நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள் - கதிரவன் சூரிய காந்தி - 2002

 


நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகள்


" தந்தனத்தோம் என்று சொல்லியே 

வில்லிசை பாட- ஆமா

வில்லிசை பாட

               - என எங்காவது இன்று ஒலி பெருக்கியில் கேட்க நேர்ந்தால் , அது ஆச்சர்யப் படக்கூடியதாகவும் , ஆனந்தப் படக்கூடியதாகவும் இருக்கும்.


      நவீன நாகரீக காலமான இன்று , கிராமியக் கலைகளின் இதயங்கள் மெல்ல மெல்லச் சுருங்கிக் கொண்டும் , நொறுங்கிக் கொண்டும் வருகின்றன. காலத்தின் மோகத்தில் ' ஆடலும் பாடலும் ' என்றும் ' பாட்டுக் கச்சேரி ' என்றும் இன்றைய விழாக்களின் நிகழ்ச்சிகள் அமையத் தொடங்கிவிட்டன. சமையல் அறையில் மொத்தமாய்க் கீழே விழுந்த பாத்திரங்களின் இசை போலாகிவிட்டது இன்றைய இசை. மக்கள் இதை விரும்புவதால் நாட்டுப்புறக் கலைகள் மெல்ல மெல்ல அழியத் தொடங்கிவிட்டன.


              நாட்டுப்புறக் கலைகளில் வில்லிசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.இரவில் ஆரம்பமாகும் வில்லிசை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். கிராமப்புறங்களிலுள்ள பெரியவர்கள் வில்லிசை முடியும் வரை ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ' வில் ' போன்ற அமைப்பில் மேலே கயிறும் , கீழே மணிகளும் தொங்கவிடப்பட்டு , நடுவில் ஒரு குடம் ஒன்றும் இருக்கும்.வில்லிசைக்கு எடுப்பாய் ஒரு உடுக்கை , சிங்கி மேலும் சில பக்க வாத்தியங்களும் இருக்கும்.


             வில்லிசை தொடங்கும் போது , சம்பிரதாய முறைகளுடன் தேங்காய் , பழம் , வெற்றிலை , பாக்கு , ஒரு நாழி முழுமைக்கும் அரிசி அல்லது நெல் எனத் தொடங்கப்படுகிறது. கோவில் விழாக்களில் எந்தச் சமுதாயத்தினரால் எந்தத் தெய்வத்தினரால் எந்தத் தெய்வத்திற்கு விழா எடுக்கிறார்களோ அவர்களைப் பற்றி முதலில் வில்லிசைப்பாடி , பின் புராணங்களைப் பற்றிப் பாடப்படுகின்றன.


            வில்லானது , பாடுபவருடைய பொறுப்பில் இருக்கும். குடம் அதற்கருகில் உள்ளவரிடம் இருக்கும்.  சிங்கி , உடுக்கை போன்றவை பிறரிடம் இருக்கும். பாடலுக்கேற்ப ஒவ்வொருவரின் உடல் அசைவும் இருக்கும். " ஆமா ! , சரி , அப்படியா ? , இப்படியாக , என்ன சொன்னான் ? " போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படும் வண்ணம் அமைந்திருக்கும்.


                  அதைப்போல , கிராமங்களில் மேடை அமைத்து , வேசம் கட்டி , அனைவரையும் கட்டுண்டு இருக்கச் செய்யும் நாடகங்கள் இன்று , எங்கோ எப்போதாவது ' குறிஞ்சி மலர் ' பூப்பதைப்போல நடைபெறுகிறது.


      நாடகங்களில் கட்டபொம்மன் நாடகமும், அரிச்சந்திரன் நாடகமும் புகழ் பெற்றவை. அரிச்சந்திரன் நாடகத்தில் ' மயான காண்டம் ' இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்ட நிகழ்ச்சி. இவை தவிர இராமாயணத்தைப் பற்றிய பாவைக் கூத்துக்கள் சிறப்பானவை.


         திரை கட்டி , உள்ளிருந்து கொண்டு இராமர் , இலட்சுமணன் , சீதை , அனுமன் , சுக்ரீவன் , வாலி , இராவணன் , உளுவத்தலையன் , உச்சிக்குடுமி போன்றோரின் அட்டைப் படங்களை வைத்து அதற்கேற்ப ஒலி எழுப்பி , கூத்து செய்யும்போது , மக்கள் மனம் முழுக்க அந்தச் சிறுதிரையிலேயே இருக்கும்.  இன்றைய வெள்ளித் திரைகளும் , சின்னத்திரைகளும் பொழுது போக்கு என்ற பெயரில் சமூகத்தைச் சீரழிக்கும் வகையில் மக்களைக் கெடுத்து வருகின்றன. குடும்பப் படங்கள் மறைந்து , இன்று ஆபாசப் படங்கள் திரை உலகை உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு விட்டன. 


                இன்றைய அரசு விழாக்களில் கூட நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது வருத்தப்படக்கூடிய ஒன்று. கிராமியக் கலைஞர்களின் வாழ்க்கை வசந்தம் பெற , அரசு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையேல் , காலச்சக்கரத்தின் சுழற்சியில் இன்னும் இருபது , முப்பதாண்டுகள் செல்கையில் , இனிவரும் சந்ததியினர் ' வில்லிசை ' என ஒரு கலை இருந்ததா ? எனக் கேட்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.


மு.மகேந்திர பாபு.


நன்றி - கதிரவன் ஜூன் 23 - 2022
Post a Comment

0 Comments