மு.மகேந்திர பாபு சிறு கவிதைகள்

 

தொடரும் விளையாட்டு

மணல்வீடு கட்டியும் ,
கண்பொத்தியும் ,
பல்லாங்குழியும் ,
நொண்டியும் என
பால்யத்தில் விளையாடிய
விளையாட்டுக்களையெல்லாம்
விட்டபின்பும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
திருடன் போலீஸ் விளையாட்டில்
நான் திருடனாகவும் ,
உன் வீட்டார் போலீஸாகவும்
இந்த காதல் வயதினில்.

வயலும் வாழ்வும்

பௌர்ணமி நாளின்
இரவொன்றில்
குடும்பத்தினரோடு
வயலுக்குச் சென்று ,
கருக்கரிவாளால் நெற்கதிர்களை
விடிய விடிய  ஏதோ ஒரு கதைபேசி
அறுத்துவிட்டு ,
பகல் முழுவதும் கதிரடித்துவிட்டு ,
இரவில் பிணையல் மாடுகளால்
சூட்டடி நெல்லை நசுக்கவிட்டு
பரபரப்பாய் வேலை பார்த்த
நினைவுகள்தான் நெஞ்சில்
மோதிச்செல்கின்றன இப்போது.
வீடுகளாகிவிட்ட வயல்களைப் பார்க்கும்போது !

பேரம்

தெருவெங்கும் சுத்தி ,
நெஞ்சுக்கூட்டிலிருந்து
ஜீவன் எடுத்துக் கத்தி ,
தொண்டைத்தண்ணி வத்தி
தலைச்சுமையோடு
விற்றுவருகிறாள் கீரையை
கிராமத்துப் பெண்ணொருத்தி .    

நகரத்துப் பெண்கள் கூட்டம்
பேரம்  பேசத்   தொடங்கியது.
ஐந்து ரூபாய் கீரைக்கட்டை
நான்கு ரூபாய் என   பேச்சுத்திறமையால்
வாங்கி  சாதனை செய்ததாக
நினைத்தவர்கள்தான்  ...

பெரும் பெரும் துணிக்கடைகளிலும்,
நகைக்கடைகளிலும்
அச்சிடப்பட்ட  விலைக்கே
தன்வாய்மூடி வாங்கிக்கொண்டு
செல்கின்றனர்   பொருட்களை ! 

மு.மகேந்திர பாபு 

உணவு

யாரோ சிலரின்
கைதவறி விழுந்த
ஒன்றிரண்டு சோளப் பொறிகளும்
கடலைப் பருப்புகளும்,
சோற்றுப் பருக்கைகளும் ,
இனிப்புத் துண்டுகளும்
சிலநாள் பசியைப்
போக்கிவிடுகின்றன
பூங்காவில் உள்ள
ஒரு சில எறும்புகளுக்கு !

கவிதையாக்கம்

மு.மகேந்திர பாபு

நினைவு

சில மாதங்களாய்
வாழ்வு தந்த கூட்டிற்கும் ,
சோளக் காட்டிற்கும்
நன்றி சொல்லி ...
சிறகு முளைத்த
தன் குஞ்சுகளோடு
அறுவடைக்கு முதல்நாள்
பறந்து செல்கிறது சிட்டுக்குருவியொன்று,
தன் சிறகினை நினைவாய்
உதிர்த்துவிட்டு !

மு.மகேந்திர பாபு

தேடல்

நெடுநேரம்
பறந்து சென்ற நீர்ப்பறவையொன்று
நீர்நிலை தேடி அலைகையில்,
நிரம்பியிருந்தது
கூச்சலும்,மகிழ்ச்சியுமாய்
விளையாடும் சிறுவர்களால்
வறண்ட நீர்நிலை !

மு.மகேந்திர பாபு ,

பாடம்

அப்பா  முகநூலிலும் ,
அம்மா நெடுந்தொடரிலும் நெகிழ்ந்திருக்க ,
பள்ளியில் இன்று கேட்ட
கதைகளையும் , பாடல்களையும்
சொல்லியும் , பாடியும்
மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் மகள்
தன் பொம்மைகளிடம் 


கருணை
-----------

தனக்கான
திண்பண்டத்தை  ,
சில நூறு துகள்களாக்கித்
தூக்கிச் செல்லும்
எறும்புக் கூட்டத்தைப் பார்த்து
மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் மகள்
இன்னுமொரு இனிப்புத்துண்டினை
எறும்புக் கூட்டத்தின்
அருகே போட்டுவிட்டு !

கவிதையாக்கம்

மு.மகேந்திர பாபு

வீடு

பனையோலையின்
கருக்கு மட்டைகளை
ஆணியால் இணைத்து
கதவாக்கிச் சாத்தப்பட்டுள்ளது
கிராமத்து வீடுகளில்.
எக்காலத்திலும் திருடு நடந்ததாய்
எப்புகாரும் இதுவரையிலில்லை.

பத்தடி உயரச் சுற்றுச்சுவரும்,
அதன்மேல் பதிக்கப்பட்ட
கண்ணாடிச் சில்லுகளும் ,
சுற்றுச்சுவரின் இரும்புக்கதவும் ,
தேக்குக் கதவுகளும்
பாதுகாப்பைத் தருகின்றன
மாகரத்து வீடுகளுக்கு !

ஆயினும்
கொள்ளைகளும் , கொலைகளும்
அரங்கேறிக்கொண்டுதானிருக்கின்றன
சுற்றுச்சுவரையும் , கதவுகளையும்
கடந்து நாள்தோறும் !

மு.மகேந்திர பாபு  ,


அப்பாவின் முகம்

வெயில் அப்பிய
மதிய நேரத்தில் ,
மார்கழி மாதத்து
அதிகாலை பசும்புல் தலையில்
பூத்திருக்கும் பனித்துளியாய் ,
உடலெங்கும்
வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க ,
காலில் செருப்பின்றி ,
மேலில் சட்டையின்றி
விரைந்து நடக்கும் அப்பா
தன் கைக்கட்டை விரலால்
வியர்வையைத் துடைத்தெறிந்துவிட்டு ,
பருத்திக்காட்டிற்குள் நுழையும் போது
முகம் மலர்கிறார்
வெடித்திருக்கும் பருத்தியைப் போல.!

மு.மகேந்திர பாபு ,

வாழ்க்கை

ஆனந்தப்படுவதும் ,
அனுதாபத்திற்குள்ளாவதும் என
அன்றாடம் நடந்துகொண்டுதானிருக்கிறது
எல்லா அப்பாக்களுக்கும் , அம்மாக்களுக்கும்
இல்லற வாழ்வின் தொடக்கத்தில்
பிள்ளைகளைக் கொஞ்சும்போதும் ,
அதே பிள்ளைகளால் முதுமையில்
உதாசீனப்படுத்தப் படும்போதும் !

மீட்டெடுத்தல்

உழவு செய்யவும் ,
விதை வாங்கவும் ,
விதைக்கவும் ,
களையெடுக்கவும் ,
கருதறுக்கவும் என
காதிலும் , கழுத்திலும் ,
கையிலும் , மூக்கிலும்
இருப்பதை அவ்வப்போது
அடகு வைத்து,
வெள்ளாமை வந்தவுடன்
மீட்டெடுக்கும் மாரியம்மா
அதிர்ச்சியில் மரித்துப்போனாள்.
அடகு வைத்த பொருட்களை
மீட்க முடியாமல்
மழை பொய்த்துப் போனதில் !

தீபாவளித் தேடல்

பார்த்து எடுங்கப்பா
என ஒருவரும் ,
பெரிய கடைன்னாலே
விலை அதிகம்தான்
பேரம் பேச முடியாதென ஒருவரும் ,
உனக்குப் பிடித்திருந்தால்
விலையைப் பற்றி யோசிக்க வேணாம் என ஒருவரும் ,
இதுதான் வேணும் என அடம்பிடித்த மகனிடம் ,
இதுக்குத்தான் இவன கூட்டியார
வேணாம்மேன் என தன் மனைவியிடம் ஒருவரும் ,
தள்ளுபடி விற்பனையில்
பார்க்கலாம் என
சின்னச் சின்ன குறைபாடுள்ள
துணிகளைத் தேடும் ஒருவரும் என,
மாநகரில் புதிதாய்த் தொடங்கப்பட்ட
துணிக்கடையில் தேடுகிறார்கள்
அவரவர்க்கான தீபாவளியை !

மு.மகேந்திர பாபு , மதுரை
பேசி - 97861 41410


ஓவியக்கூடம்

புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின்
ஒவ்வொரு அறையும்
ஒவ்வொரு வண்ணத்தினால்
பூசப்பட்டு ஜொலிக்கிறது.
தன் கை எட்டும் உயரம்வரை
பென்சிலாலும் , பேனாவினாலும் ,
வண்ண எழுதுகோலினாலும்  கோடுகளிட்டு
ஏதேனும் ஒரு ஓவியத்தை
வரைகிறாள் மகள்.
முன்பை விட இப்போது
அழகாக இருக்கின்றன
வீட்டின் அனைத்து
உட்சுவர்களும்
ஓவியக்கூடம் போல !

மு.மகேந்திர பாபு ,

வருகை

வழக்கம் போல்
இந்த மாதமும்
வந்துவிட்டார் தபால்காரர்
முதியோர் உதவித் தொகையினை
மூதாட்டியிடம் தர.
நலம் விசாரிக்க வந்துவிட்டனர்
வெளியூரில் இருக்கும்
மகனும் மகளும்
ஒருமாதம் கழித்து !

தங்கம்

குண்டுமணி அளவேனும்
தங்கம் வாங்கினால்
செல்வம் பெருகும் என்றெண்ணி
அட்சய திருதியை நாளில்
கடன் வாங்கி  நகை எடுத்தாள்.
தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கிறது
ஆண்டு முழுவதும்
கடன்சுமை அம்மாவிற்கு !


ஊரெல்லையில்
அரிவாளோடு
காவல்காத்துக் கொண்டிருக்கிறார்
அய்யனார்.
பஞ்சம் பிழைக்க ,
கிராமம் நகரம் நோக்கி
நகர்ந்ததை மறந்து !

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments