பொதுக் கழிப்பறை - மு.மகேந்திர பாபு

 


தீக்கதிர் - வண்ணக்கதிர் இதழுக்காக கவிதை  (  23 - 04 -  15  )

பொதுக் கழிப்பறை

மாநகரப் பேருந்து நிலையத்தின்
கழிப்பறைக்குள்
' அவசரத்திற்கென ' நுழைந்தவனின்
முகம் மாறுகிறது
அஷ்ட கோணலாய்.

சிகரெட்டின் புகை வளையங்கள்
சுற்றிக் கொண்டிருக்கிறது அவனையும்,
கழிப்பறையையும்.
உள் இருப்பவன்
உறங்கி விட்டானோ என்ற
ஐயத்தில் தாழ்ப்பாள் இல்லாத
தகர கதவினைத் தட்ட ,
'ம்ம் ' என்ற இருமலும் ,
உறுமலுமாய்ப் பதில் வர ,
விரக்தியில் நிற்கிறான்.

ஒரு வழியாய்
உள் நுழைந்தவனை
திசை திருப்புகின்றன
யாரோ ஒரு மனம் பிறழ்ந்தவனின்
அரைகுறை நிர்வாண
ஓவியங்களும் , வாசகங்களும் !

மு.மகேந்திர பாபு ,

Post a Comment

0 Comments