மழையோடு விளையாடு
கவிதைகள்
மு.மகேந்திர பாபு
சமர்ப்பணம்
படைப்பாளனாக்கிய எனது தமிழாசான் கவிஞர்.அ.கணேசன் ஐயாவுக்கும் & படைப்புக் களமான எனது கிராமத்திற்கும்.
நன்றிக்குரிய இதழ்கள்
கல்கி
செம்மலர்
பாக்யா
இனிய நந்தவனம்
இனிய உதயம்
மகாகவி
கவிதை உறவு
கொலுசு
மாதவம்
புதிய ஆசிரியன்
தினமலர் - நெல்லை
ஸ்மார்ட் மதுரை
ஒளிரும் வளர்மதி
தமிழ்நாடு இபேப்பர்
******************* **************
இயற்கை எனும் பள்ளி
இயற்கைதான்
பெரிய பள்ளிக்கூடம்.
தினம் தினம் படிக்கிறோம் பாடம்.
ஓங்கி உயர்ந்த மரங்கள்.
மனிதா !
உன் செயலால் நீயும் வளர்
என்பதைக் காட்டும்.
கரிய மலைகள்.
மன உறுதியைச்
சொல்லாமல் சொல்லும்
இயற்கைக் குழந்தைகள்.
நமக்கது நம்பிக்கை ஊட்டும்.
அருவியின் ஒலி.
இசையமைப்பாளர் இல்லாமலே
இசையை மீட்டும்.
அலைகடல்.
உனது பயணங்களுக்கு
முடிவில்லை என்பதைச் சொல்லும்.
அடக்கம் வேண்டும் என்பதைக்
கரை கடக்காது
தன்னடக்கத்தோடு நின்று
மனதை வெல்லும்.
இயற்கையன்னையின் இருகண்களாய்
பகலில் சூரியனும் ,
இரவில் சந்திரனும்.
மழைத்துளிகள்.
இயற்கையன்னை தெளித்திடும்
பன்னீர்த் துளிகள்.
நிலமகளின் நிலையறிந்து,
உடலைக் குளுமைப் படுத்துவதும்,
பயிர்க்குழந்தைகளை வளர்த்து
விவசாயிகளைக்
குதூகலப் படுத்துவதும்
மழைத்துளிகள்தான்.
மனித உடம்பின் நரம்பு மண்டலமாய்ப்
பூமித்தாயின் உடம்பில் ஆறுகள்.
தனித்திருந்த சகோதரர்கள்
ஒன்றுகூடிப்
பலத்தைக் காட்டுவதைப் போல,
ஆறுகள் ஒன்று கூடிக் கடலில் கலத்தல்.
ஆசிரியர்களிடமும் ,
ஆன்றோர்களிடமும்
தலைபணிந்து நட என்பதைச்
சொல்லும் நாணல்.
மாறினால்
வாழ்க்கை கோணல் .
இயற்கை
கட்டணம் பெறாத ஆசான்.
மனிதனின் சுயநலம்தான்
இயற்கையைச் சுரண்ட வைத்து ,
சோகமாக்குகிறது.
பாடம் கற்றுக் கொடுத்த ஆசானைப்
பாதுகாத்துப் போற்று !
சுவாசிப்பாய்
தூய காற்று !
****************** *************************
வாசம்
ஐந்தாறு தெருவரை
காற்றில் அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம் .
கோழிக் குழம்பு ,
மீன் குழம்பு
கருவாட்டுக் குழம்பு என்றில்லாமல் ,
கத்தரிக்காய் குழம்பும்
கமகம என மணக்கும் .
காரணம் அம்மிதான் .
அம்மா அம்மியில் அரைப்பதே
ஓர் அழகுதான் .
வயலினை மீட்டுவதைப்போல்
அம்மிக்கல்லை
முன்னும் பின்னுமாய்
இலாவகமாய் அரைப்பாள்.
இடது காலை நீட்டி ,
வலது காலை மடக்கி ,
தேங்காய்ச் சில்லை
அம்மி நடுவில் வைத்து ,
இடது கைப்பிடியை அழுத்தி ,
வலது கைப்பிடியை தூக்கி ,
நச்சட்டி நச்சட்டி என
அடிக்கும் போது
தேங்காய்ச்சில்
விரிசல் கண்டு
அன்பின் வலியால்
கண்ணீர் விடும் .
சில வழுக்கைத் தேங்காய்ச் சில்லுகள்
போக்குக் காட்டும்
அம்மியில் அகப்படாமல் .
அப்போதுதான்
அம்மாவிற்கு கோபம் கொஞ்சம்
தலை தூக்கும் .
அம்மி கொத்தரவனக் கூப்பிட்டு
கொத்தினாத்தான் என்ன ?
தேங்காய்ச் சில்லும் வழுக்க,
அம்மியும் வழுக்க ....
அரைப்பதும் வழுக்க ...
என எப்போதாவது
கோபம் கொட்டுவாள் .
அரைத்து முடித்துடன் ,
அம்மியில் இருக்கும்
கூழினைக் குழவிக்
கல்லிற்குக் கொண்டு வந்து ,
செங்குத்தாய் நிறுத்தி
வலக்கையின் ஆட்காட்டி விரலால் எடுத்து
தட்டில் போடுவாள் .
அரைத்து அரைத்து
அம்மியும் நடுவில் பள்ளமாகி ,
வில்லாகிப் போனது .
அம்மி , திருகை , ஆட்டுஉரல்
என ஒவ்வொரு வீடும்
உடற்பயிற்சி கூடம்தான் அன்று.
நாட்களின் ஓட்டத்தில்
அம்மியும் அகற்றப்பட்டது பல வீடுகளில்.
அடிக்கடி அழைத்துக் கொண்டன
மருத்துவமனைகள்.
அங்கும் இங்கும்
இயந்திரங்கள் வைத்து அரைக்கையில்,
அம்மாவின் துணை என்னவோ
அம்மி மட்டும்தான் .
அதனால் ...
ஐந்தாறு தெருவரை
காற்றில் அசைந்தாடி வரும்
அம்மாவின் சமையல் வாசம்.
******************** *********************
அப்பாவின் முகம்
வெயில் அப்பிய
மதிய நேரத்தில் ,
மார்கழி மாதத்து
அதிகாலை பசும்புல் தலையில்
பூத்திருக்கும் பனித்துளியாய் ,
உடலெங்கும்
வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க ,
காலில் செருப்பின்றி ,
மேலில் சட்டையின்றி
விரைந்து நடக்கும் அப்பா
தன் கைக்கட்டை விரலால்
வியர்வையைத் துடைத்தெறிந்துவிட்டு ,
பருத்திக்காட்டிற்குள் நுழையும் போது
முகம் மலர்கிறார்
வெடித்திருக்கும் பருத்தியைப் போல.!
******************* *******************
பாடம்
அப்பா முகநூலிலும்
அம்மா நெடுந்தொடரிலும்
நெகிழ்ந்திருக்க ,
பள்ளியில் இன்று கேட்ட
கதைகளையும் , பாடல்களையும்
சொல்லியும் , பாடியும்
மகிழ்ந்து கொண்டிருக்கிறாள்
மகள் தன் பொம்மைகளிடம்.
********************* ********************
மழையோடு விளையாடு
மெல்லச்
சொட்டத் தொடங்குகிறது மழை.
மொட்டை மாடியில் காயப்போட்ட
துணிகளை எடுக்க
அவசரமாக ஓடுகிறாள் பெண்ணொருத்தி.
முதல் மழைத்துளி
தலையில் விழுந்தவுடன்
அமிலம் பட்டதாக நினைத்து ,
கைப்பைக்குள்ளிருந்து
குடையை எடுத்து விரிக்கிறாள்
அலுவலகத்திலிருந்து இல்லம் திரும்பும்
பெண்ணொருத்தி.
நடைபாதையில்
தள்ளுவண்டியில் அவல் , பொரி விற்பவர்
பதறிப்போய் மூடுகிறார் பொரி மூட்டையை
பொழப்பு போனதாகப் புலம்பிக் கொண்டு.
வளர்ந்து வரும் வீட்டின்
சிமெண்ட் பூச்சுக் கரைந்துவிடுமென
தார்ப்பாயால் மூடுகிறார்
கட்டிடத் தொழிலாளி ஒருவர்.
முற்றத்தில் கிடந்த விறகுகளை
அள்ளிக்கொண்டு
அடுப்படிக்கு ஓடுகிறாள்
கிராமத்துப் பெண்ணொருத்தி.
மழைகண்டு
அனைவரும் அஞ்சி ஓட
இருகை விரித்து
மழையோடு கொஞ்சி விளையாடுகிறாள்
பள்ளிச்சிறுமியொருத்தி !
**************************** ****************
இப்படிக்கு மரம் ...
மண்ணில் வேர்விட்டுவிட்டேன்.
நிச்சயம் நிழல் தருவேன் .
காலம் செல்லச் செல்ல
சுவைதரும் கனி தருவேன்.
பறவைகளுக்கு மட்டுமல்ல ...
பல மனிதர்களுக்கும்
நான் என்றும் வீடுதான்.
நான்
உங்களுடனே இருப்பதால் ,
நீங்கள் நலமுடன் வாழ
காற்று தருவேன் .
கோடையின் போது வெப்பம் தணிப்பேன்.
தினமும் பூத்துக் காய்த்துக்
குலுங்கும் என்னைப் பார்த்தால்
உங்கள் எண்ணம் விரியும்.
எனதருமை புரியும்.
உங்கள் உடலில்
சிறு காயம் என்றால்
துடித்துப் போகிறீர்களே !
என் கிளையை வெட்டினீர்கள்.
ஒன்றும் சொல்லாமல்
கனத்த மனதோடு மௌனம் காத்தேன்.
மீண்டும் துளிர்ப்பேன்
என்ற நம்பிக்கையோடு !
மனிதர்களை மட்டுமல்ல ...
மரங்களை அழிப்பதும்
இனப்படுகொலைதான்.
என்றேனும் எனக்காக
விழா எடுக்கும் போது
பூ(ரி)த்துப் போகின்றேன்.
மனிதா !
என் மகத்துவத்தை
எப்போது உணரப் போகிறாய் ?
உண்மையில் மண்ணின் மைந்தன் நீயல்ல ...
நான் மட்டும்தான்
மண்ணிலிருந்து வருவதால் !
******************** *****************
வெக்கை
சுழலும் மின்விசிறி
வீடெங்கும் நிரப்புகிறது
வெப்பக் காற்றினை.
உச்சி முதல் பாதம் வரை
உடலெங்கும் ஓடுகிறது
வியர்வை ஆறு.
ஈரம் சொட்டியபடி
போர்வைகளைப் போர்த்தியிருக்கின்றன
அறை நடுவே சில
நெகிழி இருக்கைகள்
வெப்பம் தணிக்க.
என்னென்னவோ பிரயத்தனங்கள்
செய்தும் ,
கான்க்ரீட் காடுகளின்
வெப்பம் குறைவதாய் இல்லை.
மனிதனின் மடமையை நினைத்து
எங்கேனும்
பேசிக் கொண்டிருக்கலாம்
உயிரோடிருக்கும் இருமரங்கள்.
******************* **********************
செருப்பு
வாங்கியபோது
பொன்னோ பூவோ என
பாதுகாத்தாள் செருப்பினை அம்மா.
காலையிலும் , மாலையிலும்
காட்டிற்குச் செல்லும்போது
காலில் போடாமல் ,
கக்கத்தில் இடுக்கிக் கொள்வாள்.
வெயில் இல்லா நேரத்தில்
செருப்பெதற்கு என !
மதிய வெயில் பொழுதிலும்
வேலி முள் நிறைந்த
புதர்ப் பகுதியினுள் செல்லும் போதும்
செருப்பை அணிந்து கொண்டு
பொத்திப் பொத்தி நடப்பாள்
செருப்பு தேயா வண்ணம்.
வீடு வந்து சேர்ந்ததும் ,
செருப்பில் குத்தியிருக்கும்
சிறு சிறு முட்களை விரல் நகத்தால்
நம்பித் தள்ளி எடுத்துவிட்டு
சுவரில் சாய்த்து வைப்பாள் கழுவி.
நாளாக நாளாக
பெருவிரல் தடமும் ,
குதிகால் தடமும்
அதிக தேய்மானத்தைத் தர ,
இரப்பர் செருப்பின் வெள்ளை நிறம் நீங்கி ,
அடி நிறமான ஊதா தெரிய
அம்மா முகத்தில்
கவலையும் தெரிய ஆரம்பித்தது.
நெல்கட்டினைத் தூக்கி ,
வரப்பு விட்டு வரப்புத்தாண்டும் போது
செருப்பின் காதறுந்து விட்டது
நாட்கள் பல கடந்து விட்டபடியால் !
தாலிக் கயிற்றிலிருந்து
ஊக்கு ஒன்றினை எடுத்து ,
சற்றே அகலமாக்கி ,
செருப்புக் காதின்
நடுவில் இணைத்து ,
ஊக்கினை மாட்டியபின்
மெதுவாக நடைபோட
ஆரம்பித்தாள் நெல்களத்திற்கு !
நாளொரு மேனியும் ,
பொழுதொரு வண்ணமுமாகத்தான்
தேய்ந்து கொண்டிருக்கிறது
செருப்புகளோடு கிராமத்து பல
அம்மாக்களின் வாழ்க்கையும் !
******************* *********************
அட்சய திருதியை
குண்டுமணி அளவேனும்
தங்கம் வாங்கினால்
செல்வம் பெருகும் என்றெண்ணி
அட்சய திருதியை நாளில்
கடன் வாங்கி நகை எடுத்தாள்.
தொடர்ந்து
பெருகிக் கொண்டிருக்கிறது
ஆண்டு முழுவதும்
கடன்சுமை அம்மாவிற்கு.
******************** ********************
திருவிழா தோசை
காம்பு நீண்ட கத்தரிக்காயின்
அடிப்பாகத்தை நறுக்கிவிட்டு ,
தாளிக்கும் கரண்டியில்
எண்ணெய் ஊற்றி ,
தோசைச்சட்டியில் தடவி ,
இடது கையால்
எரியும் விறகைத் தள்ளிவிட்டு
வலது கையால்
கரண்டி நிறைய மாவெடுத்து ஊற்ற
சுரீர் என வருகிறது சத்தம்.
மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில்
ஒவ்வொரு தோசையாய்ச்
சுட்டுச்சுட்டு
பனை நார்ப்பெட்டியில்
அடுக்குகிறாள் அம்மா.
பளார் என
பொழுது விடிந்த வேளையில்
அம்மாவின் அன்பைப்போல்
தோசையால் நிறைந்து
கிடக்கிறது நார்ப்பெட்டி
திருவிழா நாளில்.
******************** *********************
சாமியைக் காட்டிலும்
ஊர்த்திருவிழாவில் சாமி பார்க்க
அப்பாவின் பின் கழுத்தில் அமர்ந்து
இரு தோள்களின கீழ்
கால்கள் தொங்கவிட்டு
தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து
அசைந்து நடக்கும்
அப்பாவின் நடையில் ஆனந்தப் பாட்டு.
' சாமி தெரியுதா ? ' என்று
தன் கால் உயர்த்தி
எக்கி நின்று காட்டுகையில்
சாமியைக் காட்டிலும்
உயர்ந்து நின்றார் அப்பா.
***************************** *************
தொரட்டிக் குச்சி
தாத்தாவின்
உயரத்தைப் போன்று
மூன்று மடங்கு உயரமிருக்கும்
தொரட்டிக்குச்சி வீட்டின் முன்
வேலி மரத்தோடு ஒன்றியிருக்கும்.
தொரட்டிக் குச்சியோடு
தாத்தா நடக்கும் போது,
வெள்ளைக்காரத் துரையாக
நினைத்துக் கொண்டு
நடை போடுவார்.
சிறுவர்களுக்கு கொடிக்காய்ப்புளி
பறிக்கவும்,
ஆட்டுக்குச் செல்லும்போது
வேலி நெத்து திருகிப் போடவும்,
படப்புகளில் சிக்கிக்கொண்ட
கிட்டிக் குச்சியினைத்
தட்டி விடவும் ,
மின்கம்பத்தில் சிக்கிக்கொண்ட
சட்டைத் துணிகளை எடுக்கவும்
மஞ்சனத்திப் பழம் தட்டிவிடவும் ...
இன்னும் பிற வேலைகளுக்காகவும்
எப்போதும் ஓய்வின்றி உழைத்த
தொரட்டிக் குச்சி கேட்பாரற்று
மூலையில் கிடக்கிறது
தாத்தாவின் மரணத்திற்குப் பின்பு!
****************** ***********************
பொங்குது இன்பம்
வானம் பாத்த பூமியிலே
வாசலிலே தண்ணி ஓட
வண்டி மாடு பூட்டிக்கிட்டு
வயல் காடு விதைக்கப் போனோம் !
விதைச்ச விதை முளைச்சுவர
வீடெல்லாம் இன்பம் சேர
களை எடுக்க ஆள்சேத்து
கவனமா வெளய வச்சோம் !
கதிர் வெளஞ்சு சாய்ஞ்சிருச்சு
வயல் ஈரம் காஞ்சிருச்சு
அறுத்த நெல்லு களம்சேர
பொங்கலும் தான் வந்திருச்சு !
புது நெல்லு அரிசியாக
பொங்கப் பான பொங்கிவர
குலவைச் சத்தம் கேட்டிடவே
குடும்பத்தில மகிழ்ச்சி பொங்கும் !
காளைகளக் குளிப்பாட்டி
கரும்புத் தோகை உணவாக்கி
கொம்பினிலே பூச் சூடி
கும்பிடுறோம் இயற்கைத் தாயை !
நண்பர்களை அழைத்து வந்து
மகிழ்வுடனே விருந்து தந்து
நாளெல்லாம் நலம் சேர
நாம் இணைவோம் ஒன்றாக !
****************** **********************
வயலும் வாழ்வும்
பௌர்ணமி நாளின்
இரவொன்றில்
குடும்பத்தினரோடு
வயலுக்குச் சென்று ,
கருக்கரிவாளால் நெற்கதிர்களை
விடிய விடிய ஏதோ ஒரு கதைபேசி
அறுத்துவிட்டு ,
பகல் முழுவதும் கதிரடித்துவிட்டு ,
இரவில் பிணையல் மாடுகளால்
சூட்டடி நெல்லை நசுக்கவிட்டு
பரபரப்பாய் வேலை பார்த்த
நினைவுகள்தான் நெஞ்சில்
மோதிச்செல்கின்றன இப்போது
வீடுகளாகிவிட்ட வயல்களைப்
பார்க்கும்போது.
******************** *********************
அடையாளம்
வெட்டப்பட்ட பின்பும்
அடையாளம் இழக்காமல்
இன்றும் பயணிகளால்
சொல்லப்பட்டு வருகிறது
ஒத்தப்பனைமரம் பேருந்து நிறுத்தம் என்று.
சுத்துப்பட்டி முழுமைக்கும்
அடையாளமாக இருந்தவர்
இறந்து பல ஆண்டுகள் ஆகியும்
இன்றும் சொல்லப்பட்டு வருகிறார்
மிலிட்டரிகாரர் வீட்டுத்தெரு என்று.
ஆட்சிகள் மாறி
காட்சிகள் மாறி
தார்ச்சாலையும் வந்த பின்னர்
இன்றும் முகவரியில்
எழுதப்பட்டு வருகிறது
செம்மண் சாலை தெரு என்று.
பல்லாயிரம் மக்களுக்குப்
பொழுதுபோக்கும் இடமாக இருந்து
நாள்களின் ஓட்டத்தில்
நகைக்கடையாக மாறிப்போன
திரையரங்கம் இன்றும்
அதன் பெயரே அடையாளம் பலருக்கும்.
ஆண்டுகளின் ஓட்டத்தில்
தோற்றங்கள் பல வந்தாலும்
தொடர்ந்து சொல்லப்பட்டே
வருகின்றன
அடையாளங்கள் இன்றும்.
****************** ******************
காவல்
ஊரின் எல்லையில்
அரிவாளோடு
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
அய்யனார்.
பஞ்சம் பிழைக்க ,
கிராமம் நகரம் நோக்கி
நகர்ந்ததை மறந்து !
********************* *****************
பெண் எனும் பேராற்றல்
களக்கொத்தி கையிலெடுத்து ,
காலாற நடந்துக்கிட்டு
காட்டுவழி போகின்ற
கண்மணியே கண்ணம்மா !
காத்திருந்து காத்திருந்து ,
இலவசப் பேருந்தில் ஏறி,
தினக்கூலி வேலைக்கு
இடிபட்டு இறங்கும் பொன்னம்மா !
மிடுக்காகத் தலைக்கவசமும்
மேனியிலே புத்தாடையும்
புன்னகை முகத்துடனும்
வாகனத்தில் வந்திறங்கும் வள்ளியம்மா !
கால நேரம் மறந்து
இரவு பகலாக ,
பகல் இரவாக ஐ.டி.த்துறையில்
ஐக்கியமான அகிலாம்மா !
பொறுப்புகளைச் சுமந்து
அரசு வாகனத்தில்
நல்ல பல திட்டங்களுடன்
நாடாளும் கலெக்டரான கனகாம்மா !
மனம் முழுதும்
மக்கள் பணியென
ஐந்தாண்டு ஓட்டத்துடன்
ஆர்ப்பரிக்கும் இராணியம்மா !
பணிகள் பலப்பல என்றாலும்
துணிவுடன் உலாவரும்
பெண் எனும் பேராற்றலே !
போற்றுகிறோம் உன்னையே !
விடியல்
மார்கழி மாதத்தில்
வீட்டின் முன் கோலமிடும்
மங்கையரைப் போல்
மனமகிழ்ந்து
அதிகாலை எழுதல் வேண்டும்.
நகரத்து மக்களின்
விழித்தலைச்
சுறுசுறுப்பாக்கும்
தேநீர்க்கடைக்காரர்போல்
செயல்பட வேண்டும்.
விடிந்தும் விடியாப் பொழுதில்
வீட்டார்களின் எதிர்பார்ப்பை
ஈடுகட்டும்
பால்காரரைப் போல்
பரபரப்பாக ஓடவேண்டும்.
அடிவயிற்றிலிருந்து
சத்தமெடுத்து தெருவையே
திரும்பிப் பார்க்கச் செய்யும்
கீரைக்காரப் பெண்மணிபோல
நடக்க வேண்டும்.
பறக்கும் திசையெல்லாம்
கிழக்கென
இலக்காக்கும் பறவை போல
நம் பயணத்தைத்
தொடரவேண்டும்.
ஒரு நாளின் தொடக்கம்
இதுவெனில்
ஒவ்வொரு நாளும்
நம் வாழ்க்கையில் மலரும்
அர்த்தமுள்ள விடியல்.
******************** *********************
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
அடிக்கடி முன்வந்து
புகை கக்கிவிட்டுச் செல்கின்றன
கொள்ளிவாய்ப் பிசாசுகள்.
சிலநேரம் எரிச்சலாகவும் ,
சிலநேரம் ஆத்திரமாகவும் இருக்கிறது
கொள்ளிவாய்ப் பிசாசுகளைப்
பார்க்கும் போதெல்லாம்.
நேரம் காலம் கிடையாது.
காலை எழுந்தது முதல்
இரவு தூங்கச்செல்லும் வரை
தன் பணி இதுவென
புகை ஊதி
பகைத் தீ மூட்டுகின்றன.
சில கொள்ளிவாய்ப் பிசாசுகள்
காலைக் கடனுக்காகவும் ,
சில குளிருக்கு இதமாகவும் ,
சில சூடு தணிக்கவும் என
எல்லாக் காலங்களிலும்
ஊதித் தள்ளுகின்றன.
குளிருக்கு இதமென்றால்
தீமூட்டிக் குளிர்காயலாம்.
வெப்பம் தணிக்க
இளநீர் குடிக்கலாம்.
பேருந்துக்காகக்
காத்திருக்கும் வேளையில்
புகை ஊதித் தள்ளுகிறது
ஒரு பிசாசு.
பாதி ஊதுகையில்
பேருந்து வந்துவிட ,
கீழே போட மனமின்றி
படிக்கட்டில் தொங்கியபடியே
மீதியை ஊதி ...
அப்பாடா ... என
உலக சாதனை புரிந்ததாக
நிம்மதிப் பெரு மூச்சுவிட ...
சாக்கடை ஒன்றின்
அருகமர்ந்த நிலை
சக பயணிக்கு.
சில கொள்ளிவாய்ப் பிசாசுகள்
புகை வாசம் மறைக்க பாக்குகளையும் ,
வாசனை மிட்டாய்களையும் தின்கின்றன ...
தன்னுயிரை எமன்
தின்றுகொண்டிருப்பதை மறந்து !
நுரையீரல் நொறுங்கிப் போனபின்
உடல் சுருங்கிப் போனபின்
உள்ளக் குமுறலில்
ஓலமிடும் சில பிசாசுகள்.
பல்லும் சொல்லும் போனபின்பு
பார்க்கவே பரிதாபமாய்
சில அலையும்.
இளைஞர் முதல் முதியோர் வரை
பாமரன் முதல் படித்தவர் வரை
பாரபட்சமின்றி வாயில் வைத்து
ஊதித்தள்ளுகின்றன வட்டமாகவும் ,
இரயில் புகையாகவும் .
விரைவில் தனக்கு
ஊதுபத்தி கொளுத்துவார்கள்
என்று தெரிந்தும் !
******************* ************************
மீட்டெடுத்தல்
உழவு செய்யவும் ,
விதை வாங்கவும் ,
விதைக்கவும் ,
களையெடுக்கவும் ,
கருதறுக்கவும் என
காதிலும் , கழுத்திலும் ,
கையிலும் , மூக்கிலும்
இருப்பதை அவ்வப்போது
அடகு வைத்து,
வெள்ளாமை வந்தவுடன்
மீட்டெடுக்கும் மாரியம்மா
அதிர்ச்சியில் மரித்துப்போனாள்.
அடகு வைத்த பொருட்களை
மீட்க முடியாமல்
மழை பொய்த்துப் போனதில் !
****************** ***********************
விழிப்பு
நட்சத்திரக் கூட்டமாய்
நள்ளிரவில் சாலையில்
ஊர்ந்து செல்லும்
பேருந்துப் பயணத்தில்
பலரின் விழிகளில்
தூக்கம் குடிபுக ,
சக்கரத்தின் சுழற்சியோடு
அனைவரின் வாழ்க்கையும்
ஓடிக்கொண்டிருக்கிறது
ஓட்டுநரின் விழிப்பில்.
**************** *************************
வாழ்க்கைச் சக்கரம்.
உச்சிப்பொழுது
கொளுத்தும் வெயில்.
சட்டையற்ற உடல்
செருப்பற்ற கால்
தலையில் துண்டு.
அடைமழை
குடையற்ற நடை.
தலையில் அதே துண்டு.
காலநிலைகளால்
கவலை கொள்ளாமல் ,
கரைந்து விடாமல் ,
நோய்வாய்ப்படாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கிராமத்தைப்போல
அப்பாவின் வாழ்க்கைச் சக்கரம்.
******************** **********************
விடுவித்தல்
தண்ணீர் முற்றிலும் வற்றி
அழிந்துபோன கண்மாயில்
சேற்றின் அடியில் புதைந்து
தன் ஆயுளை நீட்டிக்கொண்டிருந்த
விலாங்குமீன் ஒன்றை
சேற்றிலிருந்து விடுவித்து
வீடு கொணர்ந்து ,
பெரிய பாத்திரம் ஒன்றில் இட்டு
அவ்வப்போது பொரி , மண்புழு போட்டு ,
பலநாள் வளர்த்தும் கொல்லாது
குழம்பு வைக்காது
மீண்டும் மறுமழைக்காலத்தில்
கண்மாயில் சேர்த்தார் அப்பா.
பிள்ளைகளின்
நகர்ப்புற வாழ்வினில்
கிராமம் விட்டு விலகாது
தனக்கான உணவைச்
சமைத்துக்கொண்டிருக்கிறார்.
நகரம் வந்தாலும்
மறுநாளே
கிராமத்திற்குச் சென்றுவிடுகிறார்
மறுமழைக்கு கண்மாயில் சேர்த்த மீனின்
நினைவுகளுடன்.
****************** *********************
கூந்தல்
முகத்தில் விழாத
முடியை
அடிக்கடி கைவிரல்களால்
கோதிக்கொண்டிருக்கிறார்கள்
சின்னத்திரைத் தொகுப்பாளினியும்
வெள்ளித்திரை நடிகையும்.
சும்மாடு அற்ற தலையினில்
சடை பிண்ணாத முடி
முகத்தில் விழ
விறகுக் கட்டுடன்
வேகமாக நடக்கிறாள்
கிராமத்துப் பெண்ணொருத்தி.
******************** **********************
தரிசனம்
கால் வலிக்கக் காத்திருந்து
கருவறையின் முன் நின்று
ஆசை ஆசையாய்
சாமி கும்பிடுகையில்
பூசாரியும் காவலரும்
போ போ எனச்சொல்ல ,
சிறப்புத் தரிசனத்தில்
டிக்கட் எடுத்து வந்தவரிடம்
ஆறஅமர சாமிகும்பிடுங்கோ
எனச்சொல்லும் பூசாரியின்
பேச்சில் விரக்தியில்
கண்மூடி மௌனமாகிறது சாமி.
********************* ********************
மனங்கள்.
திசை தெரியாது ,
தெரு தெரியாது நிற்கும் ஒருவர்
கையிலிருக்கும்
துண்டுச் சீட்டினைக் காட்டி
முகவரி கேட்கையில் ,
பார்க்காமலே உதட்டைப்
பிதுக்கிச்செல்கிறான் நகரவாசி
பெயரைச் சொன்னதும் ,
வீட்டிற்கு மகிழ்வோடு
அழைத்துச்செல்கிறான் கிராமவாசி.
******************** *********************
மனிதம்
பயணிகள் நிறைந்த
காலை நேரப்பேருந்துப் பயணத்தில்
அமர்ந்திருக்கும் பெண்ணிடம்
தன் கைக்குழந்தையைக்
கொடுத்துவிட்டு
அருகில் நிற்கிறாள் அம்மா.
புதுமுகம் கண்டு
மிரண்டழுகிறது குழந்தை.
சமாதான வார்த்தைகளால்
சரிக்கட்ட முடியாததால் ,
அமர்ந்திருந்த பெண்
எழுந்து நின்று ,
கைக்குழுந்தைப் பெண்ணை
அமர வைக்க ,
குழந்தையின் அழுகுரல்
அடங்குகிறது.
எழுந்து நின்ற
பெண் உருவில்
மலர்கிறது மனிதம்.
******************** *********************
சுவரொட்டி
மது அருந்தி
வாகனம் ஓட்டியதால்
மரணித்த நண்பனுக்குக்
கண்ணீர் அஞ்சலி
சுவரொட்டியை
மதுக்கடை முன் ஒட்டும் நண்பர்கள்.
கவலை மறக்க
மது குடித்துவிட்டு
வாகனத்தில் தள்ளாடிபடியே
பயணம்.
தயாராகிறது
மீண்டும் ஓர் அஞ்சலி
சுவரொட்டி .
********************* *********************
அன்பின் வரவு
சொந்த வேலையாக
வங்கிக்கு வந்தவர்
வயதானவர்களின் ,
எழுதப் படிக்கத் தெரியாதவர்களின்
அன்பிற்குரியவரானார்.
கையெழுத்துப்போட்டுத்
தருகிறேன் பேனா கொடுங்களேன்
என்று சிலரும் ,
இதை நிரப்பித் தாருங்கள்
எனச்சிலரும் கேட்க
முகம் மலர்ந்தே
எழுதித்தருகிறார்
அந்தக் கல்லூரி மாணவர்
தன் வேலை முடிந்த பின்பும்.
அவரது வாழ்க்கைக் கணக்கில்
வரவு வைக்கப்பட்டது
இம்மாதத்திற்கான அன்பின் வரவு.
***************** *************************
மாதக்கடைசி
எப்போதும் உடனிருக்கும் நண்பர்
தன் இல்ல விழாவிற்குக்
குடும்பத்தினருடன் வரவேண்டும் என்று
வீட்டிக்கு வந்து அழைப்பிதழ்
வைத்துச் செல்கிறார்,
அழைப்பிதழில் தேதி பார்க்க
27 ஆம் தேதியைக் காட்டுகிறது.
குறைந்த பட்சம்
ஆயிரமாவது செய்முறை
செய்யவேண்டுமே என
சிந்தனை ஓடுகிறது.
இப்போதைக்குப் பழசு போதும்
என நினைத்து
சில ஆயிரங்களில் வாங்கிய
இருசக்கர வாகனம்
இடரில் தள்ள ,
சரிசெய்ய மூவாயிரம் ஆகும்
என்கிறார் பழுதுபார்ப்பவர்.
மாதத்தொடக்கத்தில்
அளந்து வாங்கிய
அத்தியாவசியப் பொருட்கள் சில
தீர்ந்து விட்டதால்
தீராத தலைவலியைத்
திடீரெனத் தந்துவிடுகிறது.
எதிர்பாராத விதமாய்
வீட்டிற்கு வந்த உறவினர்
உரிமையோடு வீட்டில் தங்குகிறேன்
எனச்சொல்ல
வறுமையோடு தங்கும் நிலை
வாய்க்கிறது எனக்கு.
மழைக்காலமெனில்
இலவச இணைப்பாக வந்துவிடுகின்றன
இருமலும் காய்ச்சலும்
இரண்டு மூன்று நாட்களுக்கு.
நெம்புகோலாய்
நாட்களை நெட்டித்தள்ளுகையில்
மாதக்கடைசியில்
மனதில் பயமூட்டும்
இந்த நாள்களை
என்ன செய்வது ?
********************** ********************
அன்புச் சக்கரம்
அவசர அவசரமாய்
அலுவலகத்திற்கு
இருசக்கர வாகனத்தில்
செல்லும் நண்பர்
பக்கவாட்டு ஸ்டாண்டினை
மறந்து வாகனம் ஓட்ட ,
அவரை முந்திச் சென்ற
நண்பர் கையால் சைகை செய்து
எச்சரிக்கையூட்டுகிறார்.
சாலையின் எதிர்புறம்
உள்ள பள்ளிக்குச்
செல்லும் குழந்தைகள்
வரிசையில் நின்று காத்திருக்க ,
இளைஞர் ஒருவர்
வாகனங்களை நிறுத்தி
மாணவர்கள் கடக்க
உதவி செய்கிறார்.
கட்டுமானப் பொருட்களை
ஏற்றிக்கொண்டு
மேட்டுச்சாலையில்
மூன்று சக்கர சைக்கிளில்
சிரமத்துடன் ஓட்டிச்செல்லும்
வயது முதிர்ந்தவரை,
நடந்து செல்லும்
பள்ளிமாணவர்கள் கைகளால் தள்ளி
மேட்டினைக்
கடக்க உதவி செய்கிறார்கள்.
சிவப்பு விளக்கு எரிந்தபின்
நாற்சந்திப்பில் நிற்கும்
வாகன ஓட்டிகளிடம்
ஒரு பேனா வாங்கிக்கோங்க என
பேனா விற்கும் பார்வையற்ற
நண்பரிடம் இரண்டு பேனா வாங்கி
மனிதம் விதைத்துச் செல்கிறார்
நண்பர் ஒருவர்.
அவசர உலகம்தான்
என்றாலும்
அன்புச் சக்கரத்தால்
சுழல்கிறது ஒவ்வொரு நாளின்
காலைப்பொழுது .
********************* ********************
அன்பின் வளர்ச்சி
மதிய உணவு இடைவேளையில்
பேனா வாங்கக்
கடைக்குச் செல்வதாக
அனுமதி வாங்கிய
ஆறாம் வகுப்பு அழகுபாண்டியம்மாள்
கடைக்குச் சென்று
திரும்புகையில்
" கையில் பேனா எங்கே
என்றேன் ? "
இராமலட்சுமி சாப்பாடு
கொண்டுவரவில்லை.
அவளுக்காகக் கடைக்குச் சென்றேன் என
கைவிரித்துக் காட்ட ,
பேனா பிஸ்கட்டாக மாறியிருந்தது
அன்பின் வளர்ச்சியில் .
********************** *******************
இரண்டில் ஒன்று
ஆட்காட்டி விரலையும்
நடுவிரலையும் நீட்டி
இரண்டில் ஒன்றைத்
தொடுங்கள் அப்பா என்கிறாள் மகள்.
ஆட்காட்டி விரலைத்தொட
என்னப்பா ...
இப்படிப் பண்ணிட்டிங்களே என
கண்சிமிட்டிச் சிரிக்கிறாள்
ஏன் பாப்பா என்னாச்சு ?
நடுவிரலைத் தொட்டால்
படிப்பதற்கும்
ஆட்காட்டி விரலைத் தொட்டால்
விளையாடுவதற்கும் நினைத்திருந்தேன்.
நான் விளையாட வேண்டும் என்றல்லவா
தொட்டிருக்கிறீர்கள் என்று சொல்லிச்
சிரிக்கிறாள்.
அந்தக் கணத்தில்
ஒட்டிக்கொண்டது மகளிடம்
விளையாட்டும் மகிழ்ச்சியும்.
******************** ********************
விழிப்பு
காக்கைகளும் , நாரைகளும்
தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே
பறக்கின்றன.
வேறு வழியில்லாமல்
தூக்கத்தைவிட்டு
கண்சிவக்க எழுகிறது
கீழ்த்திசையில் காலைச்சூரியன்.
******************* *********************
ந(எ)டை பயணம்
துணி துவைக்கவும் ,
வீடு சுத்தம் செய்யவும் ,
சமைக்கவும்
தோட்ட வேலை செய்யவும் என
இன்ன பிற வேலைகள் செய்யவும்
ஆட்கள் வைத்து விட்டு ,
காலையிலும் , மாலையிலும்
சுற்றமும் , நட்பும் ,
நாயும் சூழ ,
கைகள் வீசியபடி போர் வீரனைப் போல் ,
வியர்த்து , விறுவிறுக்க
எடை குறைக்க நடந்து கொண்டிருக்கிறது
நாளும் ஒரு கூட்டம்
நகர்ப் புறங்களில் நகைப்பிற்குரியதாய் !
*********************** ******************
ஆறுதல்
மாடியில் இருந்து
தவறிக் கீழே விழுந்ததில்
கையில் அடிபட்டதா
காலில் அடிபட்டதா
எனக்கேட்டு
அழுது கொண்டே
ஆறுதல் சொல்கிறாள் மகள்
அமைதியாய்க் கிடக்கிறது
பொம்மை.
********************** *******************
இரவுக் கதை
தினமும் இரவில்
கதை கேட்ட பின்பே
தூங்கும் மகள்
விளையாடிய அசதியில்
விரைவில் தூங்கிப்போனாள்.
இன்றைய நாளிற்காக
ஒதுக்கப்பட்ட கதை
தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறது
மகளின் விழித்தலுக்காக.
********************* *******************
நிசப்தம்
இரவின் நிசப்தம் உடைத்து ,
திடீரென எல்லோரையும்
திடுக்கிட்டு எழச் செய்கிறது
தொட்டிலில் அழும் பச்சிளம் குழந்தை .
பசியமர்த்தி
தூங்கச் செய்த பின்னரும் ,
தூங்காமலே இருக்கின்றன
தாயின் கண்கள் தொட்டிலைப்
பார்த்த படியே !
************** **************** ***********
கோடையின் வெம்மை தணிக்க
குடும்பத்துடன் குழுமுகிறது
மக்கள் கூட்டம் மாநகராட்சி நீச்சல் குளத்தில்
குளி(தி )ப்பவரின்
வெம்மை தாங்காமல்
மேலெழும் நீர் துடித் தடங்குகிறது
மீண்டும் குளத்தில்.
********************** *******************
வெயில் மறந்து ,
வியர்வைத் துளி சிந்தி விளையாடும்
சிறுவர்களிடம் தோற்று ,
மறைந்து போனது சூரியன்
மாலைப் பொழுதில் .
******************** *********************
கவிதைக்கான வார்த்தைக்காய்
காத்திருக்கையில்,
பிஞ்சு மொழி பேசி என்னைக் கடந்து
சென்றது மழலை ஓன்று
கவிதை உருவில் .
********************* ********************
செய்தி பார்க்கும் போது
சினிமாவுக்கு மாற்றுவதும் ,
விளையாட்டு பார்க்கும் போது
விவாதத்திற்கு மாற்றுவதும் ,
பாடல் பார்க்கும் போது
சமையலுக்கு மாற்றுவதும் என
கணவன் மனைவிக்கான
தொலைக்காட்சிப் போராட்டத்தை
எப்படி நிறுத்த என
மகள் நினைத்துக் கொண்டிருக்கையில்
நிறுத்தி விட்டுப் போனது மின்சாரம்.
********************** ********************
வன்மம் தலை தூக்கி ,
சாதியப் பூசல்களோடு வலம் வரும்
சுவரொட்டிகளைக் கண்டு முகம்
சுழிக்கின்றன நகராட்சியின் சுவர்கள் .
********************** *******************
அடுப்பு பற்ற வைக்காமல்
நீர் ஊற்றாமல் ,
அரிசி போடாமல் ,
ஒரு நிமிடத்தில்
சோறாக்கி விடுகிறாள் மகள்
ஏதேனும் ஒரு பாத்திரத்தை
வைத்துக் கொண்டு ...!
********************** ******************
இரவின் நிசப்தம் கிழித்து
கிண்டலும், கேலியுமாய்ச்
சிரித்துப் பேசி மகிழ்கிறது
பெண்கள் கூட்டம் ஒன்று.
வீட்டு முற்றத்தில்
மெகா தொடர்களை மறந்து
மின்தடை நேரத்தில்.
********************* ********************
அப்பா தந்த
அத்தனை பிஸ்கட்களையும்
தின்று விட்டேன்மா
என மகள் சொல்ல...
மகிழ்வோடு வாசல் வந்து
பார்க்கிறாள் அம்மா.
நன்றியோடு வாலாட்டி நா நீட்டுகிறது
தெருநாய் ஒன்று.
********************** ********************
கிராமத்துப் பொங்கல்.
வருடத்திற்கொருமுறை
வெள்ளயடிக்கப் பட்டுப்
புதுப்பொலிவு பெறுகிறது வீடு.
வருடத்திற்கொரு முறை
கண்மாயில் நீந்தி ,
பொட்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது மாடு.
ஆண்டு முழுதும் பயிரால்
உயிர் தந்த நிலத்திற்கு
வைக்கப்படுகிறது காப்பு.
மறந்து போன மரபு
விளையாட்டுகள்
மீண்டும் வந்து
நிறைகின்றன மனதில் .
உரி அடித்தலில் தொடங்கி
காளை தழுவுதல் வரை
கலகலப்பாக்குகிறது
பொங்கல் திருநாள்.
கவத்தி வைக்கப்பட்ட
பொங்கல் பானை
புளிகொண்டு துலக்கப்
புதுசாக மாறுகிறது.
கரும்பின் சாறாய்
விவசாயிக்கு
இனித்துவிட்டுப் போகிறது
வருடத்தில்
பொங்கல் திருநாள் மட்டும்.
******************* *********************
பொங்கட்டும் இன்பம்
பொங்கப்பானை போல்
மகிழ்ச்சி பொங்கட்டும்.
கட்டிக் கரும்பென
சொற்கள் இனிக்கட்டும்.
காளைகளோடு சேர்ந்து
இளங்காளையர்களும்
களம் ஆடட்டும்.
நலம் சூழட்டும்.
வள்ளுவரைப் போற்றி
வாழ்க்கை தொடரட்டும்.
நல்லவரைப் பின்பற்றி
நம்வாழ்க்கை படரட்டும்.
தமிழர் வாழ்வில்
தலைசிறந்தது தைத்திருநாள்.
தரணி போற்றும்
உன்னதப் பெருநாள் வாழ்த்துகள்.
******************** *********************
சொந்த பந்தம்
சொந்த பந்தங்களை எல்லாம்
ஒன்று சேர்க்க வேண்டும்
என்றுதான்
கோவிலுக்கு நேர்த்திக்கடன்
செலுத்தி வேண்டினான்.
பிரிந்திருந்த சொந்தங்கள்
ஒவ்வொன்றாக வந்து ,
மீண்டும் சண்டையிட்டுப்
பிரிந்து சென்றனர்
அழைப்பிதழில் தங்கள்
பெயருக்கு முன்னுரிமை
கொடுக்கவில்லை என்று !
********************** *****************
அன்புள்ள அப்பாவிற்கு ,
உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
எனக்கான உலகம் நீங்கள்தான்.
கொசு பத்திச் சுருளின் வாசமே
எனக்கு குமட்டும்.
நீங்களோ
சிகரெட் குடித்து வந்து
என்னைக் கொஞ்சு கிறீர்கள்.
உங்கள் பாசத்தை
அந்த வாசம் அனுபவிக்க விடாமல்
செய்கிறது அப்பா.
உழைத்து
அலுத்துக் களைத்துவரும்
தாங்கள்
பாதிப்பணத்தை
வரும்வழியிலே குடித்து
தள்ளாடி வருவதால்
குடும்பம் நிமிரவில்லை அப்பா.
எப்படி உங்களிடம் சொல்ல
என நான் நினைப்பேன்.
காலையில் எழுந்தபோது
நான் கண்பார்க்கும்
கடவுள் நீங்கள்.
இப்போதெல்லாம்
எனக்கு ஒரே ஒரு ஆசைதானப்பா.
நான் வாழும் காலம் முழுமையும்
என்னோடு நீங்கள் இருக்கவேண்டும்.
நான் கேட்டதெல்லாம்
தரும் நீங்கள்
இதையும் தருவீர்கள் என
நம்புகிறேன்.
********************* *********************
எதிர்பார்த்தல்
காலையில் வடிக்கும் சோறே
ஒரு நாளின் மூன்று வேளைக்குமான
உணவாகி விடுகிறது.
என்றேனும் சாம்பாரும் , இரசமும்
சிலநாட்களில் தயிரும் ஊறுகாயும்
பலநாட்களில் தண்ணிக்கஞ்சியும்
கருவாடும் என தங்களின் பசியை
முடித்துக்கொள்ளும்
அம்மாவும் அப்பாவும்
பொன்னி அரிசிச்சோறும் ,
நாட்டுக்கோழி குழம்பும்
வைத்துக் காத்திருக்கிறார்கள்
வெளியூரிலிருந்து வரும் மகனுக்காக !
********************* *******************
தெக்கத்திச் சீமை
மழ பெய்ய வேணும்னு
மக்களெல்லாம் வேண்டி நின்னோம் !
வானம் பாத்த பூமியில
வாழவழி சொல்லச் சொன்னோம் !
அப்பப்ப வர்ற மழ
ஆறுதலத் தந்து போகும் !
இப்படி அடிச்சுத்தான் ஊத்துனா
சாதிசனம் என்ன ஆகும் ?
தெக்கத்திச் சீமையில கனமழனு
தெருவெல்லாம் சுத்துதையா பேச்சு !
திடுதிப்புனு வந்த மழயிலதான்
சேத்துவச்ச செல்வமெல்லாம் போச்சு !
ஆத்துத் தண்ணி ஊருக்குள்ள
அலை அடிச்சுப் போகுது !
ஆசையா வளத்து வந்த
ஆடுமாடு அத்தனையும் சாகுது !
கனவாகக் கட்டிவச்ச வீடு
கரஞ்சு தண்ணில ஓடுது !
கைகொடுத்து கர சேர்க்கக்
கண்ணு ரெண்டும் தேடுது !
மழ தண்ணி வரும்போது
மனுச நேயம் கூடுது !
மக்க மனம் சேந்து நிக்க
மகிழ்ச்சி வெள்ளம் ஓடுது !
இயற்கையைத் தான் காத்திடவே
இல்லை இனி துன்பம் !
எல்லாரும் சேந்து நிக்க
வந்திடுமே இனி இன்பம் !
******************* **********************
தாமதம்
தாமதமாகப்
பள்ளிக்கு வரும்
கிராமத்து மாணவனின்
முதுகில் தொங்கும்
பைக்கூடு முழுமையும்
நிறைந்துள்ளது
குடும்பத்தின் சோகம்.
******************* ***********************
விடியலின் ஓசை
பால்காரரின் மணியோசை ,
கோலப்பொடி விற்பவரின் குரலோசை
கீர வாங்கலயோ கீ...ர
பெண்ணின் இசையோசை ,
ஒலி பெருக்கியில்
பல தெருக்களையும்
தன் பக்கம் இழுக்கும்
பருத்திப்பால் என்ற
ஒற்றைச் சொல்லின்
தொடரோசை என
இவை எல்லாம்
விடியலை விழிக்கச் செய்கின்றன
சேவல் இல்லா மாநகரத் தெருக்களை !
********************** ******************
கபடி கபடி
ஒவ்வோர் ஊரிலும்
நடுவிலோ , ஒதுக்குப்புறத்திலோ
ஆடுகளம் இருந்தது.
ஐந்து பேர் சேர்ந்தாலும்
ஆடத்தொடங்கி விடுவோம்.
விளையாட்டிற்கான உடை என
தனியாக ஏதுமில்லை.
சிலர் டவுசரில்
சிலர் லுங்கியில்
சிலர் வேட்டியில்.
கல்யாணமானவர்களும்
கபடி கபடி என
கவலை மறந்து
விளையாடுவார்கள்.
ஒழுங்கற்ற ஆடுகளத்தில்
தினமும் கைகால்களில்
சிராய்ப்போ ,
முட்டித்தள்ளும் போது
கைகால் ஒடிவோ ஏற்படும்.
வீட்டில் எவ்வளவு
வசவு வாங்கினாலும்
மறுநாள் கபடிக் களத்தில்
நிற்கும் கால்கள் .
இந்திரன் இளைஞரணி சார்பில்
ஆண்டுதோறும் ஊர்த்திருவிழாவில்
மின்னொளி கபடிப்போட்டி
நடத்தி பரிசு கொடுப்பது
எழுதப்படாத விதி.
ஆட்டத்தின் இடைவேளையில்
கால்துண்டு எலுமிச்சம் பழத்துடன் சீனிதொட்டு
வாய்க்குள் போடும்போது
ஒரு புத்துணர்வு .
இரவில் தொடங்கி
மறுநாள் மதியம்வரை
போட்டிகள் தொடரும்.
வீரர்களுக்கு இலவச
விருந்தும் உண்டு.
எத்தனை விளையாட்டுகள்
நேரத்தை ஆக்ரமித்தாலும்
கபடிக்கெனத் தனிப்பெருமை
இருக்கத்தான் செய்கிறது.
தொலைக்காட்சியில்
அழகான அரங்கில்
பாதுகாப்பான ஆடுகளம் அமைத்து
நேரலையில் புரோ கபடிப்போட்டியினைப்
பார்க்கையில் ,
கபடி விளையாடுகையில்
உருவான காயத்தழும்புகளை
கால்களில் பார்க்கின்றன கண்கள் !
******************** *******************
மகளின் கேள்வி
மேற்கூரையில்
விழுந்து ஓடும்
மழைநீரைப் பார்த்து
ஆறு இதுபோல் ஓடுமா
எனக்கேட்கிறாள் மகள்.
தோண்டப்பட்ட பள்ளத்தில்
நிறைந்திருக்கும்
நீரைப்பார்த்து
இதுதான் கண்மாயா ?
எனக்கேட்கிறாள்.
செடிகளையும் ,
மரங்களையும் பார்த்து
நெல் விளைவது
செடியிலா ? மரத்திலா ?
எனக்கேட்கிறாள்.
மண்பானைச் சமையலின்
ருசி எப்படி இருக்கும் ?
நீச்சல் எங்கே பழகுவது ?
ஜல்லிக்கட்டு காளைமாடு
எப்படி இருக்கும் ?
என இப்படியான பல
கேள்விகளைக் கேட்கும்
மகளை இந்தத் தேர்வு
விடுமுறையிலாவது
கூட்டிச்செல்ல வேண்டும்
ஆறோடும் எங்கள் கிராமத்திற்கு !
******************* ********************
வாடகை வீடு
நல்லநாள் பார்த்து
குடிவந்து
நான்காண்டுகள்
கடந்து விட்டன.
வங்கியில் கடன்பெற்று
புதுவீடு கட்டி
பாலும் காய்ச்சியாகிவிட்டது
பக்கத்து ஊரில்.
குடியிருந்த நான்காண்டுகளில்
மகள் பிறந்தாள்.
பதவி உயர்வு கிடைத்தது
இப்படி பல நல்ல நிகழ்வுகள்.
பக்கத்து வீட்டுக்காரர்கள்
உறவுகள் போலன்றி
நண்பர்களாகிப் பழகி
நல்லது கெட்டதில் பங்கெடுத்தார்கள்.
இன்று வீட்டைக் காலி செய்து
புது வீட்டிற்குச்
செல்ல வேண்டும்.
உங்க பொருளை மறக்காமல்
எடுத்துச் செல்லுங்கள்
என மகிழ்வும் , வருத்தமும்
தோய்ந்த குரலில்
சொல்கிறார் வீட்டின் உரிமையாளர்.
அறையெல்லாம் சரிபார்த்து
எல்லாப் பொருளையும்
எடுத்தாகி விட்டது என்று சொல்லித்
திரும்புகையில்
வீட்டின் கொல்லைப்புறத்தில்
மகளின் பிறந்த நாளிற்காக
நட்டு வைத்த
தென்னையையும் ,
பூச்செடிகளையும் விட்டுவந்தேன்
நன்றிக்கடனாக
வாடகை வீட்டிற்கு !
********************* *******************
பெருமழை
பெருமழை பெய்கிறது
தொலைக்காட்சியில்
நேரலைச் செய்தி
நம்மை நிலைகுலையச் செய்கிறது.
பெருகிய நீர்த்தேக்கம்
எப்போது முழுமையும்
திறக்கப்படுமோ என
பறிபோனது தூக்கம்.
தலைநகரம் எப்போதும்
வெயிலின் பிடியில் !
இப்போதோ
புயலின் பிடியில் !
வாகனம் செல்வதற்கே
வருத்தப்படும் சாலையில்
படகு இப்போது
பயணம் செய்கிறது அழகாக !
தண்ணீரைத் தேடி
அலைந்தவர்களைத்
தண்ணீர் தேடிவந்தது
வீட்டிற்குள்.
அடுக்குமாடிக் குடியிருப்பின்
அடியில் நிறுத்தப்பட்ட
வாகனங்கள்
பள்ளிக் குழந்தைகள்போல்
அங்கும் இங்கும்
ஆடிக்களைத்தன.
வான்வழி மழைத்துளி
வானூர்தி நிலையத்தையும்
வசப்படுத்தி
பறப்பதை நிறுத்தியது.
சொல்கிறார்கள்
மழை நின்ற பின்
நீர்வடியும்.
நீர்நிலைகளை ஆக்ரமித்த
மனிதா ?
எப்போது உன் மனம் விடியும் ?
******************* *********************
குடை
மறக்காமல்
குடை எடுத்துச்செல்
என்கிறாள் அம்மா.
சரி எனச்சொல்லிவிட்டு
வேண்டுமென்றே எடுக்காமல்
செல்கிறாள் மகள்.
எப்போதாவது வரும்
மழையில்
மனம்விட்டுப் பேசி
நனைய வேண்டுமென்று.
************** *********** ********
மழை
மொட்டை மாடியில்
குப்பை சேர்ந்து விட்டது
சுத்தம் செய்ய வேண்டும்
என்றாள் அம்மா.
சாலையில் நிறுத்திய
வாகனத்தில்
புழுதி படிந்துவிட்டது
கழுவ வேண்டும் என்றார் அப்பா.
தோட்டத்துச் செடிகளுக்கு
இன்றாவது
தண்ணீர் ஊற்ற வேண்டும்
என்றார் தாத்தா.
யாரும் செய்ய முன்வராத
நிலையில்
பெருமழை ஒன்று
எல்லாவற்றையும்
செய்து விட்டுப்போனது
வேலை சொல்லாமலே.
*********** ********** *********
நிலம்
காலையில் எழுந்து ,
வேலங்குச்சியால்
பல் துலக்கிக்கொண்டு
வயலுக்கு நடைபோடும்
கால்கள்.
தெளிந்த நீரினால்
சலசலவென
ஓடிக்கொண்டிருக்கும்
ஓடையில் முகம் கழுவி
ஒரு மடக்கு நீரினை
உள்வாங்கும் தொண்டை.
கரும்பலகையில்
விதைக்கப்பட்ட
சொற்களைப்போல
வயல்வெளிகளில்
அடர்த்தியாக நின்று
புழுக்களைத் தேடித்தின்று
கொண்டிருக்கின்றன
கொக்குகள்.
அலைகளைப்போல
தோற்றமளித்து ,
நெற்பயிர்களை வளைத்து
சுகமான தீண்டலைத் தருகிறது காற்று.
முகம் பார்த்த பின்
பக்கவாட்டில் விரைந்து ,
செங்குத்தான வளையினுள்
சென்று ஒளிகிறது நண்டு.
சேறுகள் அப்பிய
வரப்புகளில் நடந்து
வயல் வெளியைப்
பார்த்த பின்
கால்கள் நடைபோடும் காட்டிற்கு .
கம்பும் சோளமும்
கம்பீரமாக நிற்க ,
பாசிப்பயறும் , தட்டைப்பயறும்
காய்கள் பிடித்து
சரமெனத் தொங்க ,
மூக்கினை நினைவு படுத்தும்
எள்ளுப் பூக்கள் காட்டின்
முகப்பில் பட்டமாய்
நிற்கும் சிரித்துக்கொண்டு.
அதலைக்காய்களும் ,
கீரைகளும் உணவிற்குப்
பறிக்கப்பட்டு மெள்ள
நடைபோடும் கால்கள் வீட்டிற்கு.
நாட்களின் ஓட்டத்தில் ,
இராட்சத காற்றாலை மின்விசிறிகள்
காடுகளுக்குள் நுழைந்தன.
ஏக்கருக்கு இத்தனை லட்சம் எனத்
திணிக்கப்பட்டு
பெறப்பட்டன காடுகள்.
உடைமையாளர்களாக இருந்தவர்கள்
உருக்குலைக்கப்பட்டு ,
கூலியாட்களாக நகர்கிறார்கள்
நகரம் நோக்கி.
*********** ******** ************
நினைவு
சில மாதங்களாய்
வாழ்வு தந்த கூட்டிற்கும் ,
சோளக் காட்டிற்கும்
நன்றி சொல்லி ...
சிறகு முளைத்த
தன் குஞ்சுகளோடு
அறுவடைக்கு முதல்நாள்
பறந்து செல்கிறது குருவியொன்று,
தன் சிறகினை நினைவாய்
உதிர்த்துவிட்டு !
******************** ********************
தேடல்
நெடுநேரம்
பறந்து சென்ற நீர்ப்பறவையொன்று
நீர்நிலை தேடி அலைகையில்,
நிரம்பியிருந்தது
கூச்சலும்,மகிழ்ச்சியுமாய்
விளையாடும் சிறுவர்களால்
வறண்ட நீர்நிலை !
************************ ****************
பேரம்
குனிந்து
கும்பிடு போட்டு அனுப்புகிறாள்
அலங்கரிக்கப்பட்ட
அழகான பெண்
நகைக்கடையினுள்.
மோதிரமா ? செயினா ?
என முகமலர்ந்து
கேட்கிறான்
வாட்டசாட்டமான ஆள்.
பதில் சொல்லி முடிப்பதற்குள்
ஆவி பறக்கும்
தேநீர் குவளையை
நீட்டுகிறான் பணியாள்
குளிருக்கு இதமாக.
அதோ ... அதை எடுங்க ...
இதோ ... இதை எடுங்க ... என
ஒவ்வொன்றாக
விரல் சுட்டச்சுட்ட
எடுத்து வந்து காட்டுகிறான்.
நீண்டநேரத் தேடுதலுக்குப்பின்
ஒன்றைக்காட்டி
இதற்கான தொகை சொல்லுங்கள்
எனச்சொல்ல
அன்றைய விலை நிலவரத்துடன் சரிசெய்து
பட்டியல் ஒன்றைத் தருகிறான்.
சேதாரம் அதிகமாக இருக்கிறதே !
இன்னும் குறைக்கலாம்
என்றபோது ,
நீங்கள் எங்கு வேண்டுமானாலும்
விசாரிக்கலாம் .
நமது கடையில்தான் குறைவு
என அடித்துச் சொல்கிறான்.
சார் ஒரு நிமிசம்.
நமது கடையில் மாதாந்திர
தவணை செலுத்துமுறை இருக்கிறது.
செய்கூலி இல்லை ,
சேதாரம் இல்லை என
விளக்கத்தை
மனதில் விதைக்கிறான்.
பணம் செலுத்தி
நகை பெற்றபின்
அடிக்கடி வாங்க என
வணங்கி அனுப்புகிறான்.
வீட்டு வாசலில் வந்து
கீரை விற்கும் பெண்ணிடம்
குரல் உயர்த்தி
விலை குறைத்து வாங்குவதில்
ஆனந்தப்படுகிறது மனம்.
************* ********* **************
கிராமத்து வீடு
மாதம் ஒருமுறை
சொந்த ஊருக்குச்
செல்லும்போது
தொலைவில் பார்த்ததும்
வாலாட்டிக்கொண்டு
சுத்திச் சுத்தி வருகிறது நாய்.
பையில் இருந்து
பன்னைக் கையில் எடுத்ததும்
லபக்கென்று கவ்விச்செல்லுகிறது
கோழிக்கூட்டம்.
வைத்த சோறில்
வாய்வைக்காமல்
கையில் இருக்கும் சேவு வேண்டுமென
முகம் பார்த்து கால் நீட்டிக்கேட்கிறது பூனை
கொய்யாக்காயின் வாசம் நுகர்ந்து
மடியில் வந்தமர்கிறது
கட்டிலின் அடியில்
படுத்திருந்த வெண்முயல்.
வீட்டிற்குள்ளே இரைதேடிச்
சுற்றித் திரிகின்றன
கோழிக்குஞ்சுகள்.
நீட்டிய வாழைப்பழத்தை
நாவினால் சுழட்டித்
தின்றுவிட்டு
நன்றியோடு கையை நாவால்
வருடும் பசு.
கையைத் தூக்கி
நெஞ்சிற்கு நேராக வைக்க
தலையால் பொய்யாக
வந்து முட்டி அன்பை
வெளிப்படுத்துகிறது
ஆடு.
அரிசியினை
முற்றத்தில் வைத்துவிட
அருகமர்ந்து
பயமின்றி கொத்தித் தின்கின்றன
சிட்டுக்குருவிகள்
அணில்களுடன்.
இப்பத்தான் வந்தியா ?
நல்லாருக்கியா ?
என நலம் விசாரித்துச்
செல்கிறார்கள்
வீட்டைக் கடந்து செல்லும் ஊரார்கள்.
மீண்டும்
இவர்களின் அருகாமை
கிடைத்திட
அடுத்த விடுமுறை வரை
காத்திருக்க வேண்டும் நான்.
******************** **********************
பம்புசெட்
ஊருக்குப் பக்கத்தில
பம்பு செட்டு !
ஓடுதையா மனம்
துள்ளிக் கிட்டு !
வெள்ளி அருவிபோல
விழுகுது தண்ணீர் !
அது விவசாயத்தக்
காக்க வந்த பன்னீர் !
உருக்கிவிட்ட கண்ணாடி போல
வரப்புலதான் ஓடுது !
புத்தம்புது தம்பதி போல
வயலுலதான் கூடுது !
வாண்டுக கூட்டம் வந்து
தலயத்தான் காட்டுது !
சர்ருனு விழும் தண்ணீ
சந்தோசத்தில ஆட்டுது !
அத்தை மக அறிவழகி
ஓரப் பார்வ பாக்குறா !
கண்ணடிச்சு நின்னா
களக்கொத்தியத் தூக்குறா !
பாத்தி கட்டி வளருதையா
பருத்திச் செடி !
பாவி மக பார்வயில
படபடக்குது மடி !
வெத வெதச்சு
நாத்து நட்டி
நாலா மாசம் வந்திடுமே
நெல்லு எனும் தங்கக் கட்டி !
பருவ மழ பெஞ்சாதான்
உருவமே மாறிப்போகும் !
பம்புசெட் தண்ணி வந்தா
பட்ட கடனும் ஆறிப்போகும் !
உள்ளத்துக் காதல் போல
ஊறுதையா ஊத்து !
ஊருசனம் கெக்களிக்கும்
தண்ணிவரத்தப் பாத்து !
கிராமத்து வாழ்க்கையில
பம்புசெட்டு ஆதாரம் !
பம்புசெட்டு இல்லையினா
வாழ்வே சேதாரம் !
தேங்காய்த் தண்ணிபோல
இனிக்குது பாரு !
எங்க ஊரு வாழ்க்க போல
வேறென்ன வேணும் கூறு !
****************** *************************
ஆசிரியப் பணி
பேருந்தே பயணிக்காத
ஊரில்
பயணம் செய்து
பள்ளி சென்றேன்
தினமும் 15 கி.மீ.நடந்து.
நேற்றுப் போல்
இருக்கிறது
பணியேற்ற முதல் நாள்
பல ஆண்டுகளைக் கடந்து.
நீதான்
எங்கூருக்கு வந்திருக்கிற
புது சின்ன வாத்தியாரா ?
இப்படித்தான் மாணவ
நண்பர்களின் பேச்சு
முதன் முதல் விழுந்தது செவியில் !
நாகரிகம் தொடாத
நல்ல ஊர்கள்
இருக்கின்றன
இன்னும் புவியில் !
எண்ணெயில்லாத தலை.
பித்தான்களற்ற
டவுசரின் இருமுனைகளும்
தொப்புளோடு
முடிச்சிடப்பட்டும் ,
எந்த நேரமும்
தன்னை விடுவிக்கும் நிலை.
ஆண்டுகள் ஓடுகின்றன.
மாணவர்கள் மனிதர்களாகின்றனர்.
வாகனத்திற்கு
எரிபொருள் நிரப்புகையில் ,
மளிகைக் கடையில்
பொருள் வாங்குகையில் ,
உணவகத்தில்
உண்கின்ற வேளையில் ,
சிக்னலுக்காக காத்திருக்கையில்
சிற்றுந்து ஓட்டுநரோ ,
நடத்துனரோ ...
நகைக்கடையில் ,
காவல் துறையில் ,
கல்லூரிகளில் ,
பள்ளிகளில் ...
யாரோ ஒருவன்(ர்)
வணக்கம் சொல்லி
பவ்யமாக வந்து நின்று
பேசிச்செல்கிறார்கள்
உங்களின் முன்னாள்
மாணவர்கள் என்று !
அன்பெனும் ஊற்று
வற்றாத ஆறாக ,
பெரும்பேறாக
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது
பள்ளி எனும் ஆலயத்தில்
என்றும் !
********************* ********************
ஊதுகுழல்
துளையிடப்படாத
புல்லாங்குழலென
அடுப்பருகே
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருக்கிறது
ஊதுகுழல்.
அதிகபட்சம்
ஒருநாளைக்கு
மூன்று முறை மட்டுமே
அம்மாவின் பெருமூச்சை
உள்வாங்கி
புகை மண்டிக் கிடக்கும்
அடுப்பிற்கு புத்தொளி தருகிறது.
அடுப்பின்
இடப்புறத்து
இதயமாகி விட்டது ஊதுகுழல்.
மண்ணெண்ணெய் அடுப்பும் ,
கேஸ் அடுப்பும்
வந்த பிறகு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
உறவினர்களால் ஓரங்கட்டப்பட்ட
கிராமத்து சம்சாரியென
ஊதுகுழல் அடுப்படியின் மூலையில்.
************************* ******************
நிமிர்ந்து நில்
குன்றென நிமிர்ந்து நில் - மனதில்
நன்றெனப் பட்டதை நயம்பட உரைத்திட
நாளும் நீ நிமிர்ந்து நில் .
சோர்வுகள் எல்லாம் சுக்கு நூறாகும் !
சுதந்திரக் காற்றும் உன் பேராகும்
எழுச்சி கொண்டு நீ எழுந்திடும் போது
இமயமும் உன் கால் தூசாகும் !
எட்டுத் திசையும் கிட்ட வந்திடுமே !
எட்டு வைத்தால் வெற்றிக் கனியைத்
தினமும் உன் கையில் தந்திடுமே!
நிமிர்ந்து நின்றால் கையில் தந்திடுமே !
வானம் அதிர வாழ்த்தொலி கேட்டிடுமே !
தானம் பகிர வாழ்க்கையும் கூட்டிடுமே !
அன்பே அகிலத்தில் அனைத்தையும் மாற்றிடுமே !
நிமிர்ந்து நின்றால் புகழினில் ஏற்றிடுமே !
வீரம் ஒன்றால் வெற்றியைப் பெற்றிடலாம் !
ஈரம் கொண்டால் மனங்களைக் கற்றிடலாம் !
பொய்யும் புரட்டும் மனமதில் உடைத்துவிடு !
நிமிர்ந்து நின்றே புதுசரித்திரம் படைத்துவிடு !
உழைக்கும் வர்க்கம் உயர்ந்திட வேண்டும் !
உண்மை எங்கும் நிறைந்திட வேண்டும் !
நேர்மை கொண்டு நிம்மதி கண்டு
உன்மதியாலே உலகினை வென்றிட வேண்டும் !
நிமிர்ந்து நில் !நிமிர்ந்து நில் !
நிச்சயம் வெல்லும் உனது சொல் !
என்னால் முடியும் என்னால் முடியும் !
நிமிர்ந்து நின்றால் என்றும் விடியும் !
மு.மகேந்திர பாபு ,
09 - 01 - 18 .
************************ *****************
மனிதம்
தவிச்ச வாய்க்குத்
தண்ணி தருவது
தமிழர்தம் பண்பாடு !
தாகம் தீர்க்கிறது
தொப்புள் கொடி உறவு
அன்போடு !
ஆறறிவு
ஐந்தறிவை
நேசித்தலே நேயம் !
இது தொடர்ந்திடின்
இயற்கைக்கேது காயம் ?!
அகத்தில்
அடைபடும் மனிதம்
புறத்தில்
தடைதாண்டி வரும் ...
பிற உயிர்க்கு
இன்னலெனில்
மின்னலென !
மனிதம் பேண
பணம் தேவையில்லை
மனம் போதும் !
கண்களில்
விளையும் நேயத்தை
இதயம் எடுத்து
கருணையாய்த் தருகிறது.
வையகம்
அதனால்
வளமை பெறுகிறது.
தேர் ஈந்தலும் ,
போர்வை போர்த்தலும் ,
மகனை தேர்க்காலில் இட்டதும் ,
தசையை தராசில் வைத்ததும்...
தமிழனின் நேயத்தைக்
காட்டும் !
தரணிக்கே
மனிதத்தை ஊட்டும் !
******************** *********************
சுதந்திர தாகம் - சுதந்திர தின சிறப்புக்கவிதை
விடுதலை விடுதலை
என்ற சொல்லே
எங்கும் ஒலித்தது.
கொள்ளையராம்
வெள்ளையரின்
உள்ளங்களைக் கிழித்தது.
வாணிகத்திற்காக
இங்கே
வாசம் செய்தனர்.
நம்
ஒற்றுமையின்மையால்
நாட்டையே
நாசம் செய்தனர்.
எவ்வளவு நாட்கள்தான்
அடிமையாக இருப்பது ?
வெள்ளையரின்
ஆதிக்கத்தைப் பொறுப்பது ?
விடுதலைத் தீ
எரிந்தது.
அதில்
இந்தியர்களின்
வெற்றி தெரிந்தது.
தற்கொலைப்படையாய் மாறி
கட்டக்கருப்பன் சுந்தரலிங்கம்
நாட்டிற்காகத்
தன் உயிரையே
கொடுத்தான்.
ஆங்கிலேயப் படையின்
ஆதிக்கத்தை ஒடித்தான்.
இது
விடுதலைக்கு
விளைந்த முதல் தாகம் !
இந்திய உள்ளங்களில்
எழுந்தது
விடுதலைக்கான வேகம்.
வெள்ளையரின்
பீரங்கியை
காந்தியடிகளின்
கைத்தடி எதிர்த்தது.
அகிம்சை ஒன்றே
எமது ஆயுதம் என்று
அன்புப் பூவை உதிர்த்தது.
பாரதியின்
விடுதலைப் பாட்டுகள்.
பரங்கியரை விரட்டவந்த
வேட்டுகள்.
வடக்கிலும் ,
தெற்கிலும்
வெடித்தது
வெள்ளையனே
வெளியேறு முழக்கம்.
வெள்ளயனுக்கு
வந்தது
அடிவயிற்றில் கலக்கம்.
போராட்டம் போராட்டம்
எங்கும் போராட்டம்
அண்ணலின் தலைமையில்
அகிம்சைப் போராட்டம்.
கிடைத்தது சுதந்திரம்.
பல்லாயிரம்
இன்னுயிர்களைக் கொடுத்து !
படைத்தது வரலாறு
பல வெற்றிகளைத் தொடுத்து !
பட்டொளி வீசி
தேசியக்கொடி பறக்குது !
பாரில் இந்தியா
வெற்றிக்கொடி நாட்டிச் சிறக்குது !
கவிதை
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
97861 41410
************************* ******************
மழை இரவு
வேலித்தூரில்
அண்டும் ஆடுகள்.
ஆடுகளின் காலடிக்குள்
அடையும் கோழிகள்.
கூரை வீட்டுக்குள்
தாரை தாரையாய்
கண்ணீரெனச் சொட்டும்
தண்ணீர்த் துளிகள்.
அண்டாவோ
குண்டாவோ
வாய்திறந்து வாகாக
ஏந்திக் கொள்ளும் அழகு.
ஈரம் தோய்ந்த
விறகோடு தீப்பற்ற
மல்லுக்கட்டும் தாய்மார்கள்.
குளிருக்கு இதமாய் கொறிக்க
அரிசியோ , பாசிப்பயறோ
வறுக்கச் சொல்லும் வாண்டுகள்.
அம்மாவின் சேலையை
போர்வையாக்கும் அக்காக்கள்.
கைலிக்குள் மூட்டிப்படுக்கும்
தம்பிகள்.
ரோக்கர் பாட்டிலில்
மண்ணெண்ணெய் நிரப்பி
ஒளி பரப்பும் பாவாடை நாடாத் திரிகள்.
சாணம் மொழுகப்பட்ட
தரையில்
சமத்துவமாய் திரியும்
பூனைக்குட்டிகள் .
மழைத்துளிகளின் ஓசை
அதிகரிக்கையில்
அகல கைகளை விரித்து
ஓலையில் வடியும் நீரை
உள்ளங்கையில் ஏந்தும் உள்ளங்கள்.
என் கிராமத்தின்
மழை இரவு இப்படியாகத்தான்
நனைத்துச் செல்கிறது
மக்களையும் , மண்ணையும்.
*********************** *******************
கவிதை - ஊஞ்சல்
கவிதை உறவு மாத இதழ்.
தொட்டியில் நடப்பட்ட
சங்குப்பூச்செடி
மேல்நோக்கி வளர வளர
நூல் ஒன்றினால்
இணைக்கப்பட்டது
ஊஞ்சல் கொக்கியில் .
நாள்கள் செல்லச் செல்ல
நூலுடன் பின்னிப் பிணைந்து
ஊஞ்சல் கம்பியோடு உறவாடி
கீழ் நோக்கித் தொங்கியது
சிறு ஊஞ்சலாக.
வாழ்வதற்கு இடம்தேடி வந்த
புள்ளிச்சில்லைப் பறவையொன்று
சங்குப்பூச்செடியின் உச்சியில்
கூடொன்றைக் கட்டிக் குடும்பமானது.
தன் குஞ்சுகளுக்கு இரைதேடி
அவ்வப்போது
பறந்து சென்று
உணவுடன் வருகிறது
பழகிய நண்பரைப் போல வீட்டிற்குள் பறவை.
வெளிநாட்டில் இருக்கும்
பேரப்பிள்ளைகள்
எப்போதாவது வந்து
ஊஞ்சலில் ஆடுவார்கள்
என நினைத்த தாத்தா பாட்டிக்கு
கூடுகட்டி ஊஞ்சல் போல் ஆடும்
புள்ளிச் சில்லைப் பறவைகள்
ஆகிப்போனது பேரப்பிள்ளைகளாக !
மு.மகேந்திர பாபு ,
49 , விக்னேஷ் அவென்யு ,
இரண்டாவது தெரு ,
கருப்பாயூரணி , மதுரை - 20.
செல் - 97861 41410
************************ *********&&&
பால்யம் என்றொரு பருவம்
பித்தான்களற்ற டவுசரின்
இருமுனைகளைத்
தொப்புளோடு இறுகக்கட்டி ,
சட்டையில்லா மேனியோடு
வெயில் , மழையென
இரண்டையும் ஒன்றாகப் பாவித்து
ஓடியாடிய பருவம்.
டவுசர் பைகளை
புளியங்கொட்டைகள் நிறைக்க ,
சிமெண்ட் கல்லினால்
மந்தையம்மன் கோவில் பொட்டலில்
செதுக்கி முத்து விளையாடிய காலம்.
கிட்டிக்குச்சி விளையாட்டில்
தோற்ற பின்பு ,
'கபடி ' என மூச்சு இழுத்து ,
மின்னலென ஓடி
எல்லைக் கோட்டைத் தொட்ட காலம்.
சாட்டையால் சுழற்றி
தரையில் பம்பரம் விழாமலே
கையில் ஆடவைத்து மகிழ்ந்த காலம்.
கோலிக்குண்டு வாங்குவதற்காக
வயலில் வேலை பார்த்தும் ,
பருத்தி எடுத்து எடைக்கு எடை
பலாக் கொட்டை வாங்கியும்
மகிழ்ந்த காலம்.
சனி , ஞாயிறு விடுமுறை நாட்களில்
கண்மாயில் நிலா நீச்சல் ,
முங்கு நீச்சல் , எம்ஜியார் நீச்சலென
மணிக்கணக்கில் நீந்தியதொரு காலம்.
ஆசிரியர்களிடம் வாங்கிய அடிகளைப்பற்றி
அப்பா அம்மாவிடம் சொல்லாமல் ,
சிவந்த கைகளைப் பார்த்தும்
ஆசிரியர் மீது பயமும் , மரியாதையும்
கூடிய காலம்.
பாட்டுக் கிளாஸ் , ஸ்போக்கன் இங்க்லீஷ் என
எந்த தனிவகுப்பிலும் சிக்காமல்
பறவையென
பாடித்திரிந்த காலம்.
மிதுக்கம் பழமும் , பனம் பழமும் ,
கள்ளிப் பழமும் , மஞ்சனத்திப் பழமும் ,
இலந்தைப் பழமும் இன்னும் பல பழங்களும்
விலையின்றிக் கிடைத்து ,
வேதிப் பொருள் கலப்படமின்றி
விரும்பித் தின்றதொரு காலம்.
கம்மங்கருதையும் ,கேப்பக் கருதையும் ,
மக்காச் சோளக்கருதையும்
தீயில் வாட்டி கமகம வாசத்துடன்
திகட்டத் திகட்டத் தின்றதொரு காலம்.
பால்யம் என்றொரு காலம்
என் பால்யத்தில் இருந்தது .
எந்தக் கட்டுப் பாடுகளுமின்றிச்
சிறுவர்களை சிறுவர்களாக்கி !
மு.மகேந்திர பாபு.
****************************************************************************************
அழியும் விவசாயம்
ஆடையில்லா தேகம்
விவசாயியை அழிக்க
பாடைகட்டும் தேசம்.
முப்போகம் கண்டவன்தான் போராடுகிறான்
முப்பது நாளாய் !
செவி கொடுக்காமல்
விஷ வார்த்தைகளைக் கொட்டுகிறதோ அரசு தேளாய் !
எலிகளுக்கு உணவிட்டவன்
தன் உணவாய் எலி தின்றும்
போராட்டம் செய்தான்.
தலைகீழாய் நின்றும்
கருணை காட்டவில்லையே
அரசாங்கம் ஒன்றும் !
அய்யா ! கண்ணுகளா !
சோறு போட்டவன
கூறு போடலாமா உங்க சட்டம் !
விவசாயி கையேந்துனா
நாடுதான் நாளை என்ன தின்னும் ?
உங்க வருங்கால சந்ததி
சோத்துக்கு என்ன பண்ணும் ?
வானம் பாத்த பூமியிலே
மழை போன பின்னால
மானம் மருவாதியும்
போகனுமா மகராசங்களா ?
கோடிகோடியா கடன் வாங்கும்
கேடிகளின் கடன்கள்தான் தள்ளுபடி யாகுது !
வயலை நம்பி வயித்துப்பசிக்கு
கடன் வாங்கும் ஏழ சனம்
தள்ளாடி சாகுது !
இடுப்புத் துண்டோட
காடுகர தினம் நடந்து போகுறான்.
வெள்ளாம வீடுவந்து சேரலன்னா
துக்கம் தாங்காம
தூக்குப் போட்டுச் சாகுறான் !
டிஜிட்டல் இந்தியானு
ஏதோதோ சொல்றிங்க.
திங்கறதுக்கு சோறு தண்ணி இல்லனு
போராடுனா கண்டுக்காம கொல்றிங்க !
வண்ணத்திரையும் சின்னத்திரையும்
பாத்துப்புட்டு நாம சிரிக்கிறோம் !
விவசாய காப்பாத்துங்கனு
டெல்லியில ரெண்டு கைய விரிக்கிறோம் !
கிளீன் இந்தியாதான் இனி !
விவசாயி இல்லனா
நாட்டுக்குப்
பிடிக்கும் சனி !
மு.மகேந்திர பாபு.
************************************************************************
தீபாவளித் தேடல்
பார்த்து எடுங்கப்பா
என ஒருவரும் ,
பெரிய கடைன்னாலே
விலை அதிகம்தான்
பேரம் பேச முடியாதென ஒருவரும் ,
உனக்குப் பிடித்திருந்தால்
விலையைப் பற்றி யோசிக்க வேணாம் என ஒருவரும் ,
இதுதான் வேணும் என அடம்பிடித்த மகனிடம் ,
இதுக்குத்தான் இவன கூட்டியார
வேணாம்மேன் என தன் மனைவியிடம் ஒருவரும் ,
தள்ளுபடி விற்பனையில்
பார்க்கலாம் என
சின்னச் சின்ன குறைபாடுள்ள
துணிகளைத் தேடும் ஒருவரும் என,
மாநகரில் புதிதாய்த் தொடங்கப்பட்ட
துணிக்கடையில் தேடுகிறார்கள்
அவரவர்க்கான தீபாவளியை !
************************************************************************
ஓலைக் கொட்டானும் ஓசோன் ஓட்டையும்.
ஊருக்கு மாமா வருகிறார்
என்றாலே மகிழ்ச்சிதான்.
மாமாவின் இரண்டு கைகளிலும்
ஐந்தடுக்கு டிபன் கேரியரைப் போல
திண்பண்டங்கள் அடுக்கி வரும்.
கீழ் அடுக்கிலிருந்து சேவு,
மிக்சர் , சீவல் ,
கருப்பட்டி மிட்டாய் ,
சீனி மிட்டாய் என
ஒவ்வொரு அடுக்கும்
நிறைந்திருக்கும்
மாமாவின் மனசைப் போல.
்
பலநாட்கள் கொட்டானில் இருந்தாலும்
நமத்துப் போகாமல்
மொருமொருப்பபாகவே இருக்கும்
தின்று முடிக்கப்பட்ட பின்
கொட்டான்கள்
கடைக்குச் சென்று பொருட்கள்
வாங்கவும்,
விதைப்பு நேரத்தில் விதைப். பெட்டியாகவும் ,
வீட்டில் பொருள் போட்டு வைக்கவும்,
பல நாட்கள் கழிந்தபின்
ஓட்டையாகி விட்டால் அடுப்பெரிக்கவும் என
அவதாரங்கள் எடுக்கும்.
இன்று ,
கொட்டான்களைக் காண்பதே
அரிதாகி விட்டது.
ஒரு ரூபாய்க்கு கருவேப்பிலை வாங்கினாலும்
அதற்கும் பாலித்தீன் பை கேட்கும்
மனநிலை.
மஞ்சள்பை தூக்கிச் செல்வது
கௌரவக் குறைச்சலாக
இருக்கிறது இன்று.
இயற்கையையும்,
நம்மையும் தின்று கொண்டிருக்கின்றன
பாலிதின் பைகள்.
வாழ்வு தந்தது கொட்டான்
மனிதன் அதை விட்டான்
மாசினால் கெட்டான்
வாழும்வரை துன்பப்பட்டான்.
மீண்டும் மாமா வரவேண்டும்
ஓலைக் கொட்டானோடு !
**************************************************************************
பைக்கூடு
பால்யத்தில்
என்பைக்கூடு பல பரிணாமம் எடுக்கும்.
சிலேட்டு , நோட்டுகளை
பள்ளி நாட்களில் சுமக்கும்.
மாலை வேளையில்
கடைக்குப் பொருட்கள் வாங்கப் போகும்.
சனி , ஞாயிறுகளில்
காட்டிற்கு விதைப் பொருட்களை
எடுத்து வெற்றி நடைபோடும்.
என் பைக்கூடு
எனக்கு கிட்டியதில்
அம்மாவின் சாமர்த்தியமே அதிகம்.
நூறு ரூபாய்க்கு பொங்கத்துணி
புதுசு எடுத்திருக்கோம்.
துணிப்பை கொடுக்காம
சருவத்தாளக் கொடுக்கிறிங்க என
சண்டை போட்டு பையை வாங்கினாள்
ஜவுளிக்கடையில்.
நாட்களின் நகர்தலில்
எடை தாங்காது காதறுந்து போக ,
கவலைப்படாதே என ஆறுதல் கூறி
ஊசி நூலால் பையின்
உறவை ஒட்டி வைத்தாள்.
நிறம் இழந்த போது
நிம்மதியை நான் இழக்க ,
அடுத்த பொங்கல் வரை
அழுக்குப்படாமல் பாத்துக்கோ.
அம்மா புதுத்துணி எடுக்கும்போது
வேற பை வாங்கலாம் என
உற்சாகம் தந்தாள்.
வீட்டுச் சுவரில் அடிக்கப்பட்ட ஆணியில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
இன்றும் ஒரு சில துணிப்பைகள்
பால்யத்தைச் சுமந்து படி.
**************************************************************************
பொதுக் கழிப்பறை
மாநகரப் பேருந்து நிலையத்தின்
கழிப்பறைக்குள்
' அவசரத்திற்கென ' நுழைந்தவனின்
முகம் மாறுகிறது
அஷ்ட கோணலாய்.
சிகரெட்டின் புகை வளையங்கள்
சுற்றிக் கொண்டிருக்கிறது அவனையும்,
கழிப்பறையையும்.
உள் இருப்பவன்
உறங்கி விட்டானோ என்ற
ஐயத்தில் தாழ்ப்பாள் இல்லாத
தகர கதவினைத் தட்ட ,
'ம்ம் ' என்ற இருமலும் ,
உறுமலுமாய்ப் பதில் வர ,
விரக்தியில் நிற்கிறான்.
ஒரு வழியாய்
உள் நுழைந்தவனை
திசை திருப்புகின்றன
யாரோ ஒரு மனம் பிறழ்ந்தவனின்
அரைகுறை நிர்வாண
ஓவியங்களும் , வாசகங்களும் !
*************************************************************************
0 Comments