நான் ரசித்த பாடல் - என் கனவினைக் கேள் நண்பா - சினிமா எக்ஸ்பிரஸ் - 1999 - மு.மகேந்திர பாபு கட்டுரை

 நான் ரசித்த பாடல் 


   என் கனவினைக் கேள் நண்பா.


                 மனிதன் மாண்டபின் மக்கள் மனதிலிருந்து மறக்கப்பட்டு விடுகின்றான். ஆனால் , கவிஞனோ மாண்டும் மக்கள் மனதிலே தன் பாடல்களால் உலா வந்து கொண்டிருக்கின்றான். கவியரசு கண்ணதாசன் , பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என நீளும் இப்பட்டியலில் புதிதாகச் சேர்ந்தவர் அன்புக் கவிஞர் வாசன்.


              திரைப்படக் கவிதைச் சோலைக்குள் புகுந்த இவர் குறுகிய காலத்திலேயே தன் எண்ணங்களைப் பாடலில் வெளிப்படுத்தி , தமிழகத்தையே சுற்றிப் பறந்து வந்தவர். நல்ல நல்ல பாடல்கள் பல தந்தவர்.


       சமீபத்தில் வெளிவந்த ' தேசிய கீதம் ' படத்தில் அவருடைய பாடலான ' என் கனவினைக் கேள் நண்பா ' என்ற பாடல் என்னைக் கவர்ந்தது . நான் ரசித்துச் சுவைத்தது.


     ' என் கனவினைக் கேள் நண்பா உனக்குப் புரியும் ' எனப் பாட்டெழுதி, கனவு நனவாகுமுன்னே நம்மைக் கவலையில் ஆழ்த்திவிட்டுப் பிரிந்து சென்றவர். மகாகவி பாரதி சுதந்திரம் கிடைக்குமுன்னே , 


" ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே 

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ' எனப் பாடிச் சென்றான். அவனது கனவு நனவாகி 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த வகையில் கவிஞர் வாசனின் கனவு வெகு விரைவில் நனவாகும்.


என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்.

ஒரு புறம் வறுமையும் மறுபுறம் கொடுமையும் ஏழையை வாட்டுது தெரியுமா ?

இந்த மண்குடில் ஆசையை மாளிகை அறிந்திடுமா ?

நண்பனே இது மாற வேண்டும் பசி ஆற வேண்டும்

இந்த இளைஞர் கையில் எங்கள் தேசம் மாற வேண்டும்.


             உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே கவிதை என்றார் கவியரசு கண்ணதாசன். அந்த வகையில் கவிஞர் தன் உள்ளத்தில் உள்ளதை பாடலாகக் கொட்டித் தீர்க்கின்றார். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்று வறுமையும் , கொடுமையும் மக்களைச் சூழ்ந்திருப்பதைக் காட்டுகின்றார். படித்துவிட்டு வேலையில்லாமல் சிறகிழந்த பறவைபோல் தவிக்கின்ற இளைஞர்கள் கையில் தேசம் மாற வேண்டும் என்கிறார்.


       மேலும் கவிஞர், எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் தன் ஆசைகளை அடுக்கடுக்காய் கொட்டுகின்றார்.


         பாட்டி பால்வித்த கணக்கை கம்ப்யூட்டர் பதிய வேண்டும்

நாற்று நடுகின்ற பெண்ணும் செல்போனில் பேச வேண்டும்.

உழவன் ஏரோட்ட பென்சு காரோட்டிப் போகவேண்டும்

விளையும் பயிருக்கு நாங்கள் சொல்கின்ற விலைகள் வேண்டும்

   

       என்று கூறிக்கொண்டே ... , 


வேத்து நாட்டோன் நமது நாட்டில் வேலைக்கு அலைய வேண்டும் என்கிறார் கவிஞர். ஆகா ! இந்த நிலை மட்டும் வந்து விட்டால் இந்தியா இமாலய வெற்றிச் சிகரத்தில் கால் பதிக்கும்.


             எங்கள் ஊர்ச் சாலையில் செல்லும் பேருந்து தவளை மட்டுமா தாவித்தாவிச் செல்லும் ? நானும் அவ்வாறே ! என இரைந்து கொண்டே சாலையில் செல்லும். இதை மாற்றக்கோரி கவிஞன் தன் பாடல் மூலம் மனுப்போடுகிறார்.


பட்டி தொட்டி எங்கும் பளிங்குக்

கல்லாலே ரோடு வேண்டும்.

நடை பாதையில் தூங்கும் ஏழைக்கும் சொந்த வீடு வேண்டும்

இந்தியாவின் இளைஞர் கூட்டமே 

இளைத்ததல்ல எந்த நாட்டுக்கும்


       எனக்கூறி இளைஞர்களின் உணர்ச்சியைத் தூண்டி விடுகிறார். மேலும் , 


சுதந்திர வேள்வியை நடத்தும் படை இருக்கு

சுரண்டலை எதிர்த்திட இனியும் பயம் எதுக்கு ?      ஓ ! என் அன்புக் கவிஞன் வாசனே ! நெஞ்சில் பயமில்லை. உன் பாடல் எங்கள் நெஞ்சோடு இருக்கையில். 


       கவிஞர்.மு.மகேந்திர பாபு.


சினிமா எக்ஸ்பிரஸ் , 15 மார்ச் 1999.

Post a Comment

0 Comments