள்ளப் போகிறேன் என நேர்மறை எண்ணங்களோடு காலைப் பொழுதைக் கரம் கோர்த்தால் மனம் உரமாகும்.
திசைகாட்டிகள் இன்றி காலையில் தன் பறத்தலைத் தொடங்குகின்ற பறவை , இரை முடித்து மீண்டும் கூடு திரும்புவதற்கு அது நம்புவது தன் சிறகுகளில் இருக்கும் தன்னம்பிக்கையை மட்டும்தான்.
தன்னை விட எடை கூடுதலாக உள்ள பொருளை எறும்பு அசாத்தியமாகத் தூக்கிச் செல்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த நாம் ?
' சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன் , நீ மனிதன் ' என்றார் கவிப்பேரரசு வைரமுத்து. தன்னம்பிக்கை திறவுகோல் நம்மிடம் இருந்தால் வெற்றிக்கதவினை எளிதில் திறக்கலாம்.
முடியாது என்பது மன ஊனம் - நீ
முயலாமைதான் அவமானம் !
விடியாமைக்கு யார் மூலம் - மனம்
விழித்தால் உண்டே எதிர்காலம் !
என்ற கவிஞர் பல்லவனின் தன்னம்பிக்கை வார்த்தைகளை
நமக்குள் விதையாய் விதைப்போம் ! வெற்றியெனும் விருட்சமாய் வளரும் ! தினமும் மகிழ்ச்சிப் பூக்கள் மலரும் !
கட்டுரை
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் .
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை. - 625 201.
பேசி - 97861 41410
******************** *********************
கல்வி தந்த வள்ளல் பெருந்தகை ( காமராசர் பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை 15 - 07 - 2020 )
( நன்றி - தினமலர் - மதுரை பதிப்பில் வெளியான கட்டுரை.)
கதராடைக்குள் மறைந்திருந்த கருப்பு நிற மேனிக்குள் , கரிசல் காட்டின் பருத்திப் பூவாய்ப் பூத்திருந்தது அவரது உள்ளம். பட்டிதொட்டி எங்கும் அவரது பாதம்பட , கரை புரண்டு ஓடியது கல்வி வெள்ளம்.காட்டு மல்லி வாசமென மணத்தது அவரது பாசம் . விரிசல் விழுந்த கரிசல் நிலத்தை இணைக்கும் தண்ணீர்போல வாழ்ந்தவர்.படிக்காத மேதை என்றழைக்கப் பட்டவர் பின்னாளில் பல்கலைக்கழகமாக உயர்ந்து நின்றார். மக்கள் மனங்களை கல்விக் கூடங்களால் வென்றார். மக்கள் கொடுத்த பதவி மக்களுக்கு உதவி செய்வதற்கே என தன்னை அர்ப்பணித்தவர்.நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலத் தமிழகத்தின் தேவையையும் தன் ஞானத்தால் அறிந்து , ஞாலத்தில் தமிழகத்தை உயர்த்தியவர். அணைகள் பல அமைத்து ஓடும் நீரைத் தேக்கி , மக்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சியைத் தேக்கியவர். அவரது நீளமான கை கல்வியைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்காக நீண்டது. அறியாமை இருள் மாண்டது. யார் அவர் ? அவர்தான் தந்தை பெரியாரால் ' பச்சைத்தமிழன் ' என்றழைக்கப்பட்ட கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் , ஏழைகளின் பங்காளர் , கர்மவீரர் காமராசர் அவர்கள்.
விருதுப்பட்டி பெற்ற விருது.
விருதுப்பட்டி என்னும் கரிசல் மண்ணில் உதித்த கருப்பு வைரம். அன்றைய விருதுப்பட்டியான இன்றைய விருது நகர் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மாநில முதன்மை பெற்றுச் சரித்திர சாதனை படைத்து வந்தது. வருகிறது. காரணம் , கல்வி பிறந்த ஊரல்லவா அது ? சாதனைகள் தொடரத்தானே வேண்டும் ?
' நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஒரு குடிலில்
ஐயா நீ வந்துதித்தாய் '
- என்று கர்மவீரரின் எளிமையான இல்லத்தை வார்த்தையில் வடித்தார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
ஒவ்வொரு நாளும் , மாதமும் , ஆண்டும் ஏதேனும் ஒரு விதத்தில் எதிர்காலத்தில் மறக்க முடியாத நிலையைப் பெற்றுவிடுகிறது. அந்த வகையில் 1903 ஆம் அண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதியை வரலாறு தன் பக்கங்களில் கல்வி பிறந்த நாளாக , கல்வி வளர்ச்சி நாளாக எழுதி வைத்துக் கொண்டது. ஆம் ! அன்றுதான் கர்மவீரர் , குமாரசாமி - சிவகாமி தம்பதியினர்க்கு குழந்தையாக வந்துதித்தார். பள்ளி வயதில் தந்தையை இழந்து , பின்னாளில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கல்வி தந்த தந்தையாக மாறினார். மணமேடை ஏறிடாத அவரை , மக்கள் மனமேடை நிரந்தர சிம்மாசனமிட்டு அமர்த்திக் கொண்டது.
அழியாச் செல்வம்
' வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது ' - ஆம் ! கொடுக்கக் கொடுக்க குறைவுறாத நிறைவான செல்வம் இந்த உலகில் உண்டென்றால் அது கல்விச் செல்வம் மட்டுமே ! மற்ற செல்வங்கள் எல்லாம் சில நாட்களில் நம்மை விட்டுப் போகும். அப்போது மனம் துன்பத்தில் வேகும் . ஆனால் கல்வி மட்டுமே நிரந்தரமாய் நம்மோடு வரும். வாழ்வில் இன்ப ஒளியைத் தரும் . ' கண்ணுடையர் என்பவர் கற்றோர் ' என்ற வான் புகழ் வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை வளமாக்கினார் . கல்வி ஒளியே கண்ணின் ஒளி என்பதை கர்மவீரர் தெரிந்திருந்தார். மக்களது வாழ்க்கை நிலையை நன்கு புரிந்திருந்தார். மிரட்சியோடு இருந்த தமிழகத்தில் , எத்தனையோ புரட்சிகளை கர்மவீரர் செய்திருந்தாலும் , அவர் செய்த கல்விப் புரட்சி என்பது உலகம் உள்ளளவும் உள்ளத்தில் உறைந்திருக்கக் கூடிய வரலாற்றுச் சாதனையாகும். குடிசையும் , கோபுரமாக முடியும் என்றால் அது கல்வி ஒன்றினால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை கர்மவீரருக்கு இருந்தது. கையிலும் , பையிலும் காசு இருப்பதைவிட கல்வி ஒருவனிடம் இருந்தால் அவன் சந்ததியே நிம்மதியாக இருக்கும் என நினைத்தவர் பெருந்தலைவர்.பிறக்கும் இடம் கருவறையென்றாலும் , சிறக்கும் இடம் வகுப்பறைதான் என்பதை உலகுக்கே உணர்த்தியவர் கர்மவீரர்.பள்ளிகளைத் திறந்துவைத்து , கல்வியின்பால் மக்கள் மனங்களையும் திறந்து வைத்தார்.
கல்வி வளர்ச்சி
' கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை '
- என்ற வான் புகழ் கொண்ட வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தவர் கர்மவீரர் அவர்கள். அறியாமை என்ற இருளை அகற்றிய ஞானதீபம். கல்வி ஒன்றே மக்களின் உயர்விற்கான ஒரே வழி என்பதை உணர்ந்திருந்தார் பெருந்தலைவர். அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதை சபதம் போலவே ஏற்றார். இருநூறு ஆண்டு காலத்தில் பெற்ற கல்வி வளர்ச்சிக்கு மேலான வளர்ச்சியை எட்டாண்டு காலத்தில் வழங்கியவர் கர்மவீரர் என்று கல்வித்துறை அறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு குறிப்பிடுகிறார். ' கல்விக்கண் கொடுத்த வள்ளல் ' என்று புகழ்ந்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் . கர்மவீரரின் ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கில் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. முந்நூறு பேர் கொண்ட ஓர் ஊருக்கு ஒரு பள்ளி எனத் திட்டமிட்டார். இலவசக் கல்வித் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் செயல் படுத்தப் பட்டன. சுமார் நான்கு இலட்சம் என்றிருந்த கற்றோர் எண்ணிக்கை , பதின்மூன்று இலட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது.
மதிய உணவு தந்த மாமனிதர்.
' வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றுப் பலகல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் ' - என்றான் மாகவிஞன் பாரதி. பாரதியின் வார்த்தைகளை நன்கு உணர்ந்தவர் கர்மவீரர் அவர்கள். ஒட்டிய வயிறோடு ஒருசாண் உணவிற்காக காடுகரை நோக்கி ஓடும் குழந்தைச் செல்வங்களைப் பள்ளிக்கு வரவைக்க என்ன செய்யலாம் என நினைத்தார்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மனதில் உதித்த மகத்தான திட்டம்தான் ' மதிய உணவுத் திட்டமாகும் ' . வறுமை காரணமாக பள்ளிக்கு வராமல் , சிறுவயதிலேயே பிழைப்புக்காக வேலைக்குச் செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவைப்பதற்காகவும் , கல்வி வளர்ச்சிக்காகவும் இத்திட்டத்தை பெருந்தலைவர் தொடங்கினார். பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் எல்லாக் குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை.ஏழைப் பையன்களுக்கும் , பெண் குழந்தைகளுக்கும் வயிற்றுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது. ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு , மாடு மேய்க்கப் போய்த் தங்களது எதிர்காலத்தை கல்வி கற்காமலே இழந்து விடுகிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம். அதற்கு ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
குழந்தைகளின் குருநாதர்.
தன்னைத் தேடி வந்து உதவி கேட்பவர்கள் , உதவி பெறுவதற்குச் சரியானவர்கள் என்றால் மறுக்காது , மறக்காது உதவி செய்வார் பெருந்தலைவர் அவர்கள். ஒருநாள் பெருந்தலைவர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க ஒரு சிறுவனும் , சிறுமியும் அழுக்காடைகளுடனும் , பரட்டைத் தலைகளுடனும் வந்தார்கள். அவர்களது தோற்றம் ஏழ்மையைப் பறைசாற்றியது. பணியாளர் அவர்களை உள்ளே விடாமல் விரட்டுகிறார். வாசல் வரை ஓடிய குழந்தைகள் இருவரும் தயங்கித் தயங்கி நிற்கிறார்கள். தம்மைப் பார்க்க வந்தவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பிய பெருந்தலைவரின் கண்களில் அந்தக் குழந்தைகள் பட்டுவிட்டார்கள். யாரைப் பார்க்க வந்தீங்க ? என்றார். சிறுமி தயக்கத்துடன் , உங்களைப் பார்க்கத்தான் வந்தோம். எங்களுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான். அண்ணனுக்கு டைப்ரைட்டிங் பரிட்சைக்கு பீஸ்கட்ட பணம் இல்லை. உங்களைப்பார்த்தா உதவி செய்விங்கனு எல்லோரும் சொன்னாங்க.அதான் வந்தோம் என்றாள் .
அவர்களை அன்போடு தட்டிக்கொடுத்தபடி , அம்மாதான் அனுப்பிச்சாங்களா ? என்றார். இல்லை , நாங்களாகத்தான் வந்தோம் . அம்மா அப்பளம் போட்டு வீடுவீடா விக்கிறாங்க. அந்த வருமானத்தில எங்கள படிக்க வைக்கிறாங்க என்று சொன்னதும் , வீட்டிற்குள் சென்று கையில் கவரோடு வந்தார்.சிறுமியிடம் கொடுத்து , இதில் கொஞ்சம் பணம் இருக்கு. அண்ணனுக்கு பீஸ் கட்டுங்க. அம்மா பேச்சைக்கேட்டு நல்ல பிள்ளைகளா நடக்கணும் என்றார். மறுநாள் மீண்டும் வந்த குழந்தைகள் , பரிட்சைக்கு பணம் கட்டிவிட்டோம் ஐயா. அந்த ரசீதை அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச்சொன்னாங்க என்று ரசீதை பெருந்தலைவரிடம் சிறுமி நீட்டினாள். பெருந்தலைவர் கண்கலங்கி விட்டார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையா என குழந்தைகளை அன்போடு தட்டிக்கொடுத்து வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
வாழும் வள்ளல்.
கர்மவீரர் காமராசர் என்றாலே எளிமையும் , இனிமையும்தான். வாழ்ந்த காலத்தில் தனக்கென தனிப்பாதை வகுத்தவர். பிரதமர்களை இந்தியாவிற்கு உருவாக்கியவர் என்பதை விட , பல்லாயிரம் பிள்ளைகளை பள்ளிக்கூடங்கள் அமைத்து உருவாக்கியவர் என்பது பெருமிதத்திற்குரியது.
' அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் '
என்ற மகாகவியின் வரிகளுக்கு உரமூட்டியவர் பெருந்தலைவர். பள்ளிக்கூடம் சென்று அதிகம் படிக்காத அந்த மேதையின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த நாளை தமிழக அரசு ' கல்வி வளர்ச்சி நாளாகக் ' கொண்டாடி வருகிறது. நாமும் கொண்டாடுவோம் கர்மவீரரையும் , கல்வியையும் ! கல்விக்கூடங்கள் இருக்கும்வரை
கர்மவீரர் காமராசர் வாழும் வள்ளல் , நம்மை ஆளும் வள்ளல்.
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் ,
இளமனூர் , மதுரை .
பேசி - 97861 41410.
*********************** ******************
மனித வாழ்வில் மரங்களின் முக்கியத்துவம்
முன்னுரை
மரம் - இந்த மூன்றெழுத்து மந்திரம்தான் இன்று உலகையே இயங்கச் செய்கிறது. மரங்கள் மண்ணின் மைந்தர்கள். நம்மை நம் தாய் அரவணைப்பது போல , பூமியைத்தாயை அதன் பிள்ளையான மரம் அரவணைத்துச் செல்கிறது. மரங்கள் துளிர்க்கும் போதெல்லாம் , மனித மனங்களும் துளிர்க்கின்றன.அம்மா தன் கையால் தாலாட்டுவதைப் போல , மரம் தன் கிளைக்கரத்தால் தொட்டில் கட்டி குழந்தையைத் தாலாட்டுகிறது. மனித வாழ்வோடு மரங்கள் கைகோர்த்துச் செல்லும்போது இயற்கையும் , நாமும் இன்பமாக இருக்க முடியும். மரங்களால் நமது வாழ்க்கை விடியும். வாருங்கள் மனித வாழ்வில் மரங்களின் முக்கியத்துவத்தைக் காண்போம் !
மரமும் மன்னரும்
மரத்தின் மகத்துவத்தை அன்றே நமது மன்னர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.மண்ணை ஆண்டவர்களை , மரம் ஆண்டது என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா ? எத்தனையோ மன்னர்கள் நம் மண்ணை ஆண்டிருந்தாலும் , இயற்கையின் ஆற்றலை அறிந்த ஒரு மன்னர் இருந்தார் . யாரவர் ? அவர்தான் அசோகச் சக்கரவர்த்தி. நமது சாலைப் பயணம் சிறக்க , சாலையின் இருபுறமும் மரங்களை நட்டுவைத்து , பசுமைப்பயணமாகவும் , குளுமைப்பயணமாகவும் ஆக்கியவர் அவரே ! மரங்கள் அடர்ந்தால் மழை பொழியும் , வறுமை ஒழியும் என்பதை அன்றே அறிந்திருந்தார். அதனால்தான் மழைநீரைச் சேகரிக்க குளங்களை வெட்டச்செய்தார். பாருங்கள் நண்பர்களே ! என்ன ஆச்சர்யம் ?! இன்றைய நமது அரசின் அற்புதமான மழை நீர் சேகரிப்பிற்கு முன்னோடியாக இருந்தவர் அசோகர் என்றால் எவ்வளவு வியப்பு ? அது மட்டுமன்று , மரங்களைத் தெய்வமாக வணங்கி , ஆடை அணிவித்து , அழகு செய்து கொண்டாடியவர்கள் நம்மக்கள்.
மரங்களின் மகத்துவம்
' மரம் மண்ணின் வரம் '
மரங்கள் இருக்குமிடம்
மகிழ்ச்சி நிலைக்குமிடம் '
' மரம் போல் வாழ்வு '
' மரங்கள் நிறைந்தால்
மனங்கள் நிறையும் '
இவையெல்லாம் மரங்களின் மகத்துவத்தை நமக்கு உணர்த்தும் மரவரிகள். மரம் என்ற ஒற்றைச்சொல் மனித குலத்தின் மகிழ்ச்சிக்கான குறியீடு. சங்க காலத்தில் புன்னை மரத்தை தன் தங்கையாக நேசித்தாள் தலைவி ஒருத்தி. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு மரத்தில் வாசம் செய்கின்றனர். மரங்களின் மகத்துவம் அறிந்தே நம்மவர்கள் ஒவ்வொரு கோயிலிற்கும் தலவிருட்சங்களை உருவாக்கினார்கள். ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஆடையாகவும் , வீடாகவும் பயன்பட்ட மரத்தை இன்று நாம் அடியோடு வெட்டிச்சாய்க்கலாமா ? நாம் நடுகின்ற ஒவ்வொரு மரமும் நமது சந்ததியினரை வாழவைக்கும் என்ற நினைவில் மரங்களின் மகத்துவம் உணர்வோம் !
மரங்களின் பயன்கள்
உயிர்வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதாரமாக இருப்பவை மரங்களே ! மனிதன் சுவாசிப்பதற்கு ஆக்சிஜன் தந்து நமது ஆயுள் காக்கும் சேவையாளர்கள் இந்த மரங்கள். ஒரு மரம் தன் ஆயுட்காலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காற்றை நமக்குத் தருகிறது.யாரெல்லாம் அதிக மரங்களை வைத்திருக்கிறார்களோ அஙர்களே உண்மையான செல்வந்தர்கள். பறவைகளுக்கு வீடாக இருப்பது மட்டுமல்லாது பல மனிதர்களுக்கும் மரங்களே வீடாக இருக்கின்றன. மழைப்பொழிவை தருகின்ற மரங்கள்தான் இயற்கை எழிலையும் தருகின்றன. அனைத்துமாக அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் மரங்கள்தான் ஒரு நாட்டின் உயர்வை நிர்மாணிக்கின்றன. வேர் , தண்டு , இலை , பூ , காய் , கனி , விறகு என தன் உடலனைத்தையும் தியாகம் செய்கின்றன மரங்கள். பிரதிபலன் பாராது வாழும் மரங்களைக்கண்டு நாம் நம் மனதை செம்மைப் படுத்த வேண்டும். மரங்களோடு நம் கரம் கோர்க்க வேண்டும். வாருங்கள் நண்பர்களே ! ஆதரவு தாருங்கள் ! மரம் வளர்த்து மழையைப் பெறுவோம் ! நாளைய உலகுக்கு நல்ல காற்றைத் தருவோம் !
நிறைவுரை
ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை அனைத்தும் காக்கும் ஓரறிவுதான் இந்த மரம்.மரங்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் மனம் நம்மிடம் இருந்தால் போதும் நண்பர்களே ! இரண்டே ஆண்டுகளில் இந்தப் பூமிப்பந்து புத்துணர்ச்சி பெற்றுவிடும். பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்திக் காணப்பட்டால் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள் நண்பர்களே ! வெட்டி எறிந்தாலும் , மீண்டும் துளிர்த்து வரும் ஒவ்வொரு மரங்களும் நமக்கு புத்துணர்ச்சியைத் தருகின்றன. வீட்டிற்கோர் மரமல்ல , ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் மண்ணில் வாழ !
நாளைய மண்ணை ஆள !
********************* *********************
பயன் தரும் பனை மரம்
தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாகக்
கொள்வர் பயன் தெரிவர்.
- என்று பனைக்கான தன் குரலை , குறள் வழி உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவப் பேராசான். பனை - தமிழகத்தின் அடையாளம். தமிழினத்தின் அடையாளம். ஆம்! பனை மரம்தான் நமது மாநில மரம். பனை என ஒரு மரம் இல்லாவிட்டால் நம் மண்ணின் பண்பாடு என்றோ அழிந்திருக்கும்.நம் முன்னோர்கள் தம் எண்ணங்களை எழுத்தாணியால் எழுத , இறவா இலக்கியங்களாக அவற்றைச் சுமந்தவை பனையோலைகள் தானே !
பனை என ஒரு மரம் இல்லாவிட்டால் , நம் பண்பாட்டுக் கூறுகளோடு இன்று நாம் பயணம் செய்ய முடியாது. இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான இலக்கியங்கள் இன்று நம் இல்லத்திலும் , உள்ளத்திலும் உறவாடுகிறது , உரையாடுகிறது என்றால் அதற்குக் காரணம் பனைமரம்தான்.
ஒற்றைக்கால் மனிதனாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை தன் உடல் முழுவதையும் பயனாகத் தருகிறது. அன்று முதல் இன்று வரை தமிழர் வாழ்வியலோடு உடன் வருகிறது. இலக்கிய வரலாற்றில் தனக்கென தனி இடம் பெறுகிறது. பனையோலைகளே நம் முன்னோர்களின் படைப்புகளை இன்று நம்மிடம் கொண்டு சேர்த்தவை. அறமும் , பொருளுமாய் வந்து , அகமும் , புறமுமாய் வந்து நம் வாழ்வில் இன்பம் வார்த்தவை. தமிழ் சித்தர்கள் ' கற்பக விருட்சம் ' என்று போற்றிய அற்புத மரங்களில் பனைமரமும் ஒன்று. பனை மரங்கள் பரவலாக பல மாவட்டங்களில் காணப்பட்டாலும் தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி , இராமநாதபுரம் , விருதுநகர் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளன.
பனையின் தோற்றம் :
தமிழ் நாட்டில் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே பனையின் பயன்பாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. சேரமன்னனது குடிப்பூ பனையின் பூவாகும். பனையின் பூக்கள் சூடிக்கொள்ளும் வாய்ப்பற்றவை. பனையின் இளங்குருத்து ஓலையைப் பிளந்து , அதன் கூரிய பகுதியைக் குடிப்பூச்சின்னமாகச் சூடிக் கொண்டனர். பண்டைக்காலம் தொட்டு , இன்றைய தாள் பயன்பாட்டிற்கு வந்தவரை பனை ஓலை தென்னிந்தியா , இலங்கை , தென்கிழக்கு நாடுகளில் முதன்மை எழுது பொருளாகப் பயன்பாட்டில் இருந்தது.
பனைமரம் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும். குறைந்த நீரை எடுத்துக் கொண்டு , மிகுந்த பயனைத் தரும். பனையில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. டி.வி.சாம்பசிவம்பிள்ளை அவர்களின் அகராதியில் ஏறக்குறைய முப்பது வகைகளைக் கூறுகின்றார். அதில் மிகவும் குறிப்பிடத் தக்கவை ' தாளிப்பனை ' எனப்படும் ' கூந்தற்பனை ' ,மற்றொன்று ' நாட்டுப்பனை ' எனப்படும் ' நுங்குப்பனை ' . இவ்விரண்டு பனைகளின் ஓலைகளும் எழுதுவதற்குப் பயன்படுத்தப் பட்டன.
பனை தரும் பணம் :
ஒரு பனை மரம் இன்றைய நிலையில் ஆண்டிற்கு 150 ரூபாய் வருமானம் தரும் எனக் கணக்கிட்டுள்ளார்கள் . இன்று , ஏறக்குறைய மூன்று கோடிப் பனைமரங்கள் உள்ளன. அதன் மூலம் ஆண்டிற்கு 500 கோடி வருவாய் கிடைக்கிறது. பதநீர் , தும்பு , ஈர்க்கு , ஓலை , நார் , கருப்பட்டி , கூடைகள் , தூரிகைகள் , கட்டில்கள் , இருக்கைகள் , சிறுசிறு தட்டுகள் , பெட்டிகள் , தொப்பிகள் போன்றவை பனைதரும் பொருட்களாகும்.
பனையோலை :
ஏழைகளின் வீட்டுக்கூரைகளாக ஓலைகள்தான் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. விசிறி என்றவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது பனையோலை விசிறிதான். சுபநிகழ்ச்சிகளில் குருத்தோலைகளை தோரணமாகக் கட்டித் தொங்கவிட்டிருப்பதை நாம் காணலாம். ' குருத்தோலை திருவிழா ' என்றே ஒரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பனையோலை மூலம் பாய் , பெட்டி , கொட்டான் , அலங்காரப் பொருட்கள் , பனை நாரினால் செய்யப்பட்ட முறம் எனப் பலவகைப் பயன்பாடு கிடைக்கிறது. முன்பு , கிராமங்கள்தோறும் ஓலைக்கொட்டான்கள் உலா வந்தன. வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் , ஓலைக்கொட்டான்களிலே திண்பண்டங்கள் வாங்கி வருவார்கள். திண்பண்டங்கள் மொறுமொறுவென சுவை குன்றாமல் இருக்கும். அந்தக் கொட்டான்கள் விதைப்புக் காலத்தில் விதைக்கொட்டானாகவும் , பின்பு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கவும் பயன்படும். கடைசியில் அது தீயெரிக்கவும் பயன்படும். சங்கப் பாடல்களில் ' பனையோலைக் குடைகள் ' பழக்கத்தில் இருந்தன என்பதைப் பாடல்கள் மூலம் அறிகிறோம். பனையோலையில் காத்தாடி செய்து பால்யத்தில் விளையாடியதை நாம் மறக்க முடியுமா ?
பதநீர் :
கோடையின் வெப்பம் தணித்து , இதம் தரும் நீராகிறது பதநீர். வருடத்தில் மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே கிடைக்கும் அற்புத பானம் பதநீர். ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 90 முதல் 130 நாட்கள் பதநீர் கிடைக்கிறது. ஆண் பனைகளைவிட பெண் பனைகள் 33 முதல் 55 விழுக்காடு கூடுதல் பதநீரைத் தருகின்றன. பதநீரில் நிறைய ஊட்டச் சத்துகள் உள்ளன. வெயிலால் ஏற்படும் சோர்வினை நீக்குகிறது. பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி , ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவினைத் தடுக்கிறது. இதிலுள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து , இரத்த சோகையை விரட்டும்.நரம்பு மணடலம் பலமாகும்.
கருப்பட்டி :
' உணவே மருந்து ' என்பதுதான் தமிழரின் உணவு முறை. பனையிலிருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு , பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையைத்தான் முன்பு நாம் பயன்படுத்தி வந்தோம். அப்போது உடல்பருமனோ , நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதில்லை. இன்றோ ' வெள்ளைச் சக்கரை ' எனும் தொல்லைக்குள் தொலைந்து போய் நோய்களின் கூடாராமாக நம் உடல் மாறி வருகிறது. பதநீரைக் காய்ச்சினால் கிடைப்பது கருப்பட்டி . பனையிலிருந்து சேகரிக்கப்பட்ட பதநீரை வணிகட்டித் தூய்மைப் படுத்த வேண்டும். மண் அடுக்குகளை அமைத்து , அவற்றின் மேல் அலுமினிய கொப்பரைகளை வைத்து , அதில் பதநீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப் படுகிறது.
கருப்பட்டியும் , பனங்கற்கண்டும் உடல் இயக்கத்தைச் சீரான சமநிலைக்குக் கொண்டு வருகிறது. இவற்றில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளன. இதிலுள்ள வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்ணுக்கு கருப்பட்டியையும் , உளுந்தையும் சேர்த்து உளுந்தக்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும் , எலும்புகளும் உறுதியாகும். சுக்குக் கருப்பட்டி பெண்களின் கருப்பைக்கு மிகவும் நல்லது. சுக்கு , மிளகு கலந்த கருப்பட்டியைக் குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் நன்கு சுரக்கும். காபியில் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்துக் குடித்தால் நமது உடலுக்குச் சுண்ணாம்புச் சத்தும் , நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகக் கிடைக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி மற்றும் வேம்பார் ஊர்களில் கருப்பட்டிகள்
அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நுங்கு :
நுங்கில் அதிகளவு வைட்டமின் பி , சி , இரும்புச்சத்து , கால்சியம் , துத்தநாகம் , சோடியம் , மக்னீசியம் , பொட்டாசியம் , அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி , உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம் . உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக்கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே நுங்கு மருந்தாக இருக்கிறது. நுங்கைச் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இரத்த சோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாவார்கள். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களைத் தடுத்து , உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
பனங்கிழங்கு :
பனங்கிழங்கு என்றவுடன் பள்ளிக்காலத்தில் படித்த பாடலொன்று நமக்கு நினைவிற்கு வரும்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் .
நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு , இளம் மஞ்சள் நிறமான , நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதாக ' சத்திமுத்தப் புலவர் ' எனும் சங்கப் புலவர் நாரையின் அலகுக்கு உவமையாக பனங்கிழங்கைக் கூறுகிறார். பனம் விதைகள் முளைக்கும் போது , நிலத்துள் செல்லும் வேரில் மாவுப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகிறது. இதுவே பனங்கிழங்கு. பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மையுடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. பூமியிலிருந்து பனங்கிழங்கைப் பிரித்தெடுக்கும் போது விதையிலிருந்து ' தவின் ' என்ற பொருள் கிடைக்கும். இது உண்பதற்குச் சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்றுவலி , ஒற்றைத் தலைவலி குணமாகும்.
பனைத் தொழிலாளர் வாழ்வு மேம்பட :
பனையிலிருந்து கிடைக்கக்கூடிய பதநீர் , நுங்கு குளுமை தருகிறது. பனங்கற்கண்டு , கருப்பட்டி இனிமை தருகிறது. ஆனால் பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை வளமையின்றி , வறுமையாக இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் நாம் ? யாரோ ஒரு நடிகரும் , கிரிக்கெட் வீரரும் பல கோடிகளை வாங்கிக்கொண்டு , குடிப்பதாக நடிக்கும் பன்னாட்டு குளிர்பானங்களை புறக்கணித்து நமது இளநீர் , பதநீர் , நுங்கு இவற்றை நாம் வாங்கினால் பனைத் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெறும். பதநீரும் , நுங்கும் விற்பவர்கள் நமது சொந்தங்கள். நமது பணம் நம்மவர்களுக்கே சென்று சேரட்டுமே ! யாரோ முகம் தெரியாத ஒரு நிறுவனத்தின் குளிர் பானத்தைக் குடித்து , உடலைக் கெடுப்பதை விட , நம் சொந்தங்கள் தரும் சத்தான பதநீரைக் குடித்து நோயின்றி நாம் வாழ்வோம் ! தமிழ் உலகை ஆள்வோம் !
******************** *********************
மகளிர் முன்னேற்றத்தில் பெண்கல்வி
வணக்கம் தோழமைகளே
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்.ஆம் ! மங்கையாராகப் பிறக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. பிறந்த மங்கையர் அனைவருக்கும் பேரின்பம் எட்டுவதில்லை.அந்தப் பேரின்பத்தை அடையச் செய்யும் அற்புதமான ஆற்றல் படைத்த கருவி எது தெரியுமா நண்பர்களே ! அதுதான் பெண்கல்வி .
தாயாய்த் , தாரமாய் , தங்கையாய் , தமக்கையாய் ,தோழியாய் நம் கூடவே பயணிக்கும் பெண்கள் கல்வியாலே சிறந்து வருகிறார்கள் இன்று.
சங்ககாலம் முதல் எங்க காலம் வரை பெண்கள் கல்வியில் பல சாதனை படைத்து வந்திருக்கிறார்கள். அன்று ஔவையும் , காக்கைபாடினியாரும் , மாசாத்தியாரும் மங்காது புகழ் பெற்றிருந்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் கற்றிருந்தார்கள்.
இருபதாம் நூற்றாண்டிலே தோன்றிய எழுச்சி மிகு புலவனான பாட்டுக்கொரு பாரதி பாடினான் ' பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிப்பேணி வளர்த்திடும் ஈசன் '
இறைவன் பெண்ணுக்கு கல்வி கற்றலின் நிறைவாய் வந்திடும் ஞானத்தையே வைத்தான் என்றான் பாரதி. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ! எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பெண்கல்வியின் பெருமையை உயர்த்திப் பிடித்தான்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் , அந்தக் குடும்பமே கல்வியறிவைப் பெற்றதற்குச் சமம். பெண்கள் கற்ற கல்வி அவர்களது பிள்ளைகளையும் மேன்மைப்படுத்தும். கல்விதான் ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதனால் பெண்களின் வாழ்வில் வசந்தம் வற்றாது வருகிறது.
கல்வி இல்லாப் பெண்கள் களர்நிலம் , அங்கு புல்விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை என்றார் பாவேந்தர் பாரதிதாசன். கல்வி கற்ற பெண்களையே வீடும் நாடும் கொண்டாடும் . இல்லையேல் வீடும் நாடும் திண்டாடும்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களே பல்துறைகளிலும் மகத்தான சாதனைகளை கல்வியின் மூலம் படைத்து , சமுதாய இருளை உடைத்து வருகின்றனர். மண்ணிலும் விண்ணிலும் வெற்றிக்கொடி நாட்டி , புகழ் ஈட்டி வருகின்றனர்.
உயர்கல்வி பல கற்று உயர்நிலைக்கு வந்துள்ளனர். ' மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ' என்று பாடினார் பாட்டுக்கோட்டை கட்டிய பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம். மனிதனை மனிதனாக நடமாடச் செய்வது கல்வி. அந்தக் கல்வியை ஒரு பெண் கற்றிருக்கும் போதுதான் பிறவிப் பயனை அடைகிறாள்.
அதனால்தான பாரதி பாடினான்.
' பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா !
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா ! என்று.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் ! என்றான். பெண்ணை ஆணுக்கு நிகராக்கச் செய்யும் வல்லமை படைத்த ஒரே கருவி கல்வி மட்டுமே ! கல்வி கற்ற பெண்கள் பல பதவிகளில் தலைமைப் பொறுப்பேற்று உதவி பல செய்து வருகின்றனர் நம் சமுதாயத்திற்கு.
வீட்டையும் நாட்டையும் பெண்கள் செம்மாந்து ஆள்வதற்கு கல்வி ஒன்றே உறுதுணை செய்கிறது அந்தக் கல்வியை கற்போம் ! வராற்றில் என்றும் வற்றாது நிற்போம் என்று கூறி நல்வாய்ப்புத் தந்த அனைவருக்கும் நன்றி என்ற மாலையைத் தந்து இவ்வேளையில் விடைபெற்று நடை போடுகிறேன் வணக்கம்.
*********************** *******************
புத்தாண்டில் புதுசா , பெருசா சபதம் எல்லாம் எடுக்க வேணாம்ங்க.
போகிற போக்கில் , வண்டியில எப்பவும் ஒரு மஞ்சப்பையோ , கட்டைப்பையோ வச்சிக்கோங்க. கூடுமானவரை பாலித்தின் பையைத் தவிர்க்கப் பாருங்க. அஞ்சு ரூவாய்க்கு மல்லி , கருவப்பில வாங்கிட்டு , அண்ணே ! ஒரு கவர் கொடுங்கனு கேக்காம இருந்தாலே போதும்ங்க.
நம்ம பிள்ளைங்க பிறந்த நாளுக்கு , சாக்லேட்டுக்குப் பதிலா கடல மிட்டாய வாங்கிக் கொடுங்க. முடிஞ்சா ஒரு மரக்கன்ற பிள்ளைகள நடவையுங்க. நம்ம பிள்ளைகளும் வளர , மரமும் வளரும் . வீட்லெ இடமில்லைனா வீதியில வைங்க.
மக்குனு எந்தப் பையனும் ஓரங்கட்டாம , அவன நாலுவரி மனப்பாடப் பாட்ட எழுதவச்சி ப்ரேயர்ல அவனப் பாராட்டி , ஒரு பேனா கொடுப்போம்.
பத்து தடவ இதுவரைக்கும் புகைய விட்ருக்கேன். இந்த புத்தாண்டுல இது பதினோராவது தடவயா சபதம் எடுக்கிறேனு சொல்லி , சபதத்தையே சஞ்சலப் படுத்தாம நம்ம உடம்பு நம்ம ஆரோக்யம்னு நெனப்போம்.
காலையில எழுந்து , நடக்கும் போது எதிர் வருபவரிடம் ஒரு புன்னகைப் பூவை உதிர்த்துச் செல்வோம். நட்பை உரமாக்கும்.
கிச்சன் கில்லாடிகளாக இல்லாவிட்டாலும் , நேரம் கிடைக்கும் போது மனைவிக்கும் , குழந்தைகளுக்கும் ஒரு சுவைநீர் போட்டுக் கொடுத்து , சுதந்திரம் கொடுப்போம்.
வாட்சாப்பே வாழ்க்கையென எண்ணாமல் பிள்ளைகளின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்போம் .
லைக்கையும் , கமெண்ட்டையும் எதிர்பாராமல் , மனதில் பட்ட நல்ல விசயங்களைப் பதிவு செய்து லைப்பை மகிழ்ச்சிப் படுத்துவோம்.
அப்புறமென்ன ? புத்தாண்டில புத்துணர்வு பொங்கட்டும்.
வாழ்த்துகளுடன் ,
மு.மகேந்திர பாபு.
31 - 12 - 17.
******************** ********************
' மரம் - மனிதனின் மூன்றாவது கரம் '
ஜீன் - 5 , உலகச் சுற்றுச்சூழல் தின சிறப்புக் கட்டுரை.
மு.மகேந்திர பாபு , பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ,
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி , இளமனூர் . மதுரை .
பேசி - 97861 41410.
காலையில் எழுந்ததும் மரத்தின் முகத்தில் விழிப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தரும். ஒற்றைக் காலால் நின்று ஒவ்வொரு மரமும் ' என்னைப் பார் உன் ஆயுள் கூடும் ' என்ற உண்மையை உரக்கச் சொல்கின்றன. மரங்களைப் பார்க்கும் போதும் , மரங்களோடு பேசும் போதும் நாம் இளமையாகி விடுகிறோம் . ' மரம் ' என்ற ஒற்றைச் சொல் பசுமையை , வளமையை , மனிதர்தம் வாழ்க்கையைக் குறிக்கிறது.
' மனம் போல் வாழ்வு ' என்ற வாசகம் இன்று ' மரம் போல் வாழ்வு ' என்றாகி வருகிறது . ஆம் ! மரங்கள் பசுமையாக இருக்குப் போதெல்லாம் மனித வாழ்க்கை வளமையாக இருக்கிறது. தன் வீட்டைச் சுற்றி மரம் வைத்திருப்பவர் இந்த உலகின் மிகப்பெரும் செல்வந்தராக மாறிவிடுகிறார்.மரத்தைத் தேடி வரும் பறவைகள் , தங்கள் மகிழ்ச்சியை ஒலி எழுப்பிச் சொல்கின்றன . வாகனங்களின் பேரொலியைக் கேட்டு காயம் பட்டுப்போன மனித மனத்தை மயிலிறகால் வருடுவது போல் வருடி , மனம் திருடுகின்றன பறவைகள். பறவைகளுக்கு மட்டுமல்ல , பல மனிதர்களுக்கும் மரங்கள்தான் வீடுகள்.
பயணத்தை இனிமையாக்கும் மரங்கள்
' ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம் ' என பால்யத்தில் பாடலோடு ஒரு விளையாட்டு விளையாடி இருக்கிறோம் . இருவர் எதிரெதிரே நின்று , இரண்டு கைகளையும் கோர்த்து தலைக்கு மேலே கோபுரம் போல் உயர்த்தி நிற்க , சிறுவர்கள் அவர்களிருவருக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒவ்வொருவராக நடந்து செல்வார்கள். சாலையின் இருபுறமும் நிற்கும் மரங்கள் தன் கிளைக்கரத்தால் கைகுலுக்கி , வெப்பத்திலிருந்து நம்மைக் காப்பது சிறுபருவ விளையாட்டை நினைவு படுத்துவதாக இருக்கின்றது. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கின்றன பூத்துக் குலுங்கும் மரங்கள் . மணமக்களை பெரியோர்கள் பூக்கள் தூவி ' வாழ்க பல்லாண்டு ' என வாழ்த்துவதைப் போல மரங்களடர்ந்த சாலையில் நாம் பயணம் செய்யும் போது நமது பயணம் சிறக்க பூக்களைத் தூவி வாழ்த்துகின்றன மரங்கள். காலையிலும் மாலையிலும் நடையாளர்களின் நண்பனாகவும் , மதிய வேளையில் அன்னையாகவும் மாறிவிடுகிறது மரம் .
உழைத்துக் களைத்து வருபவரின் உள்ளச் சோர்வையும் , உடல் சோர்வையும் ஒரு நிமிடத்தில் நீக்கி , கட்டணமில்லா மருத்துவராக இருக்கின்றன மரங்கள். அன்னையின் அருமையை இல்லாத போதும் , மரங்களின் அருமையை கோடையிலும் நாம் உணரலாம். வியர்த்து விறுவிறுத்து வருகின்ற போது , எங்கேனும் ஒரு மரம் இருக்காதா எனத் தேடியலையும் நமது கண்கள் . அப்போதுதான் மரத்தின் மாண்பினை நம் மனம் உணரும். அப்படி எங்கேனும் ஒரு மரம் தென்பட்டால் அந்த மரத்தின் நிழலில் ஒரு பெருங்கூட்டம் கூடி மகிழ்ந்து கொண்டிருக்கும்.
மரங்களும் மாணவர்களும்
மாணவர்கள் வருங்கால உலகின் தூண்களாக மட்டுமின்றி , இயற்கையைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மரங்களைத் தொட்டே மனித வாழ்க்கை நகர்கின்றது. பிள்ளைப் பருவத்திலேயே மரங்களுக்கும் , மனங்களுக்கும் ஒரு தொடர்பினை ஏற்படுத்தி இருக்கின்றோம். ஆம் ! அம்மா ஒரு கதை சொல்லுங்க என்றும் , தாத்தா பாட்டியிடம் சென்று ஒரு கதை சொல்லுங்க என்றும் குழந்தைகள் கேட்கும் போது மரங்களோடு பயணிக்கத் தொடங்கி விடுகின்றோம். ஒரு பெரிய்ய காடு இருந்துச்சாம் ... அந்தக் காட்டுல ஒரு பெரிய்ய மரம் ... அந்த மரத்தோட கிளையில ஓர் அழகான பறவை என்றும் , ஒரு அத்துவானக் காடு இருந்துச்சாம் ... அந்தக் காட்ல ஒரு சிங்கம் இருந்துச்சாம் என்றும் பால்யத்தில் காடு - மரம் - மனிதன் என்ற அடிப்படையிலேயே கதைக்களங்கள் மாணவர்களுக்கு நன்னெறிக் களமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வகுப்பறையில் மாணவர்களிடம் ஒரு ஓவியம் வரையச் சொன்னால் , அவர்கள் உடனே வரைவது ஒரு மரமாகத்தான் இருக்கும். ஒரு இயற்கைக் காட்சி வரைந்து வா என்று சொன்னால், ஒரு வீட்டை வரைந்து அதன் இருபுறமும் மரங்களை வரைந்து , வீட்டின் முன்புறம் ஓர் ஆறும் , பின்புறம் மலையும் , வானிலே நான்கைந்து பறவைகள் பறப்பது போலவும்தான் மாணவர்கள் வரைவார்கள். ' வீட்டிற்கொரு மரம் ' என்பது இப்படியாகத்தான் விதைக்கப்பட்டிக்கிறது மாணவர்களின் மன வயலில்.
இன்று , பள்ளிகளில் தேசிய பசுமைப்படை , சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலமாக மாணவர்கள் பசுமைப்பணி செய்து வருகிறார்கள். அரசு விழாக்களின் நினைவைப் போற்றும் வகையில் சுற்றுச்சூழல் தினங்களிலும் , மாணவர்களின் பிறந்த நாட்களிலும் மரங்களை நட்டுவைத்துப் பராமரித்து வருகிறார்கள் . இந்த மண்ணில் நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்ல வேண்டுமென்றால் , அது ஆளுக்கொரு மரம் நட்டுச்செல்வதுதான் என்பதை மாணவர்கள் ஆசிரியர்கள் மூலமாக உணர்ந்து வருகிறார்கள். இந்த எண்ணம் பார்க்கும் இடமெல்லாம் பச்சை வண்ணம் நிறைந்திடச் செய்யும். மரங்களினால் மனங்கள் உய்யும்.
மரமும் மனிதனும்
மரத்திற்கும் மனிதனுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நம் வீட்டில் ஒரு குழந்தை தாயின் கருவறையிலிருந்து பிறப்பதைப் போல மண்ணிலிருந்து வெளிவருகிறது ஒரு மரம் சின்னஞ்சிறு செடியாக. மண்ணை முட்டிவரும் ஒரு விதை தனக்கான முதல் தன்னம்பிக்கையை மனித குலத்திற்கு விதைக்கிறது. குழந்தைகளிடம் பிள்ளைப் பருவத்திலேயே தன்னம்பிக்கையை விதைத்திடுங்கள் என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. சற்றே வளரத் தொடங்கும் போது நம் வீட்டுப் பிள்ளைகள் பள்ளி செல்வதை உணர்த்துகிறது. செடி வளர்ந்து கிளை பரப்பி தன்னைச் சுற்றி நிழலால் நிரப்பி பூக்கத் தொடங்குகிறது . குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்து மணமாவதற்குத் தயாராவதை இது காட்டுகிறது. மணமாகி குழந்தை பெறுவதை , மரமானது பூத்துக் காய்த்து , கனியாகித்.தன் சந்ததியைப் படைக்க உள்ளோம் என்பதைக் காட்டுகிறது .
தன் செல்வத்தை வறியவர்களுக்கு அள்ளித் தரும் வள்ளல் பெருந்தகையைப் போல , மரம் தன்னிடம் உள்ள பூக்களை , காய்களை , கனிகளை த் தன்னை நாடிவருகின்றவர்களுக்குத் தந்து பசி தீர்க்கிறது. உணவுச் சாலைகளைத் திறக்காமலே சாலையோரம் நிற்கும் ஒரு மரம் வழிப்போக்கர்களுக்கு உணவையும் , உண்டபின் ஏற்படும் களைப்பை நீக்க , தென்றலைத் தந்து கிளைக்கரங்களால் தாலாட்டுகிறது . தந்தையால் கிடைக்கும் சொத்தையும் , சுகத்தையும் அனுபவிக்கும் ஒரு மகன் அவரது முதுமைக் காலத்தில் தாங்கிப் பிடிக்க வேண்டும். இதைத்தான் ஆலமரம் மனித இனத்திற்கு உணர்த்துகிறது. இப்படியாக மரமும் மனிதனும் ஒன்று. இதைப்புரிந்து கொண்டால் நன்று .
மனிதம் வளர்க்கும் மரம்
' மரம் மனிதனின் முதல் நண்பன் .மனிதன் மரத்தின் முதல் எதிரி.மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்.
உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து அடையக்குடில்
அடைக்கக் கதவு
அழகு வேலி
ஆடத்தூளி
தடவத் தைலம்
தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம்
எரிக்க விறகு
மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
மனிதா மனிதனாக வேண்டுமா ?
மரத்திடம் வா !
ஒவ்வொரு மரமும் போதி மரம் ' என மரங்களைப் பாடுவார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். ஆம் நண்பர்களே ! நம்மை மனிதனாக , மாண்புடையவனாக வழி நடத்திச் செல்வது மரங்கள்தான். மரங்களிடம் எந்தப் பேதமும் இல்லை. மரங்களால் மனித குலத்திற்கு என்றும் சேதமும் இல்லை.
நம் வீட்டின் முன் பகுதியிலோ , பின் பகுதியிலோ ஒரேயொரு மரத்தை மட்டும் நட்டு வைத்து வளருங்கள் நண்பர்களே ! அந்த மரம் இளமைப் பருவத்தை அடைந்ததும் நம்மில் பல மாற்றங்கள் நிகழும். அது கண்டு உள்ளம் மகிழும். மரத்தைத் தேடிவரும் சிட்டுக் குருவிகள் சிறகடித்துப் பறப்பதையும் , அணில்கள் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவதையும் , மைனாவின் மனம் மயக்கும் மொழியையும் , இலை மறைவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன் இசையால் நம்மைப் பரவசப்படுத்தும் குயிலின் குரலையும் கேட்டு நம்மால் பேரின்பம் எய்த முடியும். பறவைகளின் வாடகை இல்லா வீடு மரம். காற்றைச் சுத்தப் படுத்தி நம் கவலைகளை அப்புறப்படுத்துகிறது. கூண்டுக்குள்ளே பறவைகளை அடைத்து வைத்து அதன் குரல் கேட்டு குதூகலம் அடைவதில் அர்த்தமில்லை. பறவைகளைப் பார்த்து மகிழ கூண்டு தேவையில்லை. மரம் வளர்த்தால் போதும். நம்மைத் தேடிவரும்.
மரமெனும் தெய்வம்
இயற்கை வழிபாட்டில் மரங்கள் தெய்வமாக வழிபடப்பட்டது. மரங்கள் காக்கும் தொழிலைச் செய்து வருகின்றன. இன்றும் மரங்களுக்கு ஆடை கட்டி அழகு பார்க்கும் சமூகமாக நம் தமிழ்ச் சமூகம் உள்ளது. தொப்புள் கொடி உறவுக்குப் பின் தொட்டில் கட்டி ஆடவும் , தோழர்களோடு ஒன்று கூடவும் , உறவைப் பலப்படுத்தவும் , நலப்படுத்தவும் செய்கின்றன மரங்கள். மரத்தின் கிளையில் ஊஞ்சல் கட்டி ஆடும்போது ஏற்படும் மகிழ்ச்சியானது , அம்மா தன் கையில் வைத்துத் தாலாட்டுப் பாடும் போது ஏற்படும் உணர்வைத் தரும்.
மனிதர்களின் வெளிமூச்சுத்தான் மரங்களின் உள்மூச்சாகவும் , மரங்களின் வெளிமூச்சு மனிதனின் உள் மூச்சாகவும் இருந்து வருகிறது. ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்சைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன. நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்கிறது. கோடை காலத்தில் பரவக்கூடிய சின்னம்மை போன்ற நோய்களுக்கு வேம்பே சரியான மருந்து.
மரமும் மனிதனும் உடலளவில் ஒன்றுதான். ஒரு மரத்தின் பட்டை மனிதனின் தோல் , நடுப்பகுதி மனிதனின் எலும்பு ,தண்டு மனிதனின் சதைப் பகுதி , வேர் மனிதனின் நரம்புகள் , பூக்கள் நாளமில்லாச் சுரப்பிகள் , பழங்கள் உடலின் வளம் , வித்து மனிதனின் உயிரணுக்களைக் குறிக்கிறது.
ஒரு காகம் தன் வாழ்நாளில் பல்லாயிரம் மரங்களைத் தன் எச்சத்தின் மூலமாக உருவாக்குகிறதாம். மரங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எத்தனை மரங்களை உருவாக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே ! மனித மனம் மரங்களோடு பயணிக்கும் போதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மரம் மனிதனின் மூன்றாவது கரம்.
ஆளுக்கொரு மரம் ! ஆனந்தமாய் இணையட்டும் நம் கரம் !
மரம் வளர்க்க மழை பொழியும் !
மழை பொழிய வறுமை ஒழியும் !
மரங்களை நேசிப்போம் - மனித மனங்களை நேசிப்போம் !
மு.மகேந்திர பாபு ,
பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ,
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி , இளமனூர் .
பேசி - 97861 41410.
******************* ***********************
தினமலர் - என்பார்வை - கட்டுரை - மு.மகேந்திர பாபு.
ஏற்றம் தரும் இளைஞர்கள்.
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
என இளைய சமுதாயத்தை நோக்கி இன்முகத்தோடு அழைத்தார் மகாகவி பாரதி. இன்றைய இளைய சமுதாயம் ஏற்றத்தையும் , மாற்றத்தையும் நோக்கி மகத்தான பாதையில் மகிழ்வோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. பாட்டுப்பாட்டன் பாரதியின் வரிகளில் மீண்டும் சொல்வதென்றால் ,
' எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி ' என்ற வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகிறது இளைய சமுதாயம்.முயற்சியையும் , பயிற்சியையும் இருகண்களாகக் கொண்டு , அகமும் முகமும் மகிழ்ந்து தன்னுடன் இருப்பவர்களையும் , குழு மனப்பான்மையுடன் அரவணைத்துச் செல்கின்றனர் இன்றைய இளைஞர்கள். நான்கு இளைஞர்கள் சேர்ந்தால் வெட்டிப்பேச்சுப் பேசி நேரத்தை வீணடிப்பார்கள் என்ற நிலை மாறி , வெற்றிப்பேச்சுப் பேசி நாடும் , வீடும் நலமாய் இருக்க , வளமாய் இருக்க நல்ல சிந்தனையோடு , நற்செயல்களும் செய்வார்கள் என்பதற்கு இன்றைய இளைஞர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். தானும் உயர்ந்து , தன்னுடன் இருப்பவர்களையும் உயர்த்தும் உயர்ந்த மனப்பான்மை இன்றைய பள்ளி , கல்லூரி இளைஞர்களிடம் , இளைஞிகளிடம் விரிந்து இருப்பதைக் காணலாம்.
எல்லைச்சாமிகளாக இளைஞர்கள்.
' மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும் ' - என்ற மாகவிஞன் பாரதியின் வரிகளுக்குச் சொந்தக்காரர்கள் இளைஞர்கள். நம் அண்டை நாடுகள் எல்லாம் சண்டை நாடுகளாகவே இருக்கின்றன.சுற்றியிருக்கும் நாடுகளால் இன்னல்களே நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஒப்பந்தங்களை மீறி எல்லைக்குள் நுழைந்து தொல்லை தரும் எதிரிகளின் எல்லாச் சூழ்ச்சிகளையும் முறியடித்தும் , நாட்டிற்காகத் தன் இன்னுயிரைத் தரும் எல்லைச்சாமிகளாக அன்று முதல் இன்று வரை இளைஞர்கள் திகழ்ந்து வருகிறார்கள்.
சீனாவின் சமீபத்திய அத்துமீறலால் தம் உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்த நம் இந்திய வீரர்களின் தியாகத்தை என்னவென்று சொல்வது ? எல்லையில் நம் வீரர்கள் விழித்திருந்து நாட்டைத் தாங்கிக் கொண்டிருப்பதால்தான் , நாம் இரவிலே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறோம். போருக்குச் சென்ற தன் மகன் வீரமரணம் அடைந்தான் என்று பெருமைப்பட்ட நம் புறநானூற்றுத்தாய் போல்தான் இன்றைய தாய்களும் இருக்கின்றார்கள். எத்தனையோ கிராமங்கள் இராணுவத்திற்கும் , மக்கள் சேவைக்கும் என தம் இளைஞர்களைத் தயார் செய்து வருகின்றன.
மக்கள் பணியில் இளைஞர்கள்.
சமூகச் சிந்தனையுடன் சக மனிதர்களைச் சரிநிகர் சமானமாகக் கருதும் மனநிலை இன்றைய இளைஞர்களின் மனவயலில் மரமென வேரூன்றியுள்ளது. சாதி , மத , இன , மொழி பேதமின்றி உலகளாவிய உள்ளத்துடன் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். வீட்டில் தலைப்பிள்ளையாய் இருக்கும் இளைஞர்கள் , தந்தையின் பொறுப்பை விருப்புடன் தமதாக்கி நட்பு பாராட்டுகிறார்கள். விடுமுறை என்றால் ஏதேனும் ஒரு ஆடுகளத்தில் அடைந்துவிடுவார்கள் என்ற நிலையை மாற்றி , வீதியில் இறங்கி சுத்தம் செய்யவும் , மரக்கன்றுகளை நட்டுவைத்துப் பராமரிக்கவும் , பாதுகாக்கவும் செய்கிறார்கள் . ' முன்னாள் மாணவர் சங்கம் ' அமைத்து தான் படித்த பள்ளிக்குத் திறன் வகுப்பறை , நூலகம் அமைத்தல் , வண்ணம் பூசுதல் என தங்களால் இயன்ற உதவிகளை நண்பர்களுடன் இணைந்து செய்து வருகிறார்கள்.
பத்து இளைஞர்கள் ஒன்று கூடினால் நிச்சயம் அங்கே பயனுள்ள செயல்பாட்டிற்கான சிந்தனை ஒன்று அவர்களின் மனங்களில் மலர்ந்திருக்கும். மகத்தான சேவையாய் வளர்ந்திருக்கும். இயற்கைப் பேரிடர்கள் முதல் இன்றைய கொரனா ஊரடங்கு வரை இளைஞர்களின் பேராற்றலையும் , உதவி செய்வதில் உள்ள பேரார்வத்தையும் பார்த்து வியக்கிறோம். சரித்திரம் படைத்த ஜல்லிக்கட்டு முதல் சாமான்ய மக்களின் சட்டத்துணை வரை இன்றைய இளைஞர்களின் மக்கட்பணி என்பது பாராட்டிற்குரியது.
வழிகாட்டும் இளைஞர்கள்.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
- என்ற பாட்டுப்பாட்டன் பாரதியின் மகத்தான வார்த்தைகளை மனதில் கொண்டு பயணிக்கிறார்கள் இளைஞர்கள் . தன் உடல் நலம் பேணுவது முதல் ஊர் நலம் பேணுதல் வரை இளைஞர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார்கள்.இதைச்செய் , அதைச்செய் என எடுத்துரைக்கவோ , இடித்துரைக்கவோ தேவையில்லை. ஆபத்தில் சிக்கியவருக்கு இரத்தம் தேவையென இருவரை அழைத்தால் , இருபது இளைஞர்கள் அங்கே வந்து , இரத்தம் தந்து செல்கிறார்கள் . நம் மனங்களை வெல்கிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகன்கள் பொறியாளராக , மருத்துவராக வரவேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார்கள். பெற்றோருக்காகப் பட்டப்படிப்புகள் படித்தாலும் , மண்ணையும் மக்களையும் காக்கும் வேளாண்மையை விரும்பிச் செய்யும் இளைஞர்களை இங்கே நாம் பாராட்ட வேண்டும். வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் எடுத்துரைத்த இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் மனமுவந்து செய்து வருகிறார்கள். ரசாயானமற்ற உணவுப் பொருட்களை நமக்குத் தருகிறார்கள்.மண்ணைப் பக்குவப் படுத்தியும் , மனங்களைப் பக்குவப்படுத்தியும் மகசூல் என்னும் மகத்தான வெற்றியை இளைஞர்கள் பெற்றுவருகிறார்கள்.
சமூக வலைதளங்களில் சாதிக்கும் இளைஞர்கள்.
அறிவியல் தொழில் நுட்பத்தால் உலகம் இன்று உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. திறன் மிகுந்த நம் இளைஞர்கள் திறன் பேசிக்குள் தன்னைத் தொலைத்துவிடாமல் , தாம் கற்றதையும் பெற்றதையும் கொண்டு திருவாய் மலர்ந்து , பல தொழில்நுட்பங்களை காட்சிப்பதிவாக்கி சமூக வலைதளங்களில் வருவாய் ஈட்டி வருகிறார்கள் . தான் படித்த படிப்பிற்கேற்ப வேலை தேடியது ஒரு காலம். இன்று எவ்வளவு படித்திருந்தாலும் , தன் திறமையின் மூலமாக வீட்டிலிருந்தே பயனுள்ள பல செய்திகளைப் பிறர்க்கு சமூக ஊடகங்கள் மூலமாகத் தந்து வருகிறார்கள் இளைஞர்களும் பெண்களும். ஆணுக்கு நிகராகப் பெண்களும் சாதித்து வருவது பாராட்டிற்குரியது. வீட்டில் சமையல் செய்வது முதல் விண்வெளியில் பறப்பது வரை அனைத்துத் தகவல்களையும் வழங்கி வருவாய் ஈட்டுகிறார்கள். தங்கள் திறமையைக் காட்டுகிறார்கள்.
அறிவியல் செய்திகளையும் , அனுபவச் செய்திகளையும் இன்றைய இளைஞர்கள் தாமாகக் கற்று ஊடகங்கள் மூலம் வழங்கி வருகிறார்கள் . செல்போன் கையில் இருந்தால் சீரழிந்து விடுவார்கள் என்ற நிலை மாறி , செல்போன் கையிலிருந்தால் சிலவற்றைச் சீர்செய்வார்கள் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள்.
சாதனை இளைஞர்கள்.
பிறந்தோம் , இருந்தோம் , இறந்தோம் என்றில்லாமல் , பிறந்தோம் , இருந்தோம் , சிறந்தோம் ; மக்கள் மனங்களில் நிறைந்தோம் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
' வெறுங்கை என்பது மூடத்தனம்
உன் விரல்கள் பத்தும் மூலதனம் !
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும்
உன் கைகளில் பூமி சுழன்று வரும் !' - என்ற தன்னம்பிக்கைக் கவிஞர் தாராபாரதியின் வார்த்தைகளுக்கேற்ப இளைஞர்களின் கைகளில் இன்பமாய் பூமி சுழன்று வருகிறது.
துள்ளிச்செல்லும் பள்ளிப்பருவத்து இளைஞர்களும் , கல்லூரிக்குள் நுழைந்த கட்டிளம் காளையர்களும் , தங்கள் மனங்களில் சேவை என்னும் நற்பண்பை நிரப்பியிருக்கிறார்கள். வழி நடத்த மூத்தோர்களும் முன்வருகிறார்கள். இளைஞர்களின் கரம் மூத்தோர்களின் கரத்தோடு ஒன்றிணைந்து செயல்படுவதால் வெற்றிக்கனிகளே கைக்குக் கிட்டுகின்றன. நம் கனவு நாயகர் கலாம் ஐயா சொன்னதைப் போல ,
' ஒருநாள் நிச்சயம் விடியும் - அது
உன்னால் மட்டுமே முடியும் !
ஆம் இளைஞர்களே ! இது இளைஞர்களின் காலம் ! இனி இன்பமே எந்நாளும் !
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , அரசு ஆ.தி.ந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410 .
****************** ***********************
வெற்றிக்கு வித்திடும் ஊக்கமும் , பாராட்டும் .
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர்
' எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி !'
- என்றான் மாகவிஞன் பாரதி . திடமான நம்பிக்கையுடன் திறமையும் , முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி நமக்கு வசப்பட்டு விடுகின்றது. வெற்றியை நோக்கிய பயணத்தில் சிலமுறை வாய்ப்புகள் நழுவுகின்றபோது நம் மனமேடையில் சோர்வும் , தயக்கமும் ஜோராக அமர்ந்து விடுகின்றன. தோல்விகள் மனதைச் சுடுகின்றன . அப்படிச் சோர்ந்து போகும்போதெல்லாம் ' உன்னால் முடியும் ' என்று யாரேனும் ஊக்கப் படுத்துகின்றபோது நம் மனம் உற்சாகம் பெற்று வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது.
ஊக்கமும் பாராட்டும்.
' ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால்
ஊக்குவிப்பவரும்
தேக்கு விற்பார் ' - என்கிறது வாலிபக் கவிஞர் வாலியின் கவிதை. ஆம் நண்பர்களே ! நாம் தரும் ஊக்கம் ஒவ்வொன்றும் மற்றவரின் ஆக்கத்திற்கு அடித்தளமிடும். ஊக்கமும் , பாராட்டும் வெற்றி என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. பிறரை ஊக்கப்படுத்தும் போதும் , பாராட்டும் போதும் ஒரு நல்ல செயல் நடைபெறுவதற்கான முயற்சியில் நாமும் சிறுதுளியாக இருக்கின்றோம். ஊக்குவிக்கும் போது பிறர் மனம் உற்சாகம் அடைகின்றது. பாராட்டுகின்ற போது நம் மனம் பக்குவம் அடைகிறது. செயலுக்கு முன்னான ஊக்கமும் , செய்த பின்னான பாராட்டும் ஒருவரின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும்.
திருமந்திரம் தந்த திருமூலர் ' யாவர்க்குமாம் பிறர்க்கு ஓர் இன்னுரை தானே ' என்று சொல்கிறார். நாம் சொல்கின்ற இன்னுரை பலருக்கு முன்னுரையாகி , எழுச்சிப்படுத்தி இன்பம் கொடுக்கும். அந்த இன்னுரை ஊக்குவிப்பதாக , பாராட்டுவதாக இருக்கலாமே !
குழந்தைகளுக்கு ஊக்கம்.
எங்கள் வீட்டுச் சுவரில் சின்னச்சின்ன கிறுக்கல்கள் ஏதும் இல்லை. புத்தம் புதிதாய் இருக்கிறது என்று சொல்வதில் பெருமையில்லை. கைக்கு எட்டும் உயரம் வரை எங்கள் வீட்டுச் சுவரில் பிள்ளைகளின் கைவண்ணம்தான். இடைவெளி இல்லாமல் வரைந்துள்ளார்கள். எழுதியுள்ளார்கள் . புள்ளி வைக்கும் அளவிற்கு இடம் கிடைத்தாலும் அதிலும் சிறு ஓவியம் ஒன்றை வரைந்து விடுவார்கள். பார்க்கப் பார்க்க ஆனந்தம்தான் என நீங்கள் சொல்வீர்கள் என்றால் , பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர் நீங்கள்.
கவிதை எழுதுவது , ஓவியம் வரைவது , பாடல் பாடுவது என ஏதேனும் ஒரு திறமை நம் குழந்தைகளிடம் நிச்சயம் இருக்கும். குழந்தைகளிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்வதுதான் பெற்றோரின் , ஆசிரியரின் தலையாயகடமை. அவர்களின் ஆர்வத்தை , திறமைகளைக் கண்டறிந்து முதலில் ஊக்குவிக்க வேண்டும் . செய்தபின்பு பாராட்ட வேண்டும். ' அடடா ! எவ்வளவு அழகாக இந்த ஓவியத்தை நீ வரைந்திருக்கிறாய் ! அருமையாக இருக்கிறது. உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் என்று நம் விழிகளில் வியப்பைக் கலந்து சொல்கிறபோது குழந்தையின் மனச்சிறகு மகிழ்ச்சி வானில் பறக்கும். புதிதாய்ப் பிறக்கும். நீ ஓவியம் வரைவதற்காக அப்பா இந்த நோட்டினைத் தருகிறேன். நீ விரும்பும் போதெல்லாம் இதில் வரையலாம் எனச்சொல்கின்ற போது குழந்தை குதூகலமாகிவிடும். சின்ன வயதில் விதைக்கும் இந்த வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் வேர் விட்டு , விண் தொட்டு நாளை வெற்றியாளராய் மாற்றும் . புகழின் உச்சத்திற்கு ஏற்றும்.
பங்கேற்பே முதல் வெற்றி.
பள்ளியில் கலை இலக்கியப் போட்டிகள் என்றாலே மாணவர்களிடம் மகிழ்ச்சி நிரம்பும். பங்கேற்க மனம் விரும்பும் . படைப்புகள் அரும்பும். பேச்சு , பாட்டு , கவிதை , கட்டுரை , நடனம் , ஓவியம் என போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யலாம் என்றதும் , வகுப்பில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் என் பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள் . சில மாணவர்கள் , ஐயா எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்கலாமா ? என்பார்கள். அந்தளவிற்கு ஆர்வம் அவர்களிடம் இருக்கும். எத்தனை மாணவர்கள் பங்கு பெற்றாலும் , வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்கள் முதல் மூன்று மாணவர்கள்தான். இது அனைவருக்கும் தெரியும். அதையும் கடந்து என்னாலும் முடியும் என்று நம்பிக்கை கொண்டு மாணவர்கள் பெயர்களைக் கொடுக்கும் போதே வெற்றியாளர்களாக மாறிவிட்டார்கள். ஆம் ! போட்டியில் பங்கேற்பதே முதல் வெற்றி. அந்த வெற்றியாளர்களை ஊக்கப்படுத்தி , சாதனையாளராக்கிப் பாராட்ட வேண்டும். ' தம்பி இந்தப் போட்டியில் நீ பங்கேற்றமைக்காக உனக்கு இந்தப் புத்தகம் பரிசு என்றோ , பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நம் கரவொலியால் வாழ்த்துகள் என்றோ இறைவழிபாட்டுக்கூடத்தில் சொல்கின்றபோது நாம் சாதனையாளர்களை உருவாக்கத் தொடங்கிவிட்டோம் என்றே அர்த்தம். நமது கைதட்டலும் , கைகுலுக்கலும் அவர்களுக்கு மாபெரும் அங்கீகாரம். உன்னை ஊக்குவிக்க நம் பள்ளி இருக்கிறது. நம் தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் அனைவரும் உன்னை வாழ்த்துகிறார்கள் . உன்னால் நம் பள்ளிக்குப் பெருமை என்று சொல்கின்ற போது மாணவர்கள் மனம் துள்ளும். போட்டிகளில் பரிசுகளை அள்ளும்.
ஆக்கம் தரும் ஊக்கம்
படைப்பாற்றலை வெளிப்படுத்த இன்று நம் முன்னே பல களங்கள் இருக்கின்றன. நாளிதழ்கள் , வார , மாத இதழ்கள் , முகநூல் , புலனம் என ஒவ்வொன்றும் நம் திறமையை வெளிச்சப்படுத்துகின்றன. நமது படைப்பு வந்ததும் நண்பர்கள் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு , பாராட்டு மழையில் நனைத்து விடுவார்கள். ஊக்கத்தால் உள்ளம் தொடுவார்கள். நமது படைப்புகளுக்கு மற்றவர்கள் எவ்வாறு ஊக்கமும் , பாராட்டும் தருகிறார்களோ அதைவிடப்பன்மடங்கு மற்றவர்களின் படைப்புகளுக்கு நாம் வாழ்த்தும் , ஊக்கமும் தர வேண்டும். பதிவு இடுபவராக மட்டுமன்றி பாராட்டும் தன்மை உடையவராகவும் நாம் இருக்க வேண்டும். நண்பர்கள் மட்டுமன்றி புதியவர்களின் படைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும். நமது கதையை , கட்டுரையைப் படித்துவிட்டு எங்கிருந்தோ முகம் தெரியாத ஒரு நண்பர் அலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லும் போது நம் மனம் மகிழ்கிறது. நெகிழ்கிறது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உற்சாகம் பிறக்கிறது. மற்றவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை நாம் தரவேண்டும். வான்புகழ் கொண்ட வள்ளுவப் பேராசான் பொருட்பாலில் ' ஊக்கமுடைமை ' என்றொரு அதிகாரமே நமக்குத் தந்துள்ளார். ' உடைய ரெனப்படுவது ஊக்கம் ' என்கிறார். உடைமைகளில் எல்லாம் சிறந்து நிற்பது ஊக்கம் என்கிறார்.
மனம் திறந்த பாராட்டு.
' இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நீங்கள் செய்த தீபாவளிப் பலகாரங்கள் சுவையாக இருந்தன ' என அம்மாவைப் பாராட்டலாம். நீங்கள் வாங்கித்தந்த உடையும் , தீபாவளி வெடியும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தன என அப்பாவைப் பாராட்டலாம். அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னுடன் பணி புரியும் சக ஊழியர்களின் ஆற்றலையும் , அர்ப்பணிப்பு உணர்வையும் மாதாந்திரக் கூட்டத்தில் சொல்லிப் பாராட்டலாம். நமக்குக் கீழ் பணிபுரிபவர்தானே என எண்ணாமல் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டு செயல்படுத்தலாம். உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பும் , ஈடுபாடும்தான் நமக்கு இந்த மாபெரும் வெற்றியைத் தந்தது என தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொல்லும்போது சக ஊழியர்கள் மகிழ்ந்து போவார்கள். இன்னும் அதிக ஈடுபாட்டோடு பணி செய்வார்கள்.
அதிகாரத்தில் இருக்கிறோம் என ஆதிக்கம் செலுத்தினால் சக ஊழியர்கள் நம்மிடமிருந்து ஒதுங்கிச் செல்வார்கள். உங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என நம் செயல்பாடு இருந்தால் அருகில் வந்து ஆலோசனை சொல்வார்கள். நான் சொல்வதைத்தான் நீங்கள் செய்யவேண்டும் என்று சொல்லும்போது நாம் தனித்து இருப்போம். சேர்ந்து செயல்படும் போது தனித்துவமிக்கவராக இருப்போம். சோர்வுடன் வரும் சக ஊழியரிடம் அவரின் சூழலைக் கேட்க செவி சாய்த்தால் சுறுசுறுப்பாகிவிடுவார். தேவையானபோது ஊக்கமும் , பாராட்டும் கொடுக்கும்போது வேலைகள் தடையின்றி நடைபோடும்.
வெற்றியை நோக்கி
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றமும் , இறக்கமும் மாற்றத்தைத் தந்து கொண்டே இருக்கின்றன . தினந்தோறும் புதுப்புது நண்பர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் . நமது புன்முறுவல் ஒரு புது நண்பரை உருவாக்கும். நமது ஊக்கமும் , பாராட்டும் சோர்ந்து போன ஒருவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி பிறரை மகிழ்ச்சிப் படுத்தி நாம் மகிழ்வது என்பார்கள். இருக்கும் காலத்தில் இனிமை தரும் சொற்களைச் சொல்வோம் ! அன்பால் மனங்களை வெல்வோம் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி ,
இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
********************** *******************
மண்ணில் மலரட்டும் மரமும் மனிதமும்.
கட்டுரை.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.97861 41410.
' உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் ' என்றார் மகாகவி பாரதி.மண்ணில் மலர்ந்து விட்ட ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்தும் உயிர்களே ! அதனால்தான் ' காக்கை குருவி எங்கள் சாதி ' என்று மகாகவியால் பாட முடிந்தது.மனிதர்கள் மட்டும் மாண்புடையவர்கள் அல்லர். மரமும் மாண்புடையதே ! அவரவர் நிலையில் , அதனதன் நிலையில் ஒவ்வொன்றின் பிறப்பிலும் சிறப்பு நிறைந்திருக்கும்.மனிதர்களின்றி மரங்கள் மகிழ்வாய் இருக்கும். ஆனால் , மரங்கள் இன்றி மனித இனம் மண்ணில் வாழவும் முடியாது. மண்ணை ஆளவும் முடியாது. பறவைகளையும் , விலங்குகளையும் நம் உறவுகளாக நினைக்க வேண்டும். நம்மோடு அன்பில் இணைக்க வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு மட்டுமன்று , மண்ணில் வாழும் அனைவர் மன வயலிலும் விதைக்க வேண்டிய நல் விதைகள் இரண்டு. ஒன்று மனிதம் வளர்த்து மக்களைக் காப்பது . மற்றொன்று மரம் வளர்த்து மண்ணைக் காப்பது. இன்றைய உலகில் இரு கண்களாகக் காக்க வேண்டியவை இவை இரண்டுமே !
எந்திர உலகம்
எங்கு நோக்கினும் எந்திரம் ! இதயத் துடிப்புகளை விட எந்திரங்களின் துடிப்புகளே எங்கும் கேட்கின்றன.எந்திரங்களோடு பயணிக்கும் மனித இதயங்களிடம் மனிதம் மரணித்து விட்டதோ என்ற ஐயம் எழலாம்.காலையில் நாம் பயணிக்கும் சாலையில் மயங்கி விழுந்த மனிதரைத் தூக்கி விடுவதற்கு யாரோ ஒருவர் வருவார் ; தண்ணீர் தருவார் ; நமக்கோ நேரமாகி விட்டது. சரியான மணிக்கு பணிக்குச் சென்றாக வேண்டுமே என ஓடுகிறோம். ஐயோ ! பாவம் . என்னாச்சோ ! யார் பெத்த பிள்ளையோ என சோகம் பாடுகிறோம் ! ஆனாலும் , மனிதம் நிறைந்த மனிதர்கள் மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி செய்தும் , உணவு தந்தும் , மருத்துவ மனையில் சேர்த்தும் உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகிழ்ச்சியில் பெரிய மகிழ்ச்சி எதுவென்றால் , இன்னலில் உள்ள இதயங்களை மகிழ்ச்சிப் படுத்தி , அதுகண்டு நாம் மகிழ்வது. அப்படிப்பட்ட உதவும் நல்ல உள்ளங்களைச் சிறப்பிக்கவே அவ்வப்போது மழைத்துளிகள் பன்னீர்த்துளிகளாய் மண்ணில் விழுந்து , மக்களின் கண்ணீர்த் துளிகளைத் துடைக்கின்றது. இயற்கை புல் , பூண்டுகளைப் படைக்கிறது.
அண்ணலின் நேயம்.
உலகெங்கும் உள்ள உள்ளங்கள் உச்சரிக்கும் ஒற்றைப் பெயர் மகாத்மா காந்தி. பிற உயிர்களையும் தம் உயிராய் , தம் உயிரினும் உயர்வாய் நினைத்த உள்ளம் அது. அதனால்தான் ' உலக உத்தமர் ' என்று நாம் அழைத்து மகிழ்கின்றோம் . பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் ஆனபின்பும் ஒருவரின் பிறப்பை , பிறப்பின் சிறப்பை ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதியில் கொண்டாடுகிறோம் என்றால் அது அவர் செலுத்திய அன்பிற்காகவும் , நேயத்திற்காகவும்தானே !
காந்தியடிகள் , பல்துலக்க உதவிய வேம்பின் மீதும் அன்பு செலுத்தினார். கொடிய விஷம் கொண்ட பாம்பின் மீதும் அன்பு செலுத்தினார். துப்பாக்கிகளும் , பீரங்கிகளும் அவரின் கைத்தடிக்கு முன் தலைகவிழ்ந்தே கிடந்தன. அதனால்தான் அவர் பிறந்த தினத்தை ஐ.நா.சபை உலக அகிம்சை தினமாகக் கொண்டாடி மகிழ்கிறது. ஆம் ! இந்த உலகத்திற்கே அகிம்சையைப் போதித்து , அன்பால் நேசித்து , இன்றும் மக்களால் பூஜித்து வணங்கப் படுகிறார் மகாத்மா காந்தியடிகள். போர்ப்பந்தரில் பிறந்து , போரே வேண்டாமென்று இந்தப் பாரே போற்றும் விதமாக அனைவர் மீதும் நேயத்தோடு வாழ்ந்து , இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
ஒரு முறை எரவாடா சிறையில் காந்தியடிகள் இருந்த போது அவருடன் சபர்மதி ஆசிரம ஆசிரியர் காலேல்கர் என்பவரும் உடன் இருக்கிறார். அந்தச்சிறை வளாகத்திற்குள் வேப்ப மரங்கள் ஏராளம் இருந்தன. காந்தியடிகள் தினமும் வேப்பங்குச்சியால்தான் பல்துலக்குவார். ஆனால் தினமும் புதுப்புது குச்சிகளை ஒடிக்காமல் , ஒருமுறை பயன்படுத்திய குச்சியையே மீண்டும் மீண்டும் கழுவிப் பயன்படுத்துவார். அதைக்கண்ட காலேல்கர் , இங்குதான் ஏராளமான மரங்கள் இருக்கின்றனவே ! தாராளமாக ஒடித்து பல்துலக்கலாமே என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள் , நம்மைப் போன்றவைதான் மரங்களும். அவற்றிற்கும் உயிர் இருக்கின்றது . உணவு உண்கிறது. சுவாசிக்கிறது. உறங்குகிறது. நமக்கு அடிபட்டால் எப்படி வலிக்குமோ , அதுபோலவே மரத்தின் கிளைகளை ஒடிக்கும் போது அதற்கும் வலிக்கும். தன் வலியை மரத்தால் சொல்ல முடியாது.நமது தேவைக்காக ஒரு மரத்திற்கு வேதனை தரும்போதும் கூட , குறைந்த பட்ச வேதனையைத்தான் தரவேண்டும் என்றாராம். அதனால்தான் மகாத்மாவாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
மனிதம் காப்போம் !
மக்கட்பெருக்கத்தால் இல்லங்கள் நெருக்கமாகி விட்டன. ஆனால் , உள்ளங்களோ தூரமாகி விட்டன. அருகருகே இருந்தாலும் அந்நிய தேசத்தில் வாழ்பவர்களைப் போல வாழ்கிறோம். திறக்கப்படாத வீட்டுக் கதவுகளைப் போலவே நம் மனங்களும் பூட்டியே கிடக்கின்றன. அதில் அன்பும் , நேயமும் , உதவும் எண்ணமும் மாட்டிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நலம் விரும்பும் ஒரு சிலரே , களம் இறங்கி தன்னால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை நினைக்கும் போது மகிழ்வாய் இருக்கிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக , இதமாக ஒருவரை இங்கே குறிப்பிடலாம். ஆம் நண்பர்களே ! பிழைப்பிற்காக முத்து நகராம் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு வந்து , பெருந்தொற்றுக் காலத்தில் தான் யாசித்த பணத்தில் சிறு பகுதியை தன் உணவுக்காக மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி வருகிறார். ஒருமுறை இருமுறை அல்ல. பத்தாயிரம் , பத்தாயிரமாக பதினைந்தாவது முறையாக வழங்கி இருக்கிறார். அந்த மனித நேயரின் பெயர் எழுபது வயதான பூல்பாண்டியன். எழுபதாவது ஆண்டில் இதழியல் துறையில் வெற்றி நடை போடும் தினமலர் அந்த மனிதரின் சேவையை உலகத்திற்கு வெளிச்சப் படுத்தி வருகிறது. உதவும் உள்ளங்களுக்கு ஊக்கம் தருகிறது. உதவி செய்வதற்கு உயர் பதவியில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் உள்ளம் உயர்ந்திருந்தால் போதுமானது.
மரமெனும் பிள்ளை.
நிலமடந்தைக்கு அணிகலன்களாக இருப்பவை மரங்கள். பறவைகளுக்கும் , விலங்குகளுக்கும் கட்டணம் பெறாமலே தன்னை முழுமையுமாய்த்தந்து உறவாய் இருப்பவை மரங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் கரம் பிடித்து அழைத்துச் செல்பவைகளும் மரங்களே ! இந்தப் பூமிப்பந்தில் தன்னலமற்ற ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது மரங்கள் மட்டுமே ! மண்ணில் தோன்றி மண்ணில் மறையும் மரங்களும் மண்ணின் மக்களே ! மரங்களோடு வாழ்தல் என்பது வரம். அந்த அனுபவத்தை வார்த்தையில் வடித்து விட முடியாது. மரங்களோடு வாழ்ந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மரங்களோடு உரையாடினால் , உறவாடினால் மட்டுமே அந்த சுகானுபவம் நமக்குக் கிடைக்கும். தினமும் காலையில் மரத்தின் முகத்தில் முழித்துப் பாருங்கள் . அன்றைய நாள் முழுமையும் பசுமையாக , இனிமையாக இருக்கும் . வீடடையும் மனிதர்களைப்போல , மாலையில் கூடடையும் பறவைகளின் மொழி கேட்பது ஆனந்தம் தரும்.
நம் வீட்டில் புதிதாய் ஒரு மழலை பிறந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்குமோ , அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியினை ஒரு மரக்கன்றை மண்ணில் நடும்போது நம் மனம் பெறும். அந்த மரம் நம் வாழ்வோடு கூடவே வரும். நம் பிள்ளையைப் போல் ஆனந்தம் தரும். நாம் ஓடியாடி உழைப்பது நம் பிள்ளைகளுக்குச் சொத்தும் , சுகமும் தருவதற்காக என்போம். கொத்துக் கொத்தாய்ச் சொத்துத் தரலாம். சுகம் தர முடியாது. சுகமாய் , நலமாய் , வளமாய் வாழ மரங்கள் வேண்டும். அப்போதுதான் சுத்தமான காற்று நம் சுவாசத்தைத் தீண்டும். சொத்துச் சேர்ப்பதோடு சூழல் காக்க நம்மால் இயன்ற மரங்களையும் நட்டு வைப்போம் . இருக்கும் மரங்களை விட்டு வைப்போம். இவர் உன் மாமா , உன் அத்தை , சித்தப்பா , சித்தி என உறவுகளை அறிமுகம் செய்து வைப்பது போல , நம் பிள்ளைகளுக்கு இது வேம்பு , புங்கன் , ஆல் , அரசு என மரங்களையும் அறிமுகம் செய்து வைப்போம். வருங்காலத் தலைமுறை நல்ல மனங்களோடும் , மரங்களோடும் வளரட்டும். நல்வாழ்க்கை மலரட்டும்.
ஆனந்தம் ஆரம்பம்.
நம் வீட்டில் பிறந்த நாள் விழாவா ? திருமண விழாவா ? புதுமனைப் புகுவிழாவா ? ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு வேளை உணவு தருகிறீர்களா ? மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். இது நமது மனித நேயம். நம் வீட்டு விழாக்கள் புகைப்படம் எடுப்பதோடும் , காட்சிப்பதிவு செய்வதோடும் நின்று விடாமல் , அந்த விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்க நம் பிள்ளைகளால் வீட்டில் , வீதியில் மரம் நடப்பழக்குவோம். மரம் வளரும். நம் மழலைகளும் வளர்வார்கள். இருவரும் நட்பாகும் போது நாடும் நலம் பெறும். மனித நேயத்தோடு மரங்களின் நேயமும் மனதில் வளரும். உலகை உற்று நோக்க வெளிச்சம் தரும் இருவிழிகளில் ஒன்று மனிதம் சொல்லட்டும். மற்றொன்று மரங்களைச் சொல்லட்டும். விழிகளின் வழியே இப்போது ஆனந்தம் தெரிகிறது. கண்ணில் மனிதமும் , மண்ணில் மரமும் மலர்கிறது.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆ.தி.ந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410
******************************** **********
இன்பம் தரும் இனிய கிராமங்கள் - கட்டுரை.
மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை. 97861 41410
சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகள் , தாய்மடியில் முட்டி முட்டி வயிறுமுட்டக் குடித்து விட்டுத் துள்ளி ஓடும் தன் கன்றினை அம்மா என்றழைக்கும் தாய்ப்பசு , ஓய்வறியாமல் எந்நேரமும் தண்ணீரைத் தந்து கொண்டிருக்கும் ஊர்ப்பொது அடிகுழாய் , கோயில் மரத்தடியின் கீழே ' ஆடுபுலி ஆட்டத்தில் ' அமைதியாகவும் , ஆரவாரமாகவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் பெரியவர்கள் , பம்பரமோ , கிட்டிக்குச்சியோ , கோலிக்குண்டோ , பச்சக் குதிரையோ , கபடியோ என ஏதோ ஒரு விளையாட்டில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி விளையாடும் சிறுவர்கள் . பல்லாங்குழி , பாண்டியாட்டம் , தாயம் , கும்மி , தட்டாங்கல் என சிறுவர்களுக்கு நிகராகச் சிறுமியர்களின் விளையாட்டுகள் , சின்னஞ்சிறு குஞ்சுகளுடன் இரை தேட வரும் தாய்க்கோழிக்குப் பாதுகாப்பாகப் பருந்தை விரட்ட வரும் சேவலின் கொக்கரிப்புச் சத்தம் , தன் குரைப்புச் சத்தத்தினால் இவர் ஊருக்குப் புதியவர் என வேற்று நபரை அடையாளம் காட்டும் நாய்கள் , குயில்களும் , மயில்களும் , கிளிகளும் , மைனாக்களும் , கரிச்சான்களும் , செம்போத்துகளும் முற்றத்து மரத்தில் அமர்ந்து தத்தம் குரலால் நம்மை நலம் விசாரிப்பதைப் போன்ற உணர்வு . காதுகுத்தோ , கல்யாணமோ , பிறப்போ , இறப்போ ஒட்டுமொத்த மக்களும் ஒன்று கூடும் காட்சி. ஆம் நண்பர்களே ! இதுதான் கிராமத்தின் மாட்சி.
வயலும் வாழ்வும்.
கிராமத்தில் வயலும் , வாழ்வும் இரண்டறக் கலந்தது. ' உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் !' என்றார் மாகவிஞன் பாரதி. ' உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ' என்றார் வான்புகழ் வள்ளுவப் பேராசான். ' உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் ' என்றார் அறிவிற்சிறந்த ஔவை . உழவின் சிறப்பை , உழவனின் சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் விதமாய் , இதமாய் அமைந்துள்ளன இப்பாடல்கள்.
உலகு உய்ய , உழவனின் உழைப்பு களைப்பின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.வயல்தான் உழவர்களுக்கான் உலகம். வயல்தான் உழவர்களுக்கு கோவிலாகவும் , விளையும் பயிர்களே , உயிர்களைக் காக்கும் சாமியாகவும் உள்ளது. ஐந்திணை வகுத்த பண்டைத் தமிழர்கள் ' வயலும் வயல் சார்ந்த பகுதியையும் மருதம் ' என அழைத்தனர். மக்களும் மகிழ்ச்சியோடு உழைத்தனர். வானம் கருக்கத் தொடங்கும் போது கிராமத்து மக்களின் வாழ்க்கை வெளுக்கத் தொடங்குகிறது.ஆடிப்பட்டம் தேடி விதைத்து , ஓடியாடி தன் உழவுப் பணியை மகிழ்வோடு தொடங்குகிறார்கள்.
ஏர் பிடித்து உழுது நிலத்தைப் பண்படுத்துவதில் தொடங்குகிறது மக்களின் பசியாற்றுவது. காலைக்கதிரவனுக்கு முன் எழுந்து வயலுக்குச் சென்று , மாலையில் மறையும் வரை நின்று , மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு வேலை செய்பவர்கள் விவசாயிகள் . விதைப்பில் தொடங்கி , அறுவடை வரை அயராது உழைத்து , களத்தில் மகசூல் நிறையும் போது மக்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும். நலமும் , வளமும் நிறையும். உழைக்கும் நாட்களே உன்னதமான நாட்கள் என்று உலகுக்கு உணர்த்துபவர்கள் வேளாண் மக்கள்.
நோயற்ற வாழ்க்கை
' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ' என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் பொருந்தும். பொருட்செல்வம் அதிகம் இல்லையென்றாலும் , குறைவற்ற செல்வமாக நோய்நொடியின்றி அவர்களது வாழ்க்கை முறை அமைந்திருக்கிறது. அவர்கள் உண்ணும் உணவே மருந்தாக அமைகிறது. ஒவ்வொரு வீடும் உடற்பயிற்சிக் கூடம் . அது கற்றுத் தருகிறது ஆரோக்கிய பாடம்.
அம்மியில் அரைத்துத்தான் மணக்க மணக்கச் சமைக்கிறார்கள். ஆட்டு உரலில் மாவு ஆட்டுகிறார்கள். திருகில் அரைத்துத் தானியங்களை உடைக்கிறார்கள். நடந்து சென்றுதான் ஊர்ப்பொதுக்குழாயில் தலையிலும் , இடுப்பிலும் தண்ணீர்க்குடம் தூக்கி வருகிறார்கள் .
வேலைக்கு ஆட்கள் வைக்காமல் இருபாலரும் தத்தம் வேலைகளைச் செய்கிறார்கள் .வயல் வேலைக்குச் சென்று திரும்புகையில் விலையின்றி கீரைகளையும் , அதலக்காய்களையும் பறித்து வருகிறார்கள். நீச்சுத் தண்ணியும் , பழைய சோறும் அவர்களுக்கு ஆரோக்கியத்தைத் தருகின்றன. எழுபது , எண்பது வயது கடந்தாலும் , அவர்கள் வாழ்க்கைப் பயணம் நோயின்றி நடந்து கொண்டிருக்கிறது. காரணம் அவர்களது உணவு முறை . கும்பாவில் கரைக்கப்பட்ட கம்மங்கஞ்சியோ , கேப்பக்கூழோ , சாமைச்சோறோ அவர்களுக்கு நோயற்ற வாழ்வைத் தருகிறது . தாங்கள் உண்ணும் உணவில் என்னென்ன வைட்டமின்கள் , சத்துக்கள் இருக்கின்றன என அவர்களுக்குத் தெரியாது. அலையடிக்கும் சிறுகடலென விரிந்திருக்கும் கண்மாயில் நீச்சலுடன் குளியல். நினைக்க நினைக்க நெஞ்சம் நிறையும் நினைவுகளுடன் நோயற்ற வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் கிராமத்து மக்கள்.
நீர்மையும் நேர்மையும்.
இது மழைக்காலம். கிராமங்களில் நன்செய்யும் , புன்செய்யும் பரந்து விரிந்திருக்கும். வானம் பார்த்த பூமியாக புன்செய். வயல்கள் நிறைந்த நன்செய். வானம் தந்த கொடையாகிய மழை நீரைக் குளங்கள் , கண்மாய்கள் அமைத்துத் தேக்கி நீர் மேலாண்மையில் சிறந்திருக்கின்றனர் நமது கிராமத்தினர். நெல்லுக்கு நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.நாற்றங்காலில் நெல் விதைப்பதற்கு முன்பு சணல்சாக்கில் நெல்லை இட்டு மூடையாகக்கட்டி கண்மாய் நீருக்குள் இரண்டு நாட்கள் வைத்துவிடுவார்கள். மூன்றாம் நாள் அந்த மூடையை எடுக்கும் போது சிறுபிள்ளையின் வாய்க்குள் முளைக்கும் பல்லென , நெல் முளைக்கூரிக்கொண்டிருக்கும். அதன்பின்தான் அந்த விதைநெல்லை நாற்றங்காலில் விதைப்பார்கள்.
கண்மாய்க்குள்ளே இப்படி ஆங்காங்கே விதைநெல் மூடைகள் இருந்தாலும் காவலுக்கு யாரும் இருப்பதில்லை.மூடைகளும் களவு போவதில்லை.எந்த மூடை எங்கு வைத்தார்களோ அது வைத்த இடத்தில் வைத்தது போல் இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத மனம் இன்றும் கிராமங்களில் இருப்பதைப் பார்க்கலாம். கிராமத்தில் பல வீடுகளில் கதவுகள் இருக்காது. பனை மட்டையைத் தட்டியாக அமைத்துச் சாத்தி வைத்திருப்பார்கள். ஆனாலும் வீடுகளில் திருடு போவதில்லை.
உறவும் உபசரிப்பும்.
கிராமத்திற்குப் புதிதாக ஒரு நபர் வந்து இன்னாரைப் பார்க்க வேண்டும் எனச்சொன்னால் , அவருக்கு தாகம் தீர்க்க முதலில் தண்ணீர் கொடுத்து , திண்ணையில் அமரவைத்து நலம் விசாரிப்பார்கள். யாரைத்தேடி வந்தாரோ அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்றும் விடுவார்கள். கூட்டுக்குடும்ப உறவுகள் மறைந்து வரும் இன்றைய காலச்சூழலில் கிராமங்களில் மட்டுமே கூட்டுக்குடும்ப உறவு முறை நிலைத்து நிற்கிறது. இன்றைய இளம் தலைமுறை வாழ்க்கைப் பாடத்தைக் கற்கிறது. தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளுக்கு கதைசொல்லிகளாக , நடமாடும் நூலகமாக இருக்கிறார்கள். பெரியப்பா சித்தாப்பா , மாமா , அண்ணன் , தம்பி என அனைத்து உறவுகளும் அமையப் பெற்றவர்களாக கிராமத்துக்குழந்தைகள் இருக்கிறார்கள். யார் வந்தாலும் வரவேற்று , உபசரித்து உணவு கொடுத்து அகமும் , முகமும் மகிழ்ந்து அளவளாவும் குணம் கிராமங்களில் மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதைத்தான் விவேகசிந்தாமணி என்னும் நூல் ' ஒப்புடன் முகமலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் ' என்றது.
சொலவடைகளில் சூட்சுமம்.
சிறுவிதைக்குள் பெருவிருட்சம் அடைபட்டிருப்பதைப் போல , ஒற்றை வரிக்குள் ஓராயிரம் பொருளைப் பொதித்து வைத்திருப்பார்கள் கிராமத்துப் பெரியவர்கள். போகிற போக்கில் பேச்சில் அவை வந்து விழும். கேட்கும் செவிகளில் புத்துணர்வு எழும். ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்ய முடியும் என்பதை ' ஆடு மேய்ச்ச மாதிரியும் , அண்ணனுக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் ' என்ற சொலவடையில் சொல்லிவிடுவார்கள். பெண்களுக்குள் அவ்வப்போது நடக்கும் அடிகுழாய்ச்சண்டையில் ' மாங்காயத் தின்னுட்டு உங்கம்மா மடியில பெத்தாக ! தேங்காயத் தின்னுட்டு எங்கம்மா என்னைத் தெருவிலயா பெத்தாக ? ! என போகிற போக்கில் உதிர்த்து விட்டுச் செல்வார்கள். ஒரு ஊரில் இரண்டு விருந்தாளிகள் வீட்டிற்குச் சென்ற ஒருவன் இரண்டு வீட்டிலும் சாப்பிடாமல் வந்த நிலையை , ' ரெண்டு வீட்டு விருந்தாளி கெண்ட வீங்கிச் செத்தானாம் ' என்பார்கள். இப்படியாகக் கிராமத்து வாழ்வியல் பயணத்தில் சொலவடைப்பூக்கள் அவ்வப்போது பூத்துக்கொண்டேதான் இருக்கின்றன.
திருவிழாக் கொண்டாட்டம்.
ஆண்டு முழுவதும் ஓடியாடி உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தருவதாக அமையும் ஊர்த்திருவிழா. ' ஊருடன் கூடி வாழ் ' என்பதற்கேற்ப மாசி , பங்குனி , சித்திரை மாதங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஊரே உற்சாகமாகும். வெள்ளையடிக்கப்பட்ட வீடுகளும் , வேப்பிலைத் தோரணங்களும் , வண்ண ஒளி விளக்குகளும் , மேளச்சத்தமும் , கும்மிப்பாட்டும் , குலவைச் சத்தமும் , முளைப்பாரி தூக்குவதும் என ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும். ஓராண்டு உழைப்பின் உன்னதத்தை இந்தத் திருவிழாக்களில் காணலாம். அன்பைப் பேணலாம்.
வேலைக்காக சொந்த ஊர்விட்டு வேற்றூர்க்குச் சென்றவர்கள் , இரைதேடப் பறந்த பறவை மாலையில் கூடடைவதைப்போல , திருவிழா நேரத்தில் தங்கள் சொந்த ஊர்க்கு வந்து விடுவார்கள். ஓராண்டு சம்பாதித்த பணத்தின் சிறுபகுதியை ஊருக்காகச் செலவு செய்து மகிழ்வார்கள். தனித்திருந்த உறவுகளை ஒன்றிணைக்கும் விழாவாக ஊர்த்திருவிழா ஒளிரும்.
இயற்கை இன்பம் .
செயற்கை அதிகம் நுழையாத , இயற்கை மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்ற இடம்தான் கிராமம். அங்குப் பேரிரைச்சல் இல்லை ; பெருங்கூட்டம் இல்லை ; புகை மூட்டம் இல்லை ; அரக்கப் பறக்க ஓடும் அவலம் இல்லை. காற்றில் மிதந்து வரும் பறவைகளின் சத்தம் நித்தம் நித்தம் கேட்கும். ' காக்கைக் குருவிகள் எங்கள் சாதி ' என்ற பாட்டுப்பாட்டன் பாரதியின் வரி மனதில் வந்து போகும். மண்ணில் மணமும் , கண்ணில் கருணையும் உள்ள ஓரிடம் இந்தப் பூமிப்பந்தில் உள்ளதென்றால் அது கிராமங்கள் மட்டுமே !
கிராமத்து மக்களின் மனக்கதவைத் திறக்கும் திறவுகோலாக அன்பு என்றும் நிறைந்துள்ளது. கிராமங்கள் வாழ்ந்தால் மட்டுமே நகரங்கள் வாழ முடியும். நமக்கான உணவை மட்டுமல்ல , உணர்வுகளைத் தருவதும் கிராமங்களே !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
*********************************** *******
மண்வளமே மனித வளம் !
கட்டுரை - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
( ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தினம் )
' மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும் ' என்றான் மகாகவி பாரதி. பாரதி , சுதந்திரத்திற்கு மட்டும் பாடிய கவிஞன் அல்லன். சுற்றுச்சூழலுக்கும் பாடிய கவிஞன். காணி நிலத்தில் அவன் கண்ட கனவில் சுற்றுச்சூழலின் , இயற்கையின் இன்பத்தை நாம் அறியலாம்.பராசக்தியிடம் காணிநிலம் வேண்டும் எனக் கேட்டவன் அதில் என்னவெல்லாம் வேண்டும் என அருமையாகக் கேட்கிறான்.
காணி நிலத்தில் ஒரு மாளிகை , அங்குக் கேணி அருகிலே பத்துப்பன்னிரண்டு தென்னை மரங்கள் , நல்ல முத்துச்சுடர் போல் நிலவொளி , கத்தும் குயிலின் ஓசை , சித்தம் மகிழ்ந்திட நல்ல தென்றல் காற்று . ஆகா ! இயற்கை இன்பத்தை எவ்வளவு ரசித்திருக்கிறான் பாருங்கள். இப்படித்தான் இருந்தது முன்பு இயற்கை. இன்று இயற்கையை மனிதனின் செயற்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வருகிறது. மனித குலத்திற்குத் துன்பத்தைத் தருகிறது.
எதுவும் நடக்கலாம் !
இயற்கையை நாம் பாழ்படுத்தினால் எதுவும் நடக்கலாம். இயற்கை என்னும் பள்ளிக்கூடம் , நமக்கு நடத்துகிறது தினமும் வாழ்க்கைப் பாடம். இன்று , உலகமே உச்சரிக்கும் ஒற்றைச்சொல் ' கொரனா ' . இந்த கொடிய வைரசினால் சில நாட்களாக நமது சுற்றுச்சூழல் சுகமாக இருந்து வருகிறது.வாகனங்களின் பேரிரைச்சல்களும் , தொழிற்சாலைகளின் புகைகளுமின்றி சுற்றுச்சூழல் நிம்மதியோடு இருந்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அவசர அவசரமாக அலுவல் பணிக்காக ஓடும் நாம் , வீட்டைச் சுற்றியுள்ள பறவைகளின் ஒலிகளைக் கேட்டதில்லை. ஆனால் இந்த ஊரடங்கில் , குயிலின் ஓசையையும் , மைனாக்களின் பேச்சையும் , சிட்டுக் குருவிகளின் சிறகசைப்பையும் , செம்போத்துகளின் அழகையும் பார்த்து ரசிக்கிறோம்.
காட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த விலங்குகள் நகரத்துச் சாலைகளில் நடைபயின்றும் , ஓய்வெடுத்தும் சென்றதை நாம் கண்டோம். மனிதன் ஊரடங்கில் ஓய்வாக இருந்த போது , விலங்குகளும் , பறவைகளும் சுதந்திரமாக உலா வந்தன. உண்மையிலே இயற்கை இன்பம் என்பது , மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களும் எவ்விதத் துன்பமுமின்றி எங்கும் பயணப்படுவதாகும். மனிதரும் நடமாட வேண்டும் , மற்ற உயிரினங்களும் நடமாட வேண்டும். மனிதன் தனக்குத்தானே சுயகட்டுப்பாடு அமைத்துக் கொண்டால் இயற்கை இன்னும் இன்பம் பெறும். அப்போதுதான் சுற்றுச்சூழல் சுகமாகும்.
மண் வளமே மனித வளம்.
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க - ஐலசா மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க - ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ... - என நாட்டுப்புறப் பாடல் ஒன்று உண்டு . இதை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பாடல். ஆழ்ந்து உற்று நோக்கினால் , இயற்கைச் சங்கிலி எவற்றையெல்லாம் சார்ந்து உள்ளன என்பதை நாம் அறிய முடியும்.
இயற்கை தரும் பெருங்கொடையான மழையை நம்பி மண் இருக்கிறது. மண்ணை நம்பி மரம் இருக்கிறது. மரத்தை நம்பி பறவைகளும் , விலங்குகளும் , மனிதர்களும் மற்ற உயிரினங்களும் ஏதோ ஒரு விதத்தில் சார்ந்தே இருக்கின்றன. மழைநீர் விண்ணிலிருந்து மண்ணைத் தொடுவதிலிருந்து மனித குலத்தின் மகிழ்ச்சி தொடங்கி விடுகிறது. மண் வளமாக இருந்தால் மனித குலமும் வளமானதாக இருக்கும் . மற்ற உயிரினங்களும் வளமாகவும் , நலமாகவும் இருக்கும். மண் தன் வளத்தை இழந்தால் , மனித இனம் வறுமையை அடையும்.
மண்ணிற்கும் , மனிதனுக்கும் தொப்புள் கொடி உறவு ஆதியிலிருந்தே இருந்து வருகிறது. நாகரிகம் வளர்ச்சி பெறாத காலத்தில் , மண்தான் தன் பிள்ளையான மரத்தின் மூலம் இலை தழைகளை ஆடையாகத் தந்தது . நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் இன்றைய விஞ்ஞான காலம் வரை மனிதனை மண் கரம் பிடித்தே பயணித்து வருகிறது.
மனிதன் கூடி வாழத் தொடங்கினான். வேளாண்மை செய்தான். தான் வளர்க்கும் கால்நடைகளின் சாணத்தை மண்ணிற்கு உரமாக்கினான். செடி , கொடிகளை உரமாக்கினான். இதனால் , நிலத்தில் விளைந்த காய்கனிகள் , உணவு தானியங்கள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் , வளத்தையும் தந்தன. நூறாண்டு நோய்நொடியின்றி வாழ்ந்தான். உண்ணும் உணவே மருந்தாக அமைந்ததால் , மருத்துவ மனைகளின் தேவையும் , சேவையும் அதிகம் தேவைப்படவில்லை.
செயற்கை உரங்களும் , பூச்சிக்கொல்லிகளும் மண்ணைத்தொட்டபோது , மனிதனிடமிருந்து மகிழ்ச்சி விடுபடத் தொடங்கியது. மண் வளம் குறைந்தது. மனிதனின் உடல் நலம் குறைந்தது. பாரம்பரிய உணவு முறைகள் மறைந்தன . புதுப்புது நோய்கள் நிறைந்தன. இயற்கைக்கும் .மண்ணிற்கும் எதிரான மனித இனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் , மனிதனுக்கு எதிராகவே அமைந்தன.
நெகிழி என்னும் அரக்கன்.
வீட்டைச்சுற்றி , வீதியைச் சுற்றி மூலிகைச் செடிகளும் , பூச்செடிகளும் தானாகவே வளர்ந்து வாசம் பரப்பிய காலம் இன்று மறைந்து வருகிறது. அந்த இடத்தை ஒருமுறை பயன்படுத்தித் தூர எறியும் நெகிழிப்பைகள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் இடம்பிடித்து விட்டன. வீட்டு விழாக்களில் , உணவகங்களில் சில்வர் தம்ளர் , வாழை இலை பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. வாழை இலை மாடுகளுக்கு உணவாகவும் ,மண்ணிற்கு உரமாகவும் தன்னையே அர்ப்பணித்து வந்தது. இன்றோ பாலித்தீன் தாள்களை இலைக்கு மாற்றாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
இந்நிலை வளர்ந்து விடக்கூடாதென நம் தமிழக அரசு மண்ணையும் , மக்களையும் காக்கும் விதமாக நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்குத் தடைவிதித்து , அதற்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்த சட்டம் கொண்டு வந்தது. இயற்கைப் பொருட்களான பாக்கு மட்டை , சணல் பொருட்கள் , பனை ஓலையால் செய்த பொருட்கள் , துணிப்பைகள் என நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். கடைக்குப் பொருள் வாங்கச் செல்பவர்களின் கைகள் , பைகளைத் தூக்கின . கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக பேப்பர் பைகள் , துணிப்பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனபது மண்ணிற்கும் , நமக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களில் நெகிழிப்பைகள் தவிர்க்கப்பட்டன. இன்று , மக்களிடம் நெகிழி அரக்கனின் தீமைகள் தெரிவிக்கப்பட்டு , விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு வருகிறது . மக்களின் கைகளில் துணிப்பை உலா வரத்தொடங்கியுள்ளது . நாளடைவில் நெகிழிப் பயன்பாடு முழுமையும் தவிர்க்கும் சூழல் உருவாகலாம்.
மாற்றம் நம்மிடமிருந்து ...
சுற்றுச்சூழலைக் காக்கக் கொண்டாடப்படும் பல்வேறு தினங்களுள் முதன்மையானது ஜூன் - 5 , உலகச் சுற்றுச்சூழல் நாள். இந்த நாளில் அரசும் , பல்வேறு தொண்டு நிறுவனங்களும் , தன்னார்வலர்களும் மண்ணின் வளத்தைக் காக்க மரக்கன்றுகளை நட்டுவைத்து , பராமரித்து வருகின்றனர். வீட்டு விழாக்களிலும் , சமூக நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளை அன்பளிப்பாகத் தந்து மரம் வளர்த்தலின் அவசியத்தை உணர்த்தி வருகிறார்கள். பள்ளிகளும் , கல்லூரிகளும் மாணவர்கள் மூலமாக ' பார்க்கும் இடமெங்கும் பசுமை ' என்ற நிலையை உருவாக்கி வருகின்றார்கள் . இந்த மண்ணில் நாம் வாழ்வதற்கும் , வாழ்ந்ததற்கும் அடையாளமாக ஆளுக்கொரு மரத்தை நட்டுவைத்துச் செல்வோம் ! வருங்கால நம் தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டியது சொத்தும் , அதன் சுகமும் அல்ல. நல்ல காற்றும் , நல்ல நீரும் , நஞ்சில்லாத மண்ணும்தான் நாம் நம் தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டிய சொத்துகள் . இவற்றைத் தந்தால் போதும். அவர்கள் தன்னையும் , இம்மண்ணையும் கண்ணைப் போல் காப்பார்கள். ' மண் வளமே மனித வளம் ! இதைப் புரிந்து கொண்டால் நாடும் வளம் ! நாமும் நலம் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
அரசு.ஆ.தி.ந.மேல்நிலைப்பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
************************* *****************
பெண் எனும் பெரும் சக்தி
மார்ச் - 8 , சர்வதேச மகளிர் தினவிழா சிறப்புக் கட்டுரை .
மு.மகேந்திர பாபு . தமிழாசிரியர் , மதுரை.
' பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா !
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா ! என்றான் எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி.
' பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன் ' - என்று பெண்ணுக்கு அறிவின் உச்சநிலையான ஞானத்தையே இறைவன் தந்தான் என்றும் பாடினான்.
' பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்று சொன்ன பாரதியின் பாடல்வரிகள் இன்று நனவாகி வருகின்றன. ஆம் ! பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் , பெண்கள் நாட்டின் கண்களாக விளங்கி வருகிறார்கள்.
' மங்கையராய்ப் பிறப்பதற்கே நல் மாதவம் செய்திட வேண்டுமம்மா '! என்றார் கவிமணி. கவிமணி போற்றிய கண்மணியாக பெண்மணிகள் இன்று மணிமணியாய்ச் ஜொலித்து வருகின்றார்கள்.
இல்லத்தரசி முதல் இந்திய ஆட்சிப் பணியாளர் வரை எழுச்சியும் , நெகிழ்ச்சியும் கொண்டு சாதனை மகளிராய் பல சோதனைகளையும் , வேதனைகளையும் கடந்து , சரித்திரத்தில் இடம் பிடித்தும் , தடம் பதித்தும் வருகிறார்கள்.
வகுப்பறையில் பாடம் படிப்பதிலும் பெண்கள்தான் முதலிடம். வரலாற்றில் இடம் பிடிப்பதிலும் பெண்கள்தான் முதலிடம்.
சங்கப் பெண்கள் முதல் இன்றைய சிங்கப்பெண்கள் வரை பெண்கள் சாதித்த சாதனைகள் எத்தனை ? எத்தனை ?
அறிவுலகம் போற்றும் ஆத்திசூடி தந்த ஔவை முதல் ' மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் ' என பக்திப் பரசவமடையச் செய்த ஆண்டாள் வரை படைப்புலகத்தில் முத்திரை பதித்த பெண்கள் எத்தனை ? எத்தனை ?
அரசியலில் அன்னை இந்திரா முதல் திண்டுக்கல் பாலபாரதி வரை இன்றும் ஆக்ரமித்திருக்கும் பெண்கள் எத்தனை ? எத்தனை ?
மனநலம் காக்கும் ஆசிரியப்பணியிலும் , உடல் நலம் காக்கும் மருத்துவப் பணியிலும் மகத்தான சாதனைகள் புரிந்த பெண்கள் எத்தனை ? எத்தனை ?
மதுரையில் முதல் பட்டதாரிப் பெண் எனப்பெருமை பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் முதல் இன்று கல்வியில் புரட்சி செய்து வருகின்ற பெண்கள் எத்தனை ? எத்தனை பேர் ?
தாயாய் , தாரமாய் , மகளாய் , சகோதரியாய் , தோழியாய் பல அவதாரம் எடுத்து நம் வாழ்வாதாரத்தை வளப்படுத்துபவள் பெண்தானே !
அதனால்தானே பட்டுக்கோட்டை ,
' மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ! அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே ! என்று பாடினார்.
பெண்களுக்கு மட்டும்தான் இன்றைய நிலையை மட்டுமல்ல ... எதிர்கால நிலையையும் கணித்து , கவனித்து வாழ்க்கையை நடத்தக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால்தான் ' பெண் புத்தி பின் புத்தி ' என்றார்கள். இதன் உண்மைப் பொருள் , பெண்தான் பின்னால் வருவனவற்றையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுத்தும் ஆற்றல் உடையவள் என்பதாகும்.
வீட்டில் விளக்கேற்றவும் , நாட்டில் முன்னேற்றம் காட்டவும் , பாட்டில் மனம் ஈர்க்கவும் செய்பவர்கள் என்றும் பெண்களே !
அதனால்தான் அன்றே உடலில் பாதியைத் தந்தான் ஈசன். இன்று உள்ளத்திலும், இல்லத்திலும் பெண்களைப் போற்றுபவர்களே நேசன்.
பெண் எனும் பெரும்சக்தியைக் கொண்டே இப்பூமிப்பந்து சுழல்கிறது.பெண்களைப் போற்றும் வீடும் , நாடும் நலமாகும் ! வளமாகும் ! பைந்தமிழ் தொலைக்காட்சி வாழ்த்துகிறது. வணங்குகிறது. நன்றி பாராட்டுகிறது.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை .
97861 41410
**************** ************************
வில்லுப்பாட்டு - மதுரையின் சிறப்பு
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினிலெ பாட - ஆமா
வில்லினில் பாட
வந்தருள்வாய் கலைமகளே
கலை மகளே !
அனைவருக்கும் அன்பு வணக்கம். இன்னிக்கு வில்லிசையில பாக்கப் போறது என்னன்னா
என்னன்னா
நம்ம மதுர மாநகரத்தின் பெருமைகளைப் பத்தித்தான்.
மதுரையின் பெருமை ஒன்னா ? ரெண்டா ? எத்தன எத்தன இருக்கு தெரியுமா ? அதையெல்லாம் சொன்னா நேரம் போதுமா ?
போதாதே !
அதனால ஒரு சில பெருமைகளப் பத்தி மட்டும் சொல்றோம் . கேளுங்க
( பாடல் )
நாலு பக்கம் மலையாலே சூழ்ந்து நிற்கும்
நாலு பக்கம் கல்விக்கூடம் உயர்ந்து நிற்கும்
நம்மைப் போல நட்புக்கூட்டம்
நன்கு கற்கும் !
நாடு போற்றும் நல்லவரா உயர்ந்து நிற்கும் !
ஆமா ! ஆமா ! மலைகளாலும் கலைகளாலும் சூழப்பட்டதுதானே நம்ம மதுர.
மதுரன்னா நம்ம நினைவுக்கு என்னவெல்லாம் நினைவுக்குவரும் ?
மதுரனா சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த ஊரு
மதுரன்னா மனம் மயக்கும் மல்லி
மதுரனா - வைகை ஆறு
மதுரனா - மீனாட்சியம்மன் கோவிலு
மதுரன்னா- சித்திரைத் திருவிழா
மதுரனா - தெற்குவாசல் சர்ச்
மதுரனா - கோரிப்பாளையம் மசூதி
மதுரனா - காந்தி மியூசியம்
மதுரனா - அழகர் மலை , தெப்பக்குளம்
மதுரனா - திருப்பரங்குன்றம் , யானை மலை , நாக மலை , பசுமலை , மகால்
மதுரனா - கல்விக்கண் திறந்த காமராசர் பெயரில் உள்ள பல்கலைக் கழகம்
மதுரனா - மீனாட்சி கல்லூரி
மதுரனா - அமெரிக்கன் கல்லூரி
மதுரனா - தியாகராசர் கல்லூரி , வக்ப்போர்டு கல்லூரி அப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.
போகலாம் போகலாம். இதுல ஒன்ன விட்டுட்டோமே ?
அப்படியா ? அது என்ன ?
மத்தியான வெயிலு மண்டயப் பொளக்கும் போது இதைக்குடிச்சா எப்படி குளிர்ச்சியா இருக்கும் ?
ஓ ! ஆமா ஆமா ! மதுர ஜிகர்தண்டா
( பாடல் )
தமிழகத்தின் பெருமையே நம்ம மதுர தான்டா !
தலையைச் சுத்தும் வெயிலுக்கு இதமான ஜிகருதண்டா !
இதுபோல குளிர்பானம் எங்கும் உண்டா ?
சொல்லுங்கய்யா உங்க ஊர்ல நீங்க கண்டா !
ஆமா ! ஆமா ! மதுரையின் மகத்தான அடையாளங்களில் ஒன்னு நம்ம ஜிகர்தண்டா ! இது மத்த ஊர்ல கிடையாதே !
ஆமா ! இப்படி மதுரயின் பெருமைகள் எத்தனையோ இருக்குதுங்க.
சங்கம் வச்சுத் தமிழ் வளர்த்த நம்ம மதுரயில மாபெரும் உலகத் தமிழ்ச்சங்கம் ஒன்னு இருக்கு. அதன் முகப்புல வான்புகழ் வள்ளுவன் சிலையும் இருக்கு. அதுமட்டுமில்ல. நம்ம கீழடி அகழாய்வுப் பொருள்கள் எல்லாம் காட்சிக்கூடமாகவும் இங்க இருக்கு.
ஓ ! அப்படியா ? அருமை அருமை.
அது பக்கத்தில இருக்கற அரண்மனையையும் சொல்லனும் .
அப்படியா ? அது என்ன அரண்மனை ?
அதுவா ? நம்ம தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பெயரைத் தாங்கி இருக்குதே !
ஓ ! நம்ம காந்தி மியுசியமா?
ஆமா ! இப்ப காந்தி நினைவு அருங்காட்சியகமா இருக்குற இந்த கட்டடம்தான் நம்ம இராணி மங்கம்மா இருந்த கட்டிடடம். 300 வருசம் தாண்டியும் இன்றும் நம்ம மதுரயின் பெருமையைச் சொல்லுது.
ஓ அப்படியா ?
ஆமா ! இங்கதான் இராணி மங்கம்மா யானைச்சண்டைய அமர்ந்து பாப்பாங்களாம்.
ஓ! அப்படியா ? அருமை அருமை.
நம்ம தேசத்தந்தை மகாத்மா அவர்கள் மதுரக்கு வரும் முன்ன எப்படி இருந்தார் தெரியுமா ?
எப்படி இருந்தார் ?
கோட் , சூட் போட்டு இருந்தார்.
மதுரக்கி ரயில்ல வரும்போதுதான் நம்ம விவசாய மக்களைப் பாத்து , இனிமே நானும் அரையாடைதான் உடுத்துவேன் எனச்சொல்லி அரையாடைதான் கடைசிவரை உடுத்துனார்.
அப்படியா ?
ஆமா ! ( பாடல் )
கோட்டு சூட்டுப் போட்ட வந்த கோமானையும்
ஒரு குடிமகனா மாத்தியது நம்ம மதுர !
அகிம்சை என்ற அன்பின் ஆயுதத்தை
அடக்குமுறை என்ற வன்மத்தை அடக்கியதும் அண்ணல் காந்திதானே !
ஓ ! மதுரைக்கு எவ்வளவு பெரிய சிறப்பு ?
அது மட்டுமல்ல , நம்ம மதுரயிலதான் வான் புகழ் வள்ளுவரின் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டதுனும் சொல்வாங்க.
அடேயப்பா ! உண்மையிலேயே பெருமைமிக்க ஊருதான் நம்ம மதுரை.
அது மட்டுமல்ல. இராத்திரி 12 மணிக்கு வந்தாலும் சுடச்சுட சாப்பாடு கிடைப்பதும் நம்ம ஊர்லதான். மல்லிகைப்பூ மணத்தப்போலதான் நம்ம மதுரக்காரங்க மனசும்.
அவ்வளவு நல்லவங்க.
இன்னும் எவ்வளவோ அருமையும் பெருமையும் இருக்கு. சொன்னா சொல்லிக்கிட்டே போகலாம். அதனால நம்ம மதுரயின் பெருமையை இத்தோட நிறுத்திக்குவமா ?
சரி சரி ! நண்பர்களே ! மண்மணக்கும் மதுரயைப் பத்தி நாங்க கொஞ்சம்தான் சொன்னோம். இன்னும் எவ்வளவோ பெருமை இருக்கு. அத இன்னொருநாள்ல சொல்றோம்.
தந்தனத்தோம் என்று சொல்லியே ! ( பாடல் )
வில்லினில் பாடினோம் !
மண்மணக்கும் மதுரையை - நல்ல
மனம் நிறைந்த மதுரையை
சொல்லினில் பாடினோம் !
பாசத்திலும் பண்பாட்டிலும்
எங்க மதுர - இது
பாண்டியரின் பேர் சொல்லும் தங்க மதுர !
மலை போல உயர்ந்து நிற்கும் நம்ம மதுர !
மனதார பாடினோமே உங்க உள்ளம் குளிர !
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.
************************** *********
வீடும் மாடும்
சனி , ஞாயிறு வந்தாலே சந்தோசம்தான். பள்ளிக்குப் போவது போலதான் பயணம். கையில் ஒரு மஞ்சப்பை , தண்ணிக்கேன் , ஏதேனும் த்துஒரு கதப்புத்தகம். ஒன்பது மணிக்கெல்லாம் கட்டுத்தரையிலிருந்து மாடுகள அவுத்துருவோம். எங்க ஊர்க்குத் தெக்கே உள்ள சின்னையாரம் வரை மாடு மேய்க்கப் போவோம். ஊரிலிருந்து ரெண்டு , மூனு கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும். ஒரே மேய்ச்சல்தான். அதாவது காலையில பத்திட்டுப்போனா திரும்ப வீடு வந்து சேர மணி நாலர , அஞ்சாகிரும். அங்கனுக்குள்ள இருக்குற கம்மாயில மாட்டுக்குத் தண்ணிகாட்டுவோம். திரும்ப வரும்போது எங்கூர்க்கம்மாயில தண்ணிகாட்டிட்டு , வீட்டுக்கு வந்தா அப்றம் பம்பரம் , கிட்டிக்குச்சி , தவிடுனு ஒரே கும்மரச்சம்தான்.
ஓடையின் இருபக்கமும் பச்சைப் பசேல் என விரிஞ்சிருக்கும் புஞ்சைகள். சோளம் , கம்பு , பாசி , எள்ளு , கேப்ப , குதிரவாலி , சீனியார என அவ்ளோ குளுமையா இருக்கும். ஆடு , மாடுகள உள்ள விடாமல் கரையில கொண்டு போய் தரிசு நிலத்தில் மேயவிட வேண்டும். பெரும்பாலும் பழக்கப்பட்ட பாதை என்பதால் மாடுக அதுக பாட்டுக்குப் போகும்.
டேய் . இங்க நிறைய எலந்தப் பழம் இருக்கு டா ! என லாவகமாகப் பழம் புடுங்கித் தின்னும் சிலர். மாப்ள , கம்மங்கருது நல்ல விளஞ்சிருக்கியா ? ரெண்டப்புடுங்கித் சுட்டுத்தின்பமா ? அப்படியே கேப்பக் கருதும் பாரு , கைய விரிச்சு வச்சிருப்பதைப்போல வா வானு நம்மளக் கூப்புடுது என அதையும் புடுங்கி , சில்லாடைகளையும் , பூமுள்ளையும் போட்டு வாட்டித் தின்பதில் உள்ள ருசி . அடடா ! என்ன ருசி.
பொங்கல்னாலே வீட்டுக்கு வெள்ளையடிச்சு கொஞ்சம் சுத்தமாக இருக்கும். சம்சாரி வீட்ல எப்படியும் ஆடு , மாடு , கோழி , நாய் , பூனைனு ஒரு பட்டாளமே இருக்கும். மாட்டுப்பொங்கலன்னிக்கு குடும்பமே கம்மாயிலதான் கும்மியடிக்கும். நீ கிடேரியக் குளிப்பாட்டு. நீ கன்னுக்குட்டிய குளிப்பாட்டு. நீ காளையக் குளிப்பாட்டு என
என அவ்ளோ சந்தோசம். பீர்க்க குடுக்கையை வச்சு நல்லா தேச்சு , பொட்டு வச்சு அடடா ! நம்ம மாடுகதானானு நினைக்க வைக்கும்.
பொங்கல் வச்சு , அதை எல்லா மாடுகளுக்கும் இலையில் வச்சு அதுக பக்கத்தில இருந்து அத பார்ப்பதே ஒரு சந்தோசம். சில மாடுக தாயாப் புள்ளயா நம்மகிட்ட ஒட்டிரும்.
என்னல வெள்ளையா பாத்துக்கிட்டே இருக்கே என அதன் அருகில் சென்று உட்கார்ந்தால் முட்டி போட்டு படுக்கும். சம்மணம் போட்டு நாம உட்கார்ந்தா தலைய மடியில சாய்க்கும்.
தாடைய வருட வருட அதுக்கு சொகமா இருக்கும். கண்களில் இருந்து கண்ணீர் வரும். எந்திரிக்க எத்தனித்தார் தலையை வச்சு அமுக்கி எந்திரிக்க விடாமல் செய்யும்.
நல்லாருக்குல உன் கத. ஓன் பக்கத்தில உட்காந்து சொரிஞ்சு விடுறதுதான் என் வேலையா ? என எந்திருச்சா அதன் பார்வையில் ஓர் ஏக்கம் இருக்கும்.
ஒரு தடவ , அப்பா ஒரு மாட்டை விலை பேசி வித்துட்டார். மாட்டைப் பிரிய மனமில்லை என்றாலும் அவ்வப்போது உள்ள செலவிற்கு வளக்கும் ஆடு , மாடுகள விக்கத்தானே வேண்டும் .
டேய் , ' கண்ணா , வால்ல ரெண்டு முடிய பிடுங்கி கோழி மடத்துல போடுடா ' என்பார் அப்பா. மாட்டக் கொடுத்தாச்சு. நைட் 12 மணி இருக்கும்.வீட்டுக் கதவ முட்டுற மாதிரி சத்தம். என்னடானு திறந்து பாத்தா , காலைல வித்த மாடு வீடு வந்து சேர்ந்து அம்மானு கத்துது. எங்களுக்கு கண்ணீர் வந்துருச்சு.அது கழுத்தக் கட்டிப்பிடிச்சு என்னடா வெள்ளப் பயலே வீட்டுக்கு வந்துட்டயா என கேட்க மாட்டுக் கண்ணுல இருந்து கண்ணீர் வடியுது.
விடிஞ்சாப் பிறகு மாட்ட வாங்குனவரு வந்து , அண்ணாச்சி மாட்டக் காங்கல.இங்க ஏதும் வந்துச்சா ன்னாரு.
' மாடு இராத்திரியே வந்திருச்சு. இந்தாரும் நீரு கொடுத்த பணத்தோட நூறு ரூவா சேத்து வச்சிக்கோரும். மாடு வீட்லயே இருக்கட்டும். போயிட்டு வாரும்' என்றார் அப்பா.
அண்ணாச்சி , மாடு ...
இப்ப கொடுக்கறாப்ல இல்ல. சடச்சுக்கிராதிரும். அப்றம் பாப்போம் என்றார் அப்பா. அவரும் வருத்தத்தோட கிளம்பிப்போனார்.
யோவ் , மோரு குடிச்சிட்டுப் போரும். நல்ல வெயிலுல வந்திருக்கீரு.
சரிங்க அண்ணாச்சி.
மருத நிலத்தில் மாடுகள் தொப்புள் கொடி உறவானவை. மாடுகள் இன்றி மக்கள் இல்லை. பாலும் , தயிரும் , மோரும் , நெய்யும் தந்து சம்சாரியை பசுக்கள் சந்தோசப்படுத்துகின்றன. உழவுத்தொழிலுக்கு காளைகள் தோள் கொடுக்கின்றன. கோயில் இல்லாத ஊர் எப்படியோ அப்படித்தான் மாடு இல்லாத வீடும் கிராமத்தில்.
மு.மகேந்திர பாபு.
************************* *************
நிகழ்நிலை வகுப்புகள் வரமா ? சாபமா ?
அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்றை ய பட்டிமன்றத் தலைப்பு நிகழ்நிலை வகுப்புகள் வரமா ? சாபமா ? இதில் சாபமே ! என்ற தலைப்பில் எனது கருத்துகளை இங்கே முன்வைக்கின்றேன்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கத்திற்கே என்றாலும் அதனால் ஏற்படும் அழிவுகளையும் நாம் உற்றுநோக்க வேண்டும். நிகழ்நிலை வகுப்புகளால் நாற்பது சதவீதம் நன்மை எனறால் 60 % தீமையே உள்ளது. இந்தப் பட்டிமன்றமே நிகழ்நிலை வகுப்பில்தான் நடக்கிறது என்றாலும் , நிகழ்நிலை வகுப்புகளால் கிடைக்கும் சாபங்கள் இதோ .
1 ) வகுப்பு தொடங்கும் போதே சரியான சிக்னல் இல்லையென்றால் அந்த நாள் முழுதும் சிக்கல்தான் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்.
2 ) தொடர்ந்து அதிக நேரம் திறன்பேசியிலோ , கணினியிலோ பாடங்களைப் பார்க்குமு போது கண்களும் , உடலும் சோர்ந்து விடுகின்றன.
3 ) இதனால் கண்கள் பாதிக்கப்பட்டுப் பள்ளிப்பருவத்திலே கண்ணாடி போடும் சூழல் உருவாகிறது.
4 ) சந்தேகங்களை வகுப்பறையைப் போல திருப்தியாக கேட்டு சரிசெய்ய இயலவில்லை. இதனால் 100 % கற்றல் - கற்பித்தல் நிகழ்வது நிகழ்நிலை வகுப்பில் சாத்தியமில்லா சூழல் உருவாகிறது
5 ) ஆசிரியரின் நேரடிப் பார்வையில் வகுப்பு இல்லாததால் மாணவர்கள் கவனக்குறைவுடன் இருக்கிறார்கள். இதனால் ஆர்வமின்மை உருவாகிறது.
6 ) தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்களிடையே ஆர்வமின்மை உருவாகிறது.10 % மாணவர்களே ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். பலர் இணைப்பில் இருந்தாலும் மனதளவில் பாடத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள்.
7 ) வீட்டுப் பாடங்களைச் செய்து அனுப்புவதிலும் , அதை மதிப்பீடு செய்வதிலும் மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் நிறைய இடர்ப்பாடுகள் இருக்கின்றன.
8 ) கோவிலுக்குச்சென்று இறைவனை தொழுவதைப் போன்றது நேரடி வகுப்புகள். புகைப்படத்தைப பார்த்து வணங்குவதைப் போன்றது நிகழ்நிலை வகுப்புகள். ஆம் ! நாங்கள் எங்கள் கல்விக் கடவுள்களாம் ஆசிரியர்களை நேரடியாகவே வணங்கி கல்வி கற்கவே விரும்புகிறோம்.
எனவே , நிகழ்நிலை வகுப்புகளால் வரம் குறைவு. சாபம் நிறைய. அதனால் நிகழ்நிலை வகுப்புகள் சாபமே ! மாணவர்களாகிய நாங்கள் பாவமே ! என்று கூறி என் உரையை நிறைவு செய்கின்றேன் . நன்றி. வணக்கம்.
************************* * ************
பசுமையும் பறவைகளும் - தினமலர் சண்டே ஸ்பெஷல்
' விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போல ' என்றான் மாகவிஞன் பாரதி. இங்கே சிட்டுக்குருவியைச் சுதந்திரத்தின் குறியீடாகச் சொன்னான். ' பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் ' என்றான் கவியரசு கண்ணதாசன். அறிவியல் கண்டுபிடிப்பான விமானம் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக அமைந்தது பறவைதான் . பறவைகளைப் பார்க்கும் போதும் இன்பம். படம் பிடிக்கும் போதும் இன்பம்.
மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. மரங்களும் , பறவைகளும் , விலங்குகளும் இயற்கை தந்த அற்புதக் கொடைகள். நமது வாழ்க்கைப் பயணத்தில் பறவைகளும் , விலங்குகளும் நம்முடன் பயணித்து வருகின்றன. இன்றைய அவசர உலகில் , அறிவியல் உலகில் நாம் அவற்றை இரசிப்பதை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றோம். அதிகாலையில் எழுந்து பறவைகளின் ஒலியைக் கேட்டால் மனதிற்கு இதம் தரும்.
முன்பு ' மரமும் மனிதமும் ' , ' மண்ணே மரமே வணக்கம் ' என இயற்கை தந்த அருட்கொடையான மரங்களைப் பற்றி இரண்டு பாடல் குறுந்தகடுகள் வெளியிட்டு மாணவர்களிடம் இயற்கையைப் பற்றிய ஆர்வத்தை உருவாக்கினோம். மரங்களைப் பாடல்களால் சிறப்பித்த நான் மரங்களைத் தம் வீடாகக் கொண்ட பறவைகளை உற்றுநோக்கத் தொடங்கினேன். பறவைகளைப் பார்க்கப் பார்க்கப் புது உலகத்திற்கு அவை அழைத்துச் சென்றன. பொறுமையைக் கற்றுத் தந்தன. வீட்டைச் சுற்றி விதவிதமான பறவைகள் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தது. விடுமுறை நாட்களில் பறவைகள் உறவானது. 60 ற்கும்மேற்பட்ட வகையான பறவைகள் நம் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் , மலைகளில் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். சிட்டுக்குருவி , குயில் , மயில் , கிளி , ஆந்தை , காடை , கௌதாரி , கதிர்க்குருவி , வேதிவால் குருவி , கொண்டலாத்தி , மீன்கொத்தி , வெண்மார்பு மீன்கொத்தி , நத்தை கொத்தி நாரை , வைரி , தேன் பருந்து , வெள்ளைக்கண் வைரி , குக்குறுவான் , மாங்குயில் , செம்போத்து , கொம்பன் ஆந்தை , தூக்கணாங் குருவி எனப் பலவகைப் பறவைகளைப் படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காத்திருந்து புகைப்படக் கருவியில் படம் பிடிக்கும் போது பொறுமையைப் பறவைகள் கற்றுத் தந்தன.
பறவைகளைப் படம் பிடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் ஆசிரியர் சண்முகராஜா , நாதன் சாமுவேல் ராஜா , பறவை ஆய்வாளர் ரவீந்திரன் , நண்பர்கள் முத்துச்சாமி , சபரி கிருஷ்ணா , அஜித் , தமிழ்ச்செல்வன் , கலைச்செல்வன் ஆகியோருக்கு நன்றி. இந்தப் பூமிப் பந்தின் பொக்கிஷமாய்த் திகழும் பறவைகளை நேசிப்போம்.ட கோடையில் நம் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்போம். இயற்கையை நேசித்து , இன்பமாய் வாழ்வோம் !
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , அரசு ஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
*************
வில்லுப்பாட்டு - நெகிழிப் பயன்பாடு தவிர்த்தல்
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமா ! வில்லினில் பாட
வந்தருள்வாய் கலை மகளே !
கல்விக் கடவுளாம் கலைமகளைக் கரம் குவித்து வணங்கி , நம் முன்னே அமர்ந்திருக்கும் அத்துணை சான்றோர்களுக்கும் நம் பள்ளியின் சார்பில் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியைப் போல இதோ இரண்டாண்டுகள் பொது முடக்கத்திற்குப் பின்பு எல்லையில்லா மகிழ்வோடு எல்லாரும் நம் புத்தகத் திருவிழாவில் ஒன்று கூடியுள்ளோம்.
ஆமாண்ணே ! மதுரையில் ஆரவாரம் சித்திரைத் திருவிழா என்றால் , நம் சிவகங்கையில் அறிவுக்கு அஸ்திவாரம் இப்போ நடக்கும் புத்தகத் திருவிழாதான்.
ஆமா பா ! நல்லா சொன்ன . அதனால் நம் முன்னோர்கள் ' புத்தகங்கள் பொக்கிஷங்கள் ' என்று சொன்னார்கள் . ' ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் ' என்றும் சொன்னார்கள்.
அருமையாகச் சொன்னீர்கள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் அது நம் உள்ளத்தில் நல்ல உணர்வுகளைப் புரட்டுகிறது . சிந்தனையைத் திரட்டுகிறது.
ஆமா ! அதனாலதான் கோவில் திருவிழா போல இந்தப் புத்தகத் திருவிழாவிற்குக் குடும்பம் குடும்பமாக நம் நண்பர்கள் வர்ராங்க.
புத்தகத்திற்கு இன்னொரு அருமையான பெயர் இருக்கு தெரியுமா ?
அப்படியா ? அது என்ன பேரு ? சொல்லுங்க கேட்போம் .
சொல்றேன் தம்பி . நல்லா கேளுங்க. புத்தகத்திற்கு ' நூல் ' னு ஒரு பெயர் இருக்கு. அதாவது நூலாடை . ஆடை ஒருவரது மானத்தைக் காப்பது போல , நூல் அதாவது புத்தகம் நம் மனதைக் காக்கும்.
ஆகா ! அருமையாகச் சொன்னிங்க. இந்த இனிமையான நாள்ல எதைப்பத்தி நம்ம குழு வில்லிசையில பாடலைத் தரப்போகுதுனு சொல்லுங்க அண்ணே !
நிச்சயமாக ! இன்றைய அறிவியல் உலகத்தில் , நவநாகரிக உலகத்தில் , உலகம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது ? இயற்கை எப்படி இருக்கிறது ? அப்படினு ...
அண்ணே ! அது என்னண்ணே ! இயற்கைனு சொல்றிங்களே ! எனக்கு இரண்டு கை இருக்கு. அது என்ன இயற் கை ?
************
வில்லலுப்பாட்டு - நெகிழிப் பயன்பாடு தவிர்த்தல்
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட
ஆமா ! வில்லினில் பாட
வந்தருள்வாய் கலை மகளே !
கல்விக் கடவுளாம் கலைமகளைக் கரம் குவித்து வணங்கி , நம் முன்னே அமர்ந்திருக்கும் அத்துணை சான்றோர்களுக்கும் நம் பள்ளியின் சார்பில் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிறகு விரிக்கும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியைப் போல இதோ இரண்டாண்டுகள் பொது முடக்கத்திற்குப் பின்பு எல்லையில்லா மகிழ்வோடு எல்லாரும் நம் புத்தகத் திருவிழாவில் ஒன்று கூடியுள்ளோம்.
ஆமாண்ணே ! மதுரையில் ஆரவாரம் சித்திரைத் திருவிழா என்றால் , நம் சிவகங்கையில் அறிவுக்கு அஸ்திவாரம் இப்போ நடக்கும் புத்தகத் திருவிழாதான்.
ஆமா பா ! நல்லா சொன்ன . அதனால் நம் முன்னோர்கள் ' புத்தகங்கள் பொக்கிஷங்கள் ' என்று சொன்னார்கள் . ' ஏடுகள் வாங்கின் கேடுகள் நீங்கும் ' என்றும் சொன்னார்கள்.
அருமையாகச் சொன்னீர்கள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும் போதெல்லாம் அது நம் உள்ளத்தில் நல்ல உணர்வுகளைப் புரட்டுகிறது . சிந்தனையைத் திரட்டுகிறது.
ஆமா ! அதனாலதான் கோவில் திருவிழா போல இந்தப் புத்தகத் திருவிழாவிற்குக் குடும்பம் குடும்பமாக நம் நண்பர்கள் வர்ராங்க.
புத்தகத்திற்கு இன்னொரு அருமையான பெயர் இருக்கு தெரியுமா ?
அப்படியா ? அது என்ன பேரு ? சொல்லுங்க கேட்போம் .
சொல்றேன் தம்பி . நல்லா கேளுங்க. புத்தகத்திற்கு ' நூல் ' னு ஒரு பெயர் இருக்கு. அதாவது நூலாடை . ஆடை ஒருவரது மானத்தைக் காப்பது போல , நூல் அதாவது புத்தகம் நம் மனதைக் காக்கும்.
ஆகா ! அருமையாகச் சொன்னிங்க. இந்த இனிமையான நாள்ல எதைப்பத்தி நம்ம குழு வில்லிசையில பாடலைத் தரப்போகுதுனு சொல்லுங்க அண்ணே !
நிச்சயமாக ! இன்றைய அறிவியல் உலகத்தில் , நவநாகரிக உலகத்தில் , உலகம் எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது ? இயற்கை எப்படி இருக்கிறது ? அப்படினு ...
அண்ணே ! அது என்னண்ணே ! இயற்கைனு சொல்றிங்களே ! எனக்கு இரண்டு கை இருக்கு. அது என்ன இயற் கை ?
அதுவா ? பாடுறேன் கேட்டுக்கோ ...
ஆதி மனுசன் வாழ்ந்ததெல்லாம் காட்டுக்குள்ளதான் !
அவன் தங்குனது பெரிய பெரிய மரப்பொந்து வீட்டுக்குள்ளதான் !
இலைதழைதான் ஆடையாக அன்று இருந்தது !
பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாச் சுற்றித் திரிந்தது !
மரமும் செடியும் மலையும் ஆறும் இயற்கை தந்தது !
மனுசன் இதில் நுழைந்த பின்தான் துன்பம் வந்தது !
இப்போ துன்பம் வந்தது.
அண்ணே ! அண்ணே ! என்னண்ணே ! துன்பம் வந்ததுனு சொல்றிங்க ? கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க.
அதுவா ? அந்தக் காலத்து மனுசங்க எல்லாம் இயற்கையோடு அதாவது காடு , மேடுல வாழ்ந்தாங்க. கிடைத்தது உண்டு , இன்பம் கண்டு இருந்தாங்க. நவநாகரீக காலமான இன்று நம்ம மனுச இனம் அறிவியல் கண்டுபிடிப்புனு கொஞ்சம் கொஞ்சமா இயற்கையை மறந்து செயற்கைக்குள்ள சிக்கிக்கிட்டு திண்டாடிக்கிட்டு இருக்கு.
என்னண்ணே சொல்றிங்க ? புத்தகத் திருவிழாவுல கொண்டாட்டமா இருக்குற நேரத்தில திண்டாட்டம்னு சொல்றிங்களே !
ஆமா தம்பி. இன்று கொண்டாட்டம்தான். இந்தக் கொண்டாட்டம் தொடர்ந்து இருக்கனும்னா நாம இந்த மண்ணைச் சுத்தமா வச்சிருக்கனும்ல.
ஆமா ! ஆமா ! அதான முக்கியம். மண்ணுதான நம்ம கண்ணு. கண்ணக் கெடுப்போமா நாம ?
கெடுப்போமா நாமனு கேள்விக்கு , கெடுத்துக்கிட்டு இருக்கோம் அப்படிங்கிறதுதான் தம்பி கசப்பான உண்மை.
அப்படியா சொல்றிங்க அண்ணே ! எப்படிக் கெடுக்கறம்னு சொல்றிங்க ? கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லுங்களேன்.
சொல்றேன் தம்பி. கேளுங்க. ஒரு இருபது , முப்பது வருசத்திற்கு முன்னாடி , நம்ம வீட்டுக்குச் சொந்தக்காரங்க வந்தா பலகாரம் எதில வாங்கி வருவாங்க ?
எதில வாங்கி வருவாங்க ?
என்னடா எதிர்கேள்வி கேட்குற ?
என்னண்ணே நீங்க ? இருபது வருசத்துக்கு முன்ன நடந்தது என்னன்னு எனக்குத் தெரியாதே ! அதான் எதிர் கேள்வி கேட்டேன்.
அதுவும் சரிதான். அப்பல்லாம் நம்ம சொந்தக் காரங்க வீட்டுக்கு வரும்போது தின்பண்டங்களை எதில் வாங்கி வருவாங்கன்னா ... இதோ பாடுறேன் கேளு
இயற்கை தந்த கொடை தானே பனை மரம் !
நம்ம தமிழகத்து மக்களின்
மாநில மரம் !
ஓலை முதல் வேர் வரை மண்ணைக் காத்திடும் !
ஓங்கி வளர்ந்து ஊருக்கெல்லாம் பசியைப் போக்கிடும் !
உன்னதமான அந்தப் பனைமரம் நமக்குத் தந்தது அதன் ஓலை . அந்த ஓலையிலதான் அன்று கொட்டான் முடைவாங்க. அந்தக் கொட்டான்லதான் இருபது , முப்பது வருசத்துக்கு முன்பு தின்பண்டம் வாங்கி வருவாங்க . சொந்தக் காரங்களுக்குத் தருவாங்க.
அப்படியா அண்ணே !
அது மட்டுமில்ல தம்பி . ஓலக்கொட்டான்ல வைக்கப்பட்ட பண்டங்களும் சுவையா மொறுமொறுனு இருக்கும் .
அப்படியாண்ணே !
அது மட்டுமில்ல தம்பி. தின்பண்டம் காலியானதும் அந்தக்கொட்டான கடைக்குப் பொருள் வாங்கவும் , விவசாயத்திற்கு விதைப்பெட்டியாகவும் , கொஞ்ச நாளாகி அது சேதமானா அதையே அடுப்பு எரிக்கவும் பயன்படுத்துவாங்க. மண்ணுக்கு எந்தக் கெடுதலும் இல்ல.
ஆகா ! அருமை அருமை அண்ணா. மண்ணில் உருவான பொருள் மண்ணோடு மண்ணா , மண்ணுக்கே உரமாப் போச்சுனு சொல்லுங்க .
அருமை. சரியாச் சொன்னபா. தமிழ்ப்புத்தாண்டுக்கு உங்க வீட்டுக்கு சொந்தக் காரங்க யாரு வந்தாங்க ?
எங்க மாமா வந்தாங்க . எனக்கு நிறையப் பொருள் வாங்கி வந்தாங்களே !
அப்படியா ? என்னல்லாம் வாங்கி வந்தாரு ?
தின்பண்டம் , துணிகள் , விளையாட்டுப் பொருட்கள் னு நிறைய பாலித்தின் பையில வாங்கி வந்தாரு.
எதுல வாங்கி வந்தாரு ?
பாலிதீன் பையில.
இந்தப் பாலித்தீன் பைதான் பா இன்று நம் மண்ணையும் , மக்களையும் கெடுக்குது.
என்னண்ணே சொல்றிங்க ? மண்ணையும் மக்களையும் கெடுக்குதா ? எப்படி ?
விளக்கமாச் சொல்றேன் கேட்டுக்கோ. முன்பெல்லாம் கடைக்குப் போனா மஞ்சப்பைய எடுத்துக்கிட்டுப் போவோம். பொருள அதுலதான் வாங்குவோம். இப்ப அஞ்சு ரூவாய்க்கு கருவேப்பில , மல்லித்தழ வாங்குனாலும் அதை வைக்க ஒரு பாலித்தின் பை கேட்குறோம். அதனால இப்ப என்னாச்சு தெரியுமா?
என்னண்ணே ஆச்சு ?
இப்படி நாம வீட்டுக்குக் கொண்டு போற பாலித்தீன் பைகள் அதிகபட்சம் அஞ்சு நிமிசம் நம்ம வீட்ல இருக்கும். பிறகு தூக்கி குப்பையில போட்டுவிடுவோம். அல்லது கழிவு நீர் போகும் வாய்க்காலில் போட்டுவிடுவோம். இப்படியே போட்டுப்போட்டு இந்தக் குப்பைகளே மலையளவு உருவாகிவிட்டது. மணற்குவியல் , நெற்குவியல் போல பாலித்தின் பை குவியல் வந்துவிட்டது.
உண்மைதான் அண்ணே ! எங்க ஊர்லயும் குவியல் குவியலா இருக்கு.
இந்தப் பாலித்தின் பைகள் மண்ணில் இருக்கும் வளத்தையும் குறைத்துவிடும். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கவும் செய்யாது. இலை , தழைகளைச் சாப்பிட்ட மாடுகள் இன்று பாலித்தின் பைகளைத் தின்று இறந்தும் போயிருக்கின்றன.
அடடா ! இவ்வளவு தீமைகள் இருக்கின்றனவா இந்த நெகிழிப் பைக்குள் ? நெகிழிப் பயன்பாடை முற்றிலும் ஒழிக்க முடியாதா அண்ணே ?
மக்களாகிய நாம் மனசு வைத்தால் எல்லாம் முடியும்.
முன்பெல்லாம் வீட்டில் சுபகாரியங்கள் என்றால் வாழை இலைச்சாப்பாடு போட்டோம். உணவகங்களில் வாழை இலை பயன்படுத்தினார்கள். தண்ணீர் டம்ளர் பயன்படுத்தினோம். இப்போ , பாலித்தின் பைகளும் , நெகிழி தண்ணீர் பாட்டில்களையும் பயன்படுத்துகிறோம். இதைத் தவிரத்தால் மண் நன்றாக இருக்குமே !
சரியாகச் சொன்னிங்க ஐயா.
ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில் 20 ஆண்டுகளுக்கு முன்பே உணவகங்களில் தூக்குவாளி அல்லது பாத்திரங்கள் கொண்டுவந்தால்தான் உணவுப் பொருட்கள் தந்தார்கள். இதனால் பாலித்தின் பைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டது.
அருமையான யோசனை அண்ணா. இனிமேல் கடைக்கோ , உணவகத்திற்கோ சென்றால் மஞ்சள் பையும் , பாத்திரங்களையும் எடுத்துச்செல்வேன்.
நன்றாகச்சொன்னாய் தம்பி. மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். அது நம்மை ஏற்றத்திற்கு அழைத்துச் செல்லும். நமது அரசாங்கம் ' மீண்டும் மஞ்சப்பை ' என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.மஞ்சப்பை தூக்குவது நமக்குப் பெருமை என்று நாம் நினைக்க வேண்டும் தம்பி.
ஆம் அண்ணா. இன்று இங்கு கூட நிறைய புத்தக விற்பனையாளர்கள் தங்கள் பதிப்பகத்தின் பெயரைப்போட்டு துணிப்பைகளில் நாம் வாங்கும் புத்தகம் தருகிறார்கள். நல்ல முயற்சி இது.
ஆமா தம்பி. நெகிழிப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க முயல்வோம். கூடுமானவரை தனி மனிதர் ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து , மஞ்சள் தூக்கினாலே இந்ம மண் மங்களகரமாக இருக்கும்.
நெகிழிப்பைகளைக் குவித்து தீயிட்டு கொளுத்தும் போது அதில் இருந்து வரும் நச்சுக்காற்று நம் உடம்பிற்குத் தீங்கு தரும். வாழும்போதே நாம் நோயுடன் வாழ வேண்டுமா ?
வேணாம்ணே ! வேணாம்ணே ! வாழும்வரை இம்மணைப் பசுமையாக ஆள்வோம். ஆளுக்கொரு மரம் வைத்து மண்வளம் காப்போம் ! மக்கள் நலம் காப்போம் !
நிம்மதியான வாழ்விற்கு நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்ப்போம் !
துணிப்பையைத் தூக்குவோம் !
நெகிழிப்பையை நீக்குவோம் !
ஆக்கம்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
***********
உழவுத்தொழில்
" உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் " என்றார் மகாகவி பாரதி. " உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் " என்றார் வான் புகழ் வள்ளுவர். உழவுத்தொழிலே உன்னதத் தொழில். உண்டி கொடுப்போர் உயிர் கொடுப்போர் என்கிறது தமிழ் இலக்கியம். அத்தகைய உயிர்த்தொழிலாம் பயிர்த்தொழில் பற்றி உங்களிடையே உரையாற்ற வந்துள்ளேன்.
என் போன்ற குழந்தைகளுக்கு இன்று விவசாயம் என்ற சொல்லே புதிய சொல்லாகப் , புதிர்ச்சொல்லாகத் தெரிகிறது. மருத்துவர் , பொறியாளர் , ஆசிரியர் என்றால் மனக்கண் முன் தோன்றுகிற உருவம் விவசாயி என்றால் மனதிலே வருவதில்லை. ஆம் ! இன்றைய என் போன்ற குழந்தைகளுக்கு விவசாயமும் , விவசாயியும் புதியதாகத்தான் தெரிகிறது.
நம்மில் பலர் நெல் மரத்திலிருந்துதான் கிடைக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது எவ்வளவு உண்மை. சேறும் சகதியும் மிதித்து , நிலத்தைச் செம்மைப்படுத்தி , இலைதழைகளை இயற்கை உரமாக்கி , விதை நெல் தூவி , 21 நாட்கழித்து வயலில் நட்டுவைத்துக் , நீர்பாய்ச்சிக் களையெடுத்து , கதிர் அறுத்து , நெல்மணியாக்கி அவை நம் தட்டிலே சோறாக்கி உணவாகும் உன்னதத்தை தருபவர் விவசாயி. ஆம் ! அவர்தான் கடவுள்.
இன்று விளை நிலங்கள் எல்லாம் விலை நிலமாகி வீடுகளாகி வருகின்றன. விவசாயம் செய்வதே இன்று மதிப்புக் குறைவானதோ என்ற எண்ணம் சிலரிடம் உருவாகிவிட்டது. வெயில் படாமல் செய்யும் வேலையை விரும்பத் தொடங்கிவிட்டோம். எல்லாரும் இப்படி நினைத்தால் அன்றாட உணவுப் பொருட்களின் விலை உயர்வதோடு மட்டுமல்லாமல் உணவுப் பற்றாகவகுறையும் ஏற்படும்.
பெரிய பெரிய கடைகளுக்குப் பொருள் வாங்கச் செல்கிறோம். விலைப்பட்டியலில் உள்ள தொகையை மறுப்புச் சொல்லாமல் கொடுத்து வருகிறோம். தெருவில் , சந்தையில் காய்கனிகளை விற்கும் நம் விவசாயச் சொந்தங்களிடம் பேரம் பேசுகிறோம். என்ன மனநிலையில் உள்ளோம் நாம் ?
நண்பர்களே ! ஒன்றைச் சிந்தியுங்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது கிராமத்துச் சொல் வழக்கு . அவர்களிடம் நாம் கணக்குப் பார்க்கலாமா ? அவர்களது வாழ்வாதாரம் நன்றாக இருந்தால் தானே நாம் நன்றாக இருக்க முடியும் ?நம் ஊரில் உள்ள விவசாயிகளிடம் காய்கனிகளை வாங்கி அவர்கள் வாழ்வு நலம் பெற , வளம் பெறச் செய்வோம். நான் விவசாய வீட்டுப் பிள்ளை என்பதை மகிழ்வோடு சொல்லி , ' உழவுத்தொழிழே உயிர்த்தொழில் - அதுவே உயர் தொழில் ' என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன் . நன்றி.
***********
ம.சஹானா - கொரனா விதைத்தது மனிதத்தை
மனிதத்தை மனதில் நிறைத்திருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இரண்டாண்டு கொரனா பெருந்தொற்றுக்குப்பின் இதோ மகிழ்வோடு பள்ளியில் நாம் கூடியிருக்கின்றோம். கூடியது மட்டுமல்ல. மனிதத்தை விதைத்தவர்களைப் பாடியும் , அவர்களைத் தேடியும் நெகிழச் செய்யும் நிகழ்வுதான் இன்றைய பட்டிமன்றம்.
உலகமே இரண்டாண்டுகள் முடங்கிப் போன நிகழ்வு வேறு எப்போதும் நடக்காத நிகழ்வாகும். சீனாவில் தொடங்கி , உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்திலும் , உயிர்ப்பலியிலும் ஆழ்த்தியது இந்தக் கொரனாப் பெருந்தொற்று.
மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வீடே உலகமென உள்ளம் அடங்கியது. பசியும் பட்டினியும் தொடங்கியது. தினக்கூலிகளாக உள்ள மக்கள் கண்கலங்கினர். வசதி படைத்தோர் பசிக்காக வருந்தவில்லை என்றாலும் பணம் ஈட்டுவது பறிபோனதே என நினைத்தனர். ஆம் ! பார்க்கும் இடமெங்கும் மனித ஆரவாரமின்றி சாலைகள் வெறிச்சோடின. பசுஞ்சோலைகள் குழந்தைகள் வருகை இன்றி வாடின.
இத்தகைய சூழலில் தான் மெல்லப் பூத்தது மனித நேயம் என்னும் மகத்தான பூ. மக்களே ! நீங்கள் உங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே இருங்கள். நாங்கள் உங்களுக்கான உணவை , உணவுப் பொருட்களை உங்கள் இல்லத்திற்கே வருகிறோம். வந்து உள்ளத்தில் மகிழ்வைத் தருகிறோம் என வந்தார்கள் மனிதநேயர்கள் .
நல்லுள்ளம் படைத்தவர்கள் கிராமத்தையே தத்தெடுத்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தந்தனர்.
தன் வீடு , தன் குடும்பம் என்ற கடுகு போன்ற மனநிலையில் இருந்து சமுதாயக் கண்ணோட்டம் என்ற கடல் போன்ற மனநிலையில் பலர் சேவை செய்தனர்.
கொரனா பெருந்தொற்றால் பாதிக்கப்ட்டவர்களை மருத்துவர்களும் , செவிலியர்களும் தாயுள்ளத்தோடு அணுகி அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் , மறுபிறப்பையும் தந்தனர் என்றால் கொரனா விதைத்தது மனிதநேயத்தை அல்லவா ?
கொரனா விதைத்தது மனிதத்தை வசதி படைத்தவர்களிடம் மட்டுமல்ல. தன் உயிரைக்காக்க யாசகம் பெறும் ஒரு பிச்சைக்காரர் மன்னிக்கவும் ஒரு மனிதநேயரைப் பற்றி இங்கே நான் சொன்னால் சுயநலம் என்ற அணி நண்பர்களும் எங்கள் அணிக்கே ஆதரவு தருவார்கள் . ஆம் நண்பர்களே !
முத்து நகராம் தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற 70 வயது யாசகர் , சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நம் மதுரை மண்ணில் வாழ்கிறார். அவர் தினந்தோறும் தான் பெறும் யாசகத்தில் தன் உணவிற்காக சிறு பகுதியினை எடுத்துக்கொண்டு , பத்தாயிரம் தொகை சேர்ந்ததும் மாவட்ட ஆட்சியரிடம் கொரனா நிதியாக வழங்கினார். ஒரு முறை இரண்டு முறை அல்ல. இப்படியாக 14 முறை வழங்கினார். நடுவர் அவர்களே ! கொரனா விதைத்தது மனித நேயத்தைத்தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா ?
படிக்கும் மாணவர்கள் தான் சேமித்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை கொரனா நிதியாகத் தந்தார்கள் . மக்கள் நலனே தம் நலன் என மருத்துவர்களும் , செவிலியர்களும் , காவல்துறை நண்பர்களும் , சுகாதாரப் பணியாளர்களும் தம் உயிரைத்தந்து மக்கள் உயிரைக் காத்தார்கள். நடுவர் அவர்களே ! இதை நீங்கள் சுயநலம் என்று சொல்வீர்களா ? மனித நேயம் என்று சொல்வீர்களா ? மனிதம் என்று தானே சொல்வீர்கள். அதைத்தான் நாங்களும் எங்கள் அணி சார்பிலே சொல்கின்றோம்.
கொரனா விதைத்தது மனிதத்தையே ! மனிதத்தையே ! மனிதத்தையே என்று கூறி நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்.
***********
இந்து தமிழ் திசை - வெற்றிக்கொடி நாளிதழுக்கு .
மாணவர்களும் மரங்களும் ( அல்லது ) பள்ளியில் செய்வோம் பசுமைப் புரட்சி.
வகுப்பறையில் மாணவர்களிடம் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு படம் வரைந்து வாருங்கள் என்றேன்.
" என்ன படம் வேண்டுமானாலும் வரையலாமா ஐயா ? " என்றான் ஒரு மாணவன்.
" ஆம் ! உன் மனதில் தோன்றியதை ஓவியமாக்கு " என்றேன்.
சற்று நேரம் கழித்து மாணவர்கள் ஒவ்வொருவராகத் தாங்கள் வரைந்த படங்களைக் கொண்டு வந்தனர். வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்கள் நாற்பது பேரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் இயற்கைக் காட்சிகளையே வரைந்து வந்தனர். ஒரு சிலர் சோட்டா பீம் , மோட்டு பட்லு என கார்ட்டூன் படங்களை வரைந்திருந்தனர்.
படம் வரைந்த அனைவருக்கும் பாராட்டுகள் என்று சொல்லி கரவொலி எழுப்ப , மாணவர்கள் மகிழ்ந்தனர்.
உங்கள் எண்ணத்தில் உள்ளது கைவண்ணமாக , கவின் வண்ணமாக , கலை வண்ணமாக மிகச்சிறப்பாக உள்ளது. உங்கள் அனைவரின் படங்களிலும் ஓர் ஒற்றுமையைக் கண்டேன்.
உயர்ந்த மலைகள், மலைகள் நடுவே சூரியனின் உதயம். ஆற்றில் வெள்ளம். ஆற்றின் முன்பு அழகிய வீடு. வீட்டின் இரண்டு பக்கமும் தென்னை மரங்கள். வானில் பறந்து செல்லும் பறவைகள் என அவர்களின் ஓவியத்தைப் பார்க்கப் பார்க்க இன்பம்.
வீட்டின் அருகே மரங்கள். மரங்கள் மண் தந்த சீதனங்கள் . இன்று மரங்களைப் பற்றிப் பேசுவோமா ? என்றேன்.
இந்த மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள் , கொண்டாட உள்ளவர்கள் யார் ? யார் ? என்றேன். ஒரு சிலர் கை தூக்கினார்கள்.
கை தூக்கிய ஒரு மாணவனிடம் , உன் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவாய் என்றேன். புதுச்சட்டை போடுவேன். அம்மா கேசரி செய்து கொடுப்பார்கள். நண்பர்களுக்கு கடலை மிட்டாய் கொடுப்பேன். அப்புறம் நம்ம பள்ளிக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்றான்.
" அப்படியா ? அது என்ன பரிசு ? "
" என் பிறந்த நாளன்று நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நட உள்ளேன் ஐயா " என்றான்.
மொத்த வகுப்பும் கைதட்டி வரவேற்றது .
பிறந்த நாளில் யாரெல்லாம் மரக்கன்றுகள் உங்கள் வீட்டிலோ , வீதியிலோ நட்டு வைத்து வளர்க்கிறீர்கள் என்றேன்.
ஒரு சில மாணவர்கள் கை தூக்கினார்கள்.பிறந்த நாளின் போது மரக்கன்றுகள் , பூச்செடிகள் , மூலிகைச் செடிகள் வைத்த மாணவர்களுக்கு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் புத்தகம் வழங்கப்படும் என்றேன். கைதட்டல் மீண்டும் ஒலித்தது.
ஐயா , இனி வரும் எங்கள் பிறந்த நாளில் நாங்களும் மரக்கன்று , மூலிகைச் செடிகள் , பூச்செடிகள் நட்டுவைத்து வளர்ப்போம் என்றனர்.
நம் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களைப் பாரக்கலாம் வாருங்கள் என்றேன்.
இந்த வேப்பமரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் நட்டு வைத்தது. இந்தப் புங்கன் மரம் உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று நடப்பட்டது. இந்த வேப்பமரம் நம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த போது நடப்பட்டது. இந்த வாகை மரம் நமது மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களால் நடப்பட்டது. இந்தக் குமிழ் தேக்கு மாணவி ஒருவரின் பிறந்த நாளன்று வைத்தது என்று ஒவ்வொரு மரமும் அது எப்போது நடப்பட்டது ? எதற்காக நடப்பட்டது என்பது பற்றியும் சொன்னேன். இது போல் அம்பேத்கர் பிறந்தநாள் , பாரதியார் பிறந்த நாள் , சுதந்திர தினவிழா , குடியரசு தினவிழா என இந்த விழாக்களை எல்லாம் நினைவு கூறும் விதமாக மரங்கள் வைத்துப் பராமரிக்கப் படுகின்றன என்றேன்.
நம் வகுப்பில் உள்ள உங்கள் அனைவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மரத்தைப் பராமரிக்க வேண்டும். அந்த மரத்திற்கு நீங்களே ஒரு பெயரையும் வைத்துக் கொள்ளலாம். அது தேசத்தலைவர்களின் பெயர்களாகவோ , தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களாகவோ இருக்கலாம் என்றேன்.
மாணவர்கள் தங்கள் மரத்திற்கான பெயர்களை வைக்கத் தொடங்கினார்கள். இன்னும் நான்காண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிப்பார்கள். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். மரங்களும் பெரியதாக வளர்ந்திருக்கும். தம் கரங்களால் மரங்களை அணைத்து மகிழ்வார்கள் . பள்ளி வளாகமும் , அவர்களது வாழ்வும் பசுமையாகவும் , பசுமை நிறைந்த நினைவுகளாகவும் இருக்கும். ஆம் ! மரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கு மனப்பறவை மகிழ்ச்சிச் சிறகு விரிக்கும்.
மு.மகேந்திர பாபு , கட்டுரையாளர் & தமிழாசிரியர் ,
அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர் , மதுரை.
பேச - 97861 41410.
மின்னஞ்சல்
tamilkavibabu@gmail.com
***********
எங்கள் ஊரின் சிறப்பு - தமிழ்நாடு இ பேப்பர் . காம் இதழுக்கு. 13 / 12 /2023
எங்கள் ஊர் மதுரை -
மதுரையின் சிறப்பு.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருக்கலாம். ஆனால் தமிழின் தலைநகரம் தூங்கா நகரமான எங்க மதுரைதான். நான்கு பக்கங்களும் மலைகளாலும் , கலைகளாலும் நம்மைக் கவர்ந்திழுக்கும் எங்க மதுரை. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை. மதுரைனா மல்லி. நம்ம மனங்கவரும் துள்ளி. மதுரையின் சிறப்பு ஒன்றா ? இரண்டா ? எதைச் சொல்ல ? எதைத்தள்ள ? அவற்றுள் இதோ சிலமட்டும்.
பழம்பெருமைமிக்க மதுரை :
எல்லா ஊர் மண்ணிலும் இறைவன் நடந்தான். ஆனால் மதுரை மண்ணில்தான் , மண்ணை இறைவனான சிவன் தன் தலையில் வைத்துச் சுமந்தான். மூவேந்தர்கள் ஆண்ட பண்டைத் தமிழகத்தில் முத்தும் முத்தமிழும் சிறந்து விளங்கியது பாண்டிய நாட்டில்தான். பாரத நாடு பழம்பெரும் நாடு என்பதைப்போல பாண்டிய நாடும் பழம் பெருமை வாய்ந்தது. வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரை தொடரும் பெருமை உடையது. பழம்பெரும் பண்பாட்டு மேன்மையினால் மதுரை நகரம் ' தென்னிந்தியாவின் ஏதென்ஸ் ' என்று போற்றப்படுகிறது. கூடல்நகர் , தூங்கா நகர் , ஆலவாய் , திருவிழாநகர் என , பலபெயர்களால் அழைக்கப்படுகிறது. சங்க இலக்கிய நூல்களான பரிபாடலும் , மதுரைக்காஞ்சியும் மதுரையின் பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.
தமிழ் வளர்த்த மதுரை :
தமிழ் வளர்த்த வைகை நதி. உலகமே வந்து உள்ளம் ஒடுங்கிக் கைகூப்பி வணங்கும் மீனாட்சி அம்மன் கோவில். வான் புகழ் வள்ளுவன் தந்த உலகப் பொதுமறையான திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்டது நம்ம மதுரையில். தன் முன்னே வாதாடுபவன் இறைவன் என்று தெரிந்தும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய நக்கீரன் பிறந்த ஊர் எங்க மதுரை. சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலனும் கண்ணகியும் வந்து வாழ்ந்து , தெய்வமாக மாறியதும் மதுரையில்தான். ஜி.யு.போப் என்கிற கிறித்தவர் உள்ளம் உருகிப் போனது மதுரை திருவாதவூரின் மாணிக்கவாசகர் தந்த திருவாசகத்தில். இவை அந்தக் காலத்திற்கான சிறப்புகள்.
மதுரை மல்லி :
வருவாய்ங்க போவாய்ங்க என்று மதுரைத் தமிழில் பேசும்போது மண்வாசனை மணக்கும். மலர்களிலே மல்லிகைப் பூ நம் மனதை மயக்கும். அத்தகைய சிறப்புமிக்க மதுரை மல்லி உலக அளவில் பெயர்பெற்று புவியியல் குறியீட்டையும் பெற்றுள்ளது. மல்லி என்றாலே அது மதுரை மல்லிதான். நாள்தோறும் 300 கிலோ மதுரை மல்லிகைப்பூ விமானம் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகின்றது.
சித்திரைத் திருவிழா :
சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைக்கும் சித்திரைத் திருவிழா மதுரை விழாக்களில் முத்திரை பதிக்கும் விழா. அழகர் கோவில் , பழமுதிர்ச்சோலை , திருப்பரங்குன்றம் , சிறப்பு மிக்க கிறித்தவ ஆலயம் , மதம் கடந்து துன்பம் நீக்கும் கோரிப்பாளையம் மசூதி , தெப்பக்குளம், பாண்டிகோவில் , கண்களை வியக்கச் செய்யும் கட்டிடக்கலையான திருமலை மன்னரின் மகால் , நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் கம்பீரமாகக் காட்சிதரும் பள்ளிகள் , ஏவி.மேம்பாலம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இவையெல்லாம் மதுரையின் பெருமைதாங்கி நிற்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள்.
இரவிலும் பகல் போல செயல்படும் கடைகள். மதுரைக்கு எந்த நேரம் வந்தாலும் மல்லிகைப்பூ இட்டலியைச் சுவைக்கலாம். மதுரைக்கே சிறப்பான பேமஸ் ஜிகர்தண்டா , பன்புரோட்டா , வாழை இலை பரோட்டா என விருந்தில் பாசத்தைப் பொழிபவன் மதுரைக்காரன்.
மதுரையும் மகாத்மாவும் :
அகிம்சை எனும் ஆயுதத்தைக் கையிலேந்திய நம் தேசப்பிதா காந்தியை மகாத்மாவாக்கியது மதுரை மண்தான். அண்ணல் காந்தியடிகள் மதுரைக்கு 1919 முதல் 1946 வரை ஆறு முறை வருகை தந்துள்ளார். " எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் மேற்கொண்ட மாற்றங்கள் குறித்து பின்னர் நான் வருந்தியது கிடையாது. நான் அவற்றைச் செய்தே ஆகவேண்டியிருந்தது. அத்தகைய பெரும் மாற்றம் ஒன்றினை எனது உடையில் நான் மதுரையில் செய்தேன் "என்று காந்தியடிகள் பதிவு செய்துள்ளார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியில் மேலமாசி வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஆடைமாற்றம் செய்து கொண்டார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது நம் மதுரையில் . 1948 ஜனவரி 30 ல் அண்ணல் சுடப்பட்டு அமரத்துவம் எய்தினார். இந்தியாவில் அமைக்கப்பெற்ற ஏழு காந்தி அருங்காட்சியகங்களுள் முதலாவது அருங்காட்சியகம் மதுரையில்தான் அமைக்கப்பட்டது. தென் இந்தியாவில் உள்ள ஒரே காந்தி நினைவு அருங்காட்சியகும் இதுவே ஆகும். அவர் இறக்கும் தருவாயில் அணிந்திருந்த மேல்துண்டு இரத்தக்கறையுடன் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்தத் தமுக்கம் அருங்காட்சியகம் இராணி மங்கம்மாளின் கோடைகால அரண்மனையாகும். சுதந்திரப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி பிறந்த ஊர் நம் மதுரைஆகும்.
சுவாமி விவேகானந்தர் , அண்ணல் அம்பேத்கர் போன்ற மாமனிதர்களின் பாதம்பட்ட பெருமையும் மதுரைக்கு உண்டு.
கல்வியில் சிறந்த மதுரை :
கல்வி என்ற ஒளிவிளக்கே நமது அறியாமை இருளை அகலச்செய்யும் . அந்த வகையில் சிறப்பு மிக்க பல பள்ளிகள் , கல்லூரிகள் கல்வித்
தொண்டு செய்து வருகின்றன. மதுரை கிழக்கு வட்டத்தில் நூறாண்டைக் கடந்தும் கல்வித்தொண்டு செய்து வருகிறது ம.கி.ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி குன்னத்தூர். மகாகவி பாரதியார் தமிழ்ப்பணி ஆற்றிய பெருமை உடையது சேதுபதி மேல்நிலைப்பள்ளி. மதுரையின் முதல் பெண் பட்டதாரி என்ற பெருமைக்கு உரியவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்கள். இன்றும் அவர் நம்மோடு இருக்கிறார். அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரி , அறிஞர் பலரை உருவாக்கிய தியாகராசர் கல்லூரி , மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி , வக்புவாரியக் கல்லூரி , டோக்பெருமாட்டி கல்லூரி , வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி , மன்னர் கல்லூரி எனப்பல கல்வி நிலையங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன . கல்வி தந்த வள்ளல் பெருந்தகையான பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைத்தாங்கி நாகமலைப் புதுக்கோட்டை அருகில் ' மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ' ஆற்றல்சார் பல்கலைக் கழகமாகச் செயல்பட்டு வருகிறது.
மதுரையும் கைத்தறியும் :
தாள்களால் ஆன நூல் ( புத்தகம் ) நம் மனதைக் காக்கும். நூல்களால் ஆன ஆடை நம் மானம் காக்கும். மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் கைத்தறிகள் உள்ளன. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் சௌராஷ்டரர்களே கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பெண்களைக் கவரும் ஆடையான சுங்கிடிப்புடவை இங்கு தயாரிக்கப்படுகிறது. மதுரை இளமனூர் அருகே உள்ள மீனாட்சிநகரிலும் கைத்தறித்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரையும் கலைஞர்களும் :
கலைகளில் சிறப்புற்று விளங்கும் மதுரை பல்வேறு கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியது. எம்.எஸ்.சுப்புலட்சுமி ( மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி ) மதுரையில் பிறந்து நடிகையாகி , பின்பு அகில உலக பாடகியாகி காற்றினிலே வரும் கீதமாய் மதுரையின் அடையாளமாகத் திகழ்ந்தார். சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில் பிறந்து பதின்மூன்று வயதிலேயே திரைத்துறையில் தடம் பதித்தவர் T.R மகாலிங்கம் . ( தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் ) . நடிகர் , பாடகர் , தயாரிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். திரைத்துறையில் பின்னணிப் பாடகர்களில் முன்னணியில் இருந்தவர் T.M.சௌந்தரராஜன் ( தொகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் ) அவர்கள். ஏழு வயதில் வாய்ப்பாட்டுக் கற்கத் தொடங்கியவர். 74 இசை இயக்குநர்களின் பாடல்களுக்குப் பாடியுள்ளார். தமிழ்நாடு இயல் , இசை , நாடக மன்றத்தின் முதல் தலைவர் . அவரைச் சிறப்பிக்கும் விதமாக அவரது நூற்றாண்டையொட்டி தமிழக அரசு சிலை அமைத்துப் பெருமை சேர்த்துள்ளது. நடிகர் விஜயகாந்த் அவர்களும் மதுரை மண்ணைச் சேர்ந்தவர். ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கம் மதுரை தங்கம் திரையரங்கம். 52 , 000 சதுர அடியில் 2563 நபர்கள் உட்காரக்கூடிய வசதியுடன் இருந்த திரையரங்கம். 1990 ஆம் ஆண்டு திரைப்படக் காட்சியை நிறுத்தியது.இது தற்போது துணிக்கடையாக உள்ளது.
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு :
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு அன்றைய தமிழக முதல்வர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களால் சிறப்பாக 1981 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தமுக்கம் மைதான வளாகங்களில் நடைபெற்றது. 21 நாடுகளைச் சேர்ந்த 754 ஆய்வறிஞர்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். தமிழக அரசின் சார்பில் அவர் பெயரில் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மதுரையின் இ்ன்றைய பெருமை :
தமிழகத்தின் முதல் உழவர் சந்தை மதுரை அண்ணாநகரில் தொடங்கப்பட்டது. முதல் மகளிர் காவல் நிலையம் மதுரை தல்லா குளத்தில் தொடங்கப்பட்டது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் இன்று வானளாவிய உலகத் தமிழ்ச்சங்கக்கூடம். அறிவினை வளர்க்கும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மதுரையின் பெருமையைப் பறைசாற்றுகிறது. மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் கடந்த 33 ஆண்டுகளாக மதுரை நகைச்சுவை மன்றத்தைப் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் நடத்தி வருகிறார். இங்கு பயிற்சி பெற்றுச் சென்றவர்களே சின்னத்திரையில் அசத்தப் போவது யாரு ? கலக்கப் போவது யாரு ? என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பட்டிமன்றம் என்றாலே பேரா.சாலமன் பாப்பையா அவர்கள்தான். அரசியலா ? சினிமாவா ? ஆன்மீகமா ? எது என்றாலும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கப்படுவது மதுரை மண்ணில்தான். தமிழரின் நாகரீகத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் கீழடி அமைந்துள்ளதும் மதுரையிலிருந்து எட்டுக்கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகைக் கரையில்தான்.
வீரத்தின் விளைநிலம் - மதுரை.
அன்பிற்கு மட்டுமல்ல. வீரத்திற்கும் பெயர் பெற்ற ஊர் நம்ம மதுரை. தமிழர் திருநாளாகிய தைத்திருநாளில் அவனியாபுரம் , பாலமேடு , உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் என முத்தமிழ் வளர்ந்த மதுரையில் மூன்று இடங்களில் வீரத்தினை நிலைநாட்டும் ஏறுதழுவுதல் விளையாட்டு . வேளாண்குடி மக்களின் உற்ற துணைவனாக இருந்து வருபவை காளைகள். சல்லிக்கட்டுக் காளைகளோடு மல்லுக்கட்டும் காளையர்கள். வெற்றி பெறும் காளைகளுக்கும் பரிசு , காளையர்களுக்கும் பரிசு. நாட்டிலேயே முதன்முறையாக மதுரை அலங்காநல்லூரில் உலகத்தரத்தில் சல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கிரிக்கெட்டைப்போல உலகமக்களின் பார்வையில் தமிழர்களின் பாரம்பரியமான சல்லிக்கட்டும் இனி நிலையான இடத்தைப்பெறும்.
அன்றும் இன்றும் என்றும் சரித்திரச் சாதனைகள் புரியும் மதுரையின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். படிக்கப் படிக்க மனதிற்கு இதம்.
மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை - 20
செல் - 97861 41410.
**********
பறவைகளிடம் பாடம்
எங்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் கண்மாய் ஒன்று உள்ளது.கண்மாய்க் கரையில் ஆலமரம் ஒன்று கிளைகளாலும் , விழுதுகளாலும் விரிந்து பரந்து , பலவகையான
பறவைகளுக்கு வாடகை பெறாத வீடாக இருக்கிறது. கண்மாய் முழுமையும் நீர் நிரம்பியுள்ளது. புதிதாகப் பறவைகள் ஏதும் வந்துள்ளனவா எனப் பார்ப்போம் என கையில் கேமராவுடன் கரைக்கு நடந்தேன்.அப்போது ஆலமரக் கிளையில் நான் கண்ட காட்சி எனக்கு மகிழ்வையும் , பேரின்பத்தையும் தந்தது.
ஆலமரக் கிளையில் பறக்க முடியாத குஞ்சுக் குயில் ஒன்று இரைக்காகத் தன் வாயைத் திறக்க , அதன் அருகில் மைனா ஒன்று தன் வாயினுள் இருந்த பூச்சி ஒன்றை அதன் தொண்டைப் பகுதிவரை கொண்டுசென்று ஊட்டியது.
" ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் " என்ற பழமொழி என் நினைவிற்கு வந்தது. கருப்பு வெள்ளைப் புள்ளிகளோடு பறக்க முடியாமல் மைனாவிடம் இரை வாங்கிய அந்தப் பெண் குஞ்சுக்குயில் எனக்குள் பல சிந்தனைகளை ஏற்படுத்தியது. அந்தக் காட்சியை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன் மாணவர்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக.
தெளிந்த நீருடன் சிறு கடல்போல் காட்சி தந்தது இளமனூர் கண்மாய். சில சமயம் கண்மாய் மறுகால் பாயும். கண்மாயை நம்பி பல நூறு ஏக்கர் வயல்கள். தண்ணீர் பாய்ச்சப்பட்ட வயல் வெளிகளில் கொக்குகளும் , பல வகையான குருவிகளும் எந்த விதமான சண்டைகளும் இல்லாமல் இரைதேடும் காட்சி. வயலைப் பண்படுத்தி , நம் வாழ்க்கைக்கான உணவைத் தரும் வள்ளல் பெருமக்களான மருதநில மக்கள். எங்கெங்கோ இருந்து பறந்து வந்த பறவை விருந்தினர்களை அலைக்கரங்களால் தாலாட்டி மகிழ்விக்கும் கண்மாய் . வந்திருந்த நீர்ப்பறவைகளைம் படம் பிடித்துவிட்டுப் பள்ளிக்கு வந்தேன்.
முதல் பாடவேளை . வழக்கம் போல கலகலப்பாகத் தொடங்கியது. மாணவர்களிடம் படத்தைக் காட்டி இதில் உள்ள பறவைகளின் பெயர் என்ன என்றேன் . ' மைனா ' எனப் பார்த்த உடன் சொல்லிவிட்டனர் அனைவரும். இன்னொரு பறவையின் பெயர் சொல்லுங்கள் என்றேன். கொஞ்சம் யோசித்தனர். கொக்கு , கரிச்சான் , செம்போத்து , காடை என ஒவ்வொரு பறவையாகச் சொல்லச் சொல்ல சில மணவர்கள் அது இல்லை அது இல்லை என உடனுக்குடன் பதிலும் சொன்னார்கள்.
ஒரு மாணவன் ஐயா இது குயிலா ? என்றான். உடனே சிலர் இது குயில் இல்லை. குயில் கருப்பாக இருக்கும் , இது கருப்பு , வெள்ளையாக இருக்கிறதே என்றனர். நான் சொன்னேன் இது குயில்தான். நீங்கள் சொல்லும் கருப்பு நிறத்தில் இருப்பது சேவல் ( ஆண் ) குயில். கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடன் இருப்பது பெட்டைக்குயில். குயில்களில் பலவகைகள் இருக்கின்றன . மாங்குயில் , பூங்குயில் என்றேன்.
ஐயா அது சினிமாப் பாட்டுதானே என்றனர். சினிமாப்பாட்டுதான். இந்தப் பெயர்களில் குயில்கள் இருக்கின்றன எனச்சொன்னேன். கொண்டைக்குயில் , அக்காகுயில் என்ற பெயரிலும் குயில்கள் இருக்கின்றன என்று சொல்லி , அவற்றின் படங்களைக் காட்ட இவற்றை நாங்கள் பார்த்துள்ளோம் ஐயா என்றனர்.
மைனா மற்றும் பெண்குயில் உள்ள படத்தைக் காட்டி , மைனா என்ன செய்கிறது எனக்கேட்க , " குயிலிற்கு உணவு கொடுக்குது ஐயா " என்றனர். குயிலின் அம்மா , அப்பா இல்லையா ? ஏன் மைனா உணவு கொடுக்குது ? என்றான் ஒரு மாணவன்.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. அது தன் முட்டையை காக்காவின் கூட்டில் இடும். குஞ்சு வளர்ந்ததும் காக்கா , இது தன் பிள்ளை இல்லை என்று தெரிந்ததும் விரட்டிவிடும். ஆதரவின்றி விடப்பட்ட அந்த குயிலிற்கு இந்த மைனா இரை ஊட்டுகிறது . இதுதான் நேயம். பறவை நேயம்.
"ஐயா , நான் ஒன்று சொல்லட்டுமா ? "
சொல்லு தம்பி.
ஒரு வீடியோல தாய்நாயிடம் பூனைக்குட்டிகள் பால் குடிப்பதைப் பார்த்தேன் ஐயா " என்று சொல்ல , ஒவ்வொரு மாணவரும் இதுபோல சொல்லத் தொடங்கினார்கள்.
நாம் ஒவ்வொருவரும் நம்முடன் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்கிறோம் . படிக்கும் பருவத்தில் பள்ளிக்கூடம் உங்களுக்கு கல்வியை மட்டுமல்ல மனிதத்தையும் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் பிறருக்குச் செய்த உதவிகள் என்ன ? மதியம் சாப்பிடும்போது ஒரு திருக்குறள் சொல்வோம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் என்றேன். நான் சொல்கிறேன் என்று ஒரு மாணவி சொன்னாள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வாழ்த்தினார்கள்." நாங்கள் மதியம் வகுப்பில் அமர்ந்து சாப்பிடும்போது உணவைப் பகிர்ந்து கொள்வோம் ஐயா. சாப்பாடு கொண்டுவராத , தட்டுக் கொண்டுவராமல் யாராவது வந்தால் எங்கள் உணவைப் பகிர்ந்து உண்போம்" என்றார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்க அம்மா அவிச்ச பயறு , முளைகட்டிய கம்பரிசி கொடுத்து விடுவாங்க ஐயா. அதை நான் என் நண்பர்களுக்குக் கொடுத்துச் சாப்டுவேன் என்றான் ஒரு மாணவன். படிக்கும் வயதில் பகிர்தல் என்ற நல்ல பழக்கம் இன்றைய மாணவர் மனங்களில் இயல்பாகவே நிறைந்துள்ளது. மனிதம் பூத்துக் குலுங்கும் மகத்தான இடமாகப் பள்ளி திகழ்கிறது.
பரந்து விரிந்த இந்தப் பூமிப்பந்தில் பாடம் கற்பது என்பது பள்ளியின் வகுப்பறையில் மட்டுமல்ல , பறவைகளிடமும் இருக்கிறது.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் & கட்டுரையாளர் ,
அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை.
செல் - 97861 41410.
மின்னஞ்சல்.
tamilkavibabu@gmail.com
*********
கற்கத் தூண்டும் கைதட்டல்
இந்து தமிழ்திசை - வெற்றிக்கொடி நாளிதழுக்குக் கட்டுரை - மு.மகேந்திர பாபு.
வகுப்பறையில் அவ்வப்போது நிகழும் கைதட்டல்களின் ஓசையில் மாணவர் மனம் மகிழும். கைதட்டல் , தட்டுபவரையும் , பெறுபவரையும் மகிழ்ச்சிப் படுத்துகிறது . வகுப்பறையில்
நாமும் கைதட்டல் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்கிறது. அந்த ஆர்வம் எழுத்திலும்
,படிப்பிலும் வெளிப்படுகிறது.
தமிழ்ப்பாடத்திற்குத் தினமும் கையெழுத்துப் பயிற்சி ஏட்டினை மாணவர்கள் வைக்கிறார்கள். நாற்பது மாணவர்களில் சிலர் மறந்துவிட்டேன் ஐயா என்கிறார்கள். சிலர் எழுதி வீட்டில் வைத்துவிட்டேன் என்கிறார்கள். சிலர் எழுத வேண்டுமே என்பதற்காக எழுதுகிறார்கள். சிலர் அதை இரசித்து , கையெழுத்தைக் கலையாகச் செய்கிறார்கள். அவர்களது கையெழுத்துப் பயிற்சி ஏட்டில் நட்சத்திரக் குறியீடுகளும் , மிக நன்று என்றும் எழுதிக் கையெழுத்திடும் போது அவர்கள் முகம் மலர்கிறது. ஆர்வம் வளர்கிறது. கூடுதலாக , மாலினிக்கு எல்லாரும் கைதட்டி வாழ்த்துச் சொல்லலாமா ? எனக்கேட்க அனைவரும் கைதட்டி மகிழ்கிறார்கள். கைதட்டலின் ஒலியில் வகுப்பறை சுறுசுறுப்பாகிறது.
முதல் பாடவேளை. ஏதேனும் ஒரு கதை மூலமாகவோ , பாடல் மூலமாகவோ , விடுகதை மூலமாகவோ மாணவர்களை ஆர்வமூட்டத் தொடங்குகிறேன். நாளிதழில் வந்த செய்திகளுக்கான வினாக்களைக் கேட்கும்போது , விடை தெரியும் என்றால் முந்திக்கொண்டு எழுந்து நின்று , சொல்லி பேனா பரிசாகப் பெறுகிறார்கள். ஒரு வேளை விடை தெரியவில்லை என்றால் அமைதி நிலவுகிறது வகுப்பறையில். அப்போது ஒரு மாணவன் தனக்குத் தெரிந்ததைச் சொல்கிறான். அவனுக்கு எல்லாரும் கைதட்டுங்கள் எனக்கூறிய போது , ஐயா , அவன் சொன்ன பதில் சரிதானா ? எனக்கேட்கிறார்கள் ஆர்வமுடன். அவன் சொன்ன பதில் தவறுதான். ஆனாலும் அவன் முயற்சி செய்தான். அதனால் அவனுக்குக் கரவொலி எழுப்பிப் பாராட்டச் செய்தேன் என்றேன். அப்படியானால் நாங்களும் ஏதேனும் ஒரு பதில் சொல்லியிருப்போமே என்றனர் மற்ற மாணவர்கள்.
நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் விடைத்தாள்களைத் திருத்தி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்தேன். ஒவ்வொருவரின் பெயரைச்சொல்லி , அவர்கள் எடுத்த மதிப்பெண்களையும் சொன்னேன். அறுபது மதிப்பெண்ணுக்கு ஐம்பது மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களின் பெயர்களைச் சொல்லும் போது இயல்பாகவே மாணவர்கள் கைதட்டத் தொடங்கிவிட்டார்கள். முதல் மதிப்பெண் ஓவியா என்றோ மகாலட்சுமி என்றோ சொல்லத் தேவையில்லை. இயல்பாகவே மாணவர் மனதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடம் ஏற்பட்டுவிட்டது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் என்றில்லாமல் முதன்முதலாகத் தேர்ச்சி பெற்ற மாணவரின் பெயரைச் சொல்லும் போதும் கைதட்டிப் பாராட்டினார்கள். ஒவ்வொரு தேர்விலும் , ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு காலை இறைவழிபாட்டுக் கூட்டத்திலோ அல்லது இலக்கிய மன்றக் கூட்டத்திலோ அவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் மூலம் புத்தகங்கள் பரிசளிப்பது என்பது எனது வழக்கம். அப்படிச் சின்னச்சின்னப் பரிசுகள் வழங்கும் போது அவர்களது கற்றல் இன்னும் கூடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு இறுதித் தேர்வில் பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்கி வருகிறேன். இதைப்போல் ஒவ்வொரு பாட ஆசிரியரும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிவருகிறார்கள். இது அவர்களுக்குள் படிப்பில் ஒரு போட்டியை ஏற்படுத்தி ஊக்கப்படுத்துகிறது.
படிப்பில் மட்டுமல்ல. கல்வி இணைச்செயல்பாடுகளான ஆடல், பாடல் , ஓவியம் , பேச்சு , கவிதை , களிமண்ணில் , காய்கனியில் , சாக்பீசில் உருவங்கள் , சிற்பங்கள் செய்தல் , விளையாட்டில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவித்தல் போன்றவை மாணவர்களுக்குப் பள்ளியின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன.
மாணவர்களை ஊக்கப்படுத்த கரவொலியோ அல்லது ஒரு பேனாவோ , பென்சிலோ , சிறு புத்தகமோ என விலை குறைவான சிறு பொருள் கொடுத்தாலும் அது விலைமதிப்பற்றதாகி விடுகிறது. என்னுடைய பள்ளிப் பருவத்தில் எனது தமிழாசிரியர் கவிஞர்.அ.கணேசன் அவர்களிடம் நான் எழுதிய கவிதைகளைக் கொடுத்தேன் . அவர் வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னும் என் கவிதைகளைப் பற்றிச்சொல்லி கரவொலி எழுப்பி வாழ்த்துகள் தந்தார். அதன் விளைவு பதினெட்டு வயதில் ' இந்தியனே எழுந்து நில் ' என்ற புதுக்கவிதை நூலாக எனது கவிதைகள் மலர்ந்தன.
துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் படிப்பிலும் , இணைச்செயல்பாடுகளிலும் ஊக்குவித்தால் அவர்களது கவனம் பிறவற்றில் திசைதிரும்பாது. சின்னச் சின்னக் கைதட்டல்களும் , பரிசுகளும் மாணவர்களைக் கற்கத் தூண்டுவதோடு தனித்திறன் மிக்கவர்களாகவும் மாற்றும். வாழ்வில் உயரத்தில் ஏற்றும்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் & கட்டுரையாளர் ,
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி , இளமனூர் ,
மதுரை .
செல் - 97861 41410
மின்னஞ்சல் - tamilkavibabu@gmail.com
தேர்வுத் திருவிழா - கட்டுரை - இந்து தமிழ் - வெற்றிக்கொடி கட்டு
புத்தாண்டு பிறந்தது.தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் நம் உள்ளம் மகிழ்வாய்த் திறந்தது. அறுவடைத் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். அடுத்து வருகிறது மாணவர்களின் கற்றல் திறனைத் தெரிந்து கொள்ள , மதிப்பெண்களை அறுவடை செய்ய , தேர்வுத் திருநாள்.
வயலைப் பண்படுத்தி , விதைத்து , பயிராக்கிப் பக்குவமாய் அறுவடை செய்து மகிழ்ந்தான் விவசாயி. அதைப்போல ஓராண்டில் ஆசிரியர்களிடம் கற்றதை , புத்தகங்களில் இருந்து பெற்றதை வெளிப்படுத்தி மாணவர்களின் மதிப்புகளை மதிப்பெண் வாயிலாகத் தர வந்துவிட்டது தேர்வுத் திருவிழா. மாதத்தேர்வுகள் , காலாண்டு , அரையாண்டுத் தேர்வுகள் முன்னோட்டமாக அமைய , இதோ பொதுத்தேர்வு அவர்களை நோக்கி முதன்மைத் தேர்வாய் வரவுள்ளது.
மாணவர்களின் , பெற்றோர்களின் , பள்ளிகளின் மதிப்பினைக் கூட்டும் விதமாகப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இருக்கின்றன. 10 , 11 , 12 ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களைச் சுற்றி விசாலப் பார்வை வீசியிருக்கும் சுற்றமும் நட்பும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் போர் வீரர்களைப்போல பார்க்கத் தொடங்கி இருப்போம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நம் வீட்டில் இருந்தால் , நம்மை விட அதிகம் அக்கறை கொள்பவர்கள் நண்பர்களும் , உறவினர்களும்தான். எல்லோரும் முதல் மதிப்பெண் என்ற எல்லையை நோக்கி ஓடும் குதிரையாகவே மாணவர்களைப் பார்ப்பார்கள். பெற்றோர் மனநிலையும் இதுதான். " எப்படியாவது உன் அண்ணனைவிட , அக்காவைவிட ஒரு மார்க்காவது அதிகம் எடுத்துவிடு " . நீ அதிக மதிப்பெண் எடுத்தால்தான் நம்ம சொந்த பந்தங்களிடம் மதிப்பு என்றும் , உறவுகளிடம் முகம் கொடுத்துப் பேச முடியும் என்றும் நம் எண்ணங்களை எல்லாம் பிள்ளைகளிடம் திணித்திருப்போம். அவர்களும் சரிசரியெனச் சொல்லியிருப்பார்கள்.
வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே திறன் பெற்றவர்களாக இருப்பது இல்லை. மாணவர்களின் அகமும் புறமும் கற்றலின் மீதான ஊக்கத்தையோ , தாக்கத்தையோ ஏற்படுத்துகின்றன. அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடிக்கொண்டு இருக்கின்றார் ஆசிரியர்.
எண்பது மதிப்பெண் பெறும் மாணவர்களை நூறு மதிப்பெண் பெற வைக்கவும் , ஐம்பது மதிப்பெண் பெறும் மாணவர்களை எண்பது மதிப்பெண் பெறவைக்கவும் , தேர்ச்சி பெறும் நிலையில் உள்ளவர்களை ஐம்பது மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். மாணவர்களும் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்துகின்றனர்.
மாணவர்கள் கலைத்திருவிழாவிலும் , விளையாட்டு விழாவிலும் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்ததைப்போல தேர்வுத் திருவிழாவிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். சக மாணவனோடு ஒப்பீடு செய்து அவர்களது மனதில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தாது ' உன்னால் முடியும் ' என்ற நம்பிக்கை விதையினை விதைத்துத் தேர்வினைச் சந்திக்க வழிகாட்டுவோம். நாம் விதைக்கும் நம்பிக்கை விதை நிச்சயம் வெற்றி என்னும் விருட்சமாக மாறும்.
இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. ஒரு காலத்தில் படித்தவர்களைத் தேடித்தேடி வேலை கொடுத்தார்கள். அதன்பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி கிடைத்தது. இப்போது எல்லா வேலைகளுக்கும் கடும்போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டிகள் உள்ளூருக்குள் இல்லை. உலகளாவிய அளவில் இருக்கின்றன. போட்டித் தேர்வுகளில் வெல்ல வேண்டிய ஒரு சூழலில் இன்றைய மாணவர்களும் , இளைஞர்களும் இருக்கிறார்கள். எனவே மாணவர்கள் முழுநம்பிக்கையோடு இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள பொதுத்தேர்வு ஓர் அடிப்படையாக அமைகிறது.
அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அமைதியான அதிகாலைப் பொழுதில் படிப்பது மாணவர்களின் மனதில் எளிதில் பதியும். படித்ததைத் தினமும் எழுதிப் பார்க்கச் செய்வது இ்ன்னும் சிறப்பானது.
நமது கனவுகளைப் பிள்ளைகளின் மீது திணிக்காது , அவர்களால் இயன்றதைத் தேர்வில் எழுத வாழ்த்துவோம். மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து , அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு வாழ்த்துவோம். தேர்வு எனும் திருவிழாவில் அனைத்து மாணவர்களும் வெற்றி எனும் பரிசு பெற வாழ்த்துகள்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் & கட்டுரையாளர் ,
அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி , இளமனூர், மதுரை.
செல் - 97861 41410.
********
பாடித்திரியும் பறவைகள்- சிட்டுக்குருவி.
" விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே " என்று பாடினான் மகாகவி பாரதி. சிட்டுக்குருவி விடுதலையின் குறியீடு. பறவை இனங்களில் , மனிதர்களோடு மனிதர்களாகப் பாடித்திரிபவை சிட்டுக்குருவிகள். சிட்டுக் குருவிகளைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனம் சிறகடித்துப் பறக்கும். நகரத்து மனிதர்களை விட கிராமத்து மனிதர்களுக்கே சிட்டுக் குருவிகளின் நெருக்கம் கிடைக்கும்.
வீட்டிற்குள்ளும் , முற்றத்திலும் பறந்து திரிவதும் , உணவு தேடி அலைவதும் நம் குடும்பத்தில் ஒருவராகவே சிட்டுக்குருவிகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
சிட்டுக்குருவிகளைத் தன் பாட்டில் வைத்து , நாட்டில் உள்ளவர்களுக்கு அதன் மீது அன்பு செலுத்த வைத்தவன் மாகவிஞன் பாரதி. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பார்வை இருக்கும். கவிஞனுக்குள் அந்தப் பார்வை , கவிதையாக மலர்கிறது. பாரதிக்குப் பின் வந்த கவிஞர்கள் திரைப்பாடல்களால் சிட்டுக்குருவிக்குப் பெருமை தந்தார்கள். பாரதியின் உற்று நோக்கல்தான் முதன்முதலாகச் சிட்டுக் குருவிகளின் சிறகசைவிற்குச் சுதந்திரத்தைத் தந்தது.
வறுமையின் பிடியில் இருந்த போதிலும் , தன் வீட்டு முற்றத்தில் திரிந்த சிட்டுக் குருவிகளுக்கு முறத்தில் இருந்த அரசியினைக் கரத்தில் எடுத்து , ஒவ்வொரு அரிசியும் தரையில் விழ விழ , அவனுள் கவிதை எழ எழ நமக்குள் ஆனந்தம் பிறக்கிறது இன்று.
சிட்டுக் குருவிகளுக்கும் எனக்கும் சிறு வயதில் இருந்தே சினேகம் உண்டு. வீட்டிற்குள்ளே அவை சிறு வீ(கூ)டு கட்டும். திறந்தே இருக்கும் சாளரம் வழியாக மின்னலெனப் பறந்து வரும் , போகும். கூட்டைக் கட்டி முட்டை இட்டு , குஞ்சுகள் பொரித்து மீண்டும் எங்களுடனே இருக்கும். வலசைப் பறவைகள் போல சில மாதங்கள் தங்கிவிட்டு , நம்மை விட்டுப் பிரிவதில்லை சிட்டுகள்.
வீட்டை ஒட்டினார்போல் ஆடு , மாடுகளுக்கெனத் தாழ்வாரம் ஒன்று இருந்தது. அங்கங்கே கை நுழையும் இடத்திலெல்லாம் சிட்டுகள் கூடுகட்டி கூடி வாழ்ந்தன. முற்றத்தில் இருக்கும் உணவினை அணில்களோடு கூடி உண்டபின் , தண்ணீர்த்தொட்டியில் அவை போடும் குளியலைக் காணக் கண்கோடி வேண்டும்.
சேவலும் ( ஆண் ) பெட்டையுமாய்ப் பிணக்கமின்றி இணக்கத்துடன் வாழும் சிட்டுகள் நமக்கு இயற்கை தந்த வழிகாட்டிகள். மரங்களும் பறவைகளும் இல்லையென்றால் இந்தப் பூமிப்பந்து எப்போதோ தன் இயக்கத்தை நிறுத்தி இருக்கும். பறவைகளின் சிறகு விரியும் போதெல்லாம் நம் மனங்களின் மகிழ்ச்சிச் சிறகும் விரிகிறது.
சரி... சரி ... எங்கே சிட்டாப் பறக்கத் தொடங்கிட்டிங்க ? சிட்டுகளைப் பார்க்கவா ?
கட்டுரை & படங்கள் ,
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை.
பேச - 97861 41410.
********
ஐம்புலன் ஆட்சிகொள்
வான் புகழ் வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாக்கி , அதன் மூலம் மக்களின் மனங்களைச் சரியாக்கி , சத்தமின்றி நித்தமும் இலக்கியத் தொண்டினைச் செய்துவரும் பெருமைமிகு மன்றம் நமது திருவள்ளுவர் மன்றம்.
மதுரை என்றாலே எண்பெருங்குன்றம். மதுரை என்றாலே மக்கள் மனங்களில் நம் திருவள்ளுவர் மன்றம். குன்றமும் மன்றமும் இருகண்கள் நமக்கு.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் , நல்லவர்கள் ஒன்று கூடி வள்ளுவர் மன்றத்தின் மூலம் தமிழ் வளர்க்கும் பணி சாலச்சிறந்தது. திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமை உடையது நமது மதுரை மண். மிதிக்கும் மண்ணை மதிக்கும் மண்ணாக்கித் தலையில் சுமந்தவன் சோமசுந்தரக் கடவுளான நமது ஈசன். அவர் பெயரில் அமைந்த குடியிருப்பு. இங்கு மன்றம் நடப்பது வெகு சிறப்பு.
மூன்றடியால் உலகை அளந்தான் பெருமாள். இரண்டடியால் உள்ளம் அளந்தான் வள்ளுவப் பேராசான். ஓரடியால் உள்ளம் அளந்தாள் அறிவிற் சிறந்த ஔவைப் பாட்டி. அவளின் தடத்தில் , புதிய இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திட வந்த மகாகவி பாரதியின் புதிய ஆத்திசூடி.
ஐம்புலன் ஆட்சிகொள். இந்த உலகம் ஐம்பூதங்களால் இயங்குகிறது. வானம் , காற்று , நெருப்பு , நீர் , நிலம்.
ஐம்பொறிகள் நம்மை நலமுடன் இயக்குகின்றன. மெய் , வாய் , கண் , மூக்கு , செவி .
ஐம்பொறிகளின் வழியே கிடைக்கும் ஐம்புலன்களால் இவ்வுலகை நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறான் மாகவிஞன் பாரதி.
பாரதியின் முன்னோடியான வான்புகழ் வள்ளுவன் தந்த உலகப்பொதுமறையாம் வள்ளுவத்தில் ஐம்புலன்களைப் பற்றி அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழன் அன்றே அதிகாரம் படைத்தவன் என்பதை வள்ளுவரின் 133 அதிகாரங்கள் வாயிலாக நாம் அறியலாம்.
உலக மக்களுக்குத் தேவையான உன்னதக் கருத்துக்களைச் சொல்வதால் வான்புகழ் வள்ளுவமானது ' உலகப் பொதுமறை ' என அழைக்கப்படுகிறது. ஐம்புலன்களைப் பற்றிய நமது வள்ளுவப் பேராசானின் குறட்பாக்களைக் காண்போம்.
கண் - பார்த்தல்.
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தைப் பார்த்து , மகிழ்ந்து , இரசிக்க உதவுவன கண்கள். கண்கள் என்பவை வெறும் கண்களல்ல. கல்வியைக் கற்க உதவும் கருவி. எல்லோருக்கும் கண்கள் இருக்கின்றன. கண் உடையவர்கள் யார் என்பதற்கு வள்ளுவப் பேராசான் அற்புதமான விளக்கம் தருகிறார்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லா தவர்
( குறள் 393 )
கற்றோர் என்பவர் கண்ணுடையவர். கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்ணுடையவர் என்கிறார் வள்ளுவர்.
செவி - கேட்டல்
கேட்டலைச் செவிச்செல்வம் என்கிறார் வள்ளுவர். செவியால் கேட்டறியும் செல்வம் , செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும். அதுவே எல்லாச் செல்வங்களிலும் தலையானது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
குறள் - 411
செவி , வாய் என்ற இருபொறிகளையும் இணைத்து ஒரு குறளில் கூறுகிறார் இப்படி ,
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
( குறள் - 420 )
செவிச்சுவை அறியாது வாய்ச்சுவை மட்டுமே அறிந்தவர்கள் இருந்தாலென்ன ? இல்லாமல் இருந்தாலென்ன எனக்கேட்டு , கேள்விச் செல்வத்தின் பெருமையை விளக்குகிறார்.
மூக்கு - நுகர்தல்
புறம்குன்றிக் கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கிற் கரியர் உடைத்து.
( குறள் - 277 )
கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில் இக்குறள் இடம்பெற்றுள்ளது. குன்றிமணி செம்மையாகக் காணப்படுவதாகத் தோன்றினாலும் , அதன் மூக்குக் கருத்துத்தான் இருக்கிறது. அதுபோல் தோற்றத்தில் சிலர் செம்மையாகத் தோன்றினாலும் உள்ளத்தில் இருண்டு இருப்பவர் இவ்வுலகில் உண்டு என்கிறது குறள்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
( குறள் - 90 )
முகர்ந்து பார்த்தாலே அனிச்சப்பூ வாடிவிடும். விருந்தினர் நாம் பார்க்கும் பார்வையில் வாடிவிடுவர்.
மெய் - தீண்டல்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
( குறள் - 65 )
நமது குழந்தைகளின் மெய்தீண்டல் உடலுக்கு இன்பம். அவரது குரல் கேட்டல் செவிக்கு இன்பம் என்று மெய் , செவி என்ற இரு பொறிகளையும் இக்குறளில் கூறுகிறார்.
நாக்கு
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.
( குறள் - 127 )
யாராக இருந்தாலும் நாக்கினைக் காக்க வேண்டும். பிறர் புண்படும்படி பேசுதல் கூடாது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
( குறள் - 294 )
பிறர்க்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதலே உண்மை பேசுதல் ஆகும்.
இப்படி ஐம்புலன்களின் வழியாக நாம் ஆட்சி கொள்வதற்கு வள்ளுவப் பேராசான் பல குறட்பாக்களின் மூலம் குரல் எழுப்பி உள்ளார். வள்ளுவனின் வாயமுதை நமது மன்றத்தில் உரைக்கும் பெரும் வாய்ப்பைத் தந்த அனைத்து வல்லவர்களுக்கும் வாழ்த்தும் அன்பும் நன்றியும்.
அன்புடன் ,
பொறியாளர் ஜ.சுரேஷ்.
*******
எழுத்தில் புதுமைகள் புகுத்திய புதுமைப் பித்தன்
" காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருநை நதி " எனப்பாடினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி. நதிக்கரை நாகரீகங்களில் தமிழ் வளர்த்த பெருமை பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணிக்கும் ( நெல்லை ) ,
வைகைக்கும் ( மதுரை ) உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகள் இலக்கியச் சிறப்பு மிக்கது நமது தமிழ்மொழி. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியங்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் தம் பாடல்களின் மூலம் எழுச்சியைச் தந்து சுதந்திர வேட்கைக்கு வித்திட்டவர் மகாகவி பாரதியார். அதுபோல் சிறுகதை மூலம் சிகரம் தொட்டவர் புதுமைப்பித்தன். தெய்வங்களையும் , மன்னர்களையும் பாடுபொருளாக இலக்கியங்கள் படைக்கப்பட்டு வந்த காலம் மறைந்து சாமானிய மக்களையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு படைக்கப்பட்டன. அன்றாட வாழ்வியலை , எளிய கதை மாந்தர்கள் மூலம் சிறுகதையாகப் படைத்து நிலைத்து நிற்பவர் புதுமைப்பித்தன் அவர்கள். சிறுகதை என்றாலே நம் நினைவிற்கு வருபவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் என்றால் சிறுகதையில் புதுமை புகுத்தியவர் என்றே சொல்லலாம்.
பிறப்பும் படிப்பும்
புதுமைப்பித்தன் அவர்களின் இயற்பெயர் சொ.விருத்தாச்சலம். தந்தை சொக்கலிங்கம் பிள்ளை. நெல்லையைச் சேர்ந்தவர் . தாயார் பர்வதம் அம்மாள். ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் தாசில்தாராகப் பணிபுரிந்தவர். வெவ்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடியதாக இருந்தது அவரது பணி. கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பணி செய்தபோது புதுமைப்பித்தன் 25 - 04 - 1906 ஆம் ஆண்டில் பிறந்தார். தாத்தாவின் பெயரான விருத்தாச்சலம் என்பதே இவருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது. புதுமைப்பித்தன் அவர்களின் பள்ளிப்படிப்பு தென்னார்க்காடு மாவட்டத்தில் தொடங்கியது. அவரது தந்தை பணி ஓய்வு பெற்றபின் திருநெல்வேலிக்கு 1918 ஆம் ஆண்டு வந்தனர். திருநெல்வேலி கிறிஸ்தவ திருச்சபைப் பள்ளியிலும் , இந்துக் கல்லூரியிலும் தன் படிப்பை நிறைவு செய்தார்.
எழுத்தும் சிறப்பும்
திருநெல்வேலியிலிருந்து தலைநகரமான சென்னைக்கு வந்தார் புதுமைப்பித்தன். ' மணிக்கொடி ' என்ற இதழில் புதுமைப்பித்தனின் கதைகளும் கட்டுரைகளும் அவ்வப்போது பிரசுரமாகின. தினமணி நாளிதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். மணிக்கொடியில் எழுதிய இருபத்தொன்பது கதைகளைத் தொகுத்து ' புதுமைப் பித்தன் கதைகள் ' என்று ' நவயுகப் பிரசுராலயம் ' வெளியிட்டது. புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த கதைகளைத் தொகுத்து ' உலகத்துச் சிறுகதைகள் ' என்ற புத்தகமாகப் பிரசுரித்தது. இதனால் புதுமைப்பித்தனின் பெயர் வாசகர்களிடையே நன்கு அறிமுகமாகி புகழ் பெறத்தொடங்கியது.
கதையும் மாந்தர்களும் :
புதுமைப்பித்தனுடைய கதைகள் அந்தக்காலத்திலேயே பெரும் புரட்சியை ஏற்படுத்தின. யாரும் தொடத்தயங்கிய அல்லது தொடாத பல கதைக்கருக்களைச் சிந்தித்துப் படைப்பாக்கினார். அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கதைதான் ' பொன்னகரம் ' . ' அம்மாளு ' ஒரு மில் கூலி. கணவன் முருகேசன் ஜட்கா வண்டிக்காரன் . அவனும் அவனது குதிரையும் தண்ணிபோட்டு விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டியின் ஏர்க்கால் ஒடிந்தது. குதிரைக்குப் பலமான அடி. முருகேசனுக்கு ஊமையடி. அவனுக்குப் பால்கஞ்சி சாப்பிட ஆசை. தன் கணவனின் ஆசைக்காக , தன்மீது ஆசைப்பட்ட ஒருவனுடன் செல்கிறாள். அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்து விட்டாள். கதையை இப்படி முடிக்கிறார் புதுமைப் பித்தன். ' என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே ! இதுதான் ஐயா பொன்னகரம். '
ஓர் ஏழை எழுத்தாளனின் நிலையை ' ஒரு நாள் கழிந்தது ' என்ற கதையில் படம்பிடித்துக் காட்டியிருப்பார். அது அவரது வாழ்க்கை நிலைதான். சென்னைக்கு வந்து அவர்பட்ட துயரங்களை ' முருகதாசர் ' என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நாளைக் கடக்கப் படும்பாட்டை வெகு ரசனையுடன் எழுதியிருப்பார். ஒரு தீப்பெட்டி வாங்குவதற்குக் கூட கையில் காசில்லாத நிலை. கையில் இருக்கும் கிழிந்த கோரைப்பாயை அவர் விரிக்கும் நிலையை எழுத்தின் மூலம் நம் கண்முன்னே காட்சியாகக் கொண்டு நிறுத்துவார். கடன் வாங்கித் தம் நாள்களைக் கடத்தும் ஓர் எழுத்தாளனின் நிலையை இவர் போல் யாரும் எழுதியதில்லை. ' ஒரு நாள் கழிந்தது ' அவரது சிறுகதைகளில் முத்தாய்ப்பான கதை என்றால் அது மிகையில்லை.
புதுமை காலமானது :
படைப்பாளிகளுக்குள் இருக்கும் மிகப்பெரிய ஆசை என்பது திரைத்துறையிலும் தடம் பதிக்க வேண்டும் என்பது. புதுமைப் பித்தனுக்கும் அப்படி ஓர் ஆசை இருந்தது. சினிமாவில் கதை , வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எம்.கே. தியாகராஜ பாகவதரின் சொந்தப் படமான ' ராஜமுக்தியில் ' கதை , வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. 1947 ல் படத்தயாரிப்புக் குழுவினருடன் புனாவுக்குச் சென்றார். சரியான உணவு , கவனிப்பு இல்லை. ராஜமுக்தி படத்திற்கான வசனத்தை எழுதி முடிப்பதற்குள் காசநோய் அவருக்கு முற்றியது. 1948 ஜூன் 30 ஆம் நாள் இரவு புதுமைப்பித்தன் காலமானார். சாகாவரம் பெற்ற பல படைப்புகளைத் தந்தவரை வறுமை ஆட்கொண்டு , மரணத்திடம் சேர்த்தது. 42 ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்தாலும் , இலக்கிய உலகில் பல இறவாப் படைப்புகளைத் தந்து சென்றார் புதுமைப்பித்தன் அவர்கள்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
செல் - 97861 41410
******
*******
கலைஞர்களைப் படைக்கும் மதுரை நகைச்சுவை மன்றம்.
' குன்றம் ' என்றால் நம் நினைவுக்கு வருபவர் முருகன். 'மன்றம் ' என்றால் நம் மனதில் நிற்பது ' மதுரை நகைச்சுவை மன்றம் '. மல்லிகைப் பூ மனசுக்குச் சொந்தக்காரர்களான மதுரை மக்களைத் தொடர்ந்து 25 ஆண்டுகளாகச் சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்து ' வெள்ளி விழா ' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது மதுரை நகைச்சுவை மன்றம்.
எத்தனையோ மன்றங்கள் அவ்வப்போது தோன்றினாலும் , அவை நெடும் பயணத்திற்குச் செல்லுமா ? மக்கள் மனங்களை வெல்லுமா என்பது வினாக்குறி . தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தொய்வில்லாது , தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மதுரை நகைச்சுவை மன்றம் ஒரு வியப்புக்குறி.
சிரிக்க மறந்ததால் , மறுத்ததால் இன்று நம் வாழ்நாள் குறைந்து கொண்டு வருகிறது. நம் மனங்கள் மருத்துவமனை நோக்கி அலை பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சிரித்தால் மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் அந்தச் சிரிப்பு மன்றத்தையே தன் மருத்துவமனையில் நிறுவி , இலவசமாய் நோயை விரட்டிக் கொண்டிருக்கும் மகத்தான மருத்துவர் .யார் அவர் ? நகைச்சுவை மன்றம் உருவானது எப்படி ? 25 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும் நாம்.
பசுமை போர்த்திய ஊரான சோழவந்தானில் பிறந்து , மதுரையின் பெருமை சொல்லும் தியாகராசர் கல்லூரியில் பயின்று , பின்னாளில் தான் படித்த கல்லூரியிலேயே தமிழ்ப்பேராசிரியாகப் பணிபுரிந்து , உலகமெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உவகைப்புலவர் , கலைமாமணி.பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்களை , மதுரை மாநகரில் ஒரு மேடையில் நகைச்சுவைப் பேச்சினைக் கேட்டு , மெய்மறந்து போனார் மக்கள் மருத்துவர் டாக்டர்.சேதுராமன் அவர்கள். அதனால் விளைந்தது மதுரை நகைச்சுவை மன்றம்.
1991 ஆம் ஆண்டு மீனாட்சிமிஷன் மருத்துவமனை நிறுவனர் , மக்கள் மருத்துவர் , டாக்டர்.ந.சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்ட இம்மன்றம் , மீனாட்சிமிஷன் மருத்துவமனையின் 6-வது தளத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 25 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தழிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர்.விஜய வேணுகோபால் அவர்களும் , அவரைத் தொடர்ந்து 'மனிதத்தேனீ ' இரா.சொக்கலிங்கம் அவர்களும் மன்றத் தலைவர்களாகச் சில ஆண்டுகள் இருந்தனர்.
கலைமாமணி பேரா.டாக்டர்.கு.ஞானசம்பந்தன் அவர்களைத் தொடக்க காலத்தில் செயலராகவும் , கடந்த 15 ஆண்டுகளாகத் தலைவர் மற்றும் செயலராகவும் கொண்டு , இம்மன்றம் சிறப்புடனும் , புகழுடனும் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. மன்றம் தொடங்கிய மறுஆண்டு முதல் திண்டுக்கல் , அருப்புக்கோட்டை , திருநெல்வேலி , இராமநாதபுரம் , சிவகங்கை , திருச்சி , கோவை , திருப்பூர் , ஈரோடு எனத்தொடங்கி நாகர்கோவில் முதல் சென்னை வரை 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களைப் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் உருவாக்கினார்.
எதைச் சொல்லியும் , எப்படிச் சொல்லியும் சிரிக்க வைக்கலாமா என்றால் , இல்லை என்கிறார் பேரா.கு.ஞானசம்பந்தன் அவர்கள் . நகைச்சுவை சொல்பவர்களுக்கு மூன்று விதிகளை உருவாக்கி , அந்தக் கொள்கையில் தடம்புரளாது பயணித்துக் கொண்டிருக்கிறது மதுரை நகைச்சுவை மன்றம்.
1 ) ஆபாசமில்லாமலும் ,
2 ) அமங்கலமில்லாமலும் ,
3 ) பிறர்மனம் நோகப் பேசாமலும் நகைச்சுவை சொல்ல வேண்டும் என்பது இம்மன்றத்தின் உறுதியான நடைமுறை.
மழலை மொழியில் குழந்தைகள் நகைச்சுவை சொல்வதைக் கேட்கும் போது , நம்மனம் அதிலே ஒன்றிப் போகும். இங்கு குழந்தைகளாக வந்து மேடையேறி நகைச்சுவை சொன்னவர்கள் , இன்று மணமேடை கண்டு அவர்களது குழந்தைகளை மேடையேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் , முதியவர்களும் , பெண்களும் நகைச்சுவை சொல்லி கலகலக்க வைக்கிறார்கள்.
சிறந்த நகைச்சுவை சொல்லும் குழந்தைகள் மூவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேடையிலேயே பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேடையேறி மைக் பிடித்து பெயரைச் சொன்னாலே போதும். அந்தக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு.
ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் ஆண்டு விழாவில் ' வளரும் கலைஞர் ' என்ற விருதும் , சமூகத்தில் சாதனைகள் பல நிகழ்த்தி வரும் நபர்களைத் தேர்ந்தெடுத்து ' சாதனையாளர் ' என்ற விருதும் , மூத்த நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ' பொற்கிழி ' யும் வழங்கி நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது மதுரை நகைச்சுவை மன்றம்.
சிரிக்கவும் , சிந்திக்கவும் மட்டுமன்றி , பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒளியையும் ஏற்றி வைத்திருக்கிறது இம்மன்றம்.இன்று சின்னத் திரைகளிலும் , வெள்ளித் திரைகளிலும் மின்னிக் கொண்டிருக்கும் காமெடி பாய்ஸ் ரோபோ சங்கர் , வெங்கடேஷ் , சசிக்குமார் , கிறிஸ்டோபர் , பாலமுருகன் , சுப்பிரமணி , மதுரை ராமர் , முத்து , அரவிந்த் , அருப்புக்கோட்டை மாரிமுத்து , மின்னல் பிரியன் போன்றோர் இம்மன்றத்தின் மூலம் வளர்நதவர்களே !
' சிரிப்பு ' என்ற இதழ் இம்மன்றத்தின் சார்பில் சில ஆண்டுகள் வெளி வந்தது. கவிப்பேரரசு வைரமுத்து . பேரா.கண.சிற்சபேசன் , பேரா.நமச்சிவாயம் , தமிழறிஞர் சாலமன் பாப்பையா , தென்கச்சி.கோ.சுவாமிநாதன் , திருவாரூர்.சண்முகவடிவேல் , இளசை சுந்தரம் , நல்லறிஞர்.இறையன்பு இ.ஆ.ப.போன்ற பெருமக்கள் ஆண்டு விழாக்களில் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளனர்.
திரைத்துறையைச் சார்ந்த.புகழ்பெற்ற நகைச்சுவையாளர்களான பழம்பெரும் நடிகர் .வி.கே.இராமசாமி , ஆச்சி மனோரமா , குமாரி சச்சு , நடிகர் செந்தில் , எஸ.வி.சேகர் , யூகி சேது , இயக்குநர் மௌலி , ரமேஷ் கண்ணா , பாண்டியராஜன் , மனோபாலா , படவா கோபி , தாமு , சார்லி , டெல்லி கணேஷ் , மயில்சாமி ஆகியோர் பங்கேற்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்கள். 25 ஆண்டு வெள்ளி விழாவில் அமைச்சர் .மாண்புமிகு.செல்லூர் ராஜூ , மதுரை மேயர் . வணக்கத்திற்குரிய இராஜன் செல்லப்பா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவசர உலகில் மகிழ்ச்சியை இழந்து , கவலைகளில் விழுந்து , தன்னைச்சுற்றி சிறு வட்டத்தை உருவாக்கி அதற்குள் அமர்ந்திருப்பவர்கள் , சிரித்து வாழ , பிறர் மனங்களையும் ஆள ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கவலைகளோடு வருபவர்கள் கலகலவென சிரித்துச் செல்லலாம்.
தங்கள் குழந்தைகளுக்கான அரங்கமாகவும் இம்மன்றம் இருக்கும் .எதிர்காலத்தில் பல கலைஞர்களை உருவாக்கும் மன்றம் , மதுரை உள்ளளவும் நம் மனங்களில் இருக்கும். .வாருங்கள் சிரிப்போம் .மகிழ்வாய் இருப்போம் !
மு.மகேந்திர பாபு.
தமிழாசிரியர் , இளமனூர
*****
என் போதிமரம்
'மாற்றவும் ஏற்றவும் ஆசிரியர்களால் முடியும்
நாளைய உலகு மாணவர்களால் விடியும் '
இந்த உலகின் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் கருவறை , மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறை ஒருவனுக்கு உயிரையும் , உடலையும் கொடுக்கிறது. ஆசிரியரின் வகுப்பறை உணர்வையும் , உயர்வையும் கொடுக்கிறது. இரண்டுமே சிறந்ததுதான். பிறந்துவிட்ட இந்த வாழ்க்கையில் சிறந்து நிற்கச் செய்வது ஆசிரியரின் வகுப்பறை என்றால் அது மிகையில்லை.
எதிர்கால உலகம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் இருக்கிறது என்பார்கள். வகுப்பறை சரியான முறையில் வழிகாட்டி , வழி நடத்திச் சென்றால் நிச்சயம் மாணவர்கள் சோதனைகளை வென்று சாதனைகளைப் புரிவார்கள். நல்ல ஆசிரியர்கள்தான் அனைத்து ஆசிரியர்களும். மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போது , எதிர்காலத்தின் அவர்கள் உயரம் தொட்டு , செகரம் தொடுவார்கள். அப்படி என்னைச் சிகரம் தொடச் செய்தவர்தான் எனது தமிழாசிரியர் கவிஞர். அ.கணேசன் அவர்கள்.
புத்தரை உருவாக்கியது போதிமரம்தான். போதிமரம் இல்லையெனில் புத்தர் இல்லை. ஆசிரியர் இல்லையெனில் மாணவர் இல்லை. எனது பள்ளிப்பருவ நிகழ்வுகள் இன்றும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து , பொதிந்து கிடைக்கின்றன.இன்று நான் பல மேடைகளில் ஏறி கவிதை பாடுவதற்கும் , பசுமை பற்றிய உரைநிகழ்த்துவமற்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமகனார் கவிஞர். அ. கணேசன் அவர்கள்.
ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே என்னுள் எழுந்த சிறுசிறு கற்பனைகளை கவிதைகளாக ஏட்டில் எழுதத் தொடங்கினேன். அவைகள் கவிதைகள்தானா ? என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆயினும் எழுதுவதை நிறுத்தவில்லை. அப்படியே நாட்கள் கடந்தன. பத்தாம் வகுப்பு முடித்து , பதினொன்றாம் வகுப்பும் தி.வெ.அ.ந.நா. மே.நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். எடுத்தது அறிவியல் பிரிவு. ஆனால் மனசோ எப்போது தமிழ் பாடவேளை வரும் வரும் என காத்துக் கொண்டிருக்கும். தமிழ் பாடவேளை இரண்டு வகுப்புகள் சேர்ந்து ஒன்றாக நடைபெறும்.
ஐயா. கவிஞர் . அ. கணேசன் அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததும் மனதிற்குள் உற்சாகம் நுழைந்துவிடும். அவர் பேசும் போது விழுகின்ற வார்தைகளைக் கேட்பதற்கே மிகவும் மகிழ்வாக இருக்கும். சந்தம் சிந்தும். அடுத்தடுத்து என்ன வார்த்தைகள் சொல்வார் என எனக்குள் நான் அசைபோடுவேன். கதைகளும் , கவிதைகளும் கணக்கின்றி அருவி போல வரும். எங்களுக்கு ஆனந்தம் தரும். ஆனால் வகுப்பு தொடங்கியது போலதான் இருக்கும். அதற்குள் பாடவேளை முடிந்துவிடும். மணியடிக்க பணி முடிந்தது என அடுத்த வகுப்பு தொடங்கிவிடும். இப்படியாக தமிழ்பாடவேளை எப்போது வரும் என காத்திருக்கத் தொடங்கியது என் மனசு.
எழுதி எழுதி ஏட்டை நிர்ப்பிய கவிதைகளை ஐயாவிடம் கொடுத்தால் ஆலோசனை கிடைக்குமே என்ற எண்ணத்தில் , ஒருநாள் பள்ளி முடிந்ததும் , வீட்டிற்கு மிதிவண்டியில் செல்லும் போது , ஐயாவின் வீட்டிற்குச் சென்று கவிதை ஏட்டினைக் கொடுத்துச் செல்வது என தீர்மானித்தேன். ஐயாவின் வீடு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிர்புறம் இருந்தது. ஐயா வீட்டிற்கு வந்து விட்டார் என்பதை வீட்டின் முன் நின்ற வாகனம்.சொல்லாமல் சொல்லியது.
என்ன சொல்வாரோ , ஏது சொல்வாரோ என மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு நம்பிக்கை என்னை உள் இழுத்துச் சென்றது.
ஐயா வணக்கம் என்றேன். வாடா தம்பி என அன்போடு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். தனது துணைவியாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். என்னைக் கண்டதும் அம்மா அவர்கள் தேனீர் போடச் சென்றார்கள். என்னடா ? என்ன விசயம் என்றார் ? ஐயா ... என்று சொல்லிக் கொண்டே என் பைக்குள் இருந்து ஒரு ஏட்டை எடுத்து நீட்டினேன். இதில் கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறேன் ஐயா, எனக்கு தோணியதை. நீங்கள் படித்து விட்டுக் கருத்துச் சொல்ல வேண்டும் என்றேன். அப்படியா ? மகிழ்ச்சி எனச் சொல்லி ஒரு சில பக்கங்களைப் படித்து விட்டு , ' ஆகா ! அருமை. முழுதும் படித்துவிட்டு நாளை சொல்கிறேன் என்றார். சூடான , சுவையான் தேனீரை அம்மா அவர்கள் வழங்க , குடித்துவிட்டு என் வீடு வந்தேன்.
அன்றைய இரவுப் பொழுது.எனக்குள் பல்வேறு எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. விடிந்தது. பள்ளிக்குச் சென்றேன். நான் வழக்கம் போல் எதிர்பார்க்கும் தமிழ்பாட வேளையும் வந்தது. ஐயா என்ன சொல்வாரோ என மனசு எதிர்பார்க்கத் தொடங்கியது. அனைவரின் முன்பும் என்னையும் , என் கவிதைகளையும் பாராட்டிப் பேசினார். அந்த வார்தைகளும் , அன்றைய வகுப்பறைச் சூழலும் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.
படிக்கிற வயசுல படிக்கிறத விட்டுப்புட்டு கவித எழுதறானாம் ! உன் வேலயப்பார்டா ! என அவர் அன்று சொல்லியிருந்தால் ஒரு படைப்பாளி அன்று இறந்திருப்பான். அவரது ஊக்குவிக்கும் வார்த்தைகள்தான் இன்று என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு படைப்பாளியின் பேனா , இன்னொரு படைப்பாளியைப் பற்றி நன்கறியும். எனது ஐயா அவர்கள் சிறந்த பேச்சாளர் மட்டுமன்றி , சிறந்த படைப்பாளர். அன்றைய காலகட்டத்திலேயே அவர் மாணவர்களுக்காக ஒரு கட்டுரை நூலும் , புத்துலகம் சமைப்போம் வாரீர் ' என மரபுக் கவிதை நூலும் வெளியிட்டு புகழின் உச்சத்தில் இருந்தவர். இன்றைய கவிப்பேரரசு வைரமுத்துவை தனது சொந்த ஊரான புதியம்புத்தூருக்கு அழைத்து வந்து நூலினை வெளியிடச் செய்தவர். கவியரசு கண்ணதாசன் மீது தீராக் காதல் கொண்டவர் . தனது எம்பில் பட்டத்திற்காக ' கண்ணதாசன் பாடல்களில் கையறுநிலை ' என்ற நூலினை ஆய்வேடாக சமர்ப்பித்தவர். அது மட்டுமல்ல , அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு கண்ணதாசனின் புதல்வி . விசாலி கண்ணதாசனை வரவழைத்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்தவர். பல்வேறு வானொலிகளில் இன்றும் உரை நிகழ்த்தி வருபவர். இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் எனது தமிழாசிரியர் கவிஞர். அ. கணேசன் அவர்கள். அன்று அவர் என்னுள் விதைத்த கவிதையெனும் விதை இன்று என்னுள் விருட்சமாக வேர்விட்டு , மரமாக நிற்கிறது.
பேச்சுப்போட்டியும் பரிசும் :
பள்ளியில் அவ்வப்போது இலக்கியம் சார்ந்த விழாக்களும் , பல்வேறு போட்டிகளும் நடைபெறும். அப்படி போட்டி நடைபெறுவதற்கான சுற்றறிக்கையை ஆசிரியர் வகுப்பறையில் வாசிக்கும் போதே பலரும் தலைகுனிந்து கொள்வோம். எங்கே நமது பெயரைச் சொல்லி விடுவார்களோ என்று. அப்போது பதினொன்றாம் வகுப்பு நான். பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு போட்டியினை அறிவித்திருந்தார்கள். அப்போட்டிகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அப்போது எனது தமிழையா.
' நீபேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பேசுகிறாய். இல்லாவிட்டால் நான் உன்னிடம் பேசமாட்டேன் ' எனச் சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் நானும் அப்போட்டியில் கலந்து பேசி இரண்டாம் பரிசாக ஆங்கில அகராதி ஒன்றைப் பெற்றேன்.
இன்று நான் பல பள்ளிகளில் , கல்லூரிகளில் , அரிமா சங்கம் , ரோட்டரி சங்கம் என் பேசுவதற்குக் காரணம் அன்று எனது தமிழையா விதைத்த அந்த நம்பிக்கையான விதைதான் காரணம். அதை நான் எப்போதும் பெருமையுடன் சொல்வேன்.
அறிமுகப்படுத்திய சாதனையாளர்கள்.
அன்றைய நிகழ்விற்கு கோவில்பட்டியிலிருந்து சுங்கத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த பல குரல் மன்னன் கேசவன் என்பவரை ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்திருந்தார். விழா முடிந்ததும் என்னை அறிமுகம் செய்து வைத்தார். இன்றும் அந்த பாடகர் திரு. கேசவன் அவர்களுடனான நட்பு எனக்குத் தொடர்கிறது. எனது திருமண விழாவிற்கு வருகை தந்து அவரது இசைக்கச்சேரியை வழங்கிச் சிறப்பித்தார்.
அதைப்போலவே , சிவகாசியிலிருந்து முத்து மணி என்ற சிறந்த ஆசிரியரை , பேச்சாளரை எங்கள் பள்ளி விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். அவரது பேச்சில் உருகிய நான் , அவருக்கு கடிதம் எழுதினேன். அவரும் எனக்கு கடிதம் எழுதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவனாக இருந்து அவர் உரையைக் கேட்ட நான் , ஆசிரியராக உயர்ந்து , இன்று நான் பணி செய்யக்கூடிய இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற விழாவிற்கு திரு. முத்துமணி அவர்களை அழைத்து பேசச்செய்து மகிழ்ந்தேன். இதற்குக் காரணம் நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது எங்கள் பள்ளிக்கு அழைத்து சிறப்புச் செய்த எனது தமிழையா.திரு.அ.கணேசன் அவர்கள்தான்.
இந்தியனே எழுந்து நில் :
பள்ளிப் பருவத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டால் என்ன ? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.பள்ளிப் படிப்பை முடித்தபின் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி எனும் கிராமத்திலிருந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) பயிற்சி.ஆசிரியராகச் சேர்ந்தேன். எனது எண்ணத்தை எங்கள் தமிழையாவிடம் சொன்னபோது மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு , நாகலாபுரம் ppm என்ற அச்சகத்திற்கு அழைத்துச் சென்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். நேரம் மதியமானது. நீ பசி தாங்க மாட்டே ! இந்தா சாப்பிடு எனச்சொல்லி , தனக்காக வைத்திருந்த மதிய உணவை எனக்குக் கொடுத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே சாப்பிடச் செய்தார். அன்று அவர் காட்டிய அந்தப் பரிவுதான் பின்னாளில் நான் விடுதிக் காப்பாளராக பதவி உயர்வில் சென்ற போது , விடுதியைத் தேடி யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுங்கள் என கட்டளையிடச் செய்தது.
இப்படி பல நினைவுகளை அசைபோடலாம். எனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தியது , மதுரையில் எனது வீட்டிற்கு வந்து எனது குடும்பத்தினரை வாழ்த்திச் சென்றது என அனைத்தையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று நான் பல வானொலிகளிலும் , தொலைக்காட்சியிலும் , மேடைகளிலும் பேசுவதற்கு அடித்தளமிட்டவர் எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.
மாணவரின் வளர்ச்சியில்தான் ஆசிரியரின் வளர்ச்சி இருக்கிறது. அந்த வகையில் எனது வளர்ச்சிக்குக் காரணம் எனது பெற்றோர் என்பது எத்தனை உண்மையோ , அதே அளவு எனது தமிழாசியருக்கும் உண்டு. அதனால்தான் தினமலர் நாளிதழின் ' என் போதிமரம் ' பகுதியில் ஐயாவை நினைவு கொண்டு சிறு நன்றியினைப் பதிவு செய்தேன்.
எனது உடலும் உயிரும் இயங்கும் வரை எனது தமிழாசிரியரின் பெயரை எனது நா உச்சரித்துக் கொண்டே இருக்கும்.
இன்று நானும் ஒரு தமிழாசிரியன். என்றாலும் என் ஆசிரியரின் முன்பு என்றும் நான் மாணவனே !
இந்த போதி மரத்தில் என்றும் இளைப்பாறும் பறவையாய் நான்.
மகிழ்வுடன் ,
மு.மகேந்திர பாபு MA, Mphil , B.ed , D.ted ஆசிரியர்.
அரசு ஆதிந.மே.நி.பள்ளி , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
******
முதல்நாள் முதல் வகுப்பு
ஆயிரமாயிரம் கனவுகளோடு நெஞ்சம் பறந்து கொண்டிருந்தது கோவில்பட்டியிலிருந்து சேலம் மாநகர்க்கு அரசு விரைவுப் பேருந்தில். மாணவனாக இருந்த ஒரு பருவம் முடிந்து , ஆசிரியராக அடுத்த நிலைக்கு உயர்த்தும் அந்தக் கணங்கள் கனவுகளாக , காட்சிகளாக விரிந்து கொண்டிருந்தது. நண்பர்களோடு பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.வருங்கால ஆசிரியர்களை சுமந்து செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் பேருந்து விரைவாகச் சென்று கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.
காலையில் சேலத்தில் இறங்கி , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றோம். அங்கே எங்களது பணி ஆணையைக் காண்பிக்க , அருகே இருந்த ஜவான்ஸ் பில்டிங் சென்று பணியேற்பு செய்து கொள்ளச் சொன்னார்கள். அந்தக் கட்டிடத்தில்தான் தனிவட்டாட்சியர் அலுவலகம் இருந்தது.
தனிவட்டாட்சியரைச் சந்தித்து நானும் நண்பன் கருப்பசாமியும் பணி நியமன ஆணையைக் கொடுக்க , அவர் மகிழ்ச்சியோடு பெற்று எங்களை வரவேற்றார். தம்பி கொஞ்ச வயசா இருக்கிங்க . அங்குள்ள பசங்களுக்கு நல்லா கத்துக் கொடுங்க என வாழ்த்தினார். எனக்கும் , நண்பன் கருப்பசாமிக்கும் ஒரே பள்ளியில் பணி நியமித்திருந்தார்கள்.
சேலம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும் , மலைகள் உள்ள இடத்தில் உண்டுஉறைவிடப் பள்ளிகளும் இருந்தன. எங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி - பெரியகுட்டிமடுவு. இந்தப் பள்ளிக்கு எப்படிச் செல்ல வேண்டுமென அலுவலகத்தில் கேட்டோம். சேலத்திலிருந்து அருநூத்து மலை என்ற பெயரில் ஒரு பேருந்து செல்லும் . அதில் ஏறிச் சென்றால் பெரியகுட்டிமடுவுக்குச் செல்லலாம் எனறனர். அந்த ஊரின் பெயரே எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது.
மலைவாழ் மக்கள் வசிக்கக் கூடிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணிலசெய்ய விருப்பமில்லாத சூழல் இருந்த காலம் அது. ஆனால் அதை நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டோம். எங்களுடன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒன்றாகப் படித்த சில நண்பர்கள் ஆத்தூர் வட்டத்திலுள்ள மலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
வாழ்க்கையில் மறக்க முடியாத , விரல் விட்டு எண்ணிச் சொல்லக் கூடியதில் முதன்மையான இடத்தைப் பெற்றிருந்தது நான் பணியில் சேர்ந்த அந்த 07 - 07 - 2000 என்ற நாள்.
சேலம் பேருந்து நிலையத்தில் அருநூத்துமலை பேருந்தில் ஏறி , ' பெரியகுட்டிமடுவு ' க்கு ரெண்டு டிக்கட் எனச் சொல்ல , அங்கே யாரைப் பார்க்க வேண்டும் என்றார் . நாங்கள் ஆசிரியர் பணிக்குச் செல்கின்றோம் என்றேன். அப்படியா ? சின்ன வாத்தியருங்களா கண்ணு ? என்றார் அவர்.
பேருந்து அயோத்தியா பட்டிணம் , வாழைப்பாடி என ஒவ்வொரு ஊராக கடந்த போது , நடத்துநரிடம் பெரியகுட்டிமடுவு வந்து விட்டதா எனக் கேட்டேன். தம்பி ஊர் வந்ததும் நானே சொல்கிறேன் என்றார். ஒரு எதிர்பார்ப்பும் , மகிழ்ச்சியுமாய் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. வாழப்பாடி கடந்து இடது பக்கச் சாலையில் சென்று , பேளூர் என்ற ஊரை அடைந்தது. அங்கு ஐந்து நிமிடங்கள் நின்ற பின்னர் மீண்டும் புறப்பட்டது பேருந்து.
காணும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. கருவேல மரங்களை மட்டுமே கண்டு பழகிப் போயிருந்த என் கண்களுக்கு பாக்கு மரங்களும் , பலா மரங்களும் பசுமை விருந்தளித்தன.
" சார் , இன்னும் ஊர் வரலையா ? " என்றேன். கண்ணு , இதோ வந்து விட்டது என்றார். இறங்கிக் கொண்டோம். சுற்றிலும் வாழை மரங்களும் , நெல் வயல்களும் காட்சி தந்தன. எங்களோடு பேருந்தில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணிடம் , இதுதான் பெரியகுட்டி மடுவா ? என்றேன். இது கண்கட்டிஆலா விலக்கு .கண்ணு அதோ தெரியுது பார் ஒரு பெரிய மலை. அந்தாண்ட இருக்குது பெரியகுட்டி மடுவு. எத்தனை கிலோ மீட்டர்க்கா இருக்கும் ?
சும்மா பக்கந்தான் கண்ணு.ஒரு அஞ்சு கிலோமீட்டர் இருக்கும் என்றார் அந்தப் பெண்மணி.
பக்கம்தான்.அஞ்சு கிலோமீட்டரா ? என அதிர்ச்சியாய் கேட்க ,
ஆமா கண்ணு , இந்த ரோடு வழியாப் போனா முதல்ல சின்னக்குட்டிமடுவு வரும். அதுதாண்டிப்போனா அடுத்து இருக்கற ஊரு பெரியகுட்டிமடுவு.
அதுதாண்டி போனா ?
அதுக்கடுத்து ஊரு கிடையாது கண்ணு. ஆமா , நீங்க என்ன விசயமா வந்திருக்கிங்க ?
நாங்க பள்ளிக்கூடத்திற்கு வாத்தியார் வேலைக்கு வந்திருக்கோம்.
ஓ... அப்படியா ?
ஆமாக்கா ... நீங்க அந்த ஊர்தானா ?
ஆமா கண்ணு.எங்க ஊர் பள்ளிக்கூடத்தில ஒரேயொரு பெரிய டீச்சர் மட்டும்தான் இருக்காங்க. சின்ன வாத்தியார்ங்க யாருமே இல்லை. நல்ல வேள ... நீங்க வந்திட்டீங்க.இனி எங்க புள்ளைங்களுக்கு கவலையில்லை என்றார் அந்தப் பெண்மணி.
ஆமாக்கா இங்கிருந்து உங்க ஊருக்கு ஆட்டோ , வேன் ஏதும் கிடையாதா ?
ஒன்னும் கிடையாது.நடந்துதான் போகணும் என்றார்.
நண்பன் என் முகத்தைப் பார்க்க , சரி ... வாடா நடக்கலாம். நடக்கிற விசயம்தான் இது எனச் சொல்லி அந்தப் பெண்ணுடனும் , அதே பேருந்தில் வந்த ஒரு சிலருடனும் நடக்க ஆரம்பித்தோம்.ஊர்களில் காடு , மேடென அலைந்ததும் , தினமும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் நடந்து சென்று வந்ததாலும் , தூரம் பற்றி பெருமளவு யோசிக்க வேண்டிய அவசியம் எங்களுக்குள் எழவில்லை.
மலைக்காற்று சிலுசிலுவென வீசியது. இயற்கையை இரசித்தபடியே பத்தடியில் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட கிணறுகளையும் , வருடம் முப்போகம் அறுவடை செய்யக்கூடிய நெல்வயல்களையும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே வந்தோம்.வழியில் ஒரு சிறு ஆறு வந்தது.ஆறுமன்றி , ஓடையும் அன்றி இருந்த நீர்நிலை அது.அதைப்போல மொத்தம் ஆறு ஆறுகள் குறுக்கே வந்தன.அப்போதுதான் தெரிந்தது அந்த ஊருக்கு ஏன் பேருந்து.வரவில்லை என்று.சின்னக்குட்டிமடுவை கடந்து ஒரு மணி நடைக்குப் பின்னர் பெரியகுட்டிமடுவு ஊரை நெருங்கினோம். அதுவரை சமதளத்திலும் , ஆற்றையும் கடந்து வந்த எங்களுக்கு , சிறுமலைமேட்டில் ஏறுவதைப் போல இருந்தது ஊருக்குள் நுழைந்தபோது. அவ்வளவு மேடான பகுதி அது. மேல்மூச்சு , கீழ்மூச்சு வாங்க நடந்து பள்ளியை அடைந்தோம்.
எங்களைக் கண்ட அந்த ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம்.மக்களும் , பசங்களும் எங்களை வித்தியாசமாகவும் , வேடிக்கையாகவும் பார்ப்பதைப் போலத் தோன்றியது எங்களுக்கு.சுமார் எழுபது மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில் ஒரேயொரு தலைமையாசிரியை மட்டுமே ! ஊரின் முகப்பிலே பள்ளி இருந்தது.ஜயலட்சுமி என்ற அந்தத் தலைமையாசிரியையிடம் எங்கள் பணி நியமன ஆணையைக் கொடுத்து , ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் எங்கள் பெயரை எழுதி , முதன் முதலில் கையெழுத்திட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
தலைமையாசிரியையும் , ஊர்மக்களும் , மாணவர்களும் எங்களை அன்பினால் ஆழ்த்தினார்கள். நாங்கள் இருவரும் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். மாணவப் பருவம் முடிந்து ஆசிரியரான அந்தத்.தருணத்தை இப்போது நினைத்தாலும் உள்ளம் நெகிழ்கிறது.
தம்பிகளா , நீங்க எந்தெந்த வகுப்பு எடுக்கப்போறிங்க ? எனக் கேட்டார் தலைமையாசியை.
நீங்கள் சொல்கிற வகுப்பு எடுக்கறோம் எனச்சொல்ல , ஒன்றாம் வகுப்பு , இரண்டாம் வகுப்பு எனக்கும் , மூன்று , நான்கு , ஐந்தாம் வகுப்புகள் நண்பனுக்கும் , 6,7,8 வகுப்புகள் தலைமைஐயாசிரியைக்குமெ எனப் பிரித்துக் கொண்டோம்.
முதன்முதலில் ஆசிரியராக அந்தச் சின்னஞ்சிறு மாணவ மலர்களுடன் பேசுகிறேன். இதுவரை உதவி ஆசிரியர் இன்றி இருந்த அந்தப் பள்ளிக் கூடம் எங்கள் வருகையினால் ஆர்ப்பரிக்கின்றது. நமக்கு சின்ன வாத்தியார்கள் வந்திட்டாங்க என மாணவர்கள் மகிழ்கிறார்கள். பெற்றோர்கள் வந்து எங்களைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். அந்தத் தருணம் ஆகாயத்தில் பறப்பதைப் போன்ற உணர்வினைத் தந்தது.
மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர்களைக் கேட்கிறேன்.அருகில் வந்து நின்று உரிமையோடு பெயரினைச் சொல்கிறார்கள்.கள்ளமில்லா அந்த வெள்ளை உள்ளங்களில் கல்வியின் வெளிச்சம் படரத் தொடங்குகிறது. எனது உயிரும் , மெய்யும் இரண்டறக் கலந்த அந்த தருணத்தில் தமிழ் உயிரெழுத்துகளை எழுதிப் போடுகின்றேன்.
மற்ற வகுப்புகளில் பாடம் பயிற்றுவிப்பதை விட , ஒன்று , இரண்டாம் வகுப்பில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நிலத்தில் விதையை ஊன்றுவதைப் போன்றது. கரும்பலகையில் எழுதிய எழுத்துக்களை வாசிக்கின்றேன். அ என்றால் அம்மா , ஆ என்றால் ஆடு , இ என்றால் இலை என ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு வார்த்தை சொல்லி எழுத்துக்களை மனதில் பதிய வைக்கின்றேன். எழுத்துக்களை எப்படித் தொடங்கி எழுத வேண்டும் என அம்புக்குறியிட்டுக் காட்டுகின்றேன்.
அந்தப் பிஞ்சு விரல்களைப் பிடித்து ப , ட , ய , ள , ர என எழுதிய எழுத்தின் மீது எழுத வைக்கின்றேன். ஆர்வத்தோடு எழுதுகிறார்கள். அவர்களின் கண்களில் ஒளி தெரிகிறது. எழுதிய வேகத்தில் கொண்டுவந்து காட்டுகிறார்கள். சின்னசார் எனக்கு ரைட் போடுங்க எனச் சொல்கிறார்கள் மகிழ்ச்சியோடு. கதையோடும் , ஆடலும் , பாடலுமாய் முதல் நாள் முதல் வகுப்பறை மகிழ்வோடு சென்றது.
24 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் கடந்திருந்தாலும் , நேற்று நடந்ததைப் போல் இருக்கின்றன அந்த நிகழ்வுகள். இன்று 9 , 10 , 11 வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக இருந்தாலும் , அன்று முதல் வகுப்பு மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததும் , அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதும் என வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத தருணமாகும். மனம் நினைக்கிறது மீண்டும் ஒரு காலம் வரவேண்டும் முதல் வகுப்பு ஆசிரியராக மாறுவதற்கு !
கட்டுரை
மு.மகேந்திர பாபு ,
**********
சூழல் காத்துச் சுகம் பெறுவோம் !
(உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜூன் - 5 )
கட்டுரை - மு.மகேந்திர பாபு , தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்ஙாளர் & பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆதிந ) , இளமனூர்.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்.
தெளிந்த நீரும் , பரந்த நிலமும் , உயர்ந்த மலையும் , அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம் , நம் பழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம்.
இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை . மலைகளும் , மரங்களும் , ஆறுகளும் , கடல்களும் , பறவைகளும் , விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன. கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமையாகும். மனித இனம் , தம் சுற்றம் குற்றமற்று வாழ , சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் நாள் :
ஒவ்வொரு.ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் , செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் , உலகச் சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் , சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும் , சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும். 1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் ' மனித குடியிருப்பும் , சுற்றாடலும் ' என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் , இயற்கை வளங்கள் , அதன் பயன்பாடு போன்றவை பற்றிக் கலந்துரையாடப் பட்டது.
மாறிவரும் இயற்கைச் சமநிலை :
இயற்கை வளங்களான நீர்நிலைகள் , காடுகள் , காட்டுயிரிகள் , காற்று மணடலம் , பறவைகள் , கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனித இனம் , விலங்கினம் , பறவையினம் , தாவர இனம் , கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்தச் சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது. இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் , ஆபத்ததாகவும் அமைந்து விடுகின்றன. நவீன விஞ்ஞான , தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசடைந்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.
சுற்றுச் சூழல் காப்பதில் பள்ளிகளின் பங்கு :
' இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான் ' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ். குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள்தான் மனிதராக மாறும்போது அவை மரமாக வளர்ந்து நிற்கும் . இதைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன . பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் மன்றம் , தேசிய பசுமைப்படை மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக , மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல் , அரசு விழாக்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு அரசு விழாக்களிலும் ஒருமரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல் , தேசத்தலைவர்களைப் போற்றும் வகையில் அவர்களது பெயரிலேயே மரக்கன்று நடச்செய்தல் , உலக சுற்றுச் சூழல் தினம் , உலக வனநாள் போன்ற தினங்களைப் பள்ளிகளில் கொண்டாடாடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல் , இயற்கை உரங்களைத் தயாரிக்கவும் , பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல் , சிறப்பாக மரம் வளர்க்கும் மாணவர் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக புத்தகங்கள் , பூச்செடிகள் பரிசளித்துப் பாராட்டுதல் , தங்கள் வீடுகளிலும் , வீதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை உருவாக்குதல் , இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி மாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பள்ளிகள் இன்று சிறப்பாகச் செய்து வருகின்றன.
சுற்றுச் சூழல் காப்பதில் தனிமனிதனின் பங்கு :
' ஒரு சந்ததி போகிறது , மறு சந்ததி வருகிறது . பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது ' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் , சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் . இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல , புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்பதை உணர வேண்டும். பாலித்தீன் , பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும் . கடைகளுக்குத் துணிப்பைகளைத் தூக்கிச் செல்ல வேண்டும். இன்று , மஞ்சள் பைகளையோ , துணிப்பைகளையோ தூக்கிச் செல்வதை மரியாதைக் குறைவாக எண்ணும் மனநிலை நம்மிடம் உள்ளது. இந்த எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். கடைகளில் ஐந்து ரூபாய்க்குப் பொருள் வாங்கினாலும் , அதற்கும் பாலித்தின் பை கேட்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம். துணிப்பைகளைப் பயன்படுத்தினால் நமக்கும் , எதிர்காலச் சந்ததியினர்க்கும் துக்கம் இல்லை. நெகிழிப்பைகளை நினைத்தாலே தூக்கம் இல்லை. மண்ணின் வளத்தை மடியச் செய்து விடும். ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.பதினைந்து இலட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனும் பல இலட்சங்களுக்கு அதிபதியாவான் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரமாக்கும் போது. எனவே , சுற்றுச் சூழலின் முக்கியப் பங்கினை தனிமனிதன் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சூழல் மேம்பட ...
' தூய்மை பாரதம் ' என்ற திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை மேம்படச் செய்துவருகிறது. பாலித்தின் பைகளுக்கு மாற்றாக இனிப்பகம் மற்றும் கடைகளில் பனையோலைக் கொட்டான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம். இதனால் பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மேம்படும். காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். மக்கும் குப்பைகள் , மக்காத குப்பைகள் என வீடுகளிலும் , தெருக்களிலும் தனித்தனியாகக் குப்பைகளை இடச்செய்யலாம். நெகிழித் தேனீர்க் கோப்பைகளுக்குப் பதிலாக மண்பாண்டக் குவளைகளைப் பயன்படுத்தச் செய்யலாம். தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்திப் பரிசுகள் வழங்கலாம்.
பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம். மரங்கள் நிறையும் போது , நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும். இயற்கையை நேசிப்போம் ! இயன்றதை யாசிப்போம் !
கட்டுரை.
மு.மகேந்திர பாபு ,
தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் & பட்டதாரி தமிழாசிரியர் ,
அரசு மேல்நிலைப்பள்ளி ( ஆதிந ) , இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410
மின்னஞ்சல் : tamilkavibabu@gmail.com
**********
ஜூன் - 20 - தந்தையர் தினம்
அப்பா எனும் ஆண்டவன்

(நெஞ்சில் நிறைந்திருக்கும் அப்பாக்களுக்கு)
************************ ******************
நினைவு தெரிந்த நாளிலிருந்து நெஞ்சில் நிறைந்திருப்பவர் அப்பா. எனக்குப் பிடித்த கதாநாயகன். அப்பா ஒரு சகலகலா வல்லவன். அவரிடம் உள்ள அசாத்திய திறமைகளை அருகிருந்து பார்த்து ரசித்தவன். வியந்தவன்.
விவசாயி , ஓவியர் , பேச்சாளர் , சித்தமருத்துவர் , சோதிடர் எனப்பல திறமைகள் அவருக்குள் உண்டு. அது எல்லா நேரமும் வெளிப்படாது. தேவையான போது வெளியே வரும்.
மாமா தேள் கொட்டிருச்சு. நட்டுவாக்காலிய மிதிச்சிட்டேன். இராத்திரில இருட்ல ஒன்னுந் தெரியல ஏதாவது மருந்து இருந்தா போட்டு விடுங்க மாமா என வருபவர்களிடம் , கொஞ்ச நேரம் உக்காரு. வாரேன் எனச்சொல்லி விட்டு , கையில் இலைகளை நன்கு கசக்கி வைத்தியம் செய்வார். சரியாப் போச்சு மாமா எனச் சென்றுவிடுவார்கள்.
அக்காவின் சயின்ஸ் ப்ராக்டிகல் நோட்டில் இருந்த படங்களில் அப்பா வரைந்த படங்களே அதிகம். சித்ப்பா புதுசா வீடுகட்டிப் பால்காய்ச்சு வைக்கும்போது அனுமார் படம் ஒன்னு சுவரில் வரைந்து கொடுத்தார்.
எலேய் ... என்னடா ! இங்கிட்டு அலையுற.
சும்மாதான் மாமா.
சரி இப்படி வா.
ஓன் இடது கைய நீட்டுல பாப்போம்.
ஆமா மாமா ! எனக்கு எப்போ கல்யாணம் நடக்கும்னு பாத்துச் சொல்லுங்க எனக்கேக்க ,
இந்தா பார்ரா இதான் ஆயுள் ரேகை
இது புதன் மேடு என சொல்லிக்கொண்டிருப்பார். இவரு உண்மையிலேயே சொல்றாரா ? பொய் சொல்றாரா ? என நினைத்த பருவம் அது.
' பம்பனக்கானு ' எங்கூர்ல ஒரு அண்ணன் இருந்தாரு. அவுக அம்மாவ ஏமாத்தனம்னு காலி ரோக்கர் பாட்டில்ல கொஞ்சம் தண்ணிய ஊத்தி , வீட்டுக்குள்ள தெளிச்சுவிட்டு , தன்னோட உடம்புலயும் ஊத்திக்கிட்டாரு. வேலக்கிப் போன அவுக அம்மா வந்து பாக்குது. வீடெல்லாம் ரோக்கர் வாசம்.
ஏலே ! பம்பனக்கா னு கூப்புட , இவன் கண்ணச் சொருகி படுத்துக் கெடக்கான்.
இவன் ஏதோ எடக்கு மடக்கா பண்ணிட்டான் போல இருக்கேனு அவுக அம்மா ஓ னு கூப்பாடு போட , ஊர்ச்சனம் கூடிச்சு. கொஞ்ச நாளாவே எனக்கு கல்யாணம் முடிச்சு வை னு சொல்லிக்கிட்டு இருந்திருக்கான். ஒழுங்கா ஏதாச்சும்வேல பாரு. பொண்ணு பாக்கன் னு அவுக அம்மா சொல்லிருக்கு.
பொண்ணு பாக்கலனு தான் மருந்தக் குடிச்சிட்டான் போலனு கூட்டத்தில பேசுறாக.
ஏ ! ஆஸ்பத்திரிக்குப் போகலாம்பா. டக்குனு மாட்ப்பூட்டி வாங்க. விளாத்திகுளத்துக்கு , எட்டயாரத்துக்கோ போவோம். ஆளப் பிழைக்க வச்சிரலாம்னு பெருசுக சொல்றாக.
அந்த நேரம் பாத்து எங்கப்பா வராரு.
யே ! கொஞ்சம் தள்ளுங்கப்பா ! இந்தா முருகாச் சின்னையா வந்துட்டாரு.
ஏன்டா இந்தக் கூட்டம். கொஞ்சம் காத்தோட்டமா இருக்கட்டும். பம்பனக்கான முதல்ல வெளியில தூக்கிட்டு வாங்கல.
என்னம்மா குடிச்சான் ?
தம்பி , பருத்திச் செடிக்கு அடிக்க வச்சிருந்த ரோக்கரு ஒரு பாட்டல குடிச்சிட்டான் தம்பி. இந்தா பாரு , வெறும் பாட்டில்தான் இருக்கு.
அப்படியா ? ஒன்னும் பிரச்சன இல்லமா ! மாப்ள இன்னும் அஞ்சே நிமிசத்தில எந்திருச்சு ஓடுவாரு.
பம்பனக்கான் திரு திருனு முழிக்கான்.
அவுக அம்மா சொல்லுதாக. இந்தா பாருங்க தம்பி. பிள்ளக்கு முழி உள்ள போகுது.
போகட்டும் ! போகட்டும் !
எலே ! அஞ்சாறு எளவட்டப் பசங்க மட்டும் இங்க வாங்கடா !
என்ன மாமா ! இவனுக்கு மருந்து , வீட்டுக்குப் பின்னாடி இருக்குற வேலிக்குள்ள இருக்கு. அதப் பிரக்கிட்டு வாங்கலேய்.
என்ன மாமா சொல்றீக !
ஆமால. மருந்து ரொம்ப குடிச்சிருக்கான். பன்னிச்சாணிய ஒரு வாளில கரைச்சுக் கொண்டு வாங்க. வாயில ஊத்துனா விசத்த உடனே கக்கிருவான் அப்படின்னார் அப்பா.
ஒரு நிமிசத்தில கொண்டு வாரோம்னு இளவட்டங்க கிளம்ப , அதுவரை கண்ணச் சொருகிக்கிட்டு இருந்த பம்பனக்கான் தெறிச்சு ஓடுறான் கம்மாயப் பாத்து.
என்ன மாமா ! எந்திருச்சு ஓடுறான். இன்னும் மருந்தே கொடுக்கலயே !
ஏலேய் ... அவன் அம்மாவ ஏமாத்தப் போட்ட நாடகம்ல இது. சரி.சரி எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போங்கப்பா.
மறுநாளு பம்பனக்கான் ,
என்ன மாமா , கொஞ்சம் தாமதிச்சு இருந்தா வாயில கரைச்சு ஊத்திருப்பீக போலயே.!எனச் சொல்லிச் சிரிக்கான்.
எங்க ஊர்லயே அதிகம் படிச்சவர் எங்க அப்பாதான். அந்தக்காலத்து பத்து. போஸ்ட் ஆபிசு வேலக்கி வந்திருக்கு போகல. வாத்தியார் வேலக்கி வந்திருக்கு அதுக்கும் போகல. போயிருந்தா எப்படி இருந்திருப்போம்னு சொல்லுவாரு.
படிக்கும் போது அப்பாவ எதிர் பார்த்த நாட்கள் அதிகம்.
அப்ப தோட்டத்தில கத்தரிச்செடி போட்ருக்கோம். காலைல வெரசாப்போய் காயப்புடுங்கி , எட்டு மணிப்பஸ்ல விளாத்திகுளம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போகனும். கத்தரிக்காய் கிலோ. அஞ்சு ரூவாய்க்கு போனா அது நல்ல காசு. கமிசன் கடைல போட்டுட்டு , மத்தியானப் பஸ்ல ஆளுக்கொரு முட்டைக்கோஸ் வாங்கிட்டு வருவாரு. அது வெடிச்ச பருத்திச்சுள போல இருக்கும். அதுக்காகவே பஸ் ஸ்டாப்ல போய் காத்துக்கிடந்த காலம் பொற்காலம்.
சுத்து வட்டாரத்தில் அப்பாவத் தெரியாத ஆளே இல்ல . அப்பா படிச்ச பள்ளிக்கூடத்திலதான் நானும் படிச்சேன்.12 ஆம் வகுப்பு முடிச்சுட்டு அதே பள்ளிக்கூடத்துக்கு 20 வருசம் கழிச்சு இலக்கிய மன்றத்துக்கு சிறப்பு விருந்தினரா எங்க தமிழையா கவிஞர்.அ.கணேசன் கூப்பிட்டாரு. தலைமையாசிரியரா திரு.விஜய வீரன் சார் இருந்தாரு. அப்ப முன்னாள் மாணவர்ஙகிற முறையில அப்பாவையும் கூப்டாங்க .
அப்பா அருமையா பேசுனார் மேடையில்.இங்க சிறப்பு விருந்தினரா பேசுறதுக்கு என் மகனக் கூப்பிட்டிருக்கிங்க. அவன்தான் பேசனும். நான் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா நல்லாருக்காதுனு அஞ்சு நிமிசத்தில பேசிட்டு வச்சிட்டார். அப்றம் நான் ஒரு மணி நேரம் அந்த விழாவில் பேசுனேன்.
மதுரயிலுருந்து ஊருக்குப் போகும்போது அப்பாதான் பாலம் ஸ்டாப்பிலிருந்து வீட்டுக்கு ஸ்கூட்டர்ல கூட்டுப் போவார். அவர் கூட பத்து நிமிசம் வண்டில போற சந்தோசம் இருக்கே ! அடேயப்பா !
ஆனாலும் ஒரு பயம் இருக்கும்.சும்மா வரமாட்டார். கம்ப ராமாயணம் முழுசும் தெரியுமா? ஐம்பெருங்காப்பியத்தில என்னென்ன படிச்சிருக்க ? என்னலே தமிழ் வாத்தியாருங்குற. இது தெரியலங்கற என்பார். அவருக்குப் பயந்துக்கிட்டே சிலத படிசசேன் ங்கறதான் உண்மை.
அப்பாஅளவு யாராலும் எட்டு வச்சு நடக்க முடியாது. தோட்டத்தில தலைகீழா அப்படியே நிப்பார். இப்பவும் சோடா பாட்டில பல்லால கடிச்சு திறப்பார்.
எம்பா ! இங்க இருந்துக்கிட்டு. பேசாம எங்கூட மதுரக்கி வந்திர வேண்டியதானே !
யார்ரா இவன் ? உடம்புல தெம்பு இருக்கற வரைக்கு உழைச்சு சாப்பிடனும்டா. அந்த ஊரெல்லாம் எனக்கு செட்டாகுது என்பார்.
கம்பராமாயணமா ? திருக்குறளா ? ஔவை பாடலா ? நினைச்ச நேரத்தில் மளமளனு சொல்வார் அப்பா.
பள்ளிப் பருவத்தில் எனது கவிதை ஆர்வத்தைக்கண்டு 17 வயதில் என்னைக் கவிதைப் புத்தகம் வெளியிடத் தூண்டியவர்
அவ்வப்போது நாளிதழ்களில் எனது கட்டுரை வரும்போத் , யாராவது சொல்லி , அதைக்கேட்டுப் போன் செய்வார். அப்பாவின் பெரிய பலம் அம்மாதான். அம்மாவின் இழப்பு அப்பாவை நிலைகுலைய வைத்தது. அதிலிருந்து அவர் மீண்டு வந்தாலும் இன்னும் பழைய அப்பாவாக அவர் இன்னும் மாறவில்லை.
தினமும் ஒரு முறையாவது அப்பாவின் குரல் கேட்டால்தான் இந்த நாள் இனியதாகும். அப்பாவின் தோளில் அமர்ந்து , சுருட்ட முடியக் கொத்தாகப் பிடித்து சாமி பார்த்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள். இதைப்பற்றி நான் எழுதிய கவிதை கல்கி வார இதழில் வந்தது.

இப்போதுதான் உணர்கிறேன் சாமி பார்த்ததே அந்தச் சாமி மீது அமர்ந்துதான் என்பதை.!
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
*********************** ******************
மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சி நிலைக்குமிடம்.
(ஜூன் - 5 , உலகச் சுற்றுச்சூழல் தினம் - சிறப்புக் கட்டுரை )
' மரங்களால் சுற்றுச்சூழல் வளமாகும்
மனித வாழ்வு நலமாகும் '
' மரம் வளர்க்க மழை பொழியும்
மழை பொழிய வறுமை ஒழியும் '
' ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ ;
நாளை மண்ணை மகிழ்வாய் ஆள '
' மரம் மனிதனின் மூன்றாவது கரம் '
ஆம் ! மரம் மனிதனின் மூன்றாவது கரம். இரு கைகளைக் கடந்து , இயற்கையைக் காக்கும் மூன்றாவது கரமாக உள்ளது மரம் இன்று . சுற்றுச் சூழலைச் சுகமாய் காப்பதில் மரங்கள் முதன்மையான காரணியாக விளங்குகின்றன. மரங்கள் பூக்கும் போதெல்லாம் மனித மனங்களும் பூக்கின்றன. ஆதி மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த போது இன்பமாக வாழ்ந்தான். மனிதன் நிர்வாணமாக இருந்த போது , மரம்தான் தன் இலைதழைகளை , மரப்பட்டைகளை ஆடையாகக் கொடுத்து , மானம் காத்தது. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்று மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை நிர்வாணமாகி வருகிறது. மரங்கள் அதிகளவு இருக்கும் வரை சுற்றுச்சூழல் சுகமாக இருக்கும்.மரங்கள் அழியத் தொடங்கும் போது மனித சமுதாயத்தின் அழிவும் தொடங்கிவிடும்.
மரங்கள் மண்ணின் மைந்தர்கள். மரங்கள் நம் தேசத்தின் தியாகிகள்.தியாகிகள் இல்லையென்றால் நம் வாழ்வில் திருப்பங்கள் ஏது ? மரங்கள் இல்லையென்றால் நம் வாழ்வில் மகிழ்ச்சி ஏது ? நம் உடலும் உள்ளமும் உறுதி பெற நமக்காககத் தவம் செய்யும் முனிவர்கள் இந்த மரங்கள் நம்மை மகிழ்விக்கும் அந்த மரங்களின் சந்ததி நம்மோடு கடைசி வரை பயணித்தால் நமது வாழ்க்கைப் பயணம் வளமாக , நலமாக இருக்கும். நாம் பெருக்கச் சொன்னதைச் சுருக்கினோம் ; அது மரம். சுருக்கச் சொன்னதைப் பெருக்கினோம் ; அது மக்கள் தொகை.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மரங்களும் பெருகினால்தான் மனித குலம் தழைக்கும் , பிழைக்கும் , நிலைக்கும்.
மரங்களும் கடவுள்களும் .
ஆதிகால மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கினான். மரவழிபாடு அன்று இருந்தது. கடவுள் மரங்களில் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கை இன்றும் நம் மக்களிடம் உள்ளது. சங்க இலக்கியமும் , பக்தி இலக்கியமும் இதைப் பதிவு செய்துள்ளன. நோயால் மக்கள் இறந்த போது தங்களையும் , தங்கள் சந்ததியையும் காப்பாற்றிய தாவரங்களை மக்கள் தெய்வமாக வழிபட்டனர். பின்னாளில் தெய்வ உறைவிடமாக இருந்த மரம் அழிக்கப்பட்டு , கட்டடங்கள் எழுப்பப்பட்டு கோவில்கள் உருவாக்கப்பட்டன. மனிதர்களால் மரங்கள் தெய்வ நிலையை இழந்தன.
இயற்கை சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்பினான். அதுவே மரவழிபாடாக மலர்ந்தது. ஒவ்வொரு கோவிலுக்கும் தலமரங்கள் உண்டு. சிவபெருமானுக்கு ஆலமரமும் , மீனாட்சி அம்மனுக்கு கடம்ப மரமும் , விநாயகருக்கு அரசமரம் & வேப்பமரமும் , மாரியம்மனுக்கு வேப்பமரமும் , கண்ணகிக்கு வேங்கை மரமும் தலவிருட்சங்களாக உள்ளன.நாட்டுப்புறத் தெய்வங்களான சிறு தெய்வங்கள் ஏதேனும் ஒரு மரத்தினடியில் அமைந்திருப்பதையும் , மரத்தோடு இணைந்து அவை வழிபடப்படுவதையும் நாம் காணலாம். கடவுளோடு கைகோர்த்து நிற்கின்ற மரங்கள் மனிதனின் பார்வையிலிலிருந்து தப்பி வாழ்ந்து வருகின்றன.
மரங்களும் மன்னர்களும் .
சங்ககால மன்னர்கள் மரங்களை தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்தனர். வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். ' ஆர் ' என்கிற அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். ' போந்தை ' என்கிற பனைமரம் சேரமன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டல மன்னர்களின் சின்னமாகத் திகழ்ந்தது. தமிழக பேரரசர்கள் மற்றும் சிற்றரசர்களின் கோட்டைகளில் காவல் மரங்கள் என்ற பெயரில் பல மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. காவல் மரம் ' கடிமரம் ' என அழைக்கப்பட்டது. கடிமரத்தை மாற்றான் வீழ்த்தினால் மன்னன் வீழ்ந்தான் என்பது பொருள்.
மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர் அசோகர்தான் மரங்களை நேசித்த மாமன்னர்எனச்சொல்லலாம்.சாலையோரம் மரங்களை நட்டு வைத்து பயணத்தை குளுமையாக்கியவர் இவரே ! இன்றும் நமது கிராம , நகரச் சாலைகளில் இருபுறமும் மரங்கள் இருப்பதற்குக் காரணம் அசோகர் . இன்றும் நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலமாக சாலையோரம் மரம் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மரங்களும் மனிதர்களும்.
ஒரு காகம் தன் வாழ்நாளில் எச்சங்கள் மூலமாக பல்லாயிரம் மரங்களை நடுவதாக ஆய்வு சொல்கிறது. மனிதர்களாகிய நாம் எத்தனை மரங்களை நட்டு வைத்துப் பராமரிக்கிறோம் ? எனக் கேள்வி கேட்டால் அதற்கான பதில் என்னவாக இருக்கும் என் நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கம் முன்பு. ' ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் ' என்ற முழக்கம் இன்று வழக்கமாகி வருகிறது.
நம் வீட்டைச் சுற்றி பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும் என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார். வீட்டிற்கு முன் ஒரு வேப்ப மரம் .பக்கத்தில் ஒரு முருங்கை மரம் , பப்பாளி மரம். குளிக்கும் தண்ணீர் போகுமிடத்தில் வாழை மரம். பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம், ஒரு எலுமிச்சை மரம். அதன் நிழலில் ஒரு கறிவேப்பிலைச் செடியும், நெல்லிச் செடியும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம். இடம் இருத்தால் பலா மரம், ஒரு மாமரம். இப்படி இருந்தால் பசியுடன் ஒருவர்கூடத் தூங்க மாட்டார்கள் என நம்மாழ்வார் கூறுகிறார்.
பத்து மரங்கள் நட இயலாவிட்டாலும் ,இடமில்லாவிட்டாலும் ஒத்த மரமாவது நடலாம்.போதி மரம்தான் நடவேண்டும் என்றில்லை . நமக்குப் போதிய மரங்கள் நட்டு வைத்தால் கூட போதும். மரங்களின் மகத்துவத்தை வளரும் சமுதாயமாக உள்ள மாணவர்களின் மனதில் விதைக்க வேண்டும். பிறந்தநாளின் போது மரம் நட ஊக்குவிக்க வேண்டும். இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மாணவர்களிடம் , ஒரு மரமோ , பூச்செடியோ நட்டு வைத்து அந்த மாணவனையே பள்ளியில் பராமரிக்கச் செய்து வரலாம் . மரம் வளர , மாணவன் வளர்வான். மாணவன் வளர , மரம் வளரும். பத்தாண்டுகள் கழித்து தான் பயின்ற பள்ளிக்கு வரும்போது மரமும் வளர்ந்திருக்கும். அந்த மாணவனும் கல்வியால் வாழ்வில் வளர்ந்திருப்பான்.
அரசு விழாக்களின் மேன்மையை மாணவர்கள் உணர , அவ்விழாக்களை நினைவுபடுத்தும் விதமாக அந்த நாட்களில் மரங்களை நட்டு வைத்துப் பராமரிக்கலாம். குடியரசு தினம் , சுதந்திர தினம் , சுற்றுச்சூழல் தினம் , காடுகள் தினம் , கர்மவீரர் காமராசர் பிறந்த தினம் ,அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் , மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினம் என தலைவர்களின் பிறந்த நாட்களிலும் மரங்களை நட்டு வைத்து , மரங்களுக்கு தலைவர்களின் பெயர்களைச்சூட்டி , பசுமைப்படை , சுற்றுச்சூழல் மன்ற மாணவர்களிடம் மரங்களைப் பாராமரிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். நெகிழிப்பைகளை நீக்கி , துணிப்பைகளைத் தூக்கி கடைகளுக்குச் செல்லலாம். பனைப்பொருட்களான ஓலைக்கொட்டான் , முறம் போன்றவற்றைப் பயன்படுத்தி , பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
மரங்களும் பயன்களும் .
கடும் கோடை வெயிலில்தான் மரங்களின் மகத்துவத்தை நம் மனங்கள் அறியத் தொடங்குகின்றன. காடுகள் அழிக்கப்பட்டு , காங்க்ரீட் காடுகளாக மாறிவிட்ட மாநகரங்களில் தன் வாகனத்தை நிறுத்த எங்கேனும் ஒரு மரம் கிடைக்காதா என தேடுகிறோம். மரம் கிடைத்த மகிழ்ச்சியில் அங்கு சென்றால் , ஏற்கனவே அங்கே நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன குறுக்கும் நெடுக்குமாக. பல பள்ளிகளில் இன்றும் மரங்கள்தான் தன் கிளைக்கரங்களால் மாணவர்களுக்கு வகுப்பறையாக வாழ்ந்து வருகின்றன. வாடகையின்றி வசிக்கும் பறவையினங்கள் மரங்களின் பழங்களை உண்டு , நன்றிக்கடனாகத் தன் எச்சங்களின் மூலமாக மரங்களைப் பெருக்குகின்றன.
சாதாரண அளவுள்ள ஒரு மரம் தனது ஆயுட்காலத்தில் 32 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சேவையைச் செய்கின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் சேகரிக்கப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கிறது ஒரு நிறுவனம். ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட காற்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இலவசமாகக் கிடைத்தது. இன்று காசு கொடுத்து வாங்குகிறோம். இன்று காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வந்து விட்டது. வரும் காலத்தில் நம்மிடம் பணம் நிறைய இருக்கும். ஆனால் தேவையான அளவிற்கு குடிநீர் , தூய்மையான காற்று கிடைக்காது. நம் பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டுச் செல்வதை விட மரங்களை விட்டுச் செல்வோம். ஒரு மரம் வெட்டப்பட்டுக் கீழே விழும் போது , மனித இனத்தின் மகிழ்ச்சிச் சங்கிலி அறுபடத் தொடங்குகிறது.
நமது உறவுகளை அறிமுகம் செய்வதைப்போல நமது பிள்ளைகளுக்கு மரங்களை அறிமுகம் செய்து வைப்போம். வனங்களுக்கு அழைத்துச் சென்று மாணவரது மனங்களைப் பசுமையாக்குவோம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மண் கொடுத்த சீதனமான மரங்களை சேதாரமின்றிக் காப்போம். மரம் போல் வாழ்வோம் !
கட்டுரை.
மு.மகேந்திர பாபு ,
பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ,
அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆ.தி.ந.) இளமனூர் , மதுரை.
பேசி - 97861 41410.
****
Show quoted tex
*********
மிட்டாய் ... ஜவ்வு மிட்டாயே ...!
சீனி மிட்டாய்
சிக்கடி மிட்டாய்
அடுப்புப் பானைய உருட்டும் மிட்டாய்
அழுத பிள்ளைய அமத்தும் மிட்டாய்
சந்தோசமாத் திங்கவே
ஜவ்வுமிட்டாய் வாங்கிக்கோ ...
என இராகமாய்ப் பாட்டுப்பாடி , பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டே வருவார் ஜவ்வுமிட்டாய்த் தாத்தா. பள்ளிக்கூட நாட்கள்ல சாய்ந்திரமும் , லீவு நாட்கள்ல காலயிலும் வந்து செல்லும் தாத்தாவுக்காக சின்னப் பசங்க கூட்டம் எப்போதும் உண்டு. தன் வீட்டாரை அண்டியிருக்காது , வேலை செய்து வருமானம் பார்க்கும் அறுபது வயசு எளவட்டம் அவர்.
தாத்தாவின் சைக்கிளில் சோத்தாங்கைப் பக்கத்து ஹேண்டில் பாரில் காசுபோட ஒரு சுருக்குப் பையும் , நொட்டாங்கைப் பக்கம் ஒரு மணியும் தொங்கவிட்ருப்பாரு. பெரும்பாலும் மணியடிக்க வேண்டிய வேல இருக்காது. தாத்தாவைப் போலவே சைக்கிளும் உழைத்து உழைத்து 'கிரீச் கிரீச் ' என மேமூச்சு கீமூச்சு வாங்கும். எட்டயபுரத்திலிருந்து பொன்னையாபுரத்துக்கு வருவார்.
தாத்தாவின் சத்தம் கேட்டாலே எங்களுக்குச் சந்தோசம்தான். சைக்கிளு சென்டர்ஸ்டாண்டக் கூடப் போட விடாம , அவர மொச்சிருவோம். எலேய் ... இருங்க .எல்லாத்துக்கும் தாரேன். ஏன் அவசரப்படுதீக ? என்பார். இன்னிக்கு பயன்பாட்டில் இல்லாத பத்துப் பைசா , இருபது பைசா , காரூவா என ஒவ்வொருத்தரும் டவுசர் பையிலிருந்து எடுத்து நீட்ட , சைக்கிள் கேரியரில் இருக்கும் சின்ன மரப்பெட்டியிலிருந்து சருவத்தாள் சுத்தப்பட்ட ஜவ்வு மிட்டாய் பொட்டலத்த வெளில எடுப்பாரு.
எலேய் ... பசங்களா ...காசத் திணிக்காதிங்க . அப்புறம் நான் மறந்திருவேன். ஒவ்வொருத்தராக் கொடுங்க எனச்சொல்லி , சுருக்குப் பையில காசப் போட்டுக்கிருவாரு. தாத்தா எனக்குப் பத்துப் பைசாவுக்கு ..., எனக்கு கால்ரூவாக்கு எனக் கேக்கம் போது , முகமலர்ச்சியோட ஜவ்வு மிட்டாயப் பிச்சுக் கொடுப்பாரு. அவர்ட்டயிருந்து வாங்கி , வாய்க்குள்ள போகும்முன்ன ஜவ்வுமிட்டாய் பல வடிவம் பெறும்.
" அண்ணன் என்னோட மீசயப் புடுங்கித் தின்னுட்டாம்மா ...
சின்ணண்னன் என் வாட்சப் புடுங்குறாம்மா ...
அக்கா என் வளையல இழுக்குறாம்மா ...
மாமா என்னோட செயின பிடிச்சு இழுக்காருமா ..
என எல்லோரும் புகார் செய்ய , அம்மாவுக்கு மூக்கு மேல கோவம் பொத்துக்கிட்டு வரும். பேசாம ஒங்களுக்கு ஏழு நாளும் பள்ளிக்கூடமாவே இருந்திருக்கலாம். ஏன்தான் சனி , ஞாயிறு லீவு விட்டுத் தொலைக்கிறாங்களோ ... சனியங்க ... ஏன் உசிர வாங்குதுங்க என எரிச்சப்பட்டுக் கத்துவாள் அம்மா.
இப்படித் தினமும் கம்ப்ளெயிண்ட் பண்றது வாடிக்கையாப் போச்சு எங்களுக்கு. காரூவாக்கு வாங்குன ஜவ்வு மிட்டாய கொஞ்சம் கொஞ்சமா இழுத்து நூலிழை போலாக்குவோம். அதை மொத்தமாச் சேத்து உருட்டி , பிறகு கையில கடியாரமா மாத்துவோம். பொம்பளப் பிள்ளைக செயினு , வளையல்னு செஞ்சு மாட்டிருகிருவாக கழுத்திலயும் , கையிலயும்.
கொஞ்சம் தடிமனா உருட்டி மூக்குக் கீழ , உதட்டு மேல மீச மாதிரி ஒட்டி வச்சிக்கிருவோம். நேரா நின்னா ஒட்ன மீச கீழ விழுந்திரும். அதனால அன்னாந்து பாத்துக்கிட்டே நடப்போம். சிலபேரு இன்னுங் கொஞ்சம் மீசய நீட்டி , சீனாக்காரங்க தாடிபோல ஒட்டிக்கிருவாங்க.
ஜவ்வு மிட்டாய்த் தாத்தா தெருத்தெருவா சுத்தி அலைய வேண்டிய அவசியமிருக்காது. தாத்தாவின் " சீனி மிட்டாய் சிக்கடி மிட்டாய் " பாட்டு எஞ்சோட்டுப் பசங்க , பிள்ளைகள எறும்பு மாதிரி கூட்டமா இழுத்திட்டுப் போயிரும் தாத்தாட்ட. மந்தையம்மன் கோயில் திடல்ல நின்னுக்கிருவாரு. வாங்குன ஒவ்வொருத்தனும் , காசில்லாம வெளம்பரம் பண்ணுவோம் ஜவ்வு மிட்டாய்த் தாத்தா வந்துட்டாருன்னு.
தாத்தா எனக்கு ஜவ்வு மிட்டாயி வேணும்
வாங்கிக்கோ ராசா '
ஆனா ... ஏங்கிட்ட காசு இல்லியே ...
' பரவால்ல ... நாளக்கிக் கொடு '
' காசுதான் இல்லெ. ஆனாப் பொருள் வச்சிருக்கேனே ! ' என டவுசர் பைக்குள் திணித்து வச்சிருந்த வெண்பட்டுப் போன்ற பருத்திய எடுத்துக்காட்ட ..,
' அடடா ! பருத்தியெல்லாம் வேணாம்பா '
' அப்ப நெல்ல அள்ளிட்டு வரவா ?'
' அதுவும் வேணாம் '
' அப்ப கேப்ப , கம்பு , சோளம் ... '
' அதுவும் வேணாம் '
' அப்படினா ஓன் ஜவ்வு மிட்டாயி வேணாம் போ '
' அடடா ! கோவுச்சுக்காதடா .நானென்ன மளிககடையா வச்சிருக்கேன் ? ' பருத்திய வாங்கிக்கிட்டு அவிச்ச பெலாக்கொட்ட தர ? உனக்கு மிட்டாயிதான வேணும் ? நான் தாரேன். உனக்கு எப்பக் காசு கெடைக்குதோ ... அப்பக் கொடு எனச் சொல்லும் போது தாத்தாவின் மனசு தெரியும்.
ஜவ்வு மிட்டாய்ப் பைய இடது கையில் பிடுச்சு , வலது கட்டை விரலாலும் , ஆட்காட்்டி விரலாலும் அவர் பிடிச்சு இழுக்கும் அழகே தனிதான். கடைசியில மெல்லிய நூலென ஜவ்வு மிட்டாய் இருப்பது , நாசா ஆய்வுமையம் எடுத்த ராமேஸ்வரத்து ராமர் பால செயற்கைக் கோள் படம் போலத் தெரியும்.
இன்னிக்கு உள்ள பிள்ளைக போல மிட்டாய வாங்குனமா ? வாயில போட்டுத் தின்னமானு அன்னக்கி இருந்ததில்ல. ஒரு மணி நேரமாச்சும் ஜவ்வு மிட்டாயி கூட வெளயாடுவோம். மிட்டாயி வாங்கக் காசில்லைனாலும் , வேடிக்கை பாக்குறதே செம ஜாலியா இருக்கும். அப்படி வேடிக்கை பாக்கும் போது , யாராவது கொஞ்சங்கானு பிச்சுக் கொடுப்பாங்க.
' இந்தா ... நீயும் கொஞ்சம் தின்னு '
' வேணாம் ... எங்கம்மா அடிக்கும் '
' பரவால்ல ... கொஞ்சம் தாரேன் வாங்கிக்கோ ..'
' இல்ல ... இல்ல ... வேணாம் '
' உன்னப் பாக்க வச்சுத் தின்னா எனக்கு நடுச்சாமத்தில வயிறு வலிக்கும். பாவம் பிடிக்கும். நீ திங்காட்டியும் பரவால்ல . உன் கையில வாச்சாக் கட்டிக்கோ '
மறுக்க முடியாது வாங்கிக் கொள்வான் கடைசில. ஜவ்வு மிட்டாய் , வெறும் மிட்டாயாக மட்டுமல்லாது பால்யத்தில் அன்பிற்கும் , அரவணைப்பிற்குமான ஒரு பொருளாக இருந்தது. இப்போதெல்லாம் ஜவ்வு மிட்டாய நினைச்சுப் பாத்தா , பால்யம் வந்து எட்டிப் பாத்துட்டுப் போகுது சந்தோசமாய்.
மு.மகேந்திர பாபு , ஆசிரியர் ,
********
செய்தியாளர் பக்கம்
அன்பாசிரியர் 11 -
மகேந்திர பாபு:
பசுமையை போதிக்கும் தமிழாசிரியர்!
க.சே. ரமணி பிரபா தேவி
சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார்.
கற்பித்தல் மட்டும்தான் ஆசிரியர் பணியா? பாடம் சொல்லிக்கொடுத்து, மதிப்பெண்கள் வாங்க வைத்தால் போதுமா? 'இல்லை' என்கிறார் ஆசிரியர் மகேந்திர பாபு. கல்வியோடு, இயற்கை சார்ந்த விஷயங்களிலும், இலக்கியத்திலும் மாணவர்களைக் அதிக கவனம் செலுத்த வைக்கிறார்.
ஆரம்ப காலப் பயணம்
தூத்துக்குடி மாவட்டம், பொன்னையாபுரம் என் சொந்த ஊர். அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்த நான், தமிழாசிரியர் கணேசன் அவர்களால் கவரப்பட்டேன். அவர் பாடத்தைக் கற்பித்த விதம், ஆசிரியராக வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கொண்டு வந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் 'இந்தியனே எழுந்து நில்' என்னும் கவிதைத் தொகுப்பை எழுதினேன்.
ஆசிரியர் பணியில் சேர்ந்த முதல் வருடம் மலைவாழ் பள்ளிகளில் பணியாற்ற வேண்டியிருந்தது. தினமும் சுமார் 12 கி.மீ. நடக்க வேண்டியிருக்கும். செல்லுமிடமெல்லாம் பசுமை பரந்திருந்தது. இயல்பாகவே இயற்கை மீது ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, அந்தப் பணியிடம் பிடித்திருந்தது.
2002-ல் மதுரையில் இருக்கும் இளமனூருக்கு மாற்றலானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தேன். தமிழாசிரியராக என் பணி ஆரம்பித்தது. உரைநடைகளையும், செய்யுள்களையும் எளிதாகப் புரியும் வகையில் நாடகமாகவும், கதை வடிவத்திலும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மாணவர்கள் தொடர்ந்து இரண்டு வருடங்கள், ஆண்டுத்தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.
விடுதிக்காப்பாளர் பணி
அடுத்த வருடம் ஆதிதிராவிடர் நலத்துறையின் பள்ளி விடுதிக் காப்பாளராக ஆனேன். தலைமைப் பொறுப்பு என்பதால், நினைத்ததைச் செய்ய முடிகிற சுதந்திரம் கிடைத்தது. விடுதியில் பணியை ஆரம்பிக்கும்போதே, மாணவர்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதில் தாமதமோ, உணவில்லாமல் போவதோ கூடாது என்று முடிவெடுத்தேன். மாணவர்களைப் பார்க்கவரும் பெற்றோர்களுக்கு, பசியோடு வருபவர்களுக்கு என எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
கல்விக்குழு, உணவுக்குழு, இறை வழிபாட்டுக்குழு, கலைக்குழு, தோட்டக்குழு என விடுதி மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவிலும் எட்டு மாணவர்கள் இருப்பார்கள். தோட்டக்குழு மூலம், பள்ளி வளாகத்தில் சுமார் 400 செடிகளை நட்டோம்.
மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் விதமாக 'வளர்பிறை' என்னும் கையெழுத்துப் பத்திரிகை நடத்தப்பட்டது. பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து, முன்னாள் மாணவர் சங்கத்தைத் தொடங்கினோம். புரவலர்கள் மூலம் சுமார் 1000 புத்தகங்கள் வாங்கப்பட்டு, 'அண்ணல் அம்பேத்கர் நூலகம்' அமைக்கப்பட்டது. சகாயம் ஐ.ஏ.எஸ். மூலம் மதுரையில் இருக்கும் 50 பள்ளி விடுதிகளிலேயே, 'சிறந்த முன்மாதிரி விடுதி' என்னும் விருது வழங்கப்பட்டது.
பசுமைப் பயணம்
2013-ல் திரும்பவும் ஆசிரியப் பணிக்குத் திரும்பி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளராக ஆனேன். அப்துல் கலாம் நினைவாக 'மாணவர் பூங்கா', 'கலாம் மூலிகைத் தோட்டம்' ஆகியவற்றை உருவாக்கினோம். வேளாண் அலுவலர் ஆறுமுகம் மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து உதவினார். 'என் வீடு; என் மரம்' என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து, யார் வீட்டில் நன்றாக மரம் வளர்க்கிறார்களோ, அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
'ஒரு விழா, ஒரு மரம்' என்ற பெயரில், அரசு விழாக்களில் மரங்களின் அவசியத்தை வலியுறுத்தினோம். மாணவர்கள், தங்கள் பிறந்தநாளுக்கு சாக்லேட் வழங்குவதற்குப் பதிலாக கடலை மிட்டாய் கொடுக்கச் சொன்னோம். பிறந்தநாள் அன்று மரக்கன்றுகளை நடச்சொன்னோம்.
உதவிய கரங்கள்
பள்ளி வளாகத்தை விட்டுக் கொஞ்சம் வெளியேயும் வரலாமே என்று தோன்றியது. 'பசுமைச் சாலை' திட்டத்தின் கீழ், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டோம். இப்போது, சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு 150 மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவரான ரஹமத் சுபகத்துல்லா, நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அவர்கள் மரக்கன்றுகளை நட்டதோடு, வேலியையும் அடைத்துக் கொடுத்துவிட்டனர்.
'விதை கலாம் வா 2020' என்னும் திட்டத்தின் கீழ், சேகர் என்பவர் 100 மரக்கன்றுகளையும், அரிமா சங்கத்தின் சார்பில் கரிகாலன், 50 மரக்கன்றுகளையும் இலவசமாக அளித்தனர். பதினோறாம் வகுப்புப் படிக்கும் சூர்யா, பிரபாகர், மாரி, கதிர்வேலன் ஆகிய நான்கு மாணவர்களும் விடுமுறை நாளில்கூட, மரக்கன்றுகளை நடுவதற்குக் கூட வருகின்றனர்.
எங்களைப் பார்த்து என்.எஸ்.எஸ். படையும், பள்ளியில் ஒரு தோட்டம் அமைத்திருக்கிறது. எட்டாம் வகுப்பு மாணவர்கள், பள்ளியின் சிறிய பகுதியில் தோட்டம் போட்டிருக்கின்றனர். ஆறாம் வகுப்பு மாணவிகள், எங்களுக்கும் இடம் வேண்டும் என்று கேட்டு, தங்கள் வீடுகளில் வளர்க்கும் டேபிள் ரோஸ் உள்ளிட்ட பூச்செடிகளைக் கொண்டுவந்து வளர்க்கிறார்கள். இவை அனைத்துக்கும் எங்கள் தலைமை ஆசிரியர் மோகன் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்" என்கிறார் அன்பாசிரியர் மகேந்திர பாபு.
விழிப்புணர்வுப் பாடல்கள்
'மரமும் மனிதமும்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் அன்பாசிரியர் மகேந்திர பாபு. இதில் இருக்கும் 12 பாடல்கள், சமூக அவலங்களையும், அவற்றுக்கான தீர்வுகளைப் பற்றியும் பேசுகின்றன. போதை ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, உடல் உறுப்பு தானம், மனிதநேயம் ஆகியவற்றோடு அம்மாவின் அன்பும், மாமதுரையின் சிறப்பும் பாடப்பட்டிருக்கிறது.
பசுமைத்திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, சகாயம் வழங்கிய சிறந்த அரசுப் பணியாளர் விருது, லட்சிய ஆசிரியர் விருது, கு.ஞானசம்பந்தன் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த விடுதிக்காப்பாளர் விருது, மதுரை கிரீன் அமைப்பு வழங்கிய சிறந்த பசுமைப்பள்ளி விருது ஆகியவை அன்பாசிரியர் மகேந்திர பாபுவின் பணிக்கு அங்கீகாரம் அளிக்கின்றன.
மரங்களோடு மனிதநேயமும்
இயற்கையின் மீது அதிக ஈடுபாட்டோடு இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். மரம் வளர்க்கும் பழக்கம் மாணவர்களைத் தாண்டி அனைவருக்கும் வர வேண்டும். மரம் வளர்ப்பதோடு, மனிதநேயத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். மரங்களோடு சேர்ந்து மனிதமும் பயணிக்க வேண்டும். பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. என் மாணவர்கள் நிச்சயம் ஒருநாள் அதை நிறைவேற்றுவார்கள்.
க.சே. ரமணி பிரபா தேவி -
***************************************************************
0 Comments Online