தமிழால் வளரும் தமிழ் - மு.மகேந்திர பாபு

 

தமிழால் வளரும் தமிழ்

தலைப்பே கவிதை !
எங்கள் தமிழாசிரியரும் கவிதை
அவர் தமிழிடம்
பறிகொடுத்தேன் மனதை !

கரிசல்காடு  தந்த
தமிழ்க்கடலில் குளிக்க
உதவிய பரிசல்.
என் பள்ளிப் பருவம் முதல்
இன்று வரை எங்கள் தமிழில்
இல்லை விரிசல்.

புதியம்புத்தூர் தந்த
புதுமைப் புலவர்.
மாணவர் மனங்களை
தமிழெனும் இயற்கை உரமிட்டு
கல்வி அறுவடை செய்யும்
வேளாண் உழவர்.

இன்று வரை எங்கள் ஐயா
பயன்படுத்தியதில்லை
கோவம் எனும் செயற்கை உரம்.
பிரம்பெனும் பூச்சிக்கொல்லி
அவரிடம் எட்டிநிற்கும் தள்ளி.

வறட்சியான கரிசல்காட்டிலும்
முப்போகம் விளைவிக்கும்
புரட்சியான ஆசிரியர் இவர்.
காட்டுமல்லி வாசமென
காட்டாற்று வெள்ளமென
அவரது பாசம்.

இலக்கிய உலகிற்கு
என்னை அறிமுகப்படுத்தியவர்
ஐயா கணேசன்.
இன்றும் என்றும்
என் கவிதைகளின் நேசன்.
என் போன்றோரைப் படைத்ததால்
சாகா வரம் பெற்ற ஈசன்.

இலக்கிய உலகில்
என்னை மதுரை வானொலி மூலம்
அடையாளப் படுத்தியவர்
நகைச்சுவை மாமன்னர்
ஐயா இளசை சுந்தரம் அவர்கள்.

எழுபதைக் கடந்த இளைஞர்.
நகைச்சுவையால்
உலகம் சுற்றி வந்த கலைஞர்.

பாரதிக்குப் பின்பு
எட்டயபுரத்தை நம் இதயத்தில்
இருக்கச் செய்து வருபவர் .
கோடை மழை வெள்ளமென
நகைச்சுவையைச்
சிரிக்கவும் சிந்திக்கவும் தருபவர்.

மகாகவியாக வேடமிட்டு
' பாரதி இன்று வந்தால் ' என்ற நிகழ்வை
பல்லாயிரம் மேடைகளில் நடத்தி
பாரதியாய் வாழ்ந்து வரும்
நவயுக பாரதி.
தங்கள் வருகை
எங்களுக்கு உவகை.

இங்கே
முதன்மைக் கல்வி
அலுவலரே முன்னாள் மாணவராக !
பெருமையோடு கர்வமும் அடைகிறேன்.
ஐயா சுவாமிநாதன் எனும்
முதன்மைக் கல்வி அலுவலரை உருவாக்கிய பள்ளியில் நானும்
பயின்றேன் என்று சொல்வதை !
பள்ளியால் மாணவருக்குப் பெருமை .
மாணவரால் பள்ளிக்குப் பெருமை.
இது இருவழி உறவு.

எங்கள் பள்ளிதான்
என்றும் என் தாய்வீடு.
பிறந்த வீட்டிற்கு வந்ததால்
பெருமைப் படுகிறேன்.
இருபது ஆண்டுகளுக்குப் பின்பும்
என் பள்ளிக்கால பால்ய நினைவுகளுடன்
பிறந்த வீட்டிற்கு வந்ததால் பெருமைப்படுகிறேன்.

என் தாய்மடியில்
அமர்வதைப் போல
என் பள்ளியில் அமர்ந்திருக்கிறேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு
இங்குதான் என் மூச்சுக்காற்று
என்னை இயக்கியது.
அந்த மூச்சுக்காற்றின்
மிச்சத்தைத் தேட வந்திருக்கிறேன்.
என் எண்ணத்தை வாழ்த்துக் கவிதையாய்ப் பாட வந்திருக்கிறேன்.

என்னைச் சுமந்த பள்ளி
என் அப்பாவைச் சுமந்த பள்ளி.
பாரம்பரியம் மிக்க என் பள்ளியின்
தொப்புள் கொடி உறவு நான்.
அகவிருள் அகற்றி
அறிவொளி நிரப்பிய
ஒவ்வொரு ஆசிரியரும்
எனக்குச் சாமிதான்.
என்னை வாழவைக்கும் கோவில் என் பள்ளிதான்.

நான் படித்த பள்ளி.
எனக்குப் பிடித்த பள்ளி.
என் வளர்ச்சியின் அடித்தளம்
என் உயரத்தின் சிகரம்
அனைத்தும் என் பள்ளிதான்.

தமிழ் எனும் மூன்றெழுத்து
மந்திரம்தான் எனை இயக்கும் சக்தி.
அதனால் நான் கொண்டேன்
கணேசன் ஐயாவிடம் பக்தி.
நானும் தமிழால் வளரும் தமிழ்தான்.

கனகமணி அம்மாவின்
கையெழுத்தால் கவரப்பட்டு ,
இராஜ பூபதி ஐயாவின்
இன்றைய சிந்தனையால் எழுச்சி பெற்று
வெள்ளைச்சாமி ஐயாவின் வகுப்பில்
விரல்விட்டு பாடல்களைச் சீர்பிரித்து ,
சற்றே சிந்தனை விரித்து ,

கணேசன் எனும் கடலில்தான்
மகிழ்ச்சி எனும் கவிதை முத்தெடுத்தேன்.
பின் ' இந்தியனே எழுந்து நில் ' என்ற
கவிதை நூலாய்த் தொடுத்தேன்.

கணேசன் ஐயாவின் வகுப்பறை
எப்போதும் கலகல வகுப்பறை.
அவர் பேச்சினால்
கட்டுண்டு கிடக்கும் எங்கள் செவிப்பறை.

அவரது நாவில் நடனமாடும்
அழகு தமிழும் ,
மதுரை மல்லியென
மனசெங்கும் மணம் கமழும்.
வகுப்பறையில் நொடிக்கு நொடி
வந்து விழும் வார்த்தை ஜாலம்.
அமுத மொழியாம் தமிழை
என்னுள் இணைத்த அன்புப் பாலம்.

ஐயா கணேசன்
என் கவிதைகளின் நேசன்.
படைப்புலகம் நுழைவதற்கு என்னை
விரல் பிடித்து அழைத்துச் சென்ற ஈசன்.

பேரிலோவன் பட்டிக்கு இரண்டு பெருமை.
ஒன்று நம் பள்ளிக்கூடம்.
இரண்டு பள்ளிக்கூடத்தைச் சிறக்கச் செய்த கணேசன் எனும் தமிழ்ப்பாடம்.

ஐயா மார்ட்டின் ஜான் எனும்
மாமனிதருக்குப் பிறகு
உதடும் உள்ளமும் அதிகம்
உச்சரித்த பெயர் கணேசன் எனும்
உங்கள் பெயர்தான்.
பெயருக்குள் பொதிந்திருக்கிறது
தமிழெனும் உயிர்தான்.

வரலாறு சொல்லும்
அக்பரின் காலம் பொற்காலம் என்று !
நாங்கள் சொல்வோம்
ஐயா தலைமையாசிரியராக இருந்த காலம்தான் நம்பள்ளிக்கு நற்காலம் என்று !

போதனை தந்து ,
வேதனை களைந்து ,
சாதனைத் செய்திடத் தூண்டிய
போதிமரம் எங்கள் ஐயா.
இந்தப் போதிமரத்திடம் ஞானம் பெற்ற
என்னைப் போன்ற புத்தர்கள் ஆயிரமாயிரம்.

பால்யத்தில்
வறுமையின் பிடியில்
வசமாய்ச் சிக்குண்ட போதும் ,
ஐயாவிடம் வளமாய் ,
நலமாய் வலம் வந்தது தமிழ் மட்டும்தான்.

அந்தத் தமிழ்தான் இன்று
' தமிழால் வளரும் தமிழ் ',
என நண்பர் செந்திலை
நூல் எழுதத் தூண்டியது.
உன் ஆசிரியரைப் பற்றி அகமகிழ்ந்து எழுது என வேண்டியது.

புராணம் சொல்கிறது கணேசனின் தம்பி செந்தில் என்று.
நம்மனம் சொல்கிறது கணேசனின் மாணவர் செந்தில் என்று.

நண்பர் செந்தில்
அவர் மனசு போல உடம்பு.
பள்ளிப் பருவத்திலேயே மேடைகளில் நாடகம் நடித்தவர்.
அதனால் ஐயா மனதில்
நீங்கா இடம் பிடித்தவர்.
தனது ஆசிரியர் போல
தமிழாசிரியராக உயர்ந்து
தடம் பதித்தவர்.

இன்றைய நிகழ்வால்
ஆசிரியர் மெச்சும் மாணவராய்
நம் மனவானில் மாணவ
நட்சத்திரமாய் உதித்தவர்.

நண்பர் செந்தில் குமார்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நன்றி மறப்பது நன்றன்று.
ஐயாவிடம் கற்ற முப்பால்தான்
எங்களைத் தப்பாமல்
இங்கே கூடச் செய்திருக்கிறது.
தமிழின் சுவையைத் தேடச்செய்திருக்கிறது.

ஆசிரியர் அமைவது வரம் .
ஆசிரியரைப் போற்றும்
மாணவரது கரம்
என்றும் மங்காது ஒளிபெறும்.



வியப்பாக இருக்கிறது.
காதறுந்த ஜோல்னா பையோடு
பள்ளிக்கு வந்த நான்
இன்று சொந்தக்கார் வாங்கி
வருமளவு உயர்த்தியது எனது பள்ளி.
துருப்பிடித்த சைக்கிளில்
கிரீச் கிரீச் என
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மிதிவண்டி
ஓட்டி வந்த நான்
இன்று செல்ப் ஸ்டார்ட் பைக்கில் வருகிறேன் என்றால் அதற்குக் காரணம் என்பள்ளி.
ஐயாவிடம் கற்ற தமிழ்.

பேசத் தெரியாத என்னை
பேச்சுப் போட்டியில் பேசவைத்து ,
லிப்கோ டிக்சனரியைப் பரிசாகவும் பெற வைத்து ,
பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் ,
ரோட்டரி மற்றும் அரிமா சங்கக் கூட்டங்களிலும் பேசுகிறேன் என்றால்
அது எங்கள் கணேசன் ஐயா
எனக்கு இட்ட அறிவுப் பிச்சை.


ஒரு மாணவனுக்கு முன்னோடி
அவனது ஆசிரியர்.
அவர்தான்
அறிவுலகத்தின் கண்ணாடி.
நான் ஆசிரியரானதற்கு என் அம்மாவும் அப்பாவும் காரணம்.
நான் தமிழாசிரியரானதற்கு என்
ஐயா காரணம்.

பதினேழு ஆண்டு கால
எனது ஆசிரியப் பணியில்
எனக்கு வழங்கப்பட்ட விருதுகள்
மொத்தம் பத்து.
அவை என் பள்ளியால்
எனக்குக் கிடைத்த சொத்து.

நிறைவாய்
மன நிறைவாய் இப்படிச் சொல்கிறேன் .
நாங்கள் தமிழால் வளரும் தமிழ்.

வாழ்த்துக் கவிதை வழங்க
வாய்ப்பு தந்தமைக்கும் ,
நல் வாழ்க்கை தந்தமைக்கும்
ஐயாவிற்கும் , பள்ளிக்கும்
நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது.
வேறு வார்த்தைகள் இல்லாமையால் நன்றி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர்.
மதுரை.


Post a Comment

0 Comments