பள்ளியில் செய்வோம் பசுமைப் புரட்சி
மு.மகேந்திர பாபு , M.A , B.ED , M.PHIL , D.T.ED பட்டதாரி தமிழாசிரியர் & பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்.
வரலாற்றில் இடம் பிடித்தவர்களும் , தடம் பதித்தவர்களும் சாதனை படைத்தவர்களே ! எத்தனையோ அரசர்கள் இந்தியாவில் ஆட்சி செய்திருந்தாலும் அன்றும் , இன்றும் , என்றும் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு மாமன்னர் பெயர் எதுவென்றால் , அது அசோகர் பெயர்தான். ஏன் நாம் அசோகர் பெயரை அகமகிழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம் ? போரில் சாதனை செய்ததையா ? போரே இனி வேண்டாம் எனச் சொன்னதையா ? இல்லை. இல்லவே இல்லை. அவர் , சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் , குளங்களை வெட்டி வைத்தார் என்ற மகத்தான பணிக்காகத்தானே ! ஆம் ! அவர் மறைந்த பின்னும் கூட , அவரது இன்றும் நம் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்கின்றன அவர் நட்டு வைத்த மரங்கள்.
மரங்கள் மண்ணின் மைந்தர்கள். மரங்கள் நம் தேசத்தின் தியாகிகள். தியாகிகள் இல்லையென்றால் நம் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏது ? மரங்கள் இல்லையென்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏது ? நம் உடலும் , உள்ளமும் உறுதி பெற ஓற்றைக் காலால் நின்று தவம் செய்யும் மரங்கள்தான் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சி என்னும் ஆணிவேரை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நம்மை மகிழ்விக்கும் அந்த மரங்களின் சந்ததி , நம்மோடு கடைசிவரை பயணித்தால்தானே நமக்கு நல்லது ?
நாம் பெருக்கச் சொன்னதைச் சுருக்கினோம் ; அது மரம். சுருக்கச் சொன்னதைப் பெருக்கினோம் ; அது மக்கள் தொகை. பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மரங்களும் பெருகினால் தானே மனிதகுலம் தழைக்கும் , பிழைக்கும் , நிலைக்கும் .
மதுரை - நீண்ட , நெடிய பாரம்பரியம் கொண்ட ஒரு மாநகரம் . சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை , மாசிலிருந்து காக்க , நாம் தற்போது மரம் வைத்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம். இருகரை தொட்டு நீர் ஓடிய வைகையில் , இன்று வெறும் தரைதான் தெரிகிறது. அதில் கழிவு நீர்தான் கவலையோடு ஓடுகிறது.
மரங்களின் மகத்துவத்தை வளரும் சமுதாயமாக உள்ள மாணவர்களின் மனதில் நாம் விதைக்க வேண்டும். ஒரு மரம் தன் வாழ்நாளில் , நம் மனித குலத்திற்கு எத்தனை இலட்சம் மதிப்புள்ள காற்றினைத் தருகிறது என்பதை மாணவர்களை உணரச் செய்ய வேண்டும். எனது மாணவப் பருவத்தில் , எனது தமிழாசிரியர் திரு. வெள்ளைச்சாமி அய்யா அவர்களிடம் , உடல்நிலை சரியில்லை என்று கூறினால் , மாணவா சற்று நேரம் மரத்தடியில் அமர்ந்து வா எனச் சொல்வார். மரங்கள்தான் நோய் தீர்க்கும் கட்டணம் பெறாத மருத்துவர்கள்.
மாணவர்கள் மூலமாக மரம் நடும் பணியை பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். நான் பணி புரியக் கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி (ஆ.தி.ந.) இளமனூரில் பசுமைக்காச் சில திட்டங்களை மாணவர்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறேன். இவைகளை நாம் செய்தால் பசுமையைப் பள்ளியெங்கும் உருவாக்க முடியும்.
1 ) ஒரு விழா ஒரு மரம் நடும் திட்டம்.
அரசு விழாக்களின் அவசியத்தை , மேன்மையை மாணவர்களை அறியச் செய்வதோடு , அவ்விழாக்களை நினைவு படுத்தும் விதமாக ஒவ்வொரு விழாவிலும் ஒரு மரமாவது நடுதல் வேண்டும். குடியரசு தினம் , சுதந்திர தினம் , காந்தி ஜெயந்தி , ஆசிரியர் தினம் , குழந்தைகள் தினம் , காமராசர் பிறந்த தினம் , அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் , உலக சுற்றுச் சூழல் தினம் , ஓசோன் தினம் போன்ற தினங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்கலாம். இதனால் மறைந்த தலைவர்களையும் , மறக்காமல் நம்மிடையே மீண்டும் பிறக்கச் செய்யாலாம். எங்கள் பள்ளி வளாகத்தில் இன்றும் எங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் தலைவர்கள் மரங்களில் உருவத்தில்.
2 ) மாணவர்களின் பிறந்த நாளில் மரம் நடுதல் .
வருடத்திற்கொரு முறை வண்ண உடை அணிந்து பள்ளியில் தன் பிறந்த நாளை மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறார்கள் மாணவர்கள் சாக்லேட் இனிப்புகளை ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் கொடுத்து. அந்த மகிழ்ச்சி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். சாக்லேட்டைச் சுற்றியிருக்கும் பாலித்தீன் நம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் . ஒரு நாள் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் , இனி பிறந்த நாளின் போது சாக்லேட்களுக்குப் பதிலாக கடலை மிட்டாய் கொடுங்கள். நம் பள்ளி நூலகத்திற்கு உங்கள் பெயர் எழுதி ஒரு புத்தகத்தைக் கொடுங்கள் . நம் வளாகத்தில் ஒரு பூச்செடி அல்லது மரக்கன்றை நட்டு வையுங்கள் என்றேன். அதற்கு நல்ல பலன் கிடைத்து. பிறந்த நாள் கொண்டாடும் மாணவர்கள் இப்போது தன் பிறந்த நாளிற்காக பள்ளி வளாகத்தில் பூச்செடிகள் , மரக்கன்றுகளை நடத் தொடங்கி விட்டார்கள். இன்று சிறியதாக இது தொடங்கினாலும் , வருங்காலத்தில் மாபெரும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும். மாணவர்கள் வளர மரங்களும் வளரும். மரங்கள் வளர மாணவர்களும் வளர்வார்கள் . என்றேனும் ஒருநாள் மீண்டும் பள்ளிக்கு வரும் போது , தான் வைத்த மரக்கன்று மரமாகி நிற்பதைப் பார்த்து நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
3 ) டாக்டர். அப்துல்கலாம் மாணவர் பூங்கா .
இப்படியும் ஒரு மனிதர் இம்மண்ணில் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்திருக்க முடியுமா ?,என்ற வியப்பான கேள்விக்கு விடையாக அமைந்தவர் , நம் நினைவில் என்றும் வாழும் அய்யா .மேதகு . டாக்டர் . அப்துல்கலாம் அவர்கள். அவர்களின் பிறந்த நாளில் எங்கள் பள்ளி வளாகத்தில் ' டாக்டர்.அப்துல்கலாம் மாணவர் பூங்கா ' என்ற ஒன்றை அமைத்துள்ளேன் பசுமைப்படை மாணவர்கள் மூலமாக. செடியில் பூக்கள் மலரும் போது , அதைக் காணும் நமது முகமும் மலரும். செம்பருத்தி , நந்தியாவட்டை , தங்க அரளி என பலவகைப் பூச்செடிகளை நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்.
4 ) டாக்டர். அப்துல்கலாம் மூலிகைத் தோட்டம் .
முப்பது வகையான மூலிகைச் செடிகளுடன் டாக்டர். அப்துல்கலாம் மூலிகைத் தோட்டம் ஒன்றை வேளாண் அலுவலர் திரு. ஆறுமுகம் அவர்களின் உதவியோடு எங்கள் பள்ளி வளாகத்தில் அமைத்துள்ளேன். தூதுவளை , பிரண்டை , ஆடாதொடை , கற்றாழை , ஓமவள்ளி , பெரியா நங்கை , சிரியா நங்கை , இரணகள்ளி , நோனி , நொச்சி , துளசி என பலவகை மூலிகைச் செடிகளை நட்டு வைத்து அதன் பயன்களையும் , மருத்துவக் குணங்களையும் கூறி வருகிறோம் .
5 ) என் வீடு என் மரம் திட்டம் .
மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரம் வைத்து வளர்ப்பதற்கு இடம் இருந்தால் , அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து , ஆளுக்கொரு மரம் கொடுத்து வீட்டின் முன்பும் , வீதியிலும் நடச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம் . ' வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் ' என்ற நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறும் .
6 ) பசுமைச் சாலைத் திட்டம் .
பள்ளியையும் , வீட்டையும் பசுமையாக்கிய பின்னர் , அடுத்ததாக நாங்கள் மேற்கொண்ட செயல் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடுதல். சமீபத்தில் எங்கள் பள்ளியிலிருந்து , அன்னை சத்யாஙநகர் என்ற கிராமம் வரையிலான இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையைப் பசுமையாக்கும் திட்டத்துடன் தொடங்கப் பட்டதுதான் இந்தப் பசுமை சாலைத் திட்டம் ஆகும். ஆண்டு முழுவதும் அந்தச் சாலையில் தான் பயணம் செய்கிறோம் வெயிலோடும் , சோர்வோடும் . இனி பயணம் சிறக்கும். கவலை மறக்கும் , புத்துணர்வு பிறக்கும் .தன்னார்வத் தொண்டர்களான இந்நாள் மாணவர்கள் , முன்னாள் மாணவர்களைக் கொண்டு இத்திட்டத்தின் மூலமாக மரக்கன்றுகளை நட்டு வைத்து வருகிறேன் . இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இச்சாலை பசுமை சாலையாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இத்திட்டங்கள் அனைத்தும் திறம்படச் செய்கின்ற போது , நம் சுற்றுப்புறம் என்றும் சுகமாக இருக்கும்.
மனிதர்கள் மட்டும்தான் பேசுவார்களா ? மரமும் பேசுமே ! நாம் அவற்றின் பேச்சுக்களைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. ஒரு மரம் தன் ஆதங்கத்தைப் பேசுவதாக நான் எழுதி , பேனரில் தொங்கவிடப் பட்டிருந்த கவிதை. நமது மதுரையின் முன்னாள் ஆட்சியர் திரு. உ.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் பாராட்டிய கவிதை.
இப்படிக்கு மரம் ...
மண்ணில் வேர்விட்டுவிட்டேன்.
நிச்சயம் நிழல் தருவேன் .
காலம் செல்லச் செல்ல
சுவைதரும் கனி தருவேன்.
பறவைகளுக்கு மட்டுமல்ல ...
பல மனிதர்களுக்கும்
நான் என்றும் வீடுதான்.
நான்
உங்களுடனே இருப்பதால் ,
நீங்கள் நலமுடன் வாழ
காற்று தருவேன் .
கோடையின் போது வெப்பம் தணிப்பேன்.
தினமும் பூத்துக் காய்த்துக்
குலுங்கும் என்னைப் பார்த்தால்
உங்கள் எண்ணம் விரியும்.
எனதருமை புரியும்.
உங்கள் உடலில்
சிறு காயம் என்றால்
துடித்துப் போகிறீர்களே !
என் கிளையை வெட்டினீர்கள் .
ஒன்றும் சொல்லாமல்
கனத்த மனதோடு மௌனம் காத்தேன்.
மீண்டும் துளிர்ப்பேன்
என்ற நம்பிக்கையோடு !
மனிதர்களை மட்டுமல்ல ...
மரங்களை அழிப்பதும்
இனப்படுகொலைதான்.
என்றேனும் எனக்காக
விழா எடுக்கும் போது பூ(ரி)த்துப் போகின்றேன்.
மனிதா !
என் மகத்துவத்தை
எப்போது உணரப் போகிறாய் ?
உண்மையில் மண்ணின் மைந்தன் நீயல்ல ...
நான் மட்டும்தான்
மண்ணிலிருந்து வருவதால் !
கவிதை மட்டுமல்ல .பாடல்களாலும் மாணவர்கள் மனதிலும் , மக்கள் மனதிலும் மரங்களின் மீதான நேசிப்பை உருவாக்க முடியும் . கடந்த ஆண்டு நான் பாடல்கள் எழுதி , ஆசிரிய நண்பர்கள் பாடி வெளியான எனது ' மரமும் மனிதமும் ' இசைத்தகடில் உள்ள ஒரு பாடல் இதோ.
மரத்தை வெட்டாதே மனிதா !
பல்லவி
மரத்தை வெட்டாதே ! மனிதா மரத்தை வெட்டாதே !
நீயும் நானும் நல்லாருக்க எல்லாம் தந்திடும் அந்த
மரத்தை வெட்டாதே ! மனிதா மரத்தை வெட்டாதே !
சரணம்.
உழைத்துக் களைத்து வரும்போது சோர்வை நீக்கிடுமே
பசியைப் போக்க பிணியைப் போக்க கனியும் தந்திடுமே
பறவைக் கூட்டம் வந்து செல்ல வீடாய் இருந்திடுமே
பூக்களைத்தான் பார்க்கும் போது மகிழ்ச்சி பூக்குமே
ஒற்றைக் காலில் நின்று கொண்டே ஊரைக் காத்திடுமே ( எனவே மரத்தை )
கோடை வெயில் கொளுத்தும் போது நிழலைத் தேடுவாய்
குளுமை வந்து சேரும் போது நன்றி பாடுவாய்
சாலையோரம் மரங்கள் நட்டினால் பயணம் இனிக்குமே
வீதி எங்கும் மரங்கள் நட்டினால்வீடு மகிழுமே
வருங்கால சந்ததிகள் நம்மைப் புகழுமே ! ( எனவே மரத்தை )
ஓசோன் படலம் ஓட்டை யாகிப் போவதேனடா
உலகம் இப்ப வெப்பமாக ஆவதேதேனடா
கார்காலம் கடந்த பின்னும் பொய்ப்பதேனடா
நிலத்தடி நீர் மண்ணுக்குள்ளே இல்லே பாரடா ! - காரணம்
மரங்கள் இப்ப மண்ணினிலே குறைந்து வருகுதடா ( எனவே மரத்தை )
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்ற பிளாஸ்டிக் பொருட்களின் தீமை பற்றியும் , துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டியதின் அவசியத்தையும் பாடல் மூலமாக மாணவர்களிடமும் , பல அரங்களிலும் பாடியும் பேசியும் வருகிறேன். அந்தப் பாடல் இதோ ...
சுற்றுச் சூழல் காப்போம் !
பல்லவி
உலகம் போற போக்கப் பாருங்க
பூமி நெலம கொஞ்சம் எடுத்துக் கூறுங்க
மண்ணும் மரமும் அழிஞ்சு போகுதே
மனுசன் மனசு இப்போ கல்லாய் ஆகுதே !
சரணம்
வாங்குறது அஞ்சு ரூபா பொருளுதான்
மறக்காம வாங்குறோமே பாலித்தீன் கவருதான்
காலை முதல் மாலை வரை தானுங்க
பாலித்தீன தூக்கிக்கிட்டு அலையுறோமே ஏனுங்க ?
துணிப்பையைத் தூக்குங்க துக்கம் இல்லிங்க
நெகிழிப்பையை நினைச்சாலே தூக்கம் இல்லிங்க
தினம் டீக்குடிக்கும் கப்பு தானுங்க
தூக்கி வீசிப்புட்டாத் தப்புத் தானுங்க
அழகுப் பொருளப் போட்டுத்தான அலங்கரிக்கிறோம்
நம்ம தினமும் அழகு பாக்குறோம்
நச்சுப் பொருளக் கொட்டி ஏனோ நாசம் பண்ணுறோம்
பூமித்தாயின் உடம் தினமும் மோசம் பண்ணுறோம்
இன்பச் சுற்றுலா போவது நாமதானுங்க
எல்லா இடத்திலும் நச்சப் போட்டா தீமதானுங்க
மண்ணும் மரமும் கேட்பதெல்லாம் மழையைத் தானுங்க
மனச்சாட்சிய விட்டுட்டு பேசுறோமே விலையைத் தானுங்க
பூமிப் பந்தில் மனுசன் மட்டும் உயிரு இல்லிங்க
புல்லும் பூண்டும் அழிஞ்சு போனா மனுசன் இல்லிங்க
வாழும்வரை வளமாத்தான் வாழ வேணுங்க
சுற்றுச் சூழல் சுகமா நம்மை ஆளவேணுங்க !
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் .மரங்களுடனான பயணத்தில் மகிழ்ச்சி மட்டுமே என்றும் நம்முடன் வரும் என்றும் நம் மதுரை ' மாசில்லா மதுரையாக ' இருக்கும். வரலாற்றில் இடம் பிடிக்கவோ , தடம் பதிக்கவோ அல்ல இச்செயல்பாடுகள் . நம் வாழ்க்கை வளமானதாக இருக்க , நம் சந்ததி நலமானதாக இருக்ககவே என்றும் நாம் கைகோர்த்துச் செல்வோம் நமது சொந்தங்களான மரங்களுடன் . கைகோர்க்கச் செய்வோம் நம் மனங்களை மரங்களோடு !
கட்டுரை
மு.மகேந்திர பாபு , எம்.ஏ, பி.எட் ..எம்.பில். டி.டி.எட் ,
பட்டதாரி தமிழாசிரியர் & தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ,
அரசு மேல்நிலைப் பள்ளி ( ஆதிந )
இளமனூர் , சிலைமான் ( வழி ) ,,
மதுரை - 625 201.
பேசி - 9786141410
மின்னஞ்சல்
tamilkavibabu@gmail.com
0 Comments