இளங்குட்டிகள் - சிறுகதை - மு.மகேந்திர பாபு

 



இளங்குட்டிகள் - சிறுகதை - இனிய உதயம் மாத இதழுக்கு .

மு.மகேந்திர பாபு.


                       கூதக் காய்வது போல வட்டமா உக்காந்து கொண்டாக அஞ்சுபேரும்.


                  "எலே ! சொன்ன மாதிரி ஆளுக்கொரு சாமானாக் கொண்டாந்தாச்சாடா ? "


ம்ம் ... கொண்டாந்தாச்சு எனச் சொல்லியபடியே சொக்கன் தன் டவுசர் பைக்குள் இருந்து பாட்டிலை  எடுத்தான்.


            "கொண்டாடா ... எனச் சொல்லி , மிக்கேல் மூடியத் திறந்து மோந்து பாத்தான்.


          அட … ஆக்கங்கெட்ட மூதி... என்ன கொண்டு வந்திருக்கான் பார்ரா ... எலே கலரப் பாத்தாலே தெரியலயாடா உனக்கு ?  என்றான் மிக்கேல்.  


        அட ... ஆமாடா , அவசரத்தில எங்கம்மாவுக்குத் தெரியாம எடுத்ததில பாட்டல மாத்தி எடுத்திட்டன்டா ...


        சரி சரி  ... பரவால்ல , நானும் கொண்டாந்திருக்கேன் எனச்சொல்லி , தன் டவுசர் பைக்குள்ளிருந்து மிக்கேலும் ஒரு  பாட்டிலை எடுத்து வச்சான். ஒவ்வொருத்தரும் ஏற்கனவே சொன்னமாரி ஆளுக்கொரு பொருளாய் எடுத்து வச்சனர்.


டொணக்கு  தன் டவுசரிலிருந்து கைய விட்டு எடுக்கும் போது , சேவும் மிச்சரும் வெங்காயத்தோடும் , தீப்பெட்டியோடும்  சேந்து வந்தன.


      " எப்பப்பாரு திங்கறதிலே இருக்கான்டா இவன். நம்ம பெரியவீட்டு மனாரன் மாமா கிரைன்டர் அரைக்கற மாதிரி எந்நேரமும் இவன் வாய் அரைச்சுக்கிட்டே தான் இருக்கும் " என்றான் சிரித்துக்கொண்டே மிக்கேல்.


        டொணக்குவின் டவுசர் பை பலபொருட்களைத் தன்னுள் அடைகாக்கும். அவன் கை வீசி நடக்கும் போது டவுசர் பையும் கலகலவென சத்தம் கொடுக்கும். கோலிக்குண்டுகளும் , பம்பரமும் , சாட்டையும் , புளியமுத்தும் , கிட்டிக்குச்சியுமென விளையாட்டுப் பொருட்களாய் நிறைந்து கிடக்கும். பருத்திக்கு இரண்டு எடையாக வாங்கிய பலாக்கொட்டையும் சில காலங்களில் தன் பங்கினை அடைத்திருக்கும். இவ்வளவுக்கும் இடையில்தான் சின்ன வெங்காயத்தைத் தன் டவுசர் பையிலிருந்து எடுத்தான் டொணக்கு.


கடுகயும் , சீரகத்தையும் கருப்சாமி எடுத்து வச்சான். முனிசாமி வடசட்டியும் , கரண்டியும் வச்சான். ஆடு மேய்க்கக் கொண்டுப் போகும் ரெண்டு லிட்ரு வாட்டர் கேனில் தண்ணியும் , தாளில் மடித்திருந்த கல் உப்பையும் வச்சான் தவக்கள . 


        எல்லாம் இருக்குபா. வேலய ஆரம்பிப்போம் எனச்சொல்லி , மூனுகல் வச்சி அடுப்பு தயார் செஞ்சான் மிக்கேல். சில்லாடை , ஓல , பூமுள் என தீயெரிக்கத் தேவையானதைச் சேகரித்துக்கொண்டார்கள். தீப்பெட்டி எடுத்துப் பத்த வச்சான் முனிசாமி . லூசுப்பைய , " ஈர டவுசருக்குள்ள தீப்பெட்டிய வச்சா மயிராடா தீப்பிடிக்கும் " என மொனகிக் கொண்டே பத்தவச்சான். தீப்பெட்டியின் பக்கவாட்டில் குச்சி உரச உரச கருமருந்து தீப்பிடிக்காமல் கீழே விழுந்தது. 


" என்னலே தீப்பெட்டி இது ? கெரகம் பிடிச்சவன். கம்மாயில குளிச்ச டவுசரோட ஈரம் காயமின்னாடி வெங்காயத்தையும் , தீப்பெட்டியும் , தின்பண்டத்தையும் போட்டுக் கொண்டு வந்துட்டான் செத்த பய."


" வேற யாராச்சும் தீப்பெட்டி வச்சிருக்கீகளாலேய் ! " 


   கொஞ்சம் பொறுடா எனச்சொல்லித் தவக்கள டன் டவுசர் பையிலிருந்து ஒரு தீப்பெட்டியை நீட்டினான். 



நல்ல வேளடா ! நீ கொண்டாந்த ! ஏற்கனவே பசி நேரத்தில ஈரத்தீப்பெட்டியக் கொடுத்து ஈரக்கொலையப் பிடுங்குறாண்டா இந்த டொணக்கு என்றான் மிக்கேல். 


      ஒரு இழு இழுத்தவுடன் தீ எட்டிப்பாத்தது. மினுக்கென எரியும் தீயை சில்லாடைக்குள் வைக்க மதமதவென தீப்பரவியது.


சருவத்தாளிலிருந்த கீரைய வடச் சட்டியில் போட்டு , தண்ணி ஊத்தி கழுவினான் தவக்கள. ஏற்கனவே கம்மாயில வச்சு நல்லாக் கழுவியாச்சு. திரும்பச் சருவத்தாளில் போட்டுவிட்டு சட்டிய அடுப்பில் வைத்தான்.


                        சனி , ஞாயிறு லீவுன்னால பசங்களுக்குக் கொண்டாட்டம்தான்.  ஆடுமேய்க்கவோ , மாடுமேய்க்கவோ போகலாம். மேய்ச்சலுக்குப் போகும்போது வடகாடு , தெக்காடு , கீகாடு , மேகாடு என நாலாபக்கமும் சுத்திவரலாம். 


             மல்லிகைப்பூவின் மணமொத்த மஞ்சணத்தி மரத்தில் பழம் புடுங்கித் தின்னலாம். பனைமரத்தின் அடியில் விழுந்து கிடக்கும் பனம்பழத்தை எடுத்து , கீழே விழுந்து கிடக்கும் காவாலி ஓலையால் சுட்டுத் தின்னலாம். வெடலிப் பனையில் சரஞ்சரமாய்த் தொங்கும் நொங்குக் குலைகளை கருக்கால் வெட்டி , சீவித் தின்னலாம். பட்டத்தில் கொடிவீசிச் செல்லும் பாசி , தட்டப் பயிர்களின் காய்களைப் புடுங்கித் தின்னலாம். இது எல்லாம் சல்லிக்காசு செலவின்றி வார போறவழியில் தின்பதற்காக கிராமம் சின்னப் பசங்களுக்குத் தரும் சீதனங்கள்.


          இவைகளை விடக்கொண்டாட்டம் பக்கத்து ஊர்லெ கள எடுப்புக்குப் போவது. பத்துப் பதினஞ்சு பேர் செட்டாகச் செல்வது. பாசி , தட்டை , உளுந்து என மானாவரி நிலத்தில் அதாவது பிஞ்சயில் போட்டிருக்கும் செடிகளில் உள்ள களைகளைப் பறிப்பது. பதினோரு மணிக்கு கடுங்காபியும் , நம்பியாரத்தில் இருந்து வடையும் வந்துவிடும். 


          கொஞ்சம் தைப்பாறி மீண்டும் நிரை பிடிச்சு கள எடுக்கணும். பெரும்பாலும் கீரைச்செடியும் , கோரைகளும் , சாரணத்தியும் மண்டிக்கிடக்கும். அருகு இருக்கும் பிஞ்சை என்றால் கள எடுப்புக்குச் செல்ல மாணவர்கள் தயங்குவாங்க. ஏன்னா அது கையைப் பதம் பாத்துவிடும்.


          கள எடுப்பு முடிஞ்சு , காசையும் வாங்கிக் கொண்டு , வரும் வழியில் நல்ல பூக்காத கீரைகளைப் பிடுங்கிக்கொண்டு கம்மாயில ஒரு குளியலையும் போட்டுவிட்டு , வீட்டுக்குப் போய் ஆளுக்கொரு சாமானாக எடுத்துக்கொண்டு இதோ கூடிவிட்டார்கள்.


            முனுசாமி கொண்டு வந்த வடச்சட்டி அனேகமாக அவன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கலாம். வடச்சட்டியின் இருகாதுகளும் வயோதிகத்தால் இத்துப்போய் விழுந்து விட்டன. முழுமையும் தண்ணீர் ஊற்றினால் காது ஓட்டை வழியாக கீழே தண்ணீர் ஒழுகும்.  பல நெளிசல்களுடன் இருந்தது.



        மிக்கேல் தான் கொண்டுவந்த பாட்டிலில் இருந்து கடல எண்ணெய ஊத்தினான். சூடு தாங்காமல் கடுகு டபடுப என புலம்பி வெடித்தது. கடுகுக்குப் பின் வெங்காயத்தைப் போட வேண்டும். கருப்சாமி கம்பரக் கத்தியால் வெங்காயத்த நறுக்கித் தன் துண்டின் மீது தயாராய் வைத்தான். 


         துண்டிலிருந்த வெங்காயத்தை அள்ளி வடச் சட்டிக்குள் போட்டு லாவகமாகக் கிண்டினான் மிக்கேல்.  வேகத் தொடங்கியது வெங்காயம். பட்ட வத்தலை இரண்டாய்ப் பிய்த்து உள்ளே போட்டான். மிளகாய் வத்தலின் நெடி மூக்குக்குள் மெல்ல ஏற , கரண்டியால் கிண்டினான் மிக்கேல். 


                எலே , டொணக்கு ... அடுப்பு ஆடுதுடா ! துண்ட வச்சு லேசாப் பிடிச்சுக்கோ கிண்றவரைக்கும் என்றான். 


           தன் தோளில் போட்டுருந்த சீசன் துண்டின் ஒரு நுனியைச் சுத்தி , அடுப்பை ஆடாமல் பிடித்துக்பொண்டான். 


           நல்லாப் பிடிச்சடா சாமி ! இன்னொரு நுனி அடுப்புக்குள்ள கெடக்குதுடா . எடுறா சடார்னு எனச்சொல்ல , துண்டை உருவினான் டொணக்கு. எரியத் தயாராக இருந்த துண்டைத் தவக்களை தண்ணீர் ஊற்றி அணைத்தான்.


        கிராமத்துப் பசங்களின் மேலே சட்டை இருக்கிறதோ இல்லையோ ஒரு துண்டு நிச்சயமாக இருக்கும். குளிக்க , துவட்ட , ஏதாவது காய்கறிகளக் கொண்டு வர , மடத்தில விரிச்சுப் படுக்க என எப்போதும் உடன் இருக்கும் துண்டு.

         

          பாதி வேக்காட்டுக்குப் பின் கீரயப் போட , ' சுரீர் ' என்ற சந்தோசக் கூச்சல்  போட்டது சட்டி.


         வலது கையால் கிண்டிக்கொண்டே இடது கையால் ஓலையையும் , முள்ளையையும் அடுப்பிற்குள் தள்ளினான் மிக்கேல். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வத்தி , ஆவியாகிக் கொண்டிருந்தது.


            "எலே , வெந்துரிச்சானு பார்ரா" என்றான் மிக்கேல் உப்புக் கல்லைப் பரக்கத் தூவிக்கொண்டு.


நான் பாக்கறேன் என்றான் சொக்கன். நீ ஒன்னும் பாக்க வேணாம். முனுசாமி நீ தின்றா.


             எலே , அவனே தின்னு சொல்லட்டும்டா … அவன் தின்னா என்ன ? நான் தின்னா என்ன ? அவன் சடச்சிக்கிறப்போறான்டா.


       அப்படியா ? நல்லாச் சொன்னடா சாமி. நீ வெறும் வயித்தோட வீட்டுக்குப் போகனும்னா அவன் உப்புப் பாக்கட்டும். ஏன்னா  உப்புப் பாக்கறேன் , உப்புப் பாக்கறேனே பாதியத் தின்றுவான்டா. கடல எண்ணய எடுத்துட்டு வாடான்னா ,  தேங்கா எண்ணய கொண்டாந்துருக்கான். இவன எனத்தச் சொல்ல. ? 


                        சரி சரி . வுடு. நல்லா வெந்திரிச்சுடா. கீரையை வாயில் போட்டுக் கொண்டே துண்டால் இறக்கி வைத்தான் கருப்சாமி.


               " அட பப்பெடுத்தவனே ! ஒரு நிமிசம் பொறுடா. ஊதிட்டு வாய்ல போடு. வாய் பொத்துப் போகப்போகுது " என்றான் மிக்கேல். 


      டேய் தவக்கள ! வாட்டர்கேன்ல உள்ள தண்ணிய அடுப்புல தெளிச்சு விடுறா. காத்துக்குக் கங்கு ஏதும் பறந்து போய் எங்காவது விழுந்துச்சுனா பொழப்பு நாறிப்போகும்.


        தவக்கள தான் கொண்டு வந்த கேனில் உள்ள தண்ணியை நன்கு ஊற்ற , புகை எழும்பி பின் அடங்கியது. அடுப்புக்குள் எந்தக் கங்கும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான். 


        மெதுவா பாத்து வாங்கடா ! முள் குத்திரப் போகுது. வெடலிப் பனை நிழல் உக்காந்து , சாவகாசமாச் சாப்டலாம் எனச்சொல்லிக்கொண்டு , மிக்கேல் டொணக்கின் துண்டினால் வடைச்சட்டியை இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு சென்றான்.


             ஆடு மாடு மேய்ப்பவர்களும், விறகு வெட்டுபவர்களும் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் இடமாக வெடலிப்பனை இருந்தது. 


                    வானத்தின் நடு உச்சியிலிருந்து சூரியன் மேற்கு நோக்கி இரண்டு அடிஸ்கேல் அளவு தூரம் சாய்ந்திருந்தான். 


           " எனல் பாத்து உக்காருங்கடா " எனச்சொல்லிக்கொண்டு கீரச்சட்டியை வைத்தான் மிக்கேல். வட்டமாக உக்காந்தனர். டொணக்கு கரண்டியால் ஆளுக்குக் கொஞ்சமாக உள்ளங்கையில் வைத்தான். 


          தவக்கள வலது கையில் வைத்ததை இடது கைக்கும் , பின் வலது கைக்கும் மாற்றி மெதுவாக ஊதிஊதித் தின்றான். 


         ஏன்டா ! அதான் ஆறிருச்சில்ல. அப்றம் ஏன் சோத்தாங்கைக்கும் பீச்சாங்கைக்கும் மாத்திக்கிட்டு இருக்க ? 

        அதா… வாயில புண்ணு இருக்குள்ள. அதான் நல்லா ஊதித்திங்கறேன்.


     சரி … சரி … நல்லா ஊதிக்கிட்ரு. சட்டி காலியாப் போகிறோம் எனச்சொல்லிச் சிரித்தான் மிக்கேல்.


                     சில நிமிசத்தில வடச் சட்டி கழுவியது போல் ஆகி , காலியாக , காலியாய் இருந்த வயிறு கொஞ்சம் நிறைந்தது.


               அப்போது சரக் சரக் எனச் சத்தம் கேட்க , திரும்பிப் பாத்தான் தவக்கள. 


     " என்ன பெரியா ? இங்கிட்டாக்க வார ? என்றான் முத்துவைப் பாத்து ! "


        ஒன்னுமில்லடா மகனே ! ஒரு ஆட்டையும் , குட்டியையும் காணம்னு தேடிக்கிட்டு இருக்கேன். மேலாக்கப் புகை வந்துச்சா அதான் என்ன ? ஏதுனு பாப்பம்னு வந்தேன். 


                  " அதுசரி . நாலஞ்சு வாண்டுகளாச் சேந்து இங்ன என்னடா பண்ணுதிக சட்டியும் கையுமா ? "


   அதுவா பெரியா ! இன்னிக்கு ஸ்கூலு லீவுள்ள. அதான் மேகாட்டுக்கு கள எடுக்கப் போணோம். திரும்பி வரும்போது கொஞ்சம் கீர பிடுங்கியாந்தோம். அதான் சேக்காளிகளோடு சேந்து கீரகிண்டித் திங்களாம்னு வந்தோம். 


           கிண்டிட்டிகளா ? " மணக்குதடா மகனே ! "


" முடிஞ்சது பெரியா . முன்னமே வந்திருந்தா உனக்கும் ஒரு வாய் கொடுத்திருப்பம்ல."

 

           " அட ! சொன்னதே போதும்டா !  வயிறாரச் சாப்டமாதிரிதான்.  அதுசரி. அவன் யார் மகன்டா ? "


             அவன் நம்ம ஞானப் பிரகாசம் மாமா மகன் மிக்கேல். இவன் பாண்டி மாமா மகன் கருப்சாமி. அவன் வடக்குத் தெரு. அவன் கீழத்தெரு. எல்லாம் ஒன்னாப் படிக்கோம் மாமா. 


              பரவால்லடா ! நான் கூட நம்ம பசங்க கூடத்தான் ஒன்னா மண்ணா திரியிறகளாக்கும்னு நினைச்சேன். அந்தத் தெருப் பசங்களும் உங்ககூடத் திரியிறாங்களா ? 


                 ஆமா பெரியா ! நாங்க ஒன்னாத்தான் பள்ளிக்கூடத்திலயும் திரிவோம். இங்கயும் ஒன்னாத்தான் சமைச்சு சாப்டோம். ஊட்டியும் விடுவோமே !  என்றான் மகிழ்ச்சியில் தவக்கள.


                    ரொம்ப சந்தோசம்டா ! நான் பெரிசு , நீ பெரிசுனு சொல்லிட்டுத் திரியறானுவ எங்களப் போல பெரிசுக. ஆனா நீங்க ஒன்னா மண்ணா இருக்கிறது ரொம்ப சந்தோசம்டா. 


         சரி சரி . நாங்க கிளம்புறோம். வாங்கடா ! போலாம்னு சேக்காளிகள் தோளோடு தோள் சேர்த்து கைகோர்த்துப் போனார்கள். 


       ஆட்டையும் குட்டியையும் தேடி வந்த முத்து , குட்டிகள் தெளிவாகத்தான் இருக்கின்றன என மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தார் அவர்கள் நடந்து போவதை !


மு.மகேந்திர பாபு , கருப்பாயூரணி , மதுரை - 20. 

பேச - 97861 41410

Post a Comment

0 Comments